Tuesday 24 July 2012

கடவுள்கள் காத்திருக்கும் அறை - லிபி ஆரண்யா





                                  'கடவுள்கள் காத்திருக்கும் அறை'

கணேசகுமாரனின் 'புகைப்படங்கள் நிரம்பிய அறை' கவிதைத் தொகுப்பினை முன்வைத்து....- லிபி ஆரண்யா.

  ஒரு கவிதையை அல்லது ஒரு தொகுப்பை முன்வைத்துப் பேசுவது என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? நிலவின் துலக்கத்தில் விரியும் இரவு வானத்தைப் பார்த்தபடி மல்லாந்து படுத்திருக்கும் குழந்தைகள், நகரும் மேகத்தின் உருவத்தை விதந்தோதும் பிள்ளை விளையாட்டாகவா? அல்லது உயிரின் பிசுபிசுப்போடு உள்ளங்கைகளில் ஏந்திவரும் தாதியின் கரங்களிலிருக்கும் புத்துயிரின் காது மடலை, தொடை இடுக்கை நோக்கி கண் நகரும்  பொது புத்தியின் குரூரமாகவா ?அல்லது கூர்த்த கத்தியின் தேடல் பயணத்தை அனுமதித்து எதிர்ப்பற்று  சடலம் கிடத்தப்பட்டிருக்க எப்போது துணி சுற்றி தருவார்களென பிரேதப் பரிசோதனை அறிக்கை பெற வாசலில் காத்திருக்கும் வைபவமா விமர்சனம்?

ஒரு கவிதை பற்றிய அல்லது ஒரு தொகுப்பு பற்றிய பேச்சு என்பது மேற்கூறியபடிக்கு எதுவுமில்லை என்பதை உறுதிபட நாமறிவோம்.

பிறகு எதுதான் விமர்சனம் என்ற கேள்வியைக் கதறக் கதறத் தெருவில் விட்டுவிட்டு ' ஒரு கவிதை எழுதுவது அத்தனை சுலபமல்ல' எனக் கூறும் கணேசகுமாரனின் 'புகைப்படங்கள் நிரம்பிய  அறை' யில்  நுழைவது எத்தனை உத்தமமானது.

கணேசகுமாரனின் இந்த அறை ஒண்டுக்குடித்தன அறை அல்ல, மிக உறுதியாக. இந்த அறை அநேகம் பேர் வந்து போகும் விசாலமான அறை. தனது அறைக்கு வருபவர்களுக்கு குமாரன் சில சாளரங்களைத் திறந்து வைக்கிறார். அவரது அனுமதியின்றி திறவாத சாளரங்களை நாம் திறந்து பார்ப்பதில் அவருக்குப் புகார்களில்லை. இதுவே , இந்த சுதந்திரமே இந்த அறை நமது அறைதானென்று உணரும்படிச் சொல்கின்றது.

கணேசகுமாரனுக்கும் கடவுளுக்குமான நட்பு பொறாமைப்படும்படியாக உள்ளது. அந்தத் திருடன் தேர்ந்த சிலரிடம் அன்பாகத்தான் இருக்கிறான். கணேசகுமாரனும் பல இடங்களில்  தேவசாட்சியம் அளிக்கிறார்.

'கடவுள் வாழ்ந்த வீடு'  என்ற கவிதையில்...
'' கிளைகளின் ஈரத்திலும்
இலைகளின் பச்சயத்திலும்
நிரம்பியிருந்தார் கடவுள்" - என்பதாக மெய்சிலிர்க்கிறார்.
'' முதல் வெட்டு விழுந்தது
கடவுள் மார்பின் மீதுதான்'' - என்று கலங்குகிறார்.
'' யாருக்கும் தெரியாது
 அது முன்பு கடவுள் வாழ்ந்த வீடென்று'' - விசனப்படுகிறார்.

' என் காதல் எலுமிச்சம் பழம் போன்றது' என்ற கவிதையில்  காதல் எலுமிச்சையின் அவதானிப்புகளை விவரிக்கும் குமாரன்,
'' அந்தப் பழம்
கடவுளின் மார்போடு
கம்பீரமாக ஒட்டிக்கொண்டு விட்டது''-
என்ற வரிகள் கடவுளின் அன்புக்கு ' விட்டமின் சி' யைப் பரிசளிக்கின்றன.

பால்யத்தில், அருகாமை நீர்நிலைகளுக்கு திருட்டுத்தனமாகச் சென்று களைந்த ஆடைகள் கரைகளில் குவிந்து கிடக்க திடுமெனக் குதிக்கும் சிறுவர்களும், வீட்டுக்கு கழிப்பறை வராத காலத்தில் பீக்காட்டுக்கு கும்பலாகப் போய் வெயிலுக்கென டவுசரை தலையில்  சூடி  அருகமர்ந்து வார்த்தையாடியபடியே ஆய் போகும் சிறுவர்களும் பரஸ்பரம் பரிச்சயம் கொண்டிருந்தார்கள் பிறர் முகங்களைப் போலவே பிறர் குறிகளையும்.
அந்த பூர்வ பழக்கத்தின் நீட்சியாகவே ' சந்தேகக் குறி' என்ற கவிதையில் கட்டணக் கழிப்பறைக்கு செல்ல நேர்ந்த குமாரன் பக்கத்தில் எட்டிப்பார்க்கிறார்.
ஆனால் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் வளர்ந்த குமாரனைக் கலவரப்படுத்துகிறது. அப்போதும் கூட கடவுளிடம்தான் மண்டியிடுகிறார்.

''உலகத்துக் குறிகளின் அளவை
ஒன்றேயாக்கிடு ஆண்டவா'' - என்று மார்க்சின் குரலில் மிமிக்ரி ஜெபம் செய்கிறார்.

அட்டையில் கணேசகுமாரன் காத்திருக்க உள்ளே தேவகுமாரனின் நடமாட்டம் கூடுதலாக இருப்பதை உணர முடிகிறது.
'போஸ்ட்மார்டம்','கைதட்டல்','அழுகை' முதலிய கவிதைகள் பாலியல் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டோரின் வாழ்க்கையை வலியோடும், கழிவிரக்கத்தோடும் பார்க்கக் கோருகிறது.
அதில் ' கைதட்டல்' கவிதையை சொல்லவேண்டும். 

கைதட்டல்

முன்பொருமுறை
 நான் கைதட்டிக்கொண்டிருந்தேன்
நெருப்பு வளையத்திற்குள்
புகுந்து வெளிப்பட்ட பெண்ணின்
கருகாத உடல் முன் நின்று

சிங்கத்தின் வாயில் தலை நுழைத்து
வெளிவந்தவனின்
நிலைத்த கண்கள் முன் நின்று
கைதட்டிக் கொண்டிருந்தேன்

அந்தரத்துக் கயிற்றில் அசைந்து ஆடி
இறங்கிய குழந்தையின்
பசித்த வயிற்றின்  முன்
கைதட்டிக் கொண்டிருந்தேன்

உயிர்ப்பசி தீர்க்க
உடல்பசி அடக்கி களைத்த
யோனியின் முன் நின்று
கைதட்டிக் கொண்டிருந்தேன்

இனி என் முறை.

பட்டியலின் இறுதியில் வைக்கப்பட்டிருக்கும் அந்த வரிகள் முந்தையவையோடு சற்றே பொருந்தியும், பொருந்தாமலும் ஒரு மயக்கத்தை ஏற்படுத்துவதை உணரமுடிகிறது. அதுவும் கூட பேசுபொருளின் முன்பாக நாம் கொள்ளும் தடுமாற்றத்தின் நீட்சியாகவே படுகிறது.

தவிரவும் விளிம்புநிலையர்கள் குறிப்பாக யாசகர்கள், பைத்தியக்காரர்களிடத்து குமாரனின் அன்பு பெருக்கெடுக்கிறது.

பிறகு ஒன்றை சொல்லியே ஆகவேண்டும். காலங்காலமாக தமிழ்க் கவிதைப்பரப்பில் கடற்கரையெனில் கிளிஞ்சல்களையும், ஆறு, ஓடை எனில் கூழாங்கற்களையும் இந்தக் கவிஞர்கள் மாய்ந்து மாய்ந்து பொறுக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அல்லது மரத்திலிருந்து உதிரும் இலைகளைத் தேமே எனப் பார்த்தவாறு இருக்கிறார்கள்.  இலைகள் உதிராத காலத்தில் பதட்டத்தில் உலுப்பத் தொடங்கி விடுகிறார்கள். ஒரு இலை உதிர்வதைப் பாராமல் எழுந்து போகவே மாட்டேன் என்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் சங்கப் பலகையில் கணேசகுமாரனும் தனது பெயரை முன்பதிவு செய்துள்ளார்.

எங்கள் ஊரின் கிழக்கே ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு உண்டு. எனது பால்யத்தில் அதுவே ஊரின் தாகத்திற்கான ஒற்றை முலையாக இருந்தது. அந்தக் கிணற்றின் நாலாபக்கமும் நின்று கடகா போட்டு தண்ணீர் இறைப்பார்கள். கயிறு இற்றுப்போய் சில நேரங்களில் கடகா கிணற்றில் விழுந்துவிடுவதுண்டு. அதுபோன்ற நேர்வுகளில் கடகாவை வெளியே எடுக்க பாதாளக் கரண்டி கொண்டுவந்து கிணற்றில் வீசுவார்கள். அப்போது பாதாளக் கரண்டியின் கொக்கியில் மாட்டிக்கொண்டு வேறு கடகா வெளியே வரும். அது ஒரு திகிலான, சுவாரஸ்யமான அனுபவம்.

அப்படித்தான் கவிஞன் ஒன்றை கவிதைக்குள் இறக்கி வைக்கிறான். நமது வாசிப்பின் பாதாளக் கரண்டியோ கவிதையிலிருந்து வேறு ஒன்றை எடுத்து வந்து கவிஞனையேத் திகிலூட்டுகிறது. அப்படி சிலவற்றை வேறொன்றாய் வசிக்கக் கிடைக்கிறது இத்தொகுப்பில்.

' அவர்கள் முதலில்
இல்லையென்றுதான் சொன்னார்கள்
முடிவில் ஆமாமென்றார்கள்
அதற்குள்
ஒரு யுகம்
கடந்துவிட்டிருந்தது'

தொன்னூறுகளில் உலகமயமாக்கல் நமது நிலத்தில் நிகழ்ந்தபோது இந்த மன்மோகன்கள் '' குறையொன்றும் இல்லை'' என்று இசைத்தார்கள். தற்போது அதே மன்மோகன்கள் '' ஆம், தப்புதான் நிகழ்ந்துவிட்டது'' என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள். ஒரு யுகம் கடந்துதான் விட்டது குமாரா. சோரம் போன ஒரு நிலத்தின் வலியைத்தான் நீ மொழிப்படுத்தியிருக்கிறாய்.

' மறுக்கப்பட்டதற்கு எதிராக' என்னும் கவிதையில்

'' பலயுகம் கழித்தும்
தன் மூதாதையின் நியாமற்ற மரணத்திற்கு
நீதி தேடி பறந்து கொண்டிருக்கிறது
ஒற்றைக் கால் ஊனப்பறவையொன்று ''
- வேறு ஒன்றை கணேசகுமாரன் குறிப்பிட்டாலும்அது ஈழத்தின் பறவையாகவும் மாறி துயரங்கொள்ள வைக்கிறது. 

'' கண்ணாமூச்சி ஆடிய குழந்தைகள்
கட்டி முடித்த வீட்டில் தேடுகிறார்கள்
காணாமல் போன இடங்களை''- என்கிற குறிப்பிடும்படியான வரிகளை எழுதிப்போகும் குமாரனிடம் வெளியில் கொண்டாட்டத்திற்கு உரியதாக இருந்த எதுவும் ஒரு கூடாரத்தின் கீழ் வரும்போது அதன் அர்த்தத்தை தொலைத்துவிடத்தான் செய்கிறது என்று பேசிப்பார்க்கலாம்தானே...

'' நாமிருந்தோம்
 காட்டின் பிள்ளைகளாய்'' - என்று துவங்குகிறது இந்தத் தொகுப்பு. ஒரு கவிஞன் வந்து சேர வேண்டிய மகத்தான இடம் அது. ஆனால் அந்தக் கவிதையில் ஒரு சொல், ஒரேயொரு சொல் நமது ஆதிக்காட்டின் அர்த்தத்தை சிதைப்பதாக உள்ளது.

' உயிர் வலி' என்ற கவிதையில்
'' நான் செருகிய கத்தி
தொங்கிக் கொண்டிருக்கிறது உன் கழுத்தில்'' - என்று எழுதிப்போகும் குமாரன்தான் பூர்வக் காட்டில்,

'' சீங்கை கீரை சமைத்த
 பெண்டாட்டியின் மாரில்
 பச்சைக் கோலம் வரைந்து களித்தோம்'' - என்றும் எழுதுகிறார்.

வீட்டுக்கும் காட்டுக்கும் இடையில் கிடந்தது ஊசலாடுகிறது மனது. காட்டை அழித்து வீட்டை அமைத்தது வரலாறு. ஆக, காட்டை நேசிப்பவர்கள் வீட்டை அழித்துதான் வரலாற்றை நேர் செய்ய முடியும். இதைக் கருத்தியலாகவேணும் நாம் ஏற்கத்தான் வேண்டும்.

இத்தொகுப்பின் மிகப் பிடித்தமான கவிதை ' உயிர்'

உயிர்

நான்கு நாட்களாக
கிழிபடாமல் இருக்கும்
நாட்காட்டியில் தொடங்கி
அறைக்கதவின் உட்பக்கத் தாழ் தொட்டு
சுழலாத மின்விசிறியின்
உச்சிக்குச் சென்று
இறுகித் தொங்கும் நைலான் கயிற்றின்
வழி கீழிறங்கிப் படரும்
தன் வாழ்விடத்தின் வாசலை
பின்னத் தொடங்குகிறது அச்சிலந்தி
பிதுங்கிய அவ்விழிகளின் மீது.

மிகவும் நுட்பமாக எடிட் செய்யப்பட்ட துயரத்தின் சாட்சியாக கவிதை வலியோடு விரிகிறது.
அதற்கு இணையாக வேறொன்றைப் பொருத்திப் பார்க்கலாம்.
கிழிபடாத  நாட்காட்டியைக் காட்டியபின் பரபரத்து நாம் நமது அன்றாட அலுவல்களில் மூழ்கியிருந்ததையும், உட்பக்கத் தாழ்ப்பாளைக் காட்டியபின்பு இங்கே வாய்த்த புணர்ச்சிக்காக  நாம் தாழிட்டுக் கொண்டதையும், அங்கே சுழலாத மின்விசிறியின் காட்சியை அடுத்து மின்வெட்டைப் பழித்து நாம் உதிர்த்த கெட்ட வார்த்தைகளைக் காட்சிபடுத்தியும், அந்த நைலான் கயிறை காட்சியாக விரித்தபின் எந்தக் குற்ற உணர்வுமற்று நான்கு ரத வீதிகளிலும் வடக்கயிறு பற்றி தேர் இழுத்துத் திரிந்ததையும் காட்டி பிதுங்கிய விழிகளில் காமிரா நிற்க நம் அனைவரின் மீதும் கொலைப்பழி கவியத் தொடங்குகிறது. 

ஆம் அங்கே பரிதாபமாக தொங்கிக் கொண்டிருப்பது ஓர் இனத்தின் உயிர்தானே குமாரா...








No comments:

Post a Comment