Tuesday 24 July 2012

கடவுள்கள் காத்திருக்கும் அறை - லிபி ஆரண்யா





                                  'கடவுள்கள் காத்திருக்கும் அறை'

கணேசகுமாரனின் 'புகைப்படங்கள் நிரம்பிய அறை' கவிதைத் தொகுப்பினை முன்வைத்து....- லிபி ஆரண்யா.

  ஒரு கவிதையை அல்லது ஒரு தொகுப்பை முன்வைத்துப் பேசுவது என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? நிலவின் துலக்கத்தில் விரியும் இரவு வானத்தைப் பார்த்தபடி மல்லாந்து படுத்திருக்கும் குழந்தைகள், நகரும் மேகத்தின் உருவத்தை விதந்தோதும் பிள்ளை விளையாட்டாகவா? அல்லது உயிரின் பிசுபிசுப்போடு உள்ளங்கைகளில் ஏந்திவரும் தாதியின் கரங்களிலிருக்கும் புத்துயிரின் காது மடலை, தொடை இடுக்கை நோக்கி கண் நகரும்  பொது புத்தியின் குரூரமாகவா ?அல்லது கூர்த்த கத்தியின் தேடல் பயணத்தை அனுமதித்து எதிர்ப்பற்று  சடலம் கிடத்தப்பட்டிருக்க எப்போது துணி சுற்றி தருவார்களென பிரேதப் பரிசோதனை அறிக்கை பெற வாசலில் காத்திருக்கும் வைபவமா விமர்சனம்?

ஒரு கவிதை பற்றிய அல்லது ஒரு தொகுப்பு பற்றிய பேச்சு என்பது மேற்கூறியபடிக்கு எதுவுமில்லை என்பதை உறுதிபட நாமறிவோம்.

பிறகு எதுதான் விமர்சனம் என்ற கேள்வியைக் கதறக் கதறத் தெருவில் விட்டுவிட்டு ' ஒரு கவிதை எழுதுவது அத்தனை சுலபமல்ல' எனக் கூறும் கணேசகுமாரனின் 'புகைப்படங்கள் நிரம்பிய  அறை' யில்  நுழைவது எத்தனை உத்தமமானது.

கணேசகுமாரனின் இந்த அறை ஒண்டுக்குடித்தன அறை அல்ல, மிக உறுதியாக. இந்த அறை அநேகம் பேர் வந்து போகும் விசாலமான அறை. தனது அறைக்கு வருபவர்களுக்கு குமாரன் சில சாளரங்களைத் திறந்து வைக்கிறார். அவரது அனுமதியின்றி திறவாத சாளரங்களை நாம் திறந்து பார்ப்பதில் அவருக்குப் புகார்களில்லை. இதுவே , இந்த சுதந்திரமே இந்த அறை நமது அறைதானென்று உணரும்படிச் சொல்கின்றது.

கணேசகுமாரனுக்கும் கடவுளுக்குமான நட்பு பொறாமைப்படும்படியாக உள்ளது. அந்தத் திருடன் தேர்ந்த சிலரிடம் அன்பாகத்தான் இருக்கிறான். கணேசகுமாரனும் பல இடங்களில்  தேவசாட்சியம் அளிக்கிறார்.

'கடவுள் வாழ்ந்த வீடு'  என்ற கவிதையில்...
'' கிளைகளின் ஈரத்திலும்
இலைகளின் பச்சயத்திலும்
நிரம்பியிருந்தார் கடவுள்" - என்பதாக மெய்சிலிர்க்கிறார்.
'' முதல் வெட்டு விழுந்தது
கடவுள் மார்பின் மீதுதான்'' - என்று கலங்குகிறார்.
'' யாருக்கும் தெரியாது
 அது முன்பு கடவுள் வாழ்ந்த வீடென்று'' - விசனப்படுகிறார்.

' என் காதல் எலுமிச்சம் பழம் போன்றது' என்ற கவிதையில்  காதல் எலுமிச்சையின் அவதானிப்புகளை விவரிக்கும் குமாரன்,
'' அந்தப் பழம்
கடவுளின் மார்போடு
கம்பீரமாக ஒட்டிக்கொண்டு விட்டது''-
என்ற வரிகள் கடவுளின் அன்புக்கு ' விட்டமின் சி' யைப் பரிசளிக்கின்றன.

பால்யத்தில், அருகாமை நீர்நிலைகளுக்கு திருட்டுத்தனமாகச் சென்று களைந்த ஆடைகள் கரைகளில் குவிந்து கிடக்க திடுமெனக் குதிக்கும் சிறுவர்களும், வீட்டுக்கு கழிப்பறை வராத காலத்தில் பீக்காட்டுக்கு கும்பலாகப் போய் வெயிலுக்கென டவுசரை தலையில்  சூடி  அருகமர்ந்து வார்த்தையாடியபடியே ஆய் போகும் சிறுவர்களும் பரஸ்பரம் பரிச்சயம் கொண்டிருந்தார்கள் பிறர் முகங்களைப் போலவே பிறர் குறிகளையும்.
அந்த பூர்வ பழக்கத்தின் நீட்சியாகவே ' சந்தேகக் குறி' என்ற கவிதையில் கட்டணக் கழிப்பறைக்கு செல்ல நேர்ந்த குமாரன் பக்கத்தில் எட்டிப்பார்க்கிறார்.
ஆனால் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் வளர்ந்த குமாரனைக் கலவரப்படுத்துகிறது. அப்போதும் கூட கடவுளிடம்தான் மண்டியிடுகிறார்.

''உலகத்துக் குறிகளின் அளவை
ஒன்றேயாக்கிடு ஆண்டவா'' - என்று மார்க்சின் குரலில் மிமிக்ரி ஜெபம் செய்கிறார்.

அட்டையில் கணேசகுமாரன் காத்திருக்க உள்ளே தேவகுமாரனின் நடமாட்டம் கூடுதலாக இருப்பதை உணர முடிகிறது.
'போஸ்ட்மார்டம்','கைதட்டல்','அழுகை' முதலிய கவிதைகள் பாலியல் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டோரின் வாழ்க்கையை வலியோடும், கழிவிரக்கத்தோடும் பார்க்கக் கோருகிறது.
அதில் ' கைதட்டல்' கவிதையை சொல்லவேண்டும். 

கைதட்டல்

முன்பொருமுறை
 நான் கைதட்டிக்கொண்டிருந்தேன்
நெருப்பு வளையத்திற்குள்
புகுந்து வெளிப்பட்ட பெண்ணின்
கருகாத உடல் முன் நின்று

சிங்கத்தின் வாயில் தலை நுழைத்து
வெளிவந்தவனின்
நிலைத்த கண்கள் முன் நின்று
கைதட்டிக் கொண்டிருந்தேன்

அந்தரத்துக் கயிற்றில் அசைந்து ஆடி
இறங்கிய குழந்தையின்
பசித்த வயிற்றின்  முன்
கைதட்டிக் கொண்டிருந்தேன்

உயிர்ப்பசி தீர்க்க
உடல்பசி அடக்கி களைத்த
யோனியின் முன் நின்று
கைதட்டிக் கொண்டிருந்தேன்

இனி என் முறை.

பட்டியலின் இறுதியில் வைக்கப்பட்டிருக்கும் அந்த வரிகள் முந்தையவையோடு சற்றே பொருந்தியும், பொருந்தாமலும் ஒரு மயக்கத்தை ஏற்படுத்துவதை உணரமுடிகிறது. அதுவும் கூட பேசுபொருளின் முன்பாக நாம் கொள்ளும் தடுமாற்றத்தின் நீட்சியாகவே படுகிறது.

தவிரவும் விளிம்புநிலையர்கள் குறிப்பாக யாசகர்கள், பைத்தியக்காரர்களிடத்து குமாரனின் அன்பு பெருக்கெடுக்கிறது.

பிறகு ஒன்றை சொல்லியே ஆகவேண்டும். காலங்காலமாக தமிழ்க் கவிதைப்பரப்பில் கடற்கரையெனில் கிளிஞ்சல்களையும், ஆறு, ஓடை எனில் கூழாங்கற்களையும் இந்தக் கவிஞர்கள் மாய்ந்து மாய்ந்து பொறுக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அல்லது மரத்திலிருந்து உதிரும் இலைகளைத் தேமே எனப் பார்த்தவாறு இருக்கிறார்கள்.  இலைகள் உதிராத காலத்தில் பதட்டத்தில் உலுப்பத் தொடங்கி விடுகிறார்கள். ஒரு இலை உதிர்வதைப் பாராமல் எழுந்து போகவே மாட்டேன் என்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் சங்கப் பலகையில் கணேசகுமாரனும் தனது பெயரை முன்பதிவு செய்துள்ளார்.

எங்கள் ஊரின் கிழக்கே ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு உண்டு. எனது பால்யத்தில் அதுவே ஊரின் தாகத்திற்கான ஒற்றை முலையாக இருந்தது. அந்தக் கிணற்றின் நாலாபக்கமும் நின்று கடகா போட்டு தண்ணீர் இறைப்பார்கள். கயிறு இற்றுப்போய் சில நேரங்களில் கடகா கிணற்றில் விழுந்துவிடுவதுண்டு. அதுபோன்ற நேர்வுகளில் கடகாவை வெளியே எடுக்க பாதாளக் கரண்டி கொண்டுவந்து கிணற்றில் வீசுவார்கள். அப்போது பாதாளக் கரண்டியின் கொக்கியில் மாட்டிக்கொண்டு வேறு கடகா வெளியே வரும். அது ஒரு திகிலான, சுவாரஸ்யமான அனுபவம்.

அப்படித்தான் கவிஞன் ஒன்றை கவிதைக்குள் இறக்கி வைக்கிறான். நமது வாசிப்பின் பாதாளக் கரண்டியோ கவிதையிலிருந்து வேறு ஒன்றை எடுத்து வந்து கவிஞனையேத் திகிலூட்டுகிறது. அப்படி சிலவற்றை வேறொன்றாய் வசிக்கக் கிடைக்கிறது இத்தொகுப்பில்.

' அவர்கள் முதலில்
இல்லையென்றுதான் சொன்னார்கள்
முடிவில் ஆமாமென்றார்கள்
அதற்குள்
ஒரு யுகம்
கடந்துவிட்டிருந்தது'

தொன்னூறுகளில் உலகமயமாக்கல் நமது நிலத்தில் நிகழ்ந்தபோது இந்த மன்மோகன்கள் '' குறையொன்றும் இல்லை'' என்று இசைத்தார்கள். தற்போது அதே மன்மோகன்கள் '' ஆம், தப்புதான் நிகழ்ந்துவிட்டது'' என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள். ஒரு யுகம் கடந்துதான் விட்டது குமாரா. சோரம் போன ஒரு நிலத்தின் வலியைத்தான் நீ மொழிப்படுத்தியிருக்கிறாய்.

' மறுக்கப்பட்டதற்கு எதிராக' என்னும் கவிதையில்

'' பலயுகம் கழித்தும்
தன் மூதாதையின் நியாமற்ற மரணத்திற்கு
நீதி தேடி பறந்து கொண்டிருக்கிறது
ஒற்றைக் கால் ஊனப்பறவையொன்று ''
- வேறு ஒன்றை கணேசகுமாரன் குறிப்பிட்டாலும்அது ஈழத்தின் பறவையாகவும் மாறி துயரங்கொள்ள வைக்கிறது. 

'' கண்ணாமூச்சி ஆடிய குழந்தைகள்
கட்டி முடித்த வீட்டில் தேடுகிறார்கள்
காணாமல் போன இடங்களை''- என்கிற குறிப்பிடும்படியான வரிகளை எழுதிப்போகும் குமாரனிடம் வெளியில் கொண்டாட்டத்திற்கு உரியதாக இருந்த எதுவும் ஒரு கூடாரத்தின் கீழ் வரும்போது அதன் அர்த்தத்தை தொலைத்துவிடத்தான் செய்கிறது என்று பேசிப்பார்க்கலாம்தானே...

'' நாமிருந்தோம்
 காட்டின் பிள்ளைகளாய்'' - என்று துவங்குகிறது இந்தத் தொகுப்பு. ஒரு கவிஞன் வந்து சேர வேண்டிய மகத்தான இடம் அது. ஆனால் அந்தக் கவிதையில் ஒரு சொல், ஒரேயொரு சொல் நமது ஆதிக்காட்டின் அர்த்தத்தை சிதைப்பதாக உள்ளது.

' உயிர் வலி' என்ற கவிதையில்
'' நான் செருகிய கத்தி
தொங்கிக் கொண்டிருக்கிறது உன் கழுத்தில்'' - என்று எழுதிப்போகும் குமாரன்தான் பூர்வக் காட்டில்,

'' சீங்கை கீரை சமைத்த
 பெண்டாட்டியின் மாரில்
 பச்சைக் கோலம் வரைந்து களித்தோம்'' - என்றும் எழுதுகிறார்.

வீட்டுக்கும் காட்டுக்கும் இடையில் கிடந்தது ஊசலாடுகிறது மனது. காட்டை அழித்து வீட்டை அமைத்தது வரலாறு. ஆக, காட்டை நேசிப்பவர்கள் வீட்டை அழித்துதான் வரலாற்றை நேர் செய்ய முடியும். இதைக் கருத்தியலாகவேணும் நாம் ஏற்கத்தான் வேண்டும்.

இத்தொகுப்பின் மிகப் பிடித்தமான கவிதை ' உயிர்'

உயிர்

நான்கு நாட்களாக
கிழிபடாமல் இருக்கும்
நாட்காட்டியில் தொடங்கி
அறைக்கதவின் உட்பக்கத் தாழ் தொட்டு
சுழலாத மின்விசிறியின்
உச்சிக்குச் சென்று
இறுகித் தொங்கும் நைலான் கயிற்றின்
வழி கீழிறங்கிப் படரும்
தன் வாழ்விடத்தின் வாசலை
பின்னத் தொடங்குகிறது அச்சிலந்தி
பிதுங்கிய அவ்விழிகளின் மீது.

மிகவும் நுட்பமாக எடிட் செய்யப்பட்ட துயரத்தின் சாட்சியாக கவிதை வலியோடு விரிகிறது.
அதற்கு இணையாக வேறொன்றைப் பொருத்திப் பார்க்கலாம்.
கிழிபடாத  நாட்காட்டியைக் காட்டியபின் பரபரத்து நாம் நமது அன்றாட அலுவல்களில் மூழ்கியிருந்ததையும், உட்பக்கத் தாழ்ப்பாளைக் காட்டியபின்பு இங்கே வாய்த்த புணர்ச்சிக்காக  நாம் தாழிட்டுக் கொண்டதையும், அங்கே சுழலாத மின்விசிறியின் காட்சியை அடுத்து மின்வெட்டைப் பழித்து நாம் உதிர்த்த கெட்ட வார்த்தைகளைக் காட்சிபடுத்தியும், அந்த நைலான் கயிறை காட்சியாக விரித்தபின் எந்தக் குற்ற உணர்வுமற்று நான்கு ரத வீதிகளிலும் வடக்கயிறு பற்றி தேர் இழுத்துத் திரிந்ததையும் காட்டி பிதுங்கிய விழிகளில் காமிரா நிற்க நம் அனைவரின் மீதும் கொலைப்பழி கவியத் தொடங்குகிறது. 

ஆம் அங்கே பரிதாபமாக தொங்கிக் கொண்டிருப்பது ஓர் இனத்தின் உயிர்தானே குமாரா...








Thursday 19 July 2012

உயிர் துரத்தல்

அத்தனை உயிரும்
செத்தொழிந்த இரவில்
அவன் மட்டும் பிழைத்திருந்தான்
ஆதி பிரபஞ்ச கதகதப்பில்
ஒளிந்திருந்தான் பாதுகாப்பாய்
சூரியன் கண்ட கணத்தில்
தொடங்கியது உயிர் துரத்தல்
வேட்டையெங்கும்
சிதறிய அவனை சேகரித்து
உருவான உயிரிடம்
புத்துலகின் முதல் துளி
ஆழ் இருளில் தேடித் தேடி
அடைந்ததொரு பெருவெளியில்
அத்தனை உயிரும் பிழைத்தலைந்த பொழுதில்
நிகழ்ந்ததவன் உயிர் துரத்தல்.

நன்றி தீராநதி

பைத்தியங்கள் திரியும் காடு

மழைக்குருதியில் நனைந்த
வெள்ளைப்பூக்களின் தலைக்கு மேலே
வட்டமடிக்கும் பிணந்தின்னிக் கழுகுகள்

உபயோகிக்கப்பட்ட உடல்கள்
விசிறப்படுகின்றன காடெங்கும்

துடிக்கும் அவளை ரெண்டாய்ப் பிளந்து 
வெளிவரும் சிசுவொன்று
குண்டுவிழும் ஓசையுணர்ந்து
சட்டென்று பின்வாங்க
அதிர்கிறது யோனிப்பாதை

உயிர்வாதை தீராமல் வளர்ந்து வரும் பாதிச்சடலம்
தன் பிரார்த்தனையில்
அடிக்கடி மாற்றுகிறது கடவுளின் பெயர்களை

தோட்டாக்கள் முளைத்த மரமொன்று
சாகத் தொடங்குகிறது  மெல்ல

அழுகிய சதையுடன் அலையும் பைத்தியங்கள்
ஆகாயம் பார்த்து சபிக்கின்றன

சருகுகளை நிலைகுலைக்கும் பேய்க்காற்று
மண்தடவி உறிஞ்சுகிறது
திறந்த விழிகளின் மீது உறைந்த உயிரினை.

நன்றி தீராநதி 

நன்றி ஓவியர் ஞானப்பிரகாசம்


நன்றி ஆண்டிப்பட்டி முருகன்


பெருந்திணைக்காரன்

தற்கொலைக் கவிதைகள்




123linesep

ஒரு புள்ளியில் தொடங்கி

ஒரு புள்ளியில் தொடங்கும் வாதை
கோடென நீண்டு வளைந்து நெளிந்து
பின் உயரத்தில் சுருக்கிட்டுக் கொள்கிறது நிலம் வனம் கடக்கும் அப்புள்ளி
நெடுந்தூரப் பயணத்திற்குப் பின்
மழை கண்டு மேலிருந்து வீழ்கிறது
தன்னை அழித்துக்கொள்ள
தனிமை தேடும் சிறுபுள்ளி
மெல்லப் பருத்து கணம் தாங்காமல்
சிதறிப் பரவுகிறது
ஆழ்கடல் கண்டு நடுங்கி
அறை திரும்பும் அப்புள்ளியின் தொண்டைக்குழியில்
தேங்கி நிற்கிறது
எக்காலத்திலும் தீராத துளி விஷம்.
123linesep

மிக லேசாய் ஒரு மரணம்

ஓர் இலையென மிதக்கும் வாழ்வின் மீது
ஒரு மலைப்பாம்பென அசைகிறது மரணம்
சருகின் மீது கிடக்கும் கல்லென
கனக்கும் மரணத்தினை
அத்தனை எளிதாய் நீக்கமுடிவதில்லை
மலம் கழிக்க திணறும் வயோதிகனின்
வீங்கிய அடிவயிறாய்
மெல்ல மெல்ல வாழ்வு
சுமக்க முடியாமல் போகையில்
பறவையின் உதிர்ந்த ஓர் இறகாய்
தன்னை எழுதிச்செல்கிறது மரணம்
அத்தனை வாதையினையும் துடைத்தபடி.
123linesep

மழை சாட்சி

ஒரு கொலை புரிய
அந்த மழை மாலையை தேர்ந்தெடுத்தது
அத்தனை அழகு
சன்னல் வழி இறங்கும் மழையினை
சாட்சியாய் வைத்து நிகழ்ந்த
அந்தக் கொலை அற்புதமாய் முடிந்தது
பிதுங்கி உறைந்த விழியில் படிந்த
மழையினைக் கண்ட மழையின்
நடுங்கிய கண்களின் வழி
மேலும் மேலும் மழை பொழிந்தபடி இருக்கிறது.
123linesep

கடைசி விருப்பம்

நிரப்பப்பட்ட மதுக்குவளை
தீர்ந்து முடிவதற்குள்
ஒரு சிகரெட்
தன் கடைசி சாம்பலை உதிர்த்து
காணாமல் போவதற்குள்
கடிகார முட்கள் புணர்ந்து
புதியதார் ஒரு நாளினை
பிரசவிப்பதற்குள்
ஒலித்துக் கொண்டிருக்கும் அழைப்பு மணி
ஓய்ந்து போவதற்குள்
இவ்வுலகின் பைத்தியப் பட்டியலில்
புதியதாய் ஒரு பெயர் இடம் பெறுவதற்குள்
வாழ்வின் கடைசித் துளிச் சுவை மீது
விருப்பம் வருவதற்குள்
நிகழ்ந்துவிட வேண்டும் ஒரு தற்கொலை.
123linesep

தண்டவாளங்களின் அலறலில் கரையும் மௌனம்

கை குலுக்குவதற்கும்
விடை பெறுவதற்கும் பயணிகளற்ற
ஓர் இரயில் நிலையத்தின் ஓரமாய் கிடக்கும்
சிமெண்ட் பெஞ்சில் உதிர்ந்த
மஞ்சள் பூக்களை ஒதுக்கி
ஒருவன் அமர்ந்திருக்கிறான்
தண்டவாளங்களின் கனத்த மௌனம்
விரைந்து கொண்டிருக்கிறது
மனத்தின் நிச்சலனப் பாதையில்
ஆயிரம் கால்களிலும் தகதகக்கும்
வெயில் சுவைத்தபடி
சரளைக் கற்களின் மீது நகரும் மரவட்டையினையும்
அடர் மழையில் மிதந்து செல்லும்
இமை திறவா நாய்க்குட்டியின்
சடலத்தினையும்
கவனித்தபடி இருக்கிறவன்
நிறைந்த பயணிகளுடன்
மிகப் பெரிய கூச்சலிட்டு நெருங்கும்
இரயிலின் முன்பு
எவ்வித அலறலுமின்றி மோதுகிறான்.
123linesep

இன்னும் முடியாத கவிதை

கண்ணுக்கெட்டிய தொலைவில் கயிறும்
கைகெட்டிய தொலைவில் பேனாவும்
ஓர் இறப்பின் இடைவெளியினைத் தீர்மானிக்கிறது
உடனடியாக அவன் இப்போது
ஒரு கவிதை எழுதியாகவேண்டும்
அசைவற்று நின்றிருக்கும் அம்மின்விசிறி
அச்சமூட்டுவதாய் இருக்கிறது
இன்று காலை கண்விழித்த
தற்கொலையின் விசாரணை
இன்னும் முடியாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது
மூன்றாம் பக்கத்தின் நான்காம் பத்தியில்
முதல் வரிக்குப் பிறகு
மூன்றாம் வரிக்கு முன் தீர்ந்துபோய்விடக்கூடாத
மையில் உறைந்திருக்கிறது
எழுதப்படாத வாழ்வு
ஒரு தற்கொலையினை
ஒரு கவிதை தவிர்க்குமென நம்புபவனை
தயவுசெய்து நம்புங்கள்
கூடவே
இந்தக் கவிதை இன்னும் முடியவில்லையென்பதையும்
மனதில் கொள்ளுங்கள்.

நன்றி பண்புடன் இணைய இதழ்

Wednesday 18 July 2012

இசையின் கவிதை


123linesep

வாணலிக்குள்ளிருந்து பேசுகிறேன்

எவன் குவளை நீரை தட்டிவிட்டேன்
எவன் குடிசைக்கு தீ வைத்தேன்
எந்த தெய்வத்தை நிந்தித்தேன்
எந்த பத்தினியின் விரதத்தை கலைத்தேன்
எந்த சொல்லால் எவன் நெஞ்சை சிதைத்தேன்
எந்த சிறுமியை வல்லாங்கு செய்தேன்
எந்த குருடனுக்கு புதைகுழிக்கு வழிசொன்னேன்
எந்த சூலியின் நிறைவயிற்றைக் கிழித்தேன்
எந்த தூளிக்குள் அனலள்ளிப் போட்டேன்
எந்த நண்பனின் புறங்கழுத்தைக் கடித்தேன்
எவன் தொடைசதைக்கு நன்றி மறந்தேன்
எப்பிறப்பில் எவன் குடியறுத்ததற்கு இப்பிறப்பு.



தரங்கம்பாடி

சிவபிரசாத்துடன்

தரங்கம்பாடி கோட்டை வாசல்

 நண்பன் சிவப்ரசாத்துடன் 

செஞ்சிக்கோட்டை காலை



நன்றி நிலா ரசிகன் 

மகாபலிபுரத்து மாலை

நன்றி சரோலாமா 

Tuesday 17 July 2012

பிரச்சனை



வண்ணத்துப் பூச்சிகள் நிறைந்த வனத்துக்கு
என்னை இடம்பெயரச் செய்யுங்கள்
கருகிய புல்லாங்குழல் என் கண்ணுக்கு காணக் கிடைக்கும்
நிறைநிலா இரவுகளைப் பரிசளியுங்கள்
இமை திறவா நாய்க்குட்டியின் மார்கழிச் சடங்கில்
பங்கேற்பேன் நான்
பூக்களின் வாசனை பொதிந்த ஒலி நாடாவினை
எனதறையில் சுழலவிடும்போது
நேற்றிரவு பிறந்து இறந்த ஈசல்களுக்காக
கண்ணீர் அஞ்சலி வாசித்துக் கொண்டிருப்பேன்
மூன்றாம் நாளில் உயிர்ப்பித்த கதையை
ஆனாந்தம் பொங்க அறிவிக்கும் போதெல்லாம்
முள்முடியும் ஆணியும் சிலுவையும் களையாத
பிதாவின் உறைந்த கண்களில் நான்
என்னதான் உன் பிரச்சனை என்கிறீர்கள்
ஆமையின் ஆயுளினை
வரம்பெறாத ஈசல்கள் வாழும் உலகில்
சிலுவையை விரும்புவனின் வாதையை
பிரச்சனையென்கிறீர்கள்

நன்றி மலைகள் .காம் இணைய இதழ் 

பறவை



இசை உண்டு வாழும் பறவையின்
சாகசம் கைகூடவில்லை
தண்ணீரையும் பாலையும் பிரித்தருந்தும்
சாமர்த்தியம் வசப்படவில்லை
துணையின் பிரிவினைத் தகிக்கமுடியாமல்
சிறு பாறை விழுங்கி விழுந்து சிதறும்
மனோதிடம் வாய்க்கவில்லை
பறந்து அலைந்து திரிந்தாலும்
வளர்ந்த இடம் திரும்பும்
விசுவாசம் நிலையாயில்லை
ஒரு கூண்டில் அடைபட்டு கொஞ்சம் சொற்கள்
கொஞ்சிப் பேசி பழகவில்லை
இருப்பதும் பறப்பதும் வானமென்று தெரிகிறது
எத்தனை முறை எரிந்தாலும்
மீண்டும் எழுந்து பறக்கும்
சாம்பல் சாபம் மட்டும்
அளிக்கப்பட்டிருக்கிறது விமோசனமின்றி. 



நன்றி மலைகள் .காம் இணைய இதழ் 

பயண பாடல்

செவிகளில் அந்திமழை பொழிய 
இதழ்களிலும் விழியினிலும் சிறு நகையாட 
மாநகரை வேடிக்கை பார்த்தபடி 
பேருந்தில் பயணிக்கிறாள் 
ஒருத்தி 


தேனில் வண்டு மூழ்கும்போது 
முதல் நிறுத்தத்தினைக் கடக்குமவள் 
தண்ணீரில் நின்றும்  வேர்க்கும்
 பரிதவிப்பின் விளிம்பில் 
விழிகளில் நிறம் மாற கவனிக்கிறாள் 
இருளணியும் ஆகாயத்தினை 


மன்மதன் அம்புகள் தைத்த இடங்களில் 
ஒளிரும் நகரினைக் கடக்குமவள் 
நெற்றி சிகையினை கலைத்து  விளையாடும் 
காற்றினை ஒதுக்கியபடி எழுகிறாள் 


சிப்பியில் தப்பிய நித்திலமென 
தனது நிறுத்தத்தில் இறங்குமவள் 
கண்களில் இருந்து உடையும் நீரில் 
தொடரும் அடுத்த பயணம்.

உயிரோசைஇணைய இதழ் 2011 

சிக்னல்



சிறுகதை

திடுக்கிட்டு விழித்தேன். உடன் எழுந்து அமர்ந்தேன். அருகிலிருந்த செல்போனில் மணி பார்க்க 2 . 12  மணி வரையிலும் விழித்துக் கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. முகத்தைத் தொட்டுப் பார்த்தேன். கன்னங்களில் கண்ணீர் காய்ந்திருந்ததை விரல்கள் உணர்ந்ததும் அடிவயிற்றில் சில்லென்று கத்தி நழுவிட இதயத்துடிப்பின் வேகம் தன முறையை மாற்றியிருந்தது. கனவில்தானே அழுதேன்? கனவில்தானே கிருஷ்ணன் செத்துப் போனான்? கிருஷ்ணன் செத்துக்கிடந்த காட்சி மலை கழுவிய பாறையாய் பளீரென மனதில் தென்பட மிக அனிச்சையாய் கண்கள் கலங்கி கண்ணீர் வழியத் துவங்கியது. அறைக்குள் அடர்ந்திருந்த இருட்டில் மிக லேசாக சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறி தெரியவில்லை. மெல்ல நகர்ந்து சுவற்றின் மீது சாய்ந்து கொண்டேன். கையில் இருந்த செல்போன் திரையில் கிருஷ்ணனின் என்னைத் தேடி காலிங் பட்டனை அழுத்த எதிர்முனையில்' நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் இறந்து சில நிமிடங்கள் ஆகிவிட்டன' என்றது இளமை நிரம்பிய பெண்குரல். பெருந்துக்கத்துடன் மனம் வெடித்தது. ஏன் செத்தான் கிருஷ்ணன்?

எப்போதும் சிக்னல் வந்துவிட்டாலே என் நடை நிதானமாகிவிடும். ஊரில் இத்தனை டென்சனான வாழ்க்கை கிடையாது. நகரத்தில் தனது உளைச்சலையும் அடுத்தவர் மீது திணித்துவிட்டு ஓடும் எந்திர வாழ்வில் சிக்னல்களில் எப்போதுமே  நான் நிதானிப்பதுண்டு. மற்றொன்று  என்னால் வேகமாய் மட்டுமல்ல.மிக மெதுவாய் கூட ஓடமுடியாது. ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் சிக்கி மீண்டது மறுபிறவி. இடது கால்முட்டியின் சில்லுகள் தெறித்து அங்கே சில்வர் பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன. மண்டையில் விழுந்த விரிசலில் மிகப் பலமான தையல் போடப்பட்டிருக்கிறது. காபி குடித்தால் ஒத்துக்காது. குமட்டும். மூளை கொஞ்சம் பாதிக்கப் பட்டிருக்கிறது என்றார் டாக்டர். என் மீது எந்த தப்பும் இல்லை.பஸ் டிரைவர் மீதுதான் எல்லா தப்பும் என்று சொல்லியும் டாக்டர் கேட்கவில்லை. மூலையில் உறைந்த ரத்தத்தை அகற்றுகிறேன் பேர்வழி என்று தெறித்த மண்டையை உடைத்தார். கொஞ்ச நாட்களுக்கு வலிப்பு வந்து கொண்டிருந்தது. எப்டாயின்,பிரிசியம் 10  mg , கார்டினால் 60  என்று மாத்திரைகள் உற்ற நண்பர்கள் ஆனார்கள்.அதிலும்  கார்டினால் 60 மிகவும் பொசசிவ்னஸ். இரண்டு நாள் மறந்து விட்டால் போதும். மூன்றாம் நாள் மிகக் கொடூரமான வலிப்பினை வரவைத்து தன்னை ஞாபகப் படுத்தும் அளவுக்கு....ப்ச். கிருஷ்ணன் செத்ததை சொல்லவந்து நான் செத்துப் பிழைத்த கதையை சொல்கிறேன்.

கிருஷ்ணனுக்கு ப்ராய்லர் சிக்கன் என்றால் பிடிக்காது. மேச்சேரி சென்றுவிட்டால் பெரும்பாலும் இரவு சாப்பாடு ஓட்டலில்தான் இருக்கும். கிருஷ்ணன் எனக்காக நாட்டுக்கோழி ஆர்டர் சொல்வான். கிருஷ்ணனிடம் என் தாயைப் பார்த்திருக்கிறேன் அப்போதெல்லாம். அம்மா இருந்தபோது மார்க்கெட் சென்று நாட்டுக்கோழி வாங்கிவந்து அரிவாள் மனையில் தலையை அறுத்துவிட்டு துடிக்கத் தொடங்கும் கோழியின் உயிரை அலுமினிய அன்னக் குண்டானில் போட்டு மூடி வைத்துவிடும். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்னை ' ஊட்டுக்குள்ள போடா...' என்று சத்தம் போட்டுவிட்டு சிறிது நேரம் அந்த அன்னகுண்டான் தரையிலே அங்குமிங்கும் நகரும். இறக்கைகளின்    படபடப்பு அலுமினிய சுவற்றில் பட்டுத் தெறிக்க அசைவு அடங்கியதும் இறக்கைகளைப் பிய்த்துவிட்டு சுத்தம் செய்து கழுவி துண்டு துண்டாக கோழியை அரிவதை அருகிலிருந்தவாறு பார்த்துக் கொண்டிருப்பேன். கோழியின் சூடான உடல் வாசனை என் நாவில் எச்சில் ஊறவைத்தபடியிருக்கும்.நான் கிருஷ்ணன் செத்ததை சொல்லவந்து கோழி செத்ததை சொல்லிக் கொண்டிருக்கிறேன்...பாருங்கள்.

அன்று அப்படித்தான்.சிக்னலில் நின்று கொண்டிருக்கும்போதுதான் கவனித்தேன். கிருஷ்ணனுக்கும் எனக்கும் பிடித்த நாட்டுக்கோழி ஒன்று சாலையில் எங்களோடு தயங்கி நின்றது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அறிவுகெட்ட கோழி மடத்தனமாய் ஒரு காரியம் செய்தது. பச்சை விளக்கு விழும் முன்பே சாலையைக் கடக்க முற்பட, வேகமாய் விரைந்து கொண்டிருந்த கார்களில் சிவப்பு நிற ஆல்ட்டோவும் இருந்தது. முதலில் அதன் சக்கரத்தில் தான் சிக்கியது. பிளாஸ்டிக் சத்தத்துடன் பட்டெனத் தெறித்து பின்னாலே வந்த ஜென்னில் மோதியது. அதற்குப் பிறகு அந்தக் கோழி மெல்ல ஒரு காலியான மினரல் வாட்டர் பாட்டிலாகவும் மெல்ல மெல்ல கிருஷ்ணனாகவும் மாறி மாறி அந்த பரபரப்பான நெடுஞ்சாலையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்ததை என்னால் பார்க்க முடியவில்லை. திடுக்கிட்டு விழித்து விட்டேன்.

                                                              2
தனபாலிடமிருந்து போன் வந்தது உடனே புறப்பட்டு வரச்சொல்லி. காரணம் கேட்க எதுவும் சொல்லவில்லை. இரண்டு  நாட்களுக்கு முன் கிருஷ்ணன் போனில் என்னிடம் பேசிய வார்த்தைகளுக்குப் பிறகு கிருஷ்ணனைப் பற்றி நினைத்தாலே அந்த வார்த்தைகள்தான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. அதற்கு முன்பெல்லாம் அவனின்  கூத்து கட்டும் புன்னகைதான் நினைவுரும். 'கிருஷ்ணனுக்கு என்னாச்சி' என்று பூடகமாய் நான் கேட்டதற்கும் தனபால் பதில் சொல்லவில்லை. பஸ் ஆம்பூர் தாண்டி திருப்பத்தூர் நோக்கிச் செல்லும்போது மனது கேட்காமல் கிருஷ்ணனுக்குப் போன் செய்தேன். அன்று அவன் அப்படிபேசியபிறகுமறுபடியும்போனி
ல் நானும்பேசவில்லை.அவனும்  பேசவில்லை. கிருஷ்ணனாய் போன் செய்யட்டும் என்றுதான் விட்டிருந்தேன். இன்று தனபால் அழைத்ததும் புறப்பட்டு விட்டாலும் கிருஷ்ணனிடம் சொல்லாமல் மேச்சேரி செல்வது உறுத்தலாயிருந்தது. எப்போது ஊருக்குச் செல்வதாயிருந்தாலும் கிருஷ்ணனிடம் போனில் பேசி தகவல் தெரிவித்துவிட்டுத்தான் செல்வது. சமயங்களில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தருமபுரிக்கு பஸ் ஏறும் முன்பு போன் செய்து கேட்டிருக்கிறேன். ' கம்பெனியில டைட் ஒர்க்...ரெண்டு நாள் கழிச்சு வா' என்றதும் பஸ் ஏறாமல் திரும்பியிருக்கிறேன். ஆனாலும் அந்த இரண்டு நாட்களில் பத்து முறையாவது போன் வந்துவிடும். ' என்ன எதுவும் பிரச்சனையா...பணம் எதுவும் தேவைப்படுதா..ஒருமுறை திருப்பித் திருப்பி இதையே கேட்டதும் கோபம் உச்சந்தலைக்கு ஏற ' பணம்னா மட்டும்தான் ஒன்கிட்ட வருவேனா...பேசறதுக்கு எனக்குன்னு யாருமே இல்லாமத்தான ஒன்னத் தேடி வரேன்..' என்று அழுததும் பின்பு அதைப் பற்றி பேசுவதில்லை.

ரிங் போய்க்கொண்டேயிருந்தது. போனை யாருமே எடுக்காதது ஒருவித பயத்தையே உண்டாக்கியது. கண்களை மூடியதுமே கண்ணீர் பெருக பஸ்ஸில் சுற்று முற்றும் பார்த்துவிட்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். மெச்சேரியில் இறங்கியதும் தனபாலிடமிருந்து போன் வந்தது. பைக்கில் வந்து என்னை அழைத்து செல்வதாய் கூறிய தனபால் ஒருமணி நேரமாகியும் வரவில்லை. பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும் போது தனபாலின் பைக்கை யாரோ ஒருவர் ஓட்டிக் கொண்டு வந்தார். தனபால் பைக்கின் முன்புறம் மயில் ராவணன் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். இதற்கு முன்பு பார்த்திராத அவர் அருகில் சென்று ' தனபால் வரலையா...' என்றதும், என்னைப் பார்த்ததும் ' ஓ...நீங்கதான் கருப்புசாமியா..தனபால் வெளியில கொஞ்சம் வேலையாப் போயிருக்காப்ல..நான் ராதா. பக்கத்தூர்தான்.நீங்க வாங்க போவோம்...' என்றார். கிருஷ்ணனின் வீட்டினை நெருங்கும்போதே புரிந்துவிட்டது. பெருங்கூட்டமே கூடியிருந்தது. பைக் நின்றதும் மிக  மெதுவாய்த்தான் இறங்கினேன். இதயப் படபடப்பெல்லாம் இல்லை.கால்களில் மட்டும் லேசான நடுக்கம்.

கலங்கிச் சிவந்த கண்களுடன் வேகமாய் வந்த தனபால் என்னைக் கண்டதும் வாய்விட்டு அரற்றியபடி என் தலையில் ஓங்கியடித்தான்.வலி சுரீரென்று மூளையைத் தாக்க வலிப்பு வந்தது எனக்கு.

லேசான விழிப்பிலேயே தெரிந்துவிட்டது உடல் துடிக்கத் தொடங்கியிருப்பது. இனிமேல் செய்வதற்கு எதுவுமில்லை. மூன்று நிமிடமோ நான்கு   நிமிடமோ உடலின் ஒரு பாகம் முழுவதும் வெட்டி இழுத்துவிட்டுத்தான் அடங்கும். மனம் எல்லாம் உணரும் நிலையில் இருந்தாலும் எதையும் வெளிப்படுத்திவிட முடியாது. திறந்து விரிந்திருக்கும் வலது கண்ணில் மையாய் இருட்டு. எதுவும் செய்யமுடியாமல் உடம்பை அதன் போக்கிலேயே விட்டுவிட்டுக் கிடந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது உடல்.நீளநீளமான மூச்சுகள் விட்டபின் மிகத் தெளிவாய் தியான அமைதி மனதில் நிரம்ப உடல் நடுங்க எழுந்து அமர்ந்தேன். அப்போதுதான் தெரிந்தது,என் புட்டத்துக்கு அடியில் செல்போன் சிக்கிக் கிடப்பது. எப்போதும் அருகில் வைத்தபடிதான் படுப்பது. வலிப்பு வந்து உடல் வெட்டி இழுத்ததில் எப்படியோ போன் அங்கே போய்விட்டது. போனை எடுத்ததும் வெளிச்சம் தெரிய, கிருஷ்ணன் காலிங் என்றது திரையில்.
                                                                  3
பஸ் விரைந்து கொண்டிருந்தது.கண்கள் கலங்கிய வண்ணமிருக்க மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளே ஞாபகம் வர,காதுக்குள் கிருஷ்ணனின் குரல் மிகத்  தெளிவாய் கேட்டபடியிருந்தது. எல்லா நிறுத்தங்களிலும் மக்கள் கும்பல் கும்பலாய் ஏறிக் கொண்டிருக்க பஸ் நெரிசலில் பிதுங்கிக் கொண்டிருந்தது. எவனோ ஒருவன் முழு போதையில் ஏதேதோ அசிங்கமாய் சத்தம் போட்டுக் கத்திக் கொண்டிருந்தான்.பஸ்ஸில் யாரும் அவனைக் கண்டிக்கவில்லை. கண்டக்டர் காதிலேயே விழாதது போல் அமர்ந்திருக்க கால் வைக்கக் கூட இடமில்லாமல் கூட்டம் நெருக்கியபடியிருக்க எனக்கு லேசாக மூச்சுத் திணறியது. நாலாபுறமும் அழுத்திக் கொண்டிருக்கும் மனிதர்களின் சுவாசங்களை மிகவும் கஷ்டப்பட்டு விலக்கி போதையின் உளறலைக் கடந்து கண்ணாடி வழியே சாலையைப் பார்க்க எதிர் திசையில் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களைத் தாண்டி பிளாட்பாரத்தில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது.உற்றுப் பார்க்க கிருஷ்ணன் போர்வை போர்த்திப் படுத்திருப்பதும் அருகில் அமர்ந்தபடி தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்த என்னைக் கண்டதும் உறைந்தேன். இப்போது போட்டிருக்கும் இதே சட்டை, பேண்ட்தான். அருகில் எனது பேக். திடீரென்று ஞாபகம் வந்து நின்று கொண்டிருந்த நான் என் பேக்கைத் தேடமுயல சடர்ன் பிரேக்கில் நிலை தடுமாறி பஸ்சின் கம்பியில் நெற்றி வேகமாய் மோதியது.
                              
                                                    4 பஸ்ஸிலிருந்து இறங்கியதும் மறுபடியும் செல்போன் சிணுங்கியது. கிருஷ்ணன். எடுத்து காதில் வைத்து பழக்க தோஷமாய் ' கிருஷ்ணா' என்றேன். கிருஷ்ணன்தான் பேசினான்.
' வந்துக்கிட்டுருக்கியா'

'ம்' 

'எங்க வந்துக்கிட்டுருக்க'

'மேச்சேரி'

'எறங்கிட்டியா'

' ம்'

சரி..அங்கேயே இரு..வரேன்..'

குழப்பமாயிருந்தது. கிருஷ்ணனின் குரல்தான் அது. எப்படி முடியும் கிருஷ்ணன் இறந்தது எனக்குத் தெரியும். என்னிடம் சொல்லிவிட்டுத்தானே செத்துப்போனான். அவன் உடல் பார்த்து கதறி அழுதேனே. கன்னமெல்லாம் காய்ந்து கிடந்ததே அழுத கண்ணீர். இரவு போன் செய்து பேசினான். இன்று வரச் சொன்னான். நம்பிக்கையேயில்லை. என் மனத்தில்தான் பிரச்சனை என்று புரிந்தது. கிருஷ்ணனிடமிருந்து அந்த வார்த்தைகள் கேட்டபின் என்னமோ ஆகிவிட்டது. அதுதான் மனம் போன போக்கில் சென்று கொண்டிருக்கிறேன். கடைசியாய் கிருஷ்ணனின் வீட்டையும், பேசிக்கழித்த  கிணற்றடி மேடையையும், வழுக்குப் பாறைப் பதிவுகளையும், பெரியாச்சியம்மனின் காவல் குதிரையும் பார்த்துவிட்டு எங்கேயாவது போய்விடலாம் என்றுதான் புறப்பட்டு வந்தது. மிகச்சரியாய் மேச்சேரியில் இறங்கியதுமே போன் வருகிறது. கிருஷ்ணன் சொல்லி ஒருமணி நேரமாகியும் வரவில்லை. பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தபோது தனபால் பைக்கில் வருவது தெரிந்தது. சிரித்தபடி என் அருகில் பைக்கை நிறுத்திய தனபால் தோள் தொட்டு இறங்கியது...கிருஷ்ணன்தான். என் கால்கள் நடுங்கின.  கலங்கிச் சிவந்த கண்களுடன் பாய்ந்து கிருஷ்ணனின் சட்டையைப் பிடித்தேன். உலுக்கியபடியே கத்தினேன்.' நான் செத்ததுக்கப்புறம் என்ன நெனச்சிப் பாப்பேன்னு சொன்னீல்ல...இப்ப பாத்தியா..நீ சாகல...நான் நெனச்சிக்கிட்டுருக்கேன்' கிருஷ்ணனின் கன்னத்தினை என் விரல்கள் வருடிய உணர்வு அப்படியே உறைந்து நின்றது. வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை.
                                                                  5 

' இதை நாங்க பிரீப் சைக்கோசிஷ்னு சொல்லுவோம். தான் நேசிக்கிற ஒருத்தர் திடீர்னு இறந்துபோனாலோ அல்லது அது போன்ற மன நெருக்கடிக்கு ஆளானாலோ திடீர்  நிகழ்வாய் இது மாதிரி ஆயிடலாம். உறவுகளை வெறுத்த கருப்புசாமிக்கு எல்லாமே நண்பர்கள்தான். கருப்புசாமியோட இன்பதுன்பங்கள்ள  கூடவே வந்துக்கிட்டிருந்த கிருஷ்ணன்தான் அவருக்கு எல்லாமுமா இருந்திருக்காரு. அப்பேர்பட்ட கிருஷ்ணன் ஏதோ சின்ன மன வருத்தத்துல சொன்ன வார்த்தைகள்தான் ' நான் செத்ததுக்கப்புறம் என்ன நெனச்சிப் பாப்பே' ன்னது.கருப்புசாமியோட மனச அந்த வார்த்தைகள் வெகுவா பாதிச்சிடுச்சி.போன்ல பேசிட்டு அந்த வார்த்தைகளோட வலி தாங்க முடியாம சிக்னல்ல வந்து நிக்கும்போது ஒரு மினரல் வாட்டர் பாட்டில் ட்ராபிக்ல சிக்கி எல்லா கார் சக்கரங்கள்ளேயும் அடிபட்ருக்கு. கிருஷ்ணனோட வார்த்தைகள்ல இருந்த கருப்புசாமிக்கு அது கிருஷ்ணனா தெரிஞ்சிருக்கு. அதோட பஸ்ல ட்ராவல் பண்ணும்போது அதிக போதையில் அராஜகம் பண்ணிக்கிட்டு இருந்த குடிகாரன தன்னால தட்டிக் கேட்கமுடியாத இயலாமை, நகரத்து நெருக்கடிகள்ல சிக்கிக் கொண்டு தவிக்கிற தன்னோட இயல்பு எல்லாம் கருப்புசாமியோட மூளையில சிறிதளவு பாதிப்பு ஏற்படித்திடிச்சு. தொடர்ந்த ரெண்டு மூணு நாட்கள்ல கிருஷ்ணன் இறந்து போய்விட்டது போலவும் அதற்கு தான் போவது போலவும் கனவு கண்டிருக்கிறார். ஸ்ட்ரெஸ் அதிகமாகி இடையில கொஞ்ச நாள் கருப்புசாமிக்கு இருந்த வலிப்பு மறுபடியும் வந்துருக்கு...மற்றபடி அவர நாங்க ஆழ் மன சிகிச்சைக்கு உட்படுத்தி பேச வச்சதில நகரத்துல வாழப் பிடிக்காத அவரோட குணாம்சம்தான் வெளிப்பட்டது. கிராமத்து சூழல்ல பொறந்து வளர்ந்திட்டு வாழ்வின் நெருக்கடிகளினால நகரத்தில பிழைக்க வர்ற பல இளைஞர் களோட மனநிலையில இப்படி ஒரு அனாதைத் தன்மை உணர்ற பீல் இருக்கு. இது வியாதியில்ல.தொடர் கவனிப்புல சரியாயிடும்.ஆனாலும் கனவு என்பது சின்ன மனநோய் னு ப்ராயிட் சொன்னது வச்சி பார்க்கும்போது கருப்புசாமிக்கு இப்போ தேவை நிறைய பணமோ ஆறுதலோ இல்ல. அவர்மேல உண்மையா அன்பு செலுத்துற கிருஷ்ணன் மாதிரியான நபர்களோட அருகாமை மட்டும்தான்.'

டாக்டர் தனபாலிடம் பேசும்போது என் பெயரையும் குறிப்பிட்டதில் ஆர்வம் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தேன். கிருஷ்ணன் உயிரோடு இருப்பதை மட்டும் என்னால் நம்பமுடியவில்லை.  அவனை நேரில் பார்த்ததே பெரும் நிம்மதியாயிருந்தது. ஆனால் எவ்வளவுதான் மறக்க நினைத்தாலும் கிருஷ்ணனின் அந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஞாபகம் வந்து தலையை லேசாக வலிக்கச் செய்கிறது. டாக்டர் தனது பிரிஸ் கிருப்ஷனில்  மாத்திரை மருந்துகள் எழுதிக் கொண்டிருக்கும்போது தீர்மானித்தேன். வலி தீர ஒரே வழிதான் உள்ளது. கிருஷ்ணன் என்னிடம் சொன்ன அதே வார்த்தைகளை நான் அவனிடம் சொல்லாமலே...


                                                         
நன்றி உயிர்மொழி இதழ் 

நகர வீதிகளில் அலையும் குரல்கள்











ஒரு நிறுவனம் ஒருவனைக் கொன்றுவிட்டது


அவன் கவிஞன் என்பதால் 
மூளையின் வலது பக்கத்தில் சிறிது அகற்றி 
கழுத்தில் கறுப்புக் கயிறு கட்டித் தொங்கவிடப்பட்டு 
நிறுவன அடிமை அட்டை பளிச்சென்று தெரிய 
பாதாள அறையில் அவன் பணிகள் நியமிக்கப்பட்டன 
அவன் விளிப்பு அவன் செவிகளிலேயே
விழாமல் போனது 
பசியின் துரத்தலில் பதுங்கியவன் நிழல் 
நிறுவன கரங்களின் அணைப்பிலிருந்தது 
அவன் புன்னகையைக் களவாடி 
யாழினைத் தந்தனர் கையில் 
இறந்தது தெரியாதது போல் நடிக்கிறவன்
சிறந்த நடிகனாகிவிட்டான் கவிஞன் 
அவனுடைய ஒப்பமில்லாமல் தயாரிக்கப்பட்ட 
ஏவல் பத்திரத்தில் அடிமைப் பாத்திரமென 
பொறிக்கப்பட்டிருக்கிறது 
சுயம் அழித்து வெறித்த விழிகளுடன் 
சிக்னல்களில் சிக்காமல் இயக்கப்படுகிறவன் 
பாதங்களில் சங்கிலிச் சத்தம் 

நிறுவனங்கள் நிறைந்த நகரமெங்கும் 
சுற்றித் திரிகின்றன 
விதை நசுக்கப்பட்ட வெற்றுக்குரைப்புகள்.
   தீராநதி 2011 நவம்பர் இதழில் 

குறும்பட விமர்சனம்



  
ஒரு குடியின் பயணம் -
குறும்படம் -
இயக்கம் இசாக்
 [பத்து நிமிடம்]
                                                             பயணப்படுவதற்குமுன்.....
 
பெரும் பங்களாக்களின் ஆடம்பர விருந்துகளில்,உயர் கனவான்களின் பிறந்த நாள், இறந்த நாள் விழாக்களில் மது அருந்துவது எப்போதும் பணக்கார நாகரீக அடையாளமாகவே உள்ளது.ஆனால் மது அருந்துவது நாட்டுக்கு,
வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று அச்சிடப்பட்ட மது பாட்டில்களை அரசாங்கமே விலை போட்டு விற்கும் போது சாமானியன் அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்றுசெல்லத் துவங்குகிறான்.கொஞ்சம் கொஞ்சமாக மதுவுக்கு
அடிமையாகும் மனிதன் தன்னை மறக்கிறான் முதலில்.பின் குடும்பத்தை. அதன் பின் நாட்டை. இதைத்தானே  அரசாங்கமும் விரும்புகிறது. 
 
முன்னொரு காலத்தில் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் ஏழை மக்கள் தங்கள் உடல் களைப்பினை  போக்கிக்கொள்ள சிறிது மது அருந்திவிட்டு உறங்கிப் பின் உற்சாகமாய் எழுந்து மறுநாள் வேலையைத் தொடர்வது அவர்களின் வாழ்வினில் அத்தியாவசியமான  ஒன்றாயிருந்தது.விடிய விடிய  வேஷம் போட்டு கூத்துக்கட்டி ஆடும் கலைஞர்கள் தங்கள் தீராத உடல்வலியைப் போக்கிக்கொள்ள சிறிது மது அருந்துவதாக  கூறியுள்ளார்கள்.கொம்பு என்ற இசைக்கருவியை இசைக்கும் கலை ஞர்கள் மிகுந்த மூச்சு  செலவிட்டு [தம் கட்டி ]கொம்பினைஊதகொஞ்சம்மதுஅருந்துவது உண்டு 
என்கிறார்கள்.இப்படி மது அருந்துவது ஆடம்பர மேட்டிமைத்தனமாகவும்,உடல் வலி போக்கும் மருந்தாகவும் இருந்து வந்தது எப்போது 
தன் முகம் மாற்றியது?
மதுவைக் களைப்பினை போக்கி உற்சாகம் தரும் ஒன்றாகக் கருதாமல் மனிதன் தன் கவலைகளை மறக்கடித்து மயக்கத்தில் ஆழ்த்தும் போதை வஸ்துவாக உபயோகிக்கத்தொடங்கினானோ  அப்போதே மது தன் ருசியை மாற்றிவிட்டது.சிறிய கவலைக்கு குவாட்டர் , அதைவிட சற்றுப் பெரிய கவலைக்கு ஆப் மிகப்பெரிய கவலைக்கு புல் என்றாகி இப்போது ஏழைகளின் வாழ்வு முழுவதையுமே புல்லிற்கு விற்கப் 
பட்டாயிற்று.தினம்  குடிக்காவிட்டால் நடுங்கும் விரல்கள்,பெருக்கெடுக்கும் 
கோபம்,பேதலிக்கும் புத்தி  என குடிகாரர்களின் உலகம் மிக கவலைக்குள்ளாகி கேள்விக்குறியினை சுமந்தபடி போதையில் புரள்கிறது.
 
இதில் இசாக்கின் 'ஒரு குடியின் பயணம்'   குறும்படம் எங்கே வருகிறது?
 
கள்ளுண்ணுதல்  கற்காலத்திலேயே தமிழன் பண்பாடென்று சமாதானம் கூறி அரசாங்கம்  வீதிகள் தோறும் திறந்து வைக்கும் மதுபானக்கடைகளில் வருமானம் பெருக்கெடுத்துப்  பொங்குகிறது. மது நிரம்பிய குடிசையில் எழும் மரணத்தின் ஓலம் குடித்தவன் செவிகளுக்கு எட்டாமலே போய் விடுகிறது.
உலகம் போதையில் இருக்கிறது உறவுகளை நடுத்தெருவில் நிர்க்கதியாய் விட்டபடி....
 
இனி இசாக்கின் 'ஒரு குடியின் பயணம்' குறும்படத்துக்குள் ஒரு பயணம் செல்வோம்...
 
முதல் காட்சியில் பஸ்ஸில் பயணம் செய்யும் பெண் காட்டப்படுகிறாள்.முகம் இறுக்கத்திலிருக்க தோளில் சாய்ந்தபடி குழந்தை தூங்கிகொண்டிருக்கிறது.விரையும் பஸ்சின் பயணத்தில் இருள் மூட 'தமிழ் அலை ஊடகம் 'வழங்கும் 'ஒரு குடியின் பயணம்' என எழுத்து தோன்றி மறைகிறது.அடுத்து வெளிச்சமாய் விரியும் காட்சியில் ஒரு குடிசை. குடிசை முன்பு பஸ்ஸில் பயணம் செய்த பெண் சம்மணமிட்டு அமர்ந்தபடி அழுது கொண்டிருக்கும் தனது குழந்தையை சமாதானப்படுத்த முயன்று தோற்கிறாள்.வயதான கிழவி ஒருத்தி குழந்தையின்அழுகைக்குகாரணம்கேட்க நான்குநாட்களாகவே இடைவிடாமல் கத்திக்கொண்டிருப்பதாகவும்
 மருத்துவமனை அழைத்துச் செல்ல கணவனை எதிர்பார்த்து காத்திருக்க, குடித்துவிட்டு கணவன்எங்கே  விழுந்து கிடக்கின்றானோ என்றும் சொல்லிப் புலம்புகிறாள்.
கிழவி சொல்லும் தகவலின்படி குழந்தையை தூக்கிக்கொண்டு கணவனை நாடிச் செல்கிறாள்.நண்பர்களுடன் 
அரட்டையடித்தபடி பாலத்துச் சுவர் மீது அமர்ந்திருக்கும் கணவனைக் கட்டாயப்படுத்தி அழைக்க முனகியபடி அவள் பின் வருகிறான்.இருவரும் பஸ் ஏறி மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.அழும் குழந்தையுடன் மனைவியை 
ஒரு பெட்டிக்கடை வாசலில் அமரவைத்துவிட்டு வருகிறேன் என்று விலகுகிறான் கணவன்.டாஸ்மாக் என்று 
எழுதிய பலகையைக் கடந்து மதுக்கடைக்குள் நுழைகிறான்,கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு.கத்தும் குழந்தையுடன் கணவனை எதிர்பார்த்து கடைவாசலில் அமர்ந்திருக்கும் மனைவியின் கண்களில் 
இயலாமையின் துக்கம் ,சென்ற கணவனை எதிர் நோக்கிய ஏக்கம்.அழும் குழந்தையைக் கவனித்த சிலர்  மருத்துவமனை இருக்கும் திசை காட்டி போகச் சொல்கின்றனர். மருத்துவமனைக்குள் நுழையும் அவள் 
நர்சிடம் குழந்தையைக் காண்பிக்க மருத்துவமனை பெட்டில் குழந்தையை படுக்க வைக்கச் சொல்கிறார்.டாக்டர்  வந்து குழந்தையைப் பரிசோதித்துவிட்டு குழந்தை இறந்துநீண்ட நேரமாகிவிட்டதாக கூறுகிறார்.கதறி அழுகிறாள்  தாய்.குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு  மருத்துவமனை விட்டு வெளியேறும் சமயம் அவள் கணவன் 
போதையில் தள்ளாடியபடி எதிரேவந்து குழந்தையைத் தொடமுயல கணவனை பிடித்து தள்ளிவிட்டு விலகி 
நடக்கிறாள்.தரையில் வீழ்ந்து உருண்டு போதையில் உளறியபடி மயக்கமுறுகிறான்.இறந்த குழந்தையை தோளில் 
சாய்த்தபடி பஸ்ஸில் அமர்ந்திருக்கும் அவள் அழவில்லை.சிறு கண்ணீர் கூட உகுக்காமல் அத்தனை
துக்கத்தையும் அடக்கிவைத்தபடி அவள்பயணம் நகர்கிறது.ஊர் வந்துபஸ்ஸைவிட்டு இறங்கியதும் மடியில் குழந்தையைப் போட்டுக்கொண்டு வெடித்துக் கதறி அழுகிறாள்.பின்னணியில் மனதை அறுக்கும் ஒப்பாரிக்குரல்  ஒலிக்கிறது.குழந்தையைத்தோளில் கிடத்தியபடி ஊர்நோக்கி செல்லும் அவள்மீதுஇருள் மூட படம் நிறைவடைகிறதுபத்து நிமிடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்  'ஒரு குடியின் பயணம்' குறும்படம் பார்வையாளனின் மனத்தில்  என்னவிதமான பாதிப்பினை ஏற்படுத்துகிறது?
 
ஒரு கிராமத்து குடிசையின் முதல் காட்சியிலிருந்து இது இயக்குனரின் படமாகவே  விரிகிறது.குடிகாரனின் மனைவியின் கழுத்திலோ மூக்கிலோ காதிலோ துளித் தங்கமில்லை.அழுக்கேறிய 
மஞ்சள் கயிற்றினை மட்டும் நம்பியபடி காத்திருக்கும் அவள் ஆண்களின் உலகின் முன் அடக்கிவைக்கப்பட்ட ஒருத்தியாகவே காட்சியளிக்கிறாள்.அவளிடம் விசாரிக்கும் கிழவி நிற்குமிடத்தில் முள் அடர்ந்திருக்கிறது.
அதே காட்சியில் கிழவியின் கேள்விக்கு பதில் சொல்லும்மனைவியை
முள்ளுக்கு அப்பாலிருந்து
 படமாக்கியிருக்கிறார்கள்.வெகு சிறப்பான பிரேம். காலம் காலமாக கிராமத்துப் பெண்ணானவள் சிறு 
செயலுக்கும் இன்னொரு ஆணை எதிர்பார்ப்பவளாக சமூகம் அவளுக்கு இட்ட முள்வேலியைத் தாண்டி வர  முடியாதவளாக இருக்கிறாள் என்பதை பளிச்சென்று உணர்த்துகிறார் இயக்குநர்.அதே மனைவி கணவனை 
வெறுத்து  தாயாகும் போது அவளின் தனிமை பயணத்திற்கான 
தொடக்கத்தில் வானமே விரிந்து அழைக்கிறது. படம் குடிக்கு அடிமையாகி மனித உணர்வுகள் மரத்துப்போன ஒருவனால் சிதையும் ஒரு பெண்ணின் ,ஒரு தாயின் வலியைப் பற்றி பேசும் அதே சமயம் இது அத்தனைக்கும் காரணமான ,மது கிடைக்குமிடம் என்று பெரிதாய் பலகையில் எழுதி வைத்து குடித்துக் கும்மாளமிட தனி பார் வசதி உண்டு என்று அரசாங்கமே  அறிவிப்பு செய்து,குடிகெடுக்கும் செயலை செவிட்டில் அறைவது போல் ஒரு காட்சியில் உணர்த்தியிருக்கிறார்.  குறும்படம் செய்யவேண்டிய பணியை அந்த ஒரு காட்சி அற்புதமாக செய்துவிடுகிறது.வாழ்த்துக்கள் இசாக்.
 
படத்தில் குழந்தையின் அழுகையும்  வேதனையும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் கடைசிக்காட்சியில் டாக்டர் வந்து அறிவிக்கும் குழந்தை எப்பவோ இறந்திடுச்சி 
என்னும் வார்த்தைகளில் பார்வையாளனுக்கு தரும் பேரதிர்ச்சியை இயக்குநர் முன்பே தயார் செய்திருக்கலாம். குழந்தை இறந்த கணம் என்பது கிட்டத்தட்ட குழந்தையின் அப்பா டாஸ்மாக் கடை உள்ளே நுழையும்  கணத்தில் இருக்கலாம் என்பதை பார்வையாளன் சிந்தனைக்கே விட்டிருந்தாலும் அப்பிஞ்சின் உயிரை 
விழுங்கியதில் அவன் விழுங்கும் அரசாங்கம் விற்கும் மதுவில் பெரும் பங்கு உண்டு என்பதை ஒரு ஷாட் 
பதிவு செய்திருக்கலாம்.
 
 ரசினியின் இசை படத்தில் ஒரு ரகசியபயணம் மேற்கொண்டிருக்கிறது. தனது இசையாதிக்கத்தை தேவையற்று எக்காட்சியிலும் புகுத்திவிடாமல் அங்கங்கே மௌன இசையும் தந்து இறுதிக்காட்சியில் ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்தபின் அழும் தாய்க்கு ஆறுதல் சொல்லமுடியாமல் பெரும் 
துக்கத்துடன் ஒருபுல்லாங்குழல் தன் வேதனையைவிவரிக்கும் காட்சியில் இசையும் பாத்திரமாகிறது.
 
  சக்கரக்கட்டி,சித்து பிளஸ் டூ  போன்ற திரைப்படங்களின் இயக்குநரான ராசாமதி  என்கிற கவினின் ஒளிப்பதிவு இருளையும் ஒளியையும் பக்கத்துணைக்கு வைத்துகொண்டு  பயணப்படுகிறது. ஆஸ்பத்திரி காட்சிக்குள்  படம்நுழையும் போது அதன் இருளும் ஒளியும் விபரீதத்தை முன்கூட்டியே அறிவித்து பார்வையாளனை பதற்றத்துக்கு உட்படுத்துகிறது.வறண்ட நிலத்தில் தனித்துவிடப்பட்ட மரமாய்  க்ளைமாக்சில் அவள் செல்லும் பாதை கட்டுப்பாடுகள் தகர்ந்த ஒன்றாய் இருக்கிறது. பஸ்ஸிலிருந்து இறங்கிய  அவளை உடனேபின்தொடராமல் பஸ்சின் போக்கிலேயே ஒருவினாடிநகரும் கேமிரா இறங்கியவளின்சோகத்தை 
தேடச்சொல்கிறது. இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் சேர்ந்து கிடைத்த வெற்றி. இறந்த குழந்தையை  சுமந்து பயணப்படும் பஸ்சினில் இருள் பாத்திரத்தினை தேர்வு செய்த விதத்தில் ஒளிப்பதிவு கண்களுக்குள் பதிவாகும் ஒளி
.
இயக்கம் மற்றும் ஒளிப்பதிவோடு ஒலிப்பதிவும் இணைந்து வெல்லும் 
காட்சிகள் இரண்டு.குழந்தை இறந்த செய்தி கேட்டதும் கதறி அழுகிறாள் தாய்.அடுத்த காட்சியில்  குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை விட்டு வெளியேறும்போது  முகத்தில் இறுக்கம் கலந்த சோகம் மட்டுமே இருக்கிறது.ஆனால் கதறல் ஒலிமட்டும் பின்னணியில் கேட்டுக்கொண்டிருக்க துக்கம்  மரத்துப்போன மனத்தின் உள்அழுகையை பிரமாதமாக்கியிருக்கிறார்கள். இரண்டாவதாக அடக்கிவைக்கப்பட்ட  அழுகை கதறலாய்வெடிக்கும் காட்சி.அவளின் கதறல் அழுகைக்கு பின்னணியாக   தழுதழுக்கும் அந்த ஒப்பாரி  'வாழ்வும் செறக்கலையே   வாரிசும் நெலைக்கலியே'உயிரை அறுக்கிறது.குடிகார கணவன்களுக்கு மனைவியாகப்பட்டவர்களின் ஒட்டுமொத்த கதறலாய் ஒலிக்கும் அந்த ஒப்பாரி பார்வையாளன் செவிகளுக்குள் 
ஈட்டியென செருகுகிறது.
 
 குடிகாரகணவனாக ஏழுமலை,மனைவியாக செல்வி...
தொழில்முறை நடிகர்களல்ல. ஆனாலும் உடல்மொழி,முகமொழியில் கண் முன்னே யதார்த்தம் நிறுத்துகிறார்கள். அதிலும் ஏழுமலையின் குடிமொழி நடை பிரமாதம். குழந்தையை தூங்குற மாதிரி வச்சிட்டு போம்மா... அழுதிடாதே ' என்று பின்னணியில் 
ஒலிக்கும் குரலுக்கு பஸ்ஸில் பயணப்படும் செல்வியின் முகத்தில்தான் என்ன ஒரு இறுக்கம். மிகச் சரியான தேர்வு 
 
 பத்து நிமிடத்தில் சொல்லப்படவேண்டிய விஷயத்தை எவ்வித 
நெருடலுமின்றி கச்சிதமாக தொகுத்து தந்திருக்கிறது ஹரி கோபியின் படத்தொகுப்பு.
 
'தமிழ் அலை ஊடகம் ' வழியாக ஒரு குடியின் பயணம் சென்ற இயக்குநர் இசாக்கினை ஒரு வெயில் மதியானத்தில் அவரின் அலுவலகத்தில் சந்தித்து  உரையாடியபோது...
 
புகோ:உங்கள் சொந்த ஊர் உளுந்தூர் பேட்டை அருகில் உள்ள நெய்வினையில் டாஸ்மாக் உண்டா?
 
இ: [சிரித்தபடி] டாஸ்மாக்கெல்லாம் இப்போது வந்ததுதானே.நான் அறிந்தவரையில் பாக்கெட் சாராயம் விற்கப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறேன்.
 
புகோ : அடிப்படையில் நீங்கள் ஒரு கவிஞர். துபாய் போன்ற நகரத்தில் கொஞ்சநாள் வாழ்ந்திருக்கிறீர்கள்.
அப்படியிருக்க இப்படி ஒரு கரு எதற்கு தேர்ந்தெடுத்தீர்கள்.தனிப்பட்ட காரணங்கள் உண்டா?
 
இ: நான் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் சொல்லவில்லை. பொதுவாக எனக்கு இது போன்ற விசயங்களில் எவ்விதத்திலும் ஒத்துப் போக முடியாது. குடிப்பது தனிப்பட்டஒருவனின் சுதந்திரமாக இருந்தாலும்  
அதனால் பாதிக்கப்படும் குடும்பம் மற்றும் சமூகத்தினை அவன் நினைத்துப்பார்ப்பதில்லை. சமூகத்தின் மீதானஎனது அக்கறையின் வெளிப்பாடு இக்குறும்படம். அது மட்டுமின்றி நாங்கள் கண்ட ஒரு உண்மைச் சம்பவத்தின் 
அடிப்படையில் பின்னப்பட்டதுதான் இத்திரைக்கதை. இறந்த குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கணவனின் வருகைக்காக காத்திருந்த ஒரு பெண் இப்படத்துக்கு தூண்டுகோலாக  இருந்தாள்.
 
புகோ :ஷூட்டிங் எங்கே எத்தனை நாள் நடந்தது?
 
இ:உளுந்தூர்ப்பேட்டையில்தான் படப்பிடிப்பு நடந்தது.ஒரே நாள்தான் ஷூட்டிங்.
 
புகோ:ஷூட்டிங் சிரமங்கள்...
 
இ:அது சிரமம் என்ற பட்டியலில் வராது. படப்பிடிப்பு சமயத்தில் எங்களைச் சுற்றி நின்ற கூட்டத்தினை 
சமாளிப்பது மிகப்பெரிய சவாலாய் இருந்தது. முதலாவது அவர்களுக்கு இது புதுசான ஒன்று. இரண்டாவது நானும் 
பங்குபெற்ற நடிகர் நடிகைகள் அவர்கள் ஊர்க்காரர்கள் என்பதும். இதெல்லாம் எங்களுக்கு அடுத்த படிக்கான 
ஒத்திகைதானே.
 
புகோ :வேறு சுவாரசிய சம்பவம் ?
 
இ:ஆஸ்பத்திரி காட்சி எடுக்கும்போது அறைக்கு வெளியே நிறைய கூட்டம். குழந்தை இறந்ததை கேள்விப்பட்டவுடன் தாயின் கதறல் தொடங்க ஷூட்டிங் என்பதையும் மறந்து குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்த 
மக்கள் அறைக்குள்ளே முண்டியடித்துக்கொண்டு நுழைய அவர்களை 
அமைதிப்படுத்த குழந்தை சிரித்தது.
 
புகோ:தமிழ் அலை ஊடகம் உங்களுடையது.இப்படத்தயாரிப்பில் நண்பர்களின் உதவி எப்படி ?
 
இ: நான் எடுக்க விரும்பிய முதல் குறும்படம் அன்னியம். அது நான் எழுதிய ஒரு கவிதையை அடிப்படையாகவைத்து அதற்கான திரைக்கதை தயார் 
செய்திருந்தேன். முக உணர்வுகளை துல்லியமாக பிரதிபலிக்கக்கூடிய 
நடிகர்கள் அப்படத்திற்கு தேவையாயிருந்தார்கள். ஒரு லாங் ஷாட்டிலோ மிட் ஷாட்டிலோ சொல்லி நகர்த்தமுடியாதபடி குளோசப்  காட்சிகளுக்கான முகத்தேடலில் தாமதம் ஏற்பட்டது. இடையில் துபாயிலிருந்து  விடுமுறையில் வந்த ஒரு சமயம் நண்பர்களின் உற்சாகக் குரல்களோடு திடீரென முடிவாகி ஒரு நாளில் எடுக்கப்பட்டதுதான் ஒரு குடியின் பயணம்.
 
புகோ :இதற்கான ரெஸ்பான்ஸ் எப்படியிருந்தது ?
 
இ: துபாயில் என் நண்பர்கள் மத்தியில் திரையிட்டபோது கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அந்த ஒப்பாரியினை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.கதறல் வார்த்தைகளில் அப்பெண் வாழ்ந்த வாழ்க்கையை அந்த 
ஒப்பாரியில் சொல்லப்பட்டிருக்கும். படம் முடிந்த பிறகும் இப்படி ஒரு விளக்கம் தேவையா என்பது அவர்களின் கேள்வி. ஆனால் எங்கள் ஊரான நெய்வினையில் இதுபோன்ற சாவுகளின் போதெல்லாம் இறந்தவர்களின் வாழ்க்கையை சம்மந்தப்படுத்தி பாடப்படும் ஒப்பாரியினை துபாய் மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பின்பு அவர்களுக்கு விளக்கம் சொல்லப்பட்டது . மற்றபடி ....சில கிராமப்புறங்களில் எங்கள் நண்பர்களின்  முயற்சியால் இப்படம் திரையிட்டுக்காட்டப்பட்டது.அவ்வளவுதான்.
 
புகோ :குறும்படம் தாண்டிய வேறு முயற்சிகள் ?
 
இ : கஞ்சி என்ற ஒரு டாக்குமெண்டரி முடிந்திருக்கிறது.விரைவில் வெளியிடப்படும்.
 
புகோ :கஞ்சி எதைப்பற்றி ?
 
இ: இஸ்லாமியர்களுக்கென்று பொதுவான வாழ்வியல் மரபு இருந்தாலும்  இங்கே வாழும் முஸ்லிம்கள் இங்குள்ள வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்..அதேபோல்தான் எங்கும். ரம்ஜான் நோன்பு பெருநாளில் முப்பது நாள் நோன்பு 
மேற்கொள்பவர்கள் நோன்பு முடிக்க பள்ளிவாசல்களில் கஞ்சி தருவதுண்டு.  முப்பது நாளுக்கு முறை வைத்து  ஊர்ப்பெரியவர்கள் , ஒவ்வொருநாளும் இந்த நோன்புக்கஞ்சி தயாரித்து தருவார்கள். இப்பழக்கம் அரபு நாடுகளில் கிடையாது. அப்படியிருக்க இங்கிருந்து அங்கு செல்லும் முஸ்லிம்கள் இந்தபழக்கத்தினை அங்கு மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் இந்தக்கஞ்சி தயாரிப்பதென்பதே தனியாய் பதிவு 
செய்யப்படவேண்டிய ஒரு அழகு. கஞ்சி தயாரிக்கும்  முறையை இந்த ஆவணப்படம் பதிவு செய்கிறது.
 
புகோ :கவிதை பற்றி பேசாமல் இந்த உரையாடல் நிறைவு பெறாது.உங்களின் முதல் கவிதை தொகுப்பு 
'இரண்டாவது கருவறை' அதன் பின்னான 'காதலாகி' 'மௌனங்களின் நிழல்குடை' 'மழை ஓய்ந்த நேரம்'
சமீபமாக 'துணையிழந்தவளின்  துயரம் ' வரை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.இதில் 2004ல் சாரல் வெளியீடாக 
வந்த 'மழை ஓய்ந்த நேரம்' கவிஞர் தாராபாரதி பரிசு பெற்றது தெரியும் .'துணை இழந்தவளின்  துயரம்' எதை பேசுகிறது ?
 
இ :துபாய் வாழ்க்கையினைப்பற்றிய பதிவுகளை மட்டுமே தாங்கிய 
தொகுப்புதான் 'துணை இழந்தவளின்  துயரம் ' பொருள் தேடி பிரிந்திருக்கும் காலகட்டத்தின் வேதனை, வலி, ஆறுதலினை எளிய மொழியில் 
 அனுபவங்களாக்கியுள்ளேன். பதிவு பரவலாயிருக்கிறது.
 
குறும்படம், ஆவணம், கவிதை என்று பலவிதமான அனுபவங்கள் தந்த இசாக்கிற்கு நன்றி கூறி விடைபெற்று  வெளியே  வந்தோம்.தகிக்கும் வெயிலுக்கு நிழல் தேடி நிறைய பேர் டாஸ்மாக் பக்கம் ஒதுங்கியிருந்தது கண்ணில்பட்டது. ஒரு குடியின் பயணம் தொடர்கிறது.
 
 
 

பின் நிழல்

      
சிறு கண்ணாடிக் குடுவை நீரில் பழகும் 
ரௌத்ரம் மிகுந்த பைட்டர் மீனினை 
வேடிக்கைப் பார்க்கும் 
சினம் செல்லா செல்வந்தனின் அறைக்குள் 
புத்தனின் முதுகு நிழல் படிந்திருக்கிறது 
அணைக்கப்பட்ட தொலைகாட்சி பெட்டி விலாப்பகுதியில்       






Monday 16 July 2012

திரை விமர்சனம்

புதிய கோணம் இணைய இதழுக்காக எழுதிய சினிமா விமர்சனம் 




சதுரங்கம்-


இயக்குநர் கரு. பழனியப்பனின் ஐந்தாவது படமாக வந்திருக்கும் சதுரங்கம் பார்த்திபன் கனவு என்ற அவரின் முதல் படத்திற்குப் பிறகு இரண்டாவதாக வந்திருக்க வேண்டியது.சதுரங்கம் அவரின் இரண்டாவது படமாக வந்திருக்கும் பட்சத்தில் கரு.பழனியப்பன் தனது மூன்றாவது படத்தினை மிக ஆழமாக,அசத்தலாக, அழகாக தந்திருக்கலாம்.சிவப்பதிகாரம் எழுதியிருக்க மாட்டார்.ஸ்ரீகாந்த் என்ற 
நடிகனுக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்து தன்னை இன்னும் சிறப்பாக நிரூபித்திருக்கலாம்.என்ன தந்திடுவேன் போன்றஅருமையான பாடல் வரிகள் தரும் பா.விஜய் என்ற கவிஞர் ஒவ்வொரு பூக்களுமே போன்ற அபத்த விளக்கங்கள் எழுதாமல் இருந்திருக்கலாம்.ஆட்டம் முடியுமுன்னே செக்மேட் சொன்னது யார் குற்றம் பழனியப்பன்?

முதல் காட்சியிலிருந்து இயக்குநரின் ஆட்சி தொடங்குகிறது சதுரங்கம் படத்தில். திசைகள் என்ற புலனாய்வுத்துறை பத்திரிகையின் நிருபராக திருப்பதிசாமி. கண்களால் கவிதை பேசும் அழகான காதலி. நிருபருக்கோ அவரின் நேர்மைக்கு கிடைக்கும் விருதுகளாக விரும்பிய திசையெல்லாம் விரோதிகள். இந்நிலையில் காதலி கடத்தப்படுகிறாள். கடத்தியது யார் என்ற சில பதட்டங்களுக்குப்பிறகு ஆள் யாரென்று தெரிகிறது. மீட்கப் போராடும் நிருபனின் கதை.


திரைக்கதையில் சுவாரசியமும் விறுவிறுப்பும் கலந்து ரசிக்க வைக்கிறார் இயக்குநர்.சென்னைக்குள்ளேயே சுற்றி வரும் கதையை  தொய்வின்றி கொண்டு செல்கிறார்.பஸ்ஸில்  டிக்கெட் எடுக்காமல் பைன் கட்டாமல் பதினைந்துநாள் சிறைவாசம் அனுபவிக்க ஸ்ரீகாந்த் 
சிறை சொல்லும் ஆரம்பக் காட்சியிலே ஆட்டம் சூடு பிடிக்கிறது.ஊழல் வழக்கில் கைதாகி சிறைக்கு  வந்திருக்கும் மந்திரிக்கு நடக்கும் பெருச்சாளி டார்ச்சர்,பத்து ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு சீப்பு 
வாழைப்பழம் சிறைக்குள் நூறு ரூபாய்க்கு மாறுவது என சிறை சுவாரசியங்கள்.

வெகு இயல்பான நிருபனாக ஸ்ரீகாந்த்.அலட்டிக் கொள்ளாத நடிப்பு.எதிரிகளின் உக்கிர சவால்களினை  அலட்சிய பார்வைகளில் மட்டும் எதிர்கொள்ளும் உடல்மொழியில் ஈர்க்கிறார். இயக்குன 
நடிகனை உபயோகிக்க தவறியது தமிழ் சினிமாவின் தவறன்றி வேறென்ன.

கதாநாயகி சோனியா அகர்வால்.மென்சோகம் படிந்த கண்களில் கவிதை படபடக்க ஸ்ரீகாந்திடம்  காதல் சொல்லவந்து நாஞ்சில் நாடன் சிறுகதைகள் பற்றி பேசுவதாகட்டும்,கழுத்துல குட்டியா 
ஒரு முத்தம் குடு என்ற கொஞ்சலாகட்டும், நான்தான் ஒன்ன காதலிச்சேன் நான்தான் ஒன்ன  பாக்க வந்தேன் நான்தான் ஒனக்காக காத்திருந்தேன் இந்த காதல் தோத்துட்ட  பிறகாவது 
நமக்காக ஒருத்தி காத்துக்கிட்டு இருந்தாளேன்னு நெனப்பியா என்று கண்ணீர் சிந்திக் கேட்கும்  தேவதை.காலம் நிறைய தவற விடுகிறது.

அப்போது இசையமைப்பாளர் வித்யாசாகர் musical hit தந்துகொண்டிருந்த காலகட்டம். சதுரங்கம்  படப் பாடல்கள் கவனத்தில் இருந்தது. காலம் கடந்து வந்திருந்தாலும் மயக்குவது melody யின்  சாதனை.பா. விஜய்யின் 'என்ன தந்திடுவேன்' யுகபாரதியின் 'எங்கே..எங்கே' அறிவுமதியின் 
'விழியும் விழியும் ' என்று மெல்லிசை தொகுப்பு. என்ன தந்திடுவேன் தந்த பா.விஜய் இப்போது  எங்கே?.  ஒவ்வொரு பூக்களுமே என்று அபத்த விளக்கங்களுக்கு விருது வாங்க ஆரம்பித்துவிட்டார். கவிதை வழியும் விழியும்  பாடல் அத்தனை அழகு.

'நெனச்சிக்கிட்டே இருக்கிறதுமட்டும்காதல்இல்ல...ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கிறதும் காதல்தான்' 'நாங்கெல்லாம் வெளிய வராட்டா அப்புறம் தமிழ்நாட்டுல பணத்துக்கு என்ன மரியாதை' காதலும்  கத்தியுமாய் வசனங்கள் மிரட்டுகின்றன.'நல்லவங்க நீங்க தோத்துடுவோம்னு பயப்புடுறீங்க...
கெட்டவங்க நாங்க ஜெயிப்போம்னு நம்புறோம்' வக்கீல் வக்கீல் வேலையை பாக்குறான் டாக்டர்  டாக்டர் வேலையை பாக்குறான்...பத்திரிகைகாரங்க நீங்கதான் எல்லா வேலையும் பாக்குறீங்க'

பல வருடங்களுக்கு முன் வந்த படம் என்பது சில காட்சிகளில் தென்பட்டு அலுப்பூட்டுகிறது.ஸ்ரீகாந்த் கூப்பிட்டவுடன் மூன்றுமுறை திரும்பிபார்க்கும் மகாதேவன், கன்னத்தில் முத்தமிட்டவுடன் 
தொடங்கும் பாடல், தமிழ் சினிமா கிளைமாக்ஸ் என்பதில் பழைய வாடை.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். கரு. பழனியப்பனுக்கும் அது தெரியும் என்று நம்புகிறோம்.






ஆவணப்பட விமர்சனம்



புதியகோணம் என்ற இணைய இதழுக்காக இயக்குநர் தனபால் பத்மநாபனை நான் எடுத்த நேர்காணல்.

a little dream [ english ] -
இயக்கம் p .தனபால் 
ஆவணப்படம் [ஒரு மணி நேரம்] 
வருடம் -2007
 
                                     கனவு காணும் முன்........

ஒரு குழந்தையை என்னிடம் கொடுங்கள். அதை டாக்டராகவோ, வக்கீலாகவோ, திருடனாகவோ மாற்றிக் காட்டுகிறேன் -மனோ தத்துவ நிபுணர் j .b. வாட்சன்
 
குழந்தைகள் நம் மூலமாக வருகின்றன. ஆனால் நம்முடையவை அல்ல.- கலீல் கிப்ரான்.
 
செயல் மூலம்தான் குழந்தைகள் வாழ்வினைப் படிக்கிறார்கள். அவர்களுக்கு உதாரணமாக பெற்றோர்களான நீங்களே செயல்படுங்கள். கேள்வி கேட்காமல் உங்களைப் பின்பற்றுவார்கள்.-  குழந்தைகள் உளவியல் நிபுணர் பிருந்தா சிவராமன். 

பிஞ்சுப் பருவத்தில் மனதில் படியும் அத்தனையும்தான் அவர்களின் பிற்கால வாழ்வினை தீர்மானிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கான உலகம் எப்படியிருக்கிறது? எங்கே இருக்கிறது? பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மீளவும் வாழ்வாதாரத்தினை நிலை நிறுத்திக் கொள்ளவுமே இப்போதைய பெற்றோர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. கால்களில் சக்கரமோ, சங்கிலியோ கட்டிய பெற்றோர்களுக்கோ தங்கள் குழந்தைகளுக்கு எதிர்கால உதாரணமாக வாழ முடியவில்லை. குழந்தைகளை நல்வழிப்படுத்த யாருமற்ற தேசமாக மாறிவிடாமல் தடுக்க அவ்வப்போது சில அதிசயங்கள் நிகழ்வதுண்டு.
அப்துல்கலாம்!  குழந்தைகளின் ஆதர்சமாக மாறியது எப்படி? ராமேஸ்வரத்தில் பிறந்த எவ்வித அரசியல் பின்புலமில்லாத ஒரு தமிழன் ராஷ்டிரபதிபவனுக்குள் நுழைந்தது எப்படி? இயக்குநர் p.தனபாலின் 'ஒரு சிறிய கனவு' ஆவணப்படம் சொல்லும் பெரிய விஷயம் என்ன? 

                                         சிறுவர்கள் சுண்டல் விற்கிற 
                                         சிறுமிகள் பூ விற்கிற 
                                         இதே கடற்கரையில்தான் 
                                         குழந்தைகள் பந்து விளையாடுவதும் 
                                                                                                                       [லலிதானந்த்]

இயக்குநர் இப்படத்தினை வீதிகளில் வாழ விதிக்கப்பட்ட அனாதைக் குழந்தைகளுக்கு சமர்ப்பணம்  செய்துள்ளார்.அதற்காக காட்டப்படும் ஆரம்பக் காட்சிகளில் ஒன்றில் குப்பை பொறுக்கி வாழும் அழுக்குச் சிறுமியின் கையில் divided and  ruling என்று தலைப்பிட்ட புத்தகம் இருக்கிறது. அட்டையில் அருகருகே இரு அம்பானிகள்.

மூன்று விதமாக விரியும் இந்த ஆவணப்படம் ஒரு குறும்படத்தின் தன்மையுடன் ஆரம்பிக்கிறது. சுந்தர்  என்ற சிறுவனின் பிறந்த நாள் பரிசாக அவன் தாத்தா தரும் அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் 
[wings of fire ] புத்தகத்தினை படித்துவிட்டு கலாமை ஆதர்சமாகக் கொண்டாடி தனது பிறந்த தினத்  தீர்மானமாக இரு ஏழைச் சிறுவர்களுக்கு தன் வீட்டில் படிப்பு சொல்லித்தர தீர்மானிக்கிறான். அதன்படியே  முத்து, லக்ஷ்மி, என்கிற பெற்றோரை இழந்த ஏழைச் சிறுவனையும் சிறுமியையும் தன் வீட்டிற்கு அழைத்து 
வந்து கல்வி கற்றுத் தருகிறான். அவன் அம்மா அதை விரும்பாதபோது மனம் உடையும் சுந்தருக்கு  வெற்றி என்பது அத்தனை எளிதான விஷயமில்லை என்று ஆறுதல் கூறி அதற்கு உதாரணமாக அப்துல் 
கலாம் வாழ்க்கையினை விவரிக்கிறார் தாத்தா. படகு தயார் செய்யும் பணி புரிந்து பிழைத்து வந்த  கடலோர ஏழைக் குடும்பத்து சிறுவன் தன் கனவின் வழியாக பாராளுமன்றம் சென்றது வரை விளக்குகிறார்.
கதை முடிவில் சிறுவனின் ஆசையை உணர்ந்த அம்மாவும் சம்மதிக்க மகிழ்வோடு ஏழைச் சிறுவர்களுக்கு  பாடம் சொல்லித் தந்து தன்னோடு கல்வி கற்க அழைத்துச் செல்கிறான். சிறுவனின் கனவு, அதற்கான 
முயற்சி, வரும் தடை, அம்மாவுடன் கொள்ளும் காந்திய வழியிலான எதிர்ப்பு,பின்தான் படிக்கும்  பள்ளியிலேயே அந்த ஏழைச் சிறுவனையும் சிறுமியையும் கல்வி கற்க அழைத்து செல்வது என்று அங்கங்கே கலாமின் வாழ்க்கையை,ஆசையை, விருப்பத்தை, தொட்டபடியே கதைச் சிறுவனின் வாழ்கையும்  நகர்கிறது. 

இன்னொருபுறம் கலாமின் உரையாடல் வழி குழந்தைகள் மீதான தனது ஆர்வத்தினையும்,புத்தக  வாசிப்புகளின் வழி நாம் அடையும் உயரம், தான் கல்வி பயின்ற காலத்தில் பெற்றோர்களுக்கும் 
ஆசிரியர்களுக்கும் இடையிலிருந்த உறவுமுறை,தனது பறக்கும் கனவுக்கு விதைபோட்ட பள்ளிக்கூட  சம்பவம், கல்வியின் சக்தி பற்றிய பேச்சு,ஐரோப்பிய நாட்டின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் உரையில்  
தமிழ்க் கவி பற்றிப் பேசி கைதட்டல் வாங்கியது என்று வெகு சகஜமான உரையாடலாகவும் தன்னம்பிக்கை  மிளிரும் அரங்க உரையாகவும் விரிகிறது. 

மற்றொருபுறம் கலாமின் சகோதரர் ,கலாமின் நண்பனின் சகோதரர்,கலாம் கல்வி பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர், கல்லூரியில் கலாம் தங்கியிருந்த விடுதி தோழர்,கலாம் எழுதிய 'இந்தியா 2020 ' யின் இணை எழுத்தரான y .s . ராஜனின் விரிவான உரையாடல்,இந்திய விண்வெளித் தந்தை எனப்படும்  விக்ரம் சாராபாய் அவர்களின் சிறு காட்சிப் பதிவு, மகாத்மா காந்தியின் 5 வருட அந்தரங்க காரியதரிசியாக  இருந்த கல்யாணம் என்பவரது கலாம் பற்றிய பேச்சு, கலாமின் இசையறிவினை விளக்கும் சீர்காழி சிவ சிதம்பரத்தின் உரையாடல் என்று பலரின் பெருமிதப் பகிர்தலாக நகர்கிறது ஆவணப்படம்.

இப்படி மூன்று தளங்களில் விரியும் ஆவணப்படத்தினை நமக்கு சற்றும் குழப்பமில்லாமல் மிகச் சிறப்பான  முறையில் தொகுத்துத் தந்த எடிட்டர் மனோகருக்குத்தான் முதல் கை குலுக்கல். கலாமின் ஊருக்குள் 
நுழையும் படத்தில் அவரின் பள்ளிப் பருவத்தினைப் பற்றி சுந்தரின் தாத்தா விவரிக்கும் போதே பள்ளி நிகழ்வான பிராமணரின் அருகில் முஸ்லிமா என்ற சம்பவத்தினை கலாமின் நண்பரின் தம்பி மூலமாக 
சொல்லியிருப்பதிலிருந்து உயர்நிலைப் பள்ளி , கல்லூரி, d.r.d.o -வில் பணிபுரியும்போது நடந்த சம்பவம்  என்று விரியும் கால கட்டங்களில் சம்மந்தப்பட்ட நபர்களது அனுபவங்களை தொகுத்திருப்பது பாராட்டத் 
தக்கது. கலாமின் நூலுக்கு உதவி புரிந்த கலாமின் நண்பரும் இணை விஞ்ஞானியுமான y .s . ராஜனின்  நேர்காணலை அங்கங்கே பிரித்து மிகச் சரியான இடத்தில் வைத்திருப்பதும் கலாமின் பாராளுமன்ற 
உரை, ஐரோப்பிய யூனியன் பேச்சு, மாணவர்களின் கலந்துரையாடல் என்று சரிவிகிதத்தில் இணைத்து  தன் பணியைத் திறம்பட செய்துள்ளார்.

அப்துல்கலாமின் வாழ்வினை அழகியல் நிரம்பிய ஆவணப் படமாக்கியிருப்பதில் ஒளிப்பதிவாளர் செழியன் பங்கு அழகு. தாத்தாவுக்கும் பேரனுக்குமான மொட்டைமாடி உரையாடலில் வெறுமனே எதிரெதிரே  அமர்ந்து சம்பிரதாயமாக்காமல் சிறு வெளிச்சம் மட்டும் இருவர் முகத்தில் படியவிட்டு வசனங்களுக்கு 
முக்கியத்துவம் தந்து கவனிக்க வைத்திருப்பது நன்று. கலாமின் பள்ளிக்கூட மாற்றுச் சான்றிதழைக்  காண்பிக்கும் கேமிரா சான்றிதழைப் படிப்பது போலவே நகர்வது அழகு. ராமேஸ்வரம், இராமநாதப்
புரப்பள்ளி, திருச்சி கல்லூரி, சென்னை m .i .t . கல்லூரி, pura அமைப்பின் தத்தெடுத்த அச்சம்பட்டி கிராமத்தின்  சோற்றுக்கற்றாழை நிறத்தினைக் கூட நிலமணம் மாறாமல் பதிவு செய்திருக்கிறார். அப்துல்கலாமின் 
'song of youth ' கவிதையினை மேடையில் பரதம் கொண்டு படமாக்கியிருப்பதில் ஒளி விளையாட்டு. கண்களை விட்டு அகலாத பதிவு. ஆனாலும் மகாத்மாவின் உதவியாளரின் நேர்காணலில் காட்சிப்பதிவில்  சிறு நடுக்கம் இருப்பது எதன் குறைபாடு என்று தெரியவில்லை.

'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படத்தின் மூலம் தன் பாடல்கள் இசை மூலமாக செவிகளுக்குள்  சிம்மாசனமிட்டிருக்கும் n .r . ரகுநந்தன் என்கிற சத்யா 'a little dream ' ஆவணப்படத்தில் அதற்கான 
இறுக்கத்தை குறைத்து இசையோடு கலாமின் கனவில் நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார்.கலாம் கவிதை பாடலானதில் சத்யாவின் இசைத்தொகுப்பு நமக்கு இன்னொரு முகம் காட்டுகிறது. 

சிறிய கனவிலிருந்து அறிய  தகவல்கள்:
கலாமின் சகோதரர் பேசுகையில்: 'நாங்க சகோதரர்கள் மொத்தம் ஏழு பேர்.இதுல ஆறு பேர் எங்க வீட்லதான்  பொறந்தோம்.எங்க அப்பா இந்த வீடு கட்டினதுக்கப்புறம் பொறந்தவர் அவர்[ அப்துல் கலாம்] இதில் 
கூட தன்னோட தனித்தன்மையைக் காட்டிட்டாரு. சின்ன வயசிலேயே பேப்பர் போடுற பணி செஞ்சார். அது அவரோட உறவினர் ஒருவருக்காக செஞ்ச உதவி.அவர் பதவி ஏற்புக்கு நாங்க நாப்பது பேர் டெல்லி 
போனோம். போயிட்டு வந்த அத்தனை செலவும் அவரோடதான்.                               -எளிமை 

கலாமின் பள்ளி நண்பரான ராமசாஸ்திரியின் தம்பி :'ஒரு தடவை பள்ளிகூடத்துக்கு வந்த புது டீச்சர் அண்ணாவையும் அவரையும் பாத்துட்டு பிராமணன் பக்கத்துல முஸ்லிமான்னுட்டு அவரைக் கடைசியில  ஒக்கார வச்சிட்டாங்க. அப்புறம் எங்க அப்பா அந்த டீச்சரை கூப்பிட்டு கண்டிச்சதுக்கப்புறம் எல்லாம் சரியாயிடுச்சி'                                                                                    -வியப்பு 

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மேலாளர் dr .லாசர் : 'பிரசிடெண்ட் ஆன பிறகு 2003 ல் அவர் பேசிய உரையில் தான் படித்த திருச்சி கல்லூரி பற்றிக் கூறும்போது கோயில்,சர்ச், இடையே மசூதி இருந்த இடத்தில் 
நான் படிக்க நேர்ந்தது அன்பின் இணக்கமான உணர்வு.'                                                   -நெகிழ்ச்சி 

இணை விஞ்ஞானியும் இந்தியா 2020 நூலின் இணை எழுத்தரான y .s . ராஜன்:
'சின்ன சின்ன முன்னேற்றங்களே நிலையான உயரத்துக்கு கொண்டு செல்லும் என்பதில் உறுதியாய் இருந்தார் கலாம். நம் எதிர்பார்ப்பில் நூறு நபர்கள் இருந்தால் அவர்களில் இருபது நபர் மட்டுமே சரியான பாதையில் செல்லக்கூடும்.அந்த இருபது சதவீதம் மீதான நம்பிக்கைதான் நமக்கு வேண்டும். அவருக்கு எல்லாமே பாசிடிவ் சிந்தனைகள்'                                                           -நம்பிக்கை 

நானோ டெக்னாலஜி உருவான விதம் பற்றி பொன்ராஜ்:
'மிகப்பெரிய தொகை செலவாகும் நானோ டெக்னாலஜிக்கு பத்து கோடி ஒதுக்கி அதை உருவாக்கிய விதம். ஒரு எதிர் பார்ப்பினை அத்தனை மக்களிடம் கொண்டு சேர்த்தது எது. நாம் சாதிப்போம் என்ற நம்பிக்கை.
அந்த நம்பிக்கையின் உருவம் கலாம். இப்போது 22 நாடுகளில் அந்த ஒரு எதிர்பார்ப்பு எத்தகைய முன்னேற்றத்தினை உருவாக்கியுள்ளது. ஒரு தனிப்பட்ட கனவு பரவலான தருணம் அது.' -
சாதனை 

மகாத்மாகந்தியின் தோழர் கல்யாணம் ; ' 5 வருடம் நான் மகாத்மாவின்அந்தரங்க காரியதரிசியாக இருந்தேன் .எனக்கு தெரிந்து இப்போதுள்ள சூழலில் காந்திக்கு இணையாக கலாமை மட்டுமே சொல்ல முடியும்.'- 
நேர்மை 

சீர்காழி சிவசிதம்பரம்:அவர் ஒரு சிறந்த இசைக் கலைஞர். அற்புதமாக வீணை வாசிப்பார். அவரை நான் சந்தித்தபோது என்னிடம் தியாகராஜா கீர்த்தனையின் 'எந்தரோ மகானுபாவலு அந்தரிகி வந்தனமு'
பாடினார். மிகவும் அற்புத சந்திப்பு அது. அவர் ஒரு கவிஞர், இசைஞர், சிறந்த மனிதர், மிகப்பெரிய ஆளுமை.
- பரவசம் 


இப்படி பலதரப்பட்ட மனிதர்களின் வெவ்வேறுவிதமான விவரணைகள் கலாமின் சிறப்பியல்புகளை  தெளிவாக எடுத்து கூறுகிறது. மதம் கண்டு தனியே பிரித்துவைத்த ஆசிரியரைக் கண்டித்த சாஸ்திரியின் அப்பா இருந்த காலம் கற்காலமோ என்று எண்ணும்படி இருக்கிறது அந்த மதநேய ஒற்றுமை . நானோ டெக்னாலஜி சாதித்த சந்தோசத்தினை பொன்ராஜ் விவரிக்கும்போது அவரின் கண்களில்தான் எப்படி 
எல்லாம் நம்பிக்கை தெறிக்கிறது. அவரின் உற்சாகச் சக்தி நம்மையும் தொற்றிக்கொள்வதை படம்  பார்க்கையில் உணரமுடிகிறது. 

அப்துல் கலாமின் நேர்காணலிலிருந்து:
 
' எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. முத்து அய்யர்தான் என் முதல் ஆசிரியர். ஐந்து வயது பையன் ஒருவன் ஒருநாள் பள்ளிக்கு வரவில்லை என்றால் பையனின் வீட்டுக்கு வந்து என்னாச்சு? என்று விசாரித்து செல்வார். அப்போது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவு ஆத்மார்த்தமாக இருந்தது. 5 ,6 ,7 வகுப்புகளுக்கு சிவசுப்ரமணிய அய்யர் ஆசிரியராய் இருந்தார். என் வாழ்வின் மிக முக்கியத் தருணம் அது.
பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதை அறிவியல் பூர்வமாய் விளக்கியிருந்தாலும் என் வாழ்வின் கனவுச் சிறகுகள் விரிந்திருந்தன. ஒரு விமானியாக வேண்டும், பறக்கவேண்டும் என்பதை என் மனதில் 
அழுந்தப் பதிந்தார் அவர். ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது மாணவர்கள் மனத்தில் கனவினை  விதைப்பதும், வளர்ப்பதும், அதற்கான தீவிரத்தை நிலைநிறுத்துவது போன்றவை ஆசிரியர்கள் மட்டுமே 
செய்யமுடியும்.

என்னைப் பொறுத்தவரை இந்தியா ஏழை நாடல்ல. இந்திய மக்களின் சிந்தனையில்தான் வளமையில்லை. அடுத்த 20 ,25 , வருடங்களில் நாட்டின் முன்னேற்றம் என்பது அதன் டெக்னாலஜி முன்னேறுவதில்தான்  இருக்கிறது.பெரிதாய் சிந்தியுங்கள்.பெரிதாய் சாதியுங்கள்.

மிகச் சிறு வயதிலேயே கலாமின் வீட்டில் அவர் படிக்கும் அறையில் ' t ' வடிவ கோண அளவி [ t square ] இருப்பது அவருக்கு இஞ்சினியரிங் படிப்பின் மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது. கலாம் திருச்சி செயின்ட் 
ஜோசப் கல்லூரியில் physics படித்தபோது தங்கியிருந்த மாணவர் விடுதி அறையில் இப்போது [ படம் எடுக்கப்பட்ட 2007 ம் ஆண்டு] பாரதி என்ற மாணவர் கலாம் தேர்ந்தெடுத்திருப்பதும் இன்னொரு கலாமுக்கான 
நம்பிக்கையை நமக்குள் விதைக்கிறது. சிறுவனின் நடிப்பில் லேசான மிகை இருந்தாலும் கலாம் வாழ்க்கையினை விவரிக்கும் சீனிவாசனின் குரல் ஏற்ற இறக்கத்துடன் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. வசனத்திற்கான பணியினை சிறப்பாக செய்திருக்கிறார் பி. ஆர். ராமானுஜம்.

பத்து வயது நண்பன் ராமசாஸ்திரியின் நட்பினை பாராளுமன்றத்தில் உரைக்கும் காட்சி, விக்ரம் தேசாய்  சந்திப்பும் தொடர்ந்த அவரது மரணமும் பற்றி கலாமின் உணர்ச்சிமிகு உரையாடல், western  கலந்த 
பரதம் ' song of youth ' கவிதைக்கான நடனத்தினைப் பார்க்கும் போது ஆவணப்படம் என்பதை மறக்கிறோம். முதல் ராக்கெட் சோதனை முயற்சி தோல்வியுற்றதை அடுத்து வந்த பிருத்வி, ஆகாஷ் வெற்றிகளின்  இடையே அக்னி ஏவுகணை முயற்சியின் போது நிகழ்ந்த கலாமின் இளைய சகோதரர் மனைவியின் மரணமும் இருந்தும் கலாமின் ஏவுகணை பணிக்கு ஒத்துழைப்புத் தந்த குடும்பத்தாரின் செயல்பாடும் 
மறக்கமுடியாமல் நெஞ்சில் பதிகின்றன. கலாமின் தன்னம்பிக்கை, குழந்தைகள் மீதுள்ள பாசம், படிப்பின் மீதிருந்த வெறி, ராக்கெட் சோதனைகள், வெற்றிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழக 
மதிப்புக்குரிய பதவி, ஜனாதிபதி பதவிஎன்று உலகமெங்கும் செயல்பட்ட அவர் நாட்டின் முன்னேற்றத்துக்கான டெக்னாலஜி பற்றியெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வேறு பாதையில்  ஆச்சர்ய மாற்றமாக சட்டென்று திரும்புகிறது சீர்காழி சிவசிதம்பரத்தின் கலாமைப்பற்றிய பேச்சு. வீணை வாசிக்கத்  தெரிந்த கலாம், கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு கொண்டவர்.அவரின் கவிதை எழுதும்  லாவகம் பற்றி பேசுபவர் அவரின் ஆங்கிலக் கவிதையினை தமிழில் மொழிபெயர்த்து காம்போதி 
ராகத்தில் பாடும்போது மனம் விஞ்ஞான உலகத்திலிருந்து சற்றே இளைப்பாறுகிறது. 

இறுதியாகஒருவிஞ்ஞானி,கவிஞன்,இசைஞன்,ஜனாதிபதி,
எல்லாவற்றுக்கும் மேலான தன்னம்பிக்கை 
ஒன்றினையே மூச்சாக கொண்டு முன்னேறிய நாட்டின் முன்னேற்றத்துக்கும், குழந்தைகள், டெக்னாலஜி,கிராமப்புறப் பகுதிகளை மேம்படுத்துதல், மக்களின் கல்வி அவசியம் என்று சகலவிதத்திலும் சிந்தித்த  மிகப்பெரிய ஆளுமையினை 1 மணி நேர ஆவணப்படத்தில் நம் மனதுக்கு மிக சமீபத்தில் சந்திக்க வைக்கிறார் இயக்குநர் p . தனபால்.

சிறிய கனவை விழிகளுக்கு சொந்தமாக்கிய இயக்குநர் p . தனபாலை சந்தித்தபோது.....

புகோ: தங்கள் சொந்த ஊர் பற்றி சொல்ல முடியுமா?
 
       த: கோவை மாவட்டத்தினை சேர்ந்த உடுமலைப் பேட்டைதான் எனது ஊர்.
 
புகோ: இதற்கு முன்பான குறும்படம்,ஆவணப்படம் ஏதாவது?
 
       த: சின்னசின்னதாய் அனிமேசன் வேலைகள் மட்டும் எனது மின்வெளி மீடியா ஒர்க்ஸ் மூலமாக செய்திருக்கிறேன்.
 
புகோ: அதில் குறிப்பாய்?
 
       த: மகாபாரதம் பற்றிய அனிமேசன் படம் தயாராகி வருகிறது.
 
புகோ: சரி. ஏன் அப்துல் கலாம். கனவு காணுங்கள் என்பதாலா?
 
       த: அதெல்லாம் இப்போதுதானே. இந்த ஆவணப்படத்துக்கு அடிப்படையா அமைஞ்சது 2001 ம் வருட  சமயத்தில நான் நடத்திய பட்டாம்பூச்சிங்கிற குழந்தைகளுக்கான இதழ்தான். 2002 ல தான் கலாம் 
பிரசிடெண்ட் ஆனார். பொதுவா இந்த காலகட்டத்துல நேர்மையா கஷ்டப்பட்டு உழைச்சி முன்னேறி ஒரு பெரிய இடத்துக்கு போறதுங்கிறது சாதாரமான விஷயமில்ல. அப்பேர்பட்ட மனிதர்களை நம் குழந்தைகளுக்கு இப்போ தெரியப் படுத்த வேண்டிய நிலைமை. எனக்கு குழந்தைகள் நலனில் மீதான ஆர்வத்தில் தொடங்கியதுதான் பட்டாம் பூச்சி. கலாம் பிரசிடெண்டா என்ட்ரி ஆன நேரம். அவரோட 
பேச்சும் சிந்தனைகளும் வாழ்வும் குழந்தைகளுக்கான ஒன்றாகவே இருந்தது. நாட்டின் முன்னேற்றம் சரியான வழியில் செல்ல குழந்தைகளுக்குத்தான் நாம அதற்கான சக்தியை தரமுடியும்கிற அவரோட  சிந்தனை சகல இடத்துக்கும் போய்ச் சேரவேண்டுமென்று நினைத்து செய்தது ' குருத்து' ங்கிற நிகழ்வு 
அதன் மூலமா அவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கடந்து வந்த வாழ்வியலை எல்லோருக்கும் சொல்ல வேண்டுமென்று நினைத்து செய்ததுதான் இந்த ஆவணம். 
 
புகோ: இதற்கான ரெஸ்பான்ஸ்...விருதுகள்?
 
       த: விருதுக்கெல்லாம் அனுப்பவில்லை. இரண்டாவது இது என்னுடைய மனதிருப்திக்கான ஒன்றுதான்.
நல்ல விஷயங்களை நாம நேரடியா சொல்றதை விட அப்படிக் கஷ்டப்பட்டு வாழ்ந்து ஜெயித்த ஒரு ஆளுமை மூலமா கொண்டு செல்லலாம்னு செய்தது இந்தப் படம். நிறைய பள்ளிககூடங்கள்ல  இப்படம் குழந்தைகளுக்கு காட்டப்பட்டது.
 
புகோ: உங்க முயற்சியிலேவா?
 
       த: ஆமாம்.



குழந்தைகளுக்கான உலகம் பறிபோய்க்கொண்டிருக்கின்ற இந்நிலையில் அவர்களைப் பற்றி சிந்தித்து அவர்களுக்கான ஒரு பயனுள்ள ஆவணம் தந்த இயக்குனர் தனபாலின் முயற்சியை பாராட்டிவிட்டு விடைபெற்றேன்.
 
' இது ஐரோப்பிய யூனியனின் பொன்விழாக் கூட்டம். இங்கே எனது ஞாபகத்துக்கு வருவது 3000 வருடங்களுக்கு முன்பே ஒரு தமிழ் புலவன் கணியன் பூங்குன்றனார் பாடிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கவி வரிகள்தான்'. கலாம் குரல் காதில் ஒலிக்கிறது.