Monday 16 July 2012

நீ யாரென்றே எனக்குத் தெரியாது



நீ யாரென்று  எனக்குத் தெரியாது


ஒருமுறை என் கூட்டுக்குள் இறகொன்றை உதிர்த்திருந்தாய்
மற்றொருமுறை என் விக்கலுக்குக் கீழே
தேன் சுனையினை உருவாக்கியிருந்தாய்
பின்பொருநாள் அழகிய தீவொன்றின் மௌனத்தில் 
நிறுத்திச்  சென்றிருந்தாய்
தீவின் சௌந்தர்யம் மீண்டும் மீண்டும்
புதிதாக்கிக் கொண்டிருந்தது என் பால்யத்தை

எனக்குத் தெரியாது நீ யாரென்று
டாம் துரத்தும்  ஜெர்ரியானேன்
கணுக்கால் அளவு ஏரி நீரில் சாப்ளினுடன்  டைவடித்தேன்
லக்கிலூக் சவாரி செய்யும் குதிரையானேன்
சிரித்துக்கொண்டேயிருந்தேன்

 
இன்னமும் நீ யாரென்று எனக்குத் தெரியாது
 என் கூட்டினைக் களவாடிச் சென்றிருந்தாய்
என் கால்களுக்குக் கீழே கடலினை உருவியிருந்தாய்
அத்தனைச்  சொற்களையும் அபகரித்துவிட்டு
அம்போவென்று என்னை விட்டுச் சென்றிருந்த தீவு முழுவதும்
ஊமைகளும் செவிடர்களும்

இன்னமும் நீ யாரென்றே எனக்குத் தெரியவில்லை.

No comments:

Post a Comment