Monday 25 November 2013

அண்ணகர்

சிறுகதை:
 
அண்ணகர்



                   உடம்புரித்து நெளியும் நடனம்

வெயிலில் காய்ந்து காணாமல் போன அக்காவின் உள்ளாடையைக் கடைசிவரை என் பள்ளிப்பையில் கண்டுபிடிக்கவில்லை யாரும். பீக்காட்டில் நிகழ்ந்த நாடகத்தில் ஓர் ஊரில் ஒரே ராணி. மரங்கள் தழுவிய நடனம் காற்றில் விசிறியாடிய ஆடைகள் சுழன்று சுழன்று உடுத்தியிருந்த அக்காவின் தாவணி பாவாடை பூக்குடையாய் நிலத்தில் விரிந்த கணத்தில் மேலே வந்து மூடியது சாராய மூச்சின் அழுத்தம். காடு அதிர்ந்த காம வேட்டை முடிவில் பெண்ணாய் பிரயோகித்தவன் வனம் முழுவதும் வலி  தந்து விலகினான். பின்பு காடு தாண்டுதல் எளிதாயிற்று. நிலம் நீங்குதலும்.

இட வலம் மறந்து மத்தியில் மிதந்து கொண்டிருந்தது தலை வகிட்டுப் பாதை. குளியலறைச்சுவர்களெங்கும் விரிந்த நெற்றிகளில் ஒட்டப்பட்டன வட்டப்பொட்டுகள். திக்குத் தெரியாமல் அலைந்து திரிந்தன ஹார்மோன் நாகங்கள் விஷப்பற்கள் பதித்தபடி. கொண்டாட்டம் விரும்பிய உடம்பின் அசைவுகள் இரகசியமாய் இசைக்கப்பட்டன. கண்களிடுக்கில் கத்தி பதுக்கியவர்கள் உடம்பினை இரண்டாய் பிளந்தபடியே நகர்ந்தனர். வெகு இயல்பாய் தோளில் படியும் சில உள்ளங்கை நரம்புகளின் வழி பாய்ந்த மின்சார நீச்சலினை எதிர்கொள்ள திராணியற்று கண்கள் நிலம் குடைந்து சென்றுகொண்டே இருந்தன. இது எப்போது முடியுமெனத் தெரியவில்லை. எப்படி முடியுமெனத் தெரியவில்லை.

பெரியதான இவ்வுலகில் ஓர் உடம்பை மறைத்து வைத்தல் அத்தனை சுலபமல்ல. சர்ப்ப பாதை வரைந்த பாதங்களில் மருதாணி உயிர் வழிய இருளில் மை பூசிய இமைகளின் மேல் பொருந்தா உடல் மூடிய கணங்களில் சுய உடல் உரித்த பருவமது.ஓர் உடம்பு இன்னொரு உடம்பினைத் துரத்தியது. துரத்திய உடம்பு அத்தனை அழகாயிருந்தது. ரோஸ் நிற நகங்கள் நிரடிய மார்புக் காம்புகளைச் சுற்றிலும் மஞ்சள் வண்ண வீக்கம். புது உடம்பின் தோல் வளர்ந்து மூடியது வெறுப்புடலின் அடையாளக்குறிப்பினை. இருந்த உடம்பைச் சுமக்கும் இருக்கும் உடம்பு எவர் கண்களுக்கும் தெரியாமல் பின்னிய வலை கொஞ்சம் கொஞ்சமாக நைந்து வந்தது. கனவுகளில் கூடிய வெட்கம் பின்னிய நடை ஆளரவமற்ற பாலைகளில் நிகழ்ந்தது. அந்தியின் நிறம் மெல்ல ஏறிக்கொண்டிருந்தது உடம்பில்.

பிறப்புடல் தொலைப்பதென தீர்மானித்த இரவில் அடிவயிற்றில் தொடங்கிய கூழாங்கற்களின்  பயணம் முடிவடையாது நீண்டது. ஒவ்வொரு நொடியிலும் கூர் வாளிருந்தது. நரம்புகளில் பஞ்சடங்கிய குருதி மறந்த இரு வெற்றுசதை உருண்டைகள் ஒட்டிக்கொண்டு விழ மறுத்தன. ஓர் ஆதரவு தேடிய உடம்பினை அணைத்த கைகளில் பாதுகாப்பிருந்தது. கூடவே ரோமங்கள்  அடர்ந்திருந்தன.இறுக்கிய கைப்பிடிக்குள் அடங்கத் துடித்த உடம்பின் கண்ணியினை ஏழு கடல்கள் தாண்டி ஒளித்து வைத்திருந்தார்கள். சுருள் சிகையும்,அடர் மீசையும்,சின்ன சிரிப்பும் துரத்திய நிலமெல்லாம் முளைத்தவெறுப்புடலின் அருவருப்பு. உறுத்திய உடைகள் உதிர்த்து வானம் அணிந்த இரவில் தோள் தொட்டு திருப்பிய கைகளுக்குள் அடங்கிய உடம்பின் உதடுகளில் படிந்த அவனது உதடுகள் உறிஞ்சிப்பகிர்ந்த நீரின் தித்திப்பில் புதிதாய் சில நட்சத்திரங்களும் சூரியன்களும். அவனின் மேலுதடு மூடிய மென்மயிர் கற்றைகள் உடம்பெங்கும் அசைந்தன. கனவுகளைத் துரத்திய உடம்பு இப்போது நிஜமாய் அழுந்திப் புரட்டியது. கொழுப்படர்ந்த  சதையினை பற்றியிழுத்து அணைத்த முடியடர்ந்த முரட்டு மார்பின் வியர்வைத் துளிகளைத் தின்று தீர்க்க யுகங்கள் பல ஆயின . நான் விரும்பிய எனது உடம்பிற்கான முதல் அங்கீகாரம் எனக்கு விருப்பமான உடம்புடன் அவ்வாறுதான் நிகழ்ந்தது.

பெருமிதத்தில் விம்மிய உடம்பு தன்னைக் கிழித்துக் கொடுத்தது வலியின்
முழுமையுடன். சதைப்பற்றான உள்ளங்கை உடம்பெங்கும் மேய்ந்து அழுந்திட கண்ணீர் உடைந்த கணம். பல் கடித்துப் பொறுத்துக் கொண்ட என் அசைவுகளின் வாதை மூளை நரம்புகளில் படிந்து ஞாபகமானது. ஞாபகமாக  மட்டுமே ஆனது வலி. உணர்வின் தவறு உடம்பின் தவறினை ஏற்றுக்கொண்டது. சூரியனைக் கடந்தது சிரமமென்றிருந்தது போக இப்போது நிலாக்களைத் தொலைத்தல் எளிதாக மறுத்தன. குளிரில் விறைத்து சாகத்தொடங்கின புதிர் கைகள் அறிந்த ரகசியங்கள். அடர் பௌர்ணமிகளில் வாசனை மாறிய மூச்சில் ஊமத்தம் பூக்களின் இருப்பின் துரத்தல். சாம்பல் மணத்தைக் கடக்க முடியாமல் திணறிய நிசியில் என் விரல்களில் நிராசையோவியங்கள். இறுகிய சதைக்குதிரையாய் அலட்சியமாய் வருகை தரும் ரோமங்கள்  அடர்ந்த உடம்புக்கு முன்னால்  பதறித் துடிக்கிறது பதுக்கி வைக்கப்பட்ட இவ்வுடம்பு. ஓர் அன்பை, காதலை, ஆறுதலை உள்ளங்கைக்குள் அடக்கிவிட முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும். உள்ளங்கைக்குள் அடங்கத் துடித்த காதல் என்னுடையதாக மட்டுமே இருந்தது.

நெற்றி, கன்னம், மோவாய் பள்ளம் எங்கும் எழுதி விலகிய உதடுகளின் நிகோடின்
 ருசியினை சேமித்து வைத்து சுவாசிக்க வேண்டியதாயிருந்தது. முதுகு வியர்வையினில் என் பெயர் எழுதி அழித்து எழுதி விளையாடிய ஆட்டத்தின் ருசி அவன் தோல் தாண்டி இறங்கவில்லை.  என் முதுகெலும்புத் துளைகளில் அவன் விரல்கள் நுழைத்து இசைத்திருந்த இசை சூரியன் தொடங்கி சூரியன் வரை பரவியிருந்தது. எல்லாக் கனவுகளிலும் எழுப்பினான் என்னை. அகால இரவுகளில் நெளிந்த என் பாதையினைக் கண்டவன் கண்களில் முதன்முறையாய் கேள்வி நெளிந்தது. அவனது குரல், உடல், விரல்கள் செய்திருந்த மாயாஜாலங்களை முற்றும் தின்று செரிக்குமுன்னரே ஏதோ நிகழக் கூடாதது நிகழ்ந்தது. விலகியதை உணரவே எனக்கு மரணம் தேவைப்பட்டது. அவசர அவசரமாய் அவன் ரேகைகளை சேகரித்தேன். தப்பு நிகழ்ந்துவிட்டதா?

அப்போது என்னுடம்பில் காதலுடன் கவிழ்ந்த கண்களில் இப்போது பெரு
நிராகரிப்பு. ஓர் அலட்சியத்தில் சிதறிய அங்கீகாரத்தின் முடிவில்
தனிவனத்தில் மிதந்த உடம்பெங்கும் மென்மயிர் வருடிய வாசனை கடந்ததொரு ரணக் கோடுகள். எனது நிர்வாணப் பதற்றங்களைக்  கடந்து சென்ற இகழ்ச்சியூறிய கண்களைத்  தாளமுடியாமல் தவித்தது உடம்பெங்கும் நிறைந்திருந்த அவனது பிசுபிசுப்பு.  பின்தொடர்ந்த பாதைகளின் முடிவில் கண்டதுதான் நிலத்தினைப் பெயர்த்து உள்வாங்கியது என்னுடம்பின் நடுக்கத்தினை. மோகமாய் மேல் விழுந்த உதடுகள் இப்போது வரைந்து கொண்டிருந்தது வேறொரு உடம்பில் காமச்சித்திரங்களை.

அந்த உடம்பில் இருந்தது இந்த உடம்பில் இல்லை. அந்த உடம்பில் இல்லாதது
  இந்த உடம்பில் இருந்தது. அது மட்டுமே எனது உடம்பாக இருந்தது. அவன் கைகள் படர்ந்த இடங்களெல்லாம் மூளையில் புரண்டன. என் உடம்பின் உறுத்தலை அதி ஜாக்கிரதையாய் தவிர்த்திருந்தான். அவனுக்குள் சிறைப்பட்ட என் உடம்பின் தேர்ந்தெடுத்த பாகங்கள் என்னைப் பிறிதொரு பிறவியாய் மாற்றியிருக்க அங்கீகாரம் என்று நினைத்து நான் மகிழ்ந்ததெல்லாம் அவனின் எச்சரிக்கை உபாயங்களினால் நொறுங்கிச் சிதைந்தன.
                      பைபிள் - மத்தேயு:19  வசனம்:12

" தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு.

மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும்  உண்டு. பரலோக ராஜ்யனிமித்தம்
தங்களை அண்ணகர்களாக்கிக்  கொண்டவர்களும் உண்டு. இதை ஏற்றுக்கொள்ள வல்லவன்
ஏற்றுக்கொள்ள கடவன் என்றார்"

தண்டவாளத்தில் விரைந்து கொண்டிருந்தது இரத்தக் கோடொன்று. தோலின் மீது படிந்த கத்தி மெல்ல அழுந்தி சற்றே வேகமாய் நரம்பின் மீது தடவி மூச்சிறுக்கி இறங்கியதில் இடது கையினால் இழுத்துப் பிடித்திருந்த அது தன்  தொடர்பினை இவ்வுடம்பிலிருந்து விடுவித்துக் கொண்டது. ஆசனவாய் வழியே மூளையின் நியூரான்களில்  படிந்து விரட்டத்துவங்கியது வலி. இருள் அப்பிய தண்டவாளப் பாதையில் ஓடிக் கொண்டிருந்த உடம்பில் எவ்விதத் தடையுமில்லை. தூரத்தில் இரயில் வரும் சத்தம் மங்கலாய் செவியில் விழ தடுமாறிய கால்களை நிலை நிறுத்திச் செல்ல மிகுந்த பிரயாசைப்பட வேண்டியிருந்தது. தொடை வழி பெருகிய குருதி உள்ளங்காலில் படிந்து சரளைக் கற்களிலும் மரத் தடுப்புகளிலும் கால் அச்சுப் பதிந்து பதிந்து விலகியது. இந்த மரணத்திற்கு சாட்சியாய் எதையும் நிறுத்த விரும்பவில்லை.  நிலா இல்லை. காற்று தன்  வாய் பொத்தி ஒடுங்கியிருந்த நிசி. இருள் தன கண்களை மூடிக் கொண்ட கணத்தில் மயக்கமுற்று சரிந்தேன். இரும்புத் தண்டவாளம் தலையணையாய் மாற இரு கால்களையும் அகல விரித்திருந்தேன். மேலும் மேலும் காட்சியைப் பெரிதாகிப் பார்த்தது கண்களெங்கும்  கருப்பு அப்பிய ஆகாயம்.

இப்போது என் நிர்வாணம் வானமாயிருந்தது. எதுவுமற்ற  நிர்வாணம்.
இதழோரத்தில் சிரிப்பு வழிந்தோடியது. என் மண்டைக்குள் சூடாய் ஒரு முத்தம் பளிச்சென்று இறங்கிட வலது கைக்குள் சிக்கியிருந்த அவன் பின்னந்தலை முடியினை பலம் கொண்ட மட்டும் இழுத்தேன். உச்ச வலியில் இமை செருக மிகப் பெரும்  சத்தத்துடன் ரயில் சக்கரம் என் கபாலத்தினை நொறுக்கி நகர்ந்தது. அடுத்த சக்கரத்தில் சிக்கிய கண்களை தண்டவாள இரும்பில் வைத்து தேய்த்தது. என் உடம்பு சற்றே கோணலாக கால்கள் சக்கரத்தில் சிக்கிக்கொண்டு ரயிலினூடே இழுத்துச் செல்லப்பட்டது. தன வெறி தீர உடலைக் கொண்டு சென்ற ரயில் சலிப்புற்று உதற இடது உள்ளங்கை தன இறுக்கத்தை மெல்ல விடுவித்து ரகசியப் பிறப்பினை உலகுக்கு காட்டியது. எவ்வித சேதாரமுமின்றி முழுமையாக இருந்தது நான் என்னிலிருந்து நீக்கியிருந்த  இயக்கமற்ற குறி.
                       ஆதியில் ஓர் அணு இருந்தது

எவ்வித அடையாளமுமின்றி ஒரு துளியாயிருந்த அணுதான் சிறு துளை துளைத்துக்
கொண்டு நீந்திச் சென்ற பாதையில்  கலந்த இன்னொரு அணுவிடம் முட்டி மோதிப் பயணப்பட்டு பத்திரமாக ஒரு சதைப்பையில் பாதுகாப்பாய் அமர்ந்து கொண்டன இரண்டணுவும் ஒன்றெனக் கலந்து. அப்போதும் எவ்வித அடையாளமுமில்லை. அடையாளமின்றி 56  நாட்கள் அப்பாதுகாப்பு நீரில் வாழ்ந்த கருவென்ற பெயர் தாங்கி பசியெடுத்து திணறி உயிர் தின்று வளரத் தொடங்கிய உயிரின் ஒன்பதாவது
வாரத்தில் முளைத்த அடையாளம் கண்டு அதிர்ந்தது கரு. பதினோராவது வாரம் மிகச்சிறிய இரு விரைகளும் நெருப்பின் சுவடு பதிந்த நீளமான மின்னல் கோடும் தெரிந்ததைக் கண்ட கருவின் உயிரில் நடுக்கம். கை கால்களினால் தன்னை சுருக்கி மறைத்துக் கொண்டது. உலகம் காண அச்சமுற்ற கருவின் கதறல் எச்செவிகளுக்கும் விழவில்லை. இந்த சிக்கலான உடல் நீக்க உள்ளிருப்பு போராட்டம் நிகழ்த்தியது. அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை  அதன் போராட்டம். மிகச்சரியாக அந்த அணு தனது  270  வது நாளில் மிகப் பாதுகாப்பாய் உணர்ந்த அதன் உலகம் விட்டு நழுவி மிகப்பெரிய அலறலுடன் இப்பூமியில் ஆண் மகவாய் அடையாளம் பெற்று விழுந்தது.





                  

ஏவல்

சிறுகதை:
                                               ஏவல்



அன்புள்ள அப்பாவுக்கு கதிர் எழுதிக் கொள்வது. நீங்கள் சென்னை வரும்போது ஏவல் விட்டுத்தான் அழைத்து வந்தீர்கள். சென்னை  வந்தவுடன் ஏவல் ஆனது. பிறகு வைரவேல் டாக்டர் மிசினை வைத்து பேசினார். நீங்கள் அதனையும் ஏவல் என்றே நம்பினீர்கள். பிறகு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தீர்கள். அங்கு இருந்த தேன்கனி எனது சொந்த அக்காள். நானும் அவளும் ரெட்டைக் குழந்தைகள். நாங்கள் இருவரும் மனதிற்குள் பேசிக்கொண்டோம். மனதிற்குள் நினைப்பதை கண்டுபிடிக்கும் ஆற்றல் எனது அக்காவிற்கும் வைரவேல் டாக்டருக்கும் உண்டு. பிறகு என்னை ஹோமில் சேர்த்தீர்கள்.   அன்று முதல் என்னை கல்லூரியில் படிக்கும்போது வந்த ஏவலில் தானாக பேசிக்கொண்டதை தாங்கள் கஞ்சா அடித்து உளறுவதாக கூறி எனக்கு ஆஸ்பத்திரியில் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தீர்கள். அந்த வேதனையும் தாங்கிக் கொண்டேன். நாட்கள் கடந்தன. ஹோமில் சேர்த்தபிறகு கல்லூரியில் படிக்கும்போது வந்த ஏவலில் திருத்தம் செய்தார்கள். நான் இதுவரை நினைத்த அத்தனையும் திருத்தம் செய்தார்கள். பிறகு ராசி உச்சத்தைக் குறைக்க என்னை மிசினை வைத்து அழச் செய்தார்கள். ஹோமில் இருந்த ஒன்பது மாதங்களும் நரக வேதனைதான். வைரவேல் டாக்டர் மனதில் நினைப்பதை அப்படியே சொல்லுவார். ( இதற்காகவே அமெரிக்காவில் படித்தவர்) அப்பொழுது உங்களை திரும்பிக்கக் கூறி மிசினை ஆப் பண்ணாமல் வைரவேல் டாக்டர் என்னை துன்புறுத்துவார். எனக்கு நீங்கள்தான் முக்கியம். நீங்களும் அம்மாவும்தான் முக்கியம். நான் உங்கள் இருவர் மீதுதான் அளவு கடந்த பாசம் வைத்துள்ளேன். உங்களை சாகும் வரை  கைவிடமாட்டேன். ஹோமிலிருந்து என்னை வீட்டுக்குக் கூட்டிப் போகாமல் இங்கே வந்து வேலைக்கு சேர்த்துவிட்டீர்கள். இவர்கள் ஒன்றும் உங்களிடம் சொன்னதுபோல்  எனக்கு பில் போடும் வேலை தரவில்லை. சேர்ந்த அன்றே குடோன் சென்று வெயிட் தூக்கு என்றார்கள். என்னுடன் குடோனில் வேலை பார்க்கும் அண்ணன்கள்  நல்லவர்கள். நான் பி.காம். படித்திருக்கிறேன். நான் ஹோமிலிருந்து வருகிறேன். நான் மாத்திரை சாப்பிடுகிறேன் என்றவுடன் என்னை பெட்டியெல்லாம் தூக்க சொல்லவில்லை.அவர்களிடம் நான் சொல்லியிருக்கிறேன். எனக்கு கோபம் வந்தா என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாதுன்னு. அதனாலதான் அன்னைக்கு ஒன்ன அடிச்சேன். எல்லாம் இந்த கல்யாணியால வந்ததும்மா. சொர்க்கவாசல் திறப்பு அன்னிக்கு பெருமாள் கோயில்ல வச்சிதான் கல்யாணியைக் கிஸ்ஸடிச்சது. அத அவ அப்பன் பாத்துட்டான். வீட்டுக்கு அழச்சிட்டுப் போய் ஊஞ்சல்ல உட்கார வச்சி காபியெல்லாம் குடுத்தாம்மா. நான் குடிச்சிருக்கக் கூடாதுதான். தெரியாம குடிச்சிட்டேன். அதுலதான் அவன் ஏவல் வச்சிருக்கான். இல்லாட்டி ஒரே வாரத்துல கல்யாணிக்கு கல்யாணம் பண்ணுவானா? அவன் தெலுங்கு செட்டிம்மா. நம்மூரு தெலுங்கு செட்டியப் பத்தித்தான் ஒனக்குத் தெரியுமே. அவன் குடுத்த காபியக் குடிச்சித்தான் எல்லா சனியனும் வந்தது. இல்லேன்னா கல்யாணி என்ன மறப்பாளா. அதுக்கப்புறம்தான் கல்யாணி கூட அதிகமா நான் பேச ஆரம்பிச்சது. கல்யாணி அடிக்கடி என்னப் பாக்க வந்தா. காட்டுக்குப் போய் பேசிக்கிட்டுருப்போம். நான் அவ கூட பேசுறது ஒங்களுக்குப் புடிக்கல. கஞ்சா அடிச்சிட்டு ஒளர்றேனு ஏவல் வச்சீங்க. இப்ப என்னாச்சி. பீடைகள் ஒழியவே ஒழியாது. எனக்கு நிறைய  யோசனை வந்தது. யோசிச்சிக்கிட்டே இருந்தேன். அதெல்லாம் யாருக்கிட்ட சொல்றதுன்னே தெரியல. ராத்திரி தூங்காம யோசிச்சேனு டாக்டரிடம் அழைத்துக்கொண்டு  போனீர்கள். தூக்கம் வரலேன்னா யோசிக்கத்தானே செய்யணும். உங்களுக்குப் புரியவே இல்லை.நான் சொல்ல வந்ததையாவது கேட்டிருக்கலாம். எதுவுமே பேசாதே தூங்கினாப் போதும்னு சொல்லி மாத்திரை தந்தீர்கள்.அன்று ஆரம்பித்த கொடுமைதான். பிறகு என்னை சூழ்ந்த மாயை அகன்றது. மாத்திரைகள் சாப்பிட்டே தூங்கினேன். எவ்வளவு தூக்கம் தூங்கியிருப்பேன். இப்போதெல்லாம் எத்தனை மாத்திரைகள் போட்டாலும் தூக்கம் வருவதில்லை. வைரவேல் டாக்டர் ஒரு ஊசி போட்டால் போதும். ஆஸ்பத்திரியில் இருக்கும் அத்தனை பெட்டின் மீதும் பறந்து கொண்டிருப்பேன். அமாவாசை பௌர்ணமி நாட்களில் ஏவல் உச்சத்துக்கு செல்லும் என்று நீங்கள்தானே பயந்தீர்கள். எனக்கென்ன பயம். ஏவல் மட்டும்தான். எனக்கு கவலையெல்லாம்  உன்னை நெனச்சுத்தாம்மா. நாகூர் தர்காவுக்குப் போய் ஒரு ராத்திரி படுத்துக் கிடந்தப்ப நீதான் தூங்காம முழிச்சிக்கிட்டுக் கிடந்த.  நான் பேசுறத யாராவது கேட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது. டாக்டர்கிட்டக் கூட அதிகமா நான் பேசுனதில்ல. நீங்கதானே பேசுவீங்க. பெரியவங்கள எதுத்துப் பேசுறான்னு அப்பா சொல்வாரு. பெரியவங்க தப்பு பண்ண மாட்டாங்களா. அத என்ன எதுன்னு கேக்கக்கூடாதா. கற்பித்துக்கொண்ட மாயைகளிலிருந்து நீங்கள் விலகவே இல்லை. எப்பவும் கண்களில் தூக்கம் இருக்கும். தூங்கவும் முடியாது. யோசனைதான். சிந்தனை குறையுமென்று போட்ட மாத்திரைகள் அதிகப்படுத்தின. சரவணனை செவிட்டில் அறைந்ததுதான் உங்களுக்குத் தெரியும். அவன் என்கிட்ட என்ன கேட்டான். இப்பல்லாம் தர்கால்ல போய் படுக்கிறதில்ல நீ.  உனக்குப் பைத்தியம் தெளிஞ்சிடுச்சா. யாருக்குமே கோவம் வரும்தானே. எனக்கு கோவம் வந்தா என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாதுன்னு ஒங்களுக்குத் தெரியும்தானே. யாரும் என்கிட்டயும் அதப்பத்திக் கேக்கல. சரவனன்கிட்டவும் கேக்கல.நான் நல்லவந்தாம்மா. ஏவல் இல்லேன்னா நல்லாத்தாம்மா இருப்பேன். எண்ணப் பாத்து லூசுன்னா கோவம் வருமா வராதா. வைரவேல் டாக்டர் கரண்ட் குடுக்கறதுக்கு முன்னாடி விரல்ல ஒயர் மாட்டுறப்பவே கண்ண இறுக்க மூடிக்குவேன். சத்தம் கேட்ட ஒடனே என்ன யாரோ உள்ள இழுக்கிற மாதிரியிருக்கும். வலிக்கல்லாம் செய்யாதும்மா. தண்ணி தாகம்தான் எடுக்கும். நீங்கதான் அழுவீங்க. நான் கஷ்டப்படுவதைத் தாங்க முடியாமல் ஏர்வாடிக்கு அழைத்துக்கொண்டு சென்றீர்கள். உங்களுடன் இருந்தாலாவது சரியாக இருந்திருப்பேன். ஏவலின் உச்சம் குறைந்திருக்கும். என்னை சுற்றி ஏதேதோ சத்தங்கள். நான் அமைதி தேடி தனியே அமர்ந்து யோசிக்கும் போதெல்லாம் இன்னும் எனக்கு சரியாகவில்லையென்று போய்விடுவீர்கள். தர்காவில்  படுத்துக் கிடந்தபோது உன்னைக் கட்டிப் பிடிக்க வேண்டும் போலிருந்தது. அதனால்தான் அப்படி செய்தேன். உன் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ஏதும் தப்பு செய்திருந்தால்  என்னை மன்னித்துவிடு. ஹோமில் சேர்ப்பதாய்முடிவு செய்து என்னைக் கட்டாயப்படுத்தியபோதுதான் உன்னை அடித்தேன். என்னை மன்னிச்சிடு அம்மா. ஹோமில் நன்றாக சாப்பிடச் சொன்னார்கள். சாப்பிட்டு முடித்த உடனே மாத்திரை தருவதுதான் கோபமாய் வரும். ஹோமிலிருந்து வீட்டுக்கு கூட்டிப் போகாமல் இங்கே வந்து வேலைக்கு சேர்த்துவிட்டீர்கள். கோபம் வந்தால் கணபதியை நினைத்துக்கொள். ஓம்  ஸ்ரீ வல்லப கணபதே நமஹா சொல்லு என்றீர்கள். நம் ஊர் போல் இங்கு சாமியே இல்லம்மா. நம் ஊரில் தடுக்கி விழுந்தால் எத்தனை சாமிகள். அதனாலே ஏவல் அதிகமாய் வராது. சென்னையில் சாமியே இல்லை. எனக்கு ஏவல் என்பதால் மாத்திரை சாப்பிடுகிறேன். நிறையப்பேர் ஏவல் இல்லாமலே மாத்திரை சாப்பிடுகிறார்கள். இங்கு வேலைக்கு சேர்ந்த இந்த ஒரு மாதத்தில் நான் கணபதி என்றிட கலங்கும் வல்வினை கணபதி என்றிட காலனும் கைதொழும் கணபதி என்றிட கருமம் ஆதலால் கணபதி என்றிட கவலைகள் தீருமே என்றெல்லாம் சொல்லிப் பழகிக் கொண்டேன். நேற்றுதான் மறந்துவிட்டேன். எனக்குப் பௌர்ணமியென்று தெரியாது.  தெரிந்தால் நானே கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்திருப்பேன். ஏவல் அவ்வளவு எளிதில் விலகாது. கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் பார்த்தேன். பதினஞ்சு மாத்திரைகள். மாத்திரை அட்டை இங்கேதான் கிடக்கிறது. இதுவரைக்கும் தூங்கல. ராத்திரி ரொம்ப வேர்த்ததுன்னு சட்டையை அவுத்துட்டேன். புழுக்கமா இருந்துதுன்னு ஜட்டியோட பாயில உக்காந்திருந்ததை இங்க உள்ள அண்ணன்ல்லாம் போன்ல படம் எடுத்தாங்க. என்ன சுத்தி நின்னுக்கிட்டு மாத்திரை போடு மாத்திரை போடுன்னு ஒரே சத்தம். ஏர்வாடியில இருந்தது மாதிரியே இருந்தது. ரெண்டு காதையும் பொத்திக்கிட்டு அப்படியே ஒக்காந்துட்டேன். மண்டைக்குள் ஏவல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. எல்லோரும் வாக்கிங் சென்றுவிட்டார்கள். இவன் மட்டும்தான் இருந்தான். இவன் பெயர் கூட எனக்குத் தெரியாது. என்னுடன்தான் வேலை பார்க்கிறான். விடிந்ததிலேர்ந்து டார்ச்சர். ஓனரிடம் நேத்து ராத்திரி நடந்ததைச் சொல்லி வேலையை விட்டு தூக்கப் போகிறேன் என்றான். நான் கஞ்சா அடித்ததை இவன் பார்த்தானாம். சொன்னதையே திருப்பி திருப்பி சொன்னான். எத்தனை முறைதான் ஓம் ஸ்ரீ வல்லப கணபதே நமஹா சொல்வது. ஸ்பானரை எடுத்து மண்டையில் வீசு வீசினேன். சரவணனை அறைந்தது போலவே வேகமாய் அறைந்தேன். நேற்று மேலே இருந்த பேனை கழட்டி மாட்டியவர்கள் ஸ்பானரை இங்கேயே விட்டுவிட்டுப் போய்  விட்டார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு கோபம் வந்தா என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாதுன்னு ஒங்களுக்குத் தெரியுமே. கத்திக்கிட்டே மண்டையில  கைய வச்சிக்கிட்டு கீழே விழுந்தவன்தான் இதுவரைக்கும் எந்திரிக்கல. என் பாயில அவன் மண்டையிலேர்ந்து வந்த ரத்தம் வந்து சேந்ததால எழுந்திரிச்சி பாய சுருட்டி வச்சிட்டு வந்து ஒங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். சுமதி அக்காவை விசாரித்ததாக சொல்லவும். இங்கே இரண்டு மணி நேரம் மட்டுமே கரண்ட் கட் செய்கிறார்கள். இப்போது ஏவல் இல்லை. குளித்துவிட்டு வேலைக்கு கிளம்ப வேண்டியதுதான். எனக்கு உங்க சந்தோசம்தான் முக்கியம். நீங்களும் அம்மாவும்தான் முக்கியம். லீவு கிடைக்கும்போது என்னை அழைத்துக்கொண்டு போங்கள். இப்படிக்கு உங்கள் அன்பு மகன் கதிர்.

மார்ச் 13


சிறுகதை: 

மார்ச் 13





ஒரு வண்ணத்துப்பூச்சியைக் கொல்வது குறித்து அவனிடம் எந்த முன் திட்டமும் இல்லை.  தி. நகர் சென்றிருந்தபோதுதான் நடைபாதைக் கடை ஒன்றில் அந்தக் கத்தியைப் பார்த்தான். கைப்பிடியிலே அத்தனை அழகான வேலைப்பாடு. ஓர் ஆணும் பெண்ணும் பின்னிப் பிணைந்திருப்பது போன்ற வடிவம் கொண்டது. கையினால் பிடித்துக்கொள்ளும் பகுதியில் அப்பெண்ணின் புட்டம் இருந்தது. ஒரு கையால் புட்டத்தினை இறுக்கியபடி கத்தியால் ஓங்கிக் குத்திக் கொலை செய்வதில் அவனுக்கு வெகு  விருப்பமாயிருந்தது. வண்ணத்துப்பூச்சியினை மிக சாதாரணமாகக் கொன்றுவிடுகிறார்கள். ஒரே ஒரு சொல்லில் அது தன் அத்தனை வர்ணங்களையும் தொலைத்துவிட்டு செத்துப் போகிறது. நிறமற்ற ரத்தத்தினை பரிதாபமாய் அவன் விரலெங்கும் வழியவிட்டபடி இறந்திருந்த வண்ணத்துப்பூச்சியைக் கண்டதும் காற்று தொலைந்து போக அவனுக்கு மூச்சுத்திணறியது.  அணிந்திருந்த சட்டையின் முதல் பட்டனைத் திறந்துவிட்டான். நெஞ்சு மயிர்களில் அந்தக் கை தடவி இறங்கியதை நீல ஒளியில் அழித்தான்.

எப்போதும் போல தி.நகரில் கூட்டம். எத்தனை விதமான மனிதர்கள். எத்தனை விதமான முகங்கள். எல்லோர் கைகளிலும் சந்தோஷம் பார்சல்களாகத் தொங்கிக் கொண்டிருந்தது.  மழை வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. வராது என்று கண்டிப்பாகத் தெரியும்.இருந்தும் மழை தேவைப்பட்டது.  நிதானமற்ற மன நிலையில் நடந்துகொண்டிருந்தவனைச் சுற்றிலும் சத்தங்கள். எதுவும் அவன் செவிக்குள் செல்லவில்லை.  மேகம் மேலே விலகியிருக்கவேண்டும். திடீரென்று வெள்ளை வெயில் அவன் வட்டத்துக்குள் விழுந்தது. ஒரு நிமிடம் கண்களை மூடினான். ஓர் இலை மேலிருந்து மெல்ல இறங்கி அவன் கண்களில் மோதியது. மழையின் ஒரே ஒரு துளி உச்சியிலிருந்து நழுவுவதை உணர்ந்தான். இலையும் மழையுமாய் மாறிய நொடியில் சவுக்கு இறங்கியது.

இமானுவேல் மூன்றாம் முறையாக விழுந்தான். முதுகு வலித்தது. சுற்றிலும் மக்கள் கண்களில் கருணையும் கண்ணீரும் கலந்து அவனைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்ன இது? இந்தக் கூட்டத்தில் எத்தனை திடகாத்திரமானவர்கள் இருக்கிறார்கள். இந்தச் சிலுவை இத்தனை சுமையாயிருப்பது ஒருவருக்குக்கூடவா தெரியவில்லை. இமானுவேலின் பர்வையில் இருந்த வெறுப்பு எவருக்கும் தென்படவில்லை.
இரண்டு முழங்காலும் மொன்னையாக்கப்பட்டு  குப்புறப்படுத்தபடி கிடந்தவனின் கண்களில் மிதந்த உலகம் அறுவறுப்பாக நகர்ந்துகொண்டிருந்தது.  அவனைத் தாண்டினான். ப்ளாட்பார்ம் மீது துணி விரித்து ஏகப்பட்ட கத்திகளைப் பரப்பி வைத்திருந்தவன் லேசான தாடி வைத்திருந்தான். கண்களிலும் கன்னத்து சதைப்பகுதியிலும் அத்தனை மென்மை. இப்படியெல்லாம் முகம் வைத்திருந்தால் யார் இவனிடம் கத்தி வாங்குவார்கள்? ஆனாலும் அவனுக்கு அந்தக் கத்தி ரொம்பவும் பிடித்திருந்தது. ஒரு கோடென ஆரம்பித்து மேலே நீளும் பழுப்பும் சந்தன நிறமும் கலந்த மரக்கட்டையில் உச்ச ஆலிங்கனம். ப்ரமாதமான சிற்பச்செதுக்கல். செதுக்கியவன் காமத்தில் நீந்திக் களைத்தபின் தொடங்கியிருக்க வேண்டும் அந்த வேலையை. முகமென்று எதுவுமில்லை. கைப்பிடியில் இருந்த ஆணின் கை அந்தப் பெண்ணின் புட்டத்தினை வெகு நெருக்கமாக அணைத்திருந்ததிலேயே அவளின் மோகம் ததும்பும் முகத்தைப் படித்துவிடலாம். கத்தியைக் கையில் எடுத்து ஒருமுறை குத்துவதுபோல் பிடித்துப் பார்த்தான். கைப்பிடியில் இருந்த ஆணின் கை மீது இவன் கை படிந்தது.
அறையெங்கும் நீலஒளி சிதறியிருக்க நிர்வாண உடல்களில் வியர்வை முளைத்திருந்தது. அவன் விரல்கள் அவள் காது மடலை வருடியபடியிருக்க மறுகை அவளின் தொடைப் பகுதியைப் பற்றியிருந்தது. நின்றபடியே இரண்டு ரகசிய நீல நிழல்கள் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. அவள் அவன் வியர்வை முதுகில் உள்ளங்கை பதித்து சீராக வெட்டப்பட்டு சிவப்பு வண்ண நெயில்பாலிஷ் பூசப்பட்ட நகங்களினால் ஐந்து பிறை பதித்தாள். மேலே மின்விசிறி உச்சத்தில் சுழன்று கொண்டிருக்க அவளின் பிடரியிலிருந்து ஒரு வியர்வைத் துளி விடுபடுவதை அவன் விரல் தொட்டு உணர்ந்தது.  தன் நடுவிரலினால் அந்தத் துளியை சேகரித்து பின்பற்றியபடி திசை மாற்றினான். அவளுக்குள் சூரியன் வெடித்தது. அவன் இடது தோளில் பற்கள் பதித்து ஆவேசமாக அவன் பெயரை எழுதினாள். வலதுகை நெஞ்சு மயிர்களில் அழுத்தமாகத் தடவி இறங்கியது.
தன் நாவினால் அவள் நாசியில் முத்தமிட்டவன் அவளின் நாக்கினில் அன்றைய தேதியை எழுதினான். அடிவயிற்றில் எழுந்த தாகத்துடன் வேகமாய் நீர் உறிஞ்சினான். அவளிடமிருந்து முனகல் எழுந்தது. இருவரின் அடிவயிற்று நிர்வாணம் ஒன்றையொன்று உரசிய நொடியில் அவளைக் கட்டிலில் சாய்த்தான். இறுகப் பிடித்திருந்த அவன் பிடரி மயி்ரினை விடாமலே மல்லாந்தாள். தன்னை அகல விரித்து அவனை உள்வாங்கினாள். அவன் அவளை முழுவதுமாக ஆக்ரமித்தவன் நாளை இந்த உலகம் அழிந்துவிட்டால் என்பதுபோல் இயங்கினான். அவள் இறுகப் பல் கடித்து நகங்களால் கிழித்தாள். காற்றுக்கு
வழியின்றி மார்பின் வேர்வை மூச்சுத் திணறியது. உச்சியிலிருந்து கால்விரல்கள் வரை நிகழ்ந்துகொண்டிருந்த நடனத்தினை அவன் ஒற்றைப் புள்ளியில் நிறுத்தினான். அவள் உடல் விரிந்து சுருங்கியது. அவன் ஆயிரமாய் சிதறி அவளுக்குள் பயணிக்கத் தொடங்கினான். லட்சக்கணக்கில் தனனை உடைத்திருந்தவள் அவன் முழுவதிலும் படரவிட்டு சேகரிக்க மறந்தாள். அவள் பற்களிலிருந்து எழுந்த வாசனை அவன் நாக்கு நரம்புகள் வழியே மூளையை அடைந்து தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்துப் படுத்திருந்தது.
மார்ச் 13. இருவரும் வேளாங்கண்ணிக்கு சென்றிருந்தபோது  பழைய மாதாகோவில் செல்லும் பாதையின் இருமருங்கிலும் இயேசுகிறிஸ்துவின் பிறப்புக்கும் இறப்புக்குமான சம்பவங்களை சிலைகளாக செதுக்கி வலைக் கூண்டிட்டு அடைத்து வைத்திருந்ததைக் கண்டார்கள். அவன் நேர்மேலே தெரிந்த சிலுவையை உற்று நோக்கியபடியே ''ஏன் அந்த நகரில் அந்தச் சிலுவையைச் சுமக்க ஒரு பலசாலி கூடவா இல்லை" . இயேசுகுமாரன் மூன்றாம் முறையாக கீழே விழுந்த காட்சியை அவள் பார்த்தாள்.''பைபிள் தெரியாம எதுவும் உளறாதீங்க" என்றவளின் சொற்கள் சிலுவையென மாறி தன் முதுகில் ஏறியதில் அவன் தளர்ந்திருந்தான். அவனின் மெளனம் அவளைக் கலவரப்படுத்தியது. ''இயேசுவைக் கடவுளாக்குவதற்காகவே நாம் அவருக்கு மிகப் பெரிய துன்பம் தந்துவிட்டோம். இயேசு கடைசிவரை சிரிக்காமல் போனதற்கு அதுதான் காரணமாயிருக்க முடியும். ஒருவன் கடவுளாக இத்தனை துயரம் சுமக்க வேண்டுமா... உனக்கு யேசுவின் வலி புரிகிறதா'' அவனின் கண்களில் உறைந்த சிலுவையில் இமானுவேல் அறையப்பட்டிருந்ததைக் கலவரத்துடன் பார்த்தாள்.
அவன் அறையில் அவனைத் தவிர வேறு யாருமே இல்லை என்றுதான் முதலில் நினைத்திருந்தான். மழை நாட்களில் சில கட்டெறும்புகள் வந்து போகும். வாசல் வேப்பமரம் வெகு ஈரமாய் பச்சை நிறத்தினைப் பூசிய இலைகளுடன் கொஞ்சம் கட்டெறும்புகளையும் வைத்திருந்தது. ஒருமுறை பாத்ரூமில் பல்லி பார்த்தான். ஒரு தடவை வந்ததுதான். அதற்குப் பிறகு அவனைப் பார்க்க அது வரவில்லை. ஆனால் வண்ணத்துப்பூச்சி வருமென்று அவன் கொஞ்சம்கூட நினைக்கவில்லை. ஒருநாள் மதியம் அவன் டி.வி பார்த்துக்கொண்டிருந்தபோது கவனம் திரையில் ஓடிக்கொண்டிருந்த காட்சியில் பதியாமல் கலைந்துகொண்டே இருந்தது. அப்புறமாய்தான் கவனித்தான். பின் சுவற்றில் ஒரு சிலந்தி அருகிலிருந்த ஜன்னல் வரையில் தன் வீட்டைக் கட்டியிருந்தது. சிலந்திக்கு எதற்கு ஜன்னல் என்று அவனுக்கு யோசனை. ஜன்னலை மூடினால் வீடு கிழிந்துவிடுமோ என்று அந்த ஒற்றை ஜன்னலை மட்டும் அவன் திறந்தே வைத்திருந்தான். அதன் வழியாகத்தான் அந்த வண்ணத்துப்பூச்சி வந்திருக்கவேண்டும். ஒரு வண்ணத்துப்பூச்சியைக் கொல்லும் அளவிற்குத் தன் அறைச் சிலந்தி கொடூர மனம் படைத்ததாய் இருக்காது என்று அவனுக்குத் தெரியும். சிலந்தியின் எச்சிலில் மகரந்தம் தேடிக்கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சி குறித்தும் அவனுக்குள் மிகப் பெரும் கேள்வி இருந்தது. பார்வையிழந்த வண்ணத்துப்பூச்சி வழி தவறித்தான் தன் அறைக்கு வந்திருக்க வேண்டும். ஒரு குருட்டு வண்ணத்துப்பூச்சிக்கு பூவுக்கும் வலைக்கும் வித்தியாசம் தெரியாமலா போகும்? கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் நெருங்க விடாமல் சிறு இடைவெளிவிட்டு ஒரு பியானோவின் ஸ்வரக் கருவினைத் தொடுவது போல் அந்த வண்ணத்துப்பூச்சியைப் பிடித்தான். வலைவிட்டு வந்த பூச்சியினை உள்ளங்கையில் வைத்தான். இரு விரல்களிலும் வண்ணத்துப்பூச்சியின் துளி உடல் வரையப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து உடல் நடுங்கிட, சிலந்தி எழுதிக்கொண்டிருந்த கவிதையை நிறுத்திவிட்டு அவனை வெறுப்புடன் கவனித்தது. அடுத்த வார்த்தைக்குத் தவித்தது.

அந்த யாசகனின் தட்டில் அவன் பத்து ரூபாய் போட்டுவிட்டு நகர்ந்தான். அவனின் கைகளை இறுகப் பிடித்திருந்தவள் அவனின் கருணை குறித்து எழுப்பிய கேள்விக்கு 'இரண்டு கைகளும் இல்லாத ஒருவன் பிச்சைதான் எடுக்க முடியும்' என்றவனின் சொற்களில் புத்தனின் வாசனையைக் கவனித்தாள். கடல் பார்த்து அமர்ந்திருந்தார்கள். 'என்னால் உன்போல் இருக்கமுடிவதில்லை என்பது குறித்து எனக்கு மிகப்பெரிய குற்ற உணர்வு உண்டு' என்றாள் கடலிடம். அவன் அவளைத் திரும்பிப் பார்த்து 'என் போல் நீ இருந்தால் உன் மீது எனக்கும் என் மீது உனக்கும் காதல் வந்திருக்காது'. அவனது கீழ் உதட்டின் நிகோடின் படியாத சிவப்பு அவளுக்குள் எச்சில் வரைந்தது. 'கடல், கடல் போல் இருப்பதால்தான் நாம் கடல் பார்க்க வருகிறோம். வேறு மாதிரி இருந்திருந்தால் நாம் வரப் போகிறோமா என்ன' என்றவனிடம், 'அன்று கோவிலில் நம்மைப் பின் தொடர்ந்த வண்ணத்துப்பூச்சியினை நீ ஏன் அவ்வளவு விரும்பினாய் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு அது மிகவும் தொந்தரவு தந்தது' என்றாள் எச்சில் விழுங்கியபடி. 'உனக்கொன்று தெரியுமா அந்தப் பட்டாம்பூச்சி என் அறைக்குச் செல்லும்வரை என்னுடன்தான் வந்தது. பைக்கை நிறுத்திவிட்டு அறைக்கதவைத் திறந்துவிட்டு திரும்பி வந்து பார்த்தால் அதைக் காணவில்லை'. சிரித்தான் அவன்.  'நீ மிகவும் சாஃப்ட் கார்னர் பர்சன்'. 'ஆமாம் கார்னர்ல மட்டும் கொஞ்சம் சாஃப்ட்'. அவள் கன்னம் தொட்டவனின் விரல்களை இறுகப் பிடித்துக்கொண்டாள். 'பிறந்தநாள் ட்ரீட் எதுவும் இல்லையா' கண்ணடித்து சிரித்தவனின் மீசையை இழுத்துப் பிடித்தபடி 'நான்தான் உன் ட்ரீட். எடுத்துக்கோ ப்ளீஸ்' கண்களில் காமம் உடல் அசைத்து வால் நெளித்த வாசனை  அவனின் நாசி தழுவியது .' உனக்கு தருவதற்கு என்னைவிட சிறந்த பரிசு இந்த உலகத்தில் எதுவும் இல்லை. என்னை எடுத்துக்கொள்' அவளின் கண்ணீர் பார்த்து புன்னகைத்தான். அவள் சிரித்தபடி அவன் விரல்களைப் பிடித்து நெறித்தாள். அந்த லாட்ஜ் ரிஜிஸ்டரில் ஹனிமூன் ட்ரிப் என்று அவன் எழுதியிருந்த பக்கத்தில் கொஞ்சம் கடற்கரை மணல் சிந்தியிருந்தது. அறையைத் தாழிட்டவுடன் அவனை இறுகக் கட்டிப்பிடித்தவள் அவன் உதடோடு உதடு வைத்து விலக்காமலே பேசினாள். 'கனவு மாதிரி இருக்கு'.அவனும் உதடுகளை விலக்காமலே 'இந்தக் கனவு முடியக்கூடாது' என்றான்.
இப்போது அறை இருளில் இருந்தது. தொலைக்காட்சியை அணைத்திருந்தான். ஜன்னலை இறுக மூடிச் சாத்தியதில் வலை சிதறி சிலந்தி மேலே ஏறியது. செல்போன் டார்ச்சினை ஆன் செய்தான். மிகக் கூர்மையான கத்தியின் நீண்ட நுனி போல் வெளிச்சம் விரிய அந்த வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகளை ஏற்கெனவே பிய்த்திருந்தான். அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. அதிகம் வன்மமின்றி ஒரு வண்ணத்துப்பூச்சியினைக் கொன்றுவிடலாம் என்பது உலக நியதியாய் இருக்க இவர்கள் ஏன் வண்ணத்துப்பூச்சியினைக் கொல்வது குறித்து சிரமப்படுகிறார்கள். இத்தனை துன்புறுத்துகிறார்கள். இறக்கைகளற்ற வண்ணத்துப்பூச்சியின்  உடல் அத்தனை அருவருப்பாயிருந்தது. சாம்பல் நிற வயிறு மட்டும் ப்ரதானமாயிருக்க அவனுக்கு வண்ணத்துப்பூச்சியை ரசிக்க அவகாசமில்லை.  அந்தக் கத்தியை எடுத்தான்.  வண்ணத்துப்பூச்சியின் வீங்கிய வயிறின் மீது நடுவில் கத்தியினை வைத்து நேராய் ஒரே கிழி. எவ்வித அலறலுமில்லாமல் அவனின் காதல் நீராக வெளிப்பட்டு வலியோடு வழிந்தது. அறையில் வினோதமான ஒரு வாடை எழுந்து வண்ணங்களுடன் அவன் உயிரெங்கும் படிய,  'ச்சீ' யென்று உதறினான். செல்போன் அலைபாய்ந்து திசை தடுமாறி ஒளியை மேலே அனுப்ப அதிர்ச்சியுடன் சிலந்தி அவசர அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறத் துவங்கியிருந்தது.
அதன்பின் அவளை ஒரு காபி ஷாப்பில் சந்திக்க நேர்ந்தது. தோழிகளுடன் இருந்தாள்.  அவன் அவளைப் பார்த்துக்கொண்டே சிரித்தபடி கடந்தான். அவளை போனிலும் சாட்டிலும் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் நிறைய வேலையிருப்பதாய்க் கூறி அவனை விலக்கினாள். அவனுக்குப் புரியவில்லை. மார்ச் 13க்குப்பிறகு இருவருக்குமே இடைவெளி விழுந்தது. அவன் அதிகாலை நிறைய கேள்விகளுடன் விடிந்தது. மதிய சூரியன் தெளிவின்றி குழப்பமாய் நகர்ந்தது. அமைதி என்பது மெளனமாயிருத்தல் அல்ல என்று நிலா அவனிடம் தினம் ஒரு கவிதை சொல்லி அவனைச் சீண்டியது. சிலுவைப் பயணத்தின் போது இம்மானுவேலின் கண்களில் இருந்த இந்த உலகினைப் பற்றிய அலட்சியத்தினை எப்போது அவர்கள் கருணையாய் மாற்றினார்கள் என்று தன் அறை புத்தனிடம் கேட்டபோது எந்த பதிலும் சொல்லாமல் புன்னகைத்த புத்தனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

மெரினாவின் இரைச்சலில் ஞாயிற்றுக்கிழமை இருந்தது. அவனும் அவளும் அமர்ந்திருந்த புல்வெளியில் நிசப்த அலை மோதிக்கொண்டிருக்க, அவள் ஒருமுறை தன் வாட்சினைப் பார்த்துக்கொண்டாள். பார்வையை விலக்காமலே 'ரோஜா அழகுதான். ஆனாலும் ரோஜாவைப் பார்ப்பது இப்போதெல்லாம் சலிப்பாயிருக்கிறது. ரோஜா என்றில்லை...பூக்களே சமயங்களில் எரிச்சலைத் தருகிறது. ஆனால் உன் வழிச் சாலையெங்கும் பூமரங்களே நட்டிருக்கிறாய். கிளைகளற்ற இலைகளற்ற...ஏன் மரத்தின் அடித்தண்டுகூட இல்லாமல் வெறும் பூ மட்டுமே இருக்கிற மரம். நிழலுக்கு ஒதுங்க மட்டுமல்ல, என் நிழல் ஒதுங்கக்கூட வழியற்ற ஒரு பூ மரம். அதை மரமென்று சொல்வது ஓர் அடையாளத்துக்குத்தான். வேறு வார்த்தை இல்லாமல்தான். உன் பாதையில் உன்னோடு வருகிற புத்தன், யேசு, காந்தி எல்லோருமே எனக்கு மிக அன்னியமாகத்தான் தெரிகிறார்கள். இப்போது நம் சாலை  திசைவழிகாட்டியின் கீழ் நிற்கிறது. வண்ணத்துப்பூச்சிகளோடு நீ போகும் பாதை எனக்கு கருப்பாயிருக்கிறது. நான் என் திசைக்கு திரும்புகிறேன்'. அவன் அவளின் இரு மார்புகளிடையே முகம் புதைத்து உச்ச இருட்டில் தன்னைத் தொலைத்திருந்தபோது அவளிடமிருந்து தொடர்ச்சியாக முனகல் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு ரகசிய முனகலுக்கு முன்னும் பின்னும் அவன் பெயர்.

   மெரினாவில் நீண்டகாலமாய் வசிக்கும் ஒரு வண்ணத்துப்பூச்சி பறந்துவந்து அவனருகில் அமர்ந்தது. 'எதை நம்பி நீ உன்னை பரிசளித்தாய்'  வண்ணத்துப்பூச்சியிடமிருந்து பார்வையை விலக்காமல் இருந்தான். 'நீ ஏற்றுக்கொள்வாய் என்று நம்பித்தான்' என்றவளின் பார்வை கடல் நிறத்தினில் உறைந்திருந்தது. 'உனக்கு அப்போது அது தேவையாய் இருந்திருக்கிறது'. அவன் விரல் நுனியில் பூச்சி அமர்ந்தது. 'நீயும் வேண்டாமென்று மறுக்கவில்லையே... சந்தர்ப்பத்துக்குக் காத்திருப்பவர்கள் வாய்ப்பினை எப்போதும் நழுவ விடுவதில்லை. இல்லையா?' சட்டென்று அந்த வண்ணத்துப்பூச்சி கடல் நோக்கிப் பறந்தது. 'மரங்களும் பூக்களும் கடலில் கிடையாது என்றே தெரியாத ஒரு குருட்டு வண்ணத்துப்பூச்சியினை நம்பி நான் பறக்கத் தயாரில்லை. என் சிறகின் நிறம் வேறு' என்று எழுந்தவளிடம் 'ஒரு வண்ணத்துப்பூச்சியினைக் கொல்வதற்கு நீ கத்தி உபயோகித்திருக்க வேண்டிய அவசியமில்லை' என்றான் மெளனமாய். அவள் அவனைக் கடைசியாய் பார்த்துவிட்டு நகர்ந்தாள். கடற்கரையோரம் அழகுக்காக நடப்பட்டிருந்த செயற்கை மரம் ஒன்றின் பிளாஸ்டிக் பூவில் அமர்ந்திருந்தது அந்த வண்ணத்துப்பூச்சி. அதற்கு இப்போது பசியில்லை. அதன் கால்கள் வருடிக்கொண்டிருந்த பிளாஸ்டிக்  உடல் கொஞ்சம் கொஞ்சமாக பூ உடலாய் மாறிக்கொண்டிருந்தது.
அவன் பெயர் ரகுநந்தன். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி. சென்னையில் ஸ்பென்சர் ப்ளாசா எஸ்கலேட்டர் படிகளில் நீங்கள் ஏறிக்கொண்டிருக்கும்போது கீழிறங்கும் அவனை என்றாவது சந்திக்க நேரிடலாம். அவள் பெயர் புவனா. தனியார் நிறுவனமொன்றில் ரிஷப்சனிஸ்ட்.  அதே சென்னையின் சத்யம் காம்ப்ளெக்சின் ஏதாவது ஒரு சினிமா இடை வேளையில் கூட்ட நெருக்கடியில் கையில் பாப்கார்ன் பக்கெட் வைத்துக் கொறித்துக் கொண்டிருக்கும் அவளையும் நீங்கள் சந்திக்க வாய்ப்புண்டு.

   

                 
    


      


காமத்தின் நிறம் வெள்ளை-


சிறுகதை-

காமத்தின் நிறம் வெள்ளை-




தயாளனின் அருகில்தான் அந்த பாம்பு படுத்திருந்தது. மௌனமாய் சட்டை உரித்துக்கொண்டிருந்தது. காற்றில் நீலம் கலந்திருக்க  மூச்சில் சாம்பல் வாசனை உணர்ந்தான் தயாளன். புரண்டு படுக்க எத்தனித்து பாம்பின் அருகாமை உணர்ந்து மல்லாந்து விட்டம் பார்த்தவனின் கண்களில் பச்சை உளுந்தின் நெடியும் சூடான சுக்கில வாசனையும் கலந்து இறங்கின. பாம்பின் அசைவில் மெலிதாய் வேகம் கூடியது. தயாளன் பதட்டமானான். தன் உடம்பில் நீர் ஊறுவதைத் தெளிந்து கை நீட்டி பாம்பினைத் தொட, பாம்பு நகர்ந்தது. சட்டை கிடந்தது தனியே. தயாளன் விரலில் பிசுபிசுப்பு நெளிந்தது. கறுப்பும் நீலமும் கலந்த அறை வெளிச்சம்  கண்களுக்குள் இறங்க பவானியின் கழுத்து நரம்பு  வியர்வையில் துடித்ததை தயாளன் உணர்ந்தான். கட்டிலை விட்டு இறங்கினான். உடல் மிக கனத்திருந்தது. சிறுநீர் கழிக்கும்போது தன் நிழலையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவன் கண்களில்  உரித்துப்போட்ட சட்டையெங்கும் விரவியிருந்த வெள்ளைப் புள்ளிகள் மிகப் பெரிதாகத் துவங்கின.


முதலில் அவன் புருவத்துக்கு மேலேதான்  தோன்றியது, சிறு வெள்ளைப் புள்ளி. பவானியின் கண்களிலும் பெரிதாய் கேள்வி எதுவும் எழவில்லை. அச்சிறு புள்ளி அம்பது பைசா அளவில் மாறியபோது தயாளனின் கால்களிலும் அங்கங்கே சின்னச்சின்னதாய் வெள்ளை வட்டங்கள். பவானியின் மூச்சில் சர்ப்பம் சீறியது அப்போதுதான். மருத்துவம் அதற்கான நியாயம் சொன்னது. பவானியின் கண்களில் ஒளிந்த பிளவுபட்ட நாக்கு எந்த சமாதானத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. விஷம் கக்கத் தொடங்கிற்று.

அன்று ஒன்பதாவது வருட திருமண  நாள். காலையில் குளித்து முடித்து கோயிலுக்குச் சென்றுவிட்டு மலரை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தவர்களிடம் மெளனம் முகாமிட்டிருந்தது.   
ஓட்டு வீட்டில் வெளிச்சம் வர பதிக்கப்பட்டிருந்த கண்ணாடி பட்டை வழியே  ஒழுங்கற்ற சூரியன் பவானியி்ன் வியர்வை இடுப்பில்  நழுவிக் கொண்டிருந்தான். தயாளன் எச்சில் விழுங்கினான். கண்களில் காதல் குறும்புடன் மெல்லிய புன்னகை உதட்டில் தேக்கி பின்னாலிருந்து பவானியை அள்ளி அணைத்தான். 'ம்ப்ப்வ்வ்வ்வ்...' பவானியிடமிருந்து வினோதமான சத்தம் எழுந்தது. முழங்கையால் தயாளனின் வயிற்றில் மோதித் திரும்பினாள். தயாளனுக்கு வலித்தது. புருவம் சுருக்கியவனிடம் ' என்னத் தொடாதீங்க' என்றாள் தலை குனிந்தபடி. தயாளனுக்குப் புரியவில்லை. காலையில் கோயிலுக்குச் செல்லும்போது நன்றாகத்தானே இருந்தாள். அதற்குள்...' ஏன் பவா... என்னாச்சு? ஒடம்பு சரியில்லையா...' என்றபடி அவள் தோளைத் தொட, பவானியின் நரம்புகளில் நடுக்கம் நகர்ந்ததை உணர்ந்து கையை விலக்கினான். 'ஆமா...தலைய வலிக்குது. தொடதீங்க...'
தொடாதீங்க மட்டுமே தயாளன் காதில் விழுந்தது. விலகினான்.

இரவு. கட்டிலில் படுத்திருந்தான் தயாளன். இன்னும் பவானி சமயலறையை விட்டு வரவில்லை. மதியம் தயாளன் கேட்டபோதும் சரிவர பதில் சொல்லாத பவானியிடம் மேலும் ஏதும் கேட்கத் தோன்றவில்லை.   இறுக்கத்திலிருந்து மீளாத பவானியின் முகம் தயாளன் மனதில் பெரிய வட்டமாயிருந்தது. மிகத் தாமதமாய் படுக்கைக்கு  வந்தவள் இரவு  விளக்கை எரியவிட்டு படுத்தாள். ஒருக்களித்து  படுத்த தயாளனின் கை நீண்டு பவானியின்  தலையினைத் தொட்டு வருடியது. அசைவினை உணர்ந்தான். ' தலைவலி பரவாயில்லையா?' என்றான். எவ்வித பதிலும் வராமல் போகவே, எழுந்து லைட்டைப் போட்டான். லேசான கோபம் மூச்சிரைப்பாய் மாறி இருந்தது. பவானியைப் பார்த்த வினாடி அதிர்ந்தான். விட்டம் பார்த்து மல்லாந்திருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. 'என்னாச்சும்மா ' என்று பதறித் தொட உடல் குறுக்கி நகர்ந்தவள் சுவற்றில் மோதினாள். வெடித்துப் புறப்பட்டது அழுகை. திக்கித் திக்கிப் பேசியவளின்  சொற்கள்  தயாளனின் காதுக்குள் விஷக் கொடுக்கினைப் பதித்து விலகின. அன்று அவளை விட்டு விலகியவன்தான்.

வைத்திய முயற்சிகள் பலனளிக்கவில்லை. தயாளன் தளர்ந்தான். தன் உடம்பெங்கும் தழுவிய  வெள்ளை சாத்தானின் கரங்களை விலக்க வழியின்றி கருப்பு மறைந்த வெள்ளை இரவை தன் உலகெங்கும் பூசிக்கொண்டு நடந்தான். காமம் நீலப் போர்வையாய்  அவனை மூடியிருந்தது எப்போதும். எத்தனை விளக்கம் அளித்தும் கேட்கமறுத்த படித்த பவானியிடம் ஒரு நிலைக்கு மேல் பேசுவதை நிறுத்தினான். வீடு என்ற பிம்பம் அவன் மூளையில் பதிய மறுத்தது.

தயாளனின் நிறம் வெள்ளை என்று சொல்ல முடியாது. மாநிறம்தான். 40  வயதில் அவன் புதிய நிறத்திற்குள் புகுந்தான். உதட்டின் மேலேயும் காது மடல்களிலும் வெள்ளை தொடங்கியிருந்தது. கண்ணாடியைக் கழட்டி மேஜையில் வைத்த மருத்துவர் சொன்னது பவானியின் மனதில் சந்தேக வட்டத்தி்னைப் பெரிதாக்கியது. தயாளன் பெரும் அவஸ்தை உணர்ந்தான். ' டோன்ட் ஒர்ரி மிஸ்டர் தயாளன். முதல்ல இது நோயே இல்ல. வெண்புள்ளிங்கிறது நிறமிக் குறைபாடுதான். இட்ஸ் எ விட்டமின் ப்ராப்ளம். தொடர் ட்ரீட்மென்ட்ல சீக்கிரம் இது மறைஞ்சிடும். இது தொட்டா ஒட்டிக்குற நோய் இல்ல. பயப்புடுற அளவுக்கு ஒண்ணுமில்ல...நீங்க எப்போதும்போல நார்மலா இருக்கலாம்'.

தயாளன் கண்ணாடி முன் நிற்கும்போது இனி வரும் நாட்கள் சாதாரணமாக நகரப் போவதில்லை என்று தெரிந்துகொண்டான். பவானி அவனைவிட்டு முற்றிலும் விலகினாள். தயாளன் தன்னைத் தொட வரும்போதெல்லாம் உடல் சுருங்கி அழத் தொடங்கினாள். தயாளனின் காமம் அவனை எரிக்கத் தொடங்கியது. தயாளன் முரட்டு சுபாவம் கொண்டவனல்ல. அதே சமயம் தன் காமத்தின் வடிகாலாகத் தன் மனைவியிடமே கெஞ்சும் அளவுக்கு போகக் கூடியவனுமல்ல. இருந்தும் 40 வயது ஆணுக்கு அந்த வயதில் கிடைக்கவேண்டிய பெண் அணைப்பு இல்லாமல் தனியே கலங்கினான்.

தயாளனின் நீல இரவுகள் வெகு நீளமாக ஆயின. உடல் வட்டங்கள் பெரிதாக அதனுள்ளே உயிர் சுருங்கினான். விரல்களுக்கு எட்டும் தூரத்தில் பவானியின் தலைமுடி மின்விசிறிக் காற்றில் பறந்தபடியிருக்க தயாளனின் விரல்களிலும் வெள்ளை பரவியது. இரவினைக் காவல் காக்கத் தொடங்கினான். பாருக்கு சென்று குடிக்க ஆரம்பித்தான். இரவு வீடு திரும்புதல் தாமதமானது. குழந்தையின் மீதும் பாசம் குறைந்தது. சினிமாவுக்கு சென்று தியேட்டரில் படுத்துத் தூங்கிவிட்டு வீடு திரும்பினான். சினிமாப் பெண்கள் அவனுக்குள் தீ மூட்டினார்கள். உடல் நெளித்தான். கதாநாயகனாக மாறி திரைப்பெண்களுடன்  காமம் சுகித்தான். கதாநாயகன் விலைமாதினைத் தேடிச் சென்றான். அந்த விபசார விடுதி வாசலில் நிறைய பெண்கள் அமர்ந்திருந்தனர். அத்தனை பெரிய கண்களில் அழைப்பு இருந்தது. செயற்கை ஈரத்தில் பளபளத்த உதடுகளில் தயாளனின் பெயர் எழுதி அழைத்தது. போதையின் ஆக்ரமிப்பில் தயாளனின் கால்கள் மயங்கின. வெள்ளைத் தோலுக்கு வசீகரித்தான் தயாளன். அவள் கொலுசுகள் சிதற இரு கைகளாலும் பாவாடையை உயர்த்திப் பிடித்தபடி வராண்டாவில் ஓடினாள். அவள் பின்னே பாம்பாய் விரைந்தான் தயாளன். அவன் முதுகில் இருகைகளையும் வைத்துத் தள்ளிக்கொண்டு பறந்தது காமம். கண்கள் செருக அவளை எட்டிப்பிடித்து திருப்பி மார்பில் முகம் புதைத்தான். பால் வாசனை தயாளனின் நாசி கடந்தது. 'அம்மா' ஆழ மூச்செறிந்தான். இறுக்கி அணைத்திருந்த தயாளனின் விரல்கள் அவளின் முதுகில் பரவின. நகங்களில் படர்ந்தது ஒரு பெரிய மச்சம்.  திடுக்கிட்டு நிமிர்ந்தான் தயாளன். புருவத்தில் மை அப்பிக்கொண்டு மூக்குத்தி, காதில் வளையத்துடன் அவன் அம்மா. '' நாந்தான்டா தயா...ஒன் அம்மா...மச்சத்தை வெச்சிக் கண்டுபுடிச்சிட்டியா... வா, வந்து கட்டிப்புடிச்சிக்கோ'' அவள் இருகைகளையும்  விரித்து அவனை நெருங்க தயாளன் அலறினான். ''அம்மா''.

யாரோ அவனை பின்னிருந்து இழுத்தார்கள். ' தூத்தேறி...ஒடம்புல திமிர் ஏறிடுச்சின்னா பெத்தவளுக்கும் மத்தவளுக்கும் வித்தியாசம் தெரியாது...இதெல்லாம் ஒரு ஜென்மம்...செத்து ஒழிஞ்சா என்ன?' தயாளன் திரும்பி உள்நோக்கி ஓடினான். ஒரு வளைவில் பவானியைச்சந்தித்தான்.'' எப்படியும் நீங்க இங்க வருவீங்கன்னு தெரியும் ...அதான் ஒங்களுக்கு முன்னாடி இங்க வந்துட்டேன்... ம். ஒங்க இஷ்டம் போல...''  இரு கைகளையும் விரித்தாள். தயாளன் பவானியின் காலில் விழுந்தான். உடலெல்லாம் மண் ஒட்டியிருந்தது. பார்க்கில் படுத்திருந்த தயாளனை வாட்ச்மேன் தட்டி எழுப்பினான்.

மறுநாள் தயாளன் புனிதாவைச் சந்தித்தான். குணாவின் புது மனைவி. தயாளனை வீதியில் பார்த்துவிட்டு வீட்டுக்கு அழைத்தான் குணா. ' கல்யாணத்துக்குக் கூட வரலியேடா மாப்ளே'. புனிதாவின் கன்னத்துக் குழி, வெட்டிய தர்பூசணி உதடுகள் தயாளனின் நரம்புகளுக்கு வெடிவைத்தன. குணாவின் வீட்டுக்குச் சென்றான். புனிதாவின் மஞ்சள் உடம்பு, கழுத்தில் பதிந்த சிவந்த அடையாளம், புட்டம் நெருக்கி அசைத்த நடை, நீளக் கூந்தல். தயாளனின் மிருகம் கூர் நகங்களால் அவனைப் பிராண்டத் தொடங்கியது. வீடு முழுவதும் வளையவந்த புனிதாவையே விரட்டிக்கொண்டிருந்தன தயாளனின் கண்கள். புனிதா கிச்சனில் இருந்தாள். சோபாவில் அமர்ந்திருந்த தயாளன் குணாவிடம் பாத்ரூம் எங்கே என்று கேட்டு எழுந்து கிச்சன் கடந்து செல்லும்போது நின்றான். புனிதா அந்தப் பக்கம் திரும்பி இருந்தாள். முந்தானையை இடுப்பில் செருகியிருந்தாள். சிகப்பான கனிந்த சதையில் ஒரு வளைவு பள்ளமாய் இருந்தது. லேசான வியர்வை. தயாளன் மூச்சில் சூடு உயர்ந்தது. அடிவயிற்றில் லேசான வலி. கால்கள் நடுங்க புனிதாவை நெருங்கினான்.  தயாளனின் தோள் தொட்டான் குணா. ' என்னாச்சுடா...இங்க நிக்குறே...புனிதா, காபி ரெடியா?'' புனிதா திரும்பிப் பார்த்தாள். தயாளனின் கண்கள் பதிந்திருந்த இடத்தினை நோக்கி அனிச்சையாய் அவள் கைகள் நீண்டு முந்தானையை இழுத்தது.

தயாளன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பி விரையும்போது, போன் வந்தது. எடுத்தான்.' என்னடா...வீட்டுல எதுவும் ப்ராப்ளமா?' என்றான் குணா.' இல்லியே..ஏண்டா' ' ஒன் கண்ணுல தூக்கம் தெரிஞ்சுது. நீ தூங்கி ரொம்ப நாளாச்சுன்னு நெனைக்கிறேன். மனசைக் கண்ட்ரோல்ல வெச்சுக்கோ... நீ தயாளன். ஞாபகம் இருக்குல்ல'  தயாளன் எச்சில் விழுங்கினான்.நெஞ்சில் முள்  உறுத்த, கண்ணீர் உடைந்தது. அன்று இரவு நிறைய குடித்தான். நள்ளிரவு வீட்டுக்குச் சென்று படுத்தபோது அவன் மனதில் ஒரு திட்டமிருந்தது.

மறுநாள் காலை குளித்துவிட்டு வங்கிக்குச் சென்று பவானியின் அக்கவுண்ட்டில் பணம் போட்டான். கணிசமான தொகை. கோயிலுக்குச் சென்றான். மதியம் வரை அமர்ந்திருந்தவன் எழுந்து ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டான். சாயங்காலமாய் வீட்டுக்குச் செல்ல பவானி இல்லை. பள்ளிக்கூடத்துக்கு  மலரை அழைத்துவர சென்றிருந்தாள். ஒரு காகிதத்தில் எழுதினான். ' பவானிக்கு, உனக்கும் நம் குழந்தைக்கும் எதிர்காலத்துக்குத் தேவையான பணம் செட்டில் செய்திருக்கிறேன். நான் போகிறேன்.' அவ்வளவுதான். வேறு எதுவும் இல்லை.

எங்கு என்று தீர்மானிக்கவில்லை. பஸ் விரைந்து கொண்டிருந்தது. இரவு சாப்பிடாததில் லேசான மயக்கமும் தூக்கமுமான நிலையில் இருந்தான் தயாளன். முதலில் திருவண்ணாமலை என்று தீர்மானித்திருந்தவன் பேருந்து நிலையத்துக்கு வந்ததும் நிலையான மனமின்றி அங்கே நின்று கொண்டிருந்த திருச்சி பஸ்ஸில் ஏறினான். திருச்சியில் இறங்கும்போது இரவு 9 மணி. பசி வயிற்றைக் கிள்ளியது. ஹோட்டல் நோக்கி நடந்தான். யாரோ அவன் மீது மோதிவிட்டு ஓடினார்கள். திடுக்கிடலுடன் திரும்பியவன் கண்களில் அவன் சிக்கினான். பஸ் ஸ்டாண்டிலேயே வாழும் ஒரு பைத்தியம். தயாளனின் கண்களை முதலில் அறைந்தது அவனின் நிர்வாணம்தான். பஸ் ஸ்டாண்டின் மஞ்சள் வெளிச்சம் தன் மீது படர்ந்திருப்பதைப் பற்றிய எவ்வித சலனமுமின்றி படுத்திருந்தான். கறுப்பு உருவம். அழுக்கு மயிர்கள். தளர்ந்த குறி. தயாளனின் கண்கள் கலங்கின. ஹாரன் அடித்தபடி தன் எதிரில் வந்து நின்ற மதுரைக்கு செல்லும் பஸ்ஸில் ஏறினான் தயாளன். பெரும் நிசப்தத்தினில் வீழ்ந்ததுபோல தயாளனின் மனதில் நகர்ந்த கடிகார  டிக்டிக் அவன் செவிக்குக் கேட்டது.

அது இருவர் அமரும் இருக்கை. ஜன்னலோரமாய் அமர்ந்திருந்தவனுக்கு 25  வயது இருக்கலாம். சிவப்பாய் இருந்தான். பஸ் திருப்பத்தில் வளையும் போதெல்லாம் தயாளனின் மீது சரிந்து விழுந்தான். விரைந்த பஸ்ஸுக்குள் காற்று விளையாடிக் கொண்டிருந்தது. லேசான குளிர் பரவியிருக்க தயாளனின் காது மடல்களில் சில்லிப்பை உணர்ந்தான். தூக்கமும் கனவும் அற்ற நிலையில் தயாளனின் உலகில் அந்தக் கை விழுந்தது. கண்விழித்த தயாளன் தன் மேல் விழுந்திருந்த பக்கத்து இருக்கை இளைஞனின் கையை விலக்கினான். கண்களை மூடி கைகளைக் கட்டிக்கொண்டு இன்னும் நன்றாக சாய்ந்து அமர்ந்தான். சில நொடிகளில் மறுபடியும் அந்த உராய்வு. சட்டென்று விழித்தான். அந்த இளைஞன் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பது தெரிந்தது. தன்னிச்சையாக தன் மீது சரிந்திருக்கிறான் என்பதை உணர்ந்த தயாளன் இன்னொன்றையும் அப்போதுதான் கவனித்தான். கிட்டத்தட்ட தயாளனின் கழுத்தின் மீது அந்த  இளைஞனின் முகம் சாய்வாகப் பதிந்திருந்தது. தயாளனின் உடம்பு முழுவதும் வெள்ளை பரவவில்லையென்றாலும் கழுத்துப் பகுதியில் நிறம் எப்போதோ மாறியிருந்தது. அந்த மாறிய தோலின் நிறத்தில்தான் அந்த இளைஞனின் மூச்சின் நடனம். தயாளன் அமைதி தொலைந்து இதயத்தின் நடுக்கத்தை உணர்ந்தான். இளைஞனை எழுப்பினான். நிமிர்ந்த அவன் சூழல் புரிந்து ' ஸாரி சார்' என்றபடி அந்தப் பக்கம் திரும்பி உறங்கத் தொடங்கினான். பெருமூச்சுவிட்டு சாய்ந்து கண்மூடிய தயாளனின் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவன் காதோரமாய் வந்து ' ஸாரிங்க' என்று பவானி முத்தமிடுவதை உணர்ந்து கண் திறந்தான். இப்போது அந்த இளைஞன் தயாளன் மீது முழுக்கச் சாய்ந்திருந்தான். தயாளனின் தொடை இடுக்கில் அவன் கை  விழுந்திருந்தது. சாலையில் நின்றுகொண்டிருந்த தெருவிளக்குகளின் வெளிச்சம் பஸ்ஸின் உள்ளே மோதி மோதி விலகியதில் அந்த இளைஞனைக் கவனித்தான். இப்போதுதான் மீசை அரும்பியிருந்தது. கழுத்துப்பக்கம் லேசான பூனை முடி. பவானிக்கு இருப்பதைப் போல். பவானியைப் போலவே வெள்ளை நிறம். நிகோடின் படியாத மெல்லிய உதடுகள் இளஞ்சிவப்பாய். தன்னிடம் விறைப்பினை உணர்ந்தான் தயாளன். உடல் முழுவதும் ஓர் உறுப்பாக மாறி தயாளனை வதைக்கத் தொடங்கியது. மெல்ல இளைஞனின் தோளில் கைபோட்டு தன்பக்கம் இழுத்து அணைத்துக்கொண்டான். எந்த நிறத்தினை அறுவறுப்பென்று கருதி பவானி விட்டு விலகிப் போனாளோ அந்த வெள்ளையின் மீதுதான் இன்னொரு உடல் மூச்சு. தயாளன் இன்னும் நெருக்கினான். முகம் திருப்பி உதடு குவித்து இளைஞனின் நெற்றியில் முத்தம் பதித்தான். கண்களை மூடினான். உலகின் அத்தனை சத்தமும் நின்றுபோய் தயாளனும் அந்த இளைஞனும் மட்டும் இருந்த கணத்தில் அவன் விழித்தான். சட்டென்று தன்னை விடுவித்தான். தயாளன் அதிரத் தொடங்கினான். காமம் தன் வீரிய ரத்தம் குறைத்து தளர்ந்திருந்தது. இதயம் தாறுமாறாக அடிக்கத் தொடங்க தயாளனின் கண்கள் ஏறும் வழி என்று எழுதப்பட்டிருந்த படிக்கட்டுகளைப் பார்த்தது. இறங்கிவிடத் தீர்மானித்தான். சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து வேகமாய் விரைந்துகொண்டிருந்த பஸ்ஸிலிருந்து வெளியே பாய்ந்தான். சாலையில் மோதிய உடல் பஸ் சக்கரத்தில் சிக்கி ரத்தம் சிதறியது. துளித் துளியாய் சிவப்பு வட்டங்கள் தயாளனின் வெள்ளை வட்டங்களை  மூடத் தொடங்கின.

















பைத்திய ருசி

சிறுகதை : பைத்திய ருசி


பைத்தியங்களைக் கழுவிக் கழுவி பைத்தியமான நதி. அடிப்பருத்து அகல இலைகளைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் அப்பெரிய மரத்தின் நீள வேர்கள் குடித்துக்கொண்டிருந்த நதி எப்போதும்போல் நகர்ந்து கொண்டிருந்தது. புனல் பெருக்கோடும் ஆர்ப்பாட்ட வேகமும் இல்லை, நீரின்றி நிலம் காட்டி மணல் நரம்பை வெயிலில் விரிக்கும் நிசப்தமும் இல்லை. நீர் நீராகவே கொள்ளும் நித்திய நதி. நீரின் நிறமும் குணமும் மாற்ற முயற்சித்துத் தோற்ற வெயில் பற்றி அறிந்தவர்கள் அவர்கள். உதிர்ந்த சருகுகளின் மீது மாலை வெயில் புரண்டு புரண்டு மிதந்து கொண்டிருந்த பொழுதினையும் அறிந்திருந்தார்கள். அந்நதியில்  பனி இறங்கும் அதிகாலையில்  அலற அலற குளித்திருக்கிறார்கள்.  நதியும் அப்பொழுதில் மெல்லிய குளிர் அலறலுடன் சுழிக்கும்.  இப்போது பனி இல்லை. வெயில் இல்லை. சங்கிலியில் கட்டப்பட்டிருந்தவர்கள், கம்பிகளுக்குப் பின்னே உலகம் அமைத்தவர்கள், சீருடை வாழ்க்கையில் சிக்கி சிதைந்த மனங்களின் ஓலங்கள் அந்த வளாகமெங்கும் அலைந்துகொண்டிருந்தன. அந்த அறையில் ஒளிந்திருந்த இருளில் கால் விரித்து படுத்திருந்த ஒருவன் மனதில் சத்தம்.

''ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...''  நதியில் அமர நினைத்து இறங்கிய நாரை ஒன்று நீர் தொட்டு கால் சுருக்கி இறக்கை சிலிர்க்க வானேகியது. 'டிய்யூக்'

                                                               ***********************
இந்த உலகில் பைத்தியமாவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. உங்களுக்குப் பசிக்கவேண்டும். பசியென்றால் சாப்பிட்டவுடன் தீர்ந்துவிடும் பசி அல்ல. ஜென்மத்தில் தீராத பசி. நீங்கள் உங்கள் தலையில்  மடேர் மடேரென அடித்துக்கொள்ளவேண்டும். அய்யோ அம்மா பசிக்குதே என்ற அலறல்கள் எல்லாம் உள்ளுக்குள்ளே உறைந்து மடிந்திருக்கவேண்டும். ஒரு வார்த்தை வெளியில் வரக்கூடாது. வாய் பிளந்து நீங்கள் பசித்திணறலில் எச்சில் ஒழுகக் கிடக்கவேண்டும். கண்களை முழுவதுமாகத் திறக்க முடியாமல், மூடினால் மூளையெங்கும் பசி தன் ராட்சத ஆக்டோபஸ் கால்களால் மிதித்துக்கொண்டு பறக்கவேண்டும். சட்டென்று தெருவில் இறங்கும் பசியுடன் நீங்களும் ஒட வேண்டும். கால்களில் காற்றால் ஆன சங்கிலி கட்டியிருத்தல் நலம். மெலிதாய் அல்லது வேகமாய் மூச்சுத் திணறும். சட்டை பட்டன்களை அறுத்து எறிய தயங்கக்கூடாது. இதில் சிலருக்கு தயக்கம் வரும். உடலெங்கும் புண்களுடன் தன் கடைசி நிழலில் உயிர் சுருக்கும் ஒரு நாய் உங்களைப் பார்த்துக் குரைக்கும். அதனைக் கடக்க வேண்டும். நிழல் விலக்கி வெயில் அமர்ந்து இந்த உலகின்  இறுதியை ஒரு பார்வை பார்ப்பீர்கள். உத்தமம்.
சட்டை பட்டன்களைப் பிய்த்துவிட்டு கோவிந்தராஜ் இந்த உலகில் இறங்கியபோது குப்பைத் தொட்டியின் அடி ஆழத்தில் கிடக்கும் எச்சில் இலையாய் இந்த வாழ்வு அவனை வரவேற்றது.

                                              *************************************

இமை திறந்து உறங்கப் பழகவேண்டும். எல்லா நாட்களும் உங்கள் தூக்கத்தின் நிறம் கறுப்பாக இருக்காது.  திடீரென்று ஒருநாள் உங்களின் உறக்கம் காணாமல் போயிருக்கும். நீங்கள் தேடிக் கண்டடையும்போதோ  உங்களிடம் இருக்கும் 3 ரூபாய்க்கு தமிழ் பேப்பர் தரமாட்டார்கள். நன்றாக விரித்துப் படுத்துறங்க இங்கிலீஷ் பேப்பர் நிறைய தருவார்கள். பஸ் நிலையம் முழுவதும் இங்கிலீஷ் பேப்பர்கள் விரிந்திருக்கும். தலைக்குக் கீழ் வலதுகையை முட்டுக்கொடுத்து ஒருக்களித்துப் படுக்கும் முன் கவனியுங்கள். ஏன் இப்படி என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.  காட்டுப்பாதையில் நீண்டிருக்கும் ஒற்றை இருப்புப்பாதையில் அகாலமான பொழுதில் ஒரு சரக்கு ரயில் கடந்து போனபின் பரவும் வெறுமை நீங்களாய் இருப்பீர்கள். கொசு கடிக்கும். அதீதமான வெளிச்சம் உங்கள் கண்களில் கால்களில் விழுந்திருக்கும். உடம்பும் மனசும் தளர்ந்து வெளி விரிந்த கனவில் நீங்கள் நுழையும்போது  உங்கள் புட்டத்தில் சுள்ளென்று ஓர் அடிவிழும். முரட்டு லத்திக்கம்பின் தீண்டல். மின்சாரப் பாய்ச்சலில் விருட்டென்று உயிர் உங்கள் உச்சிக்குச் செல்லும். பிறகு உறங்கமுடியாது. எப்போதும் உங்கள் உறக்கத்தில் ஒரு லத்தி மிதந்துகொண்டேயிருக்கும். வழி தவறி மோதும் கனவுகளில் மூளை தடதடக்கும். கனவு மனம்.
தன் நினைவெங்கும் பகல்களைப் பதித்துக்கொண்ட கணத்தில்தான் சுப்பிரமணி சுடுகாட்டின் மதியங்களில் தன்னை ஒப்புவிக்கத் தொடங்கினான்.

                                                             ************************

நடு ராத்திரியில் போன் செய்து' நான் என்ன தப்பு பண்ணினேன்...ஏன் இப்பிடி துரோகம் செஞ்சே' என்று கதற வேண்டும். துடிக்க வேண்டும். ' ஒன்னை நம்புனதுக்கு எனக்கு கெடச்ச பரிசு இதுதானா' இல்லையென்றால் இப்படி ஒரு கடிதம் நீங்கள் எழுத நேரிடுவது இன்னும் சிறப்பானது.

உனக்கு

முதலும் கடைசியுமாய் நான் எழுதுவது. எனக்கு நீண்ட நாட்களாக ஓர் ஆசை உண்டு.  'எல்லோர்க்கும் அன்புடன்' என்று தலைப்பிட்டு வண்ணதாசன் எல்லோர்க்கும் எழுதிய கடிதங்கள் போலவே எல்லோர்க்கும் எழுத ஆசை. அதுபோல உனக்கும். ஆனால், அது இப்படி எல்லோரும் தூங்கியபிறகு பாத்ரூம் லைட்டைப் போட்டுக்கொண்டு அழுதுகொண்டே எழுத நேரிடும் என்று கனவிலும் நினைக்கவில்லை.  நிறைய அடித்தல் திருத்தல்கள், சொன்னதையே திருப்பிச் சொல்வது போன்ற அபத்தங்கள் இதில் இடம் பெறலாம். அதையும் மீறி பதட்டத்துடன் கூடிய உண்மை உண்டு.  இப்போதெல்லாம் மெயில்தான். கையால் எழுதி நீண்ட நாட்களாகிவிட்டன. கையெழுத்தே மாறிவிட்டது. தலையெழுத்து கொஞ்சம்கூட மாறவில்லை. இந்தச் சிறிய பாத்ரூமில் வாய்விட்டு என்னால் அழ முடியவில்லை. சத்தம் வெளியே கேட்குமோ என்ற பயம். கண்களைத் துடைத்துக்கொண்டு அவ்வப்போது என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு எழுதும் இந்தக் கடிதத்தின் வலி உன் மனதைக் கொஞ்சமேனும் அசைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
 
தொடர்ந்து எழுதுவேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. எழுதாவிட்டால் பைத்தியம் பிடித்துவிடுமோ என்று பயமாய் இருக்கிறது. விடியும்வரை அழுதுகொண்டிருந்தால் இந்த நெஞ்சுக் குமைச்சல் தீர்ந்துவிடும் என்றால் எத்தனை நன்றாயிருக்கும். உனக்கே தெரியும். நீ இல்லாதபோதுதான் உன்னிடம் அதிகம் பேசியிருக்கிறேன் நான். இப்போதும் ஏதேதோ பேசுவதெல்லாம் நீ இல்லாதபோது.  நீ நேசிப்பவர்கள் பட்டியலில் மட்டுமில்லை. உலகில் நீ வெறுக்கும் நபர்களின் பட்டியலில் முதல் நபராகவும் நான் இருக்கிறேன் இல்லையா... இன்னும் கொஞ்சம் அழவேண்டும். தற்கொலைகளை எல்லாம் தாண்டி வந்தாயிற்று. இந்த உலகில் தனியாய் வந்தேன். தனியாய் போவேன். தனிமை கொள்ளாதவன் எதற்கும் தகுதியற்றவன். கசப்பு தின்று வளர்ந்தவன் நான். துரோகம் சம்பாதிப்பதன் வலி புதிதில்லை. எதை நான் தருகிறேனோ அதையே பெறுகிறேன். உலக நியதியை மாற்ற நான் யார். எதுவுமே ஞாபகமற்று அறுந்துவிழும் நாடகத்திரை விலக்கி உன் கத்தியினை நெஞ்சில் வாங்குகிறேன்.

குட்பை
நரம்பறுந்து ரத்தம் பெருக்கி கடைசித்துளி உயிரை கண்களில் சேமித்த வினாடியில் குமார் நண்பர்களால் காப்பாற்றப்பட்டான். அவன் தனிமைச் சுவரில் எழுதப்பட்ட கடிதத்தை இப்போது எல்லோரும் வாசித்துவிட்டனர்.
                                                             ************************
அன்பின் அடர்த்தியை அறிந்திருக்க வேண்டும். அடைந்திருக்கக் கூடாது. ஆதரவு மடி தேடி விரையும் இறகென இருத்தல் சாலச் சிறந்தது. காற்று கடத்தும் இறகு புத்தனின் மடியில் வீழ்வது வரமன்று. மறுபடியும் பறவையாகும் விபரீதம் நிகழலாம். இறகின் வலி அறிந்தவர்கள் இவ்வுலகில் இல்லையெனில் சருகாகிவிடுதல் சுகம். எல்லா பைத்தியக்கார விடுதிகளின் நிலவறைக்குள்ளும் ஏகப்பட்ட இறகுகளின் சடலங்கள்.
தன் கதையில் ஒரு பத்தியாய் இதனை எழுதிவிட்டு ஜீவானந்தம் தற்கொலைக்கு முயன்று பின் காப்பாற்றப்பட்டு விடுதியில் அடைக்கப்பட்டுப் பிணமானான்.

                                                               ********************************

ஒரு பிரிவு நிகழும். அசாதாரணமாய் இறங்கும் ஒரு சிலுவை. தனியறையில் தள்ளப்படுவீர்கள். அடர் மரத்தின் கீழ் நிர்மாணிக்கும் தவத்தின் பரிசென, கிடைக்கும் ஓர் இலையில் எழுதி முடிக்கும் வாழ்வு. யாரோ வீசியெறிந்த கூழாங்கற்களால் நிரம்பி நிரம்பி பாடல் வழிந்த நதியில் மிதக்கும் இரு பிணங்கள். உங்களின் இறுதி விக்கல் முடிந்த இடத்தில் ஊர்ந்த நாகத்தின் தொண்டைக்குழியில் காதல் என்று எழுதுவீர்கள். நிலம், மழை, நதி பாடல், வண்ணத்துப்பூச்சி, கனவு, கடல் கடந்து கண்ணீரில் விழும் முத்தம். நீள இரவினை வேண்டி கையேந்துவீர்கள். பரிசீலனையில் இருப்பதாய்ச் சொல்லி பின் பகிரப்படும் உள்ளங்கையில் எழுதப்படும் சில நனவிலிச் சொற்கள். ஒட்டுமொத்த அபகரிப்புக்குப் பின்னாலும் கண்களின் மஞ்சளில் தேங்கும் இறந்த கால முத்தத்தினை  சுமந்து அலைவீர்கள் உலகமெங்கும்.
அத்தனை கடிதங்களையும் புகைப்படங்களையும் எரித்து அதன் சாம்பல் கரைத்துக் குடித்தபின் ஜாகிர் உசேன் அமைதியாகி,  அதன்பின் தன்னைப் பைத்தியமென அறிவித்துவிட்டு தனியனானான்.

                                                                  **************************************

சுயக்கொலைகள் நாம் நிகழ்த்துவதன்று. நம் சுயத்தினைக் கொலை செய்யும் இச்சமூகம். தற்கொலை முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். முயற்சி என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். தோல்வியில் முடியும் பெரும்பாலான தற்கொலைகள் உன்மத்த உலகில் சஞ்சரிக்கவைக்கும். எண்ணிப்போட்டால் சாகமுடியாது. அள்ளிப்போட வேண்டும். உள்ளங்கைக்குள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மாத்திரைகள் பார்க்கையிலே இதயத்தின் ஒரு ஓரம் மளுக்கென்று உடைய வேண்டும். கண்ணீர் பெருகும். வாயில் நீர் நிரப்பி
சட்டென்று மாத்திரைகள் கொட்டி விழுங்கும் கணமே நீங்கள் வெற்றியைத் தொடுகிறீர்கள் என்று அர்த்தம். உடம்பு முழுவதும் இருதயம் வளரும். இந்த உலகின் கடைசிவரை ஓடிவிட்டவனின் மூச்சு உங்களைச் சுற்றிப்பரவும். நீங்கள் இரைக்கத் தொடங்குவீர்கள். ஐந்து நிமிடத்துக்குள் முகுளம் மரத்துப்போகும். இமை மூடிவிட்டால் தொலைந்தீர்கள். நீங்கள் இறந்துவிடுவீர்கள்.  மெல்ல வீதியில் இறங்குங்கள். நிமிர்ந்து வெயில் நோக்க ஒத்துழைக்காத கண்கள் நிலம் தாழ்த்துங்கள். பார்வையில் பகல் போய் இரவு வரும். இரவு மறைந்து கண் கூசும். செவிக்குள் யாரோ சிரிப்பார்கள். பின் நிசப்தம்.

ரயில்வே பிளாட்பாரத்து சிமெண்ட் பெஞ்சில் படுத்திருந்த ஒருவனைக் கடந்து நீங்கள் ரயிலேறினீர்கள். உங்களைச் சுமந்த ரயில் அவனைக் கடந்திருந்தபொழுது அவன் நினைவுகளை இந்த உலகம் கடந்திருந்தது.

                                                                  *********************************


அது ஒரு சனிக்கிழமையாயிருக்கலாம். வேலை முடிந்து சிக்கீரம் வீட்டுக்கு வந்துவிட்ட நீ சந்திக்கும் அதிர்ச்சியை முற்றிலும் உணராதவனாயிருக்கலாம். கதவு தாழ்ப்பாள் இடாமல் அந்த துரோகம் நிகழும். உன் உடமையை, உனது என்று நீ நினைத்துக்கொண்டிருக்கும் உன்னை நீ அறியாவண்ணம் பிரித்துக்கொண்டிருப்பான் இன்னொருவன்.  நீ எங்கே சறுக்கினாய் என்பதை உணர முடியாமல் உறைவாய். எல்லாம் சரியாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது என்று நீ நினைத்தது அத்தனை பெரிய தவறு. இனி உன் கையில் எதுவுமில்லை. உன் இருப்பை ஒன்றுமில்லாதவனாக்கிக்கொண்டிருக்கும் அவனோ இந்த ஊரின் பெரிய மைனர். அவன் கண்ணுக்கும் சொல்லுக்கும் முன்னால் உன் எந்த நியாயமும் எடுபடாது. அவனுக்கு அடங்கி தன்னை இசைந்து கொடுத்துக்கொண்டிருக்கும் உன் இயலாமையிடம் நீ என்ன கேட்கப் போகிறாய்? என்ன பதில் எதிர்பார்ப்பாய்? எல்லா துரோகத்தையும், வெறுப்பையும் ஏமாற்றத்தையும் மறக்கும் ஓர் இடமாக நீ  தேர்ந்தெடுத்தது உன் ஊரின் கடைக்கோடி சாராயக்கடைதானே. அதன்பின்னான உன் வாழ்வும் இருப்பும் அங்கேயேதான் கழிந்தது. என்ன செய்தாலும் மறக்கமுடியாத துரோகம் ஊரில் உலவும். நீ கொஞ்சம் கொஞ்சமாய் சிதைவாய். ஒரு நாள் அழுக்கு ஆடையில் உன்மத்த பார்வையில் இந்த கிறுக்கு உலகத்தில் உன்னை இணைத்துக்கொள்வாய். மாதவம்.

சிறிதும் ஓய்வின்றி ஒரு துரோகத்தினை உலகுக்கு அறிவித்துக்கொண்டிருக்கும் உதடுகளை சந்திக்கும் போதெல்லாம் உங்கள் செவி கேட்காமல் போகிறது.

                                                             ****************************************

காமம் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா? காமத்தின் உச்சம் எதுவென்று தெரியுமா? இதை முழுமையாய் அறியாதவன் உலகம் எத்தனை பரிதாபமானது தெரியுமா? உனக்கு அப்போது மீசையின் ஆரம்பமாயிருக்கலாம். முதன்முறை உன்னை அழைத்த காமம் நிறைய வேர்த்திருக்கலாம். உன் உடம்பெங்கும் பூ பூக்க நீ இயங்கத் தொடங்கியிருக்கலாம். இமை செருகி ஒவ்வொரு பாகமாய் நீ தொலைக்கத் தொடங்கியிருப்பாய். அப்போதுதான் அந்தக் கதவு திறந்தது. அவர்கள் நின்றிருந்தார்கள். தொடங்கியது நிர்வாணமாய் ஓர் ஓட்டம். அது ஒரு காடு. காட்டினைக் கடந்தால் போதும். ஓடு...ஓடு...ஓடு. உன்னால் அந்தக் காட்டைக் கடக்க முடியவில்லை. இன்றுவரை ஓடிக்கொண்டேயிருக்கிறாய். உலகத்து தர்மங்கள் ஒன்றுகூடி கல் எறிந்தன. பூவாய் ஜனித்த  உன் மனம் அப்போதுதான் பாறைச் சுவராய் மாறியது. அடி...அடி...அடி. இந்த உலகம் வன்மம் மிகுந்தது தெரியுமா? எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கும் கற்பனைக்கும் மீறிய ஆயுதங்களை அவர்கள் யாரிடம் எப்போது ப்ரயோகிப்பார்கள்?  இதோ...இப்படித்தான். எந்தக் கணத்தில் உன் மூளை முறிந்தது என்று உனக்குத் தெரிந்திருக்கும். அதன்பின் வலி மரத்துப்போகும்.  உடல்விட்டுப் பிரிந்திருப்பாய். உன் குரல் உனக்குக் கேட்காது. ஒருவனைப் பைத்தியப்படுத்திவிட்டு இந்த உலகம் தன் அடுத்த தேடலைத் தொடங்கியிருக்கும். ஓசையற்று, வண்ணம் மறைந்துபோன, நாசித் துவாரங்களில் சதா பாம்பு நகரும் இடுகாட்டில் நீ அழத் தொடங்கியிருப்பாய். நிச்சலனம்.
பெளர்ணமி இரவைப் பார்த்துக்கொண்டு சுயஇன்பம் செய்து தன் உடம்பெங்கும் சுக்கிலம் பரவவிடும் ஒருவனின் பகலுக்கு இந்த உலகம் பயந்தபடி தேனீர் தரும்.

                                                                 ***************************************

கொடுக்காப்புளி கொறித்துவிட்டு ஓடும் ஓர் அணிலை துடிக்கவைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அதனைக் கொல்வதற்கு முன் சிறு பிரார்த்தனை நல்லது.  நீங்கள் கைகளில் பிடித்திருக்கும் அந்த மரக்குச்சியெங்கும் முட்கள் பொருத்திக்கொள்ளுங்கள். மிகவும் கூர்மையான முட்கள். ஒரு விளாசலில் அந்த அணிலின் தோல் கிழிய வேண்டும். சாம்பல் நிற அணில் கோட்டில் நகரும்  சிகப்பு ரத்தம் உங்கள் மனத்தில் மிகப்பெரிய கலாரசனையை உண்டாக்கும். அடுத்த விளாசல் அணிலின் முகத்தின் மீது. அணிலின் நெற்றி அத்தனை மென்மையானது. அதன் உருட்டும் விழிகளில் சிதறும் உலகத்தின் அத்தனை குழந்தைமையையும் கிழிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அணிலின் சடலத்தை பெரிய வெயிலில் வீசிவிட்டு திரும்பி நடக்கும்போது உங்கள் முதுகில் காக்கை கொத்தும். முதுகிலிருந்து தொங்கும் குடலினைச் சலனிக்காது விரையும்  கண்களில் நீர் சுரத்தல் மிக மிக நல்லது. பேரமைதி.
அதன்பின் அத்தனை பேரும் உன்மத்த உலகில் புகுந்துகொள்ளலாம். அங்கே நீங்கள் மட்டும்தான். வேறு யாரும் கிடையாது. எப்போதாவது பசிக்கும். உறங்காத மூளை வரமாகும். உச்சந்தலையிலிருந்து ஒரு நெருப்பு சதா பூமிக்கும் வானுக்கும் இடையில் அலைந்தபடியிருக்கும். நீங்கள் மழையில் நனையும்போதெல்லாம் மழை தன் சாபம் நீங்கும்.நீங்கள்  கடவுளாவீர்கள், எந்தக் கடவுளும் தொட முடியாத ராஜ்ஜியத்தில் இருந்துகொண்டு.
                                                             **************************************
தீ விழுந்தது. கடவுள் தனக்குத்தானே வைத்துக்கொண்ட தீ. பிறழ்ந்த நீர் கொப்பளித்துக்கொண்டு  விரைந்தது. தொட்டால் உதிர்ந்துவிடும் சாம்பல் அணிந்த பழுத்த இரும்புச் சங்கிலியின் ப்ரபஞ்ச உறவினை  சங்கிலியில் கட்டப்பட்டிருந்தவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் கதறலில் நிலை குலைந்தான் கடவுள். அதன்பின் அவன் செவிகளுக்கு எந்த ஒலியும் சென்றடையவில்லை. தலைவிரித்து தீ நாக்கு எழுந்து நின்று காற்றை கருக்கியது. உன்மத்தம் சுமந்த நெருப்பு சுற்றித் திரிந்தது பேய்க்கால்களுடன். அவசரமாய் தூரம் கடக்க முற்பட்ட காகம் ஒன்று சிறகு எரிந்து பட்டென்று வீழ்ந்தது. பற்றிக்கொண்ட பாம்புச் சட்டையில் தீ வண்ணம் காட்டி எரிந்து நெளிந்தது. ரோமம் பொசுக்கிய தீ தோல் உருக்கி கபாலம் பரவ பிறழ்ந்த மூளை ஒன்று தெளிந்தது. பளிச்சென்று கண்கள் திறந்து உடைந்தது உயிர்.' அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓ...' மூளையில் கட்டப்பட்டிருந்த சங்கிலி அறுந்தும் இந்த உலகம் சுற்றிச் சுற்றிக் கட்டிய சங்கிலியிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடியது. கால்கள் உதைத்தது. இமை மூடாமல் தீயினை உற்றுநோக்கி அலறியது.  தீயோ பைத்திய மேனியுடன் மோதி மோதி களியாடியது. துடிதுடித்து அடங்குமுன் தொண்டையில் நெருப்பணிந்த உயிர் ஒன்று கண்கள் மூடி மெளனமாய் தீ தின்னத் துவங்கியது. ப்ரதேசமெங்கும் பைத்தியக் கருப்பு சுருள் சுருளாய் வானேகி நிறைந்து மூடியது.

Tuesday 6 August 2013

பெருந்திணைக்காரன் அழுகிறான்

துஞ்சா மட நெஞ்சே

பெருந்திணையில் பாலையுண்டு..
பெருந்திணைக்கு தூதுமுண்டு..
தூது சென்ற நிலவு
கெடு செய்தி கொண்டு  திரும்பியது.
சாஸ்திரத்தின் இரும்புக் கதவு அடித்துச் சாத்தியதில்
அதற்கு ஆறாத நெற்றிக்காயம்
.
பெருந்திணைக்கும் நினைவுகளுண்டு.
அவற்றைத் தூக்கி அட்டாலியில் எறிந்து விடமுடியாது

 பெருந்திணைக்காரன் அழுகிறான்
 அதில் அசலான கண்ணீரின்
 அதே அளவு  உப்பு.

 துஞ்சா மட நெஞ்சை துயில் அமர்த்த‌
 பாடத் துவங்குகிறான்..
 " இவ் அளவு  இட்டதே  பெரும்பிச்சை.. "
 என்று   தளும்புகிறதப்பாடல்.

- இசை.

Wednesday 27 March 2013

யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்?

யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்?

ஒரு தகவல்:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 377 ன் படிதண்டனைக்குரிய குற்றமாக ஓரினச் சேர்க்கை கருதப்படுகிறது. 18 ம் நூற்றாண்டு காலத்தில் இங்கிலாந்தில் போடப்பட்ட இப்பழமையான சட்டம் அங்கு நடைமுறையில் இல்லை.

ஒரு கேள்வி:
பெருத்த மார்பகமும் உடுக்கு  இடையும் அகண்ட பிருஷ்டமும் விரி தொடையும் மயக்கும் விழியும் மறைந்து எப்போது திரண்ட புஜமும் மயிர் அடர்ந்த மார்பும் தொடையும் அடர்த்தியான மீசையும் ஆண்களுக்குப் பிடித்தமான ஒன்றாக மாறிப்போனது?( இதையே பெண்களுக்காக மாற்றி வாசிக்கலாம்)

புராணப் புனைவுகளும் இதிகாச நினைவுகளும் சொல்வதைக் கொஞ்சம் புரட்டினால்... ஓர் அசுரக் கட்டாயத்திற்காக சிவபெருமான் விஷ்ணுவுடன் இணைய நேரும்போது பெண்ணுரு எடுத்து இணைந்தாரே தவிர ஆணாக இல்லை. மகாபாரதப் போரில் பலியாகச் சம்மதித்த அரவாணின் கடைசி ஆசை நிறைவேறியதும் கிருஷ்ணனின் பெண்ணுடலில்தான். வரலாற்றில் பல மன்னர்கள் தங்கள் அந்தப்புரத்திற்கு காவலாக அரவாணிகளை நியமித்தனர். அவ்வப்போது தங்கள் இச்சை தீர்க்கவும்( மகாராணிக்கு மூன்று நாள் ஓய்வு) அவர்களை உபயோகித்தார்கள். இதில் கவனிக்க வேண்டியது அரவாணிகள் பெண்மையாகத்தான் வெளிப்படுவார்களே தவிர ஆணாக அல்ல.

குறுந்தொகை கூறும் பெருந்திணையின் பொருந்தாக் காமத்தில் ஒரு ஆணும் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணையோ ஒரு பெண் தன்னைவிட வயதில் குறைந்த ஆணையோ நேசிப்பதையும் உறவு கொள்வதையும் பிறன்மனை நோக்கி கள்ளக்காதல் புரிந்து கள்ள உறவு கொண்டு கள்ள தண்டனை பெறுவதைக் கூறுகிறதே தவிர இரு ஆண்கள் பொருந்துவதை பொருந்தாக் காமம் குறிப்பிடவில்லை. இப்படி எவ்விடத்திலும் பரவலாய் பதிவு செய்யப்படாத ஓரினச் சேர்க்கையாளர்கள் திடீரென புதியதொரு இனமாய் முளைத்தது எப்படி? மூலம் எங்கோ மறைந்திருக்க இயற்கைக்குப் புறம்பான ஒன்றாகக் கருதி தன்பால் நேசிப்பவர்களை விளிம்பு நிலையில் ஒதுக்கிவைத்த சமூகத்தின் கட்டுகளை உடைப்பதற்காகத்தானோ நம் காலத்திய தத்துவ மேதைகள் தங்களை ஓரினச்சேர்க்கையாளராக அறிவித்துக்கொண்டார்கள்? மாவீரன் அலெக்ஸாண்டர் ஏன் ஆண்களை விரும்பினான்? ஓவிய மேதை டாவின்சியின் விருப்பமாக ஆண் உடல் மாறியது எப்படி? சாக்ரடீஸ், ஜூலியஸ் சீசர், மைக்கேல் ஏஞ்ஜலா, பைரன்,ஆஸ்கர்வொயில்ட், ஏல்டன் ஜான் என எல்லா மேதைகளும் வாழ்க்கைத் தத்துவ உண்மைகளை தன்னைப்போலவேயிருக்கும் சக ஆண் உடலில் பறிமாறிக்கொண்டது எப்படி? ஏன்?( சுப்பிரமணியபுரம் அழகருக்கு நிகழ்ந்த காதல் துரோகம் எல்லோருக்கும் நிகழ்ந்திருக்காது என்று நம்புவோம்.)

பொதுவாக தாய் வயிற்றில் கரு உருவாகி முதல் எட்டு வாரங்களுக்கு ஆண் பெண் வித்தியாசம் கிடையாது. அதன் பின்னே ஜனன உறுப்புகள் தோன்றி ஆணாகவும் பெண்ணாகவும் வளர்ந்து வெளியேறுகின்றன. வெகு அரிதான படைப்பாக பெண், ஆண் உறுப்புகள் சேர்ந்தே தோன்றும்  சில குழந்தைகள் பின்னாளில்  அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளாக மாறுகிறார்கள் என்கிறது சமீபத்திய மருத்துவக் கண்டுபிடிப்பு. ஓர் ஆண் தன் உடல் சுரக்கும் அதிகமான பெண் ஹார்மோன்களினால் தன்னைப் பெண்ணாய் உணர்ந்து நாளடைவில் தன் ஆண் உறுப்பை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கி மன ரீதியான பெண்ணாய் தன்னை அலங்கரித்துக் கொள்கிறான். உலகம் அவனுக்கு திருநங்கையென பெயர் சூட்டி மகிழ்கிறது. இவை கருவின் முதல் எட்டுவார பாலின நிலையின் மிச்ச படிமம் எனக்கொள்ளலாம். ஆக ஆண் இனம், பெண் இனம், அல்லாத மூன்றாம் பாலினம் பிறக்க சாத்தியமுள்ள இவ்வுலகில் எங்கிருந்து வந்தது ஓரினம்?

ஹோமோ செக்சுவல் எனப்படும் ஓரினச் சேர்க்கையாளன் ஒருவனுக்கு பிறக்கும் குழந்தை ஹோமோவாக வளர வாய்ப்பில்லை எனும்போது இது கருவில் நிகழும் ஹார்மோன் குளறுபடி இல்லையெனத் தீர்மானமாகிறது. ஓர் ஆண் வளர்ந்து வரும் காலகட்டங்களிலேயே  ஹோமோவாக மாறுகிறான் என்றால் அது எந்த வயதில் நிகழ்கிறது? 10 வயதிலா? 16 வயதிலா? அப்படியும் ஏதோ ஒரு வயதில் இன்னொரு ஆண் மூலம் மட்டுமே நிகழும் அவ்விருப்பம் குறிப்பிட்ட அந்தப் பெரிய ஆணுக்கு  எங்கே எப்படி ஏன் நிகழ்ந்தது எனும் கேள்வி பூதாகரமாய் நம்முன் நிற்கிறது. பதில் தெரியாத மருத்துவ உலகம் மிகப்பெரும் புதிரென்று ஒதுங்கி நின்று விடுகிறது.

ஆனால் எதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மனிதனோ தன்னை கே( ஹோமோ) மற்றும்  லெஸ்பியன்( பெண்ணே பெண்ணை பெண்ணுடன்) என்று அறிவித்துக்கொள்ளும் நபர்களுக்கு ஊதிய உயர்வு தந்து சிறப்பு கவனிப்பில் வைத்துக்கொள்கிறது அமெரிக்க அரசாங்கம். கே எனப்படுபவர்கள் குடும்ப உணர்வுகள் ரீதியாக தன்னை அதிக சிக்கலுக்கு உள்ளாக்கிக்கொள்வதில்லையென்றும், பணியில் முழுமையான அர்ப்பணிப்பு, மூளையின் சகல பாகங்களையும் உபயோகிப்பவர்கள் என்று அறிவியல் ரீதியாக சர்டிபிகேட் தந்து இவர்களுக்கு சமூகத்தில் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.

நம் சமூகம் மற்றும் கலாசாரம் இவர்களை எப்படி அணுகுகிறது என பார்த்தோமானால் குற்றம் சாட்டி கூண்டில் ஏற்றி தண்டணை வாங்கித் தரவே தயாராய் இருக்கிறது. மீடியா இன்னும் இவர்களை முழுமையாய் ஏற்றுக்கொள்ளவில்லை. அல்லது மீடியாவை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

சில வருடங்களுக்கு முன் இந்தியா டுடே இதழ் நடத்திய செக்ஸ் சர்வே ஒன்றில் 12 சதவிகிதம் இருந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் அடுத்த வருடமே 18 சதவிகிதம் அதிகமாகி தங்களை 30 சதவிகிதமாக அறிவித்துக்கொண்டார்கள். இதில் 'எனக்கு ஆண் பிடிக்கும். ஆனால், சமூகத்திற்கான வாழ்வியல் இருப்பாய் திருமணம் செய்து குழந்தை பெற்று சமூகத்திற்கான ஆணாகவும் வாழ்கிறேன். எனக்கான தனிப்பட்ட தேவைகளையும் அவ்வப்போது தீர்த்துக்கொள்கிறேன்' என்ற பல எக்சிகியூட்டிவ்களின் ஸ்டேட்மெண்ட் குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன்பு நடத்திய 'மய்யம்' என்ற இதழில் எழுதிய சிறுகதை ஹோமோ பற்றிய அதிர்வடங்கியதுதான். 'தனிப்பட்ட மனிதன் ஒருவனின் காயங்களுக்கு ஆறுதல் சொல்லாத இச்சமூகம் அவனின் அந்தரங்க விருப்பங்களுக்கு கருத்து சொல்வது மிக அநாகரீகமானது' என்பது அவரின் சிறந்த பதில். ப்ரபஞ்சனின் சின்னி சிறுகதை பதின் வயதில் ஒருவனின் அதிகப்படியாக தூண்டப்பட்ட பெண் ஹார்மோன்களுக்கு அவனே பலியாகும் வலியைப் பேசியது. சின்னிகளும் அவனின் லாரி ட்ரைவர் பாண்டிகளும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பெண்ணின் அந்தரங்கமான உடல் மனப் பதிவுகளைப் பேசிய பாலிவுட் சினிமா' ஃபயர்' நம் கலாசாரத்தில் மிகத் துணிச்சலான முயற்சியே. சினிமாக்களில் பாலிவுட் பேசிய அளவுக்கு நம் தமிழ் சினிமாக்கள் இன்னும் தெளிவு பெறவில்லை. ' 377' என்ற  டெலிசினிமா ஒன்று ஓரினச்சேர்க்கையாளனின் பதட்டங்களைத் துல்லியமாகப் பேசி அவனும் நம்மைப்போல் மனிதன்தான் என்றது. ' காதல் கொண்டேன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் காட்டியிருந்த ஓரினக் காட்சிகள் வலியேற்படுத்தி கவனிக்க வைத்தது.

ஆண் தன் உடல் தினவுகளை பெண் வழி தீர்த்துக்கொள்ள வசதியற்ற சிறைக் கூடங்களும் ராணுவ கூடாரங்களிலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் உருவாகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய உண்மையாயிருப்பின் மருத்துவர்கள் சொல்லும் அது ஒரு இயல்பான பழக்கமே, சிலருக்கு இடதுகை பழக்கம் இருப்பதுபோல் என்பது  கேள்விக்குறியதாகிறது. எல்லா வசதிகளும் இருந்தும் ஆண் தேடும் இந்தியா டுடே அடையாளம் காட்டும் எக்சிகியூட்டிவ்கள் வேறு கவனம் சிதைக்கிறார்கள்.

ஆக ரகசியமான பல கேள்விகளை எழுப்பியபடியே நகரும் இம்மனிதர்கள் நம்மோடுதான் இருக்கிறார்கள். சிரிக்கிறார்கள். பயணம் செய்கிறார்கள். பிரிகிறார்கள். அவர்கள் விளிம்பு நிலையில் இல்லை என்பது மட்டும் புரிகிறது.

இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போது டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கும் இ.பி. கோ 377 வது சட்டம் நீக்கப்படும் என்ற அறிவிப்பு அவர்கள் மையம் நோக்கி நகர்கிறார்கள் என்பதை தெளிவாக்குகிறது.  
   

Thursday 7 March 2013

அந்தப் பாடலில் நீயுமில்லை நானுமில்லை

அந்தப் பாடலில் நீயுமில்லை நானுமில்லை

ஒரு புள்ளியில் ஆரம்பித்து
கோடென நீளும் உன் சிரிப்பு
இந்த இரவினைத் தாண்டிச் செல்கிறது

விரையும் நிலாப் பாதையில்
என் விரல் பிடித்து அலையும் லதா மங்கேஷ்கரின் குரல்

உனக்குத் தெரியாமலே
என் பாடல் வழி சாலையில்
உடன் வருகிறாய் நீ.

அர்த்தங்கள் அடங்கிய சோகத்தை
மொழி பெயர்க்க எனக்குத் தெரியவில்லை

நீ விலகிய இந்த நொடியில்
பிறக்கிறது நமக்கான பாடல்

கண்டம் தாண்டும் காற்றின் அலைவரிசையில்
நீயும் நானும் லதா மங்கேஷ்கரும்

மின்சாரம் இழந்த நள்ளிரவில்
செவியெங்கும் நிறைந்து வழியும் எங்கிருந்தோ அழைக்கும் கீதம்

நீயுமின்றி நானுமின்றி
நகரமெங்கும் திரியும் வெப்பத்தைக் கடத்துகிறது
லதா மங்கேஷ்கரின் குளிர் நிரம்பிய வலி.

ப்ளோரசன்ட் இரவினைக் கடத்தும் பூனை

ப்ளோரசன்ட் இரவினைக் கடத்தும் பூனை

இந்த இரவில் நீ
தனித்திருக்கிறாய்
விழித்திருக்கிறாய்
பசித்திருக்கிறாய்

பெரும் கருணை கொண்டு
உன்னை அப்படியே விட்டுவிட
நான் அவ்வளவு நல்லவனில்லை

உன் தனிமையை என்னால் சிதைக்கமுடியும்
உன் நீளமான இரவின் கூந்தலை தடவியபடி
ஒரு பாடலுடன் அதனை உறங்கவைக்க முடியும்
எச்சில் விழுங்கும் தாகத்தினை
உடல் சுருங்கும் பசியினை
ஒரு நொடியில் என்னால் விரட்டமுடியும்

என் அனுமதியின்றி ஒரு பூனை வளர்கிறது
எனதறையில்

சாம்பல் முகத்தில் மிதக்கும் பச்சை விழிகளில்
அனுதினம் பெருகுகிறது மதுக்கடல்

நிசிக்கணத்தில் நாக்கைச் சுழற்றி
தன் மதுவினைக் குடிக்கும் கள்ளப்பூனைக்கு
என்னைப்பற்றி எல்லாம் தெரியும்

பிஞ்சு நடையில் என்னைப் புணரும் பூனை
எப்போதும்
தனித்திருக்கிறது
விழித்திருக்கிறது
பசித்திருக்கிறது.

Saturday 23 February 2013

சத்தியலோகத்து வீணைக்கு இரத்தப்பலி கொடுப்பவன்...இசை



' கடவுள் அவன் கையகத்தே கொஞ்சம் சொற்களைத் திணித்து, தீரவே தீராத ஒரு நுரையீரல் அடைப்போடு உன்னை படைக்கிறேன்.  இவை அவ்வப்போது உன் மூச்சுத்தவிப்பை சொஸ்தப்படுத்தும் என்று சொன்னார்.'


            சத்தியலோகத்து வீணைக்கு இரத்தப்பலி கொடுப்பவன்...

  ( கணேசகுமாரனின் “ பெருந்திணைக்காரன் “ தொகுப்பை முன் வைத்து.. )

                              

                                                   - இசை-


         சிறுகதை எனும் கலாவடிவத்தை கண்டங்களைத் தாண்டி நகர்த்திடும் முனைப்பேதும் இக்கதைகளுக்கு இல்லை. அதற்கான நிதானமும், அவகாசமும் இக்கதைகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. நின்று நிதானிக்க முடியாத ஒரு கொடுந்துயரின் தவிப்பே இக்கதைகளை எழுதிச்செல்கிறது. எனவே சில சமயங்களில் இவை வாய்விட்டு கத்தி விட நேர்ந்திருக்கிறது. வாழ்வின் கடைக்கோடியில்  ஒண்டிக்கிடக்கும் மனிதர்களையே நாம் இக்கதைகளில் திரும்ப திரும்ப பார்க்கிறோம்.

அனேகக் கதைகளில் இரத்தம் சிந்திக் கிடக்கிறது. சிலதில் இரத்தத்தைப் போன்றதான சுக்கிலம். சிலதில் இரத்தமும் சுக்கிலமும் சேர்ந்து. வதைமுகாம் ஒன்றிலிருந்து அம்மணமாக, உயிருக்குத் தப்பி ஓடும் ஒருவனின் சித்திரம் இக்கதைகளுக்கும் பொருந்திப் போகிறது. இதனாலேயே நாம் ஒவ்வொரு கதையைப் படித்து முடித்ததும் ஒரு மாட்டைப் போல மூச்சு விடுகிறோம்.
 
           கவித்துவம் கூடிய உணர்வெழுச்சியான சொல்லல் முறையும் , நுட்பமான விவரணைகளும் இக்கதைகளில் மனம் கவர்வதாக உள்ளன.

  'பரப்பி வைக்கப்பட்ட எலும்புகள் மேலே இழுத்துப் போர்த்திய படி வறண்ட தோல்'
                              
          
                              
                                                              ( மழைச்சன்னதம்)
'வருடம் முழுவதும் உயரக்கரைகளில் திமிறியபடி வெய்யில் வழிந்தோடும்'

                              
                                                      ( பெருந்திணைக்காரன் )
'ரயில் சக்கரங்களில் தலைமுடி சிக்கி தண்டவாளத்தோடு தேய்த்து ஒட்டிக்கொண்டு பறந்த படியிருக்க, அதன் அருகில்தான் மூளை கிடந்தது. சந்தன நிறத்தின் மேலே சிவப்புக் கோலம் வரைந்திருக்க, உள்ளங்கையளவு மூளையை அந்தக் காகம் கொத்தும் ஒவ்வொரு முறையும் பத்தடி தூரம் தள்ளிக் கிடந்த உடல் அதிர்ந்து கொண்டிருந்தது'

                              
             ( மணிக்கூண்டு மகாராணி )
 போன்ற வரிகளை படித்து முடித்ததும் என் தலையை ஒரு முறை சிலுப்பிக்கொண்டேன்.

  ' HMV  என்கிற ஆங்கில எழுத்துக்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சிவப்பு நிற நாய் அந்த கருப்பு வண்ண இசைத்தட்டில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது'

  என்கிற வரி நம்மை நிமிடத்தில் எண்பதுகளுக்குள் தூக்கி வீசிவிடுகிறது.

      கணேஷ் ஒரு கவிஞனாகவும் இருப்பதின் அனுகூலத்தை தொகுப்பு முழுக்க காணமுடிகிறது.

       'இரவு மேலும் இரவாகி வானிலிருந்து முதல் துளி வேகமாக நிலமிறங்கி அவன் சிரம் தொட்டது. அத்துளிக்குப் பைத்தியம் பிடித்தது. அவன் உடல் தழுவியவாறு சரசரவென்று தரை தொட்ட துளியின் அலறல் அதனைத் தொடர்ந்து வந்த பெருமழையில் மூழ்கியது. பைத்தியத் துளிகளுடன் கலந்த மொத்த மழைக்கும் பைத்தியம் பிடித்தது. மழையின் மறுமுனையை இறுகப் பிடித்திருந்த ஆகாயமோ பதறியது. கண் சிமிட்டி துடித்தது. சட்டென ஓர் உதறலில் மழையைத் துண்டித்துக் கொண்டு பெருமூச்சு விட்டது. பதறி ஓடி மோதிய மழை பைத்தியமாக்கியது கடலை. கொந்தளிக்கத் துவங்கியது சமுத்திரம்.'

 என்று எழுதிப் போகும் வரிகளில் கவித்துவத்தின் பூரிப்பை காணமுடிகிறது.

   'கண் மூடிக்கிடக்கும்
     கடைசி நொடியில்
     உன் மூளையை நெருங்கும்
      ரயிலின் அலறலை கடந்து விட்டால்
      நீ சாகலாம்.
     அவ்வளவு நெஞ்சுரம் இருந்தால்
     நீ வாழவே பழகிக் கொள்ளலாம்.'

          ’தூக்கி வாரிப்போடும்’ கவிதை வகைமைக்குள் ஒரு ராஜகவிதையாக உலவும் தெம்பும், திமிறும் இவ்வரிகளுக்கு உண்டெனவே நான் நிச்சயம் நம்புகிறேன்.

     அனேகக் கதைகளில் நாம் கணேசயையே பார்க்கிறோம். கதைக்குள் வருகிற பெண்களையும் ஒரு விதத்தில் நாம் கணேசாக வாசிக்கலாம். கொம்பனில் மட்டும் ஒரு யானை வருகிறது. புல்லட் ரயிலில் அடிபட்டு சாகும் அந்த யானையும் கணேஷ் தான் என்று தயவு செய்து யாராவது சொல்லிவிடாதீர்கள்.

   மன்னர்களின் காலை நக்கி வாழ்ந்த மரபு நம் கவி மரபு. மகாகவிகளை சீட்டுகவியாக்கி அழகு பார்த்த வாழ்வு இது. சரஸ்வதி, சமயங்களில் நம் கபாலங்களைக் கோர்த்துக் கட்டி கூத்தாடும் கங்காளி.' இப்பெல்லாம் யாரு சார் எழுத்தை மட்டும் நம்பி வாழற..' என்று நாம் வியாக்கானம் பேசி முடிக்கும் முன்னே
ஒரு பலியாடு தலை நீட்டிப் பார்க்கிறது.  நாம் நமது வாயையும், பொச்சையும் மூடிக் கொள்ள வேண்டி இருக்கிறது. தீரவே தீராத நீள்வரிசை அது.  பலியாடுகளின் இரத்தத்தில் நாறி மிதக்கிறது சத்தியலோகம். இந்த நீச மரபிலிருந்து வருகிறது ‘கையறுமனம்'  கதை. தொட்டால் கை பொத்துப் போகும் சூட்டில் இருக்கிற இக்கதையின் மு்ன்னே தற்போதைக்கு என் எல்லா விமர்சனங்களும் செத்து விழுகின்றன. ஆனால் நண்பா கவனம்...  இவ்வனுபவத்தின்  எல்லா சூடும் தணிந்து, எல்லா தடயமும் மறைந்து, நீ ஒரு ஏ.சி பாரில் குளுகுளு பீரோடும், பில்டர் சிகரெட்டோடும், குஷன் சேரில் அக்கடா என்று சாய்கையில், நான் என் ஜட்டிக்குள் மறைத்து வைத்திருந்த “ கலையமைதி” என்ற சொல்லை எடுத்து உன் டேபிளில் வைப்பேன்...

        கூட்டு வல்லாங்குக்கு ஆளாகும் ஒரு சிறுமி, மற்றும் ஒரு பைத்தியத்தை பற்றிய கதையான “ ஏலி ஏலி லாமா சபத்கானி மற்றும் பிச்சைக்காரியாக மாறும் விபச்சாரியை பற்றிய கதையான “ மணிக்கூண்டு மகாராணி “ ஆகிய கதைகளும் உணர்வின் கொந்தளிப்பு கூடிய கதைகளே. ஆனால் அவை என்னை பெரிதாக அசைக்கவில்லை. அல்லது கணேஷ் பதறித் துடிக்கும் அளவுக்கு உலுக்கவில்லை.
 “ பெண்ணாய் பிறந்து விபச்சாரியாய் வாழ்ந்து பிச்சைக்காரியாகி இப்போது பைத்தியப் பட்டமும் பெற்று விட்டாளே ? “ என்று கணேஷ் தலைதலையாய்
அடித்துக் கொள்கையில் நான் சிகரெட் புகையை வானத்திற்கு ஊதிவிட்டபடியே
 “ அப்புறம் ” என்று கேட்டேன். ஒரு வேளை கணேஷ் அளவுக்கு நான் அவ்வளவு நல்லவனில்லையா? அல்லது ஒரு தீவிர சிவாஜி ரசிகனைக் கூட அழவைக்க முடியாத படிக்கு இக்கதை அவ்வளவு வலுவற்றிருக்கிறதா? அல்லது வதைக்கூடத்தில் இருந்து இருந்து நான் சொரணையற்றுப் போய் விட்டேனா? என்றெனக்குத் தெரியவில்லை.

       “ பெருந்திணைக்காரன்” என்னென்னவோ சொல்லி என்னென்னவோ செய்யும்
 ஒரு மாயக்கதை. கையில் ஒட்டியும் ஒட்டாத ஒன்று. கழுவினால் போகாத ஒன்று.
  
     'கையறுமனம்' கதையில் வரும் அரிசில் கிழார் பற்றிய கதை
 இயல்பாகவே கதையின் ஒரு பகுதியாக இருக்க, அதை ஒரு தனி தகவல் போல ஆக்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகிறது.
 
      'கொம்பன்' என் அளவில் ஒரு மகத்தான கதை. பரணிக்கி இணையான போர்க்கள காட்சிகளோடு துவங்கும் இக்கதை, சட்டென யானைகளின் காட்டு வாழ்க்கைக்குள் நுழைந்து, அடுத்த கணமே வயல் வெளிகளுக்குள் புகுந்து, நகர சாலைகளின் வழியே ஒரு புல்லட் ரயிலின் முன்னே போய் அடிபட்டு சாகிறது. அசாத்தியமான உணர்வெழுச்சியும், மதிநுட்பமும் கூடி விளைந்த கதையிது.
 
     என் வீட்டு வாசலில் எரிந்து கொண்டிருக்கும் குண்டுபல்ப்  இரண்டு மாதத்திற்கு
ஒரு முறை ப்யூஸாகி விடுகிறது. “ஒழுங்கா  ஒரு  பல்ப்  கூட வாங்கத்தெரியல..” என்று கொமட்டில் குத்து படுகிறேன். ஆனால் , தமிழ்க்கதைக்குள் பன்னெடுங்காலமாக
 தலைக்கு மேல் சோகையாய் ஒரு குண்டுபல்ப் எரிந்து கொண்டே இருக்கிறது. கணேஷின் கதைக்குள்ளும் மூன்று இடத்தில் அந்த பல்ப் எரிகிறது. 'கடவுளே ! நீ தமிழ்கதைக்கு ஏதேனும் செய்ய நினைத்தால்  தலைக்கு மேல் சோகையாய் எரிந்து கொண்டிருக்கும் அந்த குண்டுபல்ப்பை முதலில் உடைத்தெறியும்...'   ஒரு வேளை இந்த பல்பை உடைத்துப் போட்டால் ஒளிவெள்ளம்  பெருகிவிடுமா ? இந்த ஒளிவெள்ளத்தில் தான் மின்சாரத்தை நீக்கி விட்டு மார்க்வெஸின் சிறுவர்கள் ஆனந்த துடுப்பிட்டார்களா ? *
       நான் கணேஷின் இரத்தமற்ற கதையொன்றைப் படிக்க விரும்புகிறேன். என்றாலும் நான் இதை அவனிடம் வற்புறுத்த முடியாது. அவனே கூட அவன் கதையிடம் வற்புறுத்த முடியாது அல்லவா?
     ( பெருந்திணைக்காரன் - கணேசகுமாரன் - உயிரெழுத்து பதிப்பகம்- விலை; 60)

   *   நீரைப்போன்றது ஒளி - மார்க்வெஸ்- தமிழில் ; கோபி கிருஷ்ணன் ; கல்குதிரை மார்க்வெஸ் சிறப்பிதழ்


Thursday 21 February 2013

மழைச் சன்னதம்


மழைச் சன்னதம்



பார்த்தால் பாவமாயிருக்கிறதென்று ஒரு பூனை வளர்த்து வந்தாள் நீலா. டைகர் என்றால் புலிபோல் பாய்ந்து வரும். நாக்கைச் சுழற்றி மியாவ் என்னும். நீலா முரளியுடன் ஊரைவிட்டு ஓடியிருந்தபோது கத்திக் கொண்டிருந்த டைகர் மிகுந்த பசியாயிருந்தது. அம்மாதான் பால்ச்சோறு வைத்து அதன் தலையைத் தடவிக்கொடுத்தாள். 

நீலாவுக்கு 22 வயது. வயதுக்கு மீறிய வளர்ச்சி. டைகர் போலவே வீட்டையே சுற்றி வருபவள்தான். எங்கு மீறியதோ தெரியவில்லை. அவளின் பதட்ட நடமாட்டம் அறிய அம்மாவின் உடம்பெங்கும் கண்களில்லை. நீலா சிட்டாகப் பறந்துவிட்டாள். அவள் ஊர் எல்லை தாண்டியபோது அம்மா கலக்கத்திலிருந்தாள். விபரத்தினை அம்மாவிடம் நான்தான் சொன்னேன். மறுநாள் காலை கொல்லைப்புறத்தில் முகம் சிதைந்து செத்துக்கிடந்தது டைகர். பதறிய என்னிடம் ’’அது எதுக்குடா...மனுஷனை நிம்மதியா தூங்கவிடாம கத்திக்கிட்டு...போய்த் தொலையட்டும்’’ என்ற அம்மாவின் புடைவையில் பூனைச் சித்திரம் வரையப்பட்டிருந்தது. அன்று முதல் அம்மா அழுதாள். எப்போதும் அழுதாள்.
 

'' அந்தக் கடங்காரன் எதுக்கு இங்க வந்துருக்கான்... என் தூமையக் குடிக்கவா...எல்லாம் நீ குடுக்குற எடம் ராகவா’’ கத்தினாள். அதன்பின் மாமா வீட்டுப்பக்கமே வரவில்லை. எப்போதாவது கடைத் தெருவில் சந்திக்கும்போது '' இன்னும் அப்படியேதான் இருக்கா?’’ என்பார். கடைசியில் சந்தித்த டாக்டர் சொன்னதை நான் அவரிடம் சொல்வேன். அம்மாவுக்கு வைத்தியமின்றிப் போனது. மாத்திரைகளின் உதவியோடு கொஞ்சமாய் தூங்கினாள். யாரைப் பார்த்தாலும்  அவளுக்கு வெறுப்பாயிருந்தது. எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தாள். அத்தனை பேர் பற்றிய அசிங்கமான புகார்கள் சொல்வது என்னிடம்தான். இதில் தேவகியும் விதிவிலக்கல்ல.
 

காலையில் வேலைக்குச் சென்று ஆர்டர் எடுத்து, சாயங்காலம் வசூல் முடித்து, அலுவலகம் சென்று கணக்கு ஒப்படைத்து வீடு திரும்ப இரவு 8 மணியாகிவிடும். வீட்டில் சலனமற்று அமர்ந்திருப்பாள் அம்மா. சிறு தொடுகையோ ஒரு வார்த்தையோ போதும். புண் கீறி வெளியேறும் சீழ் போல் சரசரவென்று முற்றம் நிறையும் புகார்களும் வசவுகளும். அப்போதும் தேவகி மிக அமைதியாகத்தான் சொல்வாள். '' காலையிலேர்ந்தே எதுவும் சாப்புடல... எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். ராகவன் வந்த ஒடனே சாப்புடுறேன்னு ஒரே வார்த்தைதான் திரும்பத் திரும்ப...’’ சோறு பிசைந்து அம்மாவிடம் நீட்டினால், '' வெசம் வெச்சி என்னைக் கொல்லப் பாக்குறாடா அவ... அதான் வேணாம்னுட்டேன். நீ என் புள்ள. என்னக் கொல்ல மாட்டியேப்பா...’’ அழும் அம்மாவின் கண்ணீரில் இயலாமை வேதனையாய் வழியும். '' அவ நல்லவம்மா...அப்பிடியெல்லாம் செய்ய மாட்டா. நீ சாப்பிடு’’ அழுதுகொண்டே ஊட்டிவிட்டால் அன்றைய பால்ச் சோற்றில் சர்க்கரையைவிட நிறைய உப்பிருக்கும்.

அம்மா கடும் உழைப்பாளி. அதனாலோ என்னவோ பெரிய அளவு வியாதிகள் எதுவும் அண்டவில்லை, மொத்தமாய் காவு வாங்கிய இது ஒன்றைத் தவிர. அப்பா இறந்தபோது நீலா இரண்டு மாதக் குழந்தை. எனக்கு நான்கு வயது. இடிந்துபோன அம்மாவுக்கு ஆறுதலாய் சாரதி மாமா. இதெல்லாமே பின்பு அம்மா சொல்லித்தான் எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் அம்மாவிடம் எதற்கும் கலங்காத மன திடமிருந்தது. நீலா போனது தெரிந்ததும் சிதைந்த மனம்தான் புதிர். எதற்குப் பயந்தாள் அம்மா? இரத்தம் சொட்ட சொட்ட மீண்டும் மீண்டும் அடித்து விளாசும் ஊரின் நாக்கிற்கா...தன் அன்பும் பாசமும் உண்மையற்றுப் போயிற்றே என்ற அதிர்வா...நீலாவின் காலத்தையும் வயதையும் சுதந்திரத்தையும் அம்மா புரிந்துகொள்ளவில்லை.

பித்துப் போக்குவதில் மெத்தக் கற்றவர் என்றுதான் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தது. அலுவலக நண்பர் என்று அறிமுகப்படுத்திவைக்க அம்மாவுடன் பேசினார். டீ கொண்டு வந்த தேவகியிடம் ‘தாங்க்ஸ்’ என்றார். அம்மாவின் இடுங்கிய விழிகளில் நரம்புகள் புரண்டன. அன்றிரவு அம்மா எனது கையை இறுகப் பிடித்துக்கொண்டாள்.''தப்பா நெனச்சிக்காதடா ராகவா. மனசப் போட்டு அழுத்திக்கிட்டிருக்கிற பாரத்தை எறக்கி வெச்சாதான் சரியாவும்...அவ சரியில்லடா...எல்லாமே தப்பு தப்பாதாண்டா இருக்குது... அவ ஒன்கூட இருக்க மாட்டாடா... காலைல வந்தானே ஒரு கடங்காரன் அவனைப் பாத்தாடா அவ...பயமாயிருக்குடா...’’ தொடர்பற்ற வார்த்தைகளில் எதுவும் புரியாமல்  ''யாரம்மா சொல்றே...’’ என்றேன். '' ஒன் பொண்டாட்டியத்தாண்டா’’ என்றாள் காதோரம் கிசுகிசுப்பாய். பகீரென்றது. நல்ல வேளையாக தேவகி அறைக்குச் சென்று படுத்துவிட்டாள்.
 

''ச்சீ...’’ கையை உதறினேன். '' அந்தத் திமிரெடுத்துப்போன சிறுக்கி மாதிரி நெனச்சியா...எம் பொண்டாட்டிம்மா...ஒன் மருமவ...ஒன் அண்ணன் மவ...அவளப்போயி...’’ அம்மா சட்டென்று தன் வாயைப் பொத்திக்கொண்டாள். கண்ணீர் மட்டும் தாரை தாரையாய் வழிய துளிச் சப்தம் கூட இல்லாமல் அழுதாள். சில நொடிகள் கழித்துதான் என் தவறு எனக்குப் புரிந்தது. அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு  கதறினேன். '' இல்லம்மா...ஒன்னும் இல்லம்மா...எல்லாம் சரியாப் போய்டும்மா...’’ என்றுமில்லாமல் எனது அழுகை வெறிகொண்டு வெளியேற அம்மாவிடமிருந்து சிறு விசும்பல் கூட வரவில்லை. உடலின் ஒட்டுமொத்தக் கண்ணீரையும் இந்த ஒரு இரவிலேயே வெள்யேற்றிவிடுவதென்று தீர்மானித்தபடி கன்னங்களைத் தாண்டி நீர் சாரையாய் நெளிய அம்மா அழுதுகொண்டிருந்தாள். என்ன செய்து அழுகையை நிறுத்துவது என்று தெரியவில்லை. அவள் அருகிலேயே படுத்திருந்தேன். விடிகாலையில் தானாகவே இமைகள் மூடி அசதியாய்த் தூங்கத் தொடங்கியிருந்தாள். கை மட்டும் வாய் பொத்தியபடியிருக்க மனம் வலித்தது. கையை எடுத்துவிட்டு கொல்லைப்புறம் சென்றேன். முகம் கழுவி நிமிர சுத்தமாக விடிந்து விட்டது. இரு கண்களிலும் சூரியனைப் பதித்துக்கொண்டு அறைக்குள் வந்து படுத்தேன்.

அதன் பிறகான நாட்களில் அம்மா யாருடனும் எதுவும் பேசாமல் மெளனமாகவே இருந்தாள். கண்ணீர் மட்டும் வழிந்தபடியிருக்கும். முன்பெல்லாம் அம்மா வெகு அமைதியாக இருப்பாள். அதுபோல் ஆகிவிட்டாளோ... என்று நினைக்கத் தோன்றாமல் அவள் இயல்பு மறந்து போனாள். எது இயல்பு என்பதே தெரியாமல் ஆனாள். எல்லோருக்குமான வசவுகளும் புகார்களும் அவளுக்குள்ளிருந்தபடி நிறைந்து மூச்சுத் திணற ஆரம்பித்தன. தேவகி வைத்த சாப்பாட்டைச் சாப்பிடாமல் இரவு நான் வந்தபிறகு சாப்பிட்டாள். எல்லாமே மெளனமாகத்தான் நிகழும். என் எந்தக் கேள்விகளுக்கும் அம்மா பதில் சொல்ல மறுத்தாள். தன்னைச் சுற்றி ஒரு வலை கட்டிக் கொண்டாள் அம்மா. சிலந்தியின் எச்சில் வலைபோல் தன் கண்ணீரால் அவ்வலையைப் பின்னினாள். எங்களால் அவ்வலையைத் தாண்டிச் செல்ல முடியவில்லை. ஒரு நாள் அம்மா காணாமல் போனாள்.
 

ஒரு நாள், இரு நாள்...அம்மா வரவே இல்லை. எங்கே போனாள் அம்மா? எல்லோரும் தேடினோம். வீதிகளில் திரியும் மனநிலை தவறியவர்களைக் காண்கையில் மனதிற்குள் சுளீரென்று சாட்டை இறங்கும். வயதான பெண்மணிகள் யாராவது கிழிந்த ஆடையும் பரட்டைத் தலையுமாய் அலைவதைக் கண்டால் உடல் நடுங்கும். தலையை வறட் வறட்டென்று சொறிந்தபடி அம்மா நிற்பாள். அழுக்குக் கரங்கள் விரித்தபடி '' பசிக்குது ...சோத்துல வெஷம் இல்லையே’’ என்பாள். சூரியனை இழுத்துப் போர்த்தியபடி தூங்குவாள். அருகில் சாக்கடையில் நெளியும் புழுக்கள். அம்மா...அம்மா...சட்டென்று கண்ணீர் கசிந்து இயல்பிழந்து உடனே வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்க்க மனம் பரபரக்கும். நிஜம் உணர மனம் சுருங்கும். என்னவானாள் அம்மா...? கேள்வியின் பாரம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. அவளின் தூக்க மாத்திரைகள் காணும் போதெல்லாம் உறக்கமின்றிப் போனது. உணவு தேவையற்ற பல இரவுகளில் அம்மா வந்து அணைத்து எழுப்பினாள். அம்மா என்னவாகியிருப்பாள்...?
 

அம்மா இல்லாத உணவு செல்லாத ஒரு நாள் குமட்டி வாந்தியெடுத்து மயக்கமுற்றேன். ஆஸ்பத்திரியில் குளுகோஸ் ஏற்றி தெம்பளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். '' எல்லோரும் தேடிக்கிட்டுதான் இருக்கோம்...அம்மா கெடச்சுடுவா...முதல்ல ஒன்  ஒடம்ப பாத்துக்க மாப்ளே’’ என்றார் மாமா. இந்த உலகத்தில் அனைவரும் அவரவர் இருப்பினில் இருக்க, என் அம்மா மட்டும் தொலைந்து போயிருந்தாள். பின்பு வந்த என் எல்லா நொடிகளையும் அம்மாவே ஆக்ரமித்தாள். அம்மாவின் பழஞ்சேலைகளின் வாசனை என் நாசி நிரப்பி பின்பு வீட்டை நிறைத்தது. கோயில்களில் சென்று தேட ஆரம்பித்தேன். யாரோ சொன்னார்கள். '' பக்கத்துல திருக்கடையூர், அனந்த மங்கலம் மாதிரி பெரிய கோயில்ல எல்லாம் தேடிப்பாருங்க. அங்க நெறையப் பேர் இருப்பாங்க...’’ சென்று பார்த்ததில் அம்மா மாதிரி நிறைய பேர் இருந்தார்கள். அம்மா மட்டும் இல்லை.
 

அன்றைய கனவில் கோயில் வாசலில் பிச்சைக்காரர்களோடு பிச்சைக்காரியாய் அம்மா தெரிந்தாள். பதறி விழித்தேன். மறுநாள் கோயிலுக்குச் சென்று எல்லா பிச்சைக்காரர்களின் கையிலும் பணம் திணித்தேன். சாப்பாடு வாங்கித் தந்தேன். சிலர் விரல் நீட்டி கூல்ட்ரிங்க்ஸ் கேட்டார்கள். என் அம்மாவின் தாகம் தீரும். வயிறு நிறையும். அவள் அழமாட்டாள். நம்பிக்கையோடு கோயில் வாசல்களில் நின்று நின்று பார்த்து திரும்பினேன். சீக்கிரம் வந்துவிடு அம்மா...எங்கு சென்றாலும் அழுகை முன்சென்றது. எதை நினைத்தாலும் அம்மா வந்து கண்ணீர் தெளிப்பாள். இனிமேல் எதுவும் பேசக் கூடாது என்று என் வாய் பொத்தியவள் பார்க்கவே கூடாது என்று என் கண் பொத்திவிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருந்தேன்.
 

தொலைந்தது போலவே திடீரென்று ஒரு நாள் அம்மா கிடைத்தாள். தூரத்தில் வரும்போதே வீட்டு வாசலில் யாரோ படுத்திருப்பது பார்வையில் தெரிந்தது. அம்மாவாய் இருக்கக் கூடாதா என்றெண்ணியபடி வேகமாய் வந்தவன் கண்ணில் அம்மா பட்டாள். சுருண்டு படுத்திருந்தாள். மிக நீளமாய் வெயில் அம்மா மீது உறைந்திருந்தது. கால்களெல்லாம் சேறு. உடம்பெல்லாம் மண். அழுக்கு. துர்நாற்றம். பரப்பி வைக்கப்பட்ட எலும்புகள் மேலே இழுத்துப் போர்த்தியபடி வறண்ட தோல். எந்த சேலையுடன் காணாமல் போனாளோ அந்தச் சேலை கசங்கிச் சிதைந்து  பின்புறமாய் கிழிந்திருந்தது. கிழிந்த வழி தெரிந்த உள்பாவாடை நனைந்து மஞ்சள் நிறம் ஊறிக்கிடந்தது. '' என் அம்மா’’ மனம் வெடித்து அலற இரு கைகளில் அம்மாவைத் தூக்கினேன். வீட்டுக்குள் ஓடினேன். உணர்வற்றுக் கிடந்தாள் அம்மா.

அம்மா வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆயிற்று. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. பால் மட்டும் அருந்திக்கொண்டிருந்தவள் கொஞ்சமாய் சாப்பிடுகிறாள். மருத்துவரின் எல்லா செயல்களுக்கும் ஒத்துழைத்தவள் யாருடனும் எதுவும் பேசாமல் மெளனமாகவேதான் இருந்தாள். அந்த வசவுகள் கூட இப்போது இல்லை. மாமா மறுபடியும் வீட்டுக்கு வந்து போனார். அம்மாவின் மெளனம் வீடெங்கும் அலறியபடி அலைந்தது. அவள் விழிகளில் தெரிந்த உன்மத்த பரவச நிலையை மாமாதான் கண்டுணர்ந்து சொன்னார். மனிதர்களின் மீதான அலட்சியமே அந்த பிரமாண்ட மெளன அடர்த்தி என்றார்.


தேவகியின் தங்கை திருமணம். மூத்த மாப்பிள்ளையாய் நான் எதுவும் பங்கெடுக்க முடியாமல் அம்மாவுடனே இருந்தேன். மாமா எத்தனையோ வற்புறுத்தியும் நான் கல்யாணத்துக்குப் போகவில்லை. அன்றிரவு அம்மா தூங்கியதும் அவள் அருகிலேயே படுத்துக்கொண்டேன். எப்போது தூங்கினேனென்று தெரியவில்லை. கனவு போல் இருந்தது. வீடெங்கும் வீதியெங்கும் அகிலமெங்கும் சுற்றிக் கட்டப்பட்ட ஒரு சங்கிலி துடித்துக் கொண்டிருக்கிறது. பட்டென்று என் கண்ணெதிரில் துண்டித்து விழ துண்டு துண்டான சங்கிலிகள் நின்று நின்று நடனமாடத் துவங்கின. 'ஜல்ஜல்'...'ஜில்ஜில்'... செவியெங்கும் நிறைந்து வழிந்து தரையில் பட்டுத் தெறிக்கும் சங்கிலிச் சத்தம். அம்மா...திடுக்கிட்டு விழித்தேன். கண்ணெதிரில் கண்ட காட்சியில் அம்மா ஆடிக் கொண்டிருந்தாள். இருளும் மழையுமாய் அவ்வப்போது தெறிக்கும் மின்னல் ஒளியில் அம்மா ஆடினாள்.


நடு முற்றத்தில் பெய்துகொண்டிருந்தது உன்மத்த மழை. எப்போது பெய்ய ஆரம்பித்தது? அம்மா இரு கைகளையும் வான் நோக்கி உயர்த்தியிருந்தாள். அத்தனை மழையும் தனக்கே என்று சொந்தம் கொண்டாடும்படி அவளின் கரங்கள் உயர்ந்து விரிந்திருந்தன. கால்கள் தரை மோதின. 'சிலிங்'...மழை தெறித்து மழையில் விழுந்தது. சங்கிலி கட்டப்பட்டிருந்த கால் மட்டும் தன் இயல்பு தவறி ஆடிக்கொண்டிருக்க அம்மா மழை தேவதையாய் மாறியிருந்தாள். எழுந்து முற்றத்தில் இறங்கினேன். அம்மா என்று அழைத்தபடி அருகில் நெருங்க அம்மா தன் கையினால் என் கையைப் பிடித்தாள். இறுக்கமான பிடி. எங்கிருந்து வந்தது இத்தனை பலம். என் கைகளை உயர்த்தி ஆடத் துவங்கினாள். அவளின் முந்தானை சரிந்தது. தொலைந்து மீண்டபிறகு அம்மா உடலில் சதைப்பற்றே இல்லாமல் எலும்புக்கூடாக மாறியிருந்தாள். அம்மாவின் முந்தைய ரவிக்கைகள் எதுவும் உடலோடு ஒட்டாமல் போயின. அதனாலே ரவிக்கைக் கொக்கிகள் மாட்டினாலும் கீழே ஒரு முடிச்சும் போடப்பட்டிருக்கும். இப்போது அம்மாவின் மழையாட்டத்தில் முடிச்சு அவிழ்ந்திருக்க ரவிக்கையை விட்டு வெளியே வந்திருந்தன முலைகள். தோல் வற்றி சூம்பி வெடித்துப்போன முலைகளில் காம்புகள் மட்டும் பெரிதாய் கருப்பாய் பளபளத்தன. ஒரு மின்னலில் உணர்ந்தேன்.

 என்னைச் சேர்த்தபடி ஆடிக்கொண்டிருக்கும் அம்மா...என் அம்மா இல்லை. மழைப்பேச்சி. குல தேவதை. கருவறை விட்டு மழை வழி வெளிவந்த இறைத் தாய். பைத்திய வாசனை கழுவிய முகமெங்கும் தடவியிருந்தது மழையின் மந்தகாசப் புன்னகை. மழையில் உக்கிரம் கூடியிருந்தது. ஆடத்துவங்கினேன். அம்மா என்னைப் பார்த்தாள். அந்தக் கண்களில்தான் எத்தனைக் கனிவு. இவள் பார்வையின் கர்வத்துக்கு என்ன அர்த்தம். என்னவோ அம்மா அத்தனை அழகாய்த் தெரிந்தாள். இவ்வளவு அழகையும்தானா அந்த அழுகிப்போன மெளனத்துக்குள் அடைத்து வைத்திருந்தாள்.

கைகளை உயர்த்தியபடி ஆடிக்கொண்டிருந்த நான் வானம் இடிந்துவிழும் ஒலி கேட்டதும் பயந்துபோய் நடுங்கி அம்மாவை அணைத்தேன். மூக்கில் பட்டு நசுங்கியது முலைச் சதை. அம்மாவின் சூடு எனக்குள் பரவியது. இதழ் பதிந்த காம்புகளின் வழியே உயிர் உறிஞ்சினேன். பசி. தொண்டைக்குள் இறங்கியது பால்மழை. அம்மாவின் மழைச்சன்னதம் தீரும்வரை உறிஞ்சினேன். அம்மாவின் ஆட்டமும் மழையாட்டமும் நிற்கவில்லை. சந்தோஷக் கூச்சலுடன் கொட்டியது மழை. மழைப்பால் உறிஞ்சிக் களைத்தவன் நழுவி தரை அமர்ந்து அம்மாவின் கால்களில் சிக்கியிருந்த சங்கிலியை விடுவித்து எறிந்தேன். தூணில் மோதி வீழ்ந்தது சங்கிலி. மிகப்பெரிதாய் மூச்சுவிட்டேன். நிமிர்ந்து நோக்க அம்மா ஆவேசமாய் ஆடிக்கொண்டிருந்தாள். நீர் சூலம் எடுத்து நீரைக் குத்தினாள். மழையைப் பிடுங்கி மழையில் எறிந்தாள். முற்றமெங்கும் மிதந்து ஓடிக்கொண்டிருந்தது , இத்தனை நாளாய் அம்மாவை அசைத்துக்கொண்டிருந்த கசப்பு வன்மப் பிரேதங்கள்.  ஆட்டம் நின்றபின்பு சங்கிலியிலிருந்து வடிந்துகொண்டிருந்த மழையின் நிறம் மிகப் புதிதாய் இருந்தது. 


.