Friday 24 August 2018

பூரணம்




பூரணம்

'' பத்து ஆம்பள சேர்ந்து செய்ற வேலைய ஒத்தப் பொம்பளையா செஞ்சி முடிச்சிட மாட்டாளா மாரி''

இப்போதெல்லாம் ஊர் இப்படிப் பேசுவதில்லை. ஊர் அப்படிப் பேசும்போதெல்லாம் சிறு முறுவலுடன் புன்னகைக்கும் மாரிக்கும் அதுபோன்ற வார்த்தைகள் தேவைப்படவில்லை. முன்பு ஒரு கர்வமிருந்தது. ஆணுக்கு அடங்கியதுதான் பெண் வாழ்க்கை என்ற பொதுப்புத்தியுடன் விடியும் கிராமத்தில் ' ஆம்பள மாதிரி ' என்ற வார்த்தை, தான் எதற்கும் சளைத்தவளல்ல  என்ற எண்ணத்தை உண்டாக்கியது. அதனாலேயே துணிச்சலாய்  சில வேலைகள் செய்யும்போதெல்லாம் ஊராரின் பாராட்டுதான் அவள் காதில் வந்து போகும். ஊர்ப்பெண்களுடன் குளிக்கும்போதும் முங்கு நீச்சல் போட்டு மணிக்கணக்கில் மூச்சடக்கிக் கிடப்பாள். நீர் விளையாட்டில் மாரிக்கே எப்போதும் முதலிடம். திங்கு திங்கென்று குதித்து சில்லுகோடு விளையாட்டில் கடப்பதும் பாவாடையை அள்ளி இடுப்பில் செருகிவிட்டு வளைந்து வாகாய் கிடக்கும் மாமரக் கிளைகளில் சரசரவென்று ஏறி மாங்காய் பறித்துப் போடுவதாகட்டும் மாரிக்கு எல்லாமே சுலபமாகத்தான் இருந்தது. மாரியைப் பெற்றவள்தான் முதலில் கவனித்தாள். மாரி பிறந்த நாளில் பிறந்து வளர்ந்த நாளில் கூடவே வளர்ந்து பள்ளிப் படிப்பு முடித்த அவளின் தோழிப்பிள்ளைகள் எல்லாம் வயதுக்கு வந்து அடுத்த வருடமே வயிற்றைத் தள்ளிக்கொண்டு நின்றபோதுதான் பட்டம்மாள் கவலையானாள். கணக்குப் போட்டு எதையும் வாழத்தெரியாத பட்டம்மாள் தன் மகளின் வயதைக் கணக்கிட்டுப் பார்த்தாள். 14 கடந்து 15 ஆகியிருந்தது. தன் பரம்பரையில் யாராவது இப்படித் தாமதமாய் பூத்திருக்கிறார்களா என்று மனத்திரை விரித்துப் பார்த்தாள். திரையில் தெரிந்த மூதாதைப் பெண்களின்  15 வயது இடுப்பிலும் மாரிலுமாய் இரண்டு குழந்தைகள் புரண்டு கொண்டிருந்தன. தன் மகள் குறித்து முதன்முறையாகக் கவலைகொண்டாள் பட்டம்மாள். கிணற்றில் நீர் எடுக்க நிற்கையிலும் காட்டு வேலைக்குச் செல்கையிலும் மாரி  பேசுபொருளாகிப் போனாள் ஊர்ப்பெண்களின் இன்னொரு நாக்கிற்கு. '' பொண்ணா லட்சணமா அடக்க ஒடுக்கமா இருந்தாதானே... தடிப்பயலுக மாதிரித் திரிஞ்சா இப்பிடி மரத்துப் போய் கெடக்க வேண்டியதுதான்'' சகலத்துக்கும் வளைந்து கொடுக்கும் பொரணி நாக்குகள். தான் பெண் என்ற தகுதியை உடல் ரீதியாக அடையவில்லையென்பதை மிகத் தாமதமாகவே உணர்ந்தாள் மாரி. தன் காலிலும் கையிலும் தென்பட்ட பூனை ரோமங்களின் மீது அதிகமாய் மஞ்சள் தேய்த்துக் குளித்தாள். தன்னுடன் படிக்கும் சிநேகிதிகள்  ஒவ்வொருவராகப் பூப்பெய்துவதும் தொடர்ந்து ஒரு வருடத்திலேயே திருமணம் முடிந்து போவதுமாய் இருந்ததை, தான் வழக்கமாய் கும்பிடும் மாரிமுத்தம்மாள் கோயிலில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தாள் மாரி. ஒரே குழந்தை என்பதனால் அம்மன் பெயரை வைத்ததற்கு அப்போதுதான் வருத்தப்பட்டாள் பட்டம்மாள். அந்த அம்மன் சிலை போலவே கல்லாகிக் கிடக்கிறாளே மாரி என்று விசனப்பட்டுப் போனாள். மாரியோ கோயிலுக்குப் போவதையே நிறுத்திக்கொண்டாள். மாரியின் பகலும் இரவும் எந்த மாற்றமுமில்லாமல் விடிந்தது; முடிந்தது. காலையில் எழுந்து குளித்து சடை பின்னி பூ வைத்துப் பொட்டிட்டு பாவாடை சட்டையில் பள்ளிக்குக் கிளம்பிப் போவது மட்டுமே மிகச் சரியாக நடந்துகொண்டிருந்தது. மற்ற எல்லாம் தவறாக. ஒருமுறை பட்டம்மாளே சந்தேகப்பட்டு மாரியிடம் கேட்டாள். '' வவுறு கிவுறு வலிக்கிற மாதிரி தெரியிலியாடி ஒனக்கு?''. அம்மா கேட்பது விளையாட்டில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தாள் மாரி.

தேங்குடி கிராமத்துக்காரர்களுக்கு விவசாயம், இல்லையேல் காட்டுப் பகுதிக்குச் சென்று விறகுவெட்டி வந்து சந்தையில் விற்றுப் பிழைப்பது. அவ்வளவுதான். படிக்காத கிராமத்து மக்கள் அப்படித்தானிருந்தார்கள். இதுபோதும் என்று வாழ்ந்தவர்கள் பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் உடனே பள்ளிக்கூடத்துக்குச் செல்வதை நிறுத்திவிட்டு அடுத்த வருசமே பக்கத்து ஊரில் மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வைத்தார்கள். இல்லையெனில் சொந்தத்திலே மணம் முடித்து கண்ணுக்கருகிலேயே வைத்துப் பார்த்துக்கொண்டார்கள். முதல்நாள் சாயங்காலம் பாலாமணிக்கும் மாரிக்கும்தான் ஓட்டப்பந்தயம்; பள்ளி விட்டதும் யார் முதலில் வீட்டுக்குப் போவதென்று. பையை இறுகப் பிடித்துக்கொண்டு பல் கடித்துக்கொண்டு ஓடிய ஓட்டத்தில் மாரியே  வழக்கம்போல வென்றாள். பாதிவழி கடக்கையிலே பாலாமணிக்கு அடிவயிற்றில் சுருக்கென்றது. மறுநாள் பாலாமணியின் அப்பா வகுப்பு ஆசிரியரிடம் இனிமேல் தன் மகள் பள்ளிக்கு வர மாட்டாளென்று சொல்லிச் சென்றார். மாரியின் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்கும் அடுத்த வீடு பாலாமணியுடையது. மாரி, பாலாமணியைப் போய் பார்த்தாள். வீட்டுக்குப் பின்புறம் அமர்ந்திருந்தாள் பாலாமணி. அவள் முன் நீளமான மர உலக்கை கிடந்தது. உலக்கைக்கு இந்தப்புறம் நின்றவாறே பேசினாள் மாரி. '' என்னடி பண்ணுச்சி?'' '' ச்சீ போடி. ஒனக்கு இது மாதிரி வரும். அப்ப பாரு . என்கிட்ட கேக்காத'' பாலாமணியின் வெட்கம் புதிதாய் இருந்தது மாரிக்கு. '' எனக்குத் தெரியலடி. அதான் கேக்குறேன்'' சுற்றுமுற்றும் பார்த்த பாலாமணி அருகில் இருந்த மஞ்சள் பையிலிருந்து ஒரு வெள்ளைத் துணியை எடுத்தாள். துணியில் அங்கங்கே வெளுத்த சிவப்பில் திட்டுத் திட்டாய் கறை. மாரியின் கண் முன் காட்டி '' இப்பிடித்தான் வருது'' என்றாள் பாலாமணி. அதைச் சொல்லும்போது அவளின் கை அடிவயிற்றைத் தொட்டுக்கொண்டிருந்தது. '' ஒண்ணுக்குப் போற எடத்துலேர்ந்தா?'' என்றாள் மாரி. கேள்வியில் கிடந்தது 16 வயதுக்கான ஒட்டுமொத்த ஆச்சர்யம். '' ம்ம்ம்ம்...ப்பே'' முறைத்த பாலாமணி  முகம் சுளித்தவாறு, '' நீ  போடி அப்புறம் பேசலாம்'' என்றவாறு பையிலிருந்து இன்னொரு வெள்ளைத் துணியை எடுத்தாள். மாரிக்கு அன்றிரவு தூக்கம் கெட்டது. கண்களை மூடினால் பாலாமணி காட்டிய வெளுத்த சிவப்பு வெள்ளம்போல் பொங்கிப் பெருத்தெடுத்து அவள் அடிவயிற்றை நனைத்தது. நிமிடத்துக்கொருமுறை தொட்டுப் பார்த்துக்கொண்டாள். பக்கத்தில் படுத்திருந்த பட்டம்மாள் எழுந்து மகளைப் பார்த்தாள். '' என்னடி பண்ணுது?'' '' ஒண்ணுமில்லம்மா. படு'' என்றபடி குப்புறப்படுத்தாள் மாரி. பட்டென்று அவள் முதுகில் அடித்தாள் '' எத்தினி தடவ சொல்லிருக்கேன். இப்பிடி குப்புறப் படுக்காத குப்புறப்படுக்காதன்னு'' 

வாசலில் கட்டிலில் படுத்திருந்த கோபால் மனைவியின் கோபக் குரலில் விழித்தார். எழுந்து கதவைத் தட்டினார். அன்றிரவு நிறம் மாறும் வரைக்கும் பட்டம்மாள் கணவனிடம் பேசிக்கொண்டிருந்தாள். '' நீ என்னடி புதுக் கிறுக்கியா இருக்கே. அவ கொழந்தடி. அதுக்கெல்லாம் இன்னும் நாள் இருக்கு. அதெல்லாம் தானா நடக்கும். ஒனக்கு வேணும்னா சொல்லு. வைத்தியர்கிட்ட காட்டலாம். எனக்கு இதுல மனசில்ல. புள்ள மனசு கஷ்டப்படும்டி'' என்றார். மனசு ஆறாமல்தான் போனாள் பட்டம்மாள். வெளியில் இதுபற்றி யாரிடமாவது கேட்டால் அதுவே தன் மகளின் எதிர்காலத்துக்குத் தான் வைக்கும் கொள்ளியாகிவிடுமோவென்று பயந்தாள். பத்தாம் வகுப்பில் ஃபெயிலானாள் மாரி. அத்துடன் பள்ளிக்குச் செல்வது நின்றுபோனது. வலியும் விரக்தியும் முகத்தில் நிரந்தரமாக எவருடனும் பேசாமல் தனியானாள். பட்டம்மாளும்  வேலை உண்டு தன் வீடு உண்டு என்றிருந்தாள். வயது இருபதைக் கடந்ததும் மாரியை அழைத்துக்கொண்டு திருப்பூருக்குப் புறப்பட்டாள் பட்டம்மாள். விஷயம் தெரிந்த கோபால் '' ஏன்டி அங்க போய்தான் இதுக்கு பாக்கணுமா. கொஞ்ச நஞ்ச தூரமா இருக்கு. போயிட்டு வர்றதுக்குள்ள ஒரு நாளாயிடும். அங்க நமக்குத் தெரிஞ்சவங்கன்னு யாருமே இல்லியேடி'' இடுங்கிய கண்களில் எரிச்சலிருந்தது. '' அதுக்காகத்தான் அவ்ளோ தூரம் போறேன். நமக்கும் யாரையும் தெரியாது. நம்மளையும் யாருக்கும் தெரியாது. கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில காட்டிட்டு அழைச்சிட்டு வந்துடுவேன். மொத பஸ்ஸுக்குப் போயிட்டு கடைசி பஸ்ஸுக்கு வந்துடலாம். என்ன பண்றது. ஊர் நாக்கு வெசம் வெச்சிக்கிட்டு இருக்கு. அதுக்குப் பயந்துதான் எல்லாம் பண்ண வேண்டியிருக்கு.''

பட்டம்மாளும், மாரியும் திருப்பூர் வந்து டெஸ்ட் செய்ததில் உடம்பில் சத்து இல்லாவிட்டாலும் இப்படி இருக்கலாம் என்று விட்டமின் ஊசி எழுதிக்கொடுத்தார்கள். வாரம் ஒன்று போடச்சொல்லி எழுதித்தந்த ஊசி மாதக்கணக்கில் நீண்டது. ஊரே வெளிச்சமாயிருந்தாலும் மாரியின் வீடு மட்டும் இருளில் இருக்க, அவ்வீட்டில் இருந்த மூவரும் ஊரின் கண்களுக்குத் தெரியாமல் தங்களை ஒளித்து மறைத்து வாழ்ந்து வந்தனர். மாரியின் 21 வது வயதில் அந்த விபரீத முடிவெடுத்தாள் பட்டம்மாள். '' பல்லடத்துல ஒரு பையன். ஜாதகத்துல கோளாறுன்னு கல்யாணம் தள்ளிப்போய் இப்போ 37 வயசாகுதாம். காட்டு வேலைக்குப் போறப்போ பேசிட்டுருந்தாங்க. நான் ரமணியம்மாக்கிட்ட கேட்டு அந்த வெலாசம் வாங்கிட்டேன். போய் ஒரு எட்டு பாத்துட்டு நம்ம பொண்ண பத்திச் சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம்ங்க'' கோபால் நெஞ்சடைத்துப் போனார். '' எல்லாத்தையும் சொன்னா அவங்க ஒத்துக்குவாங்களா?'' என்றார் பரிதாபமாய். '' யார் சொல்லப்போறா. மறைச்சி வெச்சித்தான் நடத்தி வைக்கணும். அப்படியாவது இவளுக்கு வேற வாழ்க்க அமையுதான்னு பாப்போம். மனச கல்லாக்கிக்கிட்டுதான் இந்தக் காரியத்த பண்ணணும்.'' மாப்பிள்ளைக்கு வயது அதிகம் என்பதாலே சில விஷயங்கள் ரகசியமாய் நடந்தன. அது பட்டம்மாளுக்கு சாதகமாய் போயிற்று. பெண் பார்க்க வராமல் போட்டோ மட்டும் பார்த்து சம்மதம் சொன்னார்கள். மாரி வடிவழகி. பெரிய கண்களும் குண்டு கன்னமுமாய் சின்ன உதடுகளுடன் புகைப்படத்தில் அவளின் குறையெதுவும் தெரியவில்லை. உறவினர்கள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் இரு வீட்டு பெற்றோர்கள் மட்டுமே இருக்க ஏதோ ஒரு கோயிலில் கல்யாணம் நடந்தது. யாருக்கோ நடப்பது போன்ற பாவனையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் மாரி.

பன்னீர்செல்வத்துக்குசிகரெட், குடி மட்டுமல்ல; பெண்கள் தொடர்பு என்பது ஊரின் எல்லை தாண்டியும் நீண்டிருந்தது. அவனின் யோக்கியதை தெரிந்துதான் யாரும் அவனுக்குப் பெண் கொடுக்க மறுத்தார்களே  தவிர, அவன் ஜாதகத்தில் எந்தக் கோளாறும் இல்லை. மாரியை அவனுக்குப் பிடிக்கவில்லையென்றாலும் ஆசைக்குதான் ஊரெங்கும் பெண்கள் இருக்கிறார்களே என்றுதான் கல்யாணத்துக்குச் சம்மதித்தான். முதலிரவில் முதல் சந்தேக விதை விழுந்தது. அவசரமாய் ஆடை களைந்து மாரியை அணைத்தவன் மேலேறி இயங்கத் தொடங்கினான். அவன் உறுப்பு அவள் அந்தரங்கத்தில் படும்போது அவனுக்கு அது புது அனுபவமாய் இருந்தது. இத்தனை வெப்பமாய் கொதிநிலத்தில் வறண்ட பகுதியில் உரசுவதுபோல் உணர்ந்தது அவனுக்குப் புதிது. விரிய மறுத்த பெண்மையில் அழுந்திச் செருகினான் தன் பலத்தை. எவ்வித நெகிழ்வுத்தன்மையும் இல்லாமல் பாறைபோல் இருந்த இடத்தில் தன் குறியை வைத்துத் தேய்க்க வலி உச்சந்தலையைத் தாக்கியது மாரிக்கு. வேகமாய் பன்னீர்செல்வத்தைத் தள்ளிவிட்டாள். நெஞ்சுப் பகுதியில் கைவைத்துத் துழாவியவன் '' என்ன ஒனக்கு மாரே இல்ல'' என்றான். உதடுகள் நடுங்க மாரி '' எனக்கு இது வேணாம்'' என்றாள். முதல்நாள் பயத்தில் பேசுகிறாள் என்று பன்னீர்செல்வம் ஒன்றும் சொல்லவில்லை. மறுநாள் இரவு குடித்துவிட்டு அறைக்கு வந்தான். மூர்க்கமாய்  மாரிமேல் கவிழ்ந்தான். அவள் கழுத்தில் இவன் போதை படிந்தபோது விநோதமாய் ஒன்றை உணர்ந்தான். மாரியின் கைகள் அவன் முதுகை அணைக்காமல் இருந்தது அவனுக்குள் நெருடல் தந்தது. வேட்டியை அவிழ்த்து வீசி மாரியின் நிர்வாண உடம்பில் தன் உடம்பை வைத்து அழுத்தியவன் நேற்றுபோலவே இன்றும் அவள் அந்தரங்கத்தில் உறவுக்கான எந்தத் தயார் நிலையும் இல்லாமல்போக ஆத்திரமானான். சாராயத்தில் தெறித்து விழுந்தன வார்த்தைகள். '' இதோ பாரு... ஒன்கிட்ட என்னமோ கொறையிருக்கு. என்னான்னு சொல்லிடு. என்கூட படுக்கப் புடிக்கலியா...இல்ல இதுவே புடிக்கலியா. ஒன் மார்ல ஒனக்கு சதையே இல்ல. தொடையப் போட்டு இறுக்கிக்கிறே. என்ன கட்டிக்கூட புடிக்க மாட்டேங்குற. நான் ஊர்ல பாக்காத பொம்பளையே கெடையாது.  பொம்பள ஒடம்புல எது எப்பிடியிருக்கும், எங்க தொட்டா என்ன பண்ணும்னு எல்லாம் எனக்குத் தெரியும். எல்லாம் பண்ணியும் மரக்கட்ட மாதிரி கெடக்க. பொம்பளதான நீ.'' கேள்விக்கு நிமிர்ந்தாள். பாயில் எழுந்து அமர்ந்தவள் நிதானமாய் தன் ஜாக்கெட் ஊக்குகளைப் போட்டபடி சொன்னாள். '' என்கிட்ட எந்த சொகமும் ஒங்களுக்குக் கெடைக்காது. நான் பெரிய மனுஷியே ஆகல. என் ஒடம்புல ஏதோ கோளாறு. கல்யாணம் பண்னினா சரியாகிடும்னு பண்ணி வெச்சிட்டாங்க. எனக்கு இதுல விருப்பம் இல்ல.'' பன்னீர் செல்வம் பாயிலிருந்து எழுந்தான். வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டான். சட்டை அணிந்தவன் அறையை விட்டு வெளியேறினான். இரவு விளக்கை அணைத்துவிட்டு படுத்த மாரி அரைமணி நேரத்தில் தூங்கிப்போனாள். மறுநாள் பட்டம்மாளுக்கு செய்தி போய் பதறிக்கொண்டு பல்லடம் வந்து சேர்ந்தாள். மகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள். மாரியை அழைத்துக்கொண்டு கடைசி பஸ்ஸிலேறி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். ஊர் அதே இருட்டில் இருந்தது. தன் வாழ்க்கையில் கல்யாணம் என்பதே இல்லை என்பதில் உறுதியானாள். அம்மாவுடன் சேர்ந்து வேலைக்குப் போகத் துவங்கினாள். தான் என்ன தப்பு செய்தோம்; தான் மட்டும் ஏன் இப்படி மற்றவரிடமிருந்து தனித்துப் போனோம் என்று யோசித்துக் களைத்துப் போனாள்.  இங்கு விலகுதல் வேறு. விலக்குதல் வேறு. ஆனால் இரண்டையும் ஒன்றாக்கி இரண்டுமே ஒன்றாகி எல்லோரிடமிருந்தும் விலகி எல்லோரையும் விலக்கித் தனித்திருந்தாள். மாரி என்றொரு மனுஷி வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்பதே பலருக்கும் தெரியாமல் போயிற்று. ஆறுதலுக்காய் மீண்டும் மாரிமுத்தம்மாள் கோயிலுக்குப் போனாள். வயல் தாண்டி காட்டுப்பகுதியில் இருந்தது கோயில். உயரமான இடத்திலிருந்த கோயிலிலிருந்து ஊரின் மண் சாலையைக் காணலாம். வேலைக்குப் போகும் நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் கோயிலிலே கிடந்தாள் மாரி. அவள் பார்வையில் அந்த மண் சாலையில் சென்றுகொண்டிருந்தது ஊர். மாரிமுத்தம்மாள் இறுகிய பெரிய முலையுடன் நெளிந்து வளைந்த இடையுடன் அவளைப் பார்த்து சிரித்தது. மாரி தன் நெஞ்சுப்பகுதியைத் தொட்டுப்பார்த்தாள். அவளின் உடலும் மனமும் கனவும் வறண்டே இருந்தன. மாரிமுத்தம்மாள் மழை தரும் சாமி.  சிறிது தூரம் தள்ளி வெயில் முத்தம்மாள் ஆங்காரமாய் வீற்றிருக்கும் கோயிலுமுண்டு. மாரிமுத்தம்மாளிடம் ஆங்காரமில்லை. கனிவு மட்டுமே. மாரிக்கென்னமோ அலங்காரமற்ற எளிமையான தெய்வத்தைப் பார்க்கப்பார்க்க ஆத்திரம் பொங்கும். எதுவும் பேசத்தோன்றாது வெறுப்புடன் பார்த்தபடியிருப்பாள். கல்யாண ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது சாலையில். பெண்ணும் மாப்பிள்ளையும் உறவினர்களும் மேளச்சத்தத்துடன் சென்றுகொண்டிருக்க கோயில் சூலத்தின் அருகில் இருந்த சிறிய கல்லை எடுத்து ஊர்வலம் செல்லும்திசை நோக்கி எறிந்தாள். அன்றிரவு பெருமழை பெய்தது. நனைந்து வீடு திரும்பியவளைப் பார்த்துக் கத்தினாள் பட்டம்மாள். '' என்னடி நெனச்சிட்டுருக்க ஒம்மனசுல. இப்பிடி நனைஞ்சிட்டு வர்றே.'' '' நான் நனையத்தாம்மா இவ்ளோ மழையும் பெய்யுது'' என்றபடி வீட்டினுள்ளே சென்று தலை துவட்டிய மாரிக்கு அன்றுடன் வயது 35 பூர்த்தியடைந்திருந்தது. இன்னும் கொஞ்சம் வெயில். இன்னும் சில மழை. காட்டு வேலைக்குச் செல்வது நின்றுபோனது. காலைச் சாப்பாடும் இரவு உணவும் மட்டுமே. மாரி கோயிலே கதியென்று இருந்தாள். ஊர்க்காரர்களுக்கு அவள் கோயிலில் உள்ள மற்றொரு சிலைபோல ஆனாள். மாரியின் நாற்பதாவது வயதில் காசநோய் வந்து செத்துப்போனார் கோபால். வீட்டின் பட்டம்மாளும் மாரியும் தனியாகினர். இருவரின் வெப்பப் பெருமூச்சும் இரவுகளில் அவ்வீட்டின் சுவரில் எரிந்து படிந்தது. '' என்ன பொறப்புடி ஒம்பொறப்பு. இப்பிடி எதுக்கும் உபயோகப்படாம மலட்டு நெலமா கெடந்து போறதுக்கு ஒன்ன நான் பெக்காமலே இருந்துருப்பேனேடி. நான் பாவிடி'' தலையிலடித்துக்கொண்டு அழுதாள் பட்டம்மாள். ஏக்கத்திலேயே செத்துப்போனாள் ஒருநாள். மாரி அநாதையானாள். கோயிலுக்கு வருபவர்கள் தரும் உணவை உண்டு அங்கேயே கிடந்தாள். பசியென்பதே இல்லாமல் போயிற்று. கோயில் சுற்றிக் காடு. அதையொட்டிய ஆறொன்று. அதன் கரை தாண்டிச் சென்றால் வயல். காடு அவளைப் பயமுறுத்தவில்லை. மாறாக ஏற்றுக்கொண்டது. ஆற்றிலிருந்து தண்ணீர் மொண்டுவந்து சாமியைக் குளிப்பாட்டினாள். கருகருவென்ற நிறத்துடன் பெண்மையின் சகல லட்சணத்துடன் அமர்ந்திருந்த மாரிமுத்தம்மாள் முதன்முறையாக மாரியின் கண்ணுக்குக் கனிவாகத் தெரிந்தாள்.

நீண்ட கோடை ஆரம்பித்தது. வெயில் காட்டையும் விட்டுவைக்கவில்லை. ஆற்றில் நீர் குறையத் தொடங்கியது. அங்கங்கே ஊற்று  தோண்டி மக்கள் நீர் அள்ளிக்கொண்டிருந்தனர். மாரி கோயில்விட்டு அதிகம் வெளிவரவில்லை. ஒருநாள் இரவு தான் கட்டியிருந்த சேலையை அவிழ்த்து ஊற்று நீரில் துவைத்து அலசியவள்  நிர்வாணமாகவே கோயிலுக்கு வந்து உள்ளிருந்த கருங்கற் தரையின் இளஞ்சூட்டில் படுத்தாள். காட்டில் பெளர்ணமி இறைந்து கிடந்தது. மாரி பெண்ணுக்கு உரிய உள்ளுணர்வோடு இல்லாமல் போனாளே தவிர அழகிதான். முக லட்சணம் எல்லா இல்லாமையையும் மறக்கடிக்கும். மல்லாந்து கால்கள் விரித்துப் படுத்திருந்த அவளின் மீதும் சின்னச் சின்னதாய் பெளர்ணமிப் புள்ளிகள். அந்தப் பாம்பு நெளிந்து நெளிந்து நகர்ந்து நகர்ந்து கோயிலடைந்தது. உறக்கத்தில் தன் தொடையின் மீது உரசிப்போன பிசுபிசுப்புக்குக் கண் விழித்தாள் மாரி. அவள் வயிற்றின் மீது ஊர்ந்த பாம்பு தனது தலையை மேற்கொண்டு நகராமல் நிறுத்தியது. தனது வாலினை பின்னுக்கு இழுத்து தலையைத் தூக்கியது. நிலவொளியில் மாரியின் யோனி மீது நின்றபடி அந்தப் பாம்பு அசைந்தது. விஷ நாக்கை வெளியே துடிக்கவிட்டு துடிக்கவிட்டு நிறுத்தியது. மூச்சை மெலிதாய் விட்டபடி பாம்பின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் மாரி. வந்த வழியே மெள்ளப் பின்னகர்ந்து தலை திருப்பி வாலசைத்தபடி வேக வேகமாய் விரைந்தது. மாரி தன் அடிவயிற்றின் கீழே தொட்டுப்பார்த்தாள். அவளின் சிறுநீர்ப்பாதையிலிருந்து ஆரம்பித்து யோனி தாண்டிப் பரவியிருந்தது பாம்பின் ஈரம். 

மாரி இறக்கும்போது அவளுக்கு வயது 80.
.


 




























     

கதிரேசன் வாத்தியாரின் இன்னொரு பெயர்


கதிரேசன் வாத்தியாரின் இன்னொரு பெயர்





ஒருவாரம் அம்மாவுக்கு போன் செய்யாமல் இருந்துவிட்டால் போதும். உடனே பிபி ஏறி , சுகர் கூடி, கொலஸ்ட்ரால் அதிகமாகி ஆஸ்பத்திரியில் அட்மிட் என்று அப்பாவிடமிருந்து போன் வரும். அதனாலேயே இந்த ஒரு வருடமாக வாரம் ஒரு முறை அம்மாவுடன் போனில் பேசிவிடுவதுண்டு. எனக்குப் பகிர்ந்துகொள்ள எதுவுமில்லையென்றாலும் அம்மா என்னிடம் பேச வாரம் முழுவதும் வாழ்க்கையை சேமித்து வைத்திருப்பாள். நான் துபாய்க்கு வந்ததிலிருந்து  அம்மா என் கல்யாணப் பேச்சை எடுக்காமல் இருந்ததில்லை. ‘’ டேய் கார்த்தி...கும்பகோணத்திலேர்ந்து ஒரு வரன் வந்திருக்கு. போட்டோ பார்த்துட்டு எப்படியிருக்குன்னு சொல்றியா?’’ இதில் கும்பகோணம் என்பது மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை என்று மாறுமே தவிர மற்ற வார்த்தைகள் எல்லாம் மானே தேனே பொன்மானேதான். அம்மாவல்லவா. அப்படித்தான் பேசுவாள். ‘’ அதுக்குள்ள ஏம்மா...நான் இங்க வந்ததே சம்பாரிக்கத்தான். சம்பாரிச்சிட்டு சொல்றேன். அப்ப எந்தப் பொண்ணா இருந்தாலும் ஓகேதான்’’ இது எனது மானே தேனே பொன்மானே. இன்று போனில் பேசும்போதுதான் இடையில் அதைச் சொன்னாள். ‘’ கதிரேசன் வாத்தியார் சீரியஸ்னு ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணிருக்காங்கடா’’ புரியாமல் ‘’ எந்தக் கதிரேசன்?’’ என்றேன். ‘’ டேய். உன் கணக்கு வாத்தியார்டா’’ எத்தனையோ கணக்கு வாத்தியார்கள். யாரை ஞாபகம் வைத்துக்கொள்வது. ‘’ தெரிலம்மா... ம் சொல்லு’’ என்றேன் அசிரத்தையாக. ‘’ அட... நீங்கள்லாம் இன்னொரு பேரு வெச்சி அவரைக் கூப்புடுவீங்கள்ல, நம்ம வீட்டு எதிர்ல குடியிருந்தார்ல... அவர்டா’’ எனக்கு ஞாபகம் வந்துவிட்டது. கதிரேசன் சார், கணக்கு சார். கூடவே அந்த இன்னொரு பெயர். ‘’ ஆமாம்மா. என்னாச்சி அவருக்கு?’’ என்றேன். வெளிச்சம் ஊடுருவி பனி விலக்கி சாலை தெரிவதுபோல் பளிச்சென்று எல்லாம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. 

நான் நேரடியாக ஒன்றாம் வகுப்புக்குள் நுழைந்தவன். எல்கேஜி, யூகேஜி அனுபவமெல்லாம் கிடையாது. அதனாலோ என்னவோ பள்ளியின் முதல்நாள் என்பது அத்தனை பயமாய் இருந்தது. அதற்கேற்றார்போல் ஆஜானுபாகுவாய் அறிமுகமானார் என் வகுப்பு வாத்தியாரான கதிரேசன். வேட்டி கட்டியிருப்பார். குறிப்பிட்டுச் சொல்லக் காரணம் பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் மட்டுமின்றி எனக்குத் தெரிந்த ஆசிரியர்கள் அனைவரும் பேண்ட் போட்டிருக்க இவர் மட்டும் வேட்டி கட்டியிருந்ததில் அந்த 40 வயதிலேயே மிக வயதானவராகத் தோற்றமளித்தார். அப்படி ஒரு பருமனான உடம்பு. முகத்தில் கவலையும் சிடுசிடுப்பும் ஒருசேர தேங்கியிருக்கும். பம்மிய கன்னங்களில் அணிந்திருக்கும் கண்ணாடியின் தழும்பு பதிந்திருக்கும். கதிரேசன் சார் எங்களின் கவனத்துக்கு அதிகம் வந்ததற்கு அவரின் உருவமோ, வேட்டியோ, பிரம்பால் எங்கள் விரல்களில் பியானோ வாசிப்பதோ இல்லை. இன்னொரு முக்கியக் காரணம் . ஒருநாள் நாராயணன்தான் அதைக் கண்டுபிடித்துச் சொன்னான். " கார்த்தி...கதிரேசன் சார் கோவணம் கட்டியிருக்கார்டா." இதிலொன்றும் அதிசயமில்லை. எங்கள் ஊரில் வயதானவர்கள் கோவணம் மட்டுமே அணிந்து வயல் வேலைக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். அடுத்து அவன் சொன்ன செய்திதான் அவரைத் தனி ஒருவனாக்கியது. " ஒண்ணுக்குப் போறதுக்குக் கீழ பெருசா இருக்குடா கார்த்தி" என்றான். " என்னடா ஒளர்றே" என்றேன் நிஜமாகவே புரியாமல். " ஆமாண்டா. அன்னிக்கி ஒண்ணுக்கிருக்கும்போது பார்த்தேன். பின்னாடி கோவணத்த அவுத்து வுட்டுட்டு ஒக்காந்திருந்தாரா...கறுப்பா பெருசா பாறாங்கல்லு மாதிரி தரைல ஒக்காந்துருந்துடா." " நெஜமாவாடா" என்றேன் சிரிப்பை அடக்க முடியாமல்.

கதிரேசன் வேட்டி கட்டுவதற்குக் காரணம் புரிந்துபோனது. அவர் அடிவயிற்றுக்குக் கீழே எப்போதும் புடைத்துக்கொண்டு தெரியும் வேட்டி. நாராயணன் சொன்னபின்பு வகுப்பில் இருக்கும் அனைவரின் பார்வையும் அங்கேதான் இருக்குமே தவிர அவர் நடத்தும் பாடத்தில் இருக்காது. என் பாட்டி கையில் பிடித்துக் கொஞ்சுவதால் ஒண்ணுக்குப் போகும் இடத்தை குஞ்சுமணி என்று முன்பே அறிந்திருந்த எனக்கு அதன் கீழ் உள்ளது விரைகள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆறாம் வகுப்புக்குச் செல்லும்வரை காத்திருக்க வேண்டியதாயிருந்தது. ஆறாம் வகுப்புக்குச் செல்லும்போது என்னுடன் இணைந்தான் அவர் மகன் . பெயர் வினோத். ‘’ வினோத். ஒங்கப்பாவுக்கு ஏண்டா அப்படியிருக்கு?’’ என்றால் ‘’ எப்படியிருக்கு. தெரியலையே... ஆனா, அதனால டெய்லி எங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வரும்’’ என்றான். எங்களுக்கு அது புதுத் தகவல். டிராயரிலிருந்து பேண்ட்டுக்கு மாறிய தைரியத்தில் என் அப்பாவிடம் கேட்டேன். ‘’ அதை ஓதம்னு சொல்வாங்கப்பா. சின்ன வயசுல அங்கே அடிபட்டு கவனிக்காம விட்ருந்தா வீங்கிடும்ப்பா. இல்லாட்டி நீர் கோத்திருந்தாலும் அப்படியிருக்கும்.’’ ‘’ வலிக்குமாப்பா’’ என்றதற்கு ’’ தெரியல. ஒனக்கு எதுக்கு அது. அவரையெல்லாம் கிண்டலா பார்க்கக் கூடாது’’ என்று என்மீது கோபமான அப்பாதான் டீக்கடை பெஞ்சுக்காரர்களிடம் ‘’ யாரு அந்த ஓதப்புடுக்கானா?’’ என்று அடையாளப்படுத்தி குறிப்பிட்டு வெடித்துச் சிரித்தார். ஓதப்புடுக்கான். கதிரேசன் சாரை நேருக்கு நேர் பார்க்கும்போதெல்லாம் அந்தப் பெயரே மனதில் வந்துபோனது. நான் வளர்ந்தேன். கதிரேசன் சாருக்கும் வளர்ந்ததுபோல்தான் இருந்தது. வீட்டுக்குள் நடந்துவந்த கணவன் மனைவி பிரச்னை வீதிக்கு வந்தபோது அது உறுதியானது.

கோடை விடுமுறை நாட்களில் அவர் வீட்டுக்கு விளையாடப் போகும்போதெல்லாம் , எங்கள் கண்ணெதிரிலேயே வினோத்தை கன்னாபின்னாவென்று திட்டிவிட்டு தன் மனைவியை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொள்வார். சிறிது நேரத்தில் அந்த வீட்டைவிட்டு வெளியேறும் அந்த அம்மாவின் அலறல். அக்கம்பக்கத்தில் அது வேறுவிதமாய் புரிந்துகொள்ளப்பட்டது. ‘’ ஓதப்புடுக்கானுக்கு ரொம்பத்தான். பகல்லையும் அவனுக்கு அது தேவைப்படுதுபோல. பாவம் அந்தம்மா. அவன் கையில மாட்டிக்கிட்டு என்ன பாடுபடுறாங்களோ’’ கதிரேசன் சார் இருந்தது வாடகை வீடு. வீட்டின் பின்புறம் வேலை என்று அந்த ஹவுஸ் ஓனர் வீட்டின் வாசலில் செங்கல் அடுக்கி ஆற்று மணலைக் கொட்டி வைத்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அந்தச் செங்கல்லும் மணலும் அப்படியே இருந்தது; மழையில் கரைந்து வெயிலில் காய்ந்து. 50 வயதில் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார் கதிரேசன் சார். வீட்டில்தான் இருந்தார். அதிகம் வெளியில் தென்படுவதில்லை. ஆனால் அது எதற்கென்று சில நாட்களில் புரிந்துபோனது. கதிரேசன் சாருக்குதான் 50 வயது. உடலும் நடையும் எடையும் ராட்சசனாய்க் காட்டும். அவர் மனைவி அப்படியே நேர் எதிர். இருவருக்கும் வயது ரீதியாக  நிறைய வித்தியாசம். மாணவர்களிடம் கத்திக் கத்தியே கதிரேசன் சாருக்கு கம்பீரமான குரல். குரலில் மட்டுமே கம்பீரம். ‘’ நல்லாத்தானடி இருந்தேன். இந்தப் பாழாப்போன இம்சை வந்து எல்லாத்தையும் நாசமாக்கிடுச்சி. அது என் தப்பா?’’ ஊரடங்கிய தனி இரவில் அவர் குரலின் இயலாமை அந்த அம்மாவின் காலில் விழுந்து கெஞ்சும். கேட்க பாவமாயிருக்கும். கதிரேசன் சாருக்கு நெருங்கிய நண்பர்கள், மனிதர்கள் எனக்குத் தெரிந்து இல்லை. இந்த ஒரு விஷயத்துக்காகவே அவர் யாரையும் அருகில் சேர்த்துக்கொள்ளவில்லையோ என்றும் தோன்றியது. கடும் மன உளைச்சலில் இருந்த அவருக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமில்லை. பத்தாம் வகுப்புக்குச் சென்றபோது கதிரேசன் சார் அவர் மகன் வினோத்தை பக்கத்து ஊர் ஸ்கூலில் கொண்டுபோய் சேர்த்தார். சாரும் அவரின் மனைவியும் தனியானார்கள். அவர்கள் இருவருமே தனித்தனியாகத்தான் இருந்தார்கள். கதிரேசன் சாருக்கு தன் நோய்மையின் பொருட்டு தன் மனைவிமீது சந்தேகம் அதிகமிருந்தது. அவ்வப்போது வெளிப்படும் ஆத்திரக் குரலில் அது பிரதிபலித்தது. 

ஒருநாள் மதியம் அவர் வீட்டு வாசலில் பைக்கொன்று நிற்பதைப் பார்த்தேன். சிறிது நேரத்தில் என் வயதொத்த ஒருவன் அந்த பைக்கை ஸ்டார்ட் செய்து விரைந்தான். அன்றிரவு தற்கொலைக்கு முயன்றார் கதிரேசன் சாரின் மனைவி. சார் அலறிய அலறலில் விழித்து எழுந்து ஓடிப்போய் பார்த்தோம் நாங்கள். உத்தரத்தில் கயிறு தொங்கிக்கொண்டிருக்க , மயங்கியிருந்த தன் மனைவியை மடியில் போட்டு அழுதுகொண்டிருந்தார் கதிரேசன் சார். என் அம்மாதான் சாரின் மனைவி முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்து கலைந்திருந்த ஆடையை சரி செய்தார். தலையில் கை வைத்துக்கொண்டு ஓரமாய் உட்கார்ந்திருந்த கதிரேசன் சாரின் வேட்டி விலகியிருந்ததில் கோவணம் கட்டாதது தெரிந்தது. என்ன நடந்திருக்குமென்று எங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் எதுவும் கேட்காமல் வந்துவிட்டோம். ஆனாலும், அன்றிரவு தூக்கம் தொலைந்துபோனது. வீட்டு வாசலில் கொட்டப்பட்டிருந்த மணலில் உட்கார்ந்தபடி விடிய விடிய அழுதுகொண்டிருந்தார் கதிரேசன் சார். என் அம்மா மறுநாள் சார் வீட்டுக்குச் சென்று அவர் மனைவியைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார். ‘’ அவர்கிட்ட படிச்ச பையன் அவரைப் பார்க்கணும்னு வந்தான். நல்ல மார்க் எடுத்துருக்கேன்னு சொல்லி ஸ்வீட் பாக்ஸ் கொடுத்துட்டுப் போனான். அது தெரிஞ்சி நைட் சண்டை. நான் என்ன சொல்லியும் நம்பல’’ அழுதுகொண்டே அவர் மனைவி சொன்னதை அம்மா, அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். கோவணம் கட்டாமல் நெகிழ்ந்துகிடந்த கதிரேசன் சாரின் வேட்டி எனக்கு இரவின் இன்னொரு பாதியைச் சொன்னது. அதன்பின்பு மேலும் ஒடுங்கிப் போனார் கதிரேசன் சார். அவர் மனைவிக்காவது ஆறுதல் வார்த்தைகள் பேச என் அம்மா இருந்தாள். கதிரேசன் சாருக்கு யார் என்னவென்று ஆறுதல் சொல்வது. அம்மாவிடம் கதிரேசன் சார் மனைவி சொல்வதை அம்மா, அப்பாவிடம் சொல்லும்போதெல்லாம் படிப்பது போன்ற பாவனையில் காதைத் தீட்டிவைத்துக்கொண்டு ஒட்டுக் கேட்டதன் பலன் கதிரேசன் சாரின் முன் வாழ்க்கை தெரிந்தது. 

கதிரேசன் சாருக்கு மிகத் தாமதமாகத்தான் திருமணம் ஆகியிருக்கிறது. வினோத் பிறக்கும்வரை பிரச்னையில்லை. அதன்பின்பு எப்படியோ இந்த பாரம் வந்து சேர எவ்வித சிகிச்சைக்கும் பலனளிக்காமல் வளர்ந்துகொண்டே போயிருக்கிறது. கதிரேசன் சாருக்கும் அவர் மனைவிக்கும் நிம்மதி குறைந்துகொண்டே போயிருக்கிறது. உறவில் ஈடுபட முடியாத அவரின் இயலாமையைத் தன் மனைவியிடம் வெவ்வேறு வடிவங்களில் காட்டத் தொடங்கியிருக்கிறார். அது ஒன்றும் மறைத்து வைக்கக்கூடிய விஷயமில்லையே. எங்கே சென்றாலும் அவர் இயலாமையின் மொத்த வெளிப்பாடு துருத்திக்கொண்டு தெரிய, அவமானத்தில் சுருங்கிய கதிரேசன் சார் தன்னை, தன் நட்பு வட்டாரத்தை, தன் ஆசைகளை எல்லாம் சுருக்கி சின்ன வட்டத்துக்குள் வாழத் துவங்கியிருக்கிறார். அம்மா சொன்னதைக் கேட்டதும் கதிரேசன் சார்மீது தாள முடியாத இரக்கம் ஏற்பட்டது. அவரிடம் சென்று உங்கள் மீது இரக்கம் கொள்கிறேன் என்பதே அவரை உயிரோடு கொல்லும் ஒன்று. ஒருநாள் செகண்ட் ஷோ சினிமா முடிந்து திரும்பும்போது தன் வீட்டு  வாசலில் கொட்டப்பட்டிருந்த ஆற்று மணல் மீது கதிரேசன் சார் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். கோடைக்காலம் என்பதால் புழுக்கம் தாளாமல் வெளியே வந்து அமர்ந்திருக்கிறார் என்று நினைத்தேன். தளர்ந்த மார்புகள் அவருடைய பெரிய தொப்பையின் மேல் விழுந்து படிந்திருந்தன. தெருவிளக்கின் வெளிச்சத்தை, அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் சாரின் மீது முழுவதும் படியவிடாமல் அங்கங்கே மறைத்திருந்தன. சார் வினோதமான காரியம் ஒன்றைச் செய்துகொண்டிருந்தார். கால்கள் இரண்டையும் அகலவிரித்து தன் இடது உள்ளங்கையில் அவரின் பருத்த பெரிய சைஸ் விரைகளைத் தாங்கியிருந்தார்.  வலது கையில் ஆற்று மணல் அள்ளி விரைகளின் மீது வைத்து சரசரவெனத் தேய்த்துக்கொண்டிருந்தார். அவரின் முகம் முழுவதும் இருளில் இருக்க அவ்வப்போது வெளிச்சத்துக்கு வந்து மீளும் சில நொடிகளில் அவரின் கண்ணீர் தெரிந்து மறைந்தது. நாய்க்குட்டி முனகுவது போன்ற ஒலியுடன் அழுதுகொண்டிருந்தார். புழுக்கம் வெளியில் இல்லை என்பது தெரிந்தது. இப்படிச் செய்வதன் மூலம் எதனிலிருந்தோ விடுபட நினைக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. என் வருகையை அவர் லட்சியம் செய்ததுபோல் தெரியவில்லை. தெருவில் நடமாட்டம் ஓய்ந்த நிசியில் கதிரேசன் சார் மட்டும் அவருக்கே தெரியாதபடி அழுதுகொண்டிருந்தார். எவ்வளவு நேரம் அப்படியிருந்தாரென்று தெரியவில்லை. மறுநாள் ஆச்சர்யமாய் கதிரேசன் சார், வாசலில் நின்றிருந்த என் அப்பாவிடம் வந்து ‘’ ருசி என்னன்னே தெரியாம ஒரு உணவைச் சாப்பிடுறது கொடுமை சார்’’ என்றார். என் அப்பா பதிலுக்கு ஏதோ சொல்லும் முன்பே நகர்ந்துவிட்டார். கதிரேசன் சார் எவ்வித பதிலையும் யாரிடமும் எதிர்பார்க்காமல் வாழ்ந்துகொண்டிருந்தார். 

வினோத் வீட்டுக்கு வந்திருந்த ஒருநாள் இரவில் கதிரேசன் சாருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை நடந்தது. வீடுதாண்டி வெளியில் வந்த இருவரின் வாக்குவாதத்தில் குறுக்கிடாமல் கண்ணியம் காத்தோம். மறுநாள் விடிந்ததும் எங்களை வந்து அடைந்தது கதிரேசன் சார் மனைவி இறந்துவிட்ட தகவல். துக்கத்துக்கு வந்திருந்த ஊர் கதிரேசன் தொல்லை தாளாமல் அந்த அம்மா தற்கொலை செய்துகொண்டுவிட்டதாகவும், கதிரேசன் சார்தான் ஆத்திரத்தில் அவர் மனைவியைக் கொன்றுவிட்டதாகவும் கதைகள் பேசிப்போனது. நெஞ்சுவலி வந்து இறந்துபோன கதிரேசன் சாரின் மனைவியை எல்லோரும்  சேர்ந்து எரித்துவிட்டு வந்தோம். வினோத்துக்கு ஆறுதலாய் நான் இருக்க, துளிக் கண்ணீர்கூட சிந்தாத கதிரேசன் சாரின் உள் அழுத்தம் எரியாமல் இருந்தது. சில நாட்களில் கதிரேசன் சார் வீட்டைக் காலி செய்தார். இதே ஊரில் எங்கேயோ இருக்கிறார் எனக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், அதன் பின்பு அவரை நான் பார்க்கவில்லை. நடுவில் ஒருமுறை வினோத்தை மட்டும் பஸ் ஸ்டாப்பில் வைத்துச் சந்தித்தேன். அத்தை வீட்டில் தங்கி டிகிரி படிப்பதாய்ச் சொன்னான். அவனிடமும் உன் அப்பா எப்படியிருக்கிறார் என்று கேட்கவில்லை. விடை தெரிந்த கேள்விகள் கேட்கப்படாமல் இருத்தலே நலமெனப் பட்டது.  அவ்வளவுதான். காலேஜ், படிப்பு, வேலை , வெளிநாட்டுப் பயணம் என்பதில் சுத்தமாய் அப்படி ஒரு ஜீவன் வாழ்வதையே மறந்துபோனேன். இன்றைய போன்காலில் அம்மா எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திவிட்டாள். சீரியஸாய் இருக்கும் கதிரேசன் சார் நலமடைந்துவிட்டாரா என்று நாளை போன் செய்து அம்மாவிடம் கேட்க வேண்டும்.
.