Friday 24 August 2018

கதிரேசன் வாத்தியாரின் இன்னொரு பெயர்


கதிரேசன் வாத்தியாரின் இன்னொரு பெயர்





ஒருவாரம் அம்மாவுக்கு போன் செய்யாமல் இருந்துவிட்டால் போதும். உடனே பிபி ஏறி , சுகர் கூடி, கொலஸ்ட்ரால் அதிகமாகி ஆஸ்பத்திரியில் அட்மிட் என்று அப்பாவிடமிருந்து போன் வரும். அதனாலேயே இந்த ஒரு வருடமாக வாரம் ஒரு முறை அம்மாவுடன் போனில் பேசிவிடுவதுண்டு. எனக்குப் பகிர்ந்துகொள்ள எதுவுமில்லையென்றாலும் அம்மா என்னிடம் பேச வாரம் முழுவதும் வாழ்க்கையை சேமித்து வைத்திருப்பாள். நான் துபாய்க்கு வந்ததிலிருந்து  அம்மா என் கல்யாணப் பேச்சை எடுக்காமல் இருந்ததில்லை. ‘’ டேய் கார்த்தி...கும்பகோணத்திலேர்ந்து ஒரு வரன் வந்திருக்கு. போட்டோ பார்த்துட்டு எப்படியிருக்குன்னு சொல்றியா?’’ இதில் கும்பகோணம் என்பது மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை என்று மாறுமே தவிர மற்ற வார்த்தைகள் எல்லாம் மானே தேனே பொன்மானேதான். அம்மாவல்லவா. அப்படித்தான் பேசுவாள். ‘’ அதுக்குள்ள ஏம்மா...நான் இங்க வந்ததே சம்பாரிக்கத்தான். சம்பாரிச்சிட்டு சொல்றேன். அப்ப எந்தப் பொண்ணா இருந்தாலும் ஓகேதான்’’ இது எனது மானே தேனே பொன்மானே. இன்று போனில் பேசும்போதுதான் இடையில் அதைச் சொன்னாள். ‘’ கதிரேசன் வாத்தியார் சீரியஸ்னு ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணிருக்காங்கடா’’ புரியாமல் ‘’ எந்தக் கதிரேசன்?’’ என்றேன். ‘’ டேய். உன் கணக்கு வாத்தியார்டா’’ எத்தனையோ கணக்கு வாத்தியார்கள். யாரை ஞாபகம் வைத்துக்கொள்வது. ‘’ தெரிலம்மா... ம் சொல்லு’’ என்றேன் அசிரத்தையாக. ‘’ அட... நீங்கள்லாம் இன்னொரு பேரு வெச்சி அவரைக் கூப்புடுவீங்கள்ல, நம்ம வீட்டு எதிர்ல குடியிருந்தார்ல... அவர்டா’’ எனக்கு ஞாபகம் வந்துவிட்டது. கதிரேசன் சார், கணக்கு சார். கூடவே அந்த இன்னொரு பெயர். ‘’ ஆமாம்மா. என்னாச்சி அவருக்கு?’’ என்றேன். வெளிச்சம் ஊடுருவி பனி விலக்கி சாலை தெரிவதுபோல் பளிச்சென்று எல்லாம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. 

நான் நேரடியாக ஒன்றாம் வகுப்புக்குள் நுழைந்தவன். எல்கேஜி, யூகேஜி அனுபவமெல்லாம் கிடையாது. அதனாலோ என்னவோ பள்ளியின் முதல்நாள் என்பது அத்தனை பயமாய் இருந்தது. அதற்கேற்றார்போல் ஆஜானுபாகுவாய் அறிமுகமானார் என் வகுப்பு வாத்தியாரான கதிரேசன். வேட்டி கட்டியிருப்பார். குறிப்பிட்டுச் சொல்லக் காரணம் பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் மட்டுமின்றி எனக்குத் தெரிந்த ஆசிரியர்கள் அனைவரும் பேண்ட் போட்டிருக்க இவர் மட்டும் வேட்டி கட்டியிருந்ததில் அந்த 40 வயதிலேயே மிக வயதானவராகத் தோற்றமளித்தார். அப்படி ஒரு பருமனான உடம்பு. முகத்தில் கவலையும் சிடுசிடுப்பும் ஒருசேர தேங்கியிருக்கும். பம்மிய கன்னங்களில் அணிந்திருக்கும் கண்ணாடியின் தழும்பு பதிந்திருக்கும். கதிரேசன் சார் எங்களின் கவனத்துக்கு அதிகம் வந்ததற்கு அவரின் உருவமோ, வேட்டியோ, பிரம்பால் எங்கள் விரல்களில் பியானோ வாசிப்பதோ இல்லை. இன்னொரு முக்கியக் காரணம் . ஒருநாள் நாராயணன்தான் அதைக் கண்டுபிடித்துச் சொன்னான். " கார்த்தி...கதிரேசன் சார் கோவணம் கட்டியிருக்கார்டா." இதிலொன்றும் அதிசயமில்லை. எங்கள் ஊரில் வயதானவர்கள் கோவணம் மட்டுமே அணிந்து வயல் வேலைக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். அடுத்து அவன் சொன்ன செய்திதான் அவரைத் தனி ஒருவனாக்கியது. " ஒண்ணுக்குப் போறதுக்குக் கீழ பெருசா இருக்குடா கார்த்தி" என்றான். " என்னடா ஒளர்றே" என்றேன் நிஜமாகவே புரியாமல். " ஆமாண்டா. அன்னிக்கி ஒண்ணுக்கிருக்கும்போது பார்த்தேன். பின்னாடி கோவணத்த அவுத்து வுட்டுட்டு ஒக்காந்திருந்தாரா...கறுப்பா பெருசா பாறாங்கல்லு மாதிரி தரைல ஒக்காந்துருந்துடா." " நெஜமாவாடா" என்றேன் சிரிப்பை அடக்க முடியாமல்.

கதிரேசன் வேட்டி கட்டுவதற்குக் காரணம் புரிந்துபோனது. அவர் அடிவயிற்றுக்குக் கீழே எப்போதும் புடைத்துக்கொண்டு தெரியும் வேட்டி. நாராயணன் சொன்னபின்பு வகுப்பில் இருக்கும் அனைவரின் பார்வையும் அங்கேதான் இருக்குமே தவிர அவர் நடத்தும் பாடத்தில் இருக்காது. என் பாட்டி கையில் பிடித்துக் கொஞ்சுவதால் ஒண்ணுக்குப் போகும் இடத்தை குஞ்சுமணி என்று முன்பே அறிந்திருந்த எனக்கு அதன் கீழ் உள்ளது விரைகள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆறாம் வகுப்புக்குச் செல்லும்வரை காத்திருக்க வேண்டியதாயிருந்தது. ஆறாம் வகுப்புக்குச் செல்லும்போது என்னுடன் இணைந்தான் அவர் மகன் . பெயர் வினோத். ‘’ வினோத். ஒங்கப்பாவுக்கு ஏண்டா அப்படியிருக்கு?’’ என்றால் ‘’ எப்படியிருக்கு. தெரியலையே... ஆனா, அதனால டெய்லி எங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வரும்’’ என்றான். எங்களுக்கு அது புதுத் தகவல். டிராயரிலிருந்து பேண்ட்டுக்கு மாறிய தைரியத்தில் என் அப்பாவிடம் கேட்டேன். ‘’ அதை ஓதம்னு சொல்வாங்கப்பா. சின்ன வயசுல அங்கே அடிபட்டு கவனிக்காம விட்ருந்தா வீங்கிடும்ப்பா. இல்லாட்டி நீர் கோத்திருந்தாலும் அப்படியிருக்கும்.’’ ‘’ வலிக்குமாப்பா’’ என்றதற்கு ’’ தெரியல. ஒனக்கு எதுக்கு அது. அவரையெல்லாம் கிண்டலா பார்க்கக் கூடாது’’ என்று என்மீது கோபமான அப்பாதான் டீக்கடை பெஞ்சுக்காரர்களிடம் ‘’ யாரு அந்த ஓதப்புடுக்கானா?’’ என்று அடையாளப்படுத்தி குறிப்பிட்டு வெடித்துச் சிரித்தார். ஓதப்புடுக்கான். கதிரேசன் சாரை நேருக்கு நேர் பார்க்கும்போதெல்லாம் அந்தப் பெயரே மனதில் வந்துபோனது. நான் வளர்ந்தேன். கதிரேசன் சாருக்கும் வளர்ந்ததுபோல்தான் இருந்தது. வீட்டுக்குள் நடந்துவந்த கணவன் மனைவி பிரச்னை வீதிக்கு வந்தபோது அது உறுதியானது.

கோடை விடுமுறை நாட்களில் அவர் வீட்டுக்கு விளையாடப் போகும்போதெல்லாம் , எங்கள் கண்ணெதிரிலேயே வினோத்தை கன்னாபின்னாவென்று திட்டிவிட்டு தன் மனைவியை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொள்வார். சிறிது நேரத்தில் அந்த வீட்டைவிட்டு வெளியேறும் அந்த அம்மாவின் அலறல். அக்கம்பக்கத்தில் அது வேறுவிதமாய் புரிந்துகொள்ளப்பட்டது. ‘’ ஓதப்புடுக்கானுக்கு ரொம்பத்தான். பகல்லையும் அவனுக்கு அது தேவைப்படுதுபோல. பாவம் அந்தம்மா. அவன் கையில மாட்டிக்கிட்டு என்ன பாடுபடுறாங்களோ’’ கதிரேசன் சார் இருந்தது வாடகை வீடு. வீட்டின் பின்புறம் வேலை என்று அந்த ஹவுஸ் ஓனர் வீட்டின் வாசலில் செங்கல் அடுக்கி ஆற்று மணலைக் கொட்டி வைத்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அந்தச் செங்கல்லும் மணலும் அப்படியே இருந்தது; மழையில் கரைந்து வெயிலில் காய்ந்து. 50 வயதில் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார் கதிரேசன் சார். வீட்டில்தான் இருந்தார். அதிகம் வெளியில் தென்படுவதில்லை. ஆனால் அது எதற்கென்று சில நாட்களில் புரிந்துபோனது. கதிரேசன் சாருக்குதான் 50 வயது. உடலும் நடையும் எடையும் ராட்சசனாய்க் காட்டும். அவர் மனைவி அப்படியே நேர் எதிர். இருவருக்கும் வயது ரீதியாக  நிறைய வித்தியாசம். மாணவர்களிடம் கத்திக் கத்தியே கதிரேசன் சாருக்கு கம்பீரமான குரல். குரலில் மட்டுமே கம்பீரம். ‘’ நல்லாத்தானடி இருந்தேன். இந்தப் பாழாப்போன இம்சை வந்து எல்லாத்தையும் நாசமாக்கிடுச்சி. அது என் தப்பா?’’ ஊரடங்கிய தனி இரவில் அவர் குரலின் இயலாமை அந்த அம்மாவின் காலில் விழுந்து கெஞ்சும். கேட்க பாவமாயிருக்கும். கதிரேசன் சாருக்கு நெருங்கிய நண்பர்கள், மனிதர்கள் எனக்குத் தெரிந்து இல்லை. இந்த ஒரு விஷயத்துக்காகவே அவர் யாரையும் அருகில் சேர்த்துக்கொள்ளவில்லையோ என்றும் தோன்றியது. கடும் மன உளைச்சலில் இருந்த அவருக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமில்லை. பத்தாம் வகுப்புக்குச் சென்றபோது கதிரேசன் சார் அவர் மகன் வினோத்தை பக்கத்து ஊர் ஸ்கூலில் கொண்டுபோய் சேர்த்தார். சாரும் அவரின் மனைவியும் தனியானார்கள். அவர்கள் இருவருமே தனித்தனியாகத்தான் இருந்தார்கள். கதிரேசன் சாருக்கு தன் நோய்மையின் பொருட்டு தன் மனைவிமீது சந்தேகம் அதிகமிருந்தது. அவ்வப்போது வெளிப்படும் ஆத்திரக் குரலில் அது பிரதிபலித்தது. 

ஒருநாள் மதியம் அவர் வீட்டு வாசலில் பைக்கொன்று நிற்பதைப் பார்த்தேன். சிறிது நேரத்தில் என் வயதொத்த ஒருவன் அந்த பைக்கை ஸ்டார்ட் செய்து விரைந்தான். அன்றிரவு தற்கொலைக்கு முயன்றார் கதிரேசன் சாரின் மனைவி. சார் அலறிய அலறலில் விழித்து எழுந்து ஓடிப்போய் பார்த்தோம் நாங்கள். உத்தரத்தில் கயிறு தொங்கிக்கொண்டிருக்க , மயங்கியிருந்த தன் மனைவியை மடியில் போட்டு அழுதுகொண்டிருந்தார் கதிரேசன் சார். என் அம்மாதான் சாரின் மனைவி முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்து கலைந்திருந்த ஆடையை சரி செய்தார். தலையில் கை வைத்துக்கொண்டு ஓரமாய் உட்கார்ந்திருந்த கதிரேசன் சாரின் வேட்டி விலகியிருந்ததில் கோவணம் கட்டாதது தெரிந்தது. என்ன நடந்திருக்குமென்று எங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் எதுவும் கேட்காமல் வந்துவிட்டோம். ஆனாலும், அன்றிரவு தூக்கம் தொலைந்துபோனது. வீட்டு வாசலில் கொட்டப்பட்டிருந்த மணலில் உட்கார்ந்தபடி விடிய விடிய அழுதுகொண்டிருந்தார் கதிரேசன் சார். என் அம்மா மறுநாள் சார் வீட்டுக்குச் சென்று அவர் மனைவியைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார். ‘’ அவர்கிட்ட படிச்ச பையன் அவரைப் பார்க்கணும்னு வந்தான். நல்ல மார்க் எடுத்துருக்கேன்னு சொல்லி ஸ்வீட் பாக்ஸ் கொடுத்துட்டுப் போனான். அது தெரிஞ்சி நைட் சண்டை. நான் என்ன சொல்லியும் நம்பல’’ அழுதுகொண்டே அவர் மனைவி சொன்னதை அம்மா, அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். கோவணம் கட்டாமல் நெகிழ்ந்துகிடந்த கதிரேசன் சாரின் வேட்டி எனக்கு இரவின் இன்னொரு பாதியைச் சொன்னது. அதன்பின்பு மேலும் ஒடுங்கிப் போனார் கதிரேசன் சார். அவர் மனைவிக்காவது ஆறுதல் வார்த்தைகள் பேச என் அம்மா இருந்தாள். கதிரேசன் சாருக்கு யார் என்னவென்று ஆறுதல் சொல்வது. அம்மாவிடம் கதிரேசன் சார் மனைவி சொல்வதை அம்மா, அப்பாவிடம் சொல்லும்போதெல்லாம் படிப்பது போன்ற பாவனையில் காதைத் தீட்டிவைத்துக்கொண்டு ஒட்டுக் கேட்டதன் பலன் கதிரேசன் சாரின் முன் வாழ்க்கை தெரிந்தது. 

கதிரேசன் சாருக்கு மிகத் தாமதமாகத்தான் திருமணம் ஆகியிருக்கிறது. வினோத் பிறக்கும்வரை பிரச்னையில்லை. அதன்பின்பு எப்படியோ இந்த பாரம் வந்து சேர எவ்வித சிகிச்சைக்கும் பலனளிக்காமல் வளர்ந்துகொண்டே போயிருக்கிறது. கதிரேசன் சாருக்கும் அவர் மனைவிக்கும் நிம்மதி குறைந்துகொண்டே போயிருக்கிறது. உறவில் ஈடுபட முடியாத அவரின் இயலாமையைத் தன் மனைவியிடம் வெவ்வேறு வடிவங்களில் காட்டத் தொடங்கியிருக்கிறார். அது ஒன்றும் மறைத்து வைக்கக்கூடிய விஷயமில்லையே. எங்கே சென்றாலும் அவர் இயலாமையின் மொத்த வெளிப்பாடு துருத்திக்கொண்டு தெரிய, அவமானத்தில் சுருங்கிய கதிரேசன் சார் தன்னை, தன் நட்பு வட்டாரத்தை, தன் ஆசைகளை எல்லாம் சுருக்கி சின்ன வட்டத்துக்குள் வாழத் துவங்கியிருக்கிறார். அம்மா சொன்னதைக் கேட்டதும் கதிரேசன் சார்மீது தாள முடியாத இரக்கம் ஏற்பட்டது. அவரிடம் சென்று உங்கள் மீது இரக்கம் கொள்கிறேன் என்பதே அவரை உயிரோடு கொல்லும் ஒன்று. ஒருநாள் செகண்ட் ஷோ சினிமா முடிந்து திரும்பும்போது தன் வீட்டு  வாசலில் கொட்டப்பட்டிருந்த ஆற்று மணல் மீது கதிரேசன் சார் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். கோடைக்காலம் என்பதால் புழுக்கம் தாளாமல் வெளியே வந்து அமர்ந்திருக்கிறார் என்று நினைத்தேன். தளர்ந்த மார்புகள் அவருடைய பெரிய தொப்பையின் மேல் விழுந்து படிந்திருந்தன. தெருவிளக்கின் வெளிச்சத்தை, அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் சாரின் மீது முழுவதும் படியவிடாமல் அங்கங்கே மறைத்திருந்தன. சார் வினோதமான காரியம் ஒன்றைச் செய்துகொண்டிருந்தார். கால்கள் இரண்டையும் அகலவிரித்து தன் இடது உள்ளங்கையில் அவரின் பருத்த பெரிய சைஸ் விரைகளைத் தாங்கியிருந்தார்.  வலது கையில் ஆற்று மணல் அள்ளி விரைகளின் மீது வைத்து சரசரவெனத் தேய்த்துக்கொண்டிருந்தார். அவரின் முகம் முழுவதும் இருளில் இருக்க அவ்வப்போது வெளிச்சத்துக்கு வந்து மீளும் சில நொடிகளில் அவரின் கண்ணீர் தெரிந்து மறைந்தது. நாய்க்குட்டி முனகுவது போன்ற ஒலியுடன் அழுதுகொண்டிருந்தார். புழுக்கம் வெளியில் இல்லை என்பது தெரிந்தது. இப்படிச் செய்வதன் மூலம் எதனிலிருந்தோ விடுபட நினைக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. என் வருகையை அவர் லட்சியம் செய்ததுபோல் தெரியவில்லை. தெருவில் நடமாட்டம் ஓய்ந்த நிசியில் கதிரேசன் சார் மட்டும் அவருக்கே தெரியாதபடி அழுதுகொண்டிருந்தார். எவ்வளவு நேரம் அப்படியிருந்தாரென்று தெரியவில்லை. மறுநாள் ஆச்சர்யமாய் கதிரேசன் சார், வாசலில் நின்றிருந்த என் அப்பாவிடம் வந்து ‘’ ருசி என்னன்னே தெரியாம ஒரு உணவைச் சாப்பிடுறது கொடுமை சார்’’ என்றார். என் அப்பா பதிலுக்கு ஏதோ சொல்லும் முன்பே நகர்ந்துவிட்டார். கதிரேசன் சார் எவ்வித பதிலையும் யாரிடமும் எதிர்பார்க்காமல் வாழ்ந்துகொண்டிருந்தார். 

வினோத் வீட்டுக்கு வந்திருந்த ஒருநாள் இரவில் கதிரேசன் சாருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை நடந்தது. வீடுதாண்டி வெளியில் வந்த இருவரின் வாக்குவாதத்தில் குறுக்கிடாமல் கண்ணியம் காத்தோம். மறுநாள் விடிந்ததும் எங்களை வந்து அடைந்தது கதிரேசன் சார் மனைவி இறந்துவிட்ட தகவல். துக்கத்துக்கு வந்திருந்த ஊர் கதிரேசன் தொல்லை தாளாமல் அந்த அம்மா தற்கொலை செய்துகொண்டுவிட்டதாகவும், கதிரேசன் சார்தான் ஆத்திரத்தில் அவர் மனைவியைக் கொன்றுவிட்டதாகவும் கதைகள் பேசிப்போனது. நெஞ்சுவலி வந்து இறந்துபோன கதிரேசன் சாரின் மனைவியை எல்லோரும்  சேர்ந்து எரித்துவிட்டு வந்தோம். வினோத்துக்கு ஆறுதலாய் நான் இருக்க, துளிக் கண்ணீர்கூட சிந்தாத கதிரேசன் சாரின் உள் அழுத்தம் எரியாமல் இருந்தது. சில நாட்களில் கதிரேசன் சார் வீட்டைக் காலி செய்தார். இதே ஊரில் எங்கேயோ இருக்கிறார் எனக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், அதன் பின்பு அவரை நான் பார்க்கவில்லை. நடுவில் ஒருமுறை வினோத்தை மட்டும் பஸ் ஸ்டாப்பில் வைத்துச் சந்தித்தேன். அத்தை வீட்டில் தங்கி டிகிரி படிப்பதாய்ச் சொன்னான். அவனிடமும் உன் அப்பா எப்படியிருக்கிறார் என்று கேட்கவில்லை. விடை தெரிந்த கேள்விகள் கேட்கப்படாமல் இருத்தலே நலமெனப் பட்டது.  அவ்வளவுதான். காலேஜ், படிப்பு, வேலை , வெளிநாட்டுப் பயணம் என்பதில் சுத்தமாய் அப்படி ஒரு ஜீவன் வாழ்வதையே மறந்துபோனேன். இன்றைய போன்காலில் அம்மா எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திவிட்டாள். சீரியஸாய் இருக்கும் கதிரேசன் சார் நலமடைந்துவிட்டாரா என்று நாளை போன் செய்து அம்மாவிடம் கேட்க வேண்டும்.
.    


     

No comments:

Post a Comment