Friday 16 November 2012

அந்தரச் சிறகு







அந்தரச் சிறகு

அவன் கண்கள் பெரிதாக இருக்கிறது
அவனுடைய ராத்திரிகளைப் போலவே

பத்தடி நீள அகலமுள்ள அறையை
நூறுமுறை சுற்றி வருகிறான்
ரகசியக் கசிவான பாடலின்
விரல் நுனியினைப் பிடித்தபடி

கடிகாரத்துக்குப் பசிக்கும் நிசியில் 
மௌனத்தை அள்ளி தட்டில் போட்டுப் பிசைகிறான்
முழங்கை வழி வழியும்
உப்புச்சுவையை உறிஞ்சித் தீர்க்கிறான்
ராத்திரியின் மீது பரிதாபம் கொள்ளுமவனின்நடனம்
காற்றை மோதி நழுவும் 
அந்தரச் சிறகின்  வயலினை
ஒத்திருக்கிறது

ஒரே புத்தகத்தை
திரும்பத் திரும்ப படிக்குமவன்
கணினித் திரையில் விளையாடும்
சூதாட்டத்தில் 
தொடர்ந்து ஜெயித்தவண்ணம் இருக்கிறான்
ஜோக்கரின் புன்னகையில் ராஜாவும் ராணியும் சாகிறார்கள்
  
திறந்தேக் கிடக்கும் வாசலில்
மிக மிக எளிமையான தனிமை ஒன்று
தயங்கி நிற்கிறது
பெருந்தனிமைக்காரனின் இரவை அப்படியே விட்டுவிட்டு 
மெல்லத் தேம்பியபடி விலகுகிறது
தன் பழைய வதைமுகாம் நோக்கி

( விஸ்வநாதன் கணேசனுக்கு)

தந்தூரி கசானா 400 ரூபாய்










சிறுகதை -

                                                             தந்தூரி கசானா 400 ரூபாய்

இந்த உலகத்தில்
ஒரு கோடியே நூற்றியெட்டு துயரங்கள்
இருக்கின்றன
பசி என்பது
முதல் துயரமாகப்
பெரும்பான்மையோரால் ஏற்றுக்
கொள்ளப்பட்டுவிட்டது
- இசை

சரவணனின் அறைக்கதவில் பெரிய பூட்டு தொங்கியதைக் கண்டதும் ' கிளிக் டக்...கிளிக் டக்...'. சத்யமூர்த்தி வயிற்றில் தன் கடைசித் திறப்பினையும் திறந்துவிட்டு ஓய்ந்தது சாவி.வயிறு  விரியத் திறந்து உலகம் தின்னக் கேட்டது பசி. சரவணாவின் எண்ணுக்குத் தொடர்பு கொள்ள நினைத்த மனம் மிக அனிச்சையாய் அலைபேசியைத் தேடி கையில் எடுத்தபின்புதான் உணரமுடிந்தது, பேலன்ஸ் இல்லாமல் கால்கள் தள்ளாடின. வெளியேறி  தெருவில் இறங்கினான். மீண்டும் வெயில். ஏன் இந்த வெயில் அவன் செல்லுமிடமெல்லாம்...சத்யாவுக்கு கண் கூசியது. பத்து பக்கம் பிழை திருத்தம் செய்து தந்ததற்காக பழனி தந்த 300 ரூபாய்தான் ஒரு வாரமாய் பசி ஆற்றியபடி இருந்தது. காலையில்  கையில் இருந்த மிச்சம் 15 ரூபாய்க்கு ஐந்து இட்லி சாப்பிட்டு முடித்த கையோடு எக்மோர் வந்தான். இப்போது மணி இரண்டு. 12 மணி போல் சுந்தர் வாங்கித்தந்த டீயும், சம்சாவும் மூட்டிய சக்தி இப்போது செயலிழந்திருந்தது. ' உங்க பயோடேட்டா பார்த்தேன். நம்பிக்கையோட இருங்க...பத்துநாள்ல எங்கேயாவது சேர்ந்துடலாம்' வார்த்தைகளிலும், புன்னகையிலும்,தேநீரிலும், சம்சாவிலும் நம்பிக்கையிருந்தது. ப்ச்...எக்மோரிலும் அதே வெயில்தான்.

                                                                      *****************************

' பஸ்ஸில் போவதென்றால் காசு வேண்டும். இருக்கும் காசினை வைத்துக்கொண்டு இரண்டு பஸ்கள் ஏறி இறங்கி இருக்கும் இடத்தை அடைய முடியாது.என்ன செய்யலாம்?'
' ஏன் பஸ்...இப்படியே நடக்கலாமே...என்னை மிரட்டும் நோக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வெயிலை அலட்சியப்படுத்தினால் எத்தனை நன்றாக இருக்கும்...என்னை விலக்கும் இந்த உலகத்திடம் நான் விலக்க வேண்டியதும் எத்தனையோ  இருக்கிறது என்று காட்டவேண்டாமா...எப்படித்தான் எல்லோரையும் பழி வாங்கிவிட்டு இவ்விடத்தில் நான் வாழ்ந்து வெல்வது.'

                                                                         ***********************

நடக்கத் தொடங்கினான். சத்யாவைக் கடந்து விரைந்து சென்ற பஸ்ஸினுள் அவன் அமரவேண்டிய இருக்கையில் யாரோ ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் பர்சும், வயிறும் பெரிதாய் இருந்தது. சத்யாவின் பார்வையில் பதிந்த  புதுப்பேட்டை மெக்கானிக்குகள் தாங்கள் அணிந்திருந்த ஆடை முழுதும் அப்பிய கிரீஸ் கறைகளோடு உழைத்துக் கொண்டிருந்தார்கள்.

                                                                **************************************

' இவர்கள் சாப்பிட்டிருப்பார்களா?அப்படியே சாப்பிடவில்லையென்றாலும் இன்னும் அரைமணி நேரத்தில் அவர்கள் சாப்பிடத் தொடங்கலாம். எனக்கான உணவுதான் இப்போது எங்கே? சென்னையெங்கும் கொட்டிகிடக்கும் வேலை புதுப்பேட்டையில் மட்டும்  இல்லாமலா போய்விடும்...இவர்களைப்போல் ஏன் நான் மோட்டார் கழுவியோ பைக் சீர் செய்தோ பிழைக்கக் கூடாது?'
' ஏன் இப்படிப் பிழைக்க வேண்டும். மேலும் இது எனக்குத் தெரியாத வேலை. தெரிந்த, விருப்ப வேலையிலேயே நிரந்தரமாய் இருக்க முடியவில்லை.எத்தனை வளைதல்கள் தேவைப்படுகிறது. என் நாக்கு நோக்கி எத்தனைக்  கால்கள் நீண்டன. எந்த வேலையையும் தெரிந்து கொண்டா பிறக்கிறோம். வளரவளரக் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். காதல், துரோகம்,வஞ்சகம், வலி, அவமானம், வன்மம்.'

                                                                **********************************

பாபுவின்  அறையில் இருந்தபோது இவ்வளவு பிரச்சனையில்லை. அறையிலேயே சாப்பாடு இருக்கும். பசியடக்கியபின் வேலை தேடி வெளியேக் கிளம்பி விடுவான். அச்சுப்பிழை திருத்துனர் வேலை, எட்டாயிரம் சம்பளம் என்றதும்தான் பாபுவின்  அறையை சத்யா துறந்தது. ஆறு மாதம் கூட நிலைக்கவில்லை. அவனுக்கு சொல்லப்பட்ட வேலை ஒன்று. தந்த வேலை ஒன்று.

                                                               *******************************************

'' அவருக்கு மறுபடியும் கால் பண்ணி கட்டுரை கேட்டீங்களா?''
'' கேட்டேன் சார். இப்ப பிசியாயிருக்கேன்.இந்த மாசக் கடைசிக்குள்ள தந்துடுறேன்னு சொன்னார் சார்.''
'' அவரு அப்படித்தான் சொல்லுவாரு. நீங்க தொடர்ந்து அவர காண்டாக்ட் பண்ணிக்கிட்டே இருங்க. கொஞ்சம் தொந்தரவு செஞ்சாதான் நம்ம தேவை அவருக்குப் புரிஞ்சிப் பேசுவாரு. ரெண்டு நாளைக்கு ஒரு தடவை நீங்க அவரைத் தொடர்பு கொள்ளுங்க.''
'' சரி சார்.''

                                                                      *****************************

அடங்காத வெயிலுக்குத்தான் எத்தனை பசி. வளைவில் திரும்பினான். எக்மோர் தாண்டிய  சிந்தாதிரிப்பேட்டை நூலகத்தின் எதிரிலிருந்த கிருஷ்ணன் கோவிலில் அன்னதானம் போலும். வெள்ளை உடை உடுத்தியவர்கள் சந்தன நெற்றியுடன் உள்ளே போவதும் வருவதுமாய் இருந்தார்கள். கன்னச் செழுமைகளிலும் காற்றில் அலையும் தலைமுடியிலும் உயர் கொழுப்பின் பதிவு. ஏதோ வாசனை வந்து நாசியை நிரடியது. கூவம் பாலத்துக் கட்டைச் சுவற்றில் ஒரு பைத்தியக்காரன் படுத்திருந்தான். அவனிலும் அவன் அணிந்திருந்த ஆடைகளிலும் அத்தனை அழுக்கு. செம்பட்டை பிசுபிசுப்பில் சிக்கிக்கிடந்தன அவன் தலைமயிர்கள். அவன் அருகில் லேசாய் பிரிக்கப்பட்ட சோற்றுப் பொட்டலம். ப்ச். இவனும் இன்னும் சாப்பிடவில்லை. இவனுக்குப் பசிக்கவில்லையா. சத்யமூர்த்தி  பார்த்துக்கொண்டிருக்கும் போதே பதறத் தொடங்கினான்.

                                                              ***************************************

'' என்ன சொல்லி பத்து நாளாவுது...என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க? அவர்கிட்ட பேசுனீங்களா?''
'' நீங்க சொன்ன மாதிரியேதான் சார் அவர்கிட்ட பேசுனேன்.எல்லாம் கேட்டுட்டு கடைசியில  ஸாரி ராங் நம்பர்னு போனை வச்சுட்டார் சார்.''
'' இத உடனே என்கிட்ட சொல்ல வேணாமா? அவரு எவ்ளோ பிசியான ஆளு. நாமதான் கொஞ்சம் விட்டுப்பிடிக்கணும். நீங்க கால் பண்றப்ப அவரு என்ன சூழ்நிலையில இருந்தாரோ...கொஞ்சம் சின்சியரா இருங்க ஜாப்ல.''
'' சரி சார்''
'' மறுபடியும் அவர்கிட்டப் பேசிப்பாருங்க''
'' சரி சார்''

                                                                **************************************

ஒரு நாய் பைத்தியக்காரனை நெருங்கியது. அந்தப் பொட்டலத்தை முகர்ந்து பின் அவன் சட்டையினையும். சட்டென்று வேகம் பிடித்து ஓடத் துவங்கியது. சத்யாவின் கண்கள் நாயைப் பின் தொடர்ந்தன. நாய்க்குப் பசிக்கிறதா...இல்லையா...விரைந்த நாய் எதிரில் வந்த பெட்டை நாயைக் கண்டதும் வேகம் குறைத்து நின்று வாலாட்டியபடி அப்பெண் நாயின் புட்டம் முகர்ந்தது. வேகவேகமாய் வாலாட்டியது. எவ்வுணர்வையும்  வெளிப்படுத்தாத பெண் நாய் சட்டென்று வெயில் தவிர்த்து சந்துக்குள் ஓடியது. பின்னாலே போனது சத்யாவின் கண்கள் தொடர்ந்த நாயும். இன்னும் அந்தப்  பைத்தியக்காரன்  சாப்பிடவில்லை. கூவத்தின் அழுகிய பிண நாற்றம் அவனைத் தழுவியபடி சத்யா மீது மோதியது. சரவணனின் அறை நோக்கி நடந்தான்.

                                                                                     2

விநாயகர் கோயில் சந்தில் திரும்பியதும் நீண்டுகிடந்த நிழல் மீது நடந்தான். சரவணன் சத்யமூர்த்தியின் பசி அறிந்தவன். சத்யாவைப் போலவே தன் இருப்பு சினிமாதான் என்று தீர்மானித்து ஊரிலிருந்து சென்னை வந்து பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போது மூன்று மாதமாகிறது இயக்குநர் அழகியபிள்ளையிடம் உதவி இயக்குனராய் சேர்ந்து. அவன் கஷ்டப்பட்ட நாளிலும் சக நண்பனாய் மனிதனாய் சத்யாவைப் பலமுறைக் காப்பாற்றியிருக்கிறான். இதோ சத்யா போட்டிருக்கும் சட்டை கூட அவன் தந்ததுதான். ' புதுசா எடுத்துத்தர காசு இல்லடா நண்பா...இந்த சட்டை நான் அதிகம் யூஸ் பண்ணல. எங்காவது இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணனும்னா இதப் போட்டுட்டுப் போ.ஆனா மனசுல ஒன்ன மட்டும் ஞாபகம் வச்சுக்க. இது சர்வைவல் சிட்டிடா. எல்லாமே நாம நெனைக்கிற மாதிரி நடக்காது. கொஞ்சம் அனுசரிச்சுப் போ. வீட்ல ஒனக்குப் பொண்ணு பாத்துக்கிட்டுருக்கறதா அன்னைக்கு சொன்ன... இப்ப நீ தனியாளு. எத வேணும்னாலும் சாப்புட்டு  எங்க வேணும்னாலும் படுத்து தூங்கலாம்.நாளைக்கு கல்யாணம் ஆயிட்டா...அதுக்கும் சேர்த்து இப்பவே சம்பாதி. கஷ்டப்படு.' சரவணனின் அறையை விட்டு வெளியேறுகையில் சிறிது நேரம் முன்பு பார்த்த நாயின் வேட்கை ஞாபகம் வந்தது. ப்ச். வெறுப்புற்று நடுச்சாலையில் நின்றான்.

                                                              ****************************************

' இப்ப என் பசிக்கே இத்தன பாடுபட வேண்டியிருக்கு. இதுல கல்யாணம் வேற ஒரு கேடா.'
'ஏன்... ஊர் ஒலகத்துல கல்யாணம் கட்டுனவன் எல்லாருமே நல்லாவா வாழ்ந்துக்கிட்டுருக்கான்...கல்யாணம் பண்ணிட்டு கஷ்டப்பட வேண்டியதுதானே'
' அப்பக்கூட கஷ்டப்படலாம்னுதான் நினைக்கத் தோணுது.நான் நல்லாவே இருக்கப் போறதில்லையா?'
'இருக்கலாம்...ஆனா அது ரொம்ப கஷ்டம்.'

                                                                 ***************************************

ச்சே...தலையை உலுக்கிக் கொண்டான். பசி தன் கரங்களினால் குரல்வளையை நெரிக்கத் துவங்கியிருந்தது. அதன் மூச்சுத் திணறிய சப்தம் வயிற்றுக்குள் குழம்பலாய்க் கேட்டது,குட்டி நாயின் பசிக்குரல் போலவே.

                                                                         ************************

'' சார், நான் பைரன் பதிப்பகத்துலேர்ந்து பேசுறேன்.''
'' ம்...சொல்லுங்க...''
'' உங்ககிட்ட எடிட்டர் ஒரு கட்டுரை கேட்டிருந்தாரு அடுத்த இதழுக்காக...''
'' சரி...''
'' தரேன்னு சொல்லியிருந்தீங்க...''
'' ம்...''
'' எடிட்டர் உங்களுக்கு ஞாபகப் படுத்தச் சொன்னாரு சார்...''
'' சரி...''
'' நீங்க ப்ரீயா இருக்குறப்ப எழுதித்தந்தா போதும்''
'' ம்...''
'' நான் ஏற்கனவே ஒங்ககிட்ட மூணு தடவை பேசியிருக்கேன்...''
'' சரி...''
'' அந்தக் கட்டுரை எப்ப சார் கெடைக்கும்?''
'' ஸாரிங்க...நீங்க தப்பான நம்பருக்கு போன் பண்ணியிருக்கீங்க''
'' சார்...!''

                                                                 ************************************

சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்கெட் கடக்கையிலே பசி வயிற்றுக்குள் பெரும் அலைகளை எழுப்பி மோதியது. கடல் இரைச்சலில் குடல்கள் சுருண்டன. மதியம் மூன்று மணிக்கு உறைந்து கிடந்த மீன் கவுச்சி பசியின் சதவீதத்தினைக் கூட்டியது. புதிதாய் ஒரு ஓட்டல் திறந்திருந்தார்கள். கண்ணாடிச்சுவர்கள் பளபளவென்றிருந்தன. உள்ளே நிறைய பேர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். எப்படி தைரியமாக ஓட்டல் திறக்கிறார்கள்? நஷ்டமடையாத, லாபம் தரும் ஒன்றாக ஓட்டல் தொழில்தான் இருக்கிறதா...நகரெங்கும் சலிக்காமல் சாப்பாட்டுக் கடைகள் திறந்த வண்ணமிருக்கிறார்கள். இங்கே பசியும், சாப்பாடும், சாப்பிடுகிறவர்களும் நிறையவே. ஆனால் பசி தெரிந்து அதை வியாபாரமாக்குபவர்களால் மட்டுமே இயங்குகிறது நகரம்.

இயேசு நேசிக்கிறார்  என்று எழுதப்பட்ட எழுத்துக்களின் மேலே அத்தனை பெரிதான சிலுவை சிவப்பு நிறத்தில் மின்னியது. சிலுவையே வலி. இதில் சிவப்பு நிறம் வேறு. சத்யாவின் தொண்டை உலர்ந்திருந்தது. தண்ணீராவது குடிக்கலாம். வயிறு நிறையும் என்று எண்ணினான். சிம்சன் கடந்தான். அண்ணாசாலையின் அத்தனை பரபரப்பான போக்குவரத்தில் மக்கள். சத்யாவின் களைத்த கண்களுக்கு எல்லோரும் மிக நன்றாக இருப்பதாகவேப் பட்டது. சுரங்கப் பாதை இறங்கி ஏறி கடப்பதற்குள் எத்தனை யாசகர்கள் கை உயர்த்துகிறார்கள். மனம் நடுங்க விரைவாய்க் கடக்க முடியவில்லை. இவர்களெல்லாம் இந்நேரம் சாப்பிட்டிருப்பார்களா? அண்ணா திரையரங்க வாசல் தேநீர் கடையில் தண்ணீர் குடித்தான். காலி வயிற்றில் தண்ணீர் விழுந்ததும் திணறலாய் ஒரு வலி எழுந்து அடங்கியது.
                                                                              
                                                                           3

'' ஒங்களுக்கு வேலை செய்ய விருப்பம் இருந்தா செய்யலாம். விருப்பமில்லாட்டி வெளியில  போயிடலாம். இங்க எதுவும் கட்டாயம் கிடையாது.''
'' சார்... நான் என்ன சார் பண்ணினேன்...அவர்கிட்ட பேசுனேன். அவர்தான் எல்லாம் கேட்டுட்டு போனைக் கட் பண்ணிட்டாரு. ஒங்ககிட்ட அன்னிக்கே இதச் சொன்னேன்.''
'' மொதல்ல ஓங்க கோபத்தைக் குறைங்க...அவர்கிட்ட ஏதாவது அதிகாரமாப் பேசியிருப்பீங்க...சில இடத்துல நாம வளைஞ்சு குடுத்துதான் போகணும்...''
'' ஸாரி சார்...வளையறதுக்கும் ஒரு எல்லை இருக்கு சார். ஒடஞ்சிடக்கூடாது...''
'' ஒவ்வொரு வார்த்தைக்கும் ரியாக்ட் பண்ணாதீங்க. ஒங்க எதிர்காலத்துக்கு    நல்லதில்ல...இப்ப வளைஞ்சி போங்க. நாளைக்கு அவங்க ஒங்களைத் தேடி வரும் போது நீங்க யாருன்னு காட்டலாம்...''
'' என் வேலையைத்தான் சார் நான் செஞ்சேன்...''
'' அதிகாரத்துல இருக்கிறவங்க பேச்சுக்கு எதிர் பேச்சு பேசுறதுதான் ஒங்க வேலையா...?''

                                                             ******************************************

திடீரென்று கைபேசி ஒலித்தது. அவசரமாய் எடுத்து திரைபார்க்க...சரோலாமா.
'' சொல்லு நண்பா...''
''எங்க இருக்கடா... நான் ட்ரிப்ளிகேன் வரைக்கும் வரேன்...கொஞ்சம் புக்ஸ் சப்ளை செய்யணும். சாப்புட்டியா?''
'' ....................''
'' ஹலோ...ஹலோ...சத்யா...''
'' இன்னும் இல்ல நண்பா. நீ  வா.''
'' சரி. நான் அங்க வந்ததும் கால் பண்றேன். லன்ச் முடிச்சிட்டு அப்புறம் ப்ளான் பண்ணுவோம்.  இப்ப எங்க இருக்க?''
'' நான் மவுன்ட் ரோட்டுல இருக்கேன். நீ பெரிய தர்கா வந்துடு. அங்க வெயிட் பண்றேன்.வந்து கால் பண்ணு...''

எதிர்முனையில் எவ்வித பதிலும் இல்லாமல் போக அதிர்ச்சியாய் செல்போனைப் பார்த்தான். இருண்டிருந்தது. ஆன் செய்து பார்த்தான். ம்ஹும். சார்ஜர் தீர்ந்துவிட்டது. ப்ச். இதுவரை அவன்தான் இதன்மூலம் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. இனி அவனையும் யாரும். சத்யமூர்த்தி நீளமாய் பெருமூச்செறிந்தான். அண்ணாசாலை ஓரத்தில் ஒரு கார் அவனை  உரசியவாறு நின்றது. இருவர் இறங்கி அந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர். புகாரி.பெயர்ப்பலகையைப் பார்த்ததும் யூதாஸ் நினைவுக்கு வந்தான். உடனே இளங்கோ,மித்ரன், தந்தூரி கசானா.

யூதாஸின்  அறைதான் சத்யாவின் முதல் புகலிடமாய் இருந்தது. பிறகுதான் பாபுவின் அறைக்கு சென்றது. சத்யா,யூதாஸ்,மித்ரன்,இளங்கோ நால்வருமே சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருந்த நேரம். நால்வரில் D.F .T . முடித்திருந்தவன் யூதாஸ். இயக்குநர் ஐயப்பனின் இரண்டாவது படத்தில் உதவி இயக்குனராய் தேர்வாகி அட்வான்ஸ் பணமும் பெற்ற அந்த இரவில் சத்யாவுக்கு தந்தூரி கசானா அறிமுகமானது. ஓட்டலில் நுழைந்து டேபிளில் அமர்ந்ததுமே மெனுகார்டு என்ற பெயரில் மெனு புத்தகத்தைத் தந்தார்கள். பிரித்ததுமே அதிர்ச்சியாகிக் கத்தினான் இளங்கோ. ' என்ன மாப்ளே...எல்லாமே ட்ரிபிள் டிஜிட்டாவே இருக்கு... சிங்கிள் டிஜிட் டபுள் டிஜிட்ல ஒண்ணுமே இல்ல...' ' உஸ்ஸ்...' உதட்டின் மீது சுட்டுவிரல் வைத்து எச்சரித்தான் யூதாஸ். ' என்ன வேணும்' என்றான். சத்யா யோசித்துக்கொண்டிருக்கும்போதே இளங்கோ சத்யாவை சுரண்டினான். சத்யா அவனைப் பார்க்க அவன் பார்வை சத்யா கையில் விரித்து வைத்திருந்த மெனு பக்கத்தில் இருந்தது. அவன் விரல் தொட்ட இடத்தில் ' தந்தூரி கசானா' என்று அச்சிடப்பட்டு அதன் நேரே 400 ரூபாய் என்றும் இருந்தது. சத்யா மூச்சைப் பிடித்துக்கொண்டு உயிருள்ள கோழி எதுவும் தென்படுகிறதாவென்று சுற்றுமுற்றும் பார்த்தான். பலவீனமான உதட்டை அசைத்தபடி ' தோசை' என்றவன் மித்ரனைப் பார்த்ததும் உறைந்தான். எப்போது இவன் ஆர்டர் சொன்னான். இடியாப்பத்தை ஆட்டுக்கால் பாயாவில் முக்கியடித்துக் கொண்டிருந்தான். அடப்பாவி. சத்யா ஏக்கமாய் இளங்கோவைப் பார்த்துக் கேட்டான். ' ஏண்டா...இவன் நம்மகூடத்தான் எப்போதும் இருக்கான். இவனுக்கு மட்டும் எப்பிடிடா இதெல்லாம் தெரியுது?' முறைத்தான் இளங்கோ. ' பிளாட்பாரத்து கையேந்தி பவன்ல சாப்புடுற மாதிரி புகாரிக்கு வந்தும் நீ தோசை சொல்ற பாரு...நீயும் திங்க மாட்டே...அடுத்தவனையும் திங்க விட  மாட்டே...ஏதாவது சொல்லி உன்னைக் கழட்டி விட்டுட்டு வந்துருக்கணும். கொஞ்சமாவது நடிக்கக் கத்துக்கடா...அங்க பாரு... ஆஸ்கார நோக்கி போய்க்கிட்டு இருக்கு நாசுக்கா ஆட்டுக்கால் பாயா...' அன்று ஏதேதோ சாப்பிட்டார்கள். ஆயிரத்து சொச்சம் பில் தந்தான் யூதாஸ். தான் புகைக்கும் சிகரெட்டை சத்தியமூர்த்தியின்  உதட்டில் வைத்து  பற்றவைத்தபின் இளங்கோ சொன்னான். ' சாப்பிட்டிருக்க வேணாம். ஒரு தடவை பாத்துட்டு வந்துருக்கலாம் அந்த தந்தூரி கசானாவை.'

                                                                              4

பெரிய தர்கா வாசலில் நிறைய யாசகர்கள். இன்று வெள்ளிக்கிழமை என்பது ஞாபகத்துக்கு வந்தது. அமர நிழல் தேடியவன் கண்களில் மண்டியிட்டிருந்தவரின் தலையில் மயிலிறகினை வைத்து ஓதிக் கொண்டிருந்தவரைக் கண்டதும் உள்சென்று அமர்ந்தான். ஏகப்பட்ட பூமாலைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் மல்லிகை. அதன் இருபுறமும் மயில்தோகை ஒட்டப்பட்ட நீண்ட கூம்புகள். சம்மணமிட்டு அமர்ந்தான். அத்தனை வேகமாய் மின்விசிறி சுற்றிக் கொண்டிருந்தபோதும் உயரமான விளக்கில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. கண் மூடினான். மயில் தோகையையே உற்றுப் பார்க்க மனம் அசைந்தது. மயில்  கண்கள் பெரிதாகி அவன் உள்ளே நிறைய , திடீரென்று மண்டைக்குள் பேரிடி இறங்கியது. என் போன் செயல்படவில்லையென்றாலும் நான் சொன்ன இந்த இடத்துக்கு வருவதற்கு சரோலாமாவுக்கு இவ்வளவு நேரம் ஆகாது.  நான் பேசும்போதுதானே செல்போன் அணைந்து போனது. நான் காத்திருப்பதாய்  சொன்ன இந்த இடம் சரோலாமாவின் காதில் விழவில்லையா...சத்யா எழுந்தான். வயிற்றில் பசி செத்துக்கிடந்தது தெரிந்தது. இனி சடலம் நாற்றமெடுக்கத் தொடங்கிவிடும். வாய்விட்டுக் கதறி அழ உள்ளே பேரோலம் எழுந்தது. கண்களில் நீர் துளிர்க்க தர்கா வாசலுக்கு வந்தான். எப்போதுமே அவனால் அவ்வளவு சீக்கிரம் அழுதுவிட முடியாத இடத்தில்தான் அழுகை தன் முதல் புள்ளியைத் துவக்கும். எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து கொஞ்சம் எண்ணெய் எடுத்து யாரோ ஒரு பெரியவர் தன் கால் முட்டியில் தேய்த்துக் கொண்டிருந்தார். ஒரு கணம் ஓடிச்சென்று ஒரு கரண்டி எண்ணெய் எடுத்து குடித்துவிடலாமென்று அவனுக்குத் தோன்றியது. வலி போக்கும் இறைவனின் கொடை  அவன் பசி போக்கிவிடாதா...சரோலாமா வரும் வழி பார்த்து நின்றான்.

பைரன் பதிப்பகத்திலிருந்து விலகி வேலையில்லாமல் திரிந்த கொடூர நாட்களில் இணைந்தவன்தான் சரோலாமா. வேலை விசயமாக ஒரு பதிப்பக நேர்காணலுக்கு சென்றபோது ரிசப்ஷனில் அமர்ந்திருந்தான். அவனும் இண்டர்வியூவுக்கு வந்தவனோ என்று சத்யா யோசிக்க சத்யாவைப் பார்த்துப் புன்னகைத்து கை குலுக்கினான். ' ஐ அம் சரோலாமா'  கேட்டதுமே புனைப்பெயரென்று புரிந்து போனது. சென்னை வாழ்க்கையில் சாதிய விழுமியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போவது போல் நிஜப்பெயருடன்  வாழ்பவர்களும் தொலைந்து கொண்டிருக்கிறார்கள். புனைப்பெயர்கள் நிறைந்த நகரமாக மாறி வருகிறது மதராஸ் என்ற சென்னை. தான் புதிதாய் ஒரு பப்ளிகேசன் தொடங்கியிருப்பதாகவும் அது சம்மந்தமாக இங்கு மேலாளரைப் பார்க்க வந்ததாகச் சொன்னான். சத்யா வேலை தேடி அலையும் கதையைக் கேட்டதும் அவனுக்குத் தெரிந்த சில நபர்களின் எண்களைத் தந்து தொடர்பு கொள்ளச் சொன்னவனின் பேச்சிலேயே சத்யாவுக்குப் புரிந்துபோனது அவனின் சினிமா விருப்பம். எழுத்து, சினிமா என்று அலைவரிசை ஒத்துப்போன சமயத்தில் சத்யாவின் வேலைக்கான முயற்சி தொடர்ந்து தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்க ஒரு தருணம் விரக்தியான சத்யாவின் பேச்சினைக் கேட்ட சரோலாமா சத்யாவை அழைத்து சென்றது தன் தங்கை திருமணத்துக்கு. சத்யாவின் மனத் தளர்வினை நீக்க அவர்களின் குடும்பத்தில் சத்யாவையும் ஒருவனாக இடம்பெறச்செய்து புத்துயிராக்கினான். அப்போது இறுகியது. பசியென்றாலும் நோயென்றாலும் பகிர்ந்து கொண்டு குணமாக ஒரு நண்பன் சரோலாமா.
கோடையின் ஆக்கிரமிப்பு மாலை 5 மணிக்குப் பின்பும் வீரியம் குறையாமல் இருந்தது. கால்போன போக்கில் திருவல்லிக்கேணி வீதியில் நடந்து கொண்டிருந்தான்.இங்குதான் சரோலாமா வருவதாகச் சொன்னான். இப்படியே திரிந்து கொண்டிருந்தால் எங்காவது சட்டென்று வெளிப்பட்டுவிட மாட்டானா. கால்கள் தள்ளாடின. சத்யா மீது லேசாக மோதிக் கடந்த உருவம் சட்டென்று நின்று அவனைப் பார்த்துத் திரும்பியது. அடர்தாடியும், முறுக்கிய மீசையும், நெற்றி நடுவில் இருக்கும் குங்குமச் சிவப்பு இரு கண்களிலும் விரவியிருக்க முண்டாசு கட்டியவன் சத்யாவின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான்.....பாரதி.

தன் கவிதை,கதைகளை எடுத்துக்கொண்டு சத்யா ஏறி இறங்கிய பத்திரிக்கை அலுவலக வாசல்களும், சினிமா திரைக்கதைகளை தூக்கிக்கொண்டு அவன் மோதித் திரும்பிய தயாரிப்பாள, இயக்குனர்களின் வாசல்களும் பாரதி விழிகளில். பற்கள் நறநறத்தபடி கர்ஜித்தான்.

தேடிச்சோறு நிதந் தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்ப மிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி-கொடும்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும்-பல
வேடிக்கை மனிதர்களைப் போல - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ

தலை கிறுகிறுவென்று சுற்றி வர சத்யமூர்த்தி  வீழ்ந்தான்.



நன்றி : புதுவிசை



Wednesday 31 October 2012

கொம்பன்


கொம்பன்

குருதி சிதறும் களத்தில் அலறும் களிறுகள்


யானையின் கண் அசைந்தது.இரு கைகளாலும் இறுகப் பிடித்திருந்த வாள் உயர்ந்து காற்றினை வெட்டியவாறு சரேலென கீழிறங்கியது. விழி மூடவந்த யானைச் செவிமடல்கள் ஒரு நொடி நின்று பின் விசிறின. யானையின் தந்தத்தின் மீதான சதைமீது இரத்தக் கவிச்சி உறைந்த வாள் பதிய பீறிட்ட இரத்தம் எதிரே குதிரை மீது அமர்ந்திருந்தவன் முகத்தில் பட்டுத் தறித்து குதிரையின் நெற்றியில் சிதறி இமைமயிர் நனைந்து வழிந்து கண்கள் மூடிய குதிரை முன் நகர்ந்தது. யானைச்சதையில் பதிந்திருந்த வாள் உருவமுடியாமல் பொதிந்து இருக்க, குதிரைவீரன் முழு பலமும் உபயோகித்து வாளினை உருவும் சமயம் நகர்ந்த குதிரை மீதிருந்து விழுந்தான். உடம்பெங்கும் வலி ஊடுருவியிருந்த யானை துதிக்கை உயர்த்தி நிலத்தில் வீழ்ந்துகிடந்த குதிரைவீரன் முகத்தில் அழுந்தியது. சதைமீது செருகிய வாளுடன் யானை நகர்ந்தது. பறந்து வந்த அம்பொன்று வயிற்றில் பதிய யானை  ஓடத் துவங்கியது.

நிலம் தன் நிறத்தினை மாற்றியிருந்தது. போர்க்கள பூமியின் வாசனையறிந்த பிணந்தின்னிக் கழுகுகளின் நிழல்கள் நிலத்தினில் புதிதாய் உருவாகியிருந்த சிறு சிறு பள்ளங்களில் உறைந்து தேங்கிக் கிடந்த கருஞ்சிவப்புக் குருதியின் மீது படியாமல் விலகின. சிறிது தூரம் தள்ளி வெண்மலையாய் குவிந்திருந்தன யானைத் தந்தங்கள். யானையின் பிளிறல் அலறல்களாக மாறி போர்க்களத்தை நடுங்கச் செய்திருந்தன. உடம்பெங்கும் செருகியிருந்த அம்புகளுடன் நகர்ந்த யானைகளின் பாதத்தில் நசுங்கிக் கூழாயின களமெங்கும் சிதறியிருந்த உடல்கள். இறந்து வீழ்ந்திருந்த யானைகளின் தந்தங்களை யானையாட்கள்  வாள் கொண்டு அறுத்து எடுத்தவண்ண்மிருந்தனர். தடாரியும் முழவும் உச்சமாய் ஒலித்துக் கொண்டிருக்க வாளினால் அறுபட்ட வீரனின் தலை மட்டும் தனியே உருண்டுவர, அதை தன் துதிக்கையில் ஏந்திய யானை வெகு தூரமாய் வீசி எறிந்தது. காற்றில் விரைந்த தலை குவித்து வைக்கப்பட்டிருந்த தந்தங்களின் நடுவில் விழுந்தது. பெரும் யானை மீதிருந்து குதித்த குஞ்சரமல்லன் அவனது கையில் நீண்ட வேலினை உயர்த்திப் பிடித்தவாறு மிக ஆவேசமாய் தன்னை நோக்கி ஓடி வருவதைச் செவியுற்ற அந்த யானைவேகமாய்த் திரும்பி கொம்பினால் அவன் வயிற்றில் செருகியது. குஞ்சரமல்லனின் முதுகில் வெளிவந்த கொம்பின் நுனியிலிருந்து இரத்தம் பூத்து வழிந்தது. தலையினை வேகமாய்ச் சிலுப்பியபடி அவனை உதற, கிழிந்த வயிற்றுடன் காற்றில் பறந்தவன் தலை விழுந்த இடத்தில் போய் விழுந்தான்.

 திடீரென்று லேசான மயக்கம் யானையினை ஆட்கொண்டது. களத்தில் பாதம் ஊன்றி நிற்க முடியாமல் சிரமப்பட்டது. கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள சிறு துவாரத்திலிருந்து கடும் மணத்துடன் பிசுபிசுப்பாய் மதநீர் வழிய அதன் குறி விறைத்து பீறிட்டது சுக்கிலம். யானை பதட்டத்திலிருந்த கணத்தில் காற்றில் சீறிவந்த வாள் அதன் துதிக்கையினை வெட்டியது. நிலம் அதிர துண்டாகி விழுந்தது துதிக்கை. அறுபட்ட இடத்திலிருந்து புனலெனப் பொங்கியது குருதி. நின்ற நிலையிலேயே நிலத்தில் சாய்ந்தது யானை. யானையைச் சாய்த்த வீரன் அப்போதுதான் கவனித்தான். அருகாமையில் மற்றொரு யானையின் மூச்சு. கையில் பிடித்திருந்த வாளினை வீசினான். யானையின் முழங்காலில் குத்தி நின்றது. யானை அவனை நோக்கி முன்னேறியது.

வேறு ஆயுதம் ஏதுமற்ற நிலையில்தான் உணர்ந்தான் தன் மார்பில் ஒரு வேல் செருகியிருப்பதையும் சந்தனம் தடவிய மார்பு முழுவதும் செந்நிறமாய் மாறியிருப்பதையும். யானை வேட்டையில் ஈடுபட்டிருந்த அவ்வீரன் தன் மார்பில் செருகியிருந்த வேலினையே மறந்திருந்தான். வீரம் வலியை வென்றிருந்தது.  சற்றும் யோசிக்காமல் தன் மார்பிலிருந்து வேலினை உருவியவன் தன்னை நோக்கி வந்த யானையின் சிரம் நோக்கி எறிந்தான். தலையில் செருகிய வேலுடன் திகைத்து நின்றது யானை. வேல் பதிந்த இடத்தின் அருகிலேயே சீழ் வழிந்தபடி புண் இருந்தது. யானையின் ஒரு கொம்பு பிடுங்கப்பட்டிருந்தது. உடம்பெங்கும் நிறைய அம்புகள் செருகப்பட்டிருக்க ஏகரத்தம் வெளியான நிலையில் வலி தாள முடியாமல் தள்ளாடியபடி இருந்த யானை, கால்களை மடித்து நிலத்தில் அமர்ந்து துதிக்கை உயர்த்த நினைத்து முடியாமல் சாய்ந்தது. யானையைக் கொன்ற வீரனும் தள்ளாடி யானை மீதே விழுந்தான். யானையின் உயிர் பிரிந்த அதே கணம் அவ்வீரனின் உயிரும் பிரிந்தது.

வானேகும் இறக்கையற்ற கருஞ்சர்ப்பங்கள்

சேரனின் புருவங்கள்  புன்னகையில் நெறிந்தன. களத்தின் நடுவில் தனது பட்டத்து யானை மீது அமர்ந்திருந்தான்.குன்றின் மீது ஏறி நின்று யானைப்போர் கண்ட தன் முன்னோர்களை எண்ணிக்கொண்டான். தனது வில் முத்திரை பதித்த கொடியினைத்தாங்கி நிற்கும் குன்றினை ஒத்த பட்டத்து யானையைத் தடவிக் கொடுத்தான் மன்னன். துதிக்கை உயர்த்தி விண் நடுங்கும் வண்ணம் பிளிறலை வெளிப்படுத்தியது யானை. புருவங்களின் மீது அழகாய்க் கோலம் வரையப்பட்டு நெற்றி நடுவில் செந்தூரமிட்டு கம்பீரமாக நின்றிருந்தது அரசனின் யானை. களத்தில் மன்னன் கண்கள் திரும்பிய திசையெல்லாம் களிறுகள் அலறின. வீரர்கள் சுற்றிச் சுழன்றபடி யானையின் உயிர் கவர்ந்து அரசனின் பாதத்தில் கொண்டு சேர்த்தனர்.

யானை வெற்றியின் அடையாளம்.யானை ஒன்றினை இழந்தாலும் அது பகை மன்னனுக்குப் பேரிழப்பாகும். இழப்பு அவன் வீரம் சேர்ந்தது. மானம் சார்ந்தது. போரின் மூன்றாம் நாள் அது. காலையில்தான் யானைப்படைகள் தங்கள் பணியைத் துவக்கியிருந்தன. வயிரமும் வலம்புரிச்சங்கும் ஒலிக்கத் துவங்கிய போர், மாலை நெருங்குவதற்குள் பகைவனின் படையில் பாதியினையாவது அழிக்கும் திட்டம் மன்னனிடமிருந்தது. அவனின் வீரப்பட்டியலில் அவன்  கவர்ந்த ஆயிரமாவது யானையின் உயிர் இடம் பெறுவதற்கு இன்னும் சில தூரமே இருந்தது. தன்னைப்பற்றிப் பாடப்போகும் பரணி எண்ணி மன்னன் நெஞ்சு விரிந்தது. 

பயந்து பிளிறிக்கொண்டு ஓடிய ஒரு யானை, நிலத்தில் அங்கங்கே சிறு பள்ளமாய் தேங்கியிருந்த இரத்தக் குளத்தின் மீது பாதம் பதிக்க தெறித்து காற்றில் விசிறப்பட்ட இரத்தம், பட்டத்து யானையின் பிடரியில் மிக வசதியாய் அமர்ந்திருந்த மன்னனின் முகத்தில் பட்டு அவன் அருகில் இருந்த கொற்றவையின் உதட்டில் விழுந்து உடம்பெங்கும் வழிய, சேரன் சிரித்தான். கொற்றவை கழுத்தில் சூடியிருந்த வஞ்சிப் பூமாலை குருதியில் மலர்ந்திருந்தது. மன்னனின் முழுக் கவனமும் தழும்பனின் மீதிருந்தது. தழும்பனுக்கு இது ஆறாவது போர். அதன் உடம்பெங்கும் விரியும் வடுக்கள் அளப்பரிய வீரத்தை விளக்கும். பத்தடிக்கும் மேலான உயரத்துடன் அகலமான பாதங்கள் எடுத்துவைத்து நடக்கும் ஒவ்வொரு  அடியிலும் கம்பீரம் தெறிக்கும். 

நீளமாக, நுனியில் லேசாக வளைந்து கூர்மை நிரம்பிய கொம்புகளும் அத்தனை பெரிய உடலில் தேடிக் கண்டுபிடிக்கும்படியான சிறிய கண்களும் சிவந்த உதடுகளும் தேடாமலே பளீரெனப் பார்வையில் அறையும் கண்களாய் விரிந்திருக்கும் விழுப்புண் அடையாளங்கள். தழும்பன் வேழப்படைத் தலைவன். தலைவனுக்கு தலைவனை மிகப் பிடிக்கும். முந்தைய போரில் தழும்பன் நிகழ்த்திய அழிவு கொஞ்ச நஞ்சமல்ல. களம் புகுந்து போர் இசை கேட்டுவிட்டால் போதும். குஞ்சரமல்லனின் இரும்பு அங்குசமே சற்று பயம் கொள்ளும்படியாய்த்தான் ஆட்டம் இருக்கும். 

அதிலும் பம்பையும் கடிகையும் தண்டிகையும் இணைந்து முழங்கும் உக்கிர இசை வீரர்களின் நரம்புகளுக்கு் வெறியூட்டுகிறதோ இல்லையோ தழும்பனின் சிறிய செவிகளுக்குள் நிகழ்த்தும் வெற்றி மந்திரம் கஜ சாஸ்திரம் பயின்ற அரசனும் அறிய முடியாதது. வீரம் தளும்ப தழும்பன் சுழற்றி வீசிய வீரர்கள் எத்தனை? இடித்த கோபுரங்கள், அழித்த மாடமாளிகைகளுக்கு கணக்கில்லை.  பகைவீரர்கள் வீசிய ஈட்டிகளை நெடுங்கரத்தில் வாங்கி திருப்பி வீசிக் கொன்ற உயிர்கள் பல. தழும்பனின் வீர வெளிப்பாடு கண்டு வியந்த மன்னன் சென்ற போர் வெற்றி விழாவின்போதுதான் தழும்பன் என்ற விருதுப்பெயர் சூட்டினான். 

மேற்கில் சூரியன் மறைய முற்பட அன்றைய தினத்துக்கான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. செருக்களத்தினை இசை வெறியூட்டிக்கொண்டிருந்தவர்கள் தங்கள் பணியை நிறுத்தினர். இசை நின்றதுமே கழுகுகளின் ஓலம் தொடங்கியது. ராட்சதக் கழுகுகள் போர்முடிந்த நிலத்தில் வட்டமிட்டு இறங்கின. தங்களின் பெரும் அலகால் களமெங்கும் அறுந்து சிதறிக்கிடந்த துதிக்கைகளைப் பற்றியபடி வானத்தில் பறக்கத் தொடங்கின. சிறகு முளைத்த சர்ப்பங்களாய் பறந்த அந்த கழுகுகளைக் கண்ட மன்னன் தன் இருக்கையிலிருந்து  திரும்பிப் பார்த்தான். தேர் போன்ற அமைப்புடன் கூடிய பெரிய வண்டிகள் நிறைய தந்தங்கள் குவித்துவைத்து படை வீட்டினை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. விழுப்புண்கள் நிறைந்த மன்னன் மகுடத்தில் கர்வம் ஊறியது. இறக்கை முளைத்த கரும் பாம்பென பறந்து கொண்டிருந்த கழுகொன்றின் அலகிலிருந்து நழுவிய துதிக்கை பூமி நோக்கி வந்தது. அத்தனை உயரத்திலிருந்து விழுந்த துதிக்கை தன் கண்களின் மீது மோதியதும் திடுக்கிட்டு விழித்தார் மோசிகீரனார்.


வாரணம் ஆயிரம் வீழ்த்திய தமிழ்



இதயம் முரசறிவித்துக் கொண்டிருந்தது. வியர்த்திருந்தார். தான் படுத்திருந்த கட்டிலை விட்டு கணமும் தாமதியாமல் இறங்கி கீழே நின்றார். உடல் அதிர்வு அடங்கவில்லை. கட்டிலை உற்றுப்பார்த்தார். தந்தமிழந்த ஆயிரம் யானைகள் ஒன்றாகப் படுத்திருப்பதுபோல் காட்சி  தோன்றி மறைந்தது. இந்த ஒரு கட்டில் செய்வதற்கு எத்தனை தந்தங்களை சீவி பக்குவப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு எத்தனை யானைகளை பலி தந்திருக்க வேண்டும். மோசிகீரனாரின் செவிக்குள் யானைகளின் கதறல். அருகில் நின்று புன்னகையுடன் கவரி வீசிக்கொண்டிருந்த மன்னனை பெருமூச்சுடன் நிமிர்ந்து நோக்கினார் புலவர். பலவீனமாய் உதடுகளை அசைத்தார். '' முரசு இரத்த வேட்கை கொண்டது. அச்சந்தருவது. அதன் குற்றமற்ற வாராய் இழுத்துக்கட்டி வாரின் கருமையான பக்கம் அழகு பெற மயிலின் தழைத்த நீண்ட பீலியும் ஒளிரும் பொறி கொண்ட அழகிய பூமாலையும் தளிருடன் உழிங்கைபூ விளங்கசூடி நீராடச்சென்றதை அறியேன். எண்ணெயின் நுரையை முகர்ந்தது போன்ற மென்மையான மலர்கள் தூவிய படு்க்கை மேல் தெரியாமல் படுத்து உறங்கிவிட்டேன்.என்னைப் பார்த்து கோபம் கொண்டு இரண்டு துண்டாக்காமல் நின் வாளின் வாயை ஒழித்தாய். அது ஒன்றே போதும். நீ நல்ல தமிழ் முழுவதும் அறிந்தவன் என்பதை அறிவதற்கு. என்னைக் கொல்லாமல் விட்டதோடு சும்மாயிருக்காமல் என்னிடம் வந்து நின் வலிமை மிக்க முழவு போன்ற தோளை ஓங்கி குளிர்ச்சியான அகன்ற இடம் முழுவதும் மணம் வீசக் கவரி வீசினாய். வெற்றிபெற்ற குரிசில். நீ இங்கு இப்படிச் செய்தது இந்த உலகத்தில் புகழுடன் வாழ்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அங்கு உயர்ந்த நிலையிலுள்ள தேவ லோகத்தில் வாழ முடியாதுதென்பதைக் கேட்டதன் பிரதியுபகாரமா?- ( புறநானூறு- 50)    களம் வனம் கடந்த இறுதி

வரிசையில் நின்றிருந்த கொம்பனின் முகம் இறுகிப் போயிருக்க எவ்வித சலனத்தையும் வெளிப்படுத்தாத கண்களின் நிழலில் பட்டத்து யானை மீது அமர்ந்திருந்த மன்னன் தெரிந்தான். லேசாகத் தலை குனிந்த கொம்பனின் துதிக்கை நுனி நிலம் உரச இரத்தம் ஊறிக்கிடந்த  பூமியினைக் கண்டதும் தாளா வலியொன்று உடல் முழுவதும் ஊடுருவி நகர்ந்ததை உணர்ந்தது. குதிரைகள் பூட்டிய பெரிய பெரிய வண்டிகளில் குவித்துவைத்துக் கொண்டு செல்லப்படும் தந்தங்களைக் காண கொம்பனின் வலி மேலும் அதிகமானது. காலம் காலமாய் மனிதன் தன் வீரத்தினை முரசறிவிக்கக் கொன்று குவித்த தன் மூதாதையர்களை எண்ணி மனம் கலங்கியது. காலையில் கட்டுத் தறியிலிருந்து    அழைத்து வரும்போதே ஒரு முடிவிலிருந்தது கொம்பன். இனியும் மனிதன் கையில் பொம்மையாய் அவனின் இரும்பு அங்குசத்துக்கு அடிமையாய் இருக்க முடியாது எனத் தீர்மானித்திருந்தது. வயிரமும் வலம்புரிச்சங்கும் ஒலிக்கத் துவங்கிய சில நிமிடங்களில் மெல்லப் பின் நகர்ந்த கொம்பன் சட்டென்று திரும்பி தன் நடையை வேகப்படுத்தியது. கொம்பனின் பிடரியில் அமர்ந்திருந்த குஞ்சரமல்லனுக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை.   தன் கால்களினால் கொம்பனின் தாடைப்பகுதியைத் தட்டினான். கொம்பனிடம் வேகம் கூடியது. போர்க்களத்தில் யானைகள் அங்குமிங்கும் ஓடியபடி சமர் புரிந்து கொண்டிருக்க கூட்டத்திலிருந்து பிரிந்து களம் விட்டு வெளியேறி காட்டுப்பகுதியினை நோக்கி ஓடிய கொம்பனைக் கவனிக்க யாருமில்லை. ஒரு மணல் மேட்டின் மீது கொம்பன் ஏறி இறங்க நிலைகுலைந்த குஞ்சரமல்லன் தவறி நிலத்தில் வீழ்ந்தான்.  திரும்பிப் பார்க்காமல் ஓடியது கொம்பன். விழிகளின் மூலையில் தெரிந்த அங்குசத்தின் முனையை விழிமூடி முறித்துப் போட்டது. 

பச்சைப் பசேலென விரிந்தது காடு. வலது பாதத்தினை உயர்த்தி வைத்து காட்டுக்குள் நுழைந்தது கொம்பன். வழி என்று ஏதுமில்லை. சுவடேதும் படியாத அடர்ந்த கன்னி வனம். மரங்களும் கிளைகளும் நிரம்பியிருக்க துதிக்கையினால் துதிக்கையினால் கிளைகளை வளைத்தது. முறித்து எறிந்தது. காட்டுக்குள் போர் ஒலிகள் இல்லை. கொம்பன் நிற்காமல் ஓடியது. திடீரென்று காடு முடிந்து வயல்வெளி விரிந்தது. வரப்புகளை மிதித்துக்கொண்டு ஓடியது. தூரத்தில் சாலை தெரிந்தது. அப்போதுதான் கவனித்தது தன் அருகிலேயே ஓடி வந்து கொண்டிருந்த பெண் யானையை. மாதங்கி.


மாதங்கி பெரும் அழகி. மன்னனுடன் நகர்வலத்தில் வருபவள். கழுத்து மணிகள் ஒலிக்க நாணம் குவித்து வைத்து மென்மையான நடையுடன் மாதங்கி மன்னனைத் தாங்கி வலம் வருவதைக் காணும் நகர் மக்கள் மாதங்கியி்னனழகில் மனம் தொலைப்பதா, மாதங்கியின் பிடரியில் அமர்ந்திருக்கும் மன்னனின் கம்பீரத்துக்கு மயங்குவதாவெனத் தவிப்பார்கள். கொம்பனின் கனவுகள் மாதங்கியின் எச்சில் முத்தங்கள் நிறைந்தது. எப்போது தன்னுடன் மாதங்கி இணைந்தது எனத் தெரியாத கொம்பனின் நடையில் சி்று உற்சாகம். இரு யானைகளும் ஓடிக்கொண்டிருக்க சாலையின் இரு புறங்களிலும்  நிறைய கட்டடடங்களும் வீடுகளும் தென்பட்டன. மெலிதான வெப்பவலை தன் முகத்தில் மூடுவதை கொம்பன் உணர்ந்த நேரம் அந்த வளைவினைச் சந்தித்தது.அபாயகரமான வளைவு அது. சாலையின் வளைவில் அதி வேகமாய்த் திரும்பிய, காட்டுமரத் துண்டுகளை ஏற்றிவந்த லாரி யானையின் மீது மோதிக் கவிழ்ந்தது. சிறு சப்தமின்றி நிலத்தில் சாய்ந்து உயிர்விட்டது பெண் யானை. கண்களிலிருந்து வழிந்த இரத்தம்   உலர் மண்ணை ஈரமாக்க கொம்பன் நிற்காமல் ஓடியது. 

மூச்சிரைத்த கொம்பனின் கண்களில் இருப்புப் பாதை தென்பட்டது. ஆட்களற்ற பாதுகாப்பான கதவுகளற்ற சாலையின் நடுவில் குறுக்கிட்ட இரும்புத் தண்டவாளங்கள் கண்டதும் குழம்பிய கொம்பன் திசை தடுமாறி இரும்புப் பாதையின் ஊடே ஓடியது. எதிர் திசையிலிருந்து வந்த சத்தம் கேட்டதும் நின்றது. வந்த பாதையிலே திரும்பி ஓடமுயல... கொம்பனால் நகர முடியவில்லை. தண்டவாள இடுக்கில் சிக்கியிருந்தது கொம்பனின் பாதம். ஓசை அருகில் கேட்டது. கொம்பன் துதிக்கை உயர்த்தி பிளிறியது.உடல் அசைத்தது. ஒரு அடிகூட கால்களை அசைக்க முடியாமல் கதறியது. எதிரே ரயிலைப் பார்த்தது கொம்பன். அதன் விழிகள் விரிந்தன.

ஆவேசமாய் பாய்ந்துவந்த மன்னன்  துதிக்கையினை வெட்டினான். தந்தம் அறுத்து அமலையாடினான். காடுகளை அழித்தான். சமநிலமாக்கப்பட்டு மனிதன் வசிக்க வீடுகள் முளைத்தன. வாழ இடமின்றி வெளியேறிய யானைகள் கூட்டம் கூட்டமாய் வாகனங்களில் அடிபட்டு இறந்தன. மரங்களின்றிப் போனதால் மழையின்றி நீர் நிலைகள் வற்றி தாகம் கொண்ட யானைகள் மதம் பிடித்து அலைந்தன. அங்குசம் முறித்துப் போட்டன. பாகன்களை எறிந்தன. துப்பாக்கி உயர்த்தி யானைகளைச் சுட்டான் ஒருவன். தலைகளை வெட்டி வரவேற்பறையில் வைத்து அழகு பார்த்தான். மமதை கொண்ட மனிதனுக்கு எல்லாமே விளையாட்டாயிற்று. ஆதி அடிமை வாசம் மாறா சில  யானைகள் துதிக்கையேந்தி பிச்சையெடுத்தன. ஆயிரம் பொன் மதிப்புடைய யானையின் நாசி முனையில் அலுமினியக் காசினை வைத்து ஆசி பெற்றான் மாமனிதன். அத்தனை பலத்தினையும் உணராமல்  ஆசி தந்து நகர்ந்தன யானைகள். அதன் எண்ணிக்கை குறைந்தன. கண்காட்சியில் வைக்கப்படும் உயிரானது  யானை. கொம்பன் விழிகளை மூடியது. 

வேகமாய் வந்த இரயில் கொம்பன் மீது மோதியது. கால் இரும்புப்  பிடியில் சிக்கியிருக்க இரத்தம் கக்கியபடி சாய்ந்த கொம்பனின் கால் எலும்புகள் முறிந்தன. பெரும் ஓலம் எழுப்பியவாறு நிலத்தில் வீழ்ந்தது. உயிர் பிரியும் முன்பு தன்னுடன் இணையாய் ஓடிவந்த மாதங்கியினை ஒரு கணம் எண்ணியது. மெல்ல கண்களை மூடியது. அசைந்து கொண்டிருந்த செவி மடல்களின் இயக்கத்தினை  நிறுத்தியிருந்ததது உலகின்  கடைசி யானை.

முற்றும்.


Thursday 25 October 2012

பெருந்திணைக்காரன்




பெருந்திணைக்காரன்

ரவி சித்தப்பாவை பெஞ்சில் படுக்க வைத்திருந்தார்கள்.ஏகப்பட்ட மாலைகள்.கடைசி நொடியில் அவர் விலக்க முயன்றிருக்கக் கூடிய வலி முகத்தில் நிரந்தரமாய் உறைந்திருந்தது. எப்போதும் சித்தப்பாவின் கண்தான் முதலில் சிரிக்கும். பிறகுதான் மீசை, உதடு என்று சிரிப்பு விரியும். எவ்விதச் சலனுமுமின்றி மூடியிருந்த கண்களுக்குள் கண்ட கடைசிக் காட்சியின் பிம்பம் பிரித்துப் பார்க்கும் ரகசிய ஆசை அந்த வேதனையிலும் இவனுக்குள் கிளர்ந்தது. மீசைஎன்றால் கம்பீரம் மட்டுமல்ல. அத்தனை மென்மையும் கூட. லேசாக நரைத்திருந்தாலும் கம்பீரம்  கொஞ்சமும் குறையவில்லை. புன்னகை தொலைந்த முகத்தை பார்க்கப் பார்க்கத் தாங்கவில்லை. பெரிதாய் அழவும் முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்திருந்தது.
சித்தப்பாவை மதியம் போல் குளிப்பாட்டினார்கள். தலையிலிருந்து ஊற்றிய தண்ணீரில் நனைந்த நரைத்த முடியடர்ந்த நெஞ்சை அழுந்தத் துடைத்துவிட வேண்டும் போலிருந்தது. பரிமளமா நாற்றமா எனத் தீர்மானிக்க முடியாத அத்தர் மனம் அப்பிரதேசமெங்கும் துக்கத்தின் வாசனையை பரப்பியிருந்தது. சித்தப்பாவின் வாசனையோ வேறு. அதை இனி உணர முடியாது என்று நினைக்கும்போதே சுவாசிக்க சிரமமாயிருந்தது. தான் அணிந்திருந்த கட்டம் போட்ட வெள்ளை முழுக்கை சட்டையை ஒருமுறை ஆழ முகர்ந்து பார்த்துக்கொண்டான். யாரோ ஒருவர் சித்தப்பாவின் பழைய வேட்டி முடிச்சை அவிழ்த்து நழுவவிட்டுச் சட்டென்று அதே வேகத்தில் புது வேட்டி மாற்றினார். சித்தப்பாவின் பிறப்பேந்திரியம் நொடிப்பொழுது கண்ணில் பட்டு மறைந்தது. கறுப்புச் சாம்பல் பூக்களால் அழகாகக் கோர்த்திருந்த சங்கிலியின் முதல் இணைப்பு இவனுக்குள் லேசாக விரிவுபட்டது. நிறையக் காற்று தேவைப்பட்டது.

சித்தப்பாவின் இறுதிப் பயணம் கொட்டு முழக்கோடு புறப்பட்டது. சுடுகாட்டில் வரட்டி அடுக்கிச் சித்தப்பாவைப் படுக்க வைத்துக் கை காலை மடக்கிக் கட்டியபின் ,முகம் மூடுவதற்கு முன்பாக, வாய்க்கரிசியும் காசும் நெஞ்சின் மீது போட்டுவிட்டுப் பானைத் தண்ணீரில் கைகழுவி உதறியபோதும் அழுகை வரவில்லை. திகுதிகுவெனப் பற்றியெரிந்த சித்தப்பா கரும்புகையை எழுப்பியபடி காற்றோடு கலந்தார். அவ்வளவுதான். இனிச் சித்தப்பாவின்  வெதுவெதுப்பான உள்ளங்கையைப் பற்றியவாறு பேசிக்கொண்டிருக்க முடியாது. அவர் நெஞ்சில் தலை சாய்த்து தூங்க முடியாது. வியர்வையூறிய அவருடைய நெற்றியில் பதிக்கும் உதடுகளில் பரவும் உப்புச்சுவைக் கிடைக்காது. இவனுக்குள் மேலும் சங்கிலி இணைப்புகள் சில பட்பட்டென்று விடுபட்டன. தளர்ந்து திரும்பிய வழியில் புதரோரம் ஒதுங்கி உட்கார்ந்தான். சிறுநீர் பெருகி மடை திறந்ததுபோல் வெதுவெதுப்பாகக் கொட்டியது. நேற்றிரவிலிருந்து சிறுநீர் கழிக்காதது ஞாபகம் வந்தது.

திடீரென்றுதான் உணர்ந்தான். மலம் கழிப்பது போல் உட்கார்ந்துதான் எப்போதும் இவன் சிறுநீர் கழிப்பான். இப்படிக் கால்விரல்களை மட்டும் அழுந்தப் பதிந்து பாதத்தை உயர்த்தியவாறு உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது சித்தப்பாவின் வழக்கம். இனிச் சாகும் வரையிலும் சித்தப்பாவாக இருக்கப் போகிறோமென்று எழுந்து நடந்தபோதே இவனுக்குத் தெரிந்து போயிற்று. மூளைக்குள் இருள் பரவ அப்படியே தரையில் சரிந்தான்.



*          *             *

ரவி சித்தப்பாவின் மடியில் இவன் அமர்ந்திருந்தான். ஆற்றுப் பாலத்தின் நிழல் இருவரையும் அணைத்திருந்தது. நிழல் முடிந்த இடத்திலிருந்து  தொடங்கிய வெயில் போர்த்திய வறண்ட ஆறு மிகத் தொலைவில் கானல் நீரைக் காட்டித் தத்தளித்தது. நீர்ப் பிம்பங்களாய் ஆடியபடி இவன் நண்பர்கள் தெரிந்தார்கள். ஏதோ ஒரு விளையாட்டு. சற்று முன் வரை அவர்களோடு ஆட்டத்தில் இவனுமிருந்தான். விளையாட்டு என்றால் அவர்களுக்கு ஆறுதான். பிள்ளைகள் விளையாடுவதற்காகவே வறண்டுவிட்டதைப்போல்இவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே  ஆறு அப்படித்தான் இருக்கிறது. வருடம் முழுவதும் உயரக் கரைகளில் திமிறியபடி வெயில் வழிந்தோடும். இவனுக்கு அன்று புதிதாய் ஒரு விளையாட்டுக் காட்ட வந்த சித்தப்பாவின் வாசனை காற்றைத் தழுவி இவன் நாசியில் நுழைந்து மனம் முழுவதும் நிரம்பியிருந்தது.

சித்தப்பாவின் மேலுதட்டைக் கவ்வும் பெரிய மீசை இவனுக்கு மிகவும் பிடிக்கும். மீசை என்றால் என்னவென்று இவனுக்குத் தெரியும். மீசை என்றால் அது அப்பா அல்ல. அப்பாவுக்கு மீசை முளைக்கும். மூன்று நாட்களுக்கொருமுறை செய்யும் சவரத்தில் மீசையோடு மென்மையும் காணாமல் போய்க் கடுமை சேர கன்னப் பகுதியில் சதையுமற்ற மிக ஒல்லியான அப்பா இவன் வெறுக்கும் ஆட்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றார். இவனுடைய பள்ளிக்கூட வாத்தியார்கள் அனைவருக்கும் சிறியதும் பெரியதுமாய் மீசை இருக்கும். கணக்கு வாத்தியார் கண்ணன் உயரமாகத் தடியான உருவத்தில் அடர்ந்த மீசையுடன் நடந்து வந்தால் மற்ற வாத்தியார்கள் அவர் கம்பீரத்துக்கு  முன்னால் காணாமல் போவார்கள். மீசையென்றால் கண்ணன் வாத்தியார் போல் கம்பீரம், தனபால் வாத்தியார் போல் அழகு, மணிராஜ் சார் போல் படிப்பு என்றிருந்தவனுக்குப் பட்டாளத்திலிருந்து வந்திறங்கிய சித்தப்பாவின் மீசை தன் அப்பாவுக்கு எப்படி இருக்கவேண்டும் என இவன் எதிர்பார்த்திருந்தானோ அப்படியே இருந்தது.

பல வருடங்களுக்குப் பிறகு பட்டாளத்திலிருந்து வந்திருந்த சித்தப்பாவிற்கு காடை சமைத்து விருந்து நடந்தது. தின்றது செரிக்க இவன் ஆற்றுக்கு விளையாடச் சென்றிருந்தான். கோடை விடுமுறை என்பதால் பிள்ளைகள் குழுமியிருந்தார்கள். தனித்துக் கிடந்த ஆறு வா வா என்று அழைத்துப் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடிக் களைத்தது. விளையாடிக் கொண்டிருந்தவன்  சித்தப்பாவைக் கண்டதும் சந்தோசத்தில் பூரித்தான். பாலத்து நிழலில் அமர்ந்த சித்தப்பா சிகரெட் பற்றவைத்ததும் பரமு'' ஐயைய...என்னடா ஒங்க சித்தப்பா பீடிஎல்லாம் குடிக்கிறாரு?'' என்று முகம் சுளித்தான். இவனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது. சட்டென்று சொன்னான். '' அவரு வேலை பார்த்த இடத்துல இதெல்லாம் குடிக்கணும்டா.'' எதிலும் அவரைக் குறைத்துப் பேச விருப்பம் கிடையாது. அவர் தன் உருவகம். பிற்காலத்தில் இவன் ரவி சித்தப்பாவாகத்தான் போகிறான்.

பரமுவை விட்டு விலகிச் சித்தப்பா அருகில் சென்றான். இவனைக் கண்டதும் சிரித்த சித்தப்பாவின் நெஞ்சின் மீது தங்கச் சங்கிலி வெகு அழகாக புரண்டு கிடந்தது. சித்தப்பாவின் மூக்கு வழியே புகை வெளியேறுவதைக் குதூகலமாய் கவனித்தவனிடம் கேட்டார் '' வெளையாடப் போகல?''
''அப்புறம் வாறேனுட்டேன்.''
சரி. இப்பிடி வா.''
அழைத்து மடியில் அமரவைத்துக்கொண்ட சித்தப்பாவிடம் வாசனை இருந்தது. இவன் விரும்பும் வாசனை. வந்த அன்றே மிலிட்டிரி ரம் என்று சொல்லி அப்பாவுக்கு ஒரு பாட்டில் தந்தபோது அவர் பெட்டியில் வேறேதோ பாட்டிலும் இருந்ததைக் கவனித்திருந்தான். அதிலிருந்த பொன்னிறத் திரவம் ஊறவைத்த எச்சிலைத் தொண்டை விழுங்கியது. ஒருமுறை சித்தப்பா அதை அருந்தியபோது இவன் அருகில் இருந்தான். பின்பு சித்தப்பாவின் வார்த்தைகள்  அந்த வாசனையில் நனைந்து வந்தன. சித்தப்பா எப்போதாவது போட்டுக்கொள்ளும் சென்ட் வாசனையும் அருந்தியிருந்த பானத்தின் வாசனையும் கூடுதலாய் அவருக்கே உரிய வியர்வை வாசனையும் ஒன்றாய்க் கலந்து அவரைச் சுற்றியிருந்த  காற்றின் மணத்தை மாற்றியிருந்தன.சுவாசிப்பின் வழி இவன் வேறுலகம் சென்றிருந்தான். வேட்டி கட்டியிருந்த சித்தப்பாவின் மடியில் அமர்ந்த இவன் நினைவுகளில் பாலத்துக் காற்று பூஞ்சை பூசி மயங்கச் செய்திருந்தது.

முடியடர்ந்த முரட்டுக் கையால் மென்மையாய் அணைத்திருந்த சித்தப்பா இவன் இடதுதோளின் மீது முகம் அழுத்தி ஆழமாக மூச்சிழுத்தார். விரல்கள் வருடியபடி மார்பிலிருந்து  மெல்லக் கீழிறங்கி நாபி தாண்டியபோதே இவனுக்கு உடம்பெங்கும் சிலிர்ப்பான கூச்சம் எழுந்து அடங்கியது. கண்களை மூடிக்கொண்டான். அவர் மீசை இவன் காதுமடளைத் தொட்டு உரசியவாறிருக்க ட்ரவுசரை மீறி உட்சென்ற சித்தப்பாவின் விரல்கள் இவனை வருடத் தொடங்கின. அவர் பிடிக்குள் ஒரு கோழிக்குஞ்சு போல் ஒடுங்கியிருந்தான். அந்தக் கதகதப்பு இவனுக்குத் தேவையான பாதுகாப்பைத் தந்திருந்தது. அவர் விரல்பட்ட இடம் தனியாகவும் உடல் தனியாகவும் இரண்டாய் மிதந்தான். எவ்விதக் கிளர்ச்சியும் ஏற்படுத்தாமல் சுண்டி இழுத்தாற்போல் சிறுவலி மட்டும் தந்து சட்டென்று சோப்பு நுரைபோல் வெளிப்பட்டது. சித்தப்பாவின் கைகளில் பட்டு, இவன் ட்ரவுசரிலும் படிந்தது. மயக்கமா களைப்பா என்று புரியாத நிலையில் அவர் நெஞ்சில் சாய்ந்துகொண்டான். ''வீட்டுக்குப் போறியா...இல்ல வெளையாடவா?'' காதோரம் கிசுகிசுத்த சித்தப்பாவிடம் '' தூக்கம் தூக்கமா வருது'' என்றபடி கண்ணயரத் தொடங்கினான். அவரும் கண்களை மூடிப் பாலத்து சுவர்மீது சாய்ந்து கொண்டார். பெரும் இருள் இருவரையும் போர்வையாய் மூடியது.


*                *                   *

இவன் துரத்த வெயில் ஓடிக்கொண்டிருந்தது. உடல் முழுவதும் வியர்வை வழிந்திருக்க மூச்சிறைத்து நின்றவன் சித்தப்பாவை தேடினான். பாத்தி கட்டி நீர் பிரித்துக்கொண்டிருந்த சித்தப்பா அங்கிருந்தபடியே '' என்னடா?'' என்றார்.
''அம்மா ஒங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னுச்சு.''
சரி... போ வர்றேன்.''
கால்களைச் சுடுமணலில் ஓங்கி உதைத்து கைகளால் காற்றைத் திருகி உடல் திருப்பி உதடுகள் துடிக்க பெரும் சப்தத்துடன் வெகுவேகமாக வீட்டுக்கு விரைந்தான்.

அன்றிலிருந்து மூன்றாம் மாதம் இவன் ஏழாம் வகுப்புக் காலாண்டுத் தேர்வு விடுமுறையின் ஒரு நாளில் சித்தப்பாவுக்கு திருமணம் நடந்தது. பள்ளிபடிப்பு முடிந்து அடங்காதக் காளையாய் திமிறி திரிந்து கொண்டிருந்த ரவி பட்டாளத்துக்குச் சென்றபின் அண்ணன் திருமணத்துக்குக்கூட ஊர்ப்பக்கம் வரவில்லை. திருமணம் பற்றி சிந்திக்காமல் வயது தாண்டியபின் கிராமத்துக்கு வந்தபோது ரவி சித்தப்பாவாகியிருந்தான். சித்தப்பா என்றழைத்த  இவனோ பன்னிரண்டு வயதை எட்டியிருந்தான். அருவமாய்க் கேள்விப்பட்டிருந்த ரவி சித்தப்பா உருவமாய் மனதில் பதிந்தது அப்போதுதான். தனதாளுமையாகவும் தனக்கான ஒட்டுமொத்த நம்பிக்கையாகவும் விளங்கிய சித்தப்பாவின் திருமணத்தில் இவன் சோகமாகத் திரிந்தான்.

சாதாரண நூல் புடவையையே மிக நேர்த்தியாகக் கட்டிக்கொண்டு கோவில்சிலைபோல வடிவம் கொண்டிருந்த சித்தியைப் பார்த்த உடனே இவனுக்குப் பிடிக்காமல் போயிற்று. திருமணத்தன்று இரவில் இவன் மீண்டும் அப்பா அம்மாவுடன் முற்றத்தில் வந்து படுத்துக்கொண்டான். முன்னெல்லாம் முற்றத்தில் அப்பா அம்மா. வாசல் திண்ணை ஒன்றில் கட்டில் போட்டுத் தாத்தா. மறு திண்ணையில்  அம்மாயா. சித்தப்பா வரும்வரை முற்றத்தில் அப்பா அம்மாவோடு படுத்திருந்தவன் அவர் வருகைக்குப் பிறகு வீட்டின் உபயோகமற்ற அந்த அறைக்குள்ளே அவருடன் உறங்கத் தொடங்கினான். கரணம் சித்தப்பா சொன்ன ராணுவக் கதைகள், சித்தப்பாவின் கண் சுருங்கும் சிரிப்பு, மீசை. பள்ளிக்கூடத்துக்கு இவன் வாசனை சென்ட் பூசிப் போனான். அந்த அறையின் ஒரு மூலையிலிருந்து  வாசனை கசிந்துகொண்டே இருக்கும். நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் பாலத்து நிழல் படிந்த ஆற்று மணலில் அமர்ந்தபடி அவர் தந்த ஆதரவான அணைப்பு மீளமுடியாத கிறக்கத்தைத் தந்திருந்தாலும் எல்லாவிதத்திலும் தனக்கான பாதுகாப்பாய்ச் சித்தப்பாவை உணரத் தொடங்கியிருந்தது அப்போதுதான்.  இரவு தூக்கத்தில் புரள்கையில் இவன் கை சித்தப்பா மீது பட அந்த ஆழ்ந்த  உறக்கத்திலும் மெல்லிய சந்தோசம் இதழ்க் கோடியில் புன்னகை பூசி விலகும். எவ்விதக் கவலையுமின்றி கனவுகளுடன் உறங்க சித்தப்பா தந்த உத்திரவாதமான ஸ்பரிசம் நிகழ்ந்த அந்த அறைதான் திருமணத்தன்று இவனை மீண்டும் முற்றத்தில் உறங்கவைத்த முதலிரவு அறையாய் ஆனது. திருமணத்துக்கு மறுநாள் சிரித்து நின்ற சித்தப்பாவை நெருங்கியவன் புதிதாய் இன்னொரு வாசனையை உணர்ந்தான். நிமிர்ந்து அவர் முகம் பார்க்க அதே சிரிப்பு அதே மீசையுடன் இருந்தாலும் ஏதோ புது மனிதனைப் பார்ப்பது போல்தான் இருந்தது. '' என்னடா?'' என்று இவன்  கையைப் பற்றிய சித்தப்பாவின் விரல்களில் மோதிரங்கள் மேலும் உறுத்தலைத் தந்தன. புதிதாய்க் கல்யாணமான தம்பதிகள் கோவில், சினிமா என்று போனபோது சின்னப்பையன் என்று இவனையும் உடன் அழைத்துக்கொண்டு போனார்கள் . அவர்கள் அன்னியோன்யத்தை பார்க்கச் சந்தோசமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. அவர்கள் குழந்தையாய் இவன் அலைந்தான். குறிப்பாகச் சித்தப்பாவின் பார்வையில் தன்னைக்  காத்துக்கொண்டான்.

ஏழாம் மாதம் முடிந்து சித்தியை அவர்கள் அம்மா வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். இவனுக்கு ஏழாம் வகுப்பு முடிந்து கோடை விடுமுறை. பெரும்பாலும் வயல் வேலைக்குப் பிறகு மீதிப் பொழுதெல்லாம் சித்தியைப் பார்க்கச் சித்தப்பா சென்றுவிடுவதுண்டு.  டீ.வி.எஸ். பிஃப்டியில் போனால் அரைமணி நேரத்தில் சித்தியின் வீடு. சாப்பாடு முடித்துத் தாமதமாய்த் திரும்பும் நேரங்களில் இவன் அவருடனே அறையில் படுத்துவிடுவான். ஆனாலும் அத்தனை எளிதில் தூங்கிவிடமாட்டான்.  படுத்த ஐந்தாவது நிமிடமே குறட்டைவிட ஆரம்பிக்கும் சித்தப்பாவை இருட்டில் உற்றுப் பார்த்தபடி படுத்திருப்பான். திருமணத்துக்கு முன் அவருக்கு இவ்வளவு சதையில்லை. குறட்டையும் கிடையாது. அருகில் படுத்து அவர் வாசனையை சேகரிக்க முயல்வான். அவர் கையை தன் கை தொட்டுக் கொண்டிருக்க  படுத்திருப்பான். தூக்கம் வராது. சட்டென்று புரண்டு படுக்கும் சித்தப்பாவின் கை இவன் விரல்களை விட்டு விலகிச் செல்ல தாள முடியாத துக்கம் பெருகி  கண்ணீர் துளிர்க்கும். சித்தப்பாவின் முதுகு பார்த்தபடி சத்தமில்லாமல் அழுவான்.

சித்திக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. இவன் போய் பார்த்தான்.சித்தப்பாவைப் போலவே கறுப்பு. குழந்தை கண் மூடி சிரித்தபோதெல்லாம் இவனுக்குச் சித்தப்பா ஞாபகம் வந்தது. அவரைப் போல் மீசையில்லை. அவ்வளவுதான். குழந்தை மீது அளவு கொள்ளாத வெறுப்பு ஏற்பட்டது. வேறு யார் மாதிரியாவது பிறந்திருக்கலாம். இப்படி சித்தப்பா மாதிரியே யார் பிறக்க சொன்னது. சித்தப்பா என்றால் ஒருவர்தான். சித்தப்பா மட்டும்தான் அப்படி இருக்க வேண்டும். அவர் நகலோ ஜாடையோ கூடாது. இவனுக்கு எரிச்சலாய் வந்தது.

அந்தக் கிராமத்துப் பள்ளியில் பத்தாவது வரைதான். மேற்கொண்டு படிக்க பக்கத்து ஊர் செல்லவேண்டும். இவன் ஹாஸ்டலில் தங்கிப் படித்தபோது சித்தப்பாவின் வாசனை இவனைவிட்டு விலகாமல் காத்தது ஒரு தீபாவளிக்கு சித்தப்பா எடுத்துத் தந்த கட்டம் போட்ட வெள்ளை முழுக்கை சட்டையெங்கும் பரவியிருந்த அவர் வாசனையே. சித்தப்பாவுக்கு நிறைய  சதைவிழுந்து ஆளே மாறிப்போனார். மீசையும் சிரிப்பும் மட்டும் அப்படியே இருக்க எப்போதாவது இவனைப் பார்க்க ஹாஸ்டல் வந்து போகும் நாளன்று இரவு தனியே கொஞ்ச நேரம் அழுவான். இவன் எப்போதாவது ஊருக்குப் போகும்போது அவர் அருகில் அமர்ந்து பேச வேண்டியதெல்லாம் பேசுவான். இவனுக்கென்று பிரத்யேகமான வார்த்தைகள் சித்தப்பாவிடம்  இருக்கும். இருவருக்குமான பகிர்தலில் இவனுக்கு மனம் நிறையும். சித்தப்பாவுக்கு இரண்டாவதும் பையனே பிறக்கக் குழந்தை சித்தி ஜாடையில் இருந்தது.

முதல் செமஸ்டர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது  வீட்டில் சித்தப்பாவைத் தவிர யாருமில்லை. சித்தியின் ஊரில் கோயில் திருவிழாவுக்காக எல்லோரும் சென்றிருந்தார்கள். வயல் வேலை காரணமாய் அவர் இரண்டு நாள் கழித்துச் செல்வதாக இருந்தார். அன்றிரவு முற்றத்தில் பாய்விரித்து இருவரும் படுத்தார்கள். முற்றத்துக் கம்பி இடுக்கின் வழியே கசிந்த நிலா வெளிச்சத்தில் அவர் உறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். பால்யம் புரண்டெழுந்தது. இவன் அருகில் படுத்துக் கிடந்த சித்தப்பாவின் வலது உள்ளங்கையைத் தொட்டான். உள்ளே அலையடித்தது. சித்தப்பா எழுந்து தன்னை அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அமர்ந்த நிலையிலேயே அவர் உள்ளங்கையில் முத்தமிட்டான். வாசனை சர்ரென்று நாசியைத் தொட்டுக் கண் நெற்றி கடந்து உச்சிக்குச் சென்று மூளையெங்கும் பரவியது. காதுமடல் சூடாகி வெப்பம் பரவியது. காற்று வியர்வையை அள்ளி இவன் நெற்றியில் பூசியது. மெலிதான குறட்டையொலியுடன் உறங்கிக் கொண்டிருந்த சித்தப்பா விழித்தார். '' தம்பி'' என்றார். படக்கென்று நிமிர்ந்தான். '' என்னப்பா?'' எழுந்து அமர்ந்த சித்தப்பா உடம்பெங்கும் நிலாக் கோடுகள். '' ஒண்ணுமில்ல சித்தப்பா'' அவர் இவனை உற்றுப் பார்த்தார். இருட்டில் பளபளத்த இவன் விழிகளில் இறைஞ்சுதல் அலைந்தது. '' தண்ணி         குடிச்சிட்டு படுப்பா'' என்ற சித்தப்பாவின் மார்பின் மீது கைவைத்து அணைத்துக்கொண்டான். அவர் இதயம் ஒரு நொடி அதிர்ந்தது. இவன் தடுமாறியதையும் அலை பாய்ந்ததையும் உணர்ந்தவராக '' நீ பெரிய மனுசனாயிட்டடா'' என்று இறுக்க அணைத்துக்கொண்டார். சித்தப்பாவின் வாசனை மாறவே இல்லை. இவன் மிகப் பாதுகாப்பாய் உணர்ந்த கணங்கள் பல வருடக் கொடிய தனிமைக்குப் பிறகு மீண்டன. தான் எப்போதும் சிறுபிள்ளைதான் என்பதை மீண்டும் ஒருமுறை சித்தப்பாவுக்கு உணர்த்தினான். வெயில் தழும்புகளின் வெம்மையை நிலா ஆற்றிக்கொண்டிருந்தது.

*                    *                        *
அலுவலகத்திலிருந்தபோது போன் வந்தது.  சித்தப்பாவுக்கு நெஞ்சுவலி பெரியாஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாய். ஆஸ்பத்திரி சென்று பார்த்தபோது சலைன் ஏறிக்கொண்டிருந்தது. மார்புவரை போர்த்தியிருந்த துணியில் அவர் உடம்பு தெரியவில்லை. மாறாக உள்ளுக்குள் புதைந்திருந்த வலி நெற்றிச் சுருக்கத்தில் தெரிந்தது. முதல் அட்டாக். இவனுக்கு மனம் கனத்து ஊசி குத்துவது போல் விட்டுவிட்டு உடம்பெங்கும் வலி பரவியது. இவனைப் பார்த்ததும் மெதுவாய்ப் புன்னகைத்தார். இயலாமையில் விரியும் கண்களில் வேண்டுதல் தத்தளித்தது. வலது கையில் கட்டியிருந்த திருப்பதிக் கோயில் கயிறு மிகத் தளர்ந்திருந்தது. படுக்கையில் அமர்ந்து அந்தக் கையைத் தொட்டான். பதறினான். சித்தப்பாவின் அத்தனை வலியையும் தான் ஒருவனே உறிஞ்சிக்கொள்ள வேண்டுமென மனம் தவித்தது. அந்த அறையில் அவர்கள் இருவரும் மட்டும் இருக்க வேண்டுமென விரும்பினான். தொண்டை வறண்டு உடம்பெங்கும் ஒருவித நடுக்கம் பரவ வெளியேறினான்.

ஆலமர நிழலில் இவன் படுத்திருந்தான்.  அருகில் சிமெண்ட் மேடைமீது இவன் வயதொத்தவர்கள் கேரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  பலகையில் தெறித்த விளையாட்டுக் காய்களைப் போல் இவன் மனம் நான்கு திசைகளிலும் மோதிச் சிதறிக்கொண்டிருந்தது. சித்தப்பாவுடன் விளையாடியது ஞாபகம் வர கண்களை மூடினான். சித்தப்பா புன்னகைத்தார். அவர் வலது கையில் கட்டியிருந்த சிவப்புக் கயிறு தளர்ந்து இவன் கண் முன் ஆடியது. குடும்பத்தோடு திருப்பதிக்குச் சென்று வந்த  நினைவு அலைமோதியது. கண் திறந்தாலும் சித்தப்பா. மூடினாலும் அவரே. அவரில்லாத நாள்களின் எண்ணமே இவனை அச்சுறுத்தியது. எழுந்து நடந்தான்.
*         *         *
வீட்டில் யாருமில்லை. எல்லோரும் ஆஸ்பத்திரியில். இவன் மட்டும் அந்த அறையில் தனித்திருந்தான். மூலையிலிருந்து கசிந்து கொண்டிருந்த வாசனை அறை முழுவதும் சித்தப்பாவை நிரப்பியிருந்தது. கொல்லைப்புறம் சென்று கிணற்றில் நீர் இறைக்கும் வாளியிலிருந்து கயிற்றை விடுவித்தவன் அறைக்கு வந்து மேலே தெரிந்த மின்விசிறியில் நுழைத்துப் பார்த்தான். மிகச் சரியாக இருந்தது. ஒருமுறை ஆழமாக மூச்சிழுத்தான். உடல் முழுவதும் சித்தப்பா பரவினார். ஸ்டூலை உதைக்கும் முன் அறைக் கதவு திறந்திருக்கச் சித்தப்பா இவனைப் பார்த்துச் சிரித்தபடி நின்றிருந்தாற்போல் தெரிந்தது. வாசலில் யாரோ செருப்பை உதறினார்கள்.

இவன் வெகுவேகமாக நடந்து கொண்டிருந்தான். சித்தப்பாவும் இவனும் நடந்திருந்த அய்யனார்  கோயில் வெளி தாண்டிய சாலை இப்போது தார்ப் பாதையாக மாறிச் செம்மண் சாலையில் படிந்திருந்த அவருடைய பாதச் சுவடுகளைச் சிதைத்திருந்தது. கானல் அழுகை காட்டி தழுதழுத்த சாலையிலிருந்து முளைத்த வெப்பம் இவனைக் கருக்கிக் கொண்டிருந்தது. பாலத்து மேடேறி வந்த  லாரி அலை அலையாய் நெளிந்தது. இவன் நடையை வேகப்படுத்தினான். சட்டென்று நின்று நடுச் சாலைக்கு வந்தான். ஹாரன் அடித்தபடி வேகமாய் வந்த லாரி பெரும் சப்தத்துடன் பிரேக் போட்டு இவன் அருகில் நின்றது.  யாரோ இவனை சாலை ஓரத்துக்கு இழுத்தார்கள்.

*           *                    *

சித்தப்பாவின் மார்பு மேலேறித் தணிந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு நாட்களாக மூச்சுக்குப் போராடி மீண்டும் இயல்பு நிலைமைக்குத் திரும்பியிருந்தார். மூடியிருந்த இமைகளுக்குள் விழிகள் உருள்வது தெரிந்தது. கால் பக்கம் அமர்ந்து போர்வையை விலக்கினான். அவர் கடுமையான உழைப்பாளி. வயல், காடுகரை என்று எங்கும் வியர்வை தெளித்துத் திரும்புவார். பாதங்களைப் பார்த்தான்.  பல இடங்களில் முள் ஏறி முறிந்த அடையாளமாய்க் கெட்டித்துப் போயிருந்தது. கால் விரல்களை வருடினான். மனம் தாள முடியாமல் கலங்கினான். வலதுகை உயர்த்தி இவனை அருகில் அழைத்தார். முகத்தருகே குனிந்தான். வாய் அசைந்து மெல்லிய குரல் காதில் விழுந்தது.
'' வலிக்குதுடா''


*          *                        *
 
இவன் அந்த அறையில் ஸ்டூல் மீது அமர்ந்திருந்தான்.கறுப்புக் கட்டம் போட்ட வெள்ளைச் சட்டை அணிந்திருந்தான். வாசலில் அம்மா யாரிடமோ அழுகை தெறிக்கப் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. ''ஆகாரமெல்லாம் குடுக்கலாம்னு டாக்டர் சொன்னதால நேத்துதான் ஒரு இட்லி சாப்பிட்டாரு. திடீர்னு காலையில ரொம்ப முடியாமப் போயி...'' மிச்சமிருந்த சென்ட்டை உடல் முழுவதும் பீச்சிக்கொண்டு எழுந்தான்.
சித்தப்பாவை பெஞ்சில் படுக்க வைத்திருந்தார்கள். அறுந்த வாழையாய் அப்படியே தரையில் சரிந்து விழுந்தான்.
இத்தனை வருடங்களில் ஆற்றில் தண்ணீர் வரவில்லையென்றாலும் நிறைய மாற்றங்கள். அங்கங்கே மணல் தோண்டியிருந்ததி்ல் அம்மைத் தழும்புகள் நிறைந்திருந்தன. உயரக் கரைகளிலிருந்து  இறங்கும் படிகளைக் கூட காணவில்லை. உடைந்து சிதிலமாகியிருந்த படிகளெங்கும் புல் முளைத்து மறைத்திருந்தது. நீளநீளமான கோரைகளின் மீது இவன் சரிந்து இறங்கினான்.   முன்பு சித்தப்பாவும் இவனும் அமர்ந்திருந்த இடம் இப்போது இருளில் கிடந்தது. பெளர்ணமிக்கு மறுநாளானதால் நிலா மஞ்சள் ஆடையை உதறி ஆறெங்கும் வெண்ணிற ஒளியை அள்ளி வீசியபடி விரைந்து கொண்டிருந்தது. இவன் நடந்தான். முழுக்கைச் சட்டையெங்கும் நிறையப் புழுதி படிந்திருந்தது. அங்கே சென்று அமர்ந்தான். சித்தப்பாவின் வாசனை காற்றில் சரசரவெனப் பரவியது. இவன் நாசி அதை உணர்ந்தவினாடி  இவனுக்கு விறைத்துக்கொண்டது. சித்தப்பாவின் விரல்கள் இவன் உடலெங்கும்   பரவி வருடி குவிந்ததாக இவன் உணர்ந்தான். கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிய ஈனஸ்வரத்தில்  முனகியபடி வானத்தில் விரைந்த நிலவைப் பார்த்தவாறு இயங்கத் தொடங்கினான். உடல் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது. உச்சக்கட்டத்தில் பீச்சியடித்த சுக்கிலம் சித்தப்பாவின் கைகளில் தெறித்து இவன் அணிந்திருந்த கட்டம் போட்ட சட்டையிலும் பரவி வழிந்து அதன் வாசனையைத் தின்னத் தொடங்கியது.

முற்றும்.

             

 


Wednesday 29 August 2012

நாகமனம்



நிலவுகளில் நெளியும் சட்டைகளை
இமை பொருத்தி உரிக்கிறாய்

விழிகருமணி விரையும்
வரைபடத்தின் இறுதி
அம்மணமாக்குகிறாய் சிசுக்கவிச்சியில்

சீறும் வாசனை நழுவும் நாசியில்
வெப்பத்தின் வாலில் துடித்துக் கடத்தும்
விரல்பின்னிய குளிர்நொடிகள்

ஊறிய எச்சில் உறைந்திருக்கிறது மாணிக்கப் பழமென

பெரும் இரை உண்ட  சாம்பல் மனம் அசையும் மெதுவாய்

பிளவுண்ட உதடுகளின் பிசுபிசுப்பில்
மிதக்கும் கண்களில் வழியும் பாம்புகளினால்
கனவுகளில் தேங்குகிறது விஷம். 

இரண்டாம் உலகம்



வெயில் விளையாடி மகிழும்  நெடுஞ்சாலை நடுவில்
பதப்படுத்தப்பட்ட குளிரினைத் தாங்கிய 
சிவப்பு நிற மகிழ்வுந்தின் உள்ளே
மடிக்கணினியின் மடியில் அமர்ந்தபடி
உலகை இயக்கிக்கொண்டிருக்கும் அவனுக்கு
மூடிய கண்ணாடிக்கு வெளியே
பதற்றங்களும் அவசரங்களும் நிரம்பிய  உலகமொன்று
பச்சை அனுமதிக்குக் காத்திருப்பது
தெரியாது.

நிழல் மீன்


கோடையிளைப்பாறும் நதியினில் வாழும் சிறுமீன்கள் 
சூரியனை வேடிக்கைப் பார்க்கும்
நதியுடலில் துளைகள் இட்டு

பசியூறிய இரைப்பையுடன் பறக்கும்
பருந்தொன்றின் நிழல்
நதியுடலில் உரச
உள்சென்று ஒளியும் மீன்கள்
அரை நொடியில் சிறு சிறு பதற்ற அலைகளை உருவாக்கும்

விரிந்துகொண்டேபோகும் நீரலையொன்று
கடல் சேர்ந்து பேரலையாகும்

நிழலறியா மீன்கள் காத்திருக்கும் 
நீர் ஆழத்தில்
நிலவு தொலையும் நாளினை  எதிர்கொண்டு.

நன்றி: கணையாழி. -2011   

Tuesday 28 August 2012

உலகின்குரூரமானமுத்தம்

உலகின்குரூரமானமுத்தம் 

நகரமெங்கும் 
தனித்தலைகிறதுஒருமுத்தம்
அதன்ஈரம்சிவந்திருக்கிறது
  
மதுக்கோப்பையொன்றில்விழுந்துஎழுந்து 
துளிகள்சிதறிவிரையும்முத்தம் 
கண்ணீர்கழுவியநண்பனின்கன்னத்தில் 
விழுந்துஅழுகிறது
  
அதற்குஒருபால்யமுண்டு
  
மிருதுவானஉள்ளங்கைமீதுதன்னைபதிக்க 
கனவுகளில்விரையும்முத்தம் 
உதடுகள்துடிக்கத்தோல்வியுறுகிறது 
 
காதலிகளால்கைவிடப்பட்டமுத்தமது
  
உலகில்வாழத்தகுதியற்றஅம்முத்தம் 
விடிவதற்குள்தன்னைநெருப்பிலிட்டு 
பொசுக்கிக்கொள்கிறது 
 
நிகோடின்போர்த்தியிருக்கும்செத்தமுத்தம் 
அதிகாலையில்தன்னைஅடக்கம்செய்துகொள்கிறது 
வெடிப்புற்றஊமைஉதடுகளின்பிளவில்.

Saturday 18 August 2012

குறுந்தகவலுக்கு முன்னும் பின்னும்






12 : 40


வீழும் கறுப்பு நயாகராவில் ரோஜா பூத்து அசைந்ததே...
வட்டத் தடாகத்தில் உயிர் சிமிட்டி மிதந்ததே இரு மீன்கள்...
ஈரச் செர்ரியில்   ஊறி அசைந்ததே அவன் பெயர்...
மியாவ் மயிர்களில் மிதந்து நகர்ந்ததே அவன் காற்று...

  12 :41

சிகை மொத்தம் வழித்து
சாக்பீஸில் எண் எழுதி கையில் திணித்த சிலேட்டுடன்
குற்றவாளிக் கூண்டில் ஏற்றினான்
கை நிறைய அமிலம் அள்ளி கண்களில் ஊற்றி அடைத்தான்
சிறுகத்திகொண்டு உதடுகளின் குறுக்கே ஒரே வெட்டு
நான்கு துண்டாக்கினான்
அதே கத்தியினால் கழுத்தறுத்தான்
தொடர்பு எல்லைக்கு அப்பால் பெருகிய ரத்தம்
பார்த்தபடி பதில் தகவல் அனுப்பினான். 






Monday 6 August 2012

பிரிதல் நிமித்தம்


போர் நிமித்தம் 

காட்சி 1
தலைவன்:
குருதிக் கறைகளை
கழுவிட நேரமின்றி இன்னும் இருக்கிறது
என்னிரு கரங்கள்
களையும் சிரங்கள்
வாளாயவளையணைத்தபடி
பல நாள் உறங்கும்
உரோமக் கால்கள்
காமக் கால்களாய்
வதைக்கும் வேதனையறியாது
பாடுவாள் நதியிடம்
போர்க்களம் புகுந்தவன்
மார்க்களம் வரமாட்டான்

தலைவி:
நகரும் நதியின்
இரவை நிறமழித்து
அமர்ந்திருக்கும் பாறை
சூடேறியிருக்கும்


ஆகாயம் ஆடைமாற்றும் பொழுதில்
அசைத்துவிட்ட
கிளையுதிர்க்கும் மலர்கள்
காற்றாலோ நதியாலோ
புறப்படும் இறுதிப்பயணம்


தாமத மேகங்கள்
விரைவதைக் கண்டவன்
திரும்பும்போது பற்றியெரியும்
இதழ்களை
அணைக்கச் சொல்லாதே

தோழி:
போர்க்கள பூமியில்
தென்படா மேகங்கள்
கொண்டுவருவதில்லை
அவனின் மழையை


பிணந்தின்னிக் கழுகளின்
இறக்கை மூடும் வானம்
அறியாதவன் அறியமுடியாது
விட்டுவந்த
நிலவின் வெப்பத்தை 


எந்நதிகளிலும் இறங்கமுடியாமல்
காற்றெரித்து வரும் தீயை
அணைக்கக் குளிர்ந்திரு.

பொருள் நிமித்தம்:

தலைவன் :
ஒப்பந்த அடிப்படையில்
உயிர்விட்டு  வந்தாயிற்று


இந்தவானம் இப்படித்தானிருக்கும்
இன்னும் சில யுகங்களுக்கு


நாடு கண்ட வெப்பமும்
நான் கொண்ட வெப்பமும்
நான்கு சுவர்களில் தவிக்கிறது
நள்ளிரவுகளில்
எனையெரித்தபடி


வாரம் தொலைபேசினால்
இவ்வருடம் மழையிங்கே அதிகம்
என்கிறாள்

தலைவி:
விட்டுசென்ற
நீல சட்டையில்
ஒட்டிய வாசனை
ஒட்டும் உயிரை


தொலைபேசி அழைப்பும்
தொண்ணூறு நாள் வாழ்வும்
தொடருமோ மறுபிறவியிலும் 


அத்தனை பூக்களும் அழிகின்றன
அதிகம் பெய்த மழையில்

தோழி:
எல்லா பூக்களும்
டிசம்பரில் பூப்பதில்லை


கடல் கடந்து சென்றவன்
உடல் கலந்து கொன்றவன்
திரும்பி வரும் நாளில்
பூத்துவிடும்
ஒட்டுமொத்த பூக்களும்
உன் தோட்டத்தில் ஓரிரவில்


பூக்களின் இதழ்களில்
குறித்துவை
பெருமழைக்காலம்
பேசிய கவிதைகள். 

தொன்மம் தேடியலையும் காந்தக்கல்லின் பாடல்

  தடாகம் இணைய இதழில் வெளியான எனது கட்டுரை- வருடம் 2009

' ஏ எலினே எலி எலி ...ஏ எலினே எலி எலி...மசாகின் மாரனகே...மசாகின் மாரனகே - விளக்கம் இறுதியில்.

சில வருடங்களுக்கு முன் சென்னையில் சக எழுத்தாள நண்பர் ஒருவர் தன் சந்தேகத்தை என்னிடம் கேட்டார். ' நரிக்குறவர்கள் எனும் நாடோடி மனிதர்கள் நாம் காணும் இடங்களெல்லாம் தென்படுகிறார்கள். கிடைத்த இடத்தில் படுத்து உறங்குகிறார்கள். கிடைத்த சாப்பாடு சாப்பிடுகிறார்கள். ஒரு புடவை மறைப்பில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் யாராவது ஒருவர் இறந்தால் அவரை எங்கு புதைக்கிறார்கள்? அல்லது எரிக்கிறார்கள்? வயதான குறவர்களைப் பார்க்கிறோம். இறந்த குறவர் பிணம் சுற்றி யாரும் அழுது நான் பார்த்ததில்லை. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? தேசமே வீடாயிருக்கும் அவர்களின் இடுகாடு உங்களுக்குத் தெரியுமா?' என்றார்.

மரணம் பற்றி விசாரிக்கச் சென்ற எனக்கு ஒரு குறவப்பெண்ணின் பிரசவத்தினை நேரில் உணரும் கொடூரம் நேர்ந்தது. ஆமாம், அது கொடூரம்தான். புரியாத மொழியில் ஏதோ வினோதமான சப்தம் அந்த இருட்டுக்குள்ளிருந்து கேட்டதும்தான் பேருந்து நிலையத்து மக்களுக்கு தங்கள் அன்றாட வழக்கமான பரபரப்புகளைத்  தவிர வேறொன்றும் இந்நேரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று புரிந்தது. பேருந்து நிலையம் நேர் எதிரில் அரசு மருத்துவமனை. அங்கு பிரசவத்திற்கென அனுமதிக்கப்பட்டிருந்த குறவப்பெண்ணொருத்தி எப்படியோ அங்கிருந்து கிளம்பி பேருந்து நிலைய கழிப்பறை கட்டிட இருளில் தஞ்சமடைந்து விட்டாள். அவள் குறவப்பெண் என்பதற்கு அடையாளமாக அவள் கட்டியிருந்த தாவணியும்
 ( புடவையின் பாதி ) கணுக்கால் ஏற்றிக் கட்டியிருந்த பாவாடை மட்டுமே சொன்னது தவிர வேறெதுவும் குறிப்பிட்ட அடையாளம் இல்லை. காதிலோ, மூக்கிலோ, கழுத்திலோ எவ்வித அணிகலனும் இல்லை. புரிந்து கொண்டார்கள்.

' யே...ஆஸ்பத்திரியிலேர்ந்து வந்துருக்குப்பா...ஏம்மா ஒனக்கு என்னம்மா வேணும்...ஏதாவது மறைவா துணி இருந்தா எடுத்துக்கிட்டு வாங்கப்பா...' ஆச்சரியமாய் அங்கிருந்த ஆண்களுக்கு இருந்த அக்கறை பேருந்துக்கென காத்திருந்த ஒரு பெண்ணுக்கும் இல்லாமல் போயிற்று. பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள். பேய் மட்டும்தான் இரங்கும் போலிருக்கிறது. லேசான வெளிச்சத்தில் தெரிந்த குறத்தியின் நிறைமேடான வயிறும் முகத்திலுறைந்த வலியும் மனதை என்னமோ செய்தது.  வலி தாங்க முடியாமல் முனகி கத்தியவள் அடுத்து செய்த காரியம் பகீரென்றது. சட்டென்று தரையில் படுத்து உருண்டாள். நிறைமாத வயிற்றுக் கர்ப்பிணிப் பெண் குப்புறப்படுப்பது என்பது கனவிலும் நினைக்க முடியாத ஒன்று. வியர்வையும்  கண்ணீருமாய் நிமிர்ந்தவள் '' ஒரு பிளேடு வேணும் சாமி'' என்றாள். பல் கடித்து  கால்களால் தரை உதைத்தபடி மெல்ல நகர்ந்து அவ்விருளின் உள்ளே சென்றுவிட்டாள்.

உறை நீக்கி பிளேடு தரும்போது மட்டும் கை நீட்டி வாங்கிக் கொண்டாள். அவளின் முக்கல் முனகல் மட்டும் சில வினாடிகள் கேட்டுக் கொண்டிருக்க திடீரென்று அப்ப்பிரதேசமே குமட்டும்படி ஒரு துர்நாற்றம் எழுந்தது. தொடர்ந்து குழந்தை அழும் சப்தம். எதிர்திசை பார்த்து திரும்பி நின்றிருந்த அனைவர் உடலும் ஒரு கணம் சிலிர்த்து அடங்கியது. சிறிது நேரத்துக்குப் பின் அவள் தன் வயிற்றோடு சேர்த்து அணைத்தபடி ஒரு சிசுவை தன் முந்தானைத் துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு கால்கள் நடுங்க மெல்ல நகர்ந்து போனாள் ஆஸ்பத்திரியின் இருள் நோக்கி. அவளைப் பின் தொடரும் சக்தி எங்கள் எவருக்கும் இல்லை. அதன்பின் அவள் எங்கு போனாள்  என்று யாருமே கவனிக்கவில்லை. பின்பு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் மரணம் எப்படி நிகழ்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கான ஜனனம் இவ்வாறுதான் நிகழ்கிறது என்று எழுதினேன்.

ஒரு மரம் போதும் அவர்களுக்கு. மழையில் நனைந்து,வெயிலில் காய்ந்து, சமைத்து சாப்பிட்டு, தூங்கி, திருமணம் செய்து, உறவுகொண்டு, குழந்தைபெற்று வாழ்ந்துவிடுகிறார்கள். பாசிமணி, ஊசிமணி, நரிப்பல் விற்கும் அவர்களின் கையில் ஒரு கயிறு இருக்கும். கயிற்றின் மறுமுனையில்  மிகப்பெரிய காந்தம் ஒன்று கட்டப்பட்டு தெருவெங்கும் அந்தக் காந்தக்கல் அவர்களுடனே பயணப்பட்டுக் கொண்டிருக்கும். ஊரின் அத்தனை இரும்புத் துகள்களும் அக்காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும். என்றாவது ஒருநாள் அந்தக் காந்தத்தில் தங்களது மூதாதையர்கள் வந்து ஒட்டிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் உலகம் எங்கும் இழுபட்டுக் கொண்டிருக்கிறது. அங்கும் ஆதி மனிதன் உருவாக அழகான கதை வைத்திருக்கும் ஆதிக்க மனிதர்கள், குறவர்கள் தோன்றியதற்கும் காரணம் வைத்திருப்பார்கள். தன்னளவில் சமாதனம் செய்துகொள்ளப் புனையும் கதைகளில் ஒன்றாகக் கூட அது இருக்கலாம். நிரந்தரமென்று எதுவுமின்றி நாடோடிகளாய்த்  திரியும் குறவர்கள்தான் உண்மை வாழ்வினை உலகிற்கு சொல்கிறார்களா...?

ஒரு சிறிய ஊரின் சிறிய பஸ் நிறுத்தத்தில் நடந்த சம்பவம். என் ஊருக்கு செல்வதற்காக பஸ்ஸுக்குக் காத்திருந்தபோது  அருகில் நிறைய குறவர்கள் தங்கள் குழந்தைகள், பெண்களுடன் நின்றிருந்தனர். வந்து நிற்கும் பேருந்துகளில் ஏறுவதும் நடத்துனர் ஏதாவது ஒரு காரணம் சொல்லி ( 'பின்னால வர பஸ்சுல கூட்டம் இல்ல...அதுல வாங்க...' ' இந்த பஸ் அங்க நிக்காது...') அவர்களை பஸ்ஸில் ஏற்றிச்செல்ல மறுப்பதுமாய் இருந்தது. இவர்களும் சளைக்காமல் வந்து நிற்கும் பஸ்களில் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர். சிறிது நேரம் கழித்து,  செல்லும் திசை நோக்கி கை காட்டியபடி ஏதோ பேசிக்கொண்டு நடக்கத் தொடங்கினார்கள் அனைவரும். இப்படித்தான் உலகம் முழுவதும் நடந்தபடியே இருக்கிறார்கள்  அவர்கள். திசைகளையும் தொலைவுகளையும் தீர்மானிப்பவர்கள் தங்களைத்  தவிர்க்கும் மனிதர்களைத் தவிர்த்தபடி அவர்கள் பாதையில் விரைகிறார்கள். நில உடல் முழுவதும் பதிந்திருக்கின்றன நரிக்குறவர்களின் பாதங்கள். இயற்கை தங்களைத் தவிர்க்காது என்று அவர்களுக்குத் தெரியும்.

அவர்களில் ஆண்கள் பெண்கள் அனைவருமே தங்களுக்குப் பிடித்த பெயர்களை கையில் தோளில் பச்சைக் குத்திக் கொள்கிறார்கள். அரசியல் கட்சி சின்னத்தையும் அரசியல் தலைவர் பெயர்களையும் தவிர்க்கும் இவர்கள் ஒரு விஷயத்தில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்!  பேதம் காணாது இவர்கள் அனைவர் மனத்திலும் பச்சைக் குத்தப்பட்டிருக்கும் ஒரு பெயர். ஒரு திரைப்படத்தில் ( ஒளி விளக்கு) நரிக்குறவ வேடம் போட்டு இவர்களின் நிலையை பாட்டாய் பாடி ஆடிய ( நரிக்கொம்பு வித்தாலும் விப்போமுங்க ஆனா நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம்) ஒரே காரணத்துக்காக எம்.ஜி.ஆரை சாமி போல் பூஜிப்பவர்கள் உண்டு. ஒரு சினிமாக் கலைஞன் தங்களைப் பற்றி பேசியதற்காக அவனையே தெய்வமென தொழும் நிலையில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது எப்படிப்பட்ட விளிம்புநிலை என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

இவர்கள் பேசும் மொழிக்கு பெயர் கிடையாது. எழுத்துரு கிடையாது. அவர்களின் பாஷை  
தவிர தமிழ்,  தெலுங்கு பேசுகிறார்கள். முதன்முறையாக அவர்கள் மொழியாலே ஒரு பாடல் இயற்றப்பட்டு ( பல்லவி சரணம் என்ற சம்பிரதாயங்கள் விலக்கி) பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயக்குநர் மிஷ்கின் இயக்கும் ' நந்தலாலா' திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் பதிவான இப்பாடலை ஒரு குறவ இனப்பெண்ணே பாடியுள்ளார். இப்பாடலின் பொதுவான அர்த்தமாய் அவர்கள் தெய்வத்திடம் வேண்டும் வேண்டுதல் பட்டியலாய் விரியும். குறவர் இன மொழியின் முதல் பதிவான அப்பாடலே இக்கட்டுரையின் ஆரம்ப வரியான ' எலினே...எலி எலி' ஆகும்.

இக்கட்டுரைக்காக தகவல் சேகரிக்கச் சென்ற இடங்களில் அவர்களின் வாழ்வினைப் போலவே பல கசப்பான அனுபவங்கள். பொது  நூலகத்திலோ குறவர் இனப் பதிவுகள் பற்றிய குறிப்புகள் எதுவுமில்லை. கூடாரமிட்டுத் தங்கியிருந்த குறவப் பெரியவரிடம் பேசியபோது பதில்  பேச்சுக்கு பணம் வேண்டும் என்றார். மாறிவரும் உலகத்தில் மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டிருப்பது ஹார்லிக்ஸ் மட்டுமல்ல என்பது தெளிவாக தெரிகிறது.

கடைசியாக...

தேவராயநேரி. திருச்சி துவாகுடிக்கு அருகில் உள்ள நரிக்குறவர்களின் நகரம். நாடோடிகளாய்த் திரியும் குறவர்கள் பற்றிய பிம்பங்களைச் சுமந்து இந்நகருக்குள் நுழைந்தால் அடைவது உச்சபட்ச அதிர்ச்சியாகத்தானிருக்கும். அவர்கள் நம்மிடையே உருவாக்கிக் கொண்ட  தகரடப்பா, பாசிமணி, நரிக்கொம்பு பிம்பங்களைக் களைந்து நாகரீக உடையுடன் இருப்பார்கள். சுடிதார் அணிந்த பெண், பேன்ட் அணிந்த ஆண்கள் கையில் செல்போன் சகிதம் திரிவதைக் காணலாம். தங்களின் இறுதிக்காலத்தில் இங்கு வந்து சேர்ந்துவிடும் வயதானக் குறவர்கள் தங்கள் தெய்வங்களான முனி, மற்றும் அம்மன் போன்ற சிறு தெய்வங்களை வணங்கியபடி உலா வருவார்கள். படித்து பட்டம் பெற்று வெளிநாடு சென்று வரும் இளைங்கர்களும் உண்டு இவ்வூரில். இவர்களுக்கென தனியாய் இடுகாடு உள்ளது. வாழ்நாள் முழுவதும் அலைந்து திரிந்த கால்கள் நிரந்தர ஓய்வு பூணுவது இங்குதான். இருந்தும் வாழ்வின் நிலையாமையை உணர்ந்தோ என்னவோ இன்னும் இவர்களில் சிலர் நாடோடிகளாய்த் திரிந்த வண்ணமே உள்ளனர். செல்லும் வழியில் நிகழும் துர் மரணங்களைத் தொடர்ந்த நிலை கொஞ்சம் மர்மமாகவே உள்ளது. அவை ரகசியமாகவே இருக்கட்டும். அல்லது அவர்களுடனே அலையும் சிறு தெய்வங்கள் அம்மரணங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றட்டும்.

பின்குறிப்பு: இக்கட்டுரை சில சுய அனுபவங்கள் மற்றும் செவி வழித் தகவல்களுடன் மட்டுமே எழுதப்பட்டது. புதிர் அவிழ்ப்பவர்கள் அவிழ்க்கலாம்.

கணேசகுமாரன்
நாகப்பட்டினம்.              

Wednesday 1 August 2012

உயிர்



நான்கு நாட்களாக
கிழிபடாமல் இருக்கும்
நாட்காட்டியில் தொடங்கி
அறைக்கதவின் உட்பக்கத் தாழ் தொட்டு
சுழலாத மின்விசிறியின்
உச்சிக்குச் சென்று
இறுகித் தொங்கும் நைலான் கயிற்றின் வழி
கீழிறங்கிப் படரும்
தன  வாழ் விடத்தின் வாசலை
பின்னத் தொட ங்குகிறது அச்சிலந்தி
பிதுங்கிய அவ்விழிகளின் மீது.

Tuesday 24 July 2012

கடவுள்கள் காத்திருக்கும் அறை - லிபி ஆரண்யா





                                  'கடவுள்கள் காத்திருக்கும் அறை'

கணேசகுமாரனின் 'புகைப்படங்கள் நிரம்பிய அறை' கவிதைத் தொகுப்பினை முன்வைத்து....- லிபி ஆரண்யா.

  ஒரு கவிதையை அல்லது ஒரு தொகுப்பை முன்வைத்துப் பேசுவது என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? நிலவின் துலக்கத்தில் விரியும் இரவு வானத்தைப் பார்த்தபடி மல்லாந்து படுத்திருக்கும் குழந்தைகள், நகரும் மேகத்தின் உருவத்தை விதந்தோதும் பிள்ளை விளையாட்டாகவா? அல்லது உயிரின் பிசுபிசுப்போடு உள்ளங்கைகளில் ஏந்திவரும் தாதியின் கரங்களிலிருக்கும் புத்துயிரின் காது மடலை, தொடை இடுக்கை நோக்கி கண் நகரும்  பொது புத்தியின் குரூரமாகவா ?அல்லது கூர்த்த கத்தியின் தேடல் பயணத்தை அனுமதித்து எதிர்ப்பற்று  சடலம் கிடத்தப்பட்டிருக்க எப்போது துணி சுற்றி தருவார்களென பிரேதப் பரிசோதனை அறிக்கை பெற வாசலில் காத்திருக்கும் வைபவமா விமர்சனம்?

ஒரு கவிதை பற்றிய அல்லது ஒரு தொகுப்பு பற்றிய பேச்சு என்பது மேற்கூறியபடிக்கு எதுவுமில்லை என்பதை உறுதிபட நாமறிவோம்.

பிறகு எதுதான் விமர்சனம் என்ற கேள்வியைக் கதறக் கதறத் தெருவில் விட்டுவிட்டு ' ஒரு கவிதை எழுதுவது அத்தனை சுலபமல்ல' எனக் கூறும் கணேசகுமாரனின் 'புகைப்படங்கள் நிரம்பிய  அறை' யில்  நுழைவது எத்தனை உத்தமமானது.

கணேசகுமாரனின் இந்த அறை ஒண்டுக்குடித்தன அறை அல்ல, மிக உறுதியாக. இந்த அறை அநேகம் பேர் வந்து போகும் விசாலமான அறை. தனது அறைக்கு வருபவர்களுக்கு குமாரன் சில சாளரங்களைத் திறந்து வைக்கிறார். அவரது அனுமதியின்றி திறவாத சாளரங்களை நாம் திறந்து பார்ப்பதில் அவருக்குப் புகார்களில்லை. இதுவே , இந்த சுதந்திரமே இந்த அறை நமது அறைதானென்று உணரும்படிச் சொல்கின்றது.

கணேசகுமாரனுக்கும் கடவுளுக்குமான நட்பு பொறாமைப்படும்படியாக உள்ளது. அந்தத் திருடன் தேர்ந்த சிலரிடம் அன்பாகத்தான் இருக்கிறான். கணேசகுமாரனும் பல இடங்களில்  தேவசாட்சியம் அளிக்கிறார்.

'கடவுள் வாழ்ந்த வீடு'  என்ற கவிதையில்...
'' கிளைகளின் ஈரத்திலும்
இலைகளின் பச்சயத்திலும்
நிரம்பியிருந்தார் கடவுள்" - என்பதாக மெய்சிலிர்க்கிறார்.
'' முதல் வெட்டு விழுந்தது
கடவுள் மார்பின் மீதுதான்'' - என்று கலங்குகிறார்.
'' யாருக்கும் தெரியாது
 அது முன்பு கடவுள் வாழ்ந்த வீடென்று'' - விசனப்படுகிறார்.

' என் காதல் எலுமிச்சம் பழம் போன்றது' என்ற கவிதையில்  காதல் எலுமிச்சையின் அவதானிப்புகளை விவரிக்கும் குமாரன்,
'' அந்தப் பழம்
கடவுளின் மார்போடு
கம்பீரமாக ஒட்டிக்கொண்டு விட்டது''-
என்ற வரிகள் கடவுளின் அன்புக்கு ' விட்டமின் சி' யைப் பரிசளிக்கின்றன.

பால்யத்தில், அருகாமை நீர்நிலைகளுக்கு திருட்டுத்தனமாகச் சென்று களைந்த ஆடைகள் கரைகளில் குவிந்து கிடக்க திடுமெனக் குதிக்கும் சிறுவர்களும், வீட்டுக்கு கழிப்பறை வராத காலத்தில் பீக்காட்டுக்கு கும்பலாகப் போய் வெயிலுக்கென டவுசரை தலையில்  சூடி  அருகமர்ந்து வார்த்தையாடியபடியே ஆய் போகும் சிறுவர்களும் பரஸ்பரம் பரிச்சயம் கொண்டிருந்தார்கள் பிறர் முகங்களைப் போலவே பிறர் குறிகளையும்.
அந்த பூர்வ பழக்கத்தின் நீட்சியாகவே ' சந்தேகக் குறி' என்ற கவிதையில் கட்டணக் கழிப்பறைக்கு செல்ல நேர்ந்த குமாரன் பக்கத்தில் எட்டிப்பார்க்கிறார்.
ஆனால் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் வளர்ந்த குமாரனைக் கலவரப்படுத்துகிறது. அப்போதும் கூட கடவுளிடம்தான் மண்டியிடுகிறார்.

''உலகத்துக் குறிகளின் அளவை
ஒன்றேயாக்கிடு ஆண்டவா'' - என்று மார்க்சின் குரலில் மிமிக்ரி ஜெபம் செய்கிறார்.

அட்டையில் கணேசகுமாரன் காத்திருக்க உள்ளே தேவகுமாரனின் நடமாட்டம் கூடுதலாக இருப்பதை உணர முடிகிறது.
'போஸ்ட்மார்டம்','கைதட்டல்','அழுகை' முதலிய கவிதைகள் பாலியல் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டோரின் வாழ்க்கையை வலியோடும், கழிவிரக்கத்தோடும் பார்க்கக் கோருகிறது.
அதில் ' கைதட்டல்' கவிதையை சொல்லவேண்டும். 

கைதட்டல்

முன்பொருமுறை
 நான் கைதட்டிக்கொண்டிருந்தேன்
நெருப்பு வளையத்திற்குள்
புகுந்து வெளிப்பட்ட பெண்ணின்
கருகாத உடல் முன் நின்று

சிங்கத்தின் வாயில் தலை நுழைத்து
வெளிவந்தவனின்
நிலைத்த கண்கள் முன் நின்று
கைதட்டிக் கொண்டிருந்தேன்

அந்தரத்துக் கயிற்றில் அசைந்து ஆடி
இறங்கிய குழந்தையின்
பசித்த வயிற்றின்  முன்
கைதட்டிக் கொண்டிருந்தேன்

உயிர்ப்பசி தீர்க்க
உடல்பசி அடக்கி களைத்த
யோனியின் முன் நின்று
கைதட்டிக் கொண்டிருந்தேன்

இனி என் முறை.

பட்டியலின் இறுதியில் வைக்கப்பட்டிருக்கும் அந்த வரிகள் முந்தையவையோடு சற்றே பொருந்தியும், பொருந்தாமலும் ஒரு மயக்கத்தை ஏற்படுத்துவதை உணரமுடிகிறது. அதுவும் கூட பேசுபொருளின் முன்பாக நாம் கொள்ளும் தடுமாற்றத்தின் நீட்சியாகவே படுகிறது.

தவிரவும் விளிம்புநிலையர்கள் குறிப்பாக யாசகர்கள், பைத்தியக்காரர்களிடத்து குமாரனின் அன்பு பெருக்கெடுக்கிறது.

பிறகு ஒன்றை சொல்லியே ஆகவேண்டும். காலங்காலமாக தமிழ்க் கவிதைப்பரப்பில் கடற்கரையெனில் கிளிஞ்சல்களையும், ஆறு, ஓடை எனில் கூழாங்கற்களையும் இந்தக் கவிஞர்கள் மாய்ந்து மாய்ந்து பொறுக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அல்லது மரத்திலிருந்து உதிரும் இலைகளைத் தேமே எனப் பார்த்தவாறு இருக்கிறார்கள்.  இலைகள் உதிராத காலத்தில் பதட்டத்தில் உலுப்பத் தொடங்கி விடுகிறார்கள். ஒரு இலை உதிர்வதைப் பாராமல் எழுந்து போகவே மாட்டேன் என்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் சங்கப் பலகையில் கணேசகுமாரனும் தனது பெயரை முன்பதிவு செய்துள்ளார்.

எங்கள் ஊரின் கிழக்கே ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு உண்டு. எனது பால்யத்தில் அதுவே ஊரின் தாகத்திற்கான ஒற்றை முலையாக இருந்தது. அந்தக் கிணற்றின் நாலாபக்கமும் நின்று கடகா போட்டு தண்ணீர் இறைப்பார்கள். கயிறு இற்றுப்போய் சில நேரங்களில் கடகா கிணற்றில் விழுந்துவிடுவதுண்டு. அதுபோன்ற நேர்வுகளில் கடகாவை வெளியே எடுக்க பாதாளக் கரண்டி கொண்டுவந்து கிணற்றில் வீசுவார்கள். அப்போது பாதாளக் கரண்டியின் கொக்கியில் மாட்டிக்கொண்டு வேறு கடகா வெளியே வரும். அது ஒரு திகிலான, சுவாரஸ்யமான அனுபவம்.

அப்படித்தான் கவிஞன் ஒன்றை கவிதைக்குள் இறக்கி வைக்கிறான். நமது வாசிப்பின் பாதாளக் கரண்டியோ கவிதையிலிருந்து வேறு ஒன்றை எடுத்து வந்து கவிஞனையேத் திகிலூட்டுகிறது. அப்படி சிலவற்றை வேறொன்றாய் வசிக்கக் கிடைக்கிறது இத்தொகுப்பில்.

' அவர்கள் முதலில்
இல்லையென்றுதான் சொன்னார்கள்
முடிவில் ஆமாமென்றார்கள்
அதற்குள்
ஒரு யுகம்
கடந்துவிட்டிருந்தது'

தொன்னூறுகளில் உலகமயமாக்கல் நமது நிலத்தில் நிகழ்ந்தபோது இந்த மன்மோகன்கள் '' குறையொன்றும் இல்லை'' என்று இசைத்தார்கள். தற்போது அதே மன்மோகன்கள் '' ஆம், தப்புதான் நிகழ்ந்துவிட்டது'' என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள். ஒரு யுகம் கடந்துதான் விட்டது குமாரா. சோரம் போன ஒரு நிலத்தின் வலியைத்தான் நீ மொழிப்படுத்தியிருக்கிறாய்.

' மறுக்கப்பட்டதற்கு எதிராக' என்னும் கவிதையில்

'' பலயுகம் கழித்தும்
தன் மூதாதையின் நியாமற்ற மரணத்திற்கு
நீதி தேடி பறந்து கொண்டிருக்கிறது
ஒற்றைக் கால் ஊனப்பறவையொன்று ''
- வேறு ஒன்றை கணேசகுமாரன் குறிப்பிட்டாலும்அது ஈழத்தின் பறவையாகவும் மாறி துயரங்கொள்ள வைக்கிறது. 

'' கண்ணாமூச்சி ஆடிய குழந்தைகள்
கட்டி முடித்த வீட்டில் தேடுகிறார்கள்
காணாமல் போன இடங்களை''- என்கிற குறிப்பிடும்படியான வரிகளை எழுதிப்போகும் குமாரனிடம் வெளியில் கொண்டாட்டத்திற்கு உரியதாக இருந்த எதுவும் ஒரு கூடாரத்தின் கீழ் வரும்போது அதன் அர்த்தத்தை தொலைத்துவிடத்தான் செய்கிறது என்று பேசிப்பார்க்கலாம்தானே...

'' நாமிருந்தோம்
 காட்டின் பிள்ளைகளாய்'' - என்று துவங்குகிறது இந்தத் தொகுப்பு. ஒரு கவிஞன் வந்து சேர வேண்டிய மகத்தான இடம் அது. ஆனால் அந்தக் கவிதையில் ஒரு சொல், ஒரேயொரு சொல் நமது ஆதிக்காட்டின் அர்த்தத்தை சிதைப்பதாக உள்ளது.

' உயிர் வலி' என்ற கவிதையில்
'' நான் செருகிய கத்தி
தொங்கிக் கொண்டிருக்கிறது உன் கழுத்தில்'' - என்று எழுதிப்போகும் குமாரன்தான் பூர்வக் காட்டில்,

'' சீங்கை கீரை சமைத்த
 பெண்டாட்டியின் மாரில்
 பச்சைக் கோலம் வரைந்து களித்தோம்'' - என்றும் எழுதுகிறார்.

வீட்டுக்கும் காட்டுக்கும் இடையில் கிடந்தது ஊசலாடுகிறது மனது. காட்டை அழித்து வீட்டை அமைத்தது வரலாறு. ஆக, காட்டை நேசிப்பவர்கள் வீட்டை அழித்துதான் வரலாற்றை நேர் செய்ய முடியும். இதைக் கருத்தியலாகவேணும் நாம் ஏற்கத்தான் வேண்டும்.

இத்தொகுப்பின் மிகப் பிடித்தமான கவிதை ' உயிர்'

உயிர்

நான்கு நாட்களாக
கிழிபடாமல் இருக்கும்
நாட்காட்டியில் தொடங்கி
அறைக்கதவின் உட்பக்கத் தாழ் தொட்டு
சுழலாத மின்விசிறியின்
உச்சிக்குச் சென்று
இறுகித் தொங்கும் நைலான் கயிற்றின்
வழி கீழிறங்கிப் படரும்
தன் வாழ்விடத்தின் வாசலை
பின்னத் தொடங்குகிறது அச்சிலந்தி
பிதுங்கிய அவ்விழிகளின் மீது.

மிகவும் நுட்பமாக எடிட் செய்யப்பட்ட துயரத்தின் சாட்சியாக கவிதை வலியோடு விரிகிறது.
அதற்கு இணையாக வேறொன்றைப் பொருத்திப் பார்க்கலாம்.
கிழிபடாத  நாட்காட்டியைக் காட்டியபின் பரபரத்து நாம் நமது அன்றாட அலுவல்களில் மூழ்கியிருந்ததையும், உட்பக்கத் தாழ்ப்பாளைக் காட்டியபின்பு இங்கே வாய்த்த புணர்ச்சிக்காக  நாம் தாழிட்டுக் கொண்டதையும், அங்கே சுழலாத மின்விசிறியின் காட்சியை அடுத்து மின்வெட்டைப் பழித்து நாம் உதிர்த்த கெட்ட வார்த்தைகளைக் காட்சிபடுத்தியும், அந்த நைலான் கயிறை காட்சியாக விரித்தபின் எந்தக் குற்ற உணர்வுமற்று நான்கு ரத வீதிகளிலும் வடக்கயிறு பற்றி தேர் இழுத்துத் திரிந்ததையும் காட்டி பிதுங்கிய விழிகளில் காமிரா நிற்க நம் அனைவரின் மீதும் கொலைப்பழி கவியத் தொடங்குகிறது. 

ஆம் அங்கே பரிதாபமாக தொங்கிக் கொண்டிருப்பது ஓர் இனத்தின் உயிர்தானே குமாரா...








Thursday 19 July 2012

உயிர் துரத்தல்

அத்தனை உயிரும்
செத்தொழிந்த இரவில்
அவன் மட்டும் பிழைத்திருந்தான்
ஆதி பிரபஞ்ச கதகதப்பில்
ஒளிந்திருந்தான் பாதுகாப்பாய்
சூரியன் கண்ட கணத்தில்
தொடங்கியது உயிர் துரத்தல்
வேட்டையெங்கும்
சிதறிய அவனை சேகரித்து
உருவான உயிரிடம்
புத்துலகின் முதல் துளி
ஆழ் இருளில் தேடித் தேடி
அடைந்ததொரு பெருவெளியில்
அத்தனை உயிரும் பிழைத்தலைந்த பொழுதில்
நிகழ்ந்ததவன் உயிர் துரத்தல்.

நன்றி தீராநதி

பைத்தியங்கள் திரியும் காடு

மழைக்குருதியில் நனைந்த
வெள்ளைப்பூக்களின் தலைக்கு மேலே
வட்டமடிக்கும் பிணந்தின்னிக் கழுகுகள்

உபயோகிக்கப்பட்ட உடல்கள்
விசிறப்படுகின்றன காடெங்கும்

துடிக்கும் அவளை ரெண்டாய்ப் பிளந்து 
வெளிவரும் சிசுவொன்று
குண்டுவிழும் ஓசையுணர்ந்து
சட்டென்று பின்வாங்க
அதிர்கிறது யோனிப்பாதை

உயிர்வாதை தீராமல் வளர்ந்து வரும் பாதிச்சடலம்
தன் பிரார்த்தனையில்
அடிக்கடி மாற்றுகிறது கடவுளின் பெயர்களை

தோட்டாக்கள் முளைத்த மரமொன்று
சாகத் தொடங்குகிறது  மெல்ல

அழுகிய சதையுடன் அலையும் பைத்தியங்கள்
ஆகாயம் பார்த்து சபிக்கின்றன

சருகுகளை நிலைகுலைக்கும் பேய்க்காற்று
மண்தடவி உறிஞ்சுகிறது
திறந்த விழிகளின் மீது உறைந்த உயிரினை.

நன்றி தீராநதி