Wednesday 27 March 2013

யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்?

யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்?

ஒரு தகவல்:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 377 ன் படிதண்டனைக்குரிய குற்றமாக ஓரினச் சேர்க்கை கருதப்படுகிறது. 18 ம் நூற்றாண்டு காலத்தில் இங்கிலாந்தில் போடப்பட்ட இப்பழமையான சட்டம் அங்கு நடைமுறையில் இல்லை.

ஒரு கேள்வி:
பெருத்த மார்பகமும் உடுக்கு  இடையும் அகண்ட பிருஷ்டமும் விரி தொடையும் மயக்கும் விழியும் மறைந்து எப்போது திரண்ட புஜமும் மயிர் அடர்ந்த மார்பும் தொடையும் அடர்த்தியான மீசையும் ஆண்களுக்குப் பிடித்தமான ஒன்றாக மாறிப்போனது?( இதையே பெண்களுக்காக மாற்றி வாசிக்கலாம்)

புராணப் புனைவுகளும் இதிகாச நினைவுகளும் சொல்வதைக் கொஞ்சம் புரட்டினால்... ஓர் அசுரக் கட்டாயத்திற்காக சிவபெருமான் விஷ்ணுவுடன் இணைய நேரும்போது பெண்ணுரு எடுத்து இணைந்தாரே தவிர ஆணாக இல்லை. மகாபாரதப் போரில் பலியாகச் சம்மதித்த அரவாணின் கடைசி ஆசை நிறைவேறியதும் கிருஷ்ணனின் பெண்ணுடலில்தான். வரலாற்றில் பல மன்னர்கள் தங்கள் அந்தப்புரத்திற்கு காவலாக அரவாணிகளை நியமித்தனர். அவ்வப்போது தங்கள் இச்சை தீர்க்கவும்( மகாராணிக்கு மூன்று நாள் ஓய்வு) அவர்களை உபயோகித்தார்கள். இதில் கவனிக்க வேண்டியது அரவாணிகள் பெண்மையாகத்தான் வெளிப்படுவார்களே தவிர ஆணாக அல்ல.

குறுந்தொகை கூறும் பெருந்திணையின் பொருந்தாக் காமத்தில் ஒரு ஆணும் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணையோ ஒரு பெண் தன்னைவிட வயதில் குறைந்த ஆணையோ நேசிப்பதையும் உறவு கொள்வதையும் பிறன்மனை நோக்கி கள்ளக்காதல் புரிந்து கள்ள உறவு கொண்டு கள்ள தண்டனை பெறுவதைக் கூறுகிறதே தவிர இரு ஆண்கள் பொருந்துவதை பொருந்தாக் காமம் குறிப்பிடவில்லை. இப்படி எவ்விடத்திலும் பரவலாய் பதிவு செய்யப்படாத ஓரினச் சேர்க்கையாளர்கள் திடீரென புதியதொரு இனமாய் முளைத்தது எப்படி? மூலம் எங்கோ மறைந்திருக்க இயற்கைக்குப் புறம்பான ஒன்றாகக் கருதி தன்பால் நேசிப்பவர்களை விளிம்பு நிலையில் ஒதுக்கிவைத்த சமூகத்தின் கட்டுகளை உடைப்பதற்காகத்தானோ நம் காலத்திய தத்துவ மேதைகள் தங்களை ஓரினச்சேர்க்கையாளராக அறிவித்துக்கொண்டார்கள்? மாவீரன் அலெக்ஸாண்டர் ஏன் ஆண்களை விரும்பினான்? ஓவிய மேதை டாவின்சியின் விருப்பமாக ஆண் உடல் மாறியது எப்படி? சாக்ரடீஸ், ஜூலியஸ் சீசர், மைக்கேல் ஏஞ்ஜலா, பைரன்,ஆஸ்கர்வொயில்ட், ஏல்டன் ஜான் என எல்லா மேதைகளும் வாழ்க்கைத் தத்துவ உண்மைகளை தன்னைப்போலவேயிருக்கும் சக ஆண் உடலில் பறிமாறிக்கொண்டது எப்படி? ஏன்?( சுப்பிரமணியபுரம் அழகருக்கு நிகழ்ந்த காதல் துரோகம் எல்லோருக்கும் நிகழ்ந்திருக்காது என்று நம்புவோம்.)

பொதுவாக தாய் வயிற்றில் கரு உருவாகி முதல் எட்டு வாரங்களுக்கு ஆண் பெண் வித்தியாசம் கிடையாது. அதன் பின்னே ஜனன உறுப்புகள் தோன்றி ஆணாகவும் பெண்ணாகவும் வளர்ந்து வெளியேறுகின்றன. வெகு அரிதான படைப்பாக பெண், ஆண் உறுப்புகள் சேர்ந்தே தோன்றும்  சில குழந்தைகள் பின்னாளில்  அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளாக மாறுகிறார்கள் என்கிறது சமீபத்திய மருத்துவக் கண்டுபிடிப்பு. ஓர் ஆண் தன் உடல் சுரக்கும் அதிகமான பெண் ஹார்மோன்களினால் தன்னைப் பெண்ணாய் உணர்ந்து நாளடைவில் தன் ஆண் உறுப்பை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கி மன ரீதியான பெண்ணாய் தன்னை அலங்கரித்துக் கொள்கிறான். உலகம் அவனுக்கு திருநங்கையென பெயர் சூட்டி மகிழ்கிறது. இவை கருவின் முதல் எட்டுவார பாலின நிலையின் மிச்ச படிமம் எனக்கொள்ளலாம். ஆக ஆண் இனம், பெண் இனம், அல்லாத மூன்றாம் பாலினம் பிறக்க சாத்தியமுள்ள இவ்வுலகில் எங்கிருந்து வந்தது ஓரினம்?

ஹோமோ செக்சுவல் எனப்படும் ஓரினச் சேர்க்கையாளன் ஒருவனுக்கு பிறக்கும் குழந்தை ஹோமோவாக வளர வாய்ப்பில்லை எனும்போது இது கருவில் நிகழும் ஹார்மோன் குளறுபடி இல்லையெனத் தீர்மானமாகிறது. ஓர் ஆண் வளர்ந்து வரும் காலகட்டங்களிலேயே  ஹோமோவாக மாறுகிறான் என்றால் அது எந்த வயதில் நிகழ்கிறது? 10 வயதிலா? 16 வயதிலா? அப்படியும் ஏதோ ஒரு வயதில் இன்னொரு ஆண் மூலம் மட்டுமே நிகழும் அவ்விருப்பம் குறிப்பிட்ட அந்தப் பெரிய ஆணுக்கு  எங்கே எப்படி ஏன் நிகழ்ந்தது எனும் கேள்வி பூதாகரமாய் நம்முன் நிற்கிறது. பதில் தெரியாத மருத்துவ உலகம் மிகப்பெரும் புதிரென்று ஒதுங்கி நின்று விடுகிறது.

ஆனால் எதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மனிதனோ தன்னை கே( ஹோமோ) மற்றும்  லெஸ்பியன்( பெண்ணே பெண்ணை பெண்ணுடன்) என்று அறிவித்துக்கொள்ளும் நபர்களுக்கு ஊதிய உயர்வு தந்து சிறப்பு கவனிப்பில் வைத்துக்கொள்கிறது அமெரிக்க அரசாங்கம். கே எனப்படுபவர்கள் குடும்ப உணர்வுகள் ரீதியாக தன்னை அதிக சிக்கலுக்கு உள்ளாக்கிக்கொள்வதில்லையென்றும், பணியில் முழுமையான அர்ப்பணிப்பு, மூளையின் சகல பாகங்களையும் உபயோகிப்பவர்கள் என்று அறிவியல் ரீதியாக சர்டிபிகேட் தந்து இவர்களுக்கு சமூகத்தில் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.

நம் சமூகம் மற்றும் கலாசாரம் இவர்களை எப்படி அணுகுகிறது என பார்த்தோமானால் குற்றம் சாட்டி கூண்டில் ஏற்றி தண்டணை வாங்கித் தரவே தயாராய் இருக்கிறது. மீடியா இன்னும் இவர்களை முழுமையாய் ஏற்றுக்கொள்ளவில்லை. அல்லது மீடியாவை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

சில வருடங்களுக்கு முன் இந்தியா டுடே இதழ் நடத்திய செக்ஸ் சர்வே ஒன்றில் 12 சதவிகிதம் இருந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் அடுத்த வருடமே 18 சதவிகிதம் அதிகமாகி தங்களை 30 சதவிகிதமாக அறிவித்துக்கொண்டார்கள். இதில் 'எனக்கு ஆண் பிடிக்கும். ஆனால், சமூகத்திற்கான வாழ்வியல் இருப்பாய் திருமணம் செய்து குழந்தை பெற்று சமூகத்திற்கான ஆணாகவும் வாழ்கிறேன். எனக்கான தனிப்பட்ட தேவைகளையும் அவ்வப்போது தீர்த்துக்கொள்கிறேன்' என்ற பல எக்சிகியூட்டிவ்களின் ஸ்டேட்மெண்ட் குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன்பு நடத்திய 'மய்யம்' என்ற இதழில் எழுதிய சிறுகதை ஹோமோ பற்றிய அதிர்வடங்கியதுதான். 'தனிப்பட்ட மனிதன் ஒருவனின் காயங்களுக்கு ஆறுதல் சொல்லாத இச்சமூகம் அவனின் அந்தரங்க விருப்பங்களுக்கு கருத்து சொல்வது மிக அநாகரீகமானது' என்பது அவரின் சிறந்த பதில். ப்ரபஞ்சனின் சின்னி சிறுகதை பதின் வயதில் ஒருவனின் அதிகப்படியாக தூண்டப்பட்ட பெண் ஹார்மோன்களுக்கு அவனே பலியாகும் வலியைப் பேசியது. சின்னிகளும் அவனின் லாரி ட்ரைவர் பாண்டிகளும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பெண்ணின் அந்தரங்கமான உடல் மனப் பதிவுகளைப் பேசிய பாலிவுட் சினிமா' ஃபயர்' நம் கலாசாரத்தில் மிகத் துணிச்சலான முயற்சியே. சினிமாக்களில் பாலிவுட் பேசிய அளவுக்கு நம் தமிழ் சினிமாக்கள் இன்னும் தெளிவு பெறவில்லை. ' 377' என்ற  டெலிசினிமா ஒன்று ஓரினச்சேர்க்கையாளனின் பதட்டங்களைத் துல்லியமாகப் பேசி அவனும் நம்மைப்போல் மனிதன்தான் என்றது. ' காதல் கொண்டேன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் காட்டியிருந்த ஓரினக் காட்சிகள் வலியேற்படுத்தி கவனிக்க வைத்தது.

ஆண் தன் உடல் தினவுகளை பெண் வழி தீர்த்துக்கொள்ள வசதியற்ற சிறைக் கூடங்களும் ராணுவ கூடாரங்களிலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் உருவாகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய உண்மையாயிருப்பின் மருத்துவர்கள் சொல்லும் அது ஒரு இயல்பான பழக்கமே, சிலருக்கு இடதுகை பழக்கம் இருப்பதுபோல் என்பது  கேள்விக்குறியதாகிறது. எல்லா வசதிகளும் இருந்தும் ஆண் தேடும் இந்தியா டுடே அடையாளம் காட்டும் எக்சிகியூட்டிவ்கள் வேறு கவனம் சிதைக்கிறார்கள்.

ஆக ரகசியமான பல கேள்விகளை எழுப்பியபடியே நகரும் இம்மனிதர்கள் நம்மோடுதான் இருக்கிறார்கள். சிரிக்கிறார்கள். பயணம் செய்கிறார்கள். பிரிகிறார்கள். அவர்கள் விளிம்பு நிலையில் இல்லை என்பது மட்டும் புரிகிறது.

இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போது டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கும் இ.பி. கோ 377 வது சட்டம் நீக்கப்படும் என்ற அறிவிப்பு அவர்கள் மையம் நோக்கி நகர்கிறார்கள் என்பதை தெளிவாக்குகிறது.  
   

Thursday 7 March 2013

அந்தப் பாடலில் நீயுமில்லை நானுமில்லை

அந்தப் பாடலில் நீயுமில்லை நானுமில்லை

ஒரு புள்ளியில் ஆரம்பித்து
கோடென நீளும் உன் சிரிப்பு
இந்த இரவினைத் தாண்டிச் செல்கிறது

விரையும் நிலாப் பாதையில்
என் விரல் பிடித்து அலையும் லதா மங்கேஷ்கரின் குரல்

உனக்குத் தெரியாமலே
என் பாடல் வழி சாலையில்
உடன் வருகிறாய் நீ.

அர்த்தங்கள் அடங்கிய சோகத்தை
மொழி பெயர்க்க எனக்குத் தெரியவில்லை

நீ விலகிய இந்த நொடியில்
பிறக்கிறது நமக்கான பாடல்

கண்டம் தாண்டும் காற்றின் அலைவரிசையில்
நீயும் நானும் லதா மங்கேஷ்கரும்

மின்சாரம் இழந்த நள்ளிரவில்
செவியெங்கும் நிறைந்து வழியும் எங்கிருந்தோ அழைக்கும் கீதம்

நீயுமின்றி நானுமின்றி
நகரமெங்கும் திரியும் வெப்பத்தைக் கடத்துகிறது
லதா மங்கேஷ்கரின் குளிர் நிரம்பிய வலி.

ப்ளோரசன்ட் இரவினைக் கடத்தும் பூனை

ப்ளோரசன்ட் இரவினைக் கடத்தும் பூனை

இந்த இரவில் நீ
தனித்திருக்கிறாய்
விழித்திருக்கிறாய்
பசித்திருக்கிறாய்

பெரும் கருணை கொண்டு
உன்னை அப்படியே விட்டுவிட
நான் அவ்வளவு நல்லவனில்லை

உன் தனிமையை என்னால் சிதைக்கமுடியும்
உன் நீளமான இரவின் கூந்தலை தடவியபடி
ஒரு பாடலுடன் அதனை உறங்கவைக்க முடியும்
எச்சில் விழுங்கும் தாகத்தினை
உடல் சுருங்கும் பசியினை
ஒரு நொடியில் என்னால் விரட்டமுடியும்

என் அனுமதியின்றி ஒரு பூனை வளர்கிறது
எனதறையில்

சாம்பல் முகத்தில் மிதக்கும் பச்சை விழிகளில்
அனுதினம் பெருகுகிறது மதுக்கடல்

நிசிக்கணத்தில் நாக்கைச் சுழற்றி
தன் மதுவினைக் குடிக்கும் கள்ளப்பூனைக்கு
என்னைப்பற்றி எல்லாம் தெரியும்

பிஞ்சு நடையில் என்னைப் புணரும் பூனை
எப்போதும்
தனித்திருக்கிறது
விழித்திருக்கிறது
பசித்திருக்கிறது.