Sunday 9 August 2015

என் குளியல் அறையில் ஒரு சிகப்பு நைலான் கயிறு 
தொங்கிக்கொண்டிருக்கிறது
எனக்கு முன்னே இருந்தவர் விட்டுவிட்டுப் போனது
இப்போது அவருக்கு அது தேவைப்படவில்லை 
அதன் உபயோகம் பற்றி அதிகம் தெரியாது எனக்கு
அநாவசியத் தொங்கல் அது

ஆனாலும் அவ்வப்போது
அதன் அதீத சிகப்பு வண்ணமும் 
கயிற்றின் முறுக்கிய திண்மையும்
அந்தர முடிச்சிலிருந்து தொங்கும் அழகும்
ஒருமுறை இக்கழுத்தை நுழைத்துப் பார்த்தால்தான் என்ன
என்று தோன்றி மறைகிறது.



பிரம்ம முகூர்த்தம்

பிரசவித்த களைப்பு தீர 
தன் ஏழாவது குட்டியை 
இன்று இரவு தின்னத் தொடங்கும்
தாய்ப்பூனை.

சிகரெட் சாம்பலை சேமித்திருப்பவன்
உள்ளங்கையில் வைத்து அழிக்கிறான்
கடைசித் துளித்தீயை.

அறுபடும் ஆயுள் ரேகையின்
எண்ணிக்கை மறந்துவிட்டது
அவனுக்கு.

பிரம்ம முகூர்த்தத்தில்
அவன் கழுத்து நரம்பினை அறுக்கும்போதெல்லாம்
கனவு வருகிறது.






 
ஒரு புள்ளியில் தொடங்கி...
ஒரு புள்ளியில் தொடங்கும் வாதை
கோடென நீண்டு வளைந்து நெளிந்து
பின் உயரத்தில் சுருக்கிட்டுக் கொள்கிறது

நிலம் வனம் கடக்கும் அப்புள்ளி
நெடுந்தூரப் பயணத்திற்குப் பின்
மலை கண்டு மேலிருந்து வீழ்கிறது

தன்னை அழித்துக்கொள்ள
தனிமை தேடும் சிறுபுள்ளி
மெல்லப் பருத்து கனம் தாங்காமல்
சிதறிப் பரவுகிறது

ஆழ்கடல் கண்டு நடுங்கி
அறை திரும்பும் அப்புள்ளியின் தொண்டைக்குழியில் 
தேங்கி நிற்கிறது
எக்காலத்திலும் தீராத துளி விஷம்.

ஆயிரம் மைல்களுக்கப்பால் பெய்யும் மழை


வழியனுப்ப வந்தவர்களும் 
கையசைத்து இருப்பிடம் திரும்பிவிட
வெறிச்சிட்ட இரயில் நிலையத்தில்
வீசி வீசிப் பெய்யும்
மழையின் தனிமை

ஈரம் விலக்கிய
இரயிலின் பயணமோ
வெடிப்புற்ற நிலம் வழி நிகழ்கிறது
பற்ந்துகொண்டிருந்த கொடுங்கழுகின்
கால்களிலிருந்து விடுபட்ட
பாலைச்சர்ப்பமொன்றின் உயிர்
காற்றில் நழுவி
விரையும் இரயில் முதுகில் மோதி
நெளிந்து நெளிந்து கீழே விழுந்து
சக்கரங்களில் சிக்கி அரைபடுகிறது

சிதைவுண்ட வறண்ட பிரதேச உடலுதறி
விரையும் இரயிலின் ரத்தத்தினை
பல்லாயிரம் மைல்களுக்கப்பால் பெய்யும் மழை
கழுவலாம்.