Saturday 23 February 2013

சத்தியலோகத்து வீணைக்கு இரத்தப்பலி கொடுப்பவன்...இசை



' கடவுள் அவன் கையகத்தே கொஞ்சம் சொற்களைத் திணித்து, தீரவே தீராத ஒரு நுரையீரல் அடைப்போடு உன்னை படைக்கிறேன்.  இவை அவ்வப்போது உன் மூச்சுத்தவிப்பை சொஸ்தப்படுத்தும் என்று சொன்னார்.'


            சத்தியலோகத்து வீணைக்கு இரத்தப்பலி கொடுப்பவன்...

  ( கணேசகுமாரனின் “ பெருந்திணைக்காரன் “ தொகுப்பை முன் வைத்து.. )

                              

                                                   - இசை-


         சிறுகதை எனும் கலாவடிவத்தை கண்டங்களைத் தாண்டி நகர்த்திடும் முனைப்பேதும் இக்கதைகளுக்கு இல்லை. அதற்கான நிதானமும், அவகாசமும் இக்கதைகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. நின்று நிதானிக்க முடியாத ஒரு கொடுந்துயரின் தவிப்பே இக்கதைகளை எழுதிச்செல்கிறது. எனவே சில சமயங்களில் இவை வாய்விட்டு கத்தி விட நேர்ந்திருக்கிறது. வாழ்வின் கடைக்கோடியில்  ஒண்டிக்கிடக்கும் மனிதர்களையே நாம் இக்கதைகளில் திரும்ப திரும்ப பார்க்கிறோம்.

அனேகக் கதைகளில் இரத்தம் சிந்திக் கிடக்கிறது. சிலதில் இரத்தத்தைப் போன்றதான சுக்கிலம். சிலதில் இரத்தமும் சுக்கிலமும் சேர்ந்து. வதைமுகாம் ஒன்றிலிருந்து அம்மணமாக, உயிருக்குத் தப்பி ஓடும் ஒருவனின் சித்திரம் இக்கதைகளுக்கும் பொருந்திப் போகிறது. இதனாலேயே நாம் ஒவ்வொரு கதையைப் படித்து முடித்ததும் ஒரு மாட்டைப் போல மூச்சு விடுகிறோம்.
 
           கவித்துவம் கூடிய உணர்வெழுச்சியான சொல்லல் முறையும் , நுட்பமான விவரணைகளும் இக்கதைகளில் மனம் கவர்வதாக உள்ளன.

  'பரப்பி வைக்கப்பட்ட எலும்புகள் மேலே இழுத்துப் போர்த்திய படி வறண்ட தோல்'
                              
          
                              
                                                              ( மழைச்சன்னதம்)
'வருடம் முழுவதும் உயரக்கரைகளில் திமிறியபடி வெய்யில் வழிந்தோடும்'

                              
                                                      ( பெருந்திணைக்காரன் )
'ரயில் சக்கரங்களில் தலைமுடி சிக்கி தண்டவாளத்தோடு தேய்த்து ஒட்டிக்கொண்டு பறந்த படியிருக்க, அதன் அருகில்தான் மூளை கிடந்தது. சந்தன நிறத்தின் மேலே சிவப்புக் கோலம் வரைந்திருக்க, உள்ளங்கையளவு மூளையை அந்தக் காகம் கொத்தும் ஒவ்வொரு முறையும் பத்தடி தூரம் தள்ளிக் கிடந்த உடல் அதிர்ந்து கொண்டிருந்தது'

                              
             ( மணிக்கூண்டு மகாராணி )
 போன்ற வரிகளை படித்து முடித்ததும் என் தலையை ஒரு முறை சிலுப்பிக்கொண்டேன்.

  ' HMV  என்கிற ஆங்கில எழுத்துக்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சிவப்பு நிற நாய் அந்த கருப்பு வண்ண இசைத்தட்டில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது'

  என்கிற வரி நம்மை நிமிடத்தில் எண்பதுகளுக்குள் தூக்கி வீசிவிடுகிறது.

      கணேஷ் ஒரு கவிஞனாகவும் இருப்பதின் அனுகூலத்தை தொகுப்பு முழுக்க காணமுடிகிறது.

       'இரவு மேலும் இரவாகி வானிலிருந்து முதல் துளி வேகமாக நிலமிறங்கி அவன் சிரம் தொட்டது. அத்துளிக்குப் பைத்தியம் பிடித்தது. அவன் உடல் தழுவியவாறு சரசரவென்று தரை தொட்ட துளியின் அலறல் அதனைத் தொடர்ந்து வந்த பெருமழையில் மூழ்கியது. பைத்தியத் துளிகளுடன் கலந்த மொத்த மழைக்கும் பைத்தியம் பிடித்தது. மழையின் மறுமுனையை இறுகப் பிடித்திருந்த ஆகாயமோ பதறியது. கண் சிமிட்டி துடித்தது. சட்டென ஓர் உதறலில் மழையைத் துண்டித்துக் கொண்டு பெருமூச்சு விட்டது. பதறி ஓடி மோதிய மழை பைத்தியமாக்கியது கடலை. கொந்தளிக்கத் துவங்கியது சமுத்திரம்.'

 என்று எழுதிப் போகும் வரிகளில் கவித்துவத்தின் பூரிப்பை காணமுடிகிறது.

   'கண் மூடிக்கிடக்கும்
     கடைசி நொடியில்
     உன் மூளையை நெருங்கும்
      ரயிலின் அலறலை கடந்து விட்டால்
      நீ சாகலாம்.
     அவ்வளவு நெஞ்சுரம் இருந்தால்
     நீ வாழவே பழகிக் கொள்ளலாம்.'

          ’தூக்கி வாரிப்போடும்’ கவிதை வகைமைக்குள் ஒரு ராஜகவிதையாக உலவும் தெம்பும், திமிறும் இவ்வரிகளுக்கு உண்டெனவே நான் நிச்சயம் நம்புகிறேன்.

     அனேகக் கதைகளில் நாம் கணேசயையே பார்க்கிறோம். கதைக்குள் வருகிற பெண்களையும் ஒரு விதத்தில் நாம் கணேசாக வாசிக்கலாம். கொம்பனில் மட்டும் ஒரு யானை வருகிறது. புல்லட் ரயிலில் அடிபட்டு சாகும் அந்த யானையும் கணேஷ் தான் என்று தயவு செய்து யாராவது சொல்லிவிடாதீர்கள்.

   மன்னர்களின் காலை நக்கி வாழ்ந்த மரபு நம் கவி மரபு. மகாகவிகளை சீட்டுகவியாக்கி அழகு பார்த்த வாழ்வு இது. சரஸ்வதி, சமயங்களில் நம் கபாலங்களைக் கோர்த்துக் கட்டி கூத்தாடும் கங்காளி.' இப்பெல்லாம் யாரு சார் எழுத்தை மட்டும் நம்பி வாழற..' என்று நாம் வியாக்கானம் பேசி முடிக்கும் முன்னே
ஒரு பலியாடு தலை நீட்டிப் பார்க்கிறது.  நாம் நமது வாயையும், பொச்சையும் மூடிக் கொள்ள வேண்டி இருக்கிறது. தீரவே தீராத நீள்வரிசை அது.  பலியாடுகளின் இரத்தத்தில் நாறி மிதக்கிறது சத்தியலோகம். இந்த நீச மரபிலிருந்து வருகிறது ‘கையறுமனம்'  கதை. தொட்டால் கை பொத்துப் போகும் சூட்டில் இருக்கிற இக்கதையின் மு்ன்னே தற்போதைக்கு என் எல்லா விமர்சனங்களும் செத்து விழுகின்றன. ஆனால் நண்பா கவனம்...  இவ்வனுபவத்தின்  எல்லா சூடும் தணிந்து, எல்லா தடயமும் மறைந்து, நீ ஒரு ஏ.சி பாரில் குளுகுளு பீரோடும், பில்டர் சிகரெட்டோடும், குஷன் சேரில் அக்கடா என்று சாய்கையில், நான் என் ஜட்டிக்குள் மறைத்து வைத்திருந்த “ கலையமைதி” என்ற சொல்லை எடுத்து உன் டேபிளில் வைப்பேன்...

        கூட்டு வல்லாங்குக்கு ஆளாகும் ஒரு சிறுமி, மற்றும் ஒரு பைத்தியத்தை பற்றிய கதையான “ ஏலி ஏலி லாமா சபத்கானி மற்றும் பிச்சைக்காரியாக மாறும் விபச்சாரியை பற்றிய கதையான “ மணிக்கூண்டு மகாராணி “ ஆகிய கதைகளும் உணர்வின் கொந்தளிப்பு கூடிய கதைகளே. ஆனால் அவை என்னை பெரிதாக அசைக்கவில்லை. அல்லது கணேஷ் பதறித் துடிக்கும் அளவுக்கு உலுக்கவில்லை.
 “ பெண்ணாய் பிறந்து விபச்சாரியாய் வாழ்ந்து பிச்சைக்காரியாகி இப்போது பைத்தியப் பட்டமும் பெற்று விட்டாளே ? “ என்று கணேஷ் தலைதலையாய்
அடித்துக் கொள்கையில் நான் சிகரெட் புகையை வானத்திற்கு ஊதிவிட்டபடியே
 “ அப்புறம் ” என்று கேட்டேன். ஒரு வேளை கணேஷ் அளவுக்கு நான் அவ்வளவு நல்லவனில்லையா? அல்லது ஒரு தீவிர சிவாஜி ரசிகனைக் கூட அழவைக்க முடியாத படிக்கு இக்கதை அவ்வளவு வலுவற்றிருக்கிறதா? அல்லது வதைக்கூடத்தில் இருந்து இருந்து நான் சொரணையற்றுப் போய் விட்டேனா? என்றெனக்குத் தெரியவில்லை.

       “ பெருந்திணைக்காரன்” என்னென்னவோ சொல்லி என்னென்னவோ செய்யும்
 ஒரு மாயக்கதை. கையில் ஒட்டியும் ஒட்டாத ஒன்று. கழுவினால் போகாத ஒன்று.
  
     'கையறுமனம்' கதையில் வரும் அரிசில் கிழார் பற்றிய கதை
 இயல்பாகவே கதையின் ஒரு பகுதியாக இருக்க, அதை ஒரு தனி தகவல் போல ஆக்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகிறது.
 
      'கொம்பன்' என் அளவில் ஒரு மகத்தான கதை. பரணிக்கி இணையான போர்க்கள காட்சிகளோடு துவங்கும் இக்கதை, சட்டென யானைகளின் காட்டு வாழ்க்கைக்குள் நுழைந்து, அடுத்த கணமே வயல் வெளிகளுக்குள் புகுந்து, நகர சாலைகளின் வழியே ஒரு புல்லட் ரயிலின் முன்னே போய் அடிபட்டு சாகிறது. அசாத்தியமான உணர்வெழுச்சியும், மதிநுட்பமும் கூடி விளைந்த கதையிது.
 
     என் வீட்டு வாசலில் எரிந்து கொண்டிருக்கும் குண்டுபல்ப்  இரண்டு மாதத்திற்கு
ஒரு முறை ப்யூஸாகி விடுகிறது. “ஒழுங்கா  ஒரு  பல்ப்  கூட வாங்கத்தெரியல..” என்று கொமட்டில் குத்து படுகிறேன். ஆனால் , தமிழ்க்கதைக்குள் பன்னெடுங்காலமாக
 தலைக்கு மேல் சோகையாய் ஒரு குண்டுபல்ப் எரிந்து கொண்டே இருக்கிறது. கணேஷின் கதைக்குள்ளும் மூன்று இடத்தில் அந்த பல்ப் எரிகிறது. 'கடவுளே ! நீ தமிழ்கதைக்கு ஏதேனும் செய்ய நினைத்தால்  தலைக்கு மேல் சோகையாய் எரிந்து கொண்டிருக்கும் அந்த குண்டுபல்ப்பை முதலில் உடைத்தெறியும்...'   ஒரு வேளை இந்த பல்பை உடைத்துப் போட்டால் ஒளிவெள்ளம்  பெருகிவிடுமா ? இந்த ஒளிவெள்ளத்தில் தான் மின்சாரத்தை நீக்கி விட்டு மார்க்வெஸின் சிறுவர்கள் ஆனந்த துடுப்பிட்டார்களா ? *
       நான் கணேஷின் இரத்தமற்ற கதையொன்றைப் படிக்க விரும்புகிறேன். என்றாலும் நான் இதை அவனிடம் வற்புறுத்த முடியாது. அவனே கூட அவன் கதையிடம் வற்புறுத்த முடியாது அல்லவா?
     ( பெருந்திணைக்காரன் - கணேசகுமாரன் - உயிரெழுத்து பதிப்பகம்- விலை; 60)

   *   நீரைப்போன்றது ஒளி - மார்க்வெஸ்- தமிழில் ; கோபி கிருஷ்ணன் ; கல்குதிரை மார்க்வெஸ் சிறப்பிதழ்


Thursday 21 February 2013

மழைச் சன்னதம்


மழைச் சன்னதம்



பார்த்தால் பாவமாயிருக்கிறதென்று ஒரு பூனை வளர்த்து வந்தாள் நீலா. டைகர் என்றால் புலிபோல் பாய்ந்து வரும். நாக்கைச் சுழற்றி மியாவ் என்னும். நீலா முரளியுடன் ஊரைவிட்டு ஓடியிருந்தபோது கத்திக் கொண்டிருந்த டைகர் மிகுந்த பசியாயிருந்தது. அம்மாதான் பால்ச்சோறு வைத்து அதன் தலையைத் தடவிக்கொடுத்தாள். 

நீலாவுக்கு 22 வயது. வயதுக்கு மீறிய வளர்ச்சி. டைகர் போலவே வீட்டையே சுற்றி வருபவள்தான். எங்கு மீறியதோ தெரியவில்லை. அவளின் பதட்ட நடமாட்டம் அறிய அம்மாவின் உடம்பெங்கும் கண்களில்லை. நீலா சிட்டாகப் பறந்துவிட்டாள். அவள் ஊர் எல்லை தாண்டியபோது அம்மா கலக்கத்திலிருந்தாள். விபரத்தினை அம்மாவிடம் நான்தான் சொன்னேன். மறுநாள் காலை கொல்லைப்புறத்தில் முகம் சிதைந்து செத்துக்கிடந்தது டைகர். பதறிய என்னிடம் ’’அது எதுக்குடா...மனுஷனை நிம்மதியா தூங்கவிடாம கத்திக்கிட்டு...போய்த் தொலையட்டும்’’ என்ற அம்மாவின் புடைவையில் பூனைச் சித்திரம் வரையப்பட்டிருந்தது. அன்று முதல் அம்மா அழுதாள். எப்போதும் அழுதாள்.
 

'' அந்தக் கடங்காரன் எதுக்கு இங்க வந்துருக்கான்... என் தூமையக் குடிக்கவா...எல்லாம் நீ குடுக்குற எடம் ராகவா’’ கத்தினாள். அதன்பின் மாமா வீட்டுப்பக்கமே வரவில்லை. எப்போதாவது கடைத் தெருவில் சந்திக்கும்போது '' இன்னும் அப்படியேதான் இருக்கா?’’ என்பார். கடைசியில் சந்தித்த டாக்டர் சொன்னதை நான் அவரிடம் சொல்வேன். அம்மாவுக்கு வைத்தியமின்றிப் போனது. மாத்திரைகளின் உதவியோடு கொஞ்சமாய் தூங்கினாள். யாரைப் பார்த்தாலும்  அவளுக்கு வெறுப்பாயிருந்தது. எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தாள். அத்தனை பேர் பற்றிய அசிங்கமான புகார்கள் சொல்வது என்னிடம்தான். இதில் தேவகியும் விதிவிலக்கல்ல.
 

காலையில் வேலைக்குச் சென்று ஆர்டர் எடுத்து, சாயங்காலம் வசூல் முடித்து, அலுவலகம் சென்று கணக்கு ஒப்படைத்து வீடு திரும்ப இரவு 8 மணியாகிவிடும். வீட்டில் சலனமற்று அமர்ந்திருப்பாள் அம்மா. சிறு தொடுகையோ ஒரு வார்த்தையோ போதும். புண் கீறி வெளியேறும் சீழ் போல் சரசரவென்று முற்றம் நிறையும் புகார்களும் வசவுகளும். அப்போதும் தேவகி மிக அமைதியாகத்தான் சொல்வாள். '' காலையிலேர்ந்தே எதுவும் சாப்புடல... எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். ராகவன் வந்த ஒடனே சாப்புடுறேன்னு ஒரே வார்த்தைதான் திரும்பத் திரும்ப...’’ சோறு பிசைந்து அம்மாவிடம் நீட்டினால், '' வெசம் வெச்சி என்னைக் கொல்லப் பாக்குறாடா அவ... அதான் வேணாம்னுட்டேன். நீ என் புள்ள. என்னக் கொல்ல மாட்டியேப்பா...’’ அழும் அம்மாவின் கண்ணீரில் இயலாமை வேதனையாய் வழியும். '' அவ நல்லவம்மா...அப்பிடியெல்லாம் செய்ய மாட்டா. நீ சாப்பிடு’’ அழுதுகொண்டே ஊட்டிவிட்டால் அன்றைய பால்ச் சோற்றில் சர்க்கரையைவிட நிறைய உப்பிருக்கும்.

அம்மா கடும் உழைப்பாளி. அதனாலோ என்னவோ பெரிய அளவு வியாதிகள் எதுவும் அண்டவில்லை, மொத்தமாய் காவு வாங்கிய இது ஒன்றைத் தவிர. அப்பா இறந்தபோது நீலா இரண்டு மாதக் குழந்தை. எனக்கு நான்கு வயது. இடிந்துபோன அம்மாவுக்கு ஆறுதலாய் சாரதி மாமா. இதெல்லாமே பின்பு அம்மா சொல்லித்தான் எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் அம்மாவிடம் எதற்கும் கலங்காத மன திடமிருந்தது. நீலா போனது தெரிந்ததும் சிதைந்த மனம்தான் புதிர். எதற்குப் பயந்தாள் அம்மா? இரத்தம் சொட்ட சொட்ட மீண்டும் மீண்டும் அடித்து விளாசும் ஊரின் நாக்கிற்கா...தன் அன்பும் பாசமும் உண்மையற்றுப் போயிற்றே என்ற அதிர்வா...நீலாவின் காலத்தையும் வயதையும் சுதந்திரத்தையும் அம்மா புரிந்துகொள்ளவில்லை.

பித்துப் போக்குவதில் மெத்தக் கற்றவர் என்றுதான் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தது. அலுவலக நண்பர் என்று அறிமுகப்படுத்திவைக்க அம்மாவுடன் பேசினார். டீ கொண்டு வந்த தேவகியிடம் ‘தாங்க்ஸ்’ என்றார். அம்மாவின் இடுங்கிய விழிகளில் நரம்புகள் புரண்டன. அன்றிரவு அம்மா எனது கையை இறுகப் பிடித்துக்கொண்டாள்.''தப்பா நெனச்சிக்காதடா ராகவா. மனசப் போட்டு அழுத்திக்கிட்டிருக்கிற பாரத்தை எறக்கி வெச்சாதான் சரியாவும்...அவ சரியில்லடா...எல்லாமே தப்பு தப்பாதாண்டா இருக்குது... அவ ஒன்கூட இருக்க மாட்டாடா... காலைல வந்தானே ஒரு கடங்காரன் அவனைப் பாத்தாடா அவ...பயமாயிருக்குடா...’’ தொடர்பற்ற வார்த்தைகளில் எதுவும் புரியாமல்  ''யாரம்மா சொல்றே...’’ என்றேன். '' ஒன் பொண்டாட்டியத்தாண்டா’’ என்றாள் காதோரம் கிசுகிசுப்பாய். பகீரென்றது. நல்ல வேளையாக தேவகி அறைக்குச் சென்று படுத்துவிட்டாள்.
 

''ச்சீ...’’ கையை உதறினேன். '' அந்தத் திமிரெடுத்துப்போன சிறுக்கி மாதிரி நெனச்சியா...எம் பொண்டாட்டிம்மா...ஒன் மருமவ...ஒன் அண்ணன் மவ...அவளப்போயி...’’ அம்மா சட்டென்று தன் வாயைப் பொத்திக்கொண்டாள். கண்ணீர் மட்டும் தாரை தாரையாய் வழிய துளிச் சப்தம் கூட இல்லாமல் அழுதாள். சில நொடிகள் கழித்துதான் என் தவறு எனக்குப் புரிந்தது. அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு  கதறினேன். '' இல்லம்மா...ஒன்னும் இல்லம்மா...எல்லாம் சரியாப் போய்டும்மா...’’ என்றுமில்லாமல் எனது அழுகை வெறிகொண்டு வெளியேற அம்மாவிடமிருந்து சிறு விசும்பல் கூட வரவில்லை. உடலின் ஒட்டுமொத்தக் கண்ணீரையும் இந்த ஒரு இரவிலேயே வெள்யேற்றிவிடுவதென்று தீர்மானித்தபடி கன்னங்களைத் தாண்டி நீர் சாரையாய் நெளிய அம்மா அழுதுகொண்டிருந்தாள். என்ன செய்து அழுகையை நிறுத்துவது என்று தெரியவில்லை. அவள் அருகிலேயே படுத்திருந்தேன். விடிகாலையில் தானாகவே இமைகள் மூடி அசதியாய்த் தூங்கத் தொடங்கியிருந்தாள். கை மட்டும் வாய் பொத்தியபடியிருக்க மனம் வலித்தது. கையை எடுத்துவிட்டு கொல்லைப்புறம் சென்றேன். முகம் கழுவி நிமிர சுத்தமாக விடிந்து விட்டது. இரு கண்களிலும் சூரியனைப் பதித்துக்கொண்டு அறைக்குள் வந்து படுத்தேன்.

அதன் பிறகான நாட்களில் அம்மா யாருடனும் எதுவும் பேசாமல் மெளனமாகவே இருந்தாள். கண்ணீர் மட்டும் வழிந்தபடியிருக்கும். முன்பெல்லாம் அம்மா வெகு அமைதியாக இருப்பாள். அதுபோல் ஆகிவிட்டாளோ... என்று நினைக்கத் தோன்றாமல் அவள் இயல்பு மறந்து போனாள். எது இயல்பு என்பதே தெரியாமல் ஆனாள். எல்லோருக்குமான வசவுகளும் புகார்களும் அவளுக்குள்ளிருந்தபடி நிறைந்து மூச்சுத் திணற ஆரம்பித்தன. தேவகி வைத்த சாப்பாட்டைச் சாப்பிடாமல் இரவு நான் வந்தபிறகு சாப்பிட்டாள். எல்லாமே மெளனமாகத்தான் நிகழும். என் எந்தக் கேள்விகளுக்கும் அம்மா பதில் சொல்ல மறுத்தாள். தன்னைச் சுற்றி ஒரு வலை கட்டிக் கொண்டாள் அம்மா. சிலந்தியின் எச்சில் வலைபோல் தன் கண்ணீரால் அவ்வலையைப் பின்னினாள். எங்களால் அவ்வலையைத் தாண்டிச் செல்ல முடியவில்லை. ஒரு நாள் அம்மா காணாமல் போனாள்.
 

ஒரு நாள், இரு நாள்...அம்மா வரவே இல்லை. எங்கே போனாள் அம்மா? எல்லோரும் தேடினோம். வீதிகளில் திரியும் மனநிலை தவறியவர்களைக் காண்கையில் மனதிற்குள் சுளீரென்று சாட்டை இறங்கும். வயதான பெண்மணிகள் யாராவது கிழிந்த ஆடையும் பரட்டைத் தலையுமாய் அலைவதைக் கண்டால் உடல் நடுங்கும். தலையை வறட் வறட்டென்று சொறிந்தபடி அம்மா நிற்பாள். அழுக்குக் கரங்கள் விரித்தபடி '' பசிக்குது ...சோத்துல வெஷம் இல்லையே’’ என்பாள். சூரியனை இழுத்துப் போர்த்தியபடி தூங்குவாள். அருகில் சாக்கடையில் நெளியும் புழுக்கள். அம்மா...அம்மா...சட்டென்று கண்ணீர் கசிந்து இயல்பிழந்து உடனே வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்க்க மனம் பரபரக்கும். நிஜம் உணர மனம் சுருங்கும். என்னவானாள் அம்மா...? கேள்வியின் பாரம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. அவளின் தூக்க மாத்திரைகள் காணும் போதெல்லாம் உறக்கமின்றிப் போனது. உணவு தேவையற்ற பல இரவுகளில் அம்மா வந்து அணைத்து எழுப்பினாள். அம்மா என்னவாகியிருப்பாள்...?
 

அம்மா இல்லாத உணவு செல்லாத ஒரு நாள் குமட்டி வாந்தியெடுத்து மயக்கமுற்றேன். ஆஸ்பத்திரியில் குளுகோஸ் ஏற்றி தெம்பளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். '' எல்லோரும் தேடிக்கிட்டுதான் இருக்கோம்...அம்மா கெடச்சுடுவா...முதல்ல ஒன்  ஒடம்ப பாத்துக்க மாப்ளே’’ என்றார் மாமா. இந்த உலகத்தில் அனைவரும் அவரவர் இருப்பினில் இருக்க, என் அம்மா மட்டும் தொலைந்து போயிருந்தாள். பின்பு வந்த என் எல்லா நொடிகளையும் அம்மாவே ஆக்ரமித்தாள். அம்மாவின் பழஞ்சேலைகளின் வாசனை என் நாசி நிரப்பி பின்பு வீட்டை நிறைத்தது. கோயில்களில் சென்று தேட ஆரம்பித்தேன். யாரோ சொன்னார்கள். '' பக்கத்துல திருக்கடையூர், அனந்த மங்கலம் மாதிரி பெரிய கோயில்ல எல்லாம் தேடிப்பாருங்க. அங்க நெறையப் பேர் இருப்பாங்க...’’ சென்று பார்த்ததில் அம்மா மாதிரி நிறைய பேர் இருந்தார்கள். அம்மா மட்டும் இல்லை.
 

அன்றைய கனவில் கோயில் வாசலில் பிச்சைக்காரர்களோடு பிச்சைக்காரியாய் அம்மா தெரிந்தாள். பதறி விழித்தேன். மறுநாள் கோயிலுக்குச் சென்று எல்லா பிச்சைக்காரர்களின் கையிலும் பணம் திணித்தேன். சாப்பாடு வாங்கித் தந்தேன். சிலர் விரல் நீட்டி கூல்ட்ரிங்க்ஸ் கேட்டார்கள். என் அம்மாவின் தாகம் தீரும். வயிறு நிறையும். அவள் அழமாட்டாள். நம்பிக்கையோடு கோயில் வாசல்களில் நின்று நின்று பார்த்து திரும்பினேன். சீக்கிரம் வந்துவிடு அம்மா...எங்கு சென்றாலும் அழுகை முன்சென்றது. எதை நினைத்தாலும் அம்மா வந்து கண்ணீர் தெளிப்பாள். இனிமேல் எதுவும் பேசக் கூடாது என்று என் வாய் பொத்தியவள் பார்க்கவே கூடாது என்று என் கண் பொத்திவிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருந்தேன்.
 

தொலைந்தது போலவே திடீரென்று ஒரு நாள் அம்மா கிடைத்தாள். தூரத்தில் வரும்போதே வீட்டு வாசலில் யாரோ படுத்திருப்பது பார்வையில் தெரிந்தது. அம்மாவாய் இருக்கக் கூடாதா என்றெண்ணியபடி வேகமாய் வந்தவன் கண்ணில் அம்மா பட்டாள். சுருண்டு படுத்திருந்தாள். மிக நீளமாய் வெயில் அம்மா மீது உறைந்திருந்தது. கால்களெல்லாம் சேறு. உடம்பெல்லாம் மண். அழுக்கு. துர்நாற்றம். பரப்பி வைக்கப்பட்ட எலும்புகள் மேலே இழுத்துப் போர்த்தியபடி வறண்ட தோல். எந்த சேலையுடன் காணாமல் போனாளோ அந்தச் சேலை கசங்கிச் சிதைந்து  பின்புறமாய் கிழிந்திருந்தது. கிழிந்த வழி தெரிந்த உள்பாவாடை நனைந்து மஞ்சள் நிறம் ஊறிக்கிடந்தது. '' என் அம்மா’’ மனம் வெடித்து அலற இரு கைகளில் அம்மாவைத் தூக்கினேன். வீட்டுக்குள் ஓடினேன். உணர்வற்றுக் கிடந்தாள் அம்மா.

அம்மா வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆயிற்று. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. பால் மட்டும் அருந்திக்கொண்டிருந்தவள் கொஞ்சமாய் சாப்பிடுகிறாள். மருத்துவரின் எல்லா செயல்களுக்கும் ஒத்துழைத்தவள் யாருடனும் எதுவும் பேசாமல் மெளனமாகவேதான் இருந்தாள். அந்த வசவுகள் கூட இப்போது இல்லை. மாமா மறுபடியும் வீட்டுக்கு வந்து போனார். அம்மாவின் மெளனம் வீடெங்கும் அலறியபடி அலைந்தது. அவள் விழிகளில் தெரிந்த உன்மத்த பரவச நிலையை மாமாதான் கண்டுணர்ந்து சொன்னார். மனிதர்களின் மீதான அலட்சியமே அந்த பிரமாண்ட மெளன அடர்த்தி என்றார்.


தேவகியின் தங்கை திருமணம். மூத்த மாப்பிள்ளையாய் நான் எதுவும் பங்கெடுக்க முடியாமல் அம்மாவுடனே இருந்தேன். மாமா எத்தனையோ வற்புறுத்தியும் நான் கல்யாணத்துக்குப் போகவில்லை. அன்றிரவு அம்மா தூங்கியதும் அவள் அருகிலேயே படுத்துக்கொண்டேன். எப்போது தூங்கினேனென்று தெரியவில்லை. கனவு போல் இருந்தது. வீடெங்கும் வீதியெங்கும் அகிலமெங்கும் சுற்றிக் கட்டப்பட்ட ஒரு சங்கிலி துடித்துக் கொண்டிருக்கிறது. பட்டென்று என் கண்ணெதிரில் துண்டித்து விழ துண்டு துண்டான சங்கிலிகள் நின்று நின்று நடனமாடத் துவங்கின. 'ஜல்ஜல்'...'ஜில்ஜில்'... செவியெங்கும் நிறைந்து வழிந்து தரையில் பட்டுத் தெறிக்கும் சங்கிலிச் சத்தம். அம்மா...திடுக்கிட்டு விழித்தேன். கண்ணெதிரில் கண்ட காட்சியில் அம்மா ஆடிக் கொண்டிருந்தாள். இருளும் மழையுமாய் அவ்வப்போது தெறிக்கும் மின்னல் ஒளியில் அம்மா ஆடினாள்.


நடு முற்றத்தில் பெய்துகொண்டிருந்தது உன்மத்த மழை. எப்போது பெய்ய ஆரம்பித்தது? அம்மா இரு கைகளையும் வான் நோக்கி உயர்த்தியிருந்தாள். அத்தனை மழையும் தனக்கே என்று சொந்தம் கொண்டாடும்படி அவளின் கரங்கள் உயர்ந்து விரிந்திருந்தன. கால்கள் தரை மோதின. 'சிலிங்'...மழை தெறித்து மழையில் விழுந்தது. சங்கிலி கட்டப்பட்டிருந்த கால் மட்டும் தன் இயல்பு தவறி ஆடிக்கொண்டிருக்க அம்மா மழை தேவதையாய் மாறியிருந்தாள். எழுந்து முற்றத்தில் இறங்கினேன். அம்மா என்று அழைத்தபடி அருகில் நெருங்க அம்மா தன் கையினால் என் கையைப் பிடித்தாள். இறுக்கமான பிடி. எங்கிருந்து வந்தது இத்தனை பலம். என் கைகளை உயர்த்தி ஆடத் துவங்கினாள். அவளின் முந்தானை சரிந்தது. தொலைந்து மீண்டபிறகு அம்மா உடலில் சதைப்பற்றே இல்லாமல் எலும்புக்கூடாக மாறியிருந்தாள். அம்மாவின் முந்தைய ரவிக்கைகள் எதுவும் உடலோடு ஒட்டாமல் போயின. அதனாலே ரவிக்கைக் கொக்கிகள் மாட்டினாலும் கீழே ஒரு முடிச்சும் போடப்பட்டிருக்கும். இப்போது அம்மாவின் மழையாட்டத்தில் முடிச்சு அவிழ்ந்திருக்க ரவிக்கையை விட்டு வெளியே வந்திருந்தன முலைகள். தோல் வற்றி சூம்பி வெடித்துப்போன முலைகளில் காம்புகள் மட்டும் பெரிதாய் கருப்பாய் பளபளத்தன. ஒரு மின்னலில் உணர்ந்தேன்.

 என்னைச் சேர்த்தபடி ஆடிக்கொண்டிருக்கும் அம்மா...என் அம்மா இல்லை. மழைப்பேச்சி. குல தேவதை. கருவறை விட்டு மழை வழி வெளிவந்த இறைத் தாய். பைத்திய வாசனை கழுவிய முகமெங்கும் தடவியிருந்தது மழையின் மந்தகாசப் புன்னகை. மழையில் உக்கிரம் கூடியிருந்தது. ஆடத்துவங்கினேன். அம்மா என்னைப் பார்த்தாள். அந்தக் கண்களில்தான் எத்தனைக் கனிவு. இவள் பார்வையின் கர்வத்துக்கு என்ன அர்த்தம். என்னவோ அம்மா அத்தனை அழகாய்த் தெரிந்தாள். இவ்வளவு அழகையும்தானா அந்த அழுகிப்போன மெளனத்துக்குள் அடைத்து வைத்திருந்தாள்.

கைகளை உயர்த்தியபடி ஆடிக்கொண்டிருந்த நான் வானம் இடிந்துவிழும் ஒலி கேட்டதும் பயந்துபோய் நடுங்கி அம்மாவை அணைத்தேன். மூக்கில் பட்டு நசுங்கியது முலைச் சதை. அம்மாவின் சூடு எனக்குள் பரவியது. இதழ் பதிந்த காம்புகளின் வழியே உயிர் உறிஞ்சினேன். பசி. தொண்டைக்குள் இறங்கியது பால்மழை. அம்மாவின் மழைச்சன்னதம் தீரும்வரை உறிஞ்சினேன். அம்மாவின் ஆட்டமும் மழையாட்டமும் நிற்கவில்லை. சந்தோஷக் கூச்சலுடன் கொட்டியது மழை. மழைப்பால் உறிஞ்சிக் களைத்தவன் நழுவி தரை அமர்ந்து அம்மாவின் கால்களில் சிக்கியிருந்த சங்கிலியை விடுவித்து எறிந்தேன். தூணில் மோதி வீழ்ந்தது சங்கிலி. மிகப்பெரிதாய் மூச்சுவிட்டேன். நிமிர்ந்து நோக்க அம்மா ஆவேசமாய் ஆடிக்கொண்டிருந்தாள். நீர் சூலம் எடுத்து நீரைக் குத்தினாள். மழையைப் பிடுங்கி மழையில் எறிந்தாள். முற்றமெங்கும் மிதந்து ஓடிக்கொண்டிருந்தது , இத்தனை நாளாய் அம்மாவை அசைத்துக்கொண்டிருந்த கசப்பு வன்மப் பிரேதங்கள்.  ஆட்டம் நின்றபின்பு சங்கிலியிலிருந்து வடிந்துகொண்டிருந்த மழையின் நிறம் மிகப் புதிதாய் இருந்தது. 


.