Sunday 29 January 2017

நீர்ப்பாம்பின் பாதையாய் ஒரு வாழ்வு

அஜ்வா- நாவல்

ஆசிரியர்- சரவணன் சந்திரன்

வெளியீடு- உயிர்மை பதிப்பகம்






ஒரு மித். அதன் வழியே விரியும் ஒருவனின் வாழ்வு. அஜ்வா என்பது பேரிச்சைபழத்தில் ஒருவகை. அதில் ஏழு பழங்களைச் சாப்பிட்டால் ஒருவன் தன் வாழ்வில் புரிந்த பாவ வினைகள் தீர்ந்துவிடும் என்கிறது குரான். நபிகள் நாயகம் சாப்பிட்ட அந்த அஜ்வா பழங்கள் நம் கதை சொல்லிக்குக் கிடைக்கிறது. அவன் அதைச் சாப்பிட்டு தன் கரும வினைகளை முடிக்கிறான். அதற்குள் அவன் வாழ்வில் இடறும் மனிதர்கள். அவர்கள் அனுபவங்கள், அதன் வழி கிடைக்கும் தரிசனங்கள் என்று விரிகிறது நாவல்.
  
அஜ்வா- ஓர் அனுபவம்தான். மறுப்பதற்கில்லை. அந்த ஒற்றை அனுபவத்தை நம்முள் கடத்துவதற்கு நாவலாசிரியர் பல உலகங்களை அறிமுகப்படுத்துகிறார். வேற்றுகிரகத்திலிருந்து எவரும் குதித்துவிடவில்லை. எல்லோரும் நம்முடன் பயணிப்பவர்களே. நாவலின் முதல் எழுத்திலிருந்து கதையைத் தொடங்கிவிடுகிறார் கதையாசிரியர். ஆனால் இதுதான் கதையென்று நம்மை முடிவு செய்யவிடாமல் அவர் செய்யும் மேஜிக் ஆச்சர்யம். இப்படித்தான் எழுதவேண்டும் என்ற சமரசங்களுக்கு உட்படாத எழுத்து. தனக்கான எழுத்து நடையை நன்றாகவே தீர்மானித்திருக்கிறார் சரவணன் சந்திரன். பின்விளைவுகள் குறித்து அலட்டிக்கொள்ளாத எழுத்து. ஏதோ ஒரு பத்தியில் வாழ்வின் நிலையாமையை, அபத்தத்தை, அற்புத தருணத்தை எளிதில் கடத்திச் செல்பவர் அடுத்த பத்தியில் நம் தோளில் கை போட்டு ' ஒரு டீ சாப்பிடலாமா நண்பா' என்கிறார்.

நாவலின் போக்கை, நம் எதிர்பார்ப்பை சட்சட்டென்று மாற்றுவதே சரவணனின் பலம். ஒரே நேர்கோட்டில் செல்லாவிட்டாலும் நீர்ப்பாம்பின் பாதை என்றுமே ஒரு நேர்கோடுதான். அதன் வழி என்பது நெளிதலில் உள்ளது. கதை சொல்லிதான் நாவலின் நாயகன். கதைசொல்லிக்கு நாவலில் பெயரில்லை. அது பெரிய தடையாகவும் தெரியவில்லை. அவனை நாம் சரவணனாகவே வரித்துக்கொள்வதில் சரவணனுக்கு எவ்விதத் தடையுமில்லை. ஏனெனில் நாவல் முழுவதும் சரவணன் பல உருக்கொள்கிறார். அவர், டெய்ஸி மற்றும் ஜார்ஜ் வழி தொடங்கும் நாவல் அதன் பின்பு பலவகையான மனிதர்களை அறிமுகப்படுத்துகிறது. எத்தனை மனிதர்கள், எவ்வளவு அனுபவங்கள். ஒரு வரியில், ஒரு பத்தியில், ஒரு பக்கத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்கள், அதிரவைக்கும் அனுபவங்கள். நமக்குதான் மூச்சு முட்டுகிறது.

நாயகனின் சொத்தினை அடைய முற்படும் தாய்மாமன், அவனுக்கும் சிம்ம சொப்பனமாய் திகழும் அத்தை, பயந்தாங்கொள்ளி அப்பா ( இவரின் பயத்திலிருந்துதான் கதை உருக்கொள்கிறது ) பாசமிகு அம்மா என்று எல்லோரும் ஏதோ ஒரு அனுபவத்தை நமக்கு தந்து செல்கின்றனர். சரவணனிடம் இருக்கும் பகடிக்காரன் நாவல் முழுவதும் நம்மை குதூகலப்படுத்திக்கொண்டே இருக்கிறான். சினிமாவில் வருவதுபோல் இருந்தது என்று நாவலாசிரியரே சொல்லும் திருக்கைவாலால் மாமன் கதைசொல்லியை அடிக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்து தன்னை வீரனாக மாற்ற நினைத்து தோற்றுப்போகும் அத்தையிடம் சொல்வதாக நம்மிடம் சொல்கிறார் சரவணன். நான் என்ன வைத்துக்கொண்டா வஞ்சனை செய்கிறேன். அதேபோல் விஜி அண்ணனும் சுந்தர் அண்ணனும் சேர்ந்து செய்யும் கொலையைப் பார்க்கும்  நாயகனிடம் யாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார்கள். அவனும் அவ்வாறே சத்தியம் செய்கிறான். ஆனால் கதைசொல்லி நம்மிடம் அதைச் சொல்லிவிட்டு இப்போது ஏன் சொல்கிறேனென்றால் விஜியும், சுந்தரும்தான் உயிருடன் இல்லையே என்கிறார். இப்படிப் பல இடங்கள்.
          
ஒரு கதாபாத்திரத்தின் வழி கதை செல்கையில் சட்டென்று தன் அனுபவம், அதன் கூடவே பயணம் செல்கையில் இன்னொன்று என்று சளைக்காத, சலிக்காத விறுவிறு எழுத்துநடை. நாவலின் மையம் போதை. நிஜமான போதை. எத்தனை வகை போதையோ அத்தனையும் அறிமுகப்படுத்துகிறார். டெய்ஸியின் செல்போன் பற்றிச் சொல்ல ஆரம்பித்து கஞ்சா புகைப்பதைப் பற்றித் தொடர்கிறார். அது ஹாட் பாக்ஸ் என்று நீள்கிறது. ஹாட் பாக்ஸுக்குள் நம்மையும் திணிக்கிறார். தீரா போதை.
நாவலின் மையச்சரடு என்ன என்பதை அறியும் முன்னரே தெறித்து விழுகின்றன பல பகீர் நிகழ்வுகள்.  நாயகனின் இன்னொரு அத்தைக்கும் மாமாவுக்கும் இருக்கும் உறவினைப் பற்றிக் கூறும்போது, அத்தைக்கு கோபம் வந்தால் தீப்பெட்டி ஒட்டும் பசையினை அள்ளித் தின்றுவிடுவார். அதில் துத்தநாகம் கலந்திருக்கும். அதுவே உயிருக்கு ஆபத்து. ஆனால் அந்த சாப மனிதர்கள் மிக வறுமையான காலகட்டங்களில் துத்தநாகத்தை வடித்துவிட்டு தோசை சுட்டு சாப்பிடுவார்கள் என்கிறார். ஒரு வலியைச் சொல்லவந்து இன்னொரு வலிக்குத் தள்ளிவிட்டு கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறார் சரவணன்.

நாவலில் வரும் சம்பத் கதாபாத்திரம் தனி நாவலையே எழுதுகிறது. தன் குடும்பத்தின் மீது வீழ்ந்த சாப விளைவால் குடும்பத்தில் அனைவரும் பைத்தியமாக எல்லோருக்கும் விஷம் வைத்துக் கொன்றுவிட்டு தானும் மனநிலை பாதிக்கப்பட்டு பழனிமலை முருகனிடம் அடைக்கலமாகி மலை அடிவாரத்தில் தஞ்சமடையும் சம்பத்தின் கையில் 15 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரம் இருக்கிறது. இதை ஜஸ்ட் லைக் தட் இரண்டு பக்கங்களில் கடக்கிறார் நாவலாசிரியர். அடிவாரத்தில் தங்கி மலையேறும் வின்ச்சில் உயிர்விடும் சம்பத் நம் மனதில் தங்கும் பாத்திரப்படைப்பு.

நாவலின் இன்னொரு சிறப்பு மதங்கள் பற்றிய நாவலாசியரின் பார்வை. நாயகன் வாழ்வில் இன்னொரு தரிசனம் தரும் ஜார்ஜ் கிறிஸ்துவனாக இருந்தாலும் திருநீறு பூசிக்கொள்கிறான். அஜ்வா கொண்டுவரும் முத்தலிப், நாயகனை போதையிலிருந்து மீட்டு எடுப்பதற்கான மனநிலையிலே உறுதியாய் இருக்கிறான். கமுதியில் அறிமுகமாகும் மன்மோகன் சிங் கதாபாத்திரம் தன் பஞ்சாபி வீரத்தை விட்டுக்கொடுக்காமலே நாயகனுக்கு உதவி புரிகிறது. மனிதர்களின் விசித்திர மனநிலையை பிரமாதப்படுத்திப்போகும் நாவலாசிரியர் மதம் சார்ந்த மனிதர்களை அறிமுகப்படுத்துவதிலும் தெளிவாகவே இருக்கிறார். அங்கே போதையில்லை.

'எதிர்பார்த்து இருந்ததற்கு மாறாகப் பெருந்தன்மையுடன் இருப்பதும் பழி வாங்கும் உணர்ச்சிதான்.'  'ஒரே நேரத்தில் ஒன்றைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். அப்படி ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே திரும்பத் திரும்ப சிந்திப்பவர்களைப் பைத்தியம் என்று வழக்கமாக இந்த உலகம் சொல்கிறது.' ' விரும்பினதை விட்டால் பாவம். விரும்பாததைத் தொட்டால் பாவம்.' போதையிலும் நிதானிக்கிறார் கதாசிரியர்.

தனது முந்தைய மூன்று புத்தகங்களில் இருந்த குழப்பம் நீங்கித் தெளிவான ஓர் எழுத்துநடைக்கு வந்திருக்கிறார் சரவணன் சந்திரன். கதை இன்னவென்று அறியப்படாமலே ஒரு நாவலைப் படிப்பது சுவாரஸ்யமான ஒன்றுதான். ஆனால் ஒருவனின் வாழ்வில் இடறும் மனிதர்களைப் பற்றிய அனுபவங்களை அடுத்து அடுத்து என்று அடுக்கிக்கொண்டே போவது நம் மூளைக்குத் தரும் பெரும் அயற்சி. டெய்ஸிக்கும் தனக்கும் இடையில் இருப்பது நட்பா, காதலா என்ற குழப்பத்தில் நாயகன் ஆழ்ந்துபோகும் இடங்கள் இயக்குநர் விக்ரமனின் ஹம்மிங். நாவலின் 75 -வது பக்கத்தில்தான் அஜ்வாவின் அறிமுகம் நடக்கிறது. அதுவரையில்( கிட்டத்தட்ட பாதி நாவல்) ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், ஏகப்பட்ட வாழ்வியல் முறையோடு அறிமுகமாகிக் கொண்டேயிருக்கிறார்கள். ஒருவரின் உருவ அமைப்பை வைத்து அறிமுகப்படுத்தும் எழுத்துக்கு மத்தியில் ஒருவரின் குணாதிசயத்தை வைத்து அறிமுகப்படுத்தும் உத்தி புதிதுதான். ஆனால் எத்தனைப் பேரைத்தான் ஞாபகம் வைத்துக்கொள்வது? இவர்கள் கதைக்கு உரிய மனிதர்கள்தானா என்ற சந்தேகத்துடனே பயணம் செய்வதில் களைக்கிறது மனம். சம்பத் நாவலில் முக்கியமான கதாபாத்திரம். சரி, அதற்காக சம்பத்தின் அம்மா கதையெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன? கதை நாயகனுக்கு மூன்று அத்தைகள். சரி. காது கேட்காமல் போகும் சின்ன அத்தைக்கும் ஒரு வாழ்வினை வைத்து அவரையும் நம் நினைவில் நிறுத்த முயல்வது எதற்கு? ஒருவேளை கதைசொல்லியே தனது வாக்குமூலமாக 111- ம் பக்கத்தில் முன்வைக்கும்...' ஒரு குடும்பத்துக் கதையில் இத்தனை திருப்பங்களாஎன்று கேட்டீர்களானால், உண்மை என்று சொல்வதைத் தவிர வேறெந்த வார்த்தையும் என் கைவசம் இல்லை. நான் கேள்விப்பட்டதையாவது கதை என்று நம்பலாம். ஆனால் கண்ணால் பார்த்ததை என்னவென்று சொல்ல?' - இது நாவல் வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்குமானது என்று எடுத்துக்கொள்ளலாமா சரவணன்?

நாவல் முடியப்போகும் நேரத்தில் திடீரென்று தோட்டக்கலையைப் பற்றிப் பேசுகிறது. சொட்டுநீர்ப் பாசனம் மூலமே வேர்பிடிக்கும் அஜ்வாவின் அந்த எபிசோட் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான போராட்டம். அதை இத்தனை வறட்சியாய் புள்ளி விவரங்களோடு கடந்திருக்க வேண்டுமா? இந்த உலகத்தின் பயம், அவநம்பிக்கை, துரோகம், குற்ற உணர்வில் உழலும் மனம் என அனைத்தையும் டெய்ஸியின் உண்மையான காதலே மீட்டெடுத்திருக்குமே... ஒற்றை பேரிச்சையில் முடிந்திருக்கும் ஒரு அவல வாழ்வின் சாபத்துக்கு ஏழு பேரிச்சைகள் தேவையா?கையில் சங்கு முத்திரையுடன் இருக்கும் நாயகன் போதை உலகத்துக்குள் கிடைக்கும் டெய்ஸியின் காதல் மூலமாகவே தன்னை மீட்டெடுத்திருக்கலாம். அப்படித்தான் நிகழ்கிறது. அதற்குள்தான் மற்றைய போராட்டங்கள்.  தனக்கான எழுத்துநடை இதுதான் என்பதில் உறுதியாயிருக்கிறார் சரவணன் சந்திரன். ஆனால் எடுத்துக்கொண்ட ஆழமான கருப்பொருளுக்கு ஏற்ப மொழி நடையில் கோட்டை விடுகிறார். கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கும் புரியும்படியான ஒற்றை ஒற்றை வரியில் நாவல் கடக்கிறது. போதை மையத்தின் மனிதர்களை வைத்து பிரமாதமான எழுத்து விளையாட்டு விளையாடியிருக்கலாமே சரவணன். தவற விட்டுவிட்டீர்கள். யானைப்பசிக்கு பேரிச்சை போதாது.

-கணேசகுமாரன்.
     
              







     
              

No comments:

Post a Comment