Monday 23 January 2017

தீச்சட்டிப் புகையில் நெளியும் உன்மத்த நடனம்

அழகான ஆறு என்றான் சித்தார்த்தன்
- காலத்தச்சனின் கவிதைத் தொகுப்பை முன் வைத்து...

தீச்சட்டிப் புகையில் நெளியும் உன்மத்த நடனம்************************************************************


விரைந்து செல்லும் ஆம்புலன்ஸின் சைரன் ஒலியை ரசித்தபடியே அதனுள் விரைத்துக் கிடக்கும் பிணமா நீங்கள்? இனி காலத்தச்சன் கவிதைகளை வெகு அழகாய் உள் வாங்கிக் கொள்ளலாம். ஒரு கவிதையை கவிதையாய் மட்டுமே அணுக காலத்தச்சன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. 
எளிய
எள்ளுப்பூக்கள்
எளிய 
என்னை
இப்படி
எளிதாகக்
கைவிட்டிருக்க வேண்டியதில்லை. என்ற அவரின் எளிய ஒரு கவிதையைப் போல எல்லா அனுபவமும் எளிய வார்த்தைகளால், எளிய வாதைகளால், எளிய சிலுவைகளால் நம்முள் சுமத்தப்படுகிறது.

இப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும்தானே என்று நாம் எண்ணுபவற்றையெல்லாம் கவிதையாக்குகிறார் காலத்தச்சன். ஆனால் அவரின் பலம் அதுவல்ல. அப்படியில்லையே என்று முடிப்பதில் இருக்கிறது. 
 
உலகில் எல்லாவற்றுக்கும் ஓர் உச்சம் இருக்கிறது. அந்த உச்சம் எப்படி நிகழ வேண்டும் என்று காலத்தச்சன் எழுதுகிறார்.  
பேரழுகை முட்ட
பெருங்கருணை 
வெளிச்சத்தில்
பிரியமானதொரு
பிணத்தை
நீராட்டுவது போல. இப்படித்தான் எந்த ஓர் உச்சமும் நிகழ வேண்டும். வேறு எப்படி நிகழ்ந்தால் அது உச்சமாகும்? பொதுவாக நாம் அன்பால் ஆளப்பட்டவர்கள். அன்பை ஆள்பவர்கள். அன்பால் சூழப்பட்டவர்கள். சூழ்ந்துள்ள அன்பின் நிறம் சிலருக்கு மட்டும் கறுப்பாகத்தான் தெரியும். கறுப்பு வண்ணமில்லையென்று யாராலும் சொல்லிவிட முடியுமா என்ன? காலத்தச்சனின் கவிதைகளையும்.

மதுமிதாவிடம் காலத்தச்சன் பேசும் அத்தனையும் பயம் கொள்ள வைக்கிறது. பறவைகளின் சச்சரவில்லாத இடத்தைத் தீர்மானிக்கிறார். நாம் அப்படி ஓர் இடமே இருக்கக் கூடாதென்று பிரார்த்தனை செய்யத் துவங்குகிறோம். காலத்தச்சனுக்கு ஓர் ஆசை இருக்கிறது. அந்த ஆசை நிறைவேற இந்த உலகின் எந்த விதமான கொடூரத்தையும் நிகழ்த்தத் துணிகிறார். சின்ன உதவிகள், சின்ன சந்தோசங்கள், உச்ச இன்பம், அடையாளமற்றுப் போய், அசிங்கமாகி, குற்றம் புரிந்து, மீண்டு, சாத்தானாகி, கடவுளாகி இன்னபிற அனைத்தும் செய்ய அவர் தயார்; அவரின் அந்த ஆசை நிறைவேற. 
தங்களின்
இறுதிப்பயணத்தில்
உலகே பார்க்க
நான் மட்டுமே
ஆம்
நான் மட்டுமே
சா
நடனமாட வேணும். இதுதான் அவரின் ஆசை. கவிதை முடிந்ததும் இது என் ஆசையாகவும் உங்கள் ஆசையாகவும் நம் ஆசையாகவும் விரிகிறது. காலத்தச்சனின் சாகா ஆசையது. நான் இறுகப் பற்றிக்கொள்கிறேன் அவரின்  கால்களை.

மிக மெல்லிய காதலை பெரிய கடலில் தள்ளிவிட்டு அத்தனை உப்பு நீரையும் வெளியே தெறிக்கவிடும் காலத்தச்சனுக்குத் தெரிந்திருக்கிறது ஒரு கண்ணீர்த் துளியின் உண்மை ஆயுள். நூலேணியில் ஊர்ந்து செல்லும் கருணை, சூரிய உதயத்துக்கு முன் உப்பரிகைக் கண்ணீரைத் துடைத்துவிட்டால் எத்தனை நன்றாயிருக்கும். ஒரு நாயின் கனவில் கற்கள் அற்ற பிரதேசமும் கைகள் அற்ற கடவுளையும் வரம் கோரும் காலத்தச்சனின் மனம் நாம் நினைப்பது போல் சிக்கலானதில்லை. 

ஒவ்வொரு முறையும் அவர் அலாரம் வைக்கிறார். மிகச் சரியான நேரத்துக்குதான் வைக்கிறார். அது என்னமோ திடீரென அடித்துத் தொலைக்கிறது. திடீர் மணிக்கு அலாரம் வைக்காத ஒருவன் திடீர் மணிக்கு அலாரம் அடிக்காமல் இருக்க எத்தனை மணிக்கு அலாரம் வைக்க வேண்டும் என்கிறார். கவிஞனின் கேள்வியல்லவா? பதில் சொல்லக் கடவுளாலும் முடியாதுதான். 

முன்பு ஒருமுறை நடிகை சுஹாசினியைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அது சரிவர முடிக்கப்படாமலே போயிற்று. மணிரதனம் அதற்கு ஒருபோதும் காரணமல்ல. ஆனால் காலத்தசசன் எழுதியிருக்கிறார். 'சுஹாசினி புன்னகை' என்ற தலைப்பிட்ட அந்தக் கவிதையில் சாமர்த்தியமாக தன் மதுமிதாவை உள் நுழைத்து விளையாட்டு காட்டியிருக்கிறார். விளையாட்டு வினையானது போல் கவிதையின் முடிவு. இவ்வுலகின் அத்தனை பாதிப்புகளையும் கண்டும் காணாமல் செல்லும் நீங்கள் தவணை முறையில் கடவுளாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்கிறது ஒரு கவிதை. ஏனோ இந்த வாழ்வு காலத்தச்சனுக்கு வெறுப்பூட்டுகிறது. இந்தக் காதல் தன் போதாமையில் அலைகிறது. ஆறுதல் தேடி வான் பார்த்துக் கிடக்கும் நிலாக் கண்களை உடைய பிணமாய் உணர்கிறார். காதல் பேசும் கவிதைகள் இடையே செவிட்டரசன் கவிதை போன்ற நையாண்டி அரசியலையும் ஆதங்கமாய் முன் வைக்கிறார். இரண்டு பத்தி. அதில் இரண்டு வரிகள். அவைதான் மொத்தக் கவிதையுமே. எல்லாவற்றையும் சொல்ல்லிப் போகின்றன அந்த இரண்டு வரிகள். நாம்தான் அடுத்த பக்கத்தைப் புரட்டும் சக்தியிழந்து இரண்டு வரிகளுக்குள் சிக்கிக் கொள்கிறோம். தூக்கத்தில் நடக்கும் ஒருவன் மொட்டை மாடி உச்சி சுவரிலிருந்து கீழே விழுகிறான். உங்களுக்குதான் மொட்டிமாடி கைப்பிடிச் சுவர். அவனுக்கு இல்லாமல் போன தன் காதலியின் வீடு அது. அவள் அழைக்கிறாள். அவன் சென்றுவிட்டான் நீலப் பூச்செண்டுடன். கவிதைகளில் நாம் இதுநாள்வரை பூட்டி வைத்திருக்கிற படிமங்கள் எல்லாம் காலத்தச்சனிடம் வேறு விதமாய் உருக்கொள்கின்றன. 

மாலை 5: 30 லிருந்து இரவு 11 மணிக்குள், பத்து என்கிற பத்மநாபனின் வாழ்வு சொல்லி முடிக்கப்படுகிறது. தொகுப்பை மூடிவைத்த பிறகும் திறந்து கொண்டேயிருக்கிறார்கள் நம் நாட்களின் தாள்களில் இடறிக் கிழிந்துபோன எண்ணற்ற பதமநாபன்கள். 

5:30 PM / 11:00 PM
*********************
பத்து என்கிற பத்மநாபனுடன்
கழித்த
நேற்றைய மாலை
மறக்கவே முடியாது
சிகரெட் பிடித்தான்
கிடார் இசைத்தான்
பைக்-கை 
சர்வீஸ் விடணுமென்றான்
அம்சவேணியை
மன்னித்து விட்டேன் என்றான்
எப்பப் பாத்தாலும்
பீய மிதிச்ச மாதிரியே
மூஞ்ச வச்சிக்கிற
சந்தோசமா இருடா மாப்ள என்றான்
முதுகிழவியை
சாலையைக் கடக்க உதவிவிட்டு
LIFE IS BEAUTIFUL என்றான்
அமர்ந்திருந்த காம்பவுண்ட் சுவரிலிருந்து உற்சாகமாய்க் குதித்து
என்னமோ தெரிலடா
எல்லாரையும் பிடிக்குது என்றான்
நான்தான் புரிந்து கொள்ளவில்லை
நேற்றிரவே
பத்து
தூக்கிட்டுக்கொண்டான்.
.
இறுதியாக பெரும் அனுபவங்கள் இடையே எவ்விதச் சலனத்தையும் ஏற்படுத்தாமல் கடக்கின்றன சில கவிதைகள். கைவசம் அல்லது கண்ணீர் வசம் இந்த உலகமே காலத்தச்சனின் காலடியில் கிடக்க  சில வகைமுறை கவிதைகளில் சிக்கி சலிப்பூட்டுகிறார். 

இத்தொகுப்பின் தலைப்பில் தொடங்கும் ஒரு கவிதை இருக்கிறது. அதுவும் இரண்டே வரிகள்தான். முதல் வரி இத்தொகுப்பின் தலைப்பு. இரண்டாம் வரி இத்தொகுப்புக்கான முழு விமர்சனத்துக்கான ஒற்றை.

- கணேசகுமாரன்.
     

No comments:

Post a Comment