Monday 25 November 2013

ஏவல்

சிறுகதை:
                                               ஏவல்



அன்புள்ள அப்பாவுக்கு கதிர் எழுதிக் கொள்வது. நீங்கள் சென்னை வரும்போது ஏவல் விட்டுத்தான் அழைத்து வந்தீர்கள். சென்னை  வந்தவுடன் ஏவல் ஆனது. பிறகு வைரவேல் டாக்டர் மிசினை வைத்து பேசினார். நீங்கள் அதனையும் ஏவல் என்றே நம்பினீர்கள். பிறகு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தீர்கள். அங்கு இருந்த தேன்கனி எனது சொந்த அக்காள். நானும் அவளும் ரெட்டைக் குழந்தைகள். நாங்கள் இருவரும் மனதிற்குள் பேசிக்கொண்டோம். மனதிற்குள் நினைப்பதை கண்டுபிடிக்கும் ஆற்றல் எனது அக்காவிற்கும் வைரவேல் டாக்டருக்கும் உண்டு. பிறகு என்னை ஹோமில் சேர்த்தீர்கள்.   அன்று முதல் என்னை கல்லூரியில் படிக்கும்போது வந்த ஏவலில் தானாக பேசிக்கொண்டதை தாங்கள் கஞ்சா அடித்து உளறுவதாக கூறி எனக்கு ஆஸ்பத்திரியில் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தீர்கள். அந்த வேதனையும் தாங்கிக் கொண்டேன். நாட்கள் கடந்தன. ஹோமில் சேர்த்தபிறகு கல்லூரியில் படிக்கும்போது வந்த ஏவலில் திருத்தம் செய்தார்கள். நான் இதுவரை நினைத்த அத்தனையும் திருத்தம் செய்தார்கள். பிறகு ராசி உச்சத்தைக் குறைக்க என்னை மிசினை வைத்து அழச் செய்தார்கள். ஹோமில் இருந்த ஒன்பது மாதங்களும் நரக வேதனைதான். வைரவேல் டாக்டர் மனதில் நினைப்பதை அப்படியே சொல்லுவார். ( இதற்காகவே அமெரிக்காவில் படித்தவர்) அப்பொழுது உங்களை திரும்பிக்கக் கூறி மிசினை ஆப் பண்ணாமல் வைரவேல் டாக்டர் என்னை துன்புறுத்துவார். எனக்கு நீங்கள்தான் முக்கியம். நீங்களும் அம்மாவும்தான் முக்கியம். நான் உங்கள் இருவர் மீதுதான் அளவு கடந்த பாசம் வைத்துள்ளேன். உங்களை சாகும் வரை  கைவிடமாட்டேன். ஹோமிலிருந்து என்னை வீட்டுக்குக் கூட்டிப் போகாமல் இங்கே வந்து வேலைக்கு சேர்த்துவிட்டீர்கள். இவர்கள் ஒன்றும் உங்களிடம் சொன்னதுபோல்  எனக்கு பில் போடும் வேலை தரவில்லை. சேர்ந்த அன்றே குடோன் சென்று வெயிட் தூக்கு என்றார்கள். என்னுடன் குடோனில் வேலை பார்க்கும் அண்ணன்கள்  நல்லவர்கள். நான் பி.காம். படித்திருக்கிறேன். நான் ஹோமிலிருந்து வருகிறேன். நான் மாத்திரை சாப்பிடுகிறேன் என்றவுடன் என்னை பெட்டியெல்லாம் தூக்க சொல்லவில்லை.அவர்களிடம் நான் சொல்லியிருக்கிறேன். எனக்கு கோபம் வந்தா என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாதுன்னு. அதனாலதான் அன்னைக்கு ஒன்ன அடிச்சேன். எல்லாம் இந்த கல்யாணியால வந்ததும்மா. சொர்க்கவாசல் திறப்பு அன்னிக்கு பெருமாள் கோயில்ல வச்சிதான் கல்யாணியைக் கிஸ்ஸடிச்சது. அத அவ அப்பன் பாத்துட்டான். வீட்டுக்கு அழச்சிட்டுப் போய் ஊஞ்சல்ல உட்கார வச்சி காபியெல்லாம் குடுத்தாம்மா. நான் குடிச்சிருக்கக் கூடாதுதான். தெரியாம குடிச்சிட்டேன். அதுலதான் அவன் ஏவல் வச்சிருக்கான். இல்லாட்டி ஒரே வாரத்துல கல்யாணிக்கு கல்யாணம் பண்ணுவானா? அவன் தெலுங்கு செட்டிம்மா. நம்மூரு தெலுங்கு செட்டியப் பத்தித்தான் ஒனக்குத் தெரியுமே. அவன் குடுத்த காபியக் குடிச்சித்தான் எல்லா சனியனும் வந்தது. இல்லேன்னா கல்யாணி என்ன மறப்பாளா. அதுக்கப்புறம்தான் கல்யாணி கூட அதிகமா நான் பேச ஆரம்பிச்சது. கல்யாணி அடிக்கடி என்னப் பாக்க வந்தா. காட்டுக்குப் போய் பேசிக்கிட்டுருப்போம். நான் அவ கூட பேசுறது ஒங்களுக்குப் புடிக்கல. கஞ்சா அடிச்சிட்டு ஒளர்றேனு ஏவல் வச்சீங்க. இப்ப என்னாச்சி. பீடைகள் ஒழியவே ஒழியாது. எனக்கு நிறைய  யோசனை வந்தது. யோசிச்சிக்கிட்டே இருந்தேன். அதெல்லாம் யாருக்கிட்ட சொல்றதுன்னே தெரியல. ராத்திரி தூங்காம யோசிச்சேனு டாக்டரிடம் அழைத்துக்கொண்டு  போனீர்கள். தூக்கம் வரலேன்னா யோசிக்கத்தானே செய்யணும். உங்களுக்குப் புரியவே இல்லை.நான் சொல்ல வந்ததையாவது கேட்டிருக்கலாம். எதுவுமே பேசாதே தூங்கினாப் போதும்னு சொல்லி மாத்திரை தந்தீர்கள்.அன்று ஆரம்பித்த கொடுமைதான். பிறகு என்னை சூழ்ந்த மாயை அகன்றது. மாத்திரைகள் சாப்பிட்டே தூங்கினேன். எவ்வளவு தூக்கம் தூங்கியிருப்பேன். இப்போதெல்லாம் எத்தனை மாத்திரைகள் போட்டாலும் தூக்கம் வருவதில்லை. வைரவேல் டாக்டர் ஒரு ஊசி போட்டால் போதும். ஆஸ்பத்திரியில் இருக்கும் அத்தனை பெட்டின் மீதும் பறந்து கொண்டிருப்பேன். அமாவாசை பௌர்ணமி நாட்களில் ஏவல் உச்சத்துக்கு செல்லும் என்று நீங்கள்தானே பயந்தீர்கள். எனக்கென்ன பயம். ஏவல் மட்டும்தான். எனக்கு கவலையெல்லாம்  உன்னை நெனச்சுத்தாம்மா. நாகூர் தர்காவுக்குப் போய் ஒரு ராத்திரி படுத்துக் கிடந்தப்ப நீதான் தூங்காம முழிச்சிக்கிட்டுக் கிடந்த.  நான் பேசுறத யாராவது கேட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது. டாக்டர்கிட்டக் கூட அதிகமா நான் பேசுனதில்ல. நீங்கதானே பேசுவீங்க. பெரியவங்கள எதுத்துப் பேசுறான்னு அப்பா சொல்வாரு. பெரியவங்க தப்பு பண்ண மாட்டாங்களா. அத என்ன எதுன்னு கேக்கக்கூடாதா. கற்பித்துக்கொண்ட மாயைகளிலிருந்து நீங்கள் விலகவே இல்லை. எப்பவும் கண்களில் தூக்கம் இருக்கும். தூங்கவும் முடியாது. யோசனைதான். சிந்தனை குறையுமென்று போட்ட மாத்திரைகள் அதிகப்படுத்தின. சரவணனை செவிட்டில் அறைந்ததுதான் உங்களுக்குத் தெரியும். அவன் என்கிட்ட என்ன கேட்டான். இப்பல்லாம் தர்கால்ல போய் படுக்கிறதில்ல நீ.  உனக்குப் பைத்தியம் தெளிஞ்சிடுச்சா. யாருக்குமே கோவம் வரும்தானே. எனக்கு கோவம் வந்தா என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாதுன்னு ஒங்களுக்குத் தெரியும்தானே. யாரும் என்கிட்டயும் அதப்பத்திக் கேக்கல. சரவனன்கிட்டவும் கேக்கல.நான் நல்லவந்தாம்மா. ஏவல் இல்லேன்னா நல்லாத்தாம்மா இருப்பேன். எண்ணப் பாத்து லூசுன்னா கோவம் வருமா வராதா. வைரவேல் டாக்டர் கரண்ட் குடுக்கறதுக்கு முன்னாடி விரல்ல ஒயர் மாட்டுறப்பவே கண்ண இறுக்க மூடிக்குவேன். சத்தம் கேட்ட ஒடனே என்ன யாரோ உள்ள இழுக்கிற மாதிரியிருக்கும். வலிக்கல்லாம் செய்யாதும்மா. தண்ணி தாகம்தான் எடுக்கும். நீங்கதான் அழுவீங்க. நான் கஷ்டப்படுவதைத் தாங்க முடியாமல் ஏர்வாடிக்கு அழைத்துக்கொண்டு சென்றீர்கள். உங்களுடன் இருந்தாலாவது சரியாக இருந்திருப்பேன். ஏவலின் உச்சம் குறைந்திருக்கும். என்னை சுற்றி ஏதேதோ சத்தங்கள். நான் அமைதி தேடி தனியே அமர்ந்து யோசிக்கும் போதெல்லாம் இன்னும் எனக்கு சரியாகவில்லையென்று போய்விடுவீர்கள். தர்காவில்  படுத்துக் கிடந்தபோது உன்னைக் கட்டிப் பிடிக்க வேண்டும் போலிருந்தது. அதனால்தான் அப்படி செய்தேன். உன் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ஏதும் தப்பு செய்திருந்தால்  என்னை மன்னித்துவிடு. ஹோமில் சேர்ப்பதாய்முடிவு செய்து என்னைக் கட்டாயப்படுத்தியபோதுதான் உன்னை அடித்தேன். என்னை மன்னிச்சிடு அம்மா. ஹோமில் நன்றாக சாப்பிடச் சொன்னார்கள். சாப்பிட்டு முடித்த உடனே மாத்திரை தருவதுதான் கோபமாய் வரும். ஹோமிலிருந்து வீட்டுக்கு கூட்டிப் போகாமல் இங்கே வந்து வேலைக்கு சேர்த்துவிட்டீர்கள். கோபம் வந்தால் கணபதியை நினைத்துக்கொள். ஓம்  ஸ்ரீ வல்லப கணபதே நமஹா சொல்லு என்றீர்கள். நம் ஊர் போல் இங்கு சாமியே இல்லம்மா. நம் ஊரில் தடுக்கி விழுந்தால் எத்தனை சாமிகள். அதனாலே ஏவல் அதிகமாய் வராது. சென்னையில் சாமியே இல்லை. எனக்கு ஏவல் என்பதால் மாத்திரை சாப்பிடுகிறேன். நிறையப்பேர் ஏவல் இல்லாமலே மாத்திரை சாப்பிடுகிறார்கள். இங்கு வேலைக்கு சேர்ந்த இந்த ஒரு மாதத்தில் நான் கணபதி என்றிட கலங்கும் வல்வினை கணபதி என்றிட காலனும் கைதொழும் கணபதி என்றிட கருமம் ஆதலால் கணபதி என்றிட கவலைகள் தீருமே என்றெல்லாம் சொல்லிப் பழகிக் கொண்டேன். நேற்றுதான் மறந்துவிட்டேன். எனக்குப் பௌர்ணமியென்று தெரியாது.  தெரிந்தால் நானே கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்திருப்பேன். ஏவல் அவ்வளவு எளிதில் விலகாது. கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் பார்த்தேன். பதினஞ்சு மாத்திரைகள். மாத்திரை அட்டை இங்கேதான் கிடக்கிறது. இதுவரைக்கும் தூங்கல. ராத்திரி ரொம்ப வேர்த்ததுன்னு சட்டையை அவுத்துட்டேன். புழுக்கமா இருந்துதுன்னு ஜட்டியோட பாயில உக்காந்திருந்ததை இங்க உள்ள அண்ணன்ல்லாம் போன்ல படம் எடுத்தாங்க. என்ன சுத்தி நின்னுக்கிட்டு மாத்திரை போடு மாத்திரை போடுன்னு ஒரே சத்தம். ஏர்வாடியில இருந்தது மாதிரியே இருந்தது. ரெண்டு காதையும் பொத்திக்கிட்டு அப்படியே ஒக்காந்துட்டேன். மண்டைக்குள் ஏவல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. எல்லோரும் வாக்கிங் சென்றுவிட்டார்கள். இவன் மட்டும்தான் இருந்தான். இவன் பெயர் கூட எனக்குத் தெரியாது. என்னுடன்தான் வேலை பார்க்கிறான். விடிந்ததிலேர்ந்து டார்ச்சர். ஓனரிடம் நேத்து ராத்திரி நடந்ததைச் சொல்லி வேலையை விட்டு தூக்கப் போகிறேன் என்றான். நான் கஞ்சா அடித்ததை இவன் பார்த்தானாம். சொன்னதையே திருப்பி திருப்பி சொன்னான். எத்தனை முறைதான் ஓம் ஸ்ரீ வல்லப கணபதே நமஹா சொல்வது. ஸ்பானரை எடுத்து மண்டையில் வீசு வீசினேன். சரவணனை அறைந்தது போலவே வேகமாய் அறைந்தேன். நேற்று மேலே இருந்த பேனை கழட்டி மாட்டியவர்கள் ஸ்பானரை இங்கேயே விட்டுவிட்டுப் போய்  விட்டார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு கோபம் வந்தா என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாதுன்னு ஒங்களுக்குத் தெரியுமே. கத்திக்கிட்டே மண்டையில  கைய வச்சிக்கிட்டு கீழே விழுந்தவன்தான் இதுவரைக்கும் எந்திரிக்கல. என் பாயில அவன் மண்டையிலேர்ந்து வந்த ரத்தம் வந்து சேந்ததால எழுந்திரிச்சி பாய சுருட்டி வச்சிட்டு வந்து ஒங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். சுமதி அக்காவை விசாரித்ததாக சொல்லவும். இங்கே இரண்டு மணி நேரம் மட்டுமே கரண்ட் கட் செய்கிறார்கள். இப்போது ஏவல் இல்லை. குளித்துவிட்டு வேலைக்கு கிளம்ப வேண்டியதுதான். எனக்கு உங்க சந்தோசம்தான் முக்கியம். நீங்களும் அம்மாவும்தான் முக்கியம். லீவு கிடைக்கும்போது என்னை அழைத்துக்கொண்டு போங்கள். இப்படிக்கு உங்கள் அன்பு மகன் கதிர்.

No comments:

Post a Comment