Monday 16 July 2012

பட்டி விக்கிரமாதித்தன் கதை



அடிக்கடி தனக்குத்தானே முத்தமிட்டுக் கொள்பவன்
தன் கடைசி அடைக்கலமாய்
அந்த மதுபானக் கடையின் பாரில் சென்று அமர்ந்தான்
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் நண்பனால்
அன்று அங்கு வரமுடியவில்லை
காத்திருந்து சலித்துப்போன வலி ஒன்று 
நண்பனின் குவளையிலும் அவன் குவளையிலுமாய்
தன்னைப்  பலி தந்தது
தன் பங்கு மதுவினை காலி செய்த அவன் எதிரில் 
நண்பன் வந்து அமர்ந்தான்
எதுவுமே பேசாமல்
நண்பனின் மௌனம் தாளாத துக்கத்தைத் தர
இவன் மீண்டும் சப்ளையரை அழைத்தான்
மறுபடியும் மறுபடியும் சப்ளையரை அழைத்தவன்
மேசையில் கவிழ்ந்து கிடந்த
நண்பனை அள்ளித் தோளில் போட்டுக்கொண்டு 
' நான் பட்டி விக்கிரமாதித்தன்'
'இவன் கெட்டி வேதாளம்' என்று ஏதேதோ உளறியபடி
நடந்தான்.  நகக்கண்ணில் வேட்டி நுனி சிக்கி
கலங்கிய கண்களுடன் சாக்கடையில் விழுந்தான்.
வேதாளம் விட்டு விலகிய பின்னும்
விக்கிரமாதித்தனால் எந்திரிக்கவே  முடியவில்லை
சுழலும் அச்சாக்கடையிலிருந்து
கடைசி வரையிலும். 



வே .பாபுவுக்கு

No comments:

Post a Comment