Wednesday 19 June 2019

எனது திருவிளையாடலில் இதுவும் ஒன்று





எனது திருவிளையாடலில் இதுவும் ஒன்று- கதை 






சிவகுமார்தான் இந்தக் கதையின் நாயகன். கதைநாயகன் சிவகுமார் என்பதாலே சிவகுமாரின் அப்பா யார், அவர் என்ன வேலை பார்க்கிறார் என்பதெல்லாம் தேவையற்ற தகவல். அதுபோல் சிவகுமாரின் அம்மா யார், ஹவுஸ் ஒய்ஃபா, வேலைக்குப் போகிறாரா என்பதும் அநாவசியம். நாம் சிவகுமாரின் கதையை மட்டும் பார்ப்போம். தொட்டில் பழக்கம் சுடுகாடு முற்றும் என்பார்கள். ஆனால், சிவகுமாருக்கோ தொட்டிலுக்கு முன்பே தொற்றிக்கொண்டுவிட்டது ஒரு பழக்கம். தொட்டில் பழக்கமே சுடுகாடு வரை என்றால் அதற்கு முன்பான பழக்கம், சுடு
காட்டையும் தாண்டித்தானே. ஆரம்பத்திலேயே சுடுகாடு என்று அமங்கலமாய் எதற்கு. நாம் மங்கலமாய் சிவகுமார் பிறப்புக்குச் செல்வோம். நார்மல் டெலிவரியில்தான் சிவகுமாரைப் பெற்றெடுத்தாள் சிவகுமாரின் தாய் ரஞ்சிதம். இந்த இடத்தில் சிவகுமாரின் அம்மா பெயரைச் சொல்லாமல் இருக்க முடியாதல்லவா. ரஞ்சிதம் பெயருக்கேற்றார் போல் அழகி. சிவகுமார் பிறந்ததும் அவனை மடியில் ஏந்தி பால் கொடுத்தாள் உதடு கடித்து. மார்புக் காம்பில் குழந்தையின் உதடு பட்டதும் பால் பெருகிட எழுந்த உணர்வில் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். புதிதாய் பிறந்த சிசுவோ கை காலை உதறிக்கொண்டுதான் பால் குடித்தது. அது இயல்பான ஒன்றுதானே. நம் சிவகுமாரோ அவ்வாறு கை காலை உதறிப் பால் குடிக்கும்போது ரஞ்சிதத்தின் மார்பின் மீது வேகமாய் பட்டுத் திரும்பியது அவன் கை. அப்படிக் கை பட்டதும் சிவகுமார் வாய்க்குள் பால் அதிகமாய் பீய்ச்சப்பட்டதுபோல் உணர்ந்தான். பூமிக்கு வந்த சில நிமிடங்களில் இச்செயல் நிகழ்ந்ததால் அத்தனை புதிதான மூளையில் அச்சாய் பதிந்துபோனது. தானாகவே பால் பெருக்கெடுத்து சிவகுமாரின் தொண்டையை நிறைக்க எமப்பசியிலிருந்த சிவகுமாருக்கோ தன் கை மோதியதில்தான் பால் அதிகமானது என்ற நம்பிக்கை உண்டானது. பசு மரத்தாணியல்லவா. பச்சக்கென்று பதிந்துபோனது. பின்பு எப்போது பால் குடித்தாலும் சிவகுமாரின் கை ரஞ்சிதத்தின் மார்புமீது மோதித் திரும்பும். சிவகுமார் 9 மாதக் குழந்தையாய் இருந்தபோது சிவகுமாரின் சித்திக்குக் கல்யாணம். அதாவது ரஞ்சிதத்தின் தங்கை. உங்களுக்குப் பிடித்த பெயரை அந்தச் சித்திக்கு வைத்துக்கொள்ளலாம். ஆமாம்... இதற்குப்பின் அவர் வர மாட்டார். காலையில் கல்யாண டிபன். இலையே தெரியாத அளவுக்கு 5 ஸ்வீட், 6 காரம், இட்லி, பூரி, பொங்கல் என்று ஏகப்பட்ட அணிவரிசை. டிபன் பிரமாதம் என்று மண்டபம் முழுவதும் பேச்சு, ஒலித்துக்கொண்டிருந்த நாயனச் சத்தத்தை மீறிக் கேட்டது. ரஞ்சிதம் தன் மடியில் சிவகுமாரை வைத்துக்கொண்டு சாப்பிட அமர்ந்தாள். டைனிங் டேபிளில் பேப்பர் விரித்து அதன் மேல் இலை போட்டு அதன்மீது காலை விருந்து. மைசூர் பாக்கு, நெய் கேசரி என்று ரஞ்சிதத்துக்குப் பிடித்த அய்ட்டம்ஸ். குட்டியோண்டு வாட்டர் பாட்டில் இலைக்குப் பக்கத்தில் வைத்திருந்தார்கள். ரஞ்சிதம்தான் அதைத் திறந்துவைக்கச் சொல்லி டிபன் பரிமாறுபவரிடம் சொன்னாள். அவரும் திறந்து இலைக்குப் பக்கத்தில் வைக்க மடியில் அமர்ந்து துள்ளிக்கொண்டு இருந்தான் சிவகுமார். ரஞ்சிதம் ஆசையாய் மைசூர்பாக்கில் கை வைத்த நேரம் ஒரு துள்ளு துள்ளிய சிவகுமாரின் கை அந்த வாட்டர் பாட்டிலைத் தட்டிவிட்டது. தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக பாட்டிலின் மூடியை பாட்டிலின் மேலே மூடியதுபோல் வைத்துவிட்டுச் சென்றிருந்தார் அந்த நல்ல மனிதர். பாட்டில் அப்படியே இலையில் சாய்ந்து அதனுள்ளே இருந்த தண்ணீரெல்லாம் இனிப்பு, காரம், புளிப்பு வித்தியாசம் பார்க்காமல் இலை முழுவதும் நனைத்து ஓடி சாம்பார், சட்னி, பூரிக்கிழங்கு எல்லாம் ஒன்றாய் கலந்து ஒரே நிறக்கரைசலாய் மாறி வழிந்து ரஞ்சிதத்தின் புது பட்டுப்புடவையின் முழங்கால் பகுதியை நனைத்தது. சுவிட்ச் போட்டதுபோல் நின்றுபோனது ரஞ்சிதத்தின் பசி. 


சிவகுமார் வளர்ந்தான். அதற்குமுன் தவழ்ந்தான். மண்டி போட்டபடி வீடெங்கும் ஓடி கைக்கெட்டும் பொருள்களையெல்லாம் தட்டிவிட்டுக்கொண்டிருந்தான். அந்தப் பொருள்கள் நிலத்தில் சாயும்போதோ சாய்ந்து உடைந்து நொறுங்கிச் சிதறும்போதோ அதைக் கண்ணுறும் சிவகுமாருக்குத்  தாளமுடியாத உற்சாகம் ஏற்பட்டது. பொக்கை வாயில் நீர் வடிய `ஹெக்ஹெக் ஹெக் ஹெக்' என்று சிரித்தான். பிள்ளை அழகாய் சிரிக்கிறான் என்பதற்காக சிவகுமாரின் அப்பா பரமானந்தம் எத்தனையோ பீங்கான், பிளாஸ்டிக் பொருள்களை வாங்கி வீடெங்கும் அடுக்குவார். விளையாடுவதற்கு பொம்மை வாங்கித் தராமல் தரையில் தட்டிவிட்டு உடைப்பதற்காகவே பொருள்கள் வாங்கித் தந்தார் பரமானந்தம். பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை பார்க்கும் பரமானந்தம், தான் கையூட்டாய் பெறும் பணத்தையெல்லாம் பிள்ளை உடைத்து வீணாக்குகிறானே என்று கவலைப்படாமல் மேலும் மேலும் அதிகமாகக் கையூட்டு பெற்றார். சிவகுமாரின் குறும்புத்தனம் தாள முடியாமல் இரண்டரை வயதிலேயே பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார். ப்ரீகேஜியில் ஏதும் விபரீதம் நிகழவில்லை; ஒரே ஒருமுறை டீச்சரின் மூக்குக் கண்ணாடியை டேபிள் மீதிருந்து தட்டிவிட்டு உடைத்ததைத் தவிர. எல்கேஜியில் சிவகுமாரின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள் நித்யா. நித்யாவுக்கு அவள் பெற்றோர்கள் ஏன் அந்தப் பெயரை வைத்தார்கள் என்றால்... வேண்டாம் இந்தத் தகவல் சிவகுமாருக்கு மட்டுமல்ல; இந்தக் கதைக்கும் எவ்விதத்திலும் உதவப் போவதில்லை. அந்த நித்யா பூஞ்சை உடம்பு. பயந்தாங்கொள்ளி. குண்டாய் கொழுகொழுவென்றிருந்த சிவகுமாருக்கோ நித்யாவைப் பார்த்ததுமே பிடித்துப் போயிற்று. அய்யய்யோ... இது அந்தப் பிடித்துப்போயிற்று இல்லை. தான் விளையாட தட்டி உடைக்கும் ஒரு பொருளைப்போலவே நித்யாவைப் பார்த்தான் சிவகுமார். 

மிஸ் கேட்ட கேள்விக்கு எழுந்து நின்று இரு கைகளையும் கட்டிக்கொண்டு சமர்த்தாய் சரியான பதில் சொன்ன நித்யாவை சற்றே எம்பி தன் கைகளால் முதுகில் தட்டினான். அது சபாஷ் என்பதற்கான தட்டலில்லை. சிவகுமாரின் முதுகுத் தட்டலையெல்லாம் தாங்கிக்கொண்டு எதிர்வினை காட்ட நித்யா ஒன்றும் பரமானந்தம் சமீபத்தில் வாங்கித் தந்த ரப்பர் பொம்மை இல்லையே. அப்படியே தரையில் பொத்தென்று உட்கார்ந்த நித்யா , பயத்தில் உள்ளாடையிலே ஆய் போய்விட்டாள். சிவகுமாருக்கோ சிரிப்புத் தாள முடியவில்லை. பயத்தில் ஆய் போன நித்யாவை ஆயாம்மாதான் கழுவிவிட்டார். வகுப்பை சுத்தம் செய்து பினாயிலும் டெட்டாலும் கலந்து ஊற்றிக் கழுவி அறை காய்ந்ததும் வகுப்பின் உள்ளே நுழைந்தார்கள், அதுவரை பள்ளி மைதானத்தில் அமர்ந்திருந்த மாணவர்களும் டீச்சரும். நித்யா அழுதுகொண்டேயிருந்தாள். மறுநாள் காலை சிவகுமாரைப் பள்ளியில் விட வந்திருந்த ரஞ்சிதத்திடம் அந்த டீச்சர் ஏதோ இரண்டு ரயில்கள் ஒன்றையொன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதைப் பார்த்த வியப்பைக் கதையாய் சொல்வதுபோல் சிவகுமார் தட்டிவிட்டு  நித்யா ஆய்போன கதையைக் கை, கால், மெய், பொய், ஆய் சேர்த்து விலாவாரியாகச் சொன்னார். இறுதியாய், '' உங்க பையனைக் கொஞ்சம் கண்டிச்சி வைங்க மேம். ரொம்ப வாலா இருக்கான்'' என்றார். மாலை பள்ளி முடிந்து சிவகுமார் வீட்டுக்குத் திரும்பியதும் அவனை வேகமாய் இழுத்து தன் மார்போடு  அணைத்துக்கொண்டு ரஞ்சிதம் அவன் காதில் '' அப்பிடியெல்லாம் செய்யக் கூடாது செல்லம். அப்புறம் உன்னை எல்லாரும் பேட் பாய்னு சொல்வாங்க'' என்றாள் கொஞ்சலாய். சிவகுமார் அவள் மார்பில் ஓங்கி அடித்துவிட்டு சிரித்துக்கொண்டே அந்த அறையெங்கும் ஓடினான். அவன் ஓடும் அழகைக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் ரஞ்சிதம். பத்தாம் வகுப்பு படிக்கும்போதெல்லாம் சிவகுமார் பள்ளி கிரிக்கெட்டில் சாம்பியனாகிவிட்டான். சட்டென்று கதை எல்கேஜியிலிருந்து பப்ளிக் எக்சாமுக்குத் தாவியதை எரிச்சலாய் கவனிக்கிறீர்களா... அபியும் நானும் படத்தில் மட்டும் ஓர் அறைக்குள் செல்லும் சிறுகுழந்தை அந்த அறையை விட்டு வெளிவரும்போது வளர்ந்து பெரிய த்ரிஷாவாகி உங்களைப் பார்த்துச் சிரிப்பதை எத்தனை கைத்தட்டலுடன் ரசித்தீர்கள். அதுபோல் சிவகுமாருக்கும் அவன் வீட்டில் அப்படியோர் அறை உண்டு. 

படிப்பில் சுமார்தான் என்றாலும் கிரிக்கெட்டில் ஜித்தனாக இருந்தான் சிவகுமார். எப்படிப் பந்து போட்டாலும் பேட்டால் ஜஸ்ட் லைக் தட் தட்டிவிட்டு பந்தை பவுண்டரிக்கு அனுப்புவான். மேட்ச் ஜெயிப்பதற்கான சமயங்களில் பந்தைத் தட்டிவிட்டே சிங்கிள் ரன்னாக எடுத்து மேட்ச்சை வின் பண்ணி விடுவான். தட்டி விடுவதென்றால் சிவகுமாருக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது உங்களுக்கே தெரியும்தானே. சிக்ஸர், பவுண்டரி சில சிங்கிள்களுக்குப் பின் கல்லூரியில் நுழைந்தான் சிவகுமார். கல்லூரியில்தான் சிவகுமார், ப்ரேமைச் சந்தித்தான். திவாகரைச் சந்தித்தான். நித்தீஷை சந்தித்தான். எல்லோரையும் தனித்தனியாக சந்தித்தான். அதனால்தான் இப்படி. பின்புதான் தெரிந்தது நால்வரும் ஒரே வகுப்பென்று. இதில் திவாகர் மட்டும் சென்னை. மற்ற மூவரும் வெளியூரிலிருந்து சென்னைக்குப் படிக்க வந்தவர்கள். இவர்கள் நால்வருக்கும் இன்னோர் ஒற்றுமை.  சிவகுமாரின் அப்பா சிவகுமார் பிறப்பதற்கு முன்பே லஞ்சம் வாங்கத் தொடங்கியவர். இப்போது அதிகமாய் வாங்குகிறாரே தவிர குறையவில்லை. அதுபோல் நால்வரின் அப்பாக்களும் லஞ்சம் வாங்குபவர்கள்தான். தனித்தனியாகத்தான் வாங்குகிறார்கள். என்ன ஒன்று இந்த ஒற்றுமை நால்வருக்கும் தெரியாது. கதையை வாசிக்கும் உங்களுக்கு மட்டும்தான் தெரியும். பார்ட்டி கலாசாரத்தைத் தொடங்கி வைத்தது ப்ரேம்தான். இந்தப் பெயர் வைத்தாலே இப்படித்தான் போலும்.

'' சிவா... நாளைக்கு ப்ரியாகிட்ட என் லவ்வ ப்ரொபோஸ் பண்ணப் போறேன். நைட்டு ட்ரீட் வந்துடு'' என்பான். '' நித்தி... ப்ரியா லவ்வு ப்ரேக் அப் ஆகிடுச்சிடா. நைட் ட்ரீட் வந்துடுறியா'' என்பான். இவர்கள் நால்வரும் மாறி மாறி பார்ட்டி கொடுத்துக்கொள்ள இப்படி ஏதாவது ஒரு காரணமிருந்தது. அதற்கான முதலீடு பாக்கெட்டில் எந்நேரமும் கையூட்டாக வந்துகொண்டேயிருந்தது. சிவகுமாரின் தொட்டிலுக்கு முந்தைய பழக்கத்தை விட்டுவிட்டு கதை திசை மாறுகிறது என்று நினைக்கிறேன். காலேஜ் என்று வந்துவிட்டாலே இப்படித்தான் பலவும் மாறும். ஒவ்வொரு முறை பார்ட்டியின் போதும் சிவகுமார் ஒரு நல்ல காரியம் செய்வான். அதை அவன் வெகு இயல்பாகத்தான் நிகழ்த்துவான். ஆனால் அது அவனையும் மீறி நிகழும் ஒன்று. இரண்டு முறை தாண்டியபிறகு மூன்றாவது முறைக்காக ஊற்றி வைத்திருக்கும் டிஸ்போசபிள் டம்ளரை சிவகுமாரின் கை தட்டிவிடும். இது அவனுக்காக ஊற்றி வைக்கப்பட்டிருக்கும் சரக்காய் இருந்தாலும்கூட. இதற்காக சிவகுமார் மெனக்கெட மாட்டான். தன் நாற்காலியிலிருந்து சற்றே நிமிர்ந்து எதிர்புறம் இருக்கும் சிக்கன் சுக்காவையோ மட்டன் லிவர் ஃப்ரையையோ எடுக்கிறேன் பேர்வழி என்று அவன் கை நீளும்போது இங்கே டம்ளர் தட்டிவிடப்படும். ஆரம்பத்தில் யாரும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒருமுறை பாதி பீருடன் பாட்டில் கவிழ்ந்தபோதுதான் இது சிவகுமாருக்கு உரித்தான பழக்க வழக்கமா, வியாதியா என்று கன்ஃபியூஸ் ஆனார்கள். அதன் பின்புதான் அவர்கள் பீர் என்றாலும் டம்ளரில் ஊற்றி வைத்து நுரை முழுவதும் அடங்கியபிறகு குடிக்கத் தொடங்கினார்கள். 

 ஒருமுறை '' இவன் என்னடா...சிகரெட் சாம்பல தட்டிவிடுற மாதிரி எதையாவது தட்டி விட்டுக்கிட்டே இருக்கான். டேய் சிவா... நீ நல்லவன்டா. இப்பிடில்லாம் பண்ணாதடா'' என்றான் திவாகர் காதுவழியே புகை விட்டவாறு முக்கால் போதையில். அப்போது அவன் சரக்கு கவிழ்க்கப்பட்டிருந்தது. ஒரு அக்டோபர் ஆரம்பத்தில் திவாகரின் அப்பாவும் அம்மாவும் ஊருக்குச் செல்ல ஒரே பிள்ளையான திவாகர் தனித்துவிடப்பட்டான். ரிஸ்க் இல்லாத லைஃப் வேஸ்ட்டுடா என்று ஜெயம் ரவி சொன்ன சினிமாவை அப்போதுதான் கே டிவியில் பார்த்திருந்தபடியால் அவனும் ரிஸ்க் எடுக்கத் துணிந்தான். ஒரு ஃபுல் ரம் வாங்கிவைத்துவிட்டு மூவருக்கும் மெசேஜ் அனுப்பினான். மெசேஜ் போய்ச்சேருமுன்னரே திவாகரின் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள் மூவரும். '' எப்பிடிடா?'' என்று மூக்கின் மேல் குந்த வைத்திருந்த திவாகரின் ஆச்சர்யத்தை சிறு ஸ்மைலியில் கடந்தனர். ஹாலில் டைனிங் டேபிள் இழுத்துப்போட்டு சிப்ஸ் பாக்கெட்டும் கிங்ஸ் பாக்கெட்டும் பிரித்து வைக்கப்பட்டன. வீட்டு ஃப்ரிட்ஜில் இருந்த ஃப்ரூட் சாலட்டும், கடையிலிருந்து ப்ரேம் வாங்கி வந்திருந்த சிக்கன் பகோடாவும் கலர்ஃபுல்லாக பரப்பி வைக்கப்பட , பாட்டில் திறக்கப்பட்டது. டம்ளரில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த சரக்கை வான் நோக்கி உயர்த்தி '' காலேஜுக்கு லீவு விட்ட காந்தி மகாத்மா வாழ்க. ச்சியர்ஸ்'' என்றபடி உதட்டில் வைத்து உறிஞ்சினர் நால்வரும். கடைசிச் சொட்டுவரை அருந்திவிட்டு டம்ளரைக் கீழே வைக்கும்போது சிவகுமார் அந்த ரம் பாட்டிலைத் தட்டிவிட்டான். முக்கால் பாட்டில் ரம்மும் ஸ்லோமோஷனில் சரிந்தது. அத்தனை சைடுடிஷ், சிகரெட் பாக்கெட் என எல்லாவற்றையும் நனைத்தவாறு டேபிள் முழுவதும் ஓடி விளையாடிய ரம் வழிந்து மொசைக் தரையில் ஓடியது நிதானமாக. சிவகுமார் கன்னத்தில் அறைந்தான் திவாகர். ப்ரேம் '' இன்னிக்கு கடையும் கெடையாதுடா'' என்றான் தான் வாங்கி வந்திருந்த சிக்கன் பகோடா ரம்மில் மூழ்கி தத்தளிப்பதைக் கண்கலங்க பார்த்தவாறு. சிவகுமாரே அதை எதிர்பார்க்கவில்லை. அவன் எதிர்பாராததும் அவ்வப்போது அவன் வாழ்வில் நிகழ்வதுதான். அவன்தான் அதைக் கவனிக்கத் தவறியிருந்தான். நேற்றுதான் ப்ரியா அவன் காதலை ஏற்றுக்கொண்டிருந்தாள். அந்தச் சந்தோசத்தை இரண்டாவது ரவுண்டில் சொல்லலாமெனத் தீர்மானித்திருந்தவனுக்கு முதல் ரவுண்டே முடிவு ரவுண்டானது அதிர்ச்சியாகத்தானிருந்தது. திவாகர் டஸ்ட் பின் எடுத்து வந்து எல்லாவற்றையும் அள்ளி அதில் போட்டான். ரம் பாட்டிலை எடுத்துக் கவிழ்த்துப் பார்த்ததில் இரன்டு தேக்கரண்டி மிச்ச ரம்மும் அதே டேபிளில் ஊற்றியது. பாட்டிலையும் டஸ்ட் பின்னில் போட்டான். யாரிடமும் எதுவும் பேசாமல் டேபிளைத் துடைக்கத் தொடங்கினான். ஒரு பக்கெட் தண்னீரில் பாதி பினாயிலும் முழு டெட்டாலும் ஊற்றிக் கலந்து வீடு சுத்தம் செய்யும் மாப்பினை அதில் நனைத்து டேபிளிலிருந்து ஹால் முழுவதும் துடைத்தான். ஃபேனைத் தட்டிவிட... மன்னிக்கவும் ஃபேன் சுவிட்சைப் போட ஈரத்தரை காயத்தொடங்கியது. '' ஸாரிடா'' என்றான் சிவகுமார். '' பரவால்ல... விடு'' என்றான் ப்ரேம். ப்ரியா இத்தனை நாளும் ஃபேஸ்புக்கில் தன்னை அன்ஃபாலோ செய்திருந்ததாகவும் நேற்றுதான் அதை ரிமூவ் செய்ததாகவும் அத்துடன் இல்லாது தனது போன வருட பதிவிலிருந்து சமீபத்திய ப்ரொஃபைல் வரைக்கும் ஹார்ட்டீன் சிம்பல் போட்டு அவளின் காதலைத் தெரிவித்ததாகவும் கிடைத்த கேப்பில் மெதுவாகச் சொன்னான் சிவகுமார். அதிர்ச்சியான ப்ரேம் '' கடைசில... கடைசில..'' என்றான். அதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை. வெம்பி வழிந்தது கண்ணீர். '' இவன் நம்மகூட இருந்தா எதையாவது தட்டி விட்டுட்டுதான் இருப்பான். மொதல்ல இவனைக் கழற்றி விடணும்டா'' என்றான் திவாகர் ஆத்திரமாய். அவனின் கோப மூச்சில் பினாயிலும் டெட்டாலும் சரி விகிதத்தில் கலந்திருந்தன.  காலிங்பெல் அடித்தது.



         


No comments:

Post a Comment