Wednesday 19 June 2019

சாப்ளின்

சாப்ளின்- ஞாபகப் பகிர்தல்






எல்லோருக்கும் பிடிப்பதைப் போலவே சாப்ளினுக்கும் மழை பிடிக்கும். எல்லோருக்கும் பிடிப்பதற்கான காரணம் சாப்ளினுக்கானதில்லை.

மெளன சினிமா காலத்தில் நடித்து எல்லோரையும் பேச வைத்தவர். பேசும் படங்கள் வந்தபின்னரோ  நடிக்க நீண்ட காலம் எடுத்துக்கொண்டார். அப்படி நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த ’தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் முதல் காட்சியிலே அதற்கான காரணம் பூடகமாகத் தெரியப்படுத்தப்பட்டிருக்கும். போரின் உக்கிரமான காட்சிப்படுத்தலில் படம் துவங்கியிருக்கும். சாப்ளினோ சத்தம் பொறுக்காமல் களத்தில் பணியாற்றிக்கொண்டிருப்பார். நிரந்தர சோகம் உறைந்த முகம் சாப்ளினுடையது. அந்த முகத்தால்தான் இந்த உலகைக் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தார்.  பால்யத்தின் வறுமையுடன்  போராடிக்கொண்டிருந்த சாப்ளினுக்கு நோய்மைக்குத் தன்னை ஒப்புவித்த அம்மாவையும் தன்னுடன் காப்பாற்றி வாழ்தல் என்பது சவால் நிரம்பியதாய் இருந்தது. எல்லோருக்குமான மாற்று என்பதே அவருக்கு பின்னாளில் வாழ்க்கையாகிப் போனது. தனது துயரங்களையெல்லாம் ஒளித்து வைக்கும் முகமூடியாய் நகைச்சுவையைப் பயன்படுத்தினார். தவறாய் பிரதிபலிக்காத கண்ணாடியே அவரின் ஆத்ம நண்பனாய் மாறிப்போனது அப்படித்தான். கையெறி குண்டினை தவறுதலாக தன் ஆடைக்குள் போட்டுவிட்டுத் தவிக்கும் சாப்ளின் அவரது வாழ்வின் ஏன்... ஒட்டுமொத்த உலகின் போக்கையே அந்த ஒரு காட்சியில் விளக்கிப் போனார். மனநலம் பிறழ்ந்த தன் அம்மாவின் முன்பு இந்த வாழ்க்கையை எள்ளி நகையாட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. தனது படங்களிலும் மேற்கோள்களிலும்  சாப்ளின் பேசியதெல்லாம் தான் விரும்பி ஏற்றுக்கொண்ட கோமாளி வேடத்தின் பிரதியே. இந்த சமூகத்தை ஒரு கேளிக்கை கூடமாகப் பார்த்த ஒருவரால்தான் ஒரு சர்வாதிகாரியையே சர்வ அலட்சியமாக கேலி செய்ய முடியும்.   மெளனப் பட காலத்தில் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் கதாபாத்திரங்களிலே தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்த சாப்ளின் ஓர் அற்புத நடிகர் என்பதை தி கிரேட் டிக்டேட்டர் படத்தின் க்ளைமாக்ஸ் உணர்த்தும். பெரிதான சலனங்கள் எதையும் வெளிக்காட்டாமல் மிகப்பிரமாதமான உரையை உணர்வுபொங்க ஆற்றியிருப்பார். எல்லா ஆட்சியாளர்களுக்கும் என்றைக்கும் பாலபாடமான ஒரு காட்சியது.  தன் கலைக்கு நிஜமாயிருக்கும் பட்சத்திலே அக்கலைஞனால் நாட்டின் அவலத்தை தைரியமாகக் காட்சிப்படுத்த முடிந்தது. அவரது சினிமாக்களில் காதலோ, உற்சாகமோ ஏன் துயரத்திலும் மெல்லியதாய் நகைச்சுவை இழையோடத்தான் செய்யும். இந்த உலகம் அவருக்கு என்ன தந்ததோ அதை முழுமையாய் ஏற்றுக்கொண்டு அதேசமயம் தன்னளவில் அதை மாற்றியும் தனக்கு வேண்டிய ஒன்றாக வழங்கினார் சாப்ளின். 




No comments:

Post a Comment