Friday 14 June 2019

எறும்பு

எறும்பு






'' ஜன்னல்தான் தெறந்து இருக்குல்ல...கூப்புட்டா வந்து திறக்க மாட்டேனா...கதவ போட்டு இந்த தட்டு தட்டணுமா?’’ என்றபடி கதவைத் திறந்த வசந்தி அப்போதுதான் குளித்ததைப் போல் அத்தனை மலர்ச்சியாய் இருந்தாள்.இரு புருவங்களுக்கு நடுவில் லேசான குங்குமத் தீற்றல். உச்சந்தலையின் வகிட்டு ஆரம்பத்தில் ஒழுங்கற்று உறைந்திருந்த குங்குமம் நீளமான வெள்ளை நிற ஒற்றையடிப் பாதையின் முன்பான கதவு போல மூடியிருந்தது. சிறிய கொணடை அவிழ்ந்துவிடக் கூடாதென மல்லிகைப் பூவால் ஏகப்பட்ட சுற்று சுற்றியிருந்தாள். ஃபேர் அண்ட் லவ்லி வாசனையும் மல்லிகைப் பூ வாசனையும் கலந்து பிரசாத்தின் சுவாசிப்பைத் தாண்டி தெருவுக்குச் சென்று கடந்துகொண்டிருந்த காற்றில் கலந்தது. பிரசாத் திரும்பிப் பார்த்து, வீட்டின் உள்ளே நுழைந்தான். புருவம் உயர்த்தாமல் விழிகளை மட்டும் உயர்த்தி வசந்தியைப் பார்த்துக்கொண்டே வேகமாய் சட்டையைக் கழற்றினான். ஊஞ்சல் மீது சட்டையை வீசியவன், அதே வேகத்தில் பனியனையும் கழற்ற, ‘’ என்னங்க... அடி எதுவும் பட்டுடுச்சா’’ பதறினாள் வசந்தி. தன் முதுகை அவளிடம் காண்பித்து, ‘’ எதுவும் பூச்சி கீச்சி இருக்கான்னு பாரு’’ என்றான். கண்களால் மேய்ந்தவள், கைகளால் தொட்டுத் தடவியபடி, ‘’ அப்பிடி எதுவும் தெரியலைங்க...ஏன் என்ன பண்ணுது?’’  ‘’ ட்ரெயினை விட்டு எறங்குனதிலேர்ந்து எறும்பு ஊறுற மாதிரி ஒரே நமச்சல்... தட்டிப் பாத்துட்டேன். சொறிஞ்சும் பாத்துட்டேன். அடங்கல’’ ஆயிரம் எறும்புகள்  ஊறுவதுபோல் முகம் சுழித்தான் பிரசாத்.’’ கூட்ட நெரிசல்ல வர்றீங்க. வேர்வை கசகசப்பு வேற. போய் குளிங்க. ஃப்ரெஷ்ஷாகிடுவீங்க. வந்து சாப்புடலாம்’’. குளித்துவிட்டு வந்து லுங்கியுடன் ஈரத்தலையைத் துவட்டிக்கொண்டிருந்த பிரசாத்தின் மார்பு முடிகளையே பார்த்த வசந்தி நீல நிற ஒளியில் அம்முடிகளில் தன் நாசி உரசியதைக் கண்களால் உணர்ந்தாள். அன்றிரவு படுத்து பத்து நிமிடம் கழித்து கட்டிலை விட்டு இறங்கி லைட்டைப் போட்ட பிரசாத் ‘’ மெத்தையைத் தட்டித்தானே போட்டே’’ என்றான் கேள்வியாய். ‘’ ஏன் என்னாச்சு?’’   ‘’ முதுகுப்பக்கம் ஊறுற மாதிரியே இருக்கு’’ என்றவன் தன் பங்குக்கு தலையணையை இருமுறை தட்டிவிட்டுப் படுத்தான். மார்பின் மீது விழுந்த வசந்தியின் கைகளை எடுத்துவிட்டு, ‘’ வேணாம்மா கசகசன்னு இருக்கு’’ என்று திரும்பிப் படுத்தான்.

ஒருவாரம் முடிந்து ஒருநாள்...பாத்ரூமிலிருந்து ‘’ வசு...வசந்தி’’ என்று கத்தினான் பிரசாத். லன்ச் பாக்ஸில் சாப்பாட்டை வைத்துக்கொண்டிருந்த வசந்தி பதற்றத்துடன் பாத்ரூமை நோக்கி ஓடினாள்,  ‘’ டவல் உள்ள இருக்குங்க’’ என்றபடி.உடம்பின் இடதுபுறம் மட்டும் நனைந்திருக்க, ஜட்டியுடன் பாத்ரூமின் பாதிக் கதவைத் திறந்தபடி நின்றிருந்தான் பிரசாத். ’’இங்க பாத்தியா’’ என்றான் பாத்ரூமின் மூலையைச் சுட்டிக் காட்டியபடி. பார்த்த வசந்திக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டு ‘’ இதுக்குதான் இப்படி கத்துனீங்களா...இது மலையெறும்புங்க. ஒண்ணும் பண்ணாது. எங்கூர்ல புள்ளையார் எறும்புன்னு சொல்வாங்க. தண்ணி ஊத்துனா போயிடும். கடிக்கல்லாம் செய்யாது’’ என்றவளிடம், ‘’ அதெல்லாம் எனக்கும் தெரியும். காலைல நீ குளிக்கிறப்ப பாத்தீல்ல... அப்பவே தண்ணி ஊத்தியிருக்க வேண்டியதுதானே. பார்த்தாலே எரிச்சலா இருக்கு. ச்சை’’ வசந்தியை முறைத்தான். ‘’ என்ன நீங்க... வரவர எறும்புக்கெல்லாம் பயப்புட ஆரம்பிச்சிட்டீங்க’’  ‘’ பயமும் இல்ல. மண்ணாங்கட்டியும் இல்ல...அருவருப்பாதான் இருக்கு’’ உலகத்து கோபத்தைக் கண்களில் காட்டியவன், ஒரு குவளை தண்ணீர் எடுத்து கறுப்பு வெள்ளை ஊர்வலமாய் பெருங்கூட்டமாய் அழகாய் அவசர அவசரமாய் சென்றுகொண்டிருந்த எறும்புகளின் மீது விசிறினான். நனைந்த எறும்புகள் கண்களைச் சிமிட்டி நீர் உதறி உடல் சிலிர்த்து கண்ணுக்குத் தெரிந்த திசையில் நகரத் தொடங்கின முணுமுணுத்தபடி.

பீக் ஹவரில் பேருந்திலும் ரயிலிலும் பயணம் செய்வது சென்னைவாசிகளின் எளிய சாபம். ஒருமுறை சக அலுவலன் பிரசாத்தின் வீட்டின் வழியே செல்வதாகக் கூறி பிரசாத்தை வீட்டில் விட்டுச் செல்கிறேன் என்று சென்னை டு கூடுவாஞ்சேரியின் அத்தனை இண்டு இடுக்குகளில் புகுந்து சந்து பொந்துகளைக் கடந்து சிக்னல்களில் நின்று மூச்சுவாங்கி வழக்கமாய் பிரசாத் வீட்டுக்கு வரும் நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாய் வந்தது ஓர் உயர் சாபம். பிரசாத்தின் பெற்றோர்களுக்கு அவன் ஒரே பிள்ளை. அவர்களின் வயதான காலத்தில் வந்து பிறந்த பிள்ளை. பிரசாத் வளர்ந்து படித்து வளர்ந்து வேலைக்குச் சென்று வளர்ந்து திருமணம் முடிப்பதற்குள் அவர்களின் காலத்தில் நரை பூத்திருந்தது. தன் மகனின் திருமணக் கோலத்தைப் பார்த்த நிறைவில் அடுத்தடுத்த வருடங்களில் இருவரும் இறந்துபோக அவர்கள் வாழ்ந்த அந்த பழங்காலத்து வீடு மட்டுமே பிரசாத்துக்கு ஞாபக மிச்சமானது. வந்து சென்று அவ்வீட்டை நிறைக்கும் உறவுகள் எல்லாம் வசந்தியுடையதாயிருந்தன.

காலையில் ஆபீஸ் புறப்படும்போதே வசந்தி சொல்லியிருந்தாள்.  ’’ஈவ்னிங் சீக்கிரம் வாங்க. டாக்டரைப் பார்க்கப் போகணும்’’. ஏற்கெனவே பார்த்த டாக்டர்தான். கல்யாணமாகி ஐந்து வருடங்களாகியும் கரு தரிக்கவில்லையே என்ற அணுகலுக்குக் கிடைத்த பதில் ‘’ அஞ்சு வருசமெல்லாம் ஒரு கணக்கா... சில பேருக்கு பத்து வருசமாகியும் குழந்தை உண்டாகியிருக்கு. எதுக்கும் டெஸ்ட் பண்ணிடலாம்’’. இன்று ரிப்போர்ட் வாங்க வரச் சொல்லியிருந்த நாள். கிளினிக்கில் காத்திருந்து அவர்கள் முறை வந்ததும் உள்ளே சென்றார்கள். டாக்டரின் பார்வை பிரசாத்தின் மீதே இருந்தது. ‘’ வசந்திக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல. ஷீ இஸ் நார்மல். பிரசாத்தின் செமன்லதான் கவுண்ட்டிங்க்ஸ் குறைச்சலா இருக்கு. ட்ரீட்மெண்ட்ல சரி பண்ணிடலாம். இது ஜெனிட்டிக் ப்ராப்ளமா கூட இருக்கலாம். பிரசாத் அவர் பேரண்ட்ஸுக்கு லேட் பேபிதானே. அதனால கூட இருக்கலாம். டோண்ட் ஒர்ரி. சரியாகிடும்’’.

வசந்திக்குதான் பெரும் ஆச்சரியமாக இருந்தது. எல்லாவிதத்திலும் அழகாய் இருக்கிற, அழகாய் சிரிக்கிற, சிரிக்கும்போது கண்களில் குழந்தைமை வழிகிற, மார்பில் முடிகள் அடர்ந்த, சமயங்களில் குளித்துவிட்டு வரும்போது சரியாகத் துவட்டாமல் மார்பின் முடிகள் மீது தேங்கி நிற்கிற நீர்த்துளிகள் சுமந்த, உடல் சேர்க்கையில் போதும் போதுமென்ற அளவுக்குத் தன்னை மூச்சுத் திணற வைக்கிற, வியர்வையிலே தனியாய் ஒரு ஆண்மை வாசனையைப் பரவவிடுகிற தன் கணவனிடம் ஒரு குழந்தைக்குத் தகப்பனாகும் தகுதியில்லையா? பிரசாத்தின் கை பற்றி ஆறுதலாய் அழுத்தினாள். ஏறிட்டுப் பார்த்த பிரசாத்தின் கண்களின் நிறம் மாறியிருந்தது. இருவரும் அதிகம் பேசிக்கொள்ளாமல் வீட்டுக்கு வந்தனர். சாப்பிடும்போதுதான் கவனித்தான். அவன் தட்டிலிருந்து சற்றுத் தள்ளி எறும்பு வரிசை தொடங்கியிருந்தது. கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியக்கூடிய எறும்பும் வரிசையும். அவன் பார்வை எறும்புகளைப் பின் தொடர, தன்னிச்சையாகக் கை இட்லியைப் பிட்டுக்கொண்டிருந்தது. தரையிலிருந்து சுவர் நோக்கிச் சென்ற எறும்புகள் அங்கிருந்து தங்கள் பயணத்தை செங்குத்தாகத் தொடங்கி சட்டென்று இடதுபுறம் திரும்பி சீப்பு, பவுடர், எண்ணை வைக்கும் கண்ணாடி ஸ்டாண்டைத் தொட்டு அங்கிருந்து எங்கோ சென்று கொண்டிருந்தன. சுவரின் பளிச்சென்ற வெளிர் நிற பச்சைப் பின்னணியில் நேர்கோட்டில் தங்கள் தேடலை நிகழ்த்திக்கொண்டிருந்தன எறும்புகள்.

வசந்தி நிமிர்ந்து பிரசாத்தின் முகத்தைப் பார்த்தாள். பிரசாந்தின் பார்வை சென்ற இடத்தை உற்று கவனித்தவள் ‘’ சித்தெறும்பு...எங்கேர்ந்து வந்துச்சின்னு தெரியலியே... இருங்க... எறும்பு மருந்தை எடுத்துட்டு வந்துடுறேன்’’ எழுந்து அறைக்குள் சென்று வந்தாள். பிளாஸ்டிக் டப்பாவில் பிளாஸ்டிக் ஸ்பூன். எறும்பு மரண மருந்து. வரிசையைக் கவனித்து எறும்புகளைப் பின் தொடர்ந்தவள், ‘’ தேங்காயெண்ண பாட்டில் சாஞ்சிருக்கு. அதுக்கு வந்திருக்கு எல்லாம்’’ என்றபடி தரையிலிருந்து எறும்புகள் சுவர் ஏறும் இடத்தில் மருந்தக் கொட்டினாள். கை கழுவிவிட்டு பிரசாத் அருகில் அமர்ந்தாள்.

‘’ சொல்றேன்னு தப்பா நெனச்சிக்காதீங்க. ஒங்க அம்மா அப்பா வாழ்ந்த வீடுங்கிறதால இந்த வீட்டை விட்டு வெளியே வர அடம் புடிக்கிறீங்க. நான் புதுசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. இந்த வீட்டை வித்துட்டு சென்னையில ஒரு பிளாட் வாங்கிடலாங்க. வாசல் திண்ணை, உள்ளே முற்றம், ஊஞ்சல், சுத்தி நாலு தூணு, கொல்லைல ஒரு முருங்க மரம்னு இந்த நூற்றாண்டு வீடா இது. எப்பவும் தரை சில்லுன்னு இருக்கு. இந்த மாதிரி வீட்ல இருக்கிறது நல்லதுதான். வாழத்தான் கஷ்டமாயிருக்கு’’ இட்லி மீது சட்னி ஊற்றினாள் வசந்தி. பிரசாத்தின் பார்வை இறந்துபோன எறும்புகள் மீதிருந்தன.

டாக்டரிடம் சென்று வந்த பின்பு வசந்தியைப் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்வில் தவித்தான் பிரசாத். ஊரிலும் உறவினர்களிடம் இரண்டு பேரிடம் குறை என்று சொல்லியிருந்தாலும் குற்றவாளி தான் மட்டும்தானே என்று உணரும் நொடிகளில் அருவருப்பான எறும்புகள் பிரசாத்தின் உடம்பெங்கும் ஊர்ந்தன. தான் சிறு வயதிலேர்ந்து தொட்டு விளையாடிய தூண்களும் முற்றமும் திண்ணையும் விட்டுவிட்டு செல்வதற்கு அவன் மனம் இடம் கொடாமல் இருந்தது. டாக்டர் ட்ரீட்மெண்ட் தொடங்கியபின்பு வசந்தியுடன் முன்பு போல் சேர முடியாமல் திணறினான். மன ரீதியான விருப்பமின்றி கடமைக்கு எனத் தொடும் பிரசாத்தின் அணைப்பில் முன்பிருந்த இறுக்கம் இல்லாதது வசந்திக்கும் உறுத்தலாயிருந்தது. வீட்டின் தரை தன் ஈரம் இழக்காமல் அப்படியே இருந்தது. எறும்புகள் போவதும் வருவதுமாய் இருந்தன. இருவர் கண்களுக்கும் தெரியாத எறும்புகள்.

ஆபீஸிலிருந்து வந்ததுமே பிரசாத்திடம் சொன்னாள். ‘’ பாத்ரூம் போறப்ப பாத்துப் போங்க. முருங்க மரத்திலேர்ந்து நெருப்பெறும்பு இங்க கிச்சன் வரைக்கும் வந்துடுச்சி. கதவைச் சுத்தி மருந்து போட்ருக்கேன். மிதிக்காம போயிட்டு வாங்க’’ அதையும் மீறி தன் காலைக் கடித்துவிட்ட எறும்புகளைத் திட்டிக்கொண்டே காலை உதறினான் பிரசாத். ‘’ இதுக்கே இப்படியா... எங்க ஊர் பக்கம்லாம் கட்டெறும்பெல்லாம் கொடுக்கோட திரியும். ஒரு எறும்பு கடிச்சாலும் வலி உச்சிக்கு ஏறும். கொடுக்கு நம்ம வெரல்லதான் இருக்கும். அந்த வலியெல்லாம் நீங்க எப்புடி தாங்குவீங்களோ...’’ இந்த உலகத்திலேயே பிரசாத் அதிகம் வெறுக்கும் உயிரினமாய் போயிற்று எறும்பு.

ஒருநாள் மதியம் ஆபீஸில் மயங்கி விழுந்தான் பிரசாத். டாக்டரை சென்று பார்த்ததில் ஃபுட் பாய்ஸன் ஆகியிருப்பதாகவும் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்று இஞ்ஜெக்‌ஷன் போட்டு அனுப்பி வைத்தார். ஆபீஸ் ஸ்டாஃபின் பைக்கில் வீட்டுக்கு வந்து இறங்கினான் பிரசாத். ஜன்னல் மூடியிருக்க கதவைத் தட்டினான். திறக்கப்படவில்லை. பெயர் சொல்லி அழைக்க அக்கம் பக்கத்தினர் எட்டிப் பார்த்தனர். போன் செய்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. பத்து நிமிடத்துக்கும் மேல் எடுக்கப்படாமல் போக எரிச்சலானான். ஊசி போட்டிருந்ததும், பைக்கில் வந்த அசதியும் உடல் அளவில் களைப்பாக்கியிருக்க, திறக்கப்படாத கதவு மனதளவில் தளர்த்தியிருந்தது. நிற்க முடியாமல் தவித்தான். பொறுமை இழந்த கணம் கதவு திறக்கப்பட்டது. ஆத்திரத்துடன் நிமிர்ந்த பிரசாத்தின் கண்களில் ஈரக் கூந்தலில் டவலைச் சுறியிருந்த, மார்பு வரை பாவாடையை ஏற்றிக் கட்டியிருந்த, வெறுமனே புடைவையை உடம்பின் மீது சுற்றியிருந்த வசந்தி தென்பட்டாள். வீட்டுக்குள் பிரசாத் நுழைந்ததும் வசந்தி உடனே கதவை மூட அவளின் கன்னத்தில் வேகமாய் இறங்கியது பிரசாத்தின் கை. முள் கிழித்தது போல் கன்னம் எரிந்தது வசந்திக்கு. ‘’ இப்ப எவன் வர்றான்னு குளிச்சு முடிச்சி சீவி சிங்காரிக்கப் போற. அரை மணி நேரமா கதவ தட்டிட்டுருக்கேன் ...ச்சே’’ எரிச்சல் பரவிய கையை உதறிக்கொண்டான் பிரசாத்.

மறுநாள் பிரசாத் வீட்டுக்கு வரும்போது ஜன்னல் மூடியிருந்தது. கதவு திறந்திருந்தது. திறந்ததும் வீடு வெளிச்சமாயிருந்ததை ஆச்சரியமாய் கவனித்தபடி உள் நுழைந்தவன், வலதுபக்கம் உத்திரத்திலிருந்த ஃபேனிலிருந்து கயிறு மாட்டி அதன் சுருக்கில் கழுத்தை நுழைத்து இறுகித் தொங்கிக்கொண்டிருந்த வசந்தியைப் பார்த்தான். பிரசாத்தின் அலறலில் அவ்வீதி அவன் வீட்டுக்குள் கூடியது. யாரோ போலீஸுக்கு போன் செய்தார்கள். விழிகள், நாக்கு வெளித்தள்ளி தொண்டை இறுகியிருந்ததில் நரம்புகள் புடைத்துக்கொண்டிருந்தன. கழுத்தைச் சுற்றியிருந்த பழைய கயிற்றின் முடிச்சில் சிறு பிசிறொன்று நீட்டிக்கொண்டிருந்தது. இறுகி மூடியிருந்த வசந்தியின் கையில் இருந்த பேப்பரைப் பிரித்துப் படித்தான் பிரசாத். 

‘ எங்கள் கல்யாணத்தின் போது யாரோ சொன்ன வார்த்தைகள் அந்த மேளச் சத்தத்தையும் மீறி என் காதில் கேட்டது. கேட்டிருக்கக் கூடாதுதான். ’ என்னதான் இருந்தாலும் அழகுலையும் கலர்லையும் மாப்பிள்ளைய விட பொண்ணு ஒரு பிடி கம்மிதான்’. என் கணவர் மிக அழகானவர். பார்வைக் குறைபாடு என்று கண்ணாடி போட்டதும் இன்னும் அழகானார். நிஜமாகவே அழகிலும் கலரிலும் என் கணவரை விட நான் குறைந்தவள்தான். சொல்லப்போனால் அவருக்குக் கொஞ்சமும் நான் பொருந்தாதவள். ஆனாலும் இந்த ஐந்து வருடங்கள் நாங்கள் மிக நன்றாகவே வாழ்ந்தோம். குழந்தையில்லா குறையைத் தவிர இந்த வீடு எந்தக் குறையும் இல்லாமல்தான் இருந்தது. என்னால் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாது என்பதையும் மீறி அவர் என்னை நேசித்தார். என் கணவர் அழகில் மட்டுமல்ல; குணத்திலும் அழகானவர். அவர் நலனுக்காகத்தான் இந்த முடிவெடுத்தேன். என்னை மன்னித்து விடுங்கள்’

வசந்தி சாவதற்கு முன் ஒருமுறை குளித்திருந்தாள். தலையில் சிறிய கொண்டையிட்டு மல்லிகைப் பூ சுற்றியிருந்தாள். கயிறு இறுகும்போது உடம்பு உதறியதில் புடைவை லேசாக நெகிழ்ந்திருந்தது. முகத்து கிரீம் வாசனை அந்த இடத்தில் பரவியிருந்தது. யாரோ கவிழ்ந்திருந்த ஸ்டூலை நிமிர்த்தி வைத்தார்கள். தலையில் கை வைத்தபடி சுவரோரம் சாய்ந்து உட்கார்ந்தான் பிரசாத். அவன் காலை உரசியபடி கிடந்தது வசந்தியின் கழுத்தை இறுக்கிய கயிறு. கயிற்றிலிருந்து வந்த கட்டெறும்பொன்று பிரசாத்தின் பேண்ட்டில் ஏறி சட்டைக்கு வந்து அவன் விரலைக் கடித்தது. உதறினான். கொடுக்கை அவன் விரலில் விட்டுவிட்டு பறந்து வாசலில் நின்ற எறும்புக்கு ஒரு வாலும் ஒரு துதிக்கையும் இருந்ததை பிரசாத்தின் கண்கள் கவனித்தன.




No comments:

Post a Comment