Wednesday 19 June 2019

நீரின்றி அணைந்த உலகு

நீரின்றி அணைந்த உலகு- கட்டுரை




நீர் உயர வரப்புயரும் என்பது முதுமொழி. வயல்களே அற்ற நிலவெளியில் வரப்பெங்கே? நீரின்றி வெடிப்புற்ற நிலங்களை அழித்து முளைத்த கட்டடங்கள் முன்பொரு காலத்தில் என்று ஆரம்பித்து எழுதும் கட்டுரைகளுக்கு காரணமாகிவிட்டன. ஆனைகட்டி போரடித்த காலம் என்பதெல்லாம் புராணப்படங்களில் இடம்பெறும் ஈஸ்ட்மென்ட் கலர் காட்சிகளாகிவிட்டன மக்கள்தொகை பெருக்கம், வாழ இடம் தேடி விவசாயத்தை அழித்து நிலங்களை ஆக்ரமித்ததில் விவசாயிகள் இருண்டகால மனிதர்களானார்கள். மழை வேண்டியெல்லாம் யாகம் செய்ய இப்போது யாருமில்லை. வானம் தன் நிறம் மாற்றிவிட்டது. மனிதர்கள் வானம் பார்க்க நேரமின்றி டெக்னாலஜி அப்டேட்டுக்குள் மழைப்பதிவு இட்டு விருப்பமும் கருத்துகளும் தேடுகிறார்கள்.

மனிதன் இன்னமும் தன் உணவை பூமியில்தான் தேடுகிறான். ஆனால் நிலத்தை மலடாக்கிவிட்டு செயற்கை வாழ்க்கை வாழத் தயாராகிவிட்டான். தான் வாழ்வது சக்கை வாழ்க்கை எனத் தெரிந்தும் பழகிவிட்டான். சக்கையே  சர்க்கரையாய் இனிக்கத் தொடங்கிவிட்டது. எல்லாமே சிறிதுகாலம்தான் மனோபாவம் வந்தபிறகு மனிதன் செய்த முதல் அலட்சியம் இயற்கையைப் புறக்கணித்ததுதான். அகண்ட காவிரி ஆடு தாண்டும் காவிரியானது என்ற லலிதானந்த் கவிதை உணமையாய் சுடுகிறது. நீரிலிருந்து தொடங்கிய மனிதன் வாழ்வு நெருப்பில் அடங்கலாம்.

தாகம் தீராது எப்போதும் அலையும் மனிதனுக்கு வாட்டர் பாட்டில்கள் தீர்வு தருவதில்லை. ஆனாலும் பழக்கிவிட்டோம். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றெல்லாம் போற்றப்பட்ட தஞ்சை விவசாயிகள் அருகிவிட்டார்கள். அவர்களுக்கும் நாம் கோக், பெப்சி என்று பழக்கிவிட்டோம். கொளுத்தும் வெயிலுக்கு ஒதுங்க நிழல் இல்லா இடங்களில் ஏ.டி.எம் சென்டர்கள் உருவாக்கி ஏ.சி அறைகளில் தஞ்சமடைய வைத்து பழக்கிவிட்டோம். எல்லாமே பழகிவிடும் கொஞ்சநாளில் நீரின்றி வாழப் பழகுவானா?

நெருப்பில் வெந்து நீரில் மூழ்கி அழியும் உலகம் என்கிறது மனு நீதி. அதற்கான  அத்தனை வாய்ப்புகளையும் உருவாக்குகிறோம் நாம். பனிக்குட நீரில் இருந்து பிறந்து ஒரு குடம் நீரில் முடியும் மனிதன் தன் வாழ்வை நீர் தவிர்த்து அலட்சியப்படுத்துகிறோம். அசுத்தப்படுத்துகிறோம். நீரினைக் குற்றப்படுத்துகிறோம். பிறகு என்ன செய்யப்போகிறோம்?  

நடந்தாய் வாழி காவேரி மாறி, அடைத்தாய் வாட்டர் பாக்கெட்டில் காவேரி என்றாகிவிட்ட சூழலுக்கு நாம்தான் காரணம். நதியை நதியாகவே இருக்கவிடாமல் நாம் என்னவெல்லாமோ செய்துவிட்டோம். சரி இப்போது என்ன செய்யலாம்? எதுவும் செய்ய வேண்டாம்.மழையை மழையாகவே, நதியை நதியாகவே, கடலினை கடலாகவே விட்டுவிட்டால் போதும். முப்புறமும் நீரால் சூழப்பட்ட கண்டம். எதை அலட்சியப்படுத்திவிட்டு நாம் எதைக் காப்பாற்றப் போகிறோம்?

பல வருடங்களுக்கு முன்பெல்லாம் மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள். அவர்களுக்கு எல்லாமும் இயற்கைதான் தந்தது. மழைநீர் சேகரித்தார்கள். அது அவர்களுக்கு இயல்பான ஒன்றாயிற்று. காடுகளைக் காத்தார்கள். அது அவர்கள் வாழும் இடமாயிற்று. உழைத்த இடங்களில் தங்கள் வியர்வை தெளித்து உயர்ந்தார்கள். காற்றில் மாசில்லை. மனிதர் சுவாசப்பையில் அசுத்தங்கள் படியாத வாழ்வு வாழ்ந்தார்கள். இப்போது அட்வான்ஸ் டெக்னாலஜி முன்னேற்றத்துக்கு நாம் ஒன்றே ஒன்றைத்தான் பலி தந்திருக்கிறோம். அது இயற்கை. காடழித்து கட்டடங்கள் எழுப்பி, பொழியத் தயாராயிருக்கும் மேகங்களின் கர்ப்பப்பையில் வாகனப்புகை பூசி மழை மறக்கடித்தோம். ஒன்றை அடைய இன்னொன்றை இழப்பது இயற்கை விதியென்று சமாதானம் கூறி நாம் இயற்கையையே இழந்தோம்.


நதிக்கரை ஓரமாக நாகரிகம் வளர்த்தவன் தமிழன். நீரின்றி அமையாது உலகு என்று உலகிற்கே அறிவித்தவன். அவனின் நதியின் கதிதான் இது. மெளனமாகத் தன் பயணத்தைத் தொடரும் நதியின் அலறல் நமக்குக் கேட்கவில்லையா? மனிதன் தன் காதினை இறுகப் பொத்திக்கொண்டுவிட்டானா? நதியில் முகம் பார்த்துக் கழுவி நதிநீர் அருந்தி வாழ்ந்த காலமெல்லாம் கனவாகிவிட்டதா? குப்பைகளையும் கழிவுகளையும் சுமந்து நகரமுடியாமல் தேங்கி நிற்கும் ஒவ்வொரு நதியும் மனிதனின் அலட்சிய சாட்சிகள்.

நதி என்பது நீர் என்ற சொல்லினால் அர்த்தப்படுத்தப்படும். நதி மட்டும் அல்ல. ஏரிகள், குளங்கள், குட்டைகள் என நீரினால் ஆன அத்தனைக்கும் அடையாளம் அதுவே. கோடை நாட்களின் விடுமுறையில் தாத்தாவின் விரல் பிடித்து காய்ந்த ஆற்றுமணலில் சாயங்கால நேரங்களில் நடை பழகிய நாட்கள் நம் வெம்மையின் சாட்சி. இன்று வருடத்தின் அத்தனை நாட்களும் கோடைதான். ஆறுகளில் நீர் மட்டும் இல்லை. மணலும் இல்லை. அம்மைத் தழும்புகள் நிறைந்த உடலாய் ஒவ்வொரு ஆறும் பள்ளம் வெட்டப்பட்டுக் காட்சியளிக்கின்றன. மலையில் உருவாகி பூமி தழுவி ஓடும் நதி இன்று உலகின் அத்தனை அசுத்தங்களையும் கரைத்துக்கொண்டு ஓடுகிறது. ஒட்டுமொத்தமாய் இயற்கை மீது பழி போட்டுவிட்டு  தப்பிக்கும் மனித மனம்தானே அனைவருக்கும் வாய்த்திருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

முன்பெல்லாம் பேருந்தில் பயணிக்கும்போது ஜன்னல் வழி தெரியும் கொள்ளிடம் ஆற்றின் இரண்டு பக்க வெள்ளப்பெருக்கு மிகப் பெரிய ஆச்சரியமூட்டும். இப்போதும் கடக்கிறேன் அந்தப் பாலத்தை. நீரற்று வறண்டு அங்கங்கே மணல் தோண்டப்பட்டு தன் பிரமாண்டத்தையெல்லாம் இழந்த ஒரு பெருநதியின் கையறு நிலை கண் முன்னே விரிய, ஒரு காலத்தில் ஆச்சரியமூட்டிய அதே நதிதான் இன்று அச்சமூட்டுகிறது. நீர் வரும் பாதையெல்லாம் அடைத்தது நாம்தான். வறண்டிருந்த ஆற்றில் மணல் அள்ளி லாரிகளில் ஏற்றி மிச்சமிருந்த கடைசி ஈரம் சொட்டச் சொட்ட பிற மாநிலங்களுக்கு கடத்தியதும் நாம்தான். என்ன செய்யப் போகிறோம்?

பழங்காலப் புராணங்களும் நிஜ வரலாறும் சொல்வதெல்லாம் தாகமென்று வந்து நிற்பவர்களுக்கு தண்ணீர் தருவதில் நாம் எவ்வித யோசனையும் காட்டியதில்லை. ஆனால் இன்று உள்ளங்கையில் உலகம் என்று டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் தருவதற்கு யோசிக்கிறோம். கடைகளில் வாட்டர் பாக்கெட்டில் சுருங்கிவிட்டது அகண்ட காவிரி. பெருமழை பெய்து ஊரே மூழ்கினாலும் அடுத்த ஆறு மாதத்தில் அனல் வெயிலில் பிளாஸ்டிக் குடங்களோடு வீதியில் தண்ணீர் வண்டி முன் சண்டை போடுகிறார்கள் மக்கள். மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்குள் இப்போது பாம்புகள் வளர்கின்றன. நீர் சேமிப்புக்கு ஏதும் வழியில்லை. எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு என்ன செய்யப் போகிறோம்?

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் மாற்றாக கிட்டத்தட்ட எல்லாமே வந்துவிட்டது. விஞ்ஞானப் புரட்சியில் உலகம் ஒற்றை கேப்ஸுயூலில் பசி அடக்கி வாழக் கற்றுக்கொண்டுவிட்டது. நம் நீரெல்லாம் அசுத்தப்படுத்திவிட்டு கற்றுக்கொள்வோம் நீரின்றி வாழ.

100 வருடங்களுக்குப் பிறகான மழை என்றார்கள். இவ்வளவு நாட்களாக போக்குவரத்து சிக்னலுக்கு நின்று கவனித்து மனிதர்களைக் கவனியாமல் விரைந்துகொண்டிருந்தவர்களின் சென்னை வாழ்வு ஸ்தம்பித்துப் போனது. இன்னும் இரண்டு நாட்கள் இப்படியே மழை தொடர்ந்தால் சென்னை மூழ்கிவிடும் என்றார்கள். சென்னையைக் காப்பாற்றுங்கள் என்ற ஹேஷ்டாக் தமிழ்நாடெங்கும் வைரலானது. அரசாங்கம் கைவிட்டாலும் ஒவ்வொரு தனிமனிதனும் இயற்கையை எதிர்த்துப் போராட ஆரம்பித்தான். நீரால் நிறைந்து வழிய ஆரம்பித்தது நகரம்.

பெருகிய வெள்ளம் எல்லாக் கழிவுகளையும் சேர்த்துக்கொண்டு கடலினை நோக்கிப் பயணப்பட்டது. வரலாறு காணாத மழையை சேமித்துவைக்க புவியில் இடமில்லை.  கொட்டிய மழைக்கு ஏழை பணக்கார வித்தியாசமில்லாமல் போனது. நாட்டில் நல்லோர் ஒருவர் இருந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால் பெய்யெனப் பெய்தது மழை. இந்த மழைக்கு முன்பான சில நாட்களுக்கு முன் இதே சென்னை,  வெயிலால் காய்ந்தது. பல பகுதிகளில் குழாயில் நீர் வராமல், போர் போடுகிறேன் பேர்வழி என்று பூமியைத் துளைத்தார்கள். ஆழமோ கணக்கின்றிப் போக, சட்டென்று வானிலை மாறி பெருமழை பெய்தபோது அதை சேமித்து வைக்கத்தான் இடமின்றிப் போனது. 

நம் முன்னோர்கள் வாஸ்து பார்க்காமல்தான் வீடு கட்டினார்கள். ஆனால் காற்று வரும் திசை, சூரியன் உதிக்கும் திசை பார்த்து கட்டினார்கள். கூடவே மழை பெய்தால் சேமித்துவைக்க முற்றம் கட்டினார்கள். பெய்த மழை சுற்றுப்புறத்தை மட்டுமல்ல. மக்கள் மனதையும் ஈரப்படுத்தியது. தாகமென்று வந்தவர்களுக்கு வீட்டுத் திண்ணையில் மண்பானை வைத்து நீர் வழங்கிய மூத்தகுடிகள் காலத்தின் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார்கள்.

இவ்வளவு மழை பெய்தும் மறுபடியும் வெயில் கொளுத்துகிறது. ஒண்ணு பேஞ்சு கெடுக்குது. இல்ல காஞ்சு கெடுக்குது என்று உபமொழி பேசி நாம் வியர்வை ஆடைகளை அகற்றத் துவங்கிவிட்டோம். ஒரு துளி நீர் ஒருவனின் தாகம் தணிக்கலாம். நாம் சேமிக்கத் தவறியது நீரை மட்டுமல்ல. உலகின் நீதியையும்தான்.

சரி முடிவாய் என்ன செய்வது என்றால், மறுபடியும் ஆரம்பத்துக்குச் செல்ல வேண்டியதுதான். தொடக்கத்தில் ஆறுகள் நீரால்தானே நிரம்பியிருந்தது. இப்போது நீருக்குப் பதில் கழிவுகளும் குப்பைகளும். அதற்குக் காரணம் நாம். கடல் என்பதன் அர்த்தம் கழிவுத்தொட்டி என்று மாறிப்போனது. அதற்குக் காரணம் நாம். குப்பைகளை அதற்கு உரிய இடத்தில் போடாமல் சாக்கடையில் வீசினோம். சாக்கடையின் விஸ்தீரணம் கடல் என்றானது. மழைநீர் சேமிக்க வழியின்றி தெருக்களை மூழ்கவிட்டோம். கழிவுகள் சுமந்து நீர் விரைந்தது கடல் நோக்கி. அசுத்தமடைந்த கடல் மூச்சுத்திணறிப் பேரழிவினை உருவாக்கியது. வினை விதைத்தோம், வினையே அறுவடை செய்தோம்.

ஒரு விவசாயியைப் பார்த்து நீ விவசாயம் செய்யாதே  என்பதுபோல் கொடுமை உலகில் வேறெதும் இல்லை. ஆனால் நாம் சொன்னோம். நிலங்களை ஆக்ரமித்தோம். ஃப்ளாட்கள் உருவாக்கினோம். மென்பொருள் கம்பெனிகளிடம் நம் நிலத்தை விட்டுக்கொடுத்தோம். வயல்வெளிகள் இழந்தவன் கதியற்றுப்போனான். நம் பாரம்பரியம் தொலைந்து போவதைப் பற்றி எந்த விதக் கவலையுமில்லை. வானம் பார்த்து மழை வேண்டுபவனையே மறுத்தோம். ஆறுகளில் மணல் தோண்டினோம். நீரற்ற ஆற்றில் கிரிக்கெட் விளையாட பழக்கிவிட்டோம் நம் எதிர்காலத் தலைமுறையை. காடுகளை அழித்துக் கட்டடங்கள் கட்டினோம். மரங்கள் உமிழும் சுவாசங்கள் இன்றி மேகங்கள் களைப்படைந்தன. நீர் சுமக்க மறுத்து கலைந்தன. மழையும் இல்லை. பெய்யும் மழை சேமிக்க வழியும் இல்லை. வறண்டது மனிதமும் உலகமும்.

கடற்கரையில் வாக்கிங் போகும் மனிதன் வசதியாய் ஒன்றை மறந்தான். நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடை  உள்வாங்கி சுத்தம் செய்யும் மகத்தான பணியினைப் புரியும் கடலினை நாம் கொன்றோம். பின் எங்கிருந்து வரும் சுத்தமான காற்று? கடலினையும் அசுத்தம் செய்துவிட்டு காற்று வாங்க வாக்கிங் போகும் நம் மனநிலையை என்ன சொல்வது? ஆக்ஸிஜன் தரும் மரங்கள் அழித்தோம். அசுத்தக் காற்றினை சுத்தம் செய்யும் கடலினைக் காணாமலடித்தோம். சுற்றுப்புறச்சூழலைத் தொலைத்துவிட்டு நம் எதிர்காலம் எங்கே இருக்கப்போகிறது? நம் எதிர்காலம் என்பது இயற்கை சார்ந்துதானே... அதை விடுத்து என்ன இருக்கப்போகிறது?

என்னை எப்படி என்று 20-ம் நூற்றாண்டு தீர்மானித்தது. 21-ம் நூற்றாண்டு எப்படி என்பதைத் தண்ணீர் தீர்மானிக்கும் என்ற  பார்க் ஆக்டனின் வரியை மனதில் நிறுத்துவோம். உலகில் நீரினை சேர்ப்போம். நீரின்றி அணையாமல் உலகைக் காப்போம்.


     



 

   





 





 

.


No comments:

Post a Comment