Monday 8 July 2019

தூக்கம்

கதை







இரவு 10 மணிக்கு மேல் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது. 9 மணிக்கு செட்டிநாடு ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டான். அப்போது கவனமெல்லாம் பரோட்டாவின் மேல் ஊற்றப்பட்ட சால்னாவில் லேசாய் தென்பட்டுக்கொண்டிருந்த கறி வாசனையில் இருந்தது. அதைத் தவிர்த்து பரோட்டா சாப்பிடக் காரணமாயிருந்த ஊருக்குச் சென்றுவிட்ட மனைவி மகன் மீதிருந்தது. இருவரும் இருந்திருந்தால் இந்த பரோட்டா டின்னர் நிகழ்ந்திருக்காது. இவ்வளவுக்கும் இவன்தான் அறிவுரை கூறுவான், பரோட்டா சாப்பிடுவது எத்தனை கெடுதலென்று. ஒரே ஒருநாள் மட்டும் என்று மனைவியும் மகனும் கெஞ்சினாலும் பிடிவாதமாய் மறுத்துவிடுவான். அவர்கள் கண்ணுக்கு அப்போது அவன் எப்படித் தெரிவானென்று நினைத்து சிரித்துக்கொள்வான். அவன் ஏன் சிரிக்கிறான் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் ஒரு ரகசிய ஆசையாய் கல்லில் கிடந்து வெந்துகொண்டிருக்கும் அவனுக்கான பரோட்டா. மனைவியும் மகனும் ஊருக்குச் செல்லும்போது மட்டுமே அந்த பரோட்டா புரட்டிப்போடப்படும். அது ஒரு அபூர்வ நிகழ்வு. அந்த அபூர்வமென்பது இவனுக்கான பரோட்டா தட்டில் வைப்பதை விட அரிதாய் நிகழும் ஒன்று.
நான்கு பரோட்டாக்களை சால்னாவில் முக்கியடித்து உபரியாய் ஒரு ஆஃப் பாயிலுடன் இரவுணவை முடித்தபோதுகூட அவனுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்தான். கையில் இருந்த ரிமோட் கூட ஓர் அபூர்வ நிகழ்வுதான். மனைவிக்கு சீரியல், மகனுக்கு ஏதோ ஒரு கார்ட்டூன் சேனல் என்று ஒதுக்கப்பட்டுவிட்டதால் இவன் அதிகம் டிவியைத் தேடுவதில்லை. அதுவுமில்லாமல் ஆபீஸ் முடிந்து இந்நகரத்தின் போக்குவரத்து சிவப்பையும் பச்சையையும் அணைத்து முடித்து வீட்டுக்கு வந்தால் போதும் என்று அலுத்து வருபவனுக்கு இந்தத் தொலைக்காட்சி விருப்பமற்ற ஒன்று. தொலைக்காட்சியில் ஏதோ பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. கறுப்பு வெள்ளை காட்சிகளை வைத்துதான் பழைய படமென்று தீர்மானித்திருந்தான். அப்போதுதான் ஒரு காட்சியாகவோ எழுத்துருவாகவோ அவன் மூளைக்குள் சில நொடிகள் தோன்றி மறைந்தது ஒரு பிம்பம் அல்லது எண்ணம். ’விடியறதுக்குள்ள நாம செத்துடுவோமோ...’ 

ஒரு ஃபிளாஷ் வெளிச்சம் போல் இப்படி ஒன்று அவனுக்குள் தோன்றிய அடுத்த நொடி அவனுக்கு வயிறு வலித்தது. மலம் கழிக்க வேண்டுமெனத் தோன்றியது. மனைவி மகனுக்குத் தெரியாமல் சாப்பிட்ட பரோட்டா மீது பழியைப் போடாமல் வெஸ்டர்ன் டாய்லெட் சென்று அமர்ந்தான். அந்தக் குழப்பமான எண்ணம் அதிகமானது. எதற்கு இப்படித் தோன்றுகிறது என்ற பதற்றத்திலே அவசர அவசரமாய் வெளியே வந்தான். டிவியை அணைத்தான்.  அவனுக்குள் அந்த எண்ணமே மீண்டும் மீண்டும் சுற்றியடித்தது. இப்படி தான் மட்டும் தனியாய் இருக்கும்போது தோன்றிய எண்ணம் எதன் பொருட்டு என்று திரும்பத் திரும்ப நினைத்தான். எதுவும் புரியாமல் தலையை அழுந்தப் பிடித்துக்கொண்டான். படுக்கையில் வந்து படுத்தான். லேசாக மூச்சுத் திணறுவதுபோல் இருந்தது. எழுந்து வந்து மீண்டும் சோபாவில் அமர்ந்தான். அறை லைட் எரிந்துகொண்டிருந்தது. ஹாலிலும் அப்படியே. பாத்ரூம் லைட் ஏற்கெனவே எரிந்துகொண்டுதான் இருந்தது. பாத்ரூம் கதவு மூடியிருந்தது. வீடு முழுவதும் வெளிச்சத்தில் இருக்க அவன் விடிவதற்குள் மரணித்துவிட மாட்டோம் என்று முழுமையாய் நம்பினான். பெயின்ட் தயார் செய்யும் கம்பெனியில் உயர் பதவி. நேரிடையாக பெயின்ட்டுக்கும் அவனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென்றாலும்  பிரமாண்டமான கட்டடத்தையோ மிகப்பெரிய வண்ணமயமான வீட்டையோ கடக்கும்போது இவனுக்குள் புதிதாய் ஒரு வண்ணம் லேசாய் ஒரு தீற்று தீற்றிவிட்டுச் செல்லும்.  புன்னகைத்துக்கொள்வான். மனைவி என்பதற்கு இவனுக்கு சரியான அர்த்தம் தெரியாது. ஆனால் அழகான மனைவியின் கம்பீரம் என்றால் அது  அவன் மனைவிதானென்று உறுதியாய் நம்பினான்.  அவனின் பால்ய நாட்களையெல்லாம் ஞாபகப்படுத்தியபடி வளரும் அவன் மகனின் சிரிப்பு நினைவுக்கு வந்தது. இவர்களையெல்லான் விட்டுவிட்டு அவன் மட்டும் இறந்துபோகிறதுபோல் அத்தனை பலமாய் ஒரு வரி மனதில் உதிர்ந்ததும் தலையை வேகமாய் ஆட்டி அவ்வெண்ணத்தைக் கலைத்தான். இதற்கு மேல் வேகமாய் சுற்றமுடியாது என்றபடி சுற்றிக்கொண்டிருந்த ஃபேனையே கவனித்தவன் அவனது நெற்றி, முகம் எங்கும் படிந்திருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டபடி எழுந்தான். இன்னொரு ஃபேனின் சுவிட்சினைப் போட்டான். 

நிறைந்த சம்பளத்தில் உயர் பதவி, எவ்விதப் பிரச்சினையுமில்லாத குடும்ப வாழ்வு இவற்றையெல்லாம் விட்டுவிட்டு அவன் மட்டும் இவ்வளவு சீக்கிரம் இறந்துபோவதை நினைத்து முதலில் பயமாகவும் பிறகு வெறுப்பாகவும் பின் வருத்தமாகவும் இருந்தது. மனவிக்கு போன் செய்து சொன்னால் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்குமென்று நம்பினான். ஊருக்குச் சென்றிருப்பவர்களை ஏன் பயமுறுத்த வேண்டும் என்று உடனே அந்த எண்ணத்தை அழித்தான். தான் அவவளவு சீக்கிரம் இறந்துவிட மாட்டோம்...இது ஏதோ ஒருவித பிரச்னை, தற்காலிக பயம் சிறிது நேரத்தில் உடலும் மனதும் இயல்பாகிவிடும் என்று நம்பும்போதே வேறு ஏதோ ஒன்று அவ நம்பிக்கையாய் உள் எழுவதைக் கவனித்தவன் இரண்டு ஃபேன் சுற்றியும் ஏன் இப்படி வியர்க்கிறது என்று குழம்பினான். ஜன்னலைத் திறந்துவைத்தால் கொசு வந்துவிடும் பயமும் இருந்தது அவனுக்கு. கொசு வந்து அவனைத் தூங்கவைக்கப் போவதில்லை, அவனது மரணத்திலிருந்து அவனைக் காப்பாற்றப் போவதுமில்லையென்று அழுத்தமாக ஓர் எண்ணம் வந்தது. அதே நேரம் அபத்தமாகவும் பட்டது அவனுக்கு. நகரத்தில் ஏழை, பணக்காரன், குடிசை, அபார்ட்மென்ட் வித்தியாசமில்லாமல் வாழும் ஒரே உயிரினம் கொசு மட்டும்தானே என்று சம்பந்தமில்லாமல்  அவன் ஞாபகத்தில் வந்துபோனது. நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட உணர்வு  பயமுறுத்தியது. பெட்ரூமில் ஏசி இருக்கிறது. உள்ளே செல்ல சின்னதாய் ஒரு பயம் இருந்தது. இந்த வயதிலேயே இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்த தனக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு மரணம் நிகழ வேண்டும் என்ற கேள்வி மட்டும் மீண்டும் மீண்டும் அவனுக்குள் தன்னை எழுதிக்கொண்டே இருந்தது. எங்கேயோ படித்ததோ யாரோ சொன்னதோ அவனுக்குள் தோன்றி புதிதாய் ஒரு பூட்டு திறக்கும் செயலை நிகழ்த்திக்கொண்டிருந்தது. 

நிறை வாழ்வு வாழ்பவர்கள் மனதில் அவ்வப்போது இதுபோன்ற எண்ணம் தோன்றி மறைவது உளவியல் ரீதியாக சாதாரணமான ஒன்றுதானே என்ற குரல் அவன் காதுக்குள் கேட்ட சமயம் யதேச்சையாக பார்வை கடிகாரத்தின் மீது சென்றது. அவன் இதயத்தில் நொடி முள் மிக மெதுவாய் நகர்ந்து நின்றது. 12. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாய் இதைப்பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறோமா... ச்சே என்ன இது? தான் இறந்துவிடுவதுபோல் எந்தச் சம்பவமோ பேச்சோ கனவோ முந்தைய நாட்களில் எதுவும் நிகழவில்லையோ என்பது வேறு குழப்பமாய் இருந்தது அவனுக்கு. அவனுக்குத் தெரிந்த கடவுள்களை மனதுக்குள் வழிபடத் துவங்கினான். காலையில் சிடியில் கேட்கும் சுப்ரபாதமோ காயத்ரி மந்திரமோ கணபதி அகவலோ இளையராஜாவின் புத்தம் புது காலையோ வரிசைப்படி ஊர்வலம் போயின. சிறுவயதில் ஊரில் இருக்கும்போது கெட்ட கனவு கண்டு நடு ராத்திரி விழித்து கத்தினால் அவன் அம்மாதான் சாமி ரூமிலிருந்து விபூதி எடுத்துவந்து நெற்றியில் பூசிவிடுவாள். அதுபோல் இப்போது செய்தால் தூக்கம் வருமா? நகரத்துக்கு வந்த பிறகு சாமி ரூம் என்று தனியாய் அமைந்த பிறகு பெரிதாய் சாமியெல்லாம் பற்றி யோசிப்பதில்லை. அது சாமியின் அறையாயிற்று. அவ்வளவுதான். விபூதி பற்றிய யோசனையைக் கைவிட்டான். மற்ற எந்த பிளாட்டிலும் எந்தச் சத்தமும் இல்லாமல் இத்தனை அமைதியாக இருக்குமா இந்த இரவு? ஏன் மற்ற பிளாட்டில் எல்லோரும் தூங்கிவிட்டார்களா? 12 மணிக்குள் இந்த நகரம் இப்படியான மெளனத்துக்குள் தனனைப் புதைத்துக் கொள்ளுமா? கேள்விக்குறியின் அளவு அவனுக்குள் பெரிதாகிக்கொண்டே போனது.  அவனது மரணம் குறித்து ஏதோ செய்தி சொல்வதாய் இருந்தது அவனுக்கு அவ்விரவு. அவனுக்குதான் இந்நகரின் நடுமை என்பது எப்படி இருக்குமென்று தெரியாதே. கதவு திறந்து வெளியே சென்று பார்க்கலாமா...வராந்தாவில் நடந்து சென்று இந்த மூன்றாவது மாடி சிட் அவுட்டின் மேலிருந்து இந்நகரத்தின் இரவை உற்று கவனிக்கலாமா... அவன் தொந்தரவில் விழித்துக்கொள்ளும் இந்த இரவாவது அவன் மரணத்தைத் தள்ளிப்போடாதா... ஏதேனும் ஒரு நாயின் குரைப்புச் சத்தம் அவனது இத்தகைய மனநிலையைக் குலைத்துப் போட்டு விடாதா...தலையில் பட்டென்று அடித்துக்கொண்டான். என்ன யோசித்தாலும் அவனுக்கு மீண்டும் மீண்டும் அவனது மரணம் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. இப்போது வெளியே சென்று உறங்கிக்கொண்டிருக்கும் மற்றவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டுமா என்ற யோசனையும் அவனுக்குள் ஓடியது. நாளை விடிவதற்குள் அவன் இறந்துவிடுவான் என்று அவர்களிடம் சொன்னால் அவனைப் பைத்தியம் என்று நினைக்க மாட்டார்களா... அது மேலும் அசிங்கமாகிவிடாதா... ஏன் ஒரு சாட்சியை வைத்துக்கொண்டு அவன் இறந்துபோக வேண்டும் என்று சிந்தித்தான். எழுந்தான். 

உறங்காமல் விழித்தபடி இருந்தால் இப்படித்தான் கண்டபடி எண்ணம் ஓடும். படுக்கையறைக்குள் நுழைந்தான். மொபைலை எடுத்து பாடல்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று ஓப்பன் செய்தான். இளையராஜா பாடல்கள். எத்தனையோ பேருக்கு இரவுத் தாயாய் தாலாட்டி தூங்கவைக்கும் இளையராஜா அவனை உறங்கவைத்து அவன் மரணத்தைத் தள்ளி வைக்க மாட்டாரா... சின்னதாய் புன்னகைத்தான். இப்படியெல்லாம் எப்போதும் தான் இல்லையே என்பதை நினைத்து கவலை கொண்டான். இந்த இளையராஜா பாடல்கள் கூட மற்றவர்கள் சொல்லியதுதான் அவனுக்கு. படுப்பதற்கு முன் பாடல்கள் கேட்டால் தூக்கம் வரும் என்றெல்லாம் அவனுக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும்  தலையாட்டியபடி பாடல்களைத் தேர்வு செய்து மெளனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம் என்ற பாடலை குறைவான சவுண்டில் வைத்தான் எஸ். ஜானகியின் குரல் அறையின் செயற்கை குளிரை மேலும் குளிராக்கியது. லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு படுத்தான். கண்ணை மூடினான். கைக்கெட்டும் தூரத்தில் மொபைலை வைத்துக்கொண்டான். தூக்கம் கண்ணைச் செருகும்போது கவனமாய் மொபைலை அணைக்க அதுதான் வசதியாய் இருக்கும். மெளனமான நேரம் முடிந்தது. அடுத்த பாடல் துவங்கியது. புரண்டு படுத்தான். பாடல்கள் வரிசை கட்டி வந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு பாடலும் அப்பாடல் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்றை அவன் மூளையில்  பழைய ஞாபகங்களின் சாட்சிகளாய்  ஓடவைத்துக்கொண்டிருந்தன. மல்லாந்து படுத்து மார்பின் மீது இரு கைகளையும் வைத்தபடி நீளப் பெருமூச்சு விட்டவன் வினோதமாய் ஏதோ ஒன்று உறுத்த மொபைலை எடுத்துப் பார்த்தான். மணி 2: 30 என்று காட்டியது. லேசாகக் கை நடுங்கியது. எழுந்து உட்கார்ந்து இரண்டு கைகளாலும் தலையை இறுகப் பிடித்துக்கொண்டான். அப்படியென்றால் இரண்டு மணி நேரம் பாட்டு மட்டுமே கேட்டுக்கொண்டிருந்திருக்கிறோம். தூங்கவில்லை . தூக்கமும் வரவில்லை. ஆழ்ந்த உறக்கம் என்பதே 12 லிருந்து 3 வரக்கும்தானே...அப்படிப்பட்ட உறக்கத்தைக் காணாமலடித்துவிட்டதை உணர்ந்தான். இனிமேல் உறங்கி என்னாகப்போகிறது. கண்கள் எரிச்சலில் மிதப்பதை வெறுத்தான். இதயத்தின் படபடப்பு அவன் உள்ளங்கையில் தெரிந்தது. மொபைல் எடுக்கும்போது கை நடுங்கியதை கவனித்து அதிர்ந்தான் . எதற்கான அறிகுறி இது? மரணத்தை நோக்கிய பயணத்தில் இருக்கிறானோ. அவ்வளவுதானா எல்லாம்... வாழ்ந்தது போதுமா... அழுகை வந்தது அவனுக்கு. பாட்டை நிறுத்திவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான். 

ஹாலில் லைட் எரிந்துகொண்டிருக்க ஒரு நொடி தயங்கினான். லைட்டையும் ஃபேனையும் அணைக்காமல் சென்றுவிட்டதை அவன் மூளை தாமதமாக உணர்ந்தது. மனம் குழம்பியதுதான் இதற்குக் காரணமா என நினைத்தவன் இல்லை இல்லை இது வேறு விதமானது இப்படி ஒரு ராத்திரி தூங்காவிட்டாலெல்லாம் எவரும் செத்துவிட மாட்டார்கள் என்பதை மனதுக்குள் வலிமையாய் நிறுத்திக்கொள்ள முயன்றான். கூடவே அப்படிச் சாவதில் தான் ஏன் முதல் ஆளாக இருக்கக் கூடாது என்றொரு எண்ணமும் வால் பிடித்தபடி வந்தது. எந்த வியாதியும் இல்லாமல் எத்தனையோ பேர் இறப்பதில்லையா... அதுபோல் இவனும் இறந்துவிடுவானா...அவனுக்குத் தோன்றிய எண்ணம் உண்மைதான். அதுதான் தூக்கம் இல்லாமல் இப்படி வதைக்கிறது. அவன் தன் எண்ணத்தை முழுமையாக நம்பினான். இப்படி நம்பி நம்பித்தான் வாழ்க்கையில் முன்னேறினான். இப்போது சாவிலும்.  இவனது மரணம் என்பது இப்படித் தூங்காமல் விடிய விடிய விழித்திருந்து நடக்கப் போகிறதோ... தனது மரணம் வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டுமென எப்போதோ விரும்பியவன்தான். அது எப்படிப்பட்ட வித்தியாசம் என்பதை இப்போது உணர்ந்தான். ஒருநாள் தூங்காமல் இருந்தால் எதுவும் விபரீதமாய் நடந்துவிடப் போவதில்லை என்று உள் மனம் நம்பியது. அதே ஆழ்மனத்தில் உருவான விடிவதற்குள் தான் செத்துவிடுவோம் என்ற எண்ணம்தான் இப்படிப் பாடாய்படுத்துகிறது என்பதையும் அறிந்தான். இப்படி இருப்பது நோயா, மூளையில் நிகழும் ரசவாதமா என கூகுளில் தேடலாமா என்று யோசித்தான். மூன்று மணிக்கு மேல் எதற்கு தேவையில்லாமல் நெட்டை ஆன் செய்ய வேண்டும் என வேண்டாமென்று தீர்மானித்தான். மணி மூன்றுதானா என்பதை உறுதி செய்துகொள்ள கடிகாரத்தைப் பார்த்தான். 3: 51 என்று நியான் பச்சை ஒளிர்ந்தது. இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடுமோ... வாக்கிங் கிளம்பிப் போகலாமா என்று நினைத்தான். வீட்டுக்குள்ளே இருப்பதனால் இப்படியெல்லாம் மோசமான எண்ணம் வந்து தூங்காமல் படுத்துகிறதோ என்று யோசித்தவன் அப்படியே சோபாவில் சாய்ந்தான். 

தலையை வலிப்பது போல் இருக்க அடிவயிறு கனத்திருந்தது. எரிந்துகொண்டிருந்த லைட்டை அணைத்து விடலாமென எழுந்தவன் டாய்லெட் சென்று சிறுநீர் கழித்து வந்தான். பசித்தது. ஃப்ரிட்ஜைத் திறந்து பார்த்தான். ப்ரெட்டும்  ஜாமும் இருந்தது. எடுத்து ஒரு ப்ளேட்டில் வைத்துக்கொண்டு  டைனிங் டேபிளில் அமர்ந்தான். இப்படி யாராவது விடியவிடிய தூங்காமல் விழித்திருந்து 4 மணிக்கு ப்ரெட் சாப்பிடுவார்களா...ப்ரெட்டை பிட்டு ஜாமில் தோய்த்து வாயில் திணித்தவனின் யோசனை அப்படியே ஒரு நொடி நின்றது. ஒருவேளை திடீரென மரணிப்பவர்களுக்கு இப்படித்தான் சம்பந்தமில்லாமல் பசிக்குமா? மூளையைப் பிறாண்டிய கேள்விகளுடன் சாப்பிட்டு முடித்தான். உடலில் புத்துணர்ச்சி கூடியது போல் இருந்தது. வாஷ் பேசின் சென்று கை கழுவியவன் டவலில் கை துடைத்தபடி ஜன்னல் கண்ணாடி பார்த்து புருவங்கள் சுருக்கினான். சாம்பல் நிறத்தில் இருந்தது ஜன்னல். லேசாக நீர் படிந்திருந்தது. ஒரு நீரின் ஆரம்பம் கண்ணாடி மேலிருந்து வழிந்ததைக் கவனித்தான். விடிந்தே விட்டதா... வாக்கிங் போகலாம் என ஆவல் எழுந்ததை ஆச்சர்யமாய் கவனித்தவன் தூங்காமல் வாக்கிங் போனால் எதுவும் ஆகிவிடாதாவென கேள்வி தொக்கி நிற்க வேண்டாமெனத் தீர்மானித்தான். போகிற உயிர் இந்த வீட்டிலேயே போகட்டும். ஆமாம் அப்படியே இப்போது இறந்துவிட்டாலும் மற்றவர்களுக்கு எப்படி தெரியப்படுத்துவது? இதென்ன மடத்தனமான யோசனையாய் உள்ளது. தலையின் பின்புறம் தட்டிக்கொண்டான். எல்லோரும் தாங்கள் இறந்ததைத் தாங்களேவா தெரியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பெரும் குழப்பமாய் இருந்தது அவனுக்கு. ஒன்று மட்டும் முடிவெடுத்தான். கதவைத் திறந்துவைத்துவிட்டு இறந்துபோய் விடலாம். அனாவசியமாய் ஏன் கதவை உடைத்துக்கொண்டு மற்றவர்கள் உள்ளே வர வேண்டும். பிணவாடை வெளியே தெரிந்து யாராவது வந்து கதவை உடைக்க வேண்டியதில்லை. அந்தச் சிரமத்தை ஏன் அவர்களுக்குத் தர வேண்டும் என்று வாய்விட்டு மெதுவாய் முனகினான். உடல், மன அளவில் மிகத் தளர்ந்திருந்தான். சிறிது நேரத்துக்கு முன்பிருந்த உற்சாகம் எங்கே என ஆச்சர்யப்பட்டான். எழுந்தான். லேசாகத் தள்ளாடியவன் கதவைத் திறப்பதற்காக அதன் உட்புற லாக்கில் கை வைத்தான். கதவு திறந்தே இருந்தது.




No comments:

Post a Comment