Tuesday 9 May 2023

அஷ்டாவதானிக்கு வாழ்த்துகள்

டி. ராஜேந்தர்- பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழ்த் திரை உலகின் அஷ்டாவதானி என்ற வார்த்தைக்கு மிகப் பொருத்தமானவர் டி. ராஜேந்தர். மே 9 ம் தேதி அவரின் 68 வது பிறந்த தினம். அவரின் முதல் படமான ஒருதலை ராகம் வெளியாகி 43 வருடங்கள் ஆகிவிட்டன. தேசிங்கு ராஜ உடையாருக்கும் ராஜலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்த டி. ராஜேந்தர் தமிழ் சினிமா உலகில் தனித்துவமான பெயர் பெற்றவர். நிறைய புதுமைகள் நிகழ்த்தியவர். கதை திரைக்கதை வசனம் பாடல்கள் ஒளிப்பதிவு இசை இயக்கம் தயாரிப்பு கூடுதலாக நடிப்பு என்று சகலவிதங்களிலும் வென்றவர். கமல் ரஜினி போன்ற ஜாம்பவான்களுக்கே வசூலில் டஃப் கொடுத்தவர். பல திரைப்படங்கள் ஐம்பது நாட்கள் தொட தயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அநாயாசமாய் தனது படங்களை வெள்ளிவிழா சினிமாக்களாகத் தந்தவர். குறிப்பாக பெண்கள் திரையரங்குகளுக்குப் பெரும் அலையாய் வந்தது இவரின் படங்களுக்குதான் எனலாம். அவரின் முதல் படம் என சொல்லப்படும் ஒரு தலை ராகம் படத்தில் இசையும் பாடல்களும்தான் அவரின் பங்கு என்பதே பெரும்பாலோருக்குத் தெரிந்தது. மூலக்கதை வசனம் என்று டைட்டில் போடும் இடத்தில் இடம் பெரும் ராஜேந்திரனும் இதே டி. ராஜேந்தர்தான். கதைக்களம் டி. ஆர் பிறந்த மாயவரம் என்பதும் படம் நகரும் விதம் முழுக்க டி. ஆரின் ஸ்டைல் என்பதும் இயக்கமே இவர்தானோ என்று சந்தேகிக்கத் தோன்றும். ஒரு தலை ராகம் படத்தைப் பொறுத்தவரைக்கும் இயக்கத்தில் பெரும் பஞ்சாயத்தே நடந்தது. அதை விடுத்து நாம் படம் குறித்துப் பேசுவோம். எவ்வித ஃப்ளாஷ்பேக் உத்திகளிலும் இறங்காமல் நேரடியாக முதல் காட்சியிலிருந்து கல்லூரி காதல் என்று தொடங்கிவிடும் சினிமா. மருந்துக்குக் கூட தாவணியோ மாடர்ன் உடைகளோ அணியாத முழுக்க புடவை மட்டும் அணிந்து வரும் மாணவிகள் நிறைந்த கல்லூரி. காலேஜ் கண்ணகி சுபத்ரா, காலேஜ் மைனர் ரவீந்தர், காலேஜ் ஹீரோ சங்கர் என தெளிவாய் தொடங்கும் படத்தின் வசனங்களில் ராஜேந்தரின் பங்கு நீக்கமற நிறைந்திருக்கும். ‘இந்த இதயம் இறுகிய பாறை. சிலை செய்ய நினைச்சா உளிதான் உடையும்', ‘சும்மாதான்ங்கிற வார்த்தைக்கு எவ்ளோ அர்த்தம் பாத்தீங்களா' என்பது இரு சோறு பதம். கல்லூரிக் கடைசி நாளில் சந்திரசேகர் சொல்லும் கதையிலும் டி. ஆர் டச். இப்படி ஒரு காதல் இருக்குமா இப்படி ஒரு ஊடல் இருக்குமா என எண்ணும்படி வருகிறது இடைவேளை. படத்தின் நாயகன் சங்கர். முதல் பாதியில் வார்த்தைகளுக்கு வலிக்காமல் ஒரு நடிப்பை தருபவர் இரண்டாம் பாதியில் நிகழும் ட்ரான்ஸ்பர்மேசனின் உடல் மொழியில் அட சொல்ல வைப்பார். பளிச்சென்ற கண்களுடன் க்ளீன் ஷேவ், இன்ஷர்ட், பெல்ட், மைனர் செயின் என்று பணக்கார இளைஞனாய் காட்சி தருபவர் இரண்டாம் பாதியில் அடர் தாடி, தளர் நடை, எண்ணெய் வழியும் முகம், துயர் படிந்த கண்கள் என மாறுவது ஆச்சரியம். படத்தின் காதல் தாண்டி பார்வையாளனைக் கண் கலங்க வைக்கும் காட்சி சந்திரசேகருக்கும் சங்கருக்கும் இடையிலான நட்பு. கல்லூரிக் கடைசி நாளில் சந்திரசேகர் பேசும் வசனமான காட்டுக்குப் போறப்பவும் கூட வருவான் என் நண்பன் என்பது போலவே க்ளைமாக்ஸ் அமைந்திருக்கும். காதலை விட நட்பின் அடர்த்தி பிரமாதமாய் வெளிப்பட்டிருக்கும் இப்படத்தில். நாயகி ரூபா மேல் ஆடியன்ஸுக்கே கோபம் வருவது போல் சில காட்சிகள் இருந்தாலும் அதற்கான நியாயத்தை குடும்பச் சூழல் வழி காட்டியிருப்பார். ஒரு தலையாய் காதல் என்றில்லாமல் இருவருக்குள்ளும் காதல் இருந்தாலும் நாயகியின் மெளனமே காதலின் தோல்விக்கு காரணமாய் சொல்லப்பட்டிருக்கும் கதையில் நாயகனின் மரணத்துக்கு லிவர் ஜான்டிஸ் மட்டும் காரணமில்லையே. அந்த கிளைமாக்ஸ் நிஜமான அதிர்ச்சி தரும் ஒன்று. ஒருவேளை காலம் பல கடந்தும் இத்திரைப்படம் காவியமாய் மாறியதற்கு கடைசி நேர ட்ராக் மாறுதல்தான் காரணமோ. நினைவில் நீங்காத திரைப்படம் தந்த டி. ராஜேந்தருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment