Tuesday 2 May 2023

வாலின் நிழல் முன்னோட்டம்

துறவியின் கனவுக்குள் மழை பெய்து கொண்டே இருந்தது. தன் நெற்றிக்கு மேலே நெருங்கி வந்துவிட்ட வானத்தைத் தொட்டு இரு கைகளால் இழுத்தவர் இமைகளைத் திறந்தார். ஒருக்களித்துப் படுத்திருந்தார். விழித்ததும் தொடையிலும் புட்டத்திலும் எரிச்சலுடன் கூடிய வலி அலை பாய்ந்து கொண்டிருந்ததை உணர்ந்தார். மழையின் சத்தம் அதிகரித்திருந்தது. வானம் இருளிலிருந்து சாம்பல் நிறத்துக்கு மாறியிருந்தது. புரண்டு படுத்து இரு கைகளையும் ஈர நிலத்தில் ஊன்றி எழுந்தார். தன் நிர்வாணம் கண்ணுக்குத் தெரிந்ததும் விழி பதறி மறைப்பதற்காக துணி ஏதும் கிடைக்குமாவென சுற்றும் முற்றும் பார்த்தார். பார்த்த இடங்களிலெல்லாம் பிணங்கள்... பிணங்கள்... பிணங்கள். பெரும்பாலும் நிர்வாண உடல்கள். ஆண் பிணங்கள் புட்டம் காட்டிக்கொண்டும் மல்லாந்து குறியினைக் காட்டிக்கொண்டும் கிடந்தன. துறவியின் முதுகில் ஒருவித நடுக்கம் உருவாகி தடதடக்கத் தொடங்கியிருந்தது. பாவாடை ரவிக்கையுடன் மட்டும் ஒதுங்கியிருந்த ஒரு பேரிளம் பெண்ணின் சடலத்தை நோக்கிச் சென்றார். பிணத்தின் இடுப்பில் கை வைத்துத் தேடி பாவாடை முடிச்சை நெகிழ்த்தினார். கண்களை இறுக்க மூடிக்கொண்டு பாவாடையை அவிழ்த்தார்; உருவினார். துணி விலகியதும் தெரிந்த தொடைப்பகுதி முழுவதும் சேற்றுக்கரைசல் கறுப்பாய் அப்பியிருந்தது. மழை ஆவேசமாய் அதன் மேல் விழுந்து கழுவத் தொடங்கியது. தன் இடுப்பைச் சுற்றி பாவாடையை இறுகக் கட்டினார். நிர்வாணம் மறைந்ததும் நடுக்கம் நின்றது. இரண்டு புறமும் நீளமான கடல் கரை மட்டும் தெரிந்தது. ஐம்பதடி தூரத்தில் சீற்றம் குறைந்த அலைகள் கடலில் மிதந்து கொண்டிருந்த குப்பைகளை கரையில் தள்ளிக் கொண்டிருந்தன. பிரதேசமெங்கும் கறுப்பு நிற மண்ணும் அழுகல் வீச்சமும் மிதந்து கொண்டிருந்தன. மழையின் ஊடே செவிகளைக் கூர்மையாக்கினார் துறவி. இடதுபுறமாக மனிதர்களின் அலறல்கள் கேட்டன. திரும்பி நடக்கத் தொடங்கினார். காலோடு ஒட்டிய ஈரப்பாவாடை நடையைத் தடுமாற வைத்தது. வானம் சாம்பலை உதறி நீல நிறத்தினைக் கொஞ்சமாய் பூசிக்கொள்ளத் தொடங்கியது. மழையும் நிறம் மாறி வெள்ளையாய் பெய்து கொண்டிருந்தது. நேர் பார்வையில் நடந்தவரின் இடதுபுறம் மழையில் நனைந்து கொண்டிருந்தது கடல். வலதுபுறம் அங்கங்கே உடல்கள் ஒதுங்கிக் கிடந்தன. உடைந்து சிதறிய கட்டுமரங்களும் படகுகளும் வேறு ஏதேதோ பெயர் அறியா இரும்புப் பொருள்களும் சேற்றோடு சேர்ந்து கிடந்தன. திடீரென்று துறவியின் கண்களில் அந்த வெள்ளை உருவம் தென்பட்டது. பிணங்களின் நடுவில் தென்பட்ட உடலைப் பார்த்து ஓடினார். வாய் தன்னிச்சையாக அலறியது. ‘‘நிவே...''. நடை ஓட்டமாய் மாறியதில் கால் தடுக்கி விழுந்தார். ரத்தம் வந்து கொண்டிருந்த தொடையிலிருந்து மூளைக்கு ஒரு இனம் புரியாத வலி பரவியது. எழுந்தார். ஒரு கையால் பாவாடையைப் பிடித்துக்கொண்டு வெண்ணிற உடல் நோக்கி ஓடினார். அருகில் செல்லச் செல்ல அது நிவேதிதா இல்லை என்று தெரிந்ததும் நிதானித்தார். சென்று நின்று மூச்சு வாங்கினார். யாரோ ஒரு வெளிநாட்டுப் பெண்மணியின் உடல் மீது மழை வேகமாய் பெய்து கொண்டிருந்தது. கழுத்தை உயர்த்தி வானம் பார்த்து அண்ணாந்து, ‘‘நிவே...'' என்று அலறினார். தான் கடைசியாய் பார்த்துப் பேசிய தொட்டு உணர்ந்த நிவேதிதாவின் முகமும் ஸ்பரிஸமும் குரலும் மட்டுமே துறவியின் மூளைக்குள் உறைந்திருந்தது. கடலில் மிதந்து வந்த உடலொன்றை அலை கரையில் ஒதுக்கியதைப் பார்த்தவர் அதனை நோக்கி ஓடினார். தண்ணீரில் கால் வைத்து உடலைப் புரட்டினார். அவரைப் போன்ற ஒரு துறவி. கழுத்து ருத்ராட்சத்தினை கையால் இறுகப் பிடித்தபடி இறந்து போயிருந்த அம்மணச் சடலம். ‘‘இறைவா...'' துறவியின் உதடுகள் நடுங்கின. இன்னொரு அலை அவரின் கால்களை மோதி பாதத்துக்குக் கீழிருந்த மண்ணை உருவியதும் உடல் பலவீனத்தில் தடுமாறி தண்ணீரில் விழுந்தார். மறு அலை அவரின் கைகளில் எதையோ தள்ளியது. துறவி கையில் எடுத்து உயர்த்திப் பார்த்தார். துருப்பிடித்து இரும்புச் செதில்கள் உதிர்ந்த சூலம். சூலத்தின் மூன்று கூர்மையுமே உடைந்திருந்தாலும் துருப்பிடித்த பகுதி கத்தியை விட அபாயமாய் நீண்டிருந்தது. துறவி சூலத்தை உயர்த்தியதுமே இரண்டாய் முறிந்து பாதி கடலிலேயே விழுந்தது. மூன்று கூர்மை இருந்த பாகம் மட்டும் துறவி கையில் இருந்தது. கையில் பிடித்தபடி கடலையே உற்றுப் பார்த்தவர் திடீரென்று வெறி பிடித்ததுபோல் கடல் நீருக்குள் சூலத்தால் ஓங்கி ஓங்கி குத்தினார். கடல் நீரினைக் கிழித்து கிழித்து கடலுக்குள்ளேயே எறிந்தது ஆயுதம். சட்டென்று எழுந்து சூலத்துடன் மழையைக் கிழித்தபடி ஓடத் தொடங்கினார். களைத்து நின்ற இடத்தில் பிணங்கள் குவியலாய் ஒதுங்கியிருந்தன. ‘‘நிவே...'' என்றார். கண்கள் கலங்கின. மழை தன் வீரியம் குறைத்து மெலிதாய் பெய்யத் தொடங்கியது. பிணங்களின் நடுவில் கால் வைத்து நடந்தவரின் கண்கள் கூர்மையாகின. ‘‘ப்ளீஸ் சேவ் மீ...'' குரல் முணுமுணுப்பாய் கேட்டது அவர் செவிகளில். குனிந்து பிணங்களின் ஊடே பார்த்தபடி நடந்தார். நிவேவின் குரல். அவரின் உதடுகள் நிறுத்தாமல் முணுமுணுக்கத் தொடங்கின. ‘‘நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே.... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே....நிவே நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே....நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே....நிவே நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே... நிவே....'' மந்திரம் போல் உச்சரித்துக் கொண்டிருந்தார். நிலம் நோக்கி முகம் புதைத்திருந்த ஒரு உடலிலிருந்துதான் அந்த வேண்டுதல் வந்தது. கையில் வைத்திருந்த சூலத்தால் உடல்களைப் புரட்டிக்கொண்டே வந்தார். ‘‘சேவ் மீ ப்ளீஸ்... காப்பாத்துங்க... தண்ணி...'' மிக அருகில் கேட்டது. குனிந்து அந்த உருவத்தைப் புரட்டினார். மண்ணில் புதைந்திருந்த முகம் திரும்பியதும் அந்த முகத்தைக் கவ்விக் கொண்டிருந்த நண்டு அளவிலான விஷக் கடல்பூச்சி ஒன்று விலகி ஓடியது. பாதி முகம் ரத்தத்தில் ஊறிப் போயிருந்தது. மல்லாந்து வானம் பார்த்ததுமே அவசரமாக அதன் மீது மழை விழுந்து கழுவத் தொடங்கியது. நிவேதிதா இல்லை. யாரோ ஒரு பெண்... நிவேதிதா போலவே. தொண்டை ஒருமுறை அசைந்தது. ‘‘ப்ளீஸ் சேவ் மீ...'' உதடுகள் துடித்தன. துறவியின் கண்களில் சிறு நடுக்கம். புருவங்கள் அசைய பெரிதாய் மூச்சு விட்டபடி கையிலிருந்த துரு பிடித்த சூலத்தை வேகமாய் அந்த தொண்டைக்குழியில் இறக்கினார். சூலம் புதைந்த இடத்தில் ரத்தம் வெளியேறி மழைநீரில் கலந்து ஓடத் தொடங்கியது. சூலத்தை உருவி எடுத்தவர் உடல் பதற பதற கடல் ஓரமாவே ஓடினார். கட்டியிருந்த பாவாடை அவிழ்ந்து விழுந்தது. நீண்ட தலைமுடி முகத்திலும் முதுகிலும் படிந்திருக்க சூலத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட நிர்வாணமாக ஓடியவர் வானம் பார்த்துக் கத்தினார். ‘‘நிவே... இந்த மண்ணுல இனிமே மனுசங்க வாழ மாட்டாங்க...பேய்களுக்கும் பிசாசுகளுக்கும் பைத்தியங்களுக்கும்தான் இனிமே இது பூமி. எந்த ஜீவராசியும் இந்த மண்ணுல நிலையான மனசோட வாழ முடியாது... இதெல்லாம் நீர் முனியோட முந்தைய ஜென்ம சாபம்...'' தொண்டை நரம்புகள் புடைக்க கத்தியவர் சூலத்தைக் காற்றில் உயர்த்தி ஆவேசமாய் தன் அடிவயிற்றில் இறக்கினார். வயிற்றைப் பொத்துக்கொண்டு முதுகுப் பக்கமாய் வெளியேறிய சூலத்தின் முனையில் ரத்தம் கொப்பளிக்க குடல்கள் வெளிவந்தன. தடுமாறி அப்படியே குப்புற விழுந்தவர் ரத்தமாய் வாயில் எடுத்தார். இரு கைகளையும் விரித்தபடி மணலில் படுத்தார். முதுகுப்புறமாய் வெளிவந்து வானம் பார்த்திருந்த சூலத்தின் ரத்தத்தினை தனுஷ்கோடியின் மழை கண்ணீருடன் கழுவத் தொடங்கியது.

No comments:

Post a Comment