Wednesday 3 May 2023

ஊமைச்சாமி

திடீரென்று கோவில் மூடப்படுவதை வாசலில் அமர்ந்தபடி உயர்த்திய புருவங்களுடன் பார்த்துக்கொண்டிருந்தான் செல்வம். உச்சி வெயில் அவன் முகத்தில் மெளனமாய் தன்னை வரைந்து கொண்டிருந்தது. கதவை மூடிவிட்டு வெளிவந்து கொஞ்சம் தள்ளி நின்று தன் இரு கைகளையும் உயர்த்தி கோபுரம் பார்த்துக் கும்பிட்டுத் திரும்பிய வரதனிடம், ‘‘என்னாச்சு சாமி திடீர்னு கோயிலை மூடிட்டீங்க?'' என்றான். பழக்க தோஷத்தில் இரு கைகளும் குவிந்து வரதனை நோக்கி ஏந்தியபடி இருந்தன. பதில் சொல்லவேண்டுமென்று அவசியமில்லைதான். ஆனால் வரதனின் மனம் செல்வத்தின் வயிற்றைக் குறித்து யோசித்தது. ‘‘ஒரு துஷ்டி நடந்துடுத்து... ரெண்டு நாள் நடை திறக்கப்படாது.'' செல்வத்துக்குப் புரியவில்லை. மேற்கொண்டு என்ன கேட்பதென்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே சட்டென்று விலகி நகர்ந்தார் பதில் சொல்லி முடித்த பெருமூச்சுடன். செல்வத்தின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த பூபதியிடம்... ‘‘என்னமோ நடந்துருக்கு. என்னன்னு தெரில...ரெண்டு நாளைக்கி பெருமாள பாக்கப் போக வேண்டிதான்.'' பூபதியின் கைகள் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தன. பூபதிக்கு தினம் இரவு ஒரு குவாட்டர் தேவைப்படும். யாசகமாய் விழுந்த காசுகளைக் கொண்டுபோய் கொடுத்து குவாட்டர் வாங்கிவந்து தேரடி இருளில் நின்றவாறே குடித்து பாட்டிலை சாக்கடையில் வீசிவிட்டு வருவான். டாஸ்மாக்கிலும் அவன் தரும் சில்லறைகளை எண்ணிப் பார்க்காமலே பாட்டிலை எடுத்து நீட்டிவிடுவார்கள். இன்றைய இரவுக்கான மதுவுக்குப் போதிய காசு இன்னும் சேர்ந்தபாடில்லை. அதற்குள் கோவிலை மூடிவிட்டார்கள். தன் எதிரில் அமர்ந்திருந்தவனிடம் சத்தமாகச் சொன்னான் செல்வம். ‘‘என்னா ஊமச்சாமி... ரெண்டு நாளைக்கி தொறக்க மாட்டாங்க... வர்றீங்களா பக்கத்துல பெருமா கோயிலுக்கு... அங்க உள்ளவங்ககிட்ட சொல்லிக்கலாம் ரெண்டு நாளைக்கிதான்னு...'' செல்வத்தால் ஊமைச்சாமி என்று அழைக்கப்பட்டவன், தான் வரவில்லை என்பதுபோல் தலையை இடதும் வலதுமாய் ஆட்டினான். கண்களில் தெரிந்த இறுக்கமான அமைதியில் லேசாக ஈரம் படர்ந்திருந்ததை செல்வம் கவனிக்கவில்லை. எழுந்த ஊமைச்சாமி தனது அலுமினியக் குவளையிலிருந்த அன்றைய வசூலை அப்படியே எடுத்துவந்து பூபதியிடம் தந்தான். அலுமினியத் தட்டில் அதை வாங்கிக்கொண்ட பூபதி, ‘‘நீங்க வேணாம்னு சொன்னாலும் கேக்க மாட்டீங்க... ரொம்ப சந்தோசம் சாமி. நீங்களும் வந்துருங்களேன் எங்க கூட'' என்றான். சந்தோசத்தில் கை விரல்கள் வேகமாய் நடுங்கின. தட்டில் இருந்த காசுகளும் சலசலத்தன. தன் பழைய இடத்தில் வந்து அமராமல் கப்பல் பிள்ளையார் என்று எழுதப்பட்டு இரும்புக் கம்பிகள் கொண்டு அடைத்து அதன் மீது சில்வர் முலாம் பூசி உள்ளே பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு இருந்த சிறு கோவிலின் படிக்கட்டில் அமர்ந்தவன் பெரிய கோவிலின் பக்கச் சுவரை ஒட்டியபடி திண்ணை வைத்து மரச்சட்டங்கள் கொண்டு அடைத்திருந்த அந்த வீட்டையே பார்த்தபடி இருந்தான். () () () முரளிதரனுக்குத் தன் அம்மா என்றால் அவ்வளவு பிரியம். வீட்டில் எப்போதும் அமைதியாய்த்தான் இருப்பாள் அம்மா. அப்பாவின் ஆக்கிரமிப்பு அந்த வீட்டின் ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவியிருந்ததைப் போலவே அம்மாவின் மெளனமும் வீடு முழுவதும் நிரம்பியிருக்கும். அம்மா எப்போது பேசியிருப்பாள்? மற்றவர்களிடம் மனம் திறந்து பேசக் கூடிய அளவுக்கு அவளுக்கு சந்தோசப் பகிர்தலோ துயர நினைவுகளோ இருந்ததே இல்லையா என்றொரு கேள்வி முரளியின் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது. அம்மா பிரமாதமான அழகி. அழகில்லாமல் ஒரு நொடிப்பொழுதும் தன் அம்மாவைக் கண்டதில்லை முரளி. ஆனால் முகத்தில் தேவையற்ற பவுடர் பூச்சோ கண்மை தீற்றலோ இருக்காது. அவ்வளவு ஏன்... பீரோ லாக்கரில் அவ்வளவு தங்க நகைகள் இருந்தும் ஒரு குண்டுமணி தங்கம் அவளின் உடம்பை அலங்கரித்திருக்காது. வாசல் நிறைக்க பெரிதாய் கோலமிடுவாள். சிக்குக் கோலம் போடும்போதெல்லாம் புள்ளிகளுக்கிடையில் வளைந்து நெளிந்து விரையும் அம்மாவின் கோடுகளில் எந்தப் பதற்றமும் சிக்கலும் இருக்காது. மதுசூதனனுக்கும் தெரியும் தன் மனைவி எத்தனை பெரிய அழகியென்று; ஒருபோதும் ஒத்துக்கொள்ள முடியாத ஆண் மன அகங்காரம்தான் அவனுக்குள் நிறைந்திருந்தது. அப்பாவின் திமிரான ஆதிக்கத்துக்கு முன்னால் அம்மாவின் ஒடுங்கிய அமைதி முரளிக்குக் கொஞ்சம் புதிராயிருந்தது. அம்மாவுடன் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் கோவில் நிர்வாகத்தில் ஒருவரும் கணக்குப் பிள்ளையுமான மதுசூதனனின் மனைவி என்ற வகையில் தன் அம்மாவுக்குக் கிடைக்கும் சிறப்பு தரிசனமும் அபிஷேக ஆராதனையும் அம்மா விரும்பி ஏற்றுக்கொண்ட மாதிரி முரளிக்குத் தோன்றாது. கை கூப்பி அம்மனைத் தரிசிக்கும் அம்மாவின் முகத்தில் ஒளிரும் வெளிச்சத்தையே பார்த்துக்கொண்டிருப்பான் முரளி. கூட்டம் இல்லாத வெகு அரிதான சமயங்களில் முரளியைத் தன் அருகில் அமரவைத்துக்கொண்டு மெலிதான குரலில், ‘யாது மாகி நின்றாய்; காளி எங்கும் நீ நிறைந்தாய்...' பாடுவது போலவே குரல் முணுமுணுத்து ஒலிக்கும். கோவில் கருவறை பூசாரிகளும் கூட கனிவுடன் தன் அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை முரளி கவனிப்பான். மூடிய கண்களைத் திறவாமலே முழுவதும் பாடி முடிப்பாள். ஒரு கை முரளியின் உள்ளங்கையைப் பொத்தியபடி இருக்கும். அம்மா ஏதோ அவஸ்தையில் இருக்கிறாள் என்பது மட்டும் வளர்ந்துவந்த முரளிக்குத் தெரிந்திருந்தது. தாலி கட்டிய கணவன்தான் கடைசிவரை கூட வரப்போகிறவன் என்று சொல்லித்தான் மாலதியை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். இருபது வயது மாலதிக்குத் தாலி கட்டிய மதுசூதனன் நல்லவன்; அழகானவன், மாலதிக்கும் அவனுக்கும் ஐந்து வயதுதான் வித்தியாசம். ஆனால் சட்டெனப் பார்க்க மாலதிக்கு சித்தப்பா என்று சொல்லிவிடலாம் போல் ஒரு முதிர்ச்சி இருக்கும். அதுதான் அவனுக்கான பிரச்சனை என்பதை வந்த சில நாட்களிலேயே புரிந்துகொண்டாள் மாலதி. கணவனும் மனைவியுமாய் வெளியே செல்வதை முழுக்கவே தவிர்த்தான் மதுசூதனன். தன்னை அழகாகவும் பலமானவனாகவும் வெளிக்காட்டிக்கொள்ள முனைப்பாகத் திரிந்த மதுசூதனனுக்குத் தன் மனைவி மாலதியின் அழகும் திறமையும் கண்ணுக்குத் தெரியாமலே போயிற்று. திண்ணையில் நடக்கும் பேச்சு அரட்டைகளில் கூட தன்னைச் சார்ந்துதான் தன் குடும்பம் என்ற ஆண் ஆதிக்கமே மதுசூதனனின் குரலில் ஒலிக்கும். எவருடனும் பேசாமல் தன்னையே வீட்டுக்குள் சுருக்கிக்கொண்டு வாழ்ந்த மாலதிக்கு ஒரே ஆறுதல் முரளிதரனும் அந்தப் பெரிய அம்மன் கோவிலும்தான். ‘‘ஏம் மதுசூதனா... அம்மா எவ்ளோ அருமையா பாடுறாங்க தெரியுமா... நம்ம சீனுவும் வைத்தியும் சிலாகிச்சு சொன்னதாலதான் அன்னிக்கி நானும் போய் நின்னு கேட்டேன். கண்ண மூடி ஒக்காந்து அவங்க தனி உலகத்துல இருந்தபடி ரொம்பச் சின்னக் குரல்ல பாடுறாங்க. காதுக்குள்ள அம்பாள் குரல் கேட்கிற மாதிரி இருந்தது தெரியுமா...'' திண்ணைக் கச்சேரியில் ஒருநாள் கோவிலில் வேலை பார்க்கும் கிருஷ்ணன், மதுசூதனனிடம் சொன்னதும் திரும்பி வீட்டின் உள்ளே பார்த்த மதுசூதனன், ‘‘இந்த ஒலகத்துல பொம்மனாட்டிக்குன்னே தனியா ஒரு இடமிருக்கு; வேலையிருக்கு. அத தாண்டி அவங்கள்லாம் எங்கையும் போகக்கூடாது... அவங்க போனாங்கன்னா பின்ன நாம எதுக்கு ஆம்பளையா மீசைய முறுக்கிட்டுத் திரியணும்...'' ‘‘அதுக்கில்லப்பா... அவங்க திறமையெல்லாம் வீணாப்போகுதேன்னு ஒரு ஆதங்கத்துல சொன்னேன்...'' இவனிடம் பேசிப் புண்ணியமில்லை என்பதுபோல் கிருஷ்ணனின் குரல் இழுத்து தனக்குள் முடிச்சிட்டுக் கொண்டது. ‘‘அவங்க திறமைய சமையல் கட்டுலையும் படுக்கை அறையிலையும் காட்டுனா போதாதா என்ன?'' மதுசூதனனின் குரலில் உலகளவு கேலியும் அலட்சியமும் ஒலித்தது. கிருஷ்ணன் சற்றே திடுக்கிட்டு நிலைப்படியைப் பார்த்தார். முரளி நின்றுகொண்டிருந்தான். ‘‘தம்பி நிக்கிறாரு'' என்றார் தயங்கியபடி. ‘‘நிக்கட்டுமே... அவனும் வளர்ற புள்ளதானே...நல்லது கெட்டது தெரிஞ்சிக்கட்டும்... அப்பதான் பொம்பள முந்தானைய புடிச்சிகிட்டு பின்னால ஓடமாட்டான் நாளைக்கி... கிச்சா ஒனக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ... ஒடம்பு சொகத்தையும் பொம்மனாட்டிக்கி அளவா குடுத்தாதான் குடும்பத்துல ஆம்படையான சார்ந்து நிப்பா...அள்ளி குடுத்தோம்னு வச்சிக்க ருசி கண்ட பூனையாயிடும்... சுகம் குடுக்குறதுல தான் பெரிய இவனு தலைகனம் ஏறிடும்... தெரிஞ்சிக்க...'' ‘‘ஊருக்கு ஒரு நாக்குன்னா மதுசூதனா ஒனக்கு தனி நாக்குப்பா...புதுசா பேசுவ எதையும்...'' ‘‘நான் புதுசா சொல்லல... நம்ம பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த வாழ்க்கைய சொல்றேன்...'' கொஞ்சம் குரல் உயர்த்திதான் பேசினான் மதுசூதனன். வீட்டுக்குள்ளிருந்த மாலதி காதிலும் விழுந்தது. முகம் முழுவதும் பூசிக்கொண்ட மெளனத்துடன் சலனமற்று அமர்ந்திருந்தாள். பீரோவுக்குள்ளிருந்த தங்க நகைகளின் நிச்சலனம் அவளுக்குள் உறைந்திருந்தது. மாலதிக்கென்று மொத்தமே நான்கைந்து புடைவைகள்தான். அவையும் கொடிகளில் காய்ந்துகொண்டிருக்குமே தவிர பீரோவில் அடுக்கிவைக்கப்படும் அளவுக்குக் கிடையாது. அதற்கு நேர்மாறாக பீரோ முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதம்விதமான மதுசூதனனின் உடைகள். முரளியை ஈன்ற பிரசவம் மிகச் சிக்கலானது. மாலதி உடல் ரீதியாய் உருக்குலைந்து போனாள். ஆனால் பிரசவம் முடிந்த மறுநாள் மாலதியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்த மதுசூதனன் இரண்டு விதமான வாசனையில் மிதந்தான். வெளிநாட்டு பாடி ஸ்ப்ரேக்களும் சென்ட் பாட்டில்களும் அந்த இரும்பு பீரோவின் ஒரு தட்டில் நிறைந்திருக்கும். அதுபோலவே மதுசூதனின் இளமையைத் தக்கவைக்கும் பாதாம் பிஸ்தா அக்ரூட்கள் பீரோவின் ஒரு பகுதியில் தங்கள் இடத்தை அடைத்துக்கொண்டு பவுசைக் காட்டிக் கொண்டிருக்கும். பிரசவம் முடிந்து வீட்டுக்கு வந்த மாலதி ரத்த சோகையில் வெளுத்திருந்தாள். அவளைப் பற்றிய துளி அக்கறையின்றி மதுசூதனன் தன் வழக்கமான ஒப்பனைகளில் மிளிர்ந்தான். தான் நன்றாக இருந்தால் தன் குடும்பம் நன்றாக இருக்குமென்று யாரோ அவனுக்குத் தப்பாகச் சொல்லியிருந்தார்கள். முரளியின் பதினைந்தாவது வயதில் மாலதி வீட்டைவிட்டு ஓடிப்போனாள். பாலுவுக்கும் மாலதிக்கும் ஒரே வயதுதான். ஒருநாள் கோவிலில் கண்மூடி பாடிக்கொண்டிருந்த மாலதி தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதுபோல் உணர்ந்து பாடுவதை நிறுத்தாமலே கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் கரம் பற்றியிருந்த முரளியின் கண்களும் பூசாரியின் கண்களும் மூடியபடி இருக்க தன் எதிரில் நின்றபடி தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பாலுவைக் கண்டாள். பாலுவின் இரு கைகளும் அம்மனைக் கும்பிடுவதுபோல் மாலதியைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தன. மாலதி பாடுவதை நிறுத்தவில்லை. அடிக்கடி மாலதி பாடினாள். தினமும் பாலு கோவிலுக்கு வந்தான். கோவில் கணக்கை முடித்துவிட்டு மதுசூதனன் வீட்டுக்கு வந்தபோது மாலதி இல்லை. வெறுமை பளிச்சென்று தெரிந்தது. உள்ளுக்குள் ஏதோ நெருடலாய் உணர்ந்து பீரோவைப் போய் திறக்க பூட்டியிருந்தது. சாவி இல்லை. கொஞ்சம்கூட யோசிக்கவில்லை மதுசூதனன். சுத்தியலைக் கொண்டு கதவின் பிடியில் இறக்கினான். நகைகள் எதுவும் இல்லை. வீட்டுக்கு முரளி வரும்முன்பே சில கணக்குகள் போட்டான் மதுசூதனன். மாலதியின் தம்பி மாரிமுத்து இங்கிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தள்ளி பொய்யூரில் வசிக்கிறான். மாமா மேல் மரியாதையும் பிரியமும் உள்ளவன். ஃபைனான்ஸ் தொழிலில் வட்டிக்கு விட்டு சம்பாரிக்கும் மாரிமுத்துக்கு ஒருமுறை மதுசூதனனும் பண விஷயமாய் உதவி புரிந்திருக்கிறான். மாரிமுத்துக்கு போன் செய்தான் மதுசூதனன். அரை மணி நேரத்தில் வீட்டு வாசலில் பைக்கை ஸ்டாண்ட் போட்டான் மாரிமுத்து. வாசலில் செருப்பை விசிறிவிட்டவாறே, ‘‘என்ன மாமா என்னாச்சு... ஒடனே வரச் சொன்னீங்க...இன்னும் வசூலே முடியல... யக்கா ஒரு சொம்பு தண்ணி குடு...'' என்றான் கொஞ்சம் சத்தமாகவே. நாற்காலியில் அமரச்சொன்ன மதுசூதனன், ‘‘தண்ணி குடுக்க உன் அக்கா இங்க இல்ல... வீட்ட விட்டு ஓடிட்டா...'' என்றான் அமைதியாய். முகத்தைச் சுருக்கிய மாரிமுத்து, பேன்ட் பாக்கெட்டிலிருந்து கர்ச்சீப் எடுத்து முகத்தைத் துடைத்தவாறே தன் மாமாவை உற்றுப்பார்த்தான். இரு கண்களையும் மூடித் திறந்து தலையை அசைத்தான் மதுசூதனன். ‘‘ரொம்ப நாளாவே டவுட்டாதான் இருந்துது மாப்ள... நான்தான் அலட்சியமா இருந்துட்டேன். உன் மருமவன் டியூசன் முடிஞ்சி வர்ற நேரம்தான். நைஸா பேச்சுக்குடுத்து விசாரி. ஏதாவது தெரியும். நான்லாம் கொஞ்சம் மெரட்டிடுவேன்...'' முரளியிடம் கேட்டதில் எந்தத் தகவலும் கிடைக்காமல் போனது. முரளி தலையில் கை வைத்துக்கொண்டு வீட்டின் மூலையில் அமர்ந்தான். அடிபட்ட புலியாய் வீட்டினுள்ளே அலைந்து கொண்டிருந்த மதுசூதனனையே பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். பசித்தது. வீட்டில் எதுவுமில்லை. தண்ணீர் குடித்துவிட்டு வந்து படுத்துக்கொண்டான். அம்மா ஞாபகம் வந்தது. ‘போதும் இங்கு மாந்தர் வாழும் - பொய்ம்மை வாழ்க்கை யெல்லாம்... ஆதி சக்தி தாயே- என் மீது அருள் புரிந்து காப்பாய்'. முரளியின் காதுக்குள் புரண்டது மாலதியின் வேண்டுதல். அவனின் விரலை இறுகப் பிடித்திருந்த மாலதியின் விரல்கள் இப்போது வேறொரு விரலைப் பற்றிவிட்டதா... இனிமேல் அவ்வளவுதானா அம்மா? போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்து சப் இன்ஸ்பெக்டரைத் தொடர்புகொண்டு பேசினான் மாரிமுத்து. வட்டிக்கு விட்டு சம்பாரிக்கும் வேலையோடு கட்டப் பஞ்சாயத்து வேலைகளும் மாரிமுத்து பார்ப்பதுண்டு. அந்த வகையில் இன்ஸ்பெக்டரும் சப் இன்ஸ்பெக்டரும் பழக்கம். மறுநாள் கோவிலிலிருந்து துப்புக் கிடைத்தது. அம்மனுக்குச் சாத்தப்படும் விசேஷ மாலையைக் கோவிலுக்கு வரும் மாலதியிடம் எப்போதும் கொடுத்து அனுப்புவார்கள். மாலதி வராததால் அன்று இரவு மாலையை வீட்டுக்குக் கொண்டுவந்த கோவிலில் எடுபிடி வேலைகள் பார்க்கும் சிரஞ்சீவி தானாகவே மதுசூதனனிடம் சொன்னான். ‘‘நேத்தே சொல்லணும்னு நெனச்சேன்யா... ரெண்டு நாளைக்கி முன்னாடி நம்ம பூக்கார ஏஜென்டு பன்னீரோட தம்பி பாலுகிட்ட அம்மா பேசிட்டு இருந்தத பாத்தேங்கய்யா. உங்ககிட்ட சொல்லணும்னு தோனிச்சி. அதான்...'' பாலுவைப் பற்றி விசாரித்ததில் சமீபத்தில் விவாகரத்தானவன் என்பது மட்டும் தெரியவந்தது. மற்றபடி அவன் மீது எந்தத் தவறான தகவல்களும் பதியப்படவில்லை. ட்ராவல்ஸ் வைத்து நடத்திக்கொண்டிருக்கும் பாலுவுக்கு திருச்சியில் நிறைய நண்பர்கள் இருப்பதும் தெரியவந்தது. சட்சட்டென்று சங்கிலி இணைப்புகள் விடுபட மாரிமுத்து தனக்கிருந்த செல்வாக்கில் அடுத்த நாளே மாலதியும் பாலுவும் திருச்சியில் தங்கியிருந்த ஒரு வீட்டில் வைத்து இருவரையும் பிடித்தான். புத்தம் புதிதாய் ஒரு தாலி மாலதியின் கழுத்தில் தழையத் தழைய தொங்கிக் கொண்டிருந்தது. கையில் ப்ரேஸ்லெட்டும் கழுத்தில் தங்கச் சங்கிலியுமாய் புது மாப்பிள்ளை பளபளப்பில் இருந்தான் பாலு. மாரிமுத்துவைப் பார்த்ததும் எதுவும் பேசாமல் மாரிமுத்து வந்திருந்த காரிலேயே ஏறி இருவரும் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தார்கள். ஸ்டேசனில் மதுசூதனன் காத்திருந்தான். இன்ஸ்பெக்டரிடம் கட் அண்ட் ரைட்டாகப் பேசியதோடு மட்டுமில்லாமல் எழுதியும் தந்தான் மதுசூதனன், தனக்கும் மாலதிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென்று. நிமிர்ந்து யாரையும் பார்க்கவில்லை. கொண்டுபோன 100 பவுன் நகைகளை மட்டும் அப்படியே திருப்பித்தர வேண்டுமென்று கறாராய் சொன்னான். கையில் வைத்திருந்த பேக்கை இன்ஸ்பெக்டரிடம் தந்தாள் மாலதி. வீட்டுக்கு வந்து பேக்கை பீரோவில் வைத்துப் பூட்டியவன் நடுக்கூடத்தில் மாட்டியிருந்த அவனும் மாலதியும் இருந்த போட்டோவைக் கழற்றி எடுத்துக் கொல்லைப்புற கிணற்றின் உள்ளே தூக்கிப்போட்டான். உபயோகமில்லாத அந்தக் கிணற்றின் ஆழத்தில் கண்ணாடி நொறுங்கும் சத்தம் கேட்டது. அண்டா அண்டாவாகத் தண்ணீரைத் தலையில் ஊற்றிக்கொண்டான். முரளி தன் அப்பாவின் வேகவேகமான மூச்சினையும் வீடெங்கும் ஆக்கிரமித்திருந்த மாலதி இல்லாத அவளின் சுதந்திர மெளனத்தையும் கவனித்தான். வேகமாய் சுற்றிய ஃபேனுக்குக் கீழே நின்றவாறு துண்டால் தலை துவட்டிக்கொண்டே முரளியிடம், ‘‘அம்மாவும் புள்ளையுமா சேர்ந்து அப்பாவுக்கு நல்ல பேர் வாங்கிக் குடுத்துட்டீங்க...'' நிமிர்ந்து பார்த்தான் முரளி. ‘‘ஒனக்குத் தெரியாம இருந்துருக்காது ஒன் அம்மா பண்ணுன காரியம். அந்த ஓடுகாலி முண்டைய தல முழுகிட்டேன்... இனிமே ஒனக்கு அம்மான்னு யாரும் இல்ல... மனசுல வச்சிக்க.'' வாசலில் பைக்கை நிறுத்திய மாரிமுத்து சைடில் மாட்டியிருந்த பையை எடுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான். பையை மதுசூதனனிடம் நீட்டியவன் வாசல்பக்கம் திரும்பியவாறு, ‘‘அப்போ நான் பொறப்படுறேன் மாமா... இன்ஸ்பெக்டருக்கும் சப் இன்ஸ்பெக்டருக்கும் செட்டில் பண்ண வேண்டியத பண்ணிட்டேன். இனிமே பிரச்சனையில்ல'' என்றான். ‘‘டேய் இரு மாப்ள. ரெண்டு பெக் சாப்புட்டுப் போ. அவசரமா போயி என்ன பண்ணப்போறே'' என்றான் மதுசூதனன். பையில் இருந்த மது பாட்டில்களைப் பார்த்தான் முரளி. அன்று நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியேறினான் முரளி. மதுசூதனனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக போதை ஏறிக்கொண்டிருந்தது. தன் முன் வந்து நின்ற முரளியைப் பார்த்தவன், ‘‘ஏன்டா ஒனக்கும் தூக்கம் வரலியா... ச்சும்மா ஓடுனவளையே நெனச்சிட்ருக்காம ஒழுங்கா படிக்கிற வழிய பாரு...போ போய் தூங்கு...'' ‘‘அம்மா எங்கப்பா ஓடுனாங்க... நீங்கதான தொரத்தி வுட்டீங்க...'' பித்தளை டம்ளரின் ச்சில்லிப்பு மதுசூதனனின் உதடுகளைத் தொட்டபடியிருக்க, ‘‘என்னடா ஒளறுறே..?'' மதுவை விழுங்கினான். டேபிளில் ஒரு பேப்பர் மீது கொட்டி வைக்கப்பட்டிருந்த மிக்சரை ஒரு கை அள்ளி வாயில் போட்டு மென்றான். ‘‘அம்மா ஏன் எப்பவும் யார்கிட்டவும் பேசாம அமைதியா இருந்தாங்கன்னு யோசிச்சிருக்கீங்களாப்பா... அவங்க போடுற கோலம், அம்பாள நெனச்சி பாடுற குரல்னு எதையாவது கவனிச்சிருக்கீங்களா... நீங்க நல்லாருந்தா போதும் மத்தவங்க எப்படி போனா என்னங்கிற உங்க சுயநலத்த கவனிக்கவே உங்களுக்கு நேரம் போதலியேப்பா, அப்புறம் எப்படி... நீங்களும் அம்மாவும் பேசியே நான் பாத்ததில்லப்பா... அம்மா ரொம்ப அழகுப்பா அம்பாள் மாதிரி...இனிமே வர மாட்டாங்கள்லப்பா... நீங்க சொல்றதுதான் சரி செய்றதுதான் சரின்னு பேசிப்பேசி சரி எதுன்னே தெரியாம இருந்துட்டீங்க... உங்களுக்கு பீரோ முழுக்க இருக்குற நகைலாம் போதும் வாழ... எனக்கு என் அம்மா வேணும்ப்பா... என்னைப் பத்தி யோசிக்காம போன அம்மாவும் ஒரு சுயநலவாதிதானே... ரொம்ப கசக்குதுப்பா... என் வயசுக்கு இந்தக் கஷ்டம்லாம் அதிகம்ப்பா... நான் எப்டிப்பா வாழப்போறேன்'' கண்கள் கலங்கி கண்ணீர் நழுவியது. அரைகுறை வெளிச்சத்தில் நின்றிருந்த முரளியின் முகம் மதுசூதனனுக்கு போதையின் ஆக்ரமிப்பில் சரியாகத் தெரியவில்லை முரளியின் கண்ணீர் இருளில் தன் ஆறுதலைத் தேடி அலைந்தது. ‘‘யே...அவ ஒரு தப்பான பொம்பள... அவளப்பத்திப் பேசாத... ஒனக்கெல்லாம் தெரியாது. நான் நல்ல புருசனாவும் அப்பாவுமா இப்பவரைக்கும் நடந்துட்டுதான் வரேன். ஏன் ஒனக்கென்ன கொற வச்சேன் சொல்லு... ஒன்ன நல்ல ஸ்கூல்ல சேர்த்து நல்லாதான படிக்க வச்சேன்... அப்புறம் என்னையே எதிர்த்துப் பேசுற...அந்த ஓடுகாலியவே உரிச்சி வச்சி பொறந்துருக்கீல்ல... அப்டித்தான் பேசுவே'' நாக்கு புரள முடியாமல் போதையில் நெளிந்ததில் வார்த்தைகள் நழுவி நழுவி விழுந்தன. ‘‘உங்க கடமைய செஞ்சதுக்கு எதுக்கு பெருமைப்பட்டுக்குறீங்க... நீங்க செய்ற தப்புக்கெல்லாம் உங்க சைடுல ஒரு தப்பான நியாயத்த வச்சிகிட்டு அதுதான் சரின்னு வாழ்றீங்க... உங்கள அப்பான்னு கூப்பிட்டுகிட்டு என்னால இனிமே இங்க இருக்க முடியாது. எனக்கு எதும் வேணாம்... நான் எங்கையாவது போறேன். யாரும் இல்லாம போன வலியை இன்னிக்கி நான் உணர்ற மாதிரி என்னிக்காவது நீங்க உணர்வீங்க. அப்போ யாரும் உங்க பக்கத்துல இருக்க மாட்டாங்க... போறேன்.'' செருப்பு கூட அணியாமல் திண்ணையைக் கடந்து வாசலில் இறங்கி இருளில் கரைந்தவனைக் கையில் பிடித்திருந்த டம்ளரில் ரேகைகள் இறுகப் பார்த்துக்கொண்டிருந்தான் மதுசூதனன். () () () ஒன்பது வருடங்கள் கழித்துத் திரும்பிவந்தான் முரளி அதே அம்மன் கோவிலுக்கு. வாசலில் இருந்த யாசகர்களோடு யாசகனாய் ஒடுங்கினான். இடுப்பில் ஒரு காவி வேட்டி; மார்பை மூடியபடி ஒரு காவி வேட்டி, அவ்வளவுதான் அவன் இருப்பு. உருண்டையான சிவந்த முகத்தில் மண்டியிருந்த அடர் கறுப்பு தாடியும் மீசையும் பால் கண்களில் ஒளிரும் வெளிச்சமும் அவனை முற்றும் துறந்த சித்தன் அளவுக்கு அடையாளம் காட்டின. முரளி அப்படித்தான் இருந்தான். இரு கைகளையும் ஏந்தி பிச்சை கேட்டவனிடம் அருகில் அமர்ந்திருந்த செல்வம்தான் ஒரு அலுமினிய குவளையைத் தந்தான். கோவிலிலே தரப்படும் ஒரு வேளை அன்னதான உணவு முரளிக்கு இரண்டு வேளைக்குப் போதுமானதாயிருந்தது. அதைச் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொண்டான். இரவு கோவில் வாசலில் படுக்கும் முன் அன்று தனக்கு யாசகமாய் வந்த காசுகளை செல்வத்திடம் தந்துவிடுவான். தொடக்கத்தில் செல்வம் கேட்ட எந்தக் கேள்விக்கும் முரளி பதில் சொல்லவில்லை. ஆனால் முரளியின் கண்களில் தெரிந்த அமைதியைக் கண்டு மேற்கொண்டு எதுவும் செல்வம் கேட்கவில்லை. செல்வம்தான் முரளியை ஊமைச்சாமி என்று கூப்பிடத் தொடங்கினான். சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாகத் தொடங்கியது. திருவிழாவின் ஒரு நாளான பூச்சொரிதல் அன்றுதான் மாலதியைப் பார்த்தான் முரளி. பூப் பல்லக்கில் அமரவைத்து வருடத்துக்கொருமுறை கர்ப்பக்கிரக அம்மன் வெளியில் வந்து தரிசனம் தரும் நாள் அது. கையில் வைத்திருக்கும் அலுமினிய டம்ளரை உயர்த்தி யாசகம் கேட்கும் முரளி ஒருபோதும் தர்மம் இடுபவரின் முகத்தைப் பார்க்க மாட்டான். அன்று பல்லக்கில் ஆடிக்கொண்டிருந்த அம்மனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அம்மனைப் பார்த்துவிட்டு தலை குனிந்தவனின் கண்களில் சந்தன நிறத்தில் வெள்ளிக் கொலுசுகள் அணிந்த கால்கள் கடந்தன. அவன் முகம் அவனை மீறி வான் நோக்கியது. மாலதி. அம்மா... முரளியின் கண்கள் வெறித்துச் சுழன்றன. மாலதி கழுத்து நிறைய நகை அணிந்திருந்தாள். தலை நிறைய மல்லிகைப் பந்து அடர்ந்திருந்தது. ரோஸ் நிற உதடுகளில் நிரந்தரமான புன்னகை உறைந்திருந்தது. கன்னங்கள் சற்றே உப்பியிருந்தன. சாயங்காலத்தில் லேசாய் உறங்கியிருக்க வேண்டும். அந்த மென் சோக அலுப்பு கண்களில் படர்ந்திருந்தது. முரளியை நோக்கிக் குனிந்திருந்த முகத்தில் எந்தவிதக் கேள்வியும் இல்லை. தெள்ளத் தெளிவாக மாலதியைப் பார்த்தான். அவளின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த ஐந்து வயதுச் சிறுவனின் கையில் காசுகளைத் திணித்து எல்லா யாசகர்களுக்கும் போடச்சொல்லிக் கொண்டிருந்தாள். அவசர அவசரமாகத் தலையைக் குனிந்துகொண்டான் முரளி. பல வருடங்களுக்குப் பிறகு தன் நெஞ்சுக்கூடு நடுங்குவதை உணர்ந்தான். தன் மார்பினைப் போர்த்தியிருந்த காவி வேட்டியின் முனையை இரு கைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டான். அந்தச் சிறுவன் ஒவ்வொரு யாசகரிடமும் சென்று காசுகளைத் தந்து கொண்டிருந்தான். அலுமினியத் தட்டுகளிலும் டம்ளர்களிலும் அவனின் பிஞ்சு விரல்கள் தானமிட்டுக்கொண்டிருந்தன. வயதான மெலிந்த கைகள் அச்சிறுவனுக்கு ஆசி வழங்கின. முரளியிடம் சென்ற சிறுவன் எங்கு காசு வைப்பது என்று தெரியாமல் தடுமாறினான். ‘‘ஊமச்சாமி... பையன் காசு தர்றாரு பாருங்க...'' அருகிலிருந்த பூபதியின் குரலில் கலைந்த முரளி வேட்டியை விட்டுவிட்டு இரு கைகளையும் ஏந்தினான். அவனின் உள்ளங்கையில் மோதியது காசு வைத்திருந்த சிறுவனின் விரல்கள். அம்மாவின் விரல்கள். இந்த விரல்கள்தானே இந்த ஆலயம் முழுவதும் தன்னை இழுத்துக்கொண்டு அலைந்தது. இந்த விரல்கள்தானே தன் தலைமுடியைக் கோதி தன்னை உறங்க வைத்தது. ஒவ்வொரு முறையும் தன்னை மறந்து பாடல் பாடும்போது இந்த விரல்கள்தானே தன் உள்ளங்கைக்குள் குவிந்திருக்கும். ‘யாது மாகி நின்றாய்...காளி எங்கும் நீ நிறைந்தாய்...' அய்யோ... அம்மா... தன் இதயத்தை வருடிக்கொண்டிருந்த அந்தப் பிஞ்சுவிரல்களை அப்படியே பற்றி தன் உதடுகளில் பொருத்திக்கொள்ளத் துடித்தான் முரளி. ‘‘சஞ்சய் வா... காசு போட்டுட்டு வா...'' முரளியின் காதுகளில் விழுந்தது எத்தனையோ ஜென்மங்களுக்குப் பிறகு அவனை வந்தடைந்த உயிரின் குரல். அவனின் உள்ளங்கையிலிருந்து விலகி விரைந்தது கரம். உலகம் உடைந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அன்றிரவு அழுதபடி விழித்துக்கொண்டிருந்தது நடை சாத்தப்பட்ட கோவிலினுள்ளே தெய்வம். கடல் சார்ந்த ஊர் என்பதால் சர்ப்பபுரியில் ஆடி மாதம் வந்தாலே காற்று பிய்த்துக்கொண்டு போகும். ஓர் இரவு காற்றும் மழையும் இடியும் சேர்ந்து ஊரை மிரட்டியதில் கோவில் வாசலில் இருந்த யாசகர்கள் தற்காலிக அடைக்கலமாக மதுசூதனன் வீட்டுத் திண்ணைக்கு வெளியே ஒடுங்கினர். முன்பு திறந்த வெளியாயிருந்த சிமென்ட் திண்ணை இப்போது மரச் சட்டங்கள் கொண்டு மூடப்பட்டிருந்தன. வாசலை ஒட்டியிருந்த சிறு மறைப்பில் அனைவரும் ஒதுங்கியிருந்தனர். கோவிலுக்கும் வீட்டுக்குமான கொஞ்சம் இடைவெளியில் முரளி கால் முட்டிகளைச் சேர்த்து அணைத்தபடி அமர்ந்துகொண்டான். அன்று இரவு மதுசூதனன் வீட்டிலிருந்து தயாரான உணவு தஞ்சம் புகுந்தவர்களுக்கு வீட்டு வாசலில் வைத்து வழங்கப்பட்டது. சிறு வாழை இலையில் சூடாய் சக்கரைப் பொங்கலும் புளி சாதமும் வைத்து வரதன் தான் அனைவருக்கும் வழங்கினார். முரளியை அழைத்து இலையைத் தந்தபோது திண்ணையில் அமர்ந்துகொண்டு எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மதுசூதனனை நிமிர்ந்து பார்த்தான் முரளி. அவனுக்குத் தெரியும்... இலையைப் பெற்றுக்கொண்டு சீக்கிரமே அங்கிருந்து நகர்ந்து வந்துவிடவேண்டும் என்று நினைத்துப் போனவன்தான் திண்ணையில் அமர்ந்திருந்த மதுசூதனன் அருகில் ஒரு பெண்ணுருவம் அசைவதுபோல் உணர்ந்து நிமிர்ந்து பார்த்துவிட்டான். அந்த அவசர அன்னதானம் மதுசூதனனின் இரண்டாம் மனைவியின் ஏற்பாடு. முரளியின் முகத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டான் மதுசூதனன். அந்தக் கண்கள்... தாடி அடர்ந்திருந்தாலும் செழுமையான சிவந்த கன்னங்கள்... யாசகனாக ஆனபின்னும் முரளிக்கு முகப்பொலிவு குறையவில்லை. மனதை இறுக்கி நிசப்தத்துக்குள் தொலைந்ததில் இன்னும் தெய்வீக ஒளி கூடத்தான் செய்திருந்தது. அந்த முகம் மாலதியின் முகம். அதைத்தான் எதிர்கொண்டான் மதுசூதனன். இதயத்தில் சுருக்கென்றது ஒரு பயம். முரளி என்று அழைக்கப்போனவன் சூழல் உணர்ந்து தன்னை இறுக்கிக்கொண்டான். அவசர அவசரமாய் அங்கிருந்து விலகினான் முரளி. மழை ஓய்ந்த மறுநாள் சாயங்காலம் கோவில் வாசலில் அமர்ந்திருந்தபோது மதுசூதனன் வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்று செல்வதைப் பார்த்தான் முரளி. அன்றிரவு பூபதியிடம் செல்வம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. ‘‘கோவில் கணக்குப் புள்ளைக்கி நேத்து வாதம் அடிச்சிடுச்சாம்யா... ஒரு கையும் காலும் இழுத்து வாய் பேச முடியலியாம். அன்சாரி ஆஸ்பத்திரில சேத்துருக்காங்களாம். ப்ச் பாவம் நல்ல மனுசன். நேத்து அவர் வீட்டுல வச்சி சோறு போட்டாரு. மொத சம்சாரம் ஓடிப்போயிடுச்சாம். ரெண்டாவதா கட்டினவங்களுக்கு புள்ள இல்லைனு பேசிக்கிட்டாங்க. பாவம் போ நல்ல மனுசங்களுக்குத்தான் சோதனையே வருது...'' முரளிக்குத் தான் வந்த நோக்கம் புரிபடத் தொடங்கியது. ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது இரவு மணி ஏழு. உள்ளே நுழைந்ததும் இடது புறமாய் தெரிந்த அறை ஒன்றின் வாசலில் அன்று பார்த்த அந்த அம்மாளின் முகம் தெரிந்து மறைந்தது. அறை நோக்கிச் சென்றான். முரளியின் சுத்தமான முகமும் கருணை வழிந்த கண்களும் அறை உள்ளே அனுமதிக்கச் செய்தன. ‘‘அவரால பேச முடியாது. நீங்க அவருக்காகப் பிரார்த்தனை பண்ணுங்க சாமி...'' முரளி தலையாட்டினான். மதுசூதனன் உடல் ஒரு பக்கமாய் திரும்பியிருந்தது. சலைன் பாட்டில் ஏறிக்கொண்டிருந்த கை சாதாரணமாக நீண்டிருக்க வலதுகை மணிக்கட்டு வளைந்து ஐந்து விரல்களும் உள்ளங்கையை நோக்கி குவிந்திருந்தன. வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருந்தது. வலது கால் துணி போட்டு மூடியிருந்தாலும் அதன் இயல்பற்ற தோற்றம் வெளித்தெரிந்தது. முரளியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த கண்களில் மட்டும் அந்தத் தன்னகங்காரம் குறையவில்லை. வாசல் கதவருகில் அந்தப் பெண்மணி நின்று கொண்டிருக்க மதுசூதனன் காதோரமாய் முரளி குனிந்து உதடுகள் அசைத்தான். ‘‘மன்னிச்சிடுங்க.'' நிமிர்ந்தான். விலகினான். மதுசூதனன் கண்களிலிருந்து நீர் வழியத் தொடங்கியது. () () () அன்றிலிருந்து நான்கு மாதங்கள் உயிரோடு இருந்தான் மதுசூதனன். எப்போதும் போல கோவில் வாசலிலே யாசகம் பெற்று வாழ்ந்துகொண்டிருந்தான் முரளி. மாலதியை அதற்குப் பிறகு அவன் பார்க்கவில்லை. மதுசூதனனின் இரண்டாவது மனைவி கோவிலுக்கு வரும்போதெல்லாம் முரளிக்கும் தர்மமிடுவார். தலை நிமிராமல் பெற்றுக்கொள்வான். முரளியின் மனதில் பழைய ஞாபகங்கள் எதுவுமில்லை. சுயநலமும் தான் என்ற தலைகனமும் நிரம்பிய ஒருவனின் வித்து இவ்வுலகையே உதறி வாழ்ந்துகொண்டிருப்பது குறித்து எவ்விதப் பிரக்ஞையுமில்லை. இவ்வுலகில் அவனுக்கென்று யாருமில்லை; அவனுக்கென்று எதுவுமில்லை, அப்படி கிடைக்கும் எதுவும் நிரந்தரமில்லை என்பதைத் தன் இருபத்து நான்காவது வயதில் உணர்ந்த முரளிதரன் என்கிற ஊமைச்சாமி சாகும்வரை அந்தக் கோவில் வாசலிலேயே ஒரு யாசகனாய் இருந்தான், உள்ளே வீற்றிருக்கும் அம்மனுக்குத் தினந்தோறும் குற்ற உணர்வினை அள்ளி வழங்கியபடி. - ஆனந்த விகடன்

No comments:

Post a Comment