Thursday, 26 September 2024
வாக்குமூலம் - சிறுகதை
வாக்குமூலம்
ராஜன் ஓர் ஓய்வுபெற்ற போலிஸ் அதிகாரி. பணிக்காலத்திலேயே மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் என்று பெயர் எடுத்தவர். ஓய்வு அவர் வகித்துவந்த பதவிக்குதானே தவிர அவருக்கில்லை. அன்று காலை தன் செல்லம் ரீட்டாவுடன் அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது இன்னும் ஓய்வு பெறாத அவரின் போலிஸ் மூக்கு குறிப்பிட்ட வீட்டின் வாசலில் ஒரு நிமிடம் நின்று நிதானித்தது. அவரின் கையில் பிடித்திருந்த சங்கிலியின் மறுமுனையின் அதிர்வை உணர்ந்தவர் ரீட்டாவின் கழுத்திலிருந்து சங்கிலியை விடுவித்தார். 18 என்று இலக்கமிட்டிருந்த அந்த வீட்டைச் சுற்றிக்கொண்டு பின்பக்கம் சென்ற ரீட்டா ஓர் இடத்தில் நின்று தன் மூக்கினை வைத்து உரசி நாக்கிலிருந்து நீர் சொட்ட ஹே ஹே என்று மூச்சிரைத்தபடி பழுப்புக் கண்களில் பதட்டம் எழுதியபடி கால் நகங்களால் நிலத்தை தோண்டத் தொடங்கியது. பின் தொடர்ந்த ராஜனின் நாசி காற்றில் அசாத்தியமான பிணவாடை கலந்திருந்ததை உணர்ந்தது. மனிதனின் அழுகிய உடல்நாற்றம். பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்தார்.
*********************
என் பெயர் மதன். வயது 30. நான் ஓர் ஓரினச் சேர்க்கையாளன். என் 25 வது வயதில் அறிமுகமானவர் சத்யன். அவருக்கு அப்போது 35 வயது இருக்கலாம். ஜிம்மில்தான் முதலில் சந்தித்தேன். பார்த்ததுமே எனக்கு அவரைப் பிடித்துப் போனது. என் கண்ணுக்கு அத்தனை அழகாய்த் தெரிந்தார் சத்யன். நானாகத்தான் வலியச்சென்று அவரிடம் பேசினேன். சாதாரணமான உரையாடல்களிலே அவரை ரசிக்கத் தோன்றியது. ஒருநாள் இரவு ஜிம்மில் எக்சர்சைஸ் முடித்தபின் அவர் வீட்டுக்கு என்னை அழைத்தார். சென்றேன். அப்போதுதான் தெரிந்தது. அவர் இன்னும் திருமணம் செய்யவில்லையென்று. அதில் தனக்கு நம்பிக்கையில்லையென்றார். எப்படி தனியாய் வாழ்கிறீர்கள் என்றதற்கு நான் தனியாய் இல்லை என்றபடி என் தோளைத் தொட்டு அணைத்தார். என் மீதும் அவருக்கு விருப்பம் இருந்ததை தெரிந்துகொண்டேன். அன்று இரவு அவர் வீட்டில் தங்கினேன். என் வாழ்நாளில் மறக்கவே முடியாத இரவு அது. அதன் பிறகான நாட்கள் எனக்கு சொர்க்கம் என்றால் என்னவென்று தெரியப்படுத்திய நாட்கள். எப்போதும் சத்யன் என் அருகிலேயே இருக்க வேண்டுமென்று எனக்குப் பேராசையாக இருந்தது. ஆனாலும் அவருடன் நிறைய பேசினாலும் பல ராத்திரிகள் அவருடனே கழிந்தாலும் எனக்குள் ஒரு நெருடல் இருந்துகொண்டேதான் வந்தது. நான் இல்லாத சமயங்களில் சத்யனின் பகிர்தல் என்பது எவ்வாறு உள்ளது என்பதில்தான் என் முதல் சந்தேகம் வந்தது. சத்யன்தான் ப்ரகாஷை அறிமுகப்படுத்தி வைத்தார்.
***********************
மளமளவென்று போலிஸ் காரியங்கள் நடந்தன. நிலம் தோண்டப்பட்டது. முக்கால்வாசி அழுகிப்போய் சதையெல்லாம் கரைந்து பாதி எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட பிணம் டீ ஷர்ட்டும் ஜீன்ஸும் அணிந்திருந்தது. டீ ஷர்ட்டின் மேல் எழுதியிருந்த I AM HERO வாசகம் இன்னும் கறையான் அரிக்கவில்லை. 18 ம் எண் வீட்டின் கதவு உடைக்கப்பட்டது. அலசி ஆராய்ந்ததில் தனியார் டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் சத்யன் என்பவரது வீடு என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அங்கு போட்டோவில் இருந்த சத்யனுக்கும் கண்டெடுக்கப்பட்ட பிணத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. சத்யனின் விசிட்டிங் கார்டில் உள்ள அலுவலகத்துக்கு போன் செய்ததில் சத்யன் ஆபீஸ் வந்து மூன்று மாதமாகிறது என்றார்கள்.
*********************************
பிரகாஷ் மிகப்பெரிய பணக்காரன். பல் டாக்டருக்கு படித்துவிட்டு சொந்தமாய் கிளினிக் வைத்து நடத்திக்கொண்டிருப்பவன். இரண்டொரு முறை ஜிம்மிற்கே வந்திருக்கிறான். சத்யனைப் பார்த்து பேசிவிட்டு பிரகாஷ் அவனுடைய காரில் சென்றுவிடுவான். நான் சத்யனின் பைக்கில் அவன் வீட்டுக்கு செல்வேன். சத்யன் பிரகாஷைப் பற்றிப் பேசினார். எனக்கு சத்யன் இன்னொருவனைப் பற்றி என்னிடம் பேசுவதே தேவையற்ற ஒன்றாய் இருந்து எரிச்சலைக் கிளப்பியது. மூன்று மாதங்களுக்கு முன்பு, தான் டைல்ஸ் ஆர்டர் சம்பந்தமாக பெங்களூர் வரை போவதாகக் கூறினார் சத்யன். திரும்பி வர நான்கு நாள் ஆகும் என்றார். ஜிம்மில் இருட்டாய் இருந்த இடத்தில் வைத்து என்னை அணைத்து நெற்றியில் முத்தம் பதித்தார். எனக்கு அழுகை வந்தது. நான்கு நாட்கள். இப்போது நினைத்தாலும் அந்தக் கொடூரமான நாட்கள் அவ்வளவு வலியுடன் ஞாபகத்துக்கு வருகிறது. சத்யன் என்னுடன் போனில் பேசவில்லை. வேலை பிஸி என்று நினைத்துக்கொண்டேன். எனக்கு நானே தண்டனை தருவதுபோல் நானும் அவருடன் பேச முயற்சிக்கவில்லை. சத்யனின் வீட்டை மட்டுமே அந்த நான்கு நாட்களில் எத்தனை முறை சுற்றி வந்திருப்பேன். மூன்றாம் நாள் இரவு சத்யனின் வீட்டு வாசலில் ப்ரகாஷின் கார் நிற்பதைப் பார்த்தேன்.
****************************************
சத்யனின் அலுவலகத்தில் தந்த எண்ணுடன் தொடர்பு கொண்டதில் நாட் ரீச்சபிள் அல்லது சுவிட்ச் ஆஃப் என்று பதில் வந்தது. ஸ்பாட் போஸ்ட்மார்ட்டம் செய்ததிலும் பிணம் சத்யனின் எவ்வித அடையாளத்துடன் பொருந்தாமல் இருக்க, மூச்சுத் திணறியதில் மரணம் என்று மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. காணாமல் போனவர்களின் பட்டியலில் அந்தப் பிணத்தை தேடத்துவங்கியது போலிஸ். கடந்த மூன்று மாதங்களில் காணாமல் போனவர்களில் 30 வயது அல்லது அதற்குட்பட்டவர்கள் பெயர்களைப் பார்த்ததில் மூன்று நபர்கள் இருந்தனர். கபீர் முகமது, மாதவன், ப்ரகாஷ். மூன்று பேர்கள் வீட்டு முகவரிக்கு போன் செய்து உறுதி செய்துவிட்டு போலிஸ் விசாரணையைத் துவக்கியது.
***************************
எனக்கு எத்தனை கஷ்டமாக இருந்திருக்கும். சத்யனுக்கு அங்கிருந்தபடியே போன் செய்தேன். ரிங் போய்க்கொண்டேயிருந்தது. முழுவதுமாக ரிங் போய் கட்டானது. ஒரே ஒரு குரல் மட்டும் என் மூளையைச் சுட்டது. நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் உங்கள் அழைப்பை ஏற்க விரும்பவில்லை. நான் கேட்டினைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்து காலிங்பெல்லை அழுத்தினேன். சில நிமிடங்கள் கழித்து கதவு திறந்த சத்யனின் கண்கள் சிவந்திருந்தன. என்னைக் கண்டதும் கண்கள் சுருக்கியவர் எவ்வித ஆச்சரியமும் காட்டாமல் உள்ளே வா என்றார். என்னை சத்யன் தவிர்க்கிறார் என்பதை உணர்ந்ததுமே செத்துவிடலாம் போல் தோன்றியது. வீட்டின் உள்ளே சோபாவில் அமர்ந்திருந்தான் ப்ரகாஷ். எதிரிலிருந்த டீப்பாயில் பீர் பாட்டில்கள். அவன் அணிந்திருந்த சட்டையின் மேல் பட்டன்களில் முதல் மூன்று பட்டன்கள் அவிழ்ந்து ப்ரகாஷின் மார்பு முடிகள் தெரிந்தன. என் மார்பில் அத்தனை அடர்த்தியாய் மயிர் கிடையாது. நான் உள் நுழைகையில் அவன் சட்டை பட்டன்களைப் போட்டுக் கொண்டிருந்ததை அனிச்சையாய் உணர்ந்தேன். ப்ரகாஷ் என்னைப் பார்த்து சிரித்தான். எனக்கு சிரிப்பு வரவில்லை. என் அருகில் வந்து என் தோளினைப் பிடித்து அழுத்தி என்னை சோபாவில் அமரவைத்த சத்யனின் மூச்சில் இதுவரை நான் அறியாத வாசனை. டேபிள் மீதிருந்த சத்யனின் மொபைல் பார்த்ததும் நான் போன் செய்தது ஞாபகம் வர சத்யனிடம் ஏன் போன் அட்டெண்ட் பண்ணல என்று கேட்டேன். அப்போது சத்யனுக்கு போன் வந்தது. ப்ரகாஷ் முகம் சுளித்ததைப் பார்த்தேன். சத்யன் போனை எடுத்து மியூட்டில் வைத்தார். எனக்கு கடும் கோபம் வந்தது. எப்போ ஊர்ல இருந்து வந்தீங்க என்றதும் ப்ரகாஷ் சோபாவிலிருந்து எழுந்தான். உடனே சத்யன் ப்ரகாஷின் தோளை அணைத்தாற்போல் அவனை சோபாவில் அமரவைத்தார். பிறகு ஏதோ சமாதானம் செய்வதுபோல் என்னைத் தொட வந்தவரை பிடித்து தள்ளிவிட்டேன். டேபிளில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து டீப்பாய் முனையில் அடித்தேன். பாட்டில் உடையவில்லை. சினிமாவில் எல்லாம் உடனே உடைகிறது. எனக்கு அழுகையும் ஆத்திரமுமாய் வர சத்யனும் ப்ரகாஷும் பயம் ஏதுமின்றி என்னைப் பார்த்து சிரித்தார்கள். எனக்கு அவமானமாய் இருந்தது. நான் என் பலம் அனைத்தும் திரட்டி பல்லை இறுகக் கடித்துக்கொண்டு பாட்டிலை ஓங்கி ப்ரகாஷின் தலையில் இறக்கினேன். ப்ரகாஷ் லேசாக தலையை சாய்க்க பாட்டில் நடுமண்டையில் இறங்காமல் வலது பக்கத்தில் மோதி உடைந்து சிதறி சரியான பிடிமானமில்லாமல் என் கையையும் மீறி வழுக்கி அவன் காதைக் கீறி இறங்கி கழுத்தில் குத்தி நின்றது. நான் பாட்டிலை உருவினேன். தோல் கிழிந்து ரத்தம் பொங்கியது. வெறித்த கண்களுடன் சோபாவில் சரிந்தான் ப்ரகாஷ். மண்டையிலிருந்து ரத்தம் பெருகி அவன் முகத்தில் வழிந்து சோபாவில் இறங்கி தரையில் சொட்டித் தேங்கத் தொடங்கியது. இரு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டு சத்யன் நின்றிருந்தார்.
****************
போலிஸ் விசாரணையில் ப்ரகாஷ் வீட்டில் மட்டும்தான் சில தகவல்கள் கிடைத்தன. அதுவும் குழப்பத்தில் முடிந்தது. ப்ரகாஷ் காணாமல் போய்விட்டான் என்பதை உணர்ந்த அவன் அம்மா அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். ப்ரகாஷின் கார் மட்டும் எண்ணூர் பக்கம் ஒதுக்குப்புறமான ஒரு காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது. ப்ரகாஷின் அம்மா வந்து உடலைப் பார்த்துவிட்டு அது தன் மகனில்லை என்றதும் போலிஸ் டிபார்ட்மெண்ட் விசாரணை மறுபடியும் ஆரம்பத்திலேயே நின்றது. வீட்டின் உரிமையாளர் சத்யனும் இல்லை. காணாமல் போன பட்டியலில் இருந்த நபரும் இல்லை. இந்தப் பிணம் யாருடையது. சத்யன் எங்கே. இன்ஸ்பெக்டர் சக்கரைக்கு ராஜனின் ஞாபகம் வந்தது.
*************************
எனக்கு உடம்பில் லேசாய் நடுக்கம் வந்திருந்தது. உணர்ச்சிவசப்பட்டு நான் செய்த கொலை. தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு அமர்ந்தேன். அழுகை வந்தது. நிமிர்ந்து பார்க்கவே பயமாய் இருந்தது. சில நிமிடங்கள் கழித்து சத்யனின் குரல் கேட்டது. வாசலில் நிற்கும் ப்ரகாஷின் கார் டிக்கியில் அவன் பிணத்தை இருவருமாய் தூக்கிச் சென்று அடைத்தோம். அதன்பின் என்னை வீட்டிலிருக்கச் சொல்லிவிட்டு சத்யன் வேறு சட்டை பேன்ட் மாற்றிக்கொண்டு புறப்பட்டுப் போனார். ப்ரகாஷின் பிணத்தை அவன் காரோடு கொண்டுபோய் எங்கோ டிஸ்போஸ் செய்யப் போகிறார் என்று மட்டும் புரிந்தது. நான் எதுவும் கேட்கவில்லை. சத்யன் வருவதற்குள் சோபாவில் வழிந்திருந்த ரத்தத்தை சிதறிய கண்ணாடித் துண்டுகளை சுத்தம் செய்தேன். காலை எட்டு மணிக்கு மேல் சத்யன் வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் அழுதேன். யாரிடமும் இதைப்பற்றி மூச்சுவிடக்கூடாது என்றார். இத்தோடு எல்லாவற்றையும் மறந்துவிடு என்றார். எல்லாவற்றையும் என்பதன் அர்த்தம் அப்போது எனக்குப் புரியவில்லை.
*******************
இன்ஸ்பெக்டர் சக்கரையும் சப் இன்ஸ்பெக்டர் பிச்சையும் ராஜனைத் தொடர்பு கொண்டபோது அவர் தன் மகள் வீட்டில் டெல்லியில் இருப்பதாய் சொன்னார். வழக்கின் விபரத்தை சொன்னதும் ராஜன் தன் சர்வீஸில் இதுபோன்ற வழக்குக்கு கடைசிக் கட்டமாய் ஆவி மீடியத்தினைத் தொடர்புகொண்டிருப்பதாகவும் அது ஓரளவு பலனளித்திருப்பதாகவும் சொன்னார். தனக்கு தெரிந்த ஓர் ஆவி மீடியம் தகவலும் தந்தார். சக்கரையும் பிச்சையும் வேறு வழியின்றி அதற்கு சம்மதித்தார்கள்.
************************
கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆயிற்று. சத்யன் என்னைப் பார்க்க ஜிம்முக்கு வரவில்லை. போன் செய்தால் எடுப்பதில்லை. வீட்டுக்கு சென்றால் ஆள் இல்லாமல் திரும்ப நேரிட்டது. எனக்கு பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. எல்லாவற்றையும் மறந்துவிடு என்ற சொன்னது அவரையும் சேர்த்துதானா... அன்று இரவு சத்யன் வீட்டு வாசலில் சத்யன் பைக்குடன் இன்னொரு பைக்கும் நின்றிருந்ததைப் பாத்தேன். சத்யனுக்கு போன் செய்தேன். எடுக்கவில்லை. கதவைத் தட்டினேன். காலிங்பெல் அடித்தேன் விடாமல். கதவினைத் திறந்த சத்யன் டவல் மட்டும் கட்டி இருந்தார். நான் உள்ளே நுழைந்தேன். என்னை பார்த்து எதுக்கு வந்தே என்றார். ஹாலில் யாருமில்லை. பெட்ரூம் கதவு லேசாகத் திறந்திருக்க முழு இருட்டில் இருந்தது அந்த அறை. வாசலில் நிற்கும் பைக் யாருடையது என்றேன். பதில் சொல்லாமல் என்னை சத்யன் முறைத்தார். முழுக்க என்னை அவாய்ட் செய்வதாய் சொன்னார். ப்ரகாஷை நான் கொன்றது அவருக்கு பயத்தை தருவதாகவும் அவரை மறந்துவிடவும் சொன்னார். எனக்கு அழுகை வந்தது. நான் சத்யனை கட்டிப்பிடித்தேன். நெஞ்சில் முகம் அழுத்தி அழுதேன். உங்க மேல நான் பைத்தியமாயிருக்கேன். நீங்க இல்லைனா நான் இல்லைனேன். நானா என் மேல பைத்தியமா இருன்னு சொன்னேன்னு சொன்னார். எனக்கு வலிச்சிது. அழுதுகிட்டே நிமிர்ந்தேன். நீங்க ஆசையா எடுத்துக் குடுத்த டீ ஷர்ட்தான் மூணு நாளா போட்ருக்கேன் என்றேன். சத்யன் என்னை பாக்காமல் எங்கேயோ பாத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் கவனித்தேன். திறந்திருந்த பெட்ரும் கதவு இடுக்கிலேர்ந்து புகை. நான் சத்யனை விட்டு விலகினேன். பெட்ரூம் உள்ளே செல்ல அவசரமாய் என் கையைப் பிடித்து இழுத்த சத்யனை ஓங்கி உதறித் தள்ளி கதவு திறந்தேன். கும்மிருட்டு. சிகரெட் கங்கு மட்டும் தெரிந்தது. என் மொபைல் டார்ச்சினை ஆன் செய்தேன். வெளிச்சத்தில் சுவரில் என் நிழலும் கட்டிலில் படுத்துக்கிடந்த அவனின் நிழலும். பின்னாலே வந்த சத்யன் சுவிட்ச் ஆன் செய்தார். அறையில் பரவிய வெளிச்சத்தில் அவனைப் பார்த்தேன். முழுக்க மலையாள முகம். சத்யனின் படுக்கையறை பார்ட்னர். எனக்கு அங்கு நிற்கவே அறுவறுப்பாயிருந்தது. திரும்பினேன். அடுத்து சத்யன் சொன்ன வார்த்தைதான் என்னை அவ்வளவு தூரம் அவமானப்படுத்தியது. என்னையும் அவர்களுடன் இருக்கச் சொன்னார். நான் சத்யனின் முகத்தில் காரித்துப்பினேன். சத்யன் சட்டென்று தன் கையிலிருந்த தலையணையால் என் முகத்தை மூடி கட்டிலில் தள்ளினார். நான் முற்றிலும் தளர்ந்திருந்தேன். சத்யனை எதிர்க்கவேயில்லை. ஆனாலும் என் கைகள் இறுகப் பிடிக்கப்பட்டிருந்தது. கால்களை மட்டும்தான் என்னால் உதைக்க முடிந்தது. இதோ சத்யன் தலையணையை எடுத்துவிடுவார். என்னைக் கொல்லமாட்டார் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோது என் இதயத்தில் சுருக்கென்று ஒரு வலி வந்தது. நான் படுக்கையில் மூத்திரம் பெய்திருந்தேன். என் ஆசனத்துளை வழியாக காற்றென என் உயிர் பிரிந்திருந்தது. எனக்கென்று எதுவும் இல்லாமல் ஆயிற்று. என் கண் முன்னால் என் உடலை சத்யன் கொன்றுகொண்டிருந்தார்.
*************************************
அந்த டம்ளர் அசையாமல் அப்படியே நின்றிருந்தது. எந்தக் கட்டமும் மாறவில்லை. சக்கரைக்கும் பிச்சைக்கும் அந்த ஏர்கண்டிஷன் அறையிலும் வேர்வை வெள்ளம். நிலத்தில் குறுக்கும் நெடுக்குமாய் போட்டிருந்த கட்டங்களுக்கு முன்பு அமர்ந்திருந்தவர் அழுதுகொண்டிருந்தார். குரலில் கரகரப்பு கூடியிருந்தது.
*********************
சத்யன்தான் என்னைக் கொன்றார். நான் இறந்தது தெரியாமல் நீண்ட நேரம் என் முகத்தில் தலையணையை அழுத்தியபடி இருந்தார். நான் வாய்விட்டு அழுதேன். அப்படி சொல்ல முடியாது. என்னால் அழுகையை உணர முடியும். ஆனால் அழ முடியாது. அதற்கு உடல் வேண்டும். இப்போது வெறும் உயிர். யார் கண்ணுக்கும் தெரியாத உயிர். என் கண் முன்னால் என் உடலை தூக்கிக்கொண்டு வீட்டின் தோட்டத்துக்கு சென்றார். குழி தோண்டினார். என் சத்யன் எனக்கு குழி தோண்டுகிறார். இனி அவர் மிக சுதந்திரமாக இருப்பார். அவர் சந்தோசமாக இருப்பார். ஏதோ ஒருநாளில் ஓர் இரவின் வியர்வை தணிந்தபின் நான் சொல்லியிருக்கலாம். நீயே எனக்கு கொள்ளி வெச்சிடு சத்யான்னு. இன்று அது உண்மையாவே நடக்கிறது. நான் சத்யனுடன் வாழ்ந்த வாழ்வு சந்தோசமாக இருந்தது. அது போதும். இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாம். விதி. இனி ஒன்றுமே செய்ய முடியாது. என்னை சத்யன் இழுத்து தோண்டிவைத்த குழியில் தள்ளினார். மண்ணள்ளிப் போட்டார். என் முகத்தில் மண் விழுந்ததை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். குழி முழுவதும் மூடும்படி மண் அள்ளிக்கொட்டி மூடியபின் வியர்வையும் பெருமூச்சுமாய் சத்யன் அந்த இன்னொருவனின் தோளில் கையைப் போட்டபடி வீட்டுக்குள் சென்றார். என் உடல் மூடியிருந்த குழியின் மீது நான் அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து நான் வீட்டுக்குள் போனபோது சத்யன் குளித்துவிட்டு பாத்ரூம் விட்டு வெளிவந்தார். ஃப்ரிட்ஜினைத் திறந்து பீர் பாட்டில் ஓப்பன் செய்து குடிக்க ஆரம்பித்தார். அந்த இன்னொருவனுடன் அன்று இரவு சத்யன் ஒன்றாகவில்லை. மூன்று பாட்டில் பீர் முழுக்க குடித்தவர் தலையைப் பிடித்துக்கொண்டே தரையிலே படுத்துவிட்டார். நான் அவர் அருகில் அமர்ந்து குறட்டையுடன் உறங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
****************************
இன்ஸ்பெக்டர் சக்கரை அந்தக் கட்டங்களுக்கு முன்பு அமர்ந்து அழுது கொண்டிருந்தவரிடம் மெல்லிய குரலில் '' அதுக்கப்புறம் சத்யனைப் பாத்தீங்களா?'' என்றார். கட்டங்களில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளில் ஓர் இடத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு அந்த டம்ளர் நகர்ந்தது.
***************************************
அன்று இரவுதான் சத்யனை நான் கடைசியா பாத்தது. அதன்பின் அவரை நான் பார்க்கவே இல்ல. என்னால வெளிய எங்கேயும் போக முடியல. இந்த வீட்லதான் இருந்தேன். சத்யன் என்னைக் கொன்ன அந்த பெட்ரூம்லயே இருந்தேன். பசியில்ல. தூக்கமில்ல. ஆனா என் சாவுக்கு முன்னாடி நான் போராடின அந்த உணர்வு மட்டும் கொஞ்சமா இருந்தது. யாருமே இந்த வீட்டுக்கு வரல. என்னைப் பொதச்ச இடத்துக்கும் கொன்ன இடத்துக்குமா அலைஞ்சிட்டு இருந்தேன். என் உலகம் ரொம்ப அமைதியானது. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் என் உடம்பைத் தோண்டி அறுத்துப் பாத்து என்னென்னமோ நடந்தது. சத்யன் ஞாபகம் மட்டும் போகல. சத்யனை மறுபடியும் பாக்கணும் போல இருக்கு. நான் என்ன பாவம் பண்ணினேன். எனக்கு ஏன் இந்த நெலமை. சத்யனும் நானும் இந்த உலகத்துல மறுபடியும் ஒண்ணா வாழ மாட்டோமா...
*****************************
'' என்ன சார் இது...எனக்கு எப்படா அந்த ரூமை விட்டு வருவோம்னு ஆயிடுச்சி. அப்பாடி... ஆவி இருந்த வீட்லதான் நாம விசாரணை நடத்தினோமா... வெளங்கிடும்டா சாமி. சார்... என்ன சார் பேசாம வர்றீங்க'' பிச்சையின் குரலில் ஆசுவாசம்.
''இல்ல பிச்சை... இந்த பாடியைக் கண்டு புடிச்சது ராஜன் சாருங்கிறதாலதான் அவர்கிட்ட ஐடியா கேட்டோம். ஆவி மேட்டர் சொன்னதும் அவர்தான். இப்போ என்ன ஆச்சு. பொணத்தோட பேரு மட்டும்தான் தெரிஞ்சிருக்கு. இதுக்கா இவ்ளோ கஷ்டப்பட்டோம். பொணத்தோட டீ ஷர்ட் பிட்டுத்துணி ஆவியையே வரவெச்சிடுச்சி. ஆவி சாட்சியமெல்லாம் கோர்ட் ஒத்துக்காது. இப்போ நமக்கு வேண்டியது சத்யன். அவன் எங்க இருக்கான். என்ன பண்ணிட்டுருக்கான்''
******************************
என் பேரு சத்யன். ஒரு ப்ரைவேட் மொசைக் கம்பெனியில ஒர்க் பண்ணிட்டுருந்தேன். இப்போ இல்ல. எனக்கு சின்ன வயசிலேர்ந்து ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. ஹோமோன்னா ஒங்களுக்குத் தெரியுமா...எனக்கு ஆண்களோட ஒண்ணா இருக்கத்தான் புடிக்கும். அது ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிற காலத்திலேர்ந்தே வந்துடுச்சி. இந்தப் பழக்கம்தான் இப்போ என்னைக் கொலை வரைக்கும் கொண்டு வந்துருக்கு. வசீகரன்னு ஒருத்தனை கொலை பண்ணிட்டேன். ஆமா சார்... வசீகரன் ஒரு மலையாளி. கேரளாவுக்கு ஆர்டர் எடுக்கப் போனப்போ பழக்கமானான். மாசம் ஒரு தடவை தமிழ்நாட்டுக்கு வருவான். வந்தா என் வீட்லதான் தங்குவான். எனக்கு வசீகரனை ரொம்ப புடிக்கும். ஒங்களால இதை அப்சர்வ் பண்ணிக்க முடியாதுதான். ஆனா அவனோட இருக்கிறப்போ அவ்ளோ சந்தோசமா இருக்கும். அவனுக்காக நான் ஒரு கொலையே பண்ணிருக்கேன் சார். அன்னிக்கி மட்டும் நான் அதை பண்ணலைன்னா வசீகரன் அப்பவே செத்துருப்பான். இன்னிக்கி என் கையாலையே அவனைக் கொன்னுட்டு வந்துருக்கேன். மதன் என் மேல உயிரா இருந்தான். ஆனா சின்னப்பையன். அவனோட ஆக்டிவிட்டீஸ் எல்லாம் அவனை ஒரு பொசசிவ்னெஸ் புடிச்ச ஆளாதான் நெனைக்க வச்சிச்சி. அதுவுமில்லாம என் சுதந்திரம்னு ஒண்ணு இருக்குல்ல. என் சந்தோசம்னு ஒண்ணு இருக்குல்ல... மதனுக்கு நான் முழுசா வேணும்னு எதிர்பார்த்தான். நான் அப்படி இல்ல. எனக்கு ப்ரகாஷ்னு ஒரு ஃப்ரெண்ட் இருந்தான். ஒருநாள் அவனும் நானும் ஒண்ணா இருந்தப்போ மதன் வந்துட்டான். ஆத்திரத்துல ப்ரகாஷ் மண்டையில பாட்டிலால அடிச்சிக் கொன்னுட்டான். நான் பதறிட்டேன். அப்பவே மதனை நான் வெறுத்துட்டேன். ப்ரகாஷ் பாடியை அவன் கார் டிக்கியில வெச்சி சென்னை பார்டர் தாண்டி ஆந்திராவுக்குள்ள நான் பாத்த ஒரு ஏரியில தள்ளி விட்டுட்டு வந்துட்டேன். வர்ற வழியில காரை எண்ணூர் பக்கத்துல ஒரு காட்டுக்குள்ள விட்டுட்டு பஸ் ஏறி வீட்டுக்கு வந்துட்டேன். மதனை அவன் வீட்டுக்கு அனுப்பிட்டு யோசிச்சிப் பார்த்ததில இனிமே மதனோட கனெக்ஷன் வெச்சிருந்தா நாளைக்கு நம்மளையும் கொன்னுடுவான்னு தோணுச்சி. மதனோட அப்புறம் நான் எந்த தொடர்பும் வெச்சிக்கல... பாவிப் பய மோப்பம் புடிச்சிக்கிட்டே வந்துட்டான். அன்னிக்கி என் வீட்டுக்கு வசீகரன் வந்துருந்தான். ஏற்கெனவே ப்ரகாஷ் அனுபவத்துனால நான் ரொம்ப ஜாக்கிரதையா இருந்தேன். மதன் என் சந்தோசத்துக்கு குறுக்க வந்தது எனக்கு சுத்தமா புடிக்கல. வசீயை பார்த்ததுமே மதன் அவனை அடிக்கப் போனான். எனக்கு கோபம் வந்துடுச்சி. இவன் யாரு தேவையில்லாம நமக்கு இடைஞ்சலான்னு ஆத்திரத்துல மதனைக் கொன்னு என் வீட்டு தோட்டத்துலையே பொதச்சிட்டேன். எனக்கு வேற வழி தெரியல. குற்ற உணர்ச்சி எதுவும் அப்போ இல்ல.
***************************
இன்ஸ்பெக்டர் சக்கரையின் ஜீப்பில் இருந்த வொயர்லெஸ் கதறிக்கொண்டிருந்தது சக்கரையின் பேர் சொல்லி.
*********************
வசீகரனை மறுபடியும் மீட் பண்ணினது நேத்துதான். கே கே நகர்ல எனக்கு இன்னொரு வீடு இருக்கு. அங்கதான் வரச்சொன்னேன். வசீ ஒரு செயின் ஸ்மோக்கர். பட் எனக்கு சிகரெட் வாசனை புடிக்கும். அதுவும் வசீயோட வாசனை. சான்ஸே இல்ல... வசீ என் வீட்டுக்கு வந்ததிலேர்ந்து நெறைய போன் வந்துக்கிட்டே இருந்தது. எனக்கு அது புடிக்கல. அவனும் யார் யார்கூடவோ பேசிட்டு இருந்தான். திடீர்னுதான் கேட்டான். யாரோ ஒரு சுந்தர்னு ஒருத்தன் பேர் சொல்லி அவனையும் இங்க வர சொல்லலாமேன்னு. என்ன சார் நடக்குது இங்க... நான் வசீக்காக ஒரு கொலையே பண்ணிருக்கேன் சார். இவன் என்னடான்னா எவனையோ வரவச்சி என் கண்ணு முன்னாடியே... எனக்கு இதுல சம்மதம் இல்லைன்னேன். அப்போ என் சந்தோசம் ஒனக்கு முக்கியம் இல்லையான்னான். யோசிச்சிப் பாருங்க. நான் அவன் சந்தோசம் இல்லையாம். யாரோ ஒருத்தன்... ஷிட் ஷிட் ஷிட்... எனக்கு மதன் ஞாபகம் வந்தது. அவன் எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பான். என் ஞாபகமா நான் எடுத்துகுடுத்த டீ ஷர்ட்டை மூணு நாளா கழட்டாம போட்ருக்கிறதா சொன்ன மதன் தான் சார் எனக்கு எல்லாமே இருந்துருக்கணும். மிஸ் பண்ணிட்டேன். வசீகரன் கட்டாயமா அந்த சுந்தர் வரணும்ணு சொன்னான். இது என் வீடுங்கிறதை வசீக்கு ஞாபகப்படுத்துனேன். வசீகரன் வெளியில லாட்ஜில தங்கப் போறதா சொல்லி கெளம்புனான். எழுந்திரிச்ச வசீ நெஞ்சில கையை வெச்சி வேகமா தள்ளினேன். அவன் என் பலத்தையெல்லாம் தாங்குற ஆள் இல்ல. பின்னந்தலை செவுத்துல மோதி மண்டை ஒடஞ்சி செத்துட்டான். எழுப்பி எழுப்பி பாத்தேன். எழுந்திரிக்கல. இந்த மூணு மாசத்துல என் லைஃப்ல நடக்கக் கூடாதது எல்லாம் நடந்துடுச்சி. எனக்கு குடும்பம்னு எதுவும் இல்ல. நான் பண்ணின தப்புக்கு இனிமே எங்கேயும் என்னால ஒளிய முடியாது. அவன் பாடி அங்கேயேதான் கெடக்கு. இதுதான் அந்த வீட்டு அட்ரஸ். நான் கொஞ்ச நேரம் தனியா அமைதியா இருக்கணும். ஏற்பாடு பண்ண முடியுமா...
**************************
இன்ஸ்பெக்டர் சக்கரையின் செல்போன் அடித்தது. எடுத்துப் பார்த்ததில் புது எண். ''ஹலோ'' என்றார்.
'' சார்...நான் கே கே நகர் ஸ்டேஷன்ல இருந்து பேசுறேன். இங்கே சத்யன்னு ஒருத்தர் தான் ரெண்டு கொலை பண்ணிட்டதா வந்து சரண்டர் ஆகிருக்காரு... மேக்சிமம் நீங்க டீல் பண்ணிட்டுருந்த கேஸாதான் இருக்கணும். இங்கே ஸ்டேஷன் வர்றீங்களா சார்''
'' ஒடனே வர்றேன் சார்'' என்ற சக்கரை, '' பிச்சை... வந்து வண்டியை எடுங்க... ஆள் சரண்டர். கேஸ் முடிஞ்சிடுச்சா, ஆரம்பிக்கப் போகுதான்னு தெரியல....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா...இன்னும் எத்தனை பேர்டா இப்பிடி கெளம்பிருக்கீங்க. கலீஜ் பக்கிங்களா''
**********************************
கிழக்கு கடற்கரை சாலையின் காற்றில் குளிர் கூடியிருந்தது. இரவைப் பூசிய கடலோர மரங்கள் சிலிர்த்து சிலிர்த்து தங்களை சூடேற்றிக்கொண்டிருந்தன. அந்த பங்களா கடல் ஒட்டித்தான் இருந்தது. அவன் கைகளுக்கு உறை மாட்டினான். மூன்று கண்ணாடி கிளாஸ்களில் மாம்பழ ஜூஸ் ஊற்றினான். பாக்கெட்டிலிருந்து சிறிய பாட்டில் ஒன்றினை எடுத்தான். சற்றே பெரிய எழுத்துகளில் பாய்சன் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. மூன்று கிளாஸ்களில் ஒன்றில் மட்டும் சிறிய பாட்டிலைத் திறந்து ஊற்றினான். அவனுக்கு மட்டும் அடையாளம் தெரியும். சிறிது நேரம் கழித்து ஒலித்த காலிங்பெல்லைக் கடந்து அவர்கள் இருவரும் வந்தார்கள். அதில் ஒருவன் மிகவும் வெள்ளையாக இருந்தான். கறுப்பு நிறத்தில் டீ ஷர்ட் அணிந்திருந்தான். ஐ யம் தி பெஸ்ட் என்று அதில் எழுதியிருக்க அப்போதுதான் மீசை அரும்புவிடத் துவங்கியிருந்தது. கண்களில் ஒருவித அவசரம் மிதந்தது. அமர்ந்தவுடன் மூவரும் அந்த மாம்பழ கிளாஸ்களை காற்றில் உயர்த்தி ச்சியர்ஸ் சொன்னார்கள். பத்து நிமிடங்களில் பரிமாறப்பட்ட பேச்சுகளிலும் முத்தங்களிலும் எவ்விதப் பதட்டமுமில்லை. பத்தாவது நிமிட இறுதியில் டீ ஷர்ட் அணிந்திருந்தவன் வாயில் நுரை தள்ளி பெருங்குரலெடுத்து கதறி வயிற்றைப் பிடித்துக்கொண்டு வாந்தி எடுத்தான். ஹாலில் விரிந்திருந்த கார்ப்பெட் முழுவதும் சிதறித் தெறித்தது ரத்தம்.
''என்னடா பண்ணினே'' என்றவனிடம்... '' எனக்கு புடிச்ச பாட்டு இன்னொருத்தனுக்கு புடிக்கும்னு சொன்னா அந்தப் பாட்டோட சேர்த்து அவனையும் வெறுக்கிறவன் நான். எனக்குத் தெரியாம இன்னொருத்தனோட சுகம் கேக்குதுடா இவனுக்கு...அதான்'' என்ற சுந்தர் சொற்களில் குற்ற உணர்ச்சியோ பயமோ இல்லை.
மரங்களுக்கு ஊடாக நடந்துசென்ற சுந்தரின் தோளில் பிணம். கடலினை நெருங்கியவுடன் சுற்றுமுற்றும் பார்த்தான். அலையின் ஓசை, இரவுக்காற்றின் ரகசியம், மரங்களின் சாட்சியம் அவ்வளவுதான். நீரில் இறங்கி கொஞ்சம் தூரம் சென்றவனை அலை கரைக்கு தள்ளிக் கொண்டிருந்தது. அலையோடு மிதந்தே கடலோடு உள்ளே சென்றவன் அப்படியே பிணத்தை நழுவவிட்டான். திரும்பி நடந்தவன் கரைக்கு வந்து நின்று கடல் பார்த்தான். தலை முடியிலிருந்து கடல் நீர் வழிந்து அவன் வாயில் இறங்கியது. கரித்த உப்பை காரித்துப்பினான் கடல் பார்த்து. ஷவர் திறந்து அதன் கீழ் அவனும் அவனும் நிர்வாணமாக நின்றிருந்தபோது சுந்தரின் உடலில் துளி உப்பில்லை.
*************************************
மறுநாள் பேப்பரின் மூன்றாம் பக்கத்தில் மேலே 'கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையில் ஒதுங்கிய அடையாளம் தெரியாத பிணம்' என்ற தலைப்புச் செய்தியைப் படித்து பின் அடுத்த பக்கத்துக்கு சென்றார் இன்ஸ்பெக்டர் சக்கரை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment