Thursday, 26 September 2024

உன்மத்தன் - சிறுகதை

உன்மத்தன்
இந்நேரத்தில் என்னுடன் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும் நீங்கள் என்னுடைய நெருங்கிய நண்பர். உங்கள் பெயர் பாஸ்கரன். உடனே நீங்கள் இல்லையென்று அவசர அவசரமாக தலையசைத்து மறுக்கலாம். நீங்கள் என் நெருங்கிய நண்பராயிருக்கும் பட்சத்தில் உங்களின் பெயரை நான்தானே தீர்மானிக்க முடியும். இந்த இரவில் நீங்கள் உங்களை என்னிடம் ஒப்புவித்திருக்கிறீர்கள். இந்தச் சென்னையின் நிறம் தன்னைப் பல வண்ண வண்ண விளக்குகளினால் இரவென்று அறிவித்துக்கொண்டிருக்கிறது. உங்கள் விரல் பிடித்து நான் சென்னையின் முக்கிய அடையாளமான ஸ்பென்சர் பிளாசாவைக் கடக்கிறேன். இதோ... சிக்னல் கடந்துவிட்டால் அந்தச் சுரங்க நடைபாதை வந்துவிடும். உங்கள் கண்களில் சிக்னலின் சிவப்பு மின்னி மின்னி மறைவதை நான் கவனிக்கிறேன். ஏனோ என் கைகள் நடுங்குகின்றன. உங்கள் இதயத்தின் படபடப்பினை எனக்கு இடம் மாற்றுகிறீர்கள். சிக்னலில் பச்சை விழுகிறது. * '' நானும் சென்னையில் பல இடத்துல பாத்துட்டேன். மேக்சிமம் பத்து மணிக்கெல்லாம் எல்லா சப்வேயும் க்ளோஸ் பண்ணிடுவாங்க. இந்த ஒரு சப்வே மட்டும்தான் க்ளோஸ் பண்றதில்ல. அது ஏன்னு தெரியல. அதனாலையோ என்னவோ பர்மனென்ட்டா பைத்தியங்கள் தங்குற சுரங்கப்பாதையா இது மாறிடுச்சி. ஒனக்கு நான் தர்ற சவால் இதுதான். ஒரு ராத்திரி ஃபுல்லா அதாவது விடிய விடிய அந்த சப்வேயில நீ இருக்கணும். இருந்துட்டா நீ கேட்ட ட்ரீட் நாளைக்கு. என்ன டீல் ஓகேவா..?'' பாஸ்கரனாகிய உங்கள் மனதில் தன் வால் சுழற்றி அடித்தது சாத்தான். ஒருமுறை தன் நாவால் உங்கள் காதுகளை நக்கியது. நீங்கள் தலையாட்டுகிறீர்கள். சப்வே நெருங்கியது. ஒரு பஸ் முழுவதும் மக்கள் தங்களைத் திணித்துக்கொண்டு கடந்தார்கள். பாஸ்கரனாகிய உங்களின் கண்கள் மிக ஆயாசத்துடன் அதைக் கவனித்து விலகுகிறது. என் கையைப் பற்றிக்கொண்டு சுரங்க நடைபாதையின் முதல் படிக்கட்டில் கால் எடுத்து வைக்கிறீர்கள். பின்னி சாலை என்று எழுதப்பட்ட அம்புகுறியின் புட்டம் தொட்டபடி நீண்டிருந்த அண்ணா சாலையைக் கவனிக்கிறீர்கள். உங்கள் கைகளின் இறுக்கம் கூடுகிறது. வலதுபக்கம் திரும்பினால் சுரங்க நடைபாதையின் ரகசியம் தன் உடல் நீட்டிப் படுத்திருக்கும். திரும்பியவுடன் உங்கள் பார்வையில் அது தென்படுகிறது. ஒரு சாக்கு மூட்டை. இரவு பத்து மணிக்கு நான்கு டியூப்லைட்டுகள் அந்த சப்வேயை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறது. சாக்கு மூட்டையில் தலைவைத்து அவன் படுத்திருந்தான். பாஸ்கரனாகிய உங்கள் உச்சந்தலையில் பளிச்சென்று ஓர் ஆணி இறங்குகிறது. அவன் முழு வெளிச்சத்தில் கிடந்தான். இருந்தும் முதல் பார்வையில் சிக்காதவாறு அத்தனை அழுக்காய் இருந்தான். தலைமுடி சிக்குண்டு பரந்திருந்தது. உடல் முழுவதும் அடர் பழுப்பில் அழுக்கின் நிறம், படையாய் படர்ந்திருக்க அவன் அணிந்திருந்த ஒற்றை ட்ராயர் அவன் உடல் வண்ணத்துடன் கலந்திருந்தது. அந்த ஆடையின் நிறம் நிச்சயம் அது கிடையாது. உள்ளங்கால்கள் முழுவதும் உலகத்தின் அத்தனைக் கறுப்பையும் சேமித்து வைத்திருந்தான். பாஸ்கரனாகிய உங்களின் மூச்சு ஒரு வேட்டை நாயின் இரைப்புக்கு சவால் விடுகிறது. உங்கள் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு நகர்கிறேன். நீங்கள் முதல் தவறு செய்கிறீர்கள். உங்களின் கண்களை அவனிடமிருந்து விலக்க முடியவில்லை. நான் அவசர அவசரமாக அந்த இடத்தைக் கடக்கும் முனைப்புடன் சுரங்கப் பாதையில் ஏறும் படிகளை நோக்கி விரைகிறேன். என் கைகள் உங்களை வலுக்கட்டாயமாக இழுப்பதாலோ என்னவோ உங்கள் கால்கள் தயங்கினாலும் என் உறுதிக்கு உடன் வருகிறீர்கள். இடது பக்கம் ஏறும் படிகளை மிக அருகில் நெருங்கிய கணம் நீங்கள் சற்றே... மிக சற்றே வலுக்கட்டாயமாக உங்கள் பார்வையை அவன் பக்கம் திருப்புகிறீர்கள். இந்த இரவின் ஆரம்பத்தில் நீங்கள் செய்யும் இரண்டாவது தவறு அது. உங்கள் கண்கள் உறைகின்றன. ஒரு கையால் தன் தலையைத் தாங்கியபடி கண்களின் கருவிழி மேலே செருக அவன் உங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறான். நான் உங்கள் கையை விடுவிக்கிறேன். பாஸ்கரனாகிய நீங்கள் இப்போது அவனை நோக்கிச் செல்கிறீர்கள். அருகில் நெருங்கியதும் அவன் முகத்தை உற்று நோக்கிய நொடி மனதில் தாள முடியாத நடுக்கத்துடன் சட்டென்று சுரங்க நடைபாதையின் மொசைக் சுவற்றில் உங்களைச் சாய்க்கிறீர்கள். உங்கள் தலை சுவற்றில் அழுந்தப் பதிகிறது. தலை பதிந்த இடத்தின் அருகில் அந்தப் பெரிய சைஸ் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதை உங்கள் வலது கண் ஓரத்தில் கவனிக்கிறீர்கள். காணவில்லை பெயர் : ராஜேந்திரன் வயது : பாஸ்கரனாகிய உங்களைவிட 12 வயது அதிகம் அடையாளம் : சிவந்த மேனி, அடர் மீசை, சிரிக்கும் கண்கள் காணாமல் போன தினத்தன்று அணிந்திருந்த உடை : அடர் நீலத்தில் சட்டையும் கறுப்பு கலர் பேன்ட்டும் காணாமல் போன தினம் : பாஸ்கரனாகிய உங்களின் திருமண நாள் * '' உன் கல்யாணத்துக்கு நான் வருவேன் பாஸ்கர். உனக்கு கிஃப்டும் குடுப்பேன். உன்ன பாப்பேன். சாப்பாடும் சாப்பிடுவேன். அதுக்கப்புறம் நீ என்ன தேடாத.'' '' ஏன்... நான் கல்யாணம் பண்ணிக்கிறதுல உங்களுக்கு இஷ்டமில்லையா?'' '' ச்சே ச்சே... உன் சந்தோசம் முக்கியம். நீ சந்தோசமா இருந்தா அது எனக்குப் போதும். நீ கல்யாணம் பண்ணிக்கோ.'' '' அப்புறம் ஏன் என்னை விட்டுப் போறேன்னு சொல்றீங்க.'' '' நான் எப்போ சொன்னேன். உன் நெஞ்சுல கையை வெச்சி சொல்லு. நான் உன்னைவிட்டுப் போவேனா...'' பாஸ்கர் தன் கையை அவரின் நெஞ்சில் வைத்துச் சொன்னான். '' நீங்க என்னை விட்டுப் போனாலும் சாகுற வரைக்கும் உங்ககூடத்தான் நான் இருப்பேன்.'' * அந்தப் பைத்தியம் இப்போது மல்லாந்திருந்தான். அவனின் அழுக்கு ட்ராயரை மீறி விடைத்துத் தெரிந்தது அவனின் குறி. பாஸ்கரனாகிய நீங்கள் தளர்ந்து தரையில் அமர்கிறீர்கள். இடது கையை ஊன்றிய இடத்தில் பிசுக்கென்று ஏதோ ஒட்டுகிறது. பதறிப் பார்க்கிறீர்கள். ஒரு சாம்பார் பாக்கெட் உடைந்து சிதறியிருக்கிறது. அதற்கு சற்றுத் தள்ளி பிரிக்கப்படாத தேங்காய்ச் சட்னி பாக்கெட் கிடக்கிறது. டிஸ்போசபிள் டம்ளர் ஒன்று காற்றின் போதையில் அங்கும் இங்கும் உருண்டபடி கிடக்கிறது. வெறும் காகிதம் சிறு உலக உருண்டை வடிவத்தில் கசங்கிக் கிடக்கிறது. ஒரு ஆங்கில தினசரி அழகாய் விரித்து வைக்கப்பட்டிருக்கிறது. பாஸ்கரனாகிய நீங்கள் அவனை நோக்கி நகர்கிறீர்கள். சிறிதும் சலனமின்றி அவன் கண்கள் சுரங்கப் பாதையின் மேற்கூரையையே உற்றுப் பார்த்தவண்ணம் உள்ளன. அவன் அருகில் நீங்கள் அமர்ந்ததும் பொதுக் கழிப்பிடத்திலிருந்து வீசும் மூத்திர நாற்றம் உங்கள் நாசியைத் தாக்குகிறது. நீங்கள் ஆழ்ந்து அந்த நாற்றத்தை சுவாசித்தபடி அவனின் குறியைப் பிடித்து வருடுகிறீர்கள். இரண்டு கைகளின் விரல்களைக் கோத்து தலைக்குப் பின் வைத்துப் படுத்திருக்கும் அவனின் உதடுகள் பிளந்து சிரிப்பொன்று மிதக்கிறது. சுரங்க நடைபாதையின் கூரை மேலே கனரக வாகனங்கள் விரைவதை நீங்கள் அமர்ந்திருக்கும் தரை அதிர்வதிலிருந்து புரிந்துகொள்கிறீர்கள். உங்களின் உடலும் அதிர்கிறது. தொடர்ந்து விரைகின்றன மிகக் கடினமான பொருட்களை ஏற்றிச்செல்லும் மிகப்பெரிய வாகனங்கள். உங்கள் முகம் இறுகுகிறது. பாஸ்கரனாகிய உங்களின் குறியிலிருந்து வெளிப்பட்ட சுக்கிலத்துளிகள் தொடையை நனைத்துப் படிகிறது. எப்போது வெளிப்பட்டது என்று தெரியவில்லை. படுத்திருக்கும் அவனின் சிரிப்பு உறைந்திருப்பது புரிகிறது. சுரங்க நடைபாதையின் உள் வெளிச்சத்தின் வீச்சு முழுவதுமாய் பெருக நள்ளிரவின் குளிர் கொஞ்சமாய் வந்து நடைபாதையில் கால்நீட்டிப் படுக்கிறது. பெருமூச்சு விட்டபடி எழுந்து விலகுகிறீர்கள். திடீரென்றுதான் உணர்கிறீர்கள். திறந்துகிடக்கும் படிகளின் வழி அந்தக் குரல் வருகிறது. சத்தியமாய் அது ஓர் ஆவியின் அழைப்பாய்தான் உங்கள் செவிகளில் விழுகிறது. ஒரு ஹம்மிங் அது. மெல்லியதாய் வீசும் காற்றின் துணையுடன் அந்தக் குரல் உங்களைத் தேடுகிறது. படியை நோக்கிப் பாய்கிறீர்கள். உங்களை யாரோ தடுத்து நிறுத்துகிறார்கள். ' நினைத்தேன் வந்தாய் நூறு வயது... கேட்டேன் தந்தாய் ஆசை மனது... நினைத்தேன் வந்தாய் நூறு வயது...கேட்டேன் தந்தாய் ஆசை மனது...நினைத்தேன் வந்தாய் நூறு மனது...கேட்டேன் தந்தாய் ஆசை மனது...' தூரத்தில் உங்களை அழைத்த குரல் ஓய்கிறது. ஓர் ஆட்டோ புறப்பட்டுச் சென்ற ஓசை உங்கள் செவிகளில் நிரந்தரமாக, கையறு நிலை உணர்கிறீர்கள். அந்தக் கடைசிப் படியிலே எத்தனை மணி நேரம் நின்றுகொண்டிருந்தீர்கள் என்று உங்களுக்கே தெரியவில்லை. ' பாஸ்கரனாகிய நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது சூரியன் எஃப் எம்மின் நினைத்தாலே இனிக்கும்'. இரு கால்களையும் குறுக்கியபடி அமர்கிறீர்கள். ஏதோ சிரிப்புச் சத்தம் கேட்கிறது. எதிரொலிக்கும் சுவற்றினையே உற்றுக் கவனிக்கிறீர்கள். யாரோ துப்பிய வெற்றிலைப் பாக்கு எச்சில், சிவப்பாய் மூன்று கத்தியை வரைந்திருக்கிறது. பாஸ்கரனாகிய நீங்கள் அதிலிருந்து ஒரு கத்தியை உருவியெடுத்து சிரித்துக்கொண்டிருக்கும் அவனின் கழுத்தில் வைக்கிறீர்கள். * '' சார்... அந்த நூத்தியெட்டாம் நம்பர் பேஷன்ட் கைல கத்தியை வெச்சு மெரட்டிட்டு இருக்கான் சார்.'' யாரோ கத்தினார்கள். பெரும் கூட்டமே கூடியிருந்தது. '' வேணாம் பாஸ்கர். ரொம்ப ரிஸ்க்கான பொருள். கீழ போட்ருங்க. உங்களுக்கு என்ன வேணும். ஏன் இப்பிடி பண்றீங்க. கத்தியைக் கீழ போடுங்க.'' கழுத்து நரம்பு புடைக்க ஒருவர் கத்தினார். '' நான் அன்னிக்கே சொன்னேன். க்ரிட்டிகள் கண்டிசன்ல இருக்கிற பேஷன்ட்டை ஃப்ரீயா விடாதீங்கன்னு. கேட்டீங்களா. எதையாவது அறுத்துக்கிட்டான்னா அவன் குடும்பத்துல வந்து கேக்குற கேள்விக்கு யாரு பதில் சொல்றது. இவனையெல்லாம் போய்த்தொலையுது சனியன்னு வெரட்டி விட்ரணும்.'' பாஸ்கர் அங்கிருந்த மரத்தை அந்தக் கத்தியால் அறுக்கத் தொடங்கினான். பின்னாலே சென்று அவனை அமுக்கிப் பிடித்து அவன் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கினார்கள். யாரோ பாஸ்கரின் கையில் பேனாவைத் திணித்தார்கள். பாஸ்கர் ராஜேந்திரனுக்குக் கடிதம் எழுதத் தொடங்கினான். அன்பு நண்பா... இது உனக்கு நான் எழுதும் கடிதம் என்றும் சொல்லலாம். அல்லது எனக்கு நான் எழுதிக்கொள்ளும் கடிதம் என்றும் சொல்லலாம். உனக்கும் இதில் சில செய்திகள் சொல்லப்பட்டிருக்கும். அவ்வளவே. அருவமானது என்பதை சாதகமாக்கிக்கொண்டு இவர்கள் இந்த மனத்தினை படுத்தும் பாடு கண்டுதான், 'மனம் மட்டும் ஓர் உறுப்பாயிருந்திருந்தால் இந்நேரம் வெட்டி வீசியிருப்பான் தலைவன்' என்றானோ ஒரு கவி. வெகு எளிமையானவன் நண்பா நான். இதுவரைக்கும் பசி தாங்க முடியாமல் எவனொருவன் உறுப்பையும் சுவைத்து பசி தீர்த்தததில்லை. பீ தின்றதில்லை. மற்றபடி பசி என்னைத் தின்ன அனுமதித்திருக்கிறேன். உறங்கக்கூடாத, உறங்க முடியாத இடங்களில் நான் இமை இறுக்கியிருக்கிறேன். எனக்கான தூக்க மாத்திரைகள் வீரியம் இழந்து போனதும் எனக்கான தூக்குக் கயிறு அத்தனை நம்பகமில்லாத கம்பெனியில் தயாரிக்கப்பட்டதும் என் தவறா என்ன? அடி, வலி, ரத்தம், கண்ணீர், கதறல், தனிமை, மது, சுக்கிலம்... என்று நாம் கை கோத்துக்கொள்ள சில காரணங்கள். ஆனாலும் பயமாயிருக்கிறது. கோத்துக்கொண்ட உள்ளங்கை உள்ளே இரு இமைகள் துடித்துக்கொண்டிருக்கின்றன. எனக்கு முன்னே நீண்டிருக்கிறது ஒற்றைப்பாதை. மாலைச் சூரியன் மயங்கி நெடுநேரமாகிவிட்டது நண்பா. இனி உன் மது புட்டியைத் திறக்கலாம். என் சூரியனுக்குதான் சாராய சன்னதம் பிடித்துப் போய்விட்டது. காலை மதியம் இரவென்று பார்ப்பதில்லை. நீண்டிருக்கும் பாதையின் முடிவு தெரியவில்லை. ஆனால் பயணம் சாத்தியமாயிருக்கிறது. அடர்ந்த மரங்களின் இடையே நிகழும் இந்தப் பயணத்தில் உன் பாடலை நீ பாடு. என் பாடலை நான் பாடுகிறேன். நம் பாடலை இந்தச் சாலையோ, அருகிலிருக்கும் காடோ, அடர் இரவோ பாடட்டும். நீ எனக்கு ஒரு கதை சொன்னாய் அல்லவா. ஞாபகமிருக்கிறது. ' நானும் நீயும் இருந்த அறையில் ஒரு பூனை வளர்ந்து வந்தது. அந்தப் பூனையை நான்தான் கொன்றேன். ஒரு பூனையைக் கொல்வதற்கு ஆயிரம் காரணங்கள். அது என்னைவிட அழகாயிருந்தது மட்டுமல்ல. என்னைவிட அமைதியாயிருந்தது. என்னைவிட கருணையாயிருந்தது. என்னைவிட ஆறுதலாயிருந்தது. அதன் தலை கோதினால் சுருண்டு என் மடியில் படுத்துக்கொண்டு என் விசுவாசத்தினை கேலி செய்துகொண்டிருந்தது. நீதான் பால் வைத்தாய். நாக்கு சுழற்றி குடித்துக்கொண்டிருக்கும்போதே அதன் தலையை ஆதூரமாய் தடவிக்கொண்டிருந்த என் கைகள் சட்டென்று அதன் கழுத்து எலும்பை முறித்துப் போட்டன. நீ உன் கண்ணீர் துடைக்க கன்னம் நீட்டியபோது என் கைகள் முழுக்க ரத்தமாயிருந்ததற்கு காரணம் அதுதான் நண்பா. என்னைவிட ஆறுதலாயிருக்கும் ஒரு பூனையை, என்னைவிட எல்லாவற்றிலும் நேசமாயிருக்கும் அணிலை, என்னைவிட சுதந்திரமாயிருக்கும் வண்ணத்துப்பூச்சியை ஏன் நான் கொல்கிறேன் என்று இப்போது உனக்குப் புரிகிறதா? ' நாம் ஒருநாள் செத்துப் போவோம் நண்பா. அதற்குள்தான் சிரிக்க வேண்டும். அதற்குள்தான் அழ வேண்டும். அதற்குள்தான் முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குள்தான் காதலிக்க வேண்டும். அதற்குள்தான் சில துரோகங்களை, வலிகளை, அலட்சியங்களை, காயங்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்குள்தான் வாழ வேண்டும். ஆனால் காலம் அதற்கான சந்தர்ப்பங்களை சரியான நேரத்தில் சரியான இடத்தில் வழங்குகிறதாவெனப் புரியவில்லை. இன்று நான் சிரித்தேன் என்றாய் அன்று. சிரிப்பது என்பது டைரிக்குறிப்பு போல எப்போதாவது எழுதப்படுகிறது நண்பா. நாள்காட்டி தாள் போலத்தான் ஆகிவிட்டது அழுவது. முன்னமே சொல்லிவிட்டேன் இது எனக்கு நானே எழுதும் ஒன்று என்று. ஆனால் உன்னைப் பற்றியும் பேசுகிறேனோ என்று அச்சமாயிருக்கிறது. விடிவதற்கான நேரம் நெருங்கிவிட்டது நண்பா. உனக்கான கடிதம் ஓர் இரவுக்குள் எழுத வேண்டியது மட்டுமே. அதோ பாதை கண்ணுக்குப் புலப்படுகிறது பார். ஈரமான ஒரு நத்தை நம்மைக் கடந்து செல்கிறது. இப்போது ஏன் விழிக்க வேண்டும் என் உள்ளங்கை இமைகள். உடைவதற்கு தயாராய் இருக்கின்றன கண்ணீர் சுரப்பிகள். நான் உன் கையை இறுகப் பற்றுகிறேன். என்ன இது... இவ்வளவு ரத்தம். அடப்பாவி நான் அப்போதே சொன்னேன். கேட்டாயா.. மதுக்கோப்பை நொறுங்கும் அளவுக்கா இறுகப் பற்றுவது? நாம் நம் துயரங்களை நொறுக்க முடியாமல் கோப்பைகளை நொறுக்குகிறோம். இப்படிக்கு இப்படிக்கு மட்டுமே. * சட்டென்று எழுந்து சுவரோரமாய் ஒதுங்குகிறீர்கள். உங்கள் கையிலிருக்கும் பேனாவினை சிரித்துக்கொண்டிருக்கும் அவனை நோக்கி எறிகிறீர்கள். மிக வேகமாகச் சென்ற அந்தக் கல் மொசைக் சுவற்றில் பட்டுத் தெறிக்கிறது. அவன் ஆவேசமாய் அந்த மூட்டையிலிருந்து கத்தியையும், பேப்பரையும், பொம்மைகளையும், நாப்கின்களையும், செருப்புகளையும், பரோட்டாக்களையும், பழைய சாக்ஸுகளையும், தூக்க மாத்திரைகளையும், கல்யாணப் பத்திரிகைகளையும், கலர் பென்சில்களையும், எவர்சில்வர் குங்கும டப்பாவையும் உங்கள் மீது எறிகின்றான். நடை பாதையை நிரப்பத் தொடங்கியவைகளை அதிர்ச்சியுடன் கவனிக்கிறீர்கள். உங்களுக்கே பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது. பாஸ்கரனாகிய நீங்கள் சுவர் ஓரமாய் ஒண்டியபடியே நீங்கள் முதலில் வந்து இறங்கிய வாசலுக்கு வருகிறீர்கள். பாதையெங்கும் சிதறிக் கிடப்பவைகள் மீது உங்கள் பாதம் படாதவாறு கவனமாய் நடந்து ஏறும் படிகளுக்கு வருகிறீர்கள். பின் அங்கும் இங்குமாய் இந்த விளையாட்டு தொடர்கிறது. முடிவாய் உங்கள் கண்ணுக்குக் கொஞ்சமாய் வானம் தெரிகிறது. இவ்வளவு கறுப்பாய் வானத்தை இப்போதுதான் பார்க்கிறீர்கள். அவனிடமிருந்து நீங்கள் தப்பிக்கும் முனைப்பில் இருந்தாலும் ஏதோ ஒரு வசீகரம் அவனை விட்டுப் பிரியாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறது. அவனிடம் சென்று பேச வேண்டும் என்ற நினைப்பு மனதில் தோன்றிய கணமே ஆயிரம் கேள்விகள் நீர்ப்பாம்புகளாய் நெளிந்து விரைகின்றன. பாஸ்கரனாகிய நீங்கள் அவனை நோக்கி நடக்கிறீர்கள். உங்களின் மேல் அணைத்து வீசிய சிகரெட் துண்டுகள் நிறைய ஒட்டியிருப்பதை அப்போதுதான் உணர்கிறீர்கள். பாஸ்கரனாகிய உங்கள் முட்டிக்கால்களுக்குக் கீழே மிக மெலிதாய் நடுக்கமிருக்கிறது. இங்கே வந்ததிலிருந்து ஒரு வார்த்தைகூட பேசாத நீங்கள் முதன்முறையாய் மெளனம் உடைக்கிறீர்கள். '' உன் பேர் என்ன?'' ஒரு பைத்தியத்திடம் இப்படி ஒரு கேள்வி கேட்டால் அவன் அல்லது அது பதில் சொல்ல ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா, தனக்குப் பெயர் என்ற ஒன்று உண்டு என்பதாவது அவனுக்குத் தெரியுமா, அவன் தன்னை ஆணாய் உணர்வானா? முட்டி மோதும் கேள்விகளுக்கு நடுவிலும் அதற்கான பதில் நடைபாதையின் அத்தனை இடங்களிலும் நிரம்பியிருப்பதை உணர்கிறீர்கள். எதற்கும் பதில் சொல்ல விரும்பாமல் தனக்குள்ளேயே அத்தனைக் கேள்விகளையும் பதில்களையும் போட்டுப் பிணைத்து வலுவான சங்கிலியால் தன்னைக் கட்டிப்போட்டு ஆழ்கடலுக்குள் மூழ்கிக்கிடக்கும் மனத்தை என்ன செய்து மீட்பது? அவன் மெதுவாக அங்கிருக்கும் மூட்டையிலிருந்து ஒரு மெழுகுவத்தியையும் தீப்பெட்டியையும் எடுத்தான். உங்களிடம் நீட்டியதும் நீங்கள் வாங்கிக்கொள்கிறீர்கள். பற்றவைத்து மெழுகுவத்தியை சாய்த்து சில துளிகள் தரையில் சிந்தியதும் அதை மெழுகின் உயிர் மீது நிறுத்துகிறீர்கள். எரிந்துகொண்டிருக்கும் டியூப்லைட்டுகளை மீறியும் அருவமான இருள் அவ்விடத்தைச் சூழ்கிறது. பேரிருளுக்குள் நீங்கள் இருக்கும்போதுதான் அவனிடமிருந்து விசும்பல் எழுகிறது. மெள்ள அழுகையாகி கண்ணீர் நீர்த்தாரையாய் பொழிய அவன் அலறத்தொடங்கும் முன் சுரங்கப் பாதையின் ஷட்டர் மூடப்படும் ஓசை கேட்கிறது. பதறி எழுந்து ஓடி மூடிய ஷட்டரை வேகமாய் அசைக்கிறீர்கள். ''அய்யோ...'' உங்களின் கதறல் வெளிச்செல்ல வாய்ப்பேயில்லை. * '' எனக்கு எதுவுமில்லை. ராஜேந்திரனைப் பர்த்தால் எல்லாம் சரியாகிவிடும். அவரைத் தேடி நான் எங்கெல்லாம் அலைந்தேன். அவர் வேலை பார்த்த ப்ரைவேட் கம்பெனியில் சென்று விசாரித்தால் வேலையை ரிசைன் செய்துவிட்டார் என்றார்கள். வீட்டிற்குச் சென்றால் காலி செய்துவிட்டார். பத்து நாட்களில் எல்லாம் நடந்திருக்கிறது. ஹனிமூன் என்று நான் கேரளா சென்றிருக்கக் கூடாது. ராஜேந்திரனுடன் இருந்திருக்க வேண்டும். அவரைவிட்டுப் பிரிந்திருக்கக் கூடாது. எதற்கு அப்படி முடிவெடுத்தார். என் மீது அவ்வளவு பாசமாக இருந்தாரே... என்னை விட்டு ஒரு நொடியில் விலக எப்படி அவருக்கு மனம் வந்தது. அவரின் அருகாமை இல்லாமல் என்னால் எப்படி இயல்பாய் வாழ முடியும்? அவருக்கு தண்டனை தர நான் முடிவெடுத்தேன். என்னை நானே கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துக்கொண்டேன். அவருடன் பேசிய வார்த்தைகள், பழகிய நாட்கள், அலைந்து திரிந்த தெருக்கள், உண்டு உறங்கிய பொழுதுகளை மட்டும் மனதில் வைத்து மற்ற எல்லாவற்றையும் அழித்துவிட்டேன். மெளனமானேன். பைத்தியமானேன்.'' * பாஸ்கரனாகிய நீங்கள் தளர்ந்துவிட்டீர்கள். இனி எந்த அலறலும் இங்கே தன்னை பிரகடனப்படுத்தப் போவதில்லை. நேரம், காலம், இரவு, பகல் எல்லாம் மறந்துவிட்டது. இது தனி உலகம். இங்கே நீங்களும் அவனும் மட்டுமே. மொசைக் சுவற்றில் படிந்த உங்கள் நிழல் மெழுகுவத்தி வெளிச்சத்தில் ஆடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் எச்சில் விழுங்குகிறீர்கள். தொண்டை காய்ந்திருக்கிறது. தண்ணீர் குடித்தால் நன்றாக இருக்கும். அவனின் மூட்டைக்குள் பிரிக்கப்படாத ஒரு வாட்டர் பாக்கெட் இருக்கலாம். பாதி வெளிச்சமும் பாதி இருளுமாய் அவன் முகம் மிகத் தெளிவாய் இருக்கிறது. அனிச்சையாய் உங்கள் கை உங்கள் முகத்தை தொட்டுப் பார்க்கிறது. யாரோ உங்கள் முதுகில் கத்தி வைத்துக் கீறுவது போல் முனகலுடன் கழுத்தை உயர்த்துகிறீர்கள். உங்கள் முகம் இருள் பூசியிருக்கிறது. கண்களில் எரிச்சலுடன்கூடிய வலி வந்துவிட்டது. கண்களுக்குக் கீழே கருவளையம் சிறு சதைப்பந்தாக உருண்டு திரண்டிருக்கிறது. அவன் மூட்டைக்குள் நீங்கள் கைவிடும் நேரம் மிகத் துல்லியமாகக் கேட்கிறது ஒரு நாயின் மூச்சிரைப்பு. அவன் முகத்தையே உற்று நோக்குகிறீர்கள். அடைக்கப்பட்டிருந்த கதவு வழியே அந்த நாய் இறங்கி வந்து அவன் அருகில் வால் சுருட்டிப் படுக்கும்வரை மூச்சை இறுக்கப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறீர்கள். தாகமெல்லாம் இல்லை. ஏதோ வெறி மட்டுமே துரத்துகிறது. எழுந்து நடைபாதையெங்கும் சிதறிக்கிடக்கும் எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கிறீர்கள். பாஸ்கரனாகிய உங்கள் கையில் தீப்பெட்டி இருக்கிறது. சுரங்க நடைபாதையின் மூலையில் அத்தனைக்கும் சேர்த்து தீ வைக்கிறீர்கள். எரியத் தொடங்குகிறது எல்லாம். கரியாகி, சாம்பலாகிய பின் ஒரு புகைப்படம் மட்டும் மிச்சமாய் எழுந்து காற்றில் மிதந்து அந்த சப்வேயைவிட்டு வெளியே பறந்து செல்வதையே கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உடல், மனம் தளர்ந்து அவன் அருகில் சென்று படுக்கிறீர்கள். உங்களின் காலுக்குக் கீழே சுருள்கிறது கண்களில் பழுப்பேறிய நாய். * ஜனவரி ஒன்று காலையில் நான் அலுவலகம் புறப்பட்டேன். வழக்கமாய் செல்லும் பாதைதான். அண்ணாசாலை தன் வழக்கமான பரபரப்புகளில் இயங்கிக்கொண்டிருக்கும். தவிர்த்து சப்வேயில் இறங்கினேன். குளிருக்குக் கிராமங்களில் விடிகாலை நேரத்தில் பழைய சுள்ளிகளைப் போட்டு எரித்துக் குளிர் காய்வார்கள். அதுபோல் நான் இறங்கிய கடைசிப் படிக்கு அருகில் ஏதோ புகைந்துகொண்டிருந்தது. காலையில்தான் யாரோ குளிர் காய்ந்திருக்க வேண்டும். உள் நடக்கத் தொடங்கினேன். ஏதோ பெரும் சண்டை நடந்தது போல் நடைபாதையெங்கும் என்னன்னமோ சிதறியிருந்தன. வலது பக்கமாய் அவன் படுத்திருந்தான். ஆழ்ந்த உறக்கத்திலிருக்கலாம். அல்லது ஆழ்ந்த மெளனத்திலாவது. பைத்தியம் என்று எப்போதும் நான் சொல்வதில்லை. மனநிலை தவறியவன் என்றுதான் சொல்வேன். எனக்கு முந்தைய நாள் இரவு புது வருட கொண்டாட்டம் ஞாபகத்துக்கு வர கொஞ்சம் குற்ற உணர்வுடன் அவனை என் மொபைலில் போட்டோ எடுத்தேன். முகநூலில் பதிந்து பதிவு போட்டதும் மேலும் குற்ற உணர்வுதான் ஆட்கொண்டது. அந்த டிசம்பர் 31 இரவு அந்த சப்வேயில் என்ன நடந்திருக்கும் என்று யோசித்தே பின் இதைக் கதையாய் எழுதினேன். ஒன்று மட்டும் இப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கிறது. நான் அவனை போட்டோ எடுக்கையில் என்னையே உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த நாயின் கண்களில் இருந்த நன்றி தொலைந்துபோன வெறுப்பு. - முற்றும்.

No comments:

Post a Comment