Thursday, 26 September 2024

ஷாஜி - சிறுகதை

ஷாஜி
காதலென்ற மும்தாஜின் ஞாபகத்தில் முத்தமிட்டு இம்மடலைத் தொடங்குகிறேன். வெண்ணிற பளிங்குகள் மிதக்கும் அரண்மனையில் மட்டுமல்ல; என் அகத்தின் விஸ்தரிப்பில் முதலானவளுக்கு... உன்னால் இவ்வுலகத்தை ஆண்டவனின் கடைசிச் செய்தி. இறுதி நாளின் புரைகளில் வழியும் பழைய நாளின் நீர் மிச்சத்தை உன்னிடம் இவ்வழி சொல்ல இறைவன் வழங்கிய வாய்ப்புக்கு நன்றி. வருங்காலம் காதலின் சின்னம் எனப் போற்றப்படும் ஒன்று குற்ற உணர்வின் மொத்த உருவம் என்னும்படி ஆகிவிடக் கூடாதே என்ற பதைபதைப்பில் உனக்கு எழுதும் மடல் இது. நம் இயற்பெயரை மாற்றி என் தந்தை தந்த புனைப்பெயரில் வாழ்ந்த நம் வாழ்வு போலவே தன் இயற்பெயரை மாற்றிக்கொள்ளுமோ இந்தக் காதல் என்ற நடுக்கத்தில் எழுதும் மடல். நரை கூடிய முதிய நாளில் உன்னிடம் பகிர நினைத்த எல்லாம்தான் இதோ இந்த நாளில் உன் ஞாபகம் கலந்திருக்கும் காற்றில் எழுதுகிறேன். வரலாற்றின் பின் நாட்கள் என்னைப் பற்றிய குறை கூறி குற்றவாளிக் கூண்டில் கூட ஏற்றலாம். அந்தக் கூண்டு முழுவதும் காதலைப் பூசி வைத்தது நீதானே மும்தாஜ். என்னில் ஒரு பாதியாய் நீ நின்று இயங்கிக் கொண்டிருந்தது என் அகமனக் கண்ணுக்கு மட்டும்தான் தெரிந்தது. புறப் பார்வையிலும் என் பாதி வெளித்தெரிய வேண்டுமென்றுதான் போகுமிடமெல்லாம் உன்னையும் கூட்டிக்கொண்டே அலைந்தது. உண்மைக் காதலுக்குதான் இவ்வுலகில் எத்தனை எத்தனை பெயர்கள். உன் இன்ப துன்பங்களில் நான் பங்கு கொள்வதை விட நம் இன்பமும் துன்பமும் நாமாய் இருக்க வேண்டியதன் விளைவுதான் ஓருயிரில் குடிகொண்டுவிட்ட நம் உடல்கள். நான் ஏன் உன்னைப் பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தேன் என என்றாவது யோசித்திருக்கிறாயா மும்தாஜ். நீ என்னைவிட மதியூகி. சம வயது என்பதாலோ என்னவோ இருவரும் ஒரே அலைவரிசையில் முத்தமிட்டுக்கொண்டோம். அரண்மனை நிர்வாகங்களில் உன் விரலசைவில் ஏற்படத் தொடங்கிய மாற்றங்கள் கண்டுதான் என் யோசனையும் யாசகமும் உன்னில் உன்னை உனக்காக உன்னிடம் என்றானது. நீள் நதியான நம் பதினெட்டு வருட இல்லற வாழ்க்கைக்குத் தொடக்கமான சிறு துளியில் விரிந்த உன் அழகும் மின்னலாய் ஊடுருவிய பார்வையும் இந்த நிமிடம் கூட என் நெஞ்சில் அலையெனத் துள்ளுகிறது மும்தாஜ். அன்றைக்கு மாலை மறைந்த மென்மையான ஆரஞ்சு சூரியன் என்னை ஆசிர்வதித்திருந்தது. உன்னைச் சந்திக்கப் போகிறேன் என்பதை எந்த மின்னலும் மின்னித் தெரிவிக்கவில்லை. எவ்வளவு நேரம்தான் என் பாரத்தைக் குதிரை தாங்குவது... குதிரைக்கும் ஓய்வு தந்து நான் இறங்கி நடக்கிறேன். என் கால்கள் நடந்தன. என் கண்கள் நகர்ந்தன. பொருட்காட்சி சந்தையில் என் உயிர்க் காட்சியைச் சந்திக்க வேண்டுமென்பது இறையின் ஆணை. அதை மாற்ற யாரால் முடியும். எத்தனையோ முகங்கள் என்னைக் கடக்கின்றன. மூடிய மஸ்லின் திரைக்குப் பின்னால் மருண்ட விழிகளும் நாணப் புருவங்களும் வேகமாய் விலகுகின்றன. என் நாசி மோதி விலகுகின்றன புதுபுது வாசனைகள். எல்லாம் செயற்கைத் திரவியங்களின் அடக்கமாட்டாத வெளிப்பாடு. என் உள்ளத்துக்குள் மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது காதலின் பாங்கோசை. இது என்ன புதுவிதமான காற்றின் வருடலென்று என் காதுமடலின் சில்லிப்பைத் தொட்டுத் தடவிப் பார்க்கிறேன். என் இடது கண் வேகமாய் துடித்து அடங்குகிறது. கால்களில் வேகம் பூட்டி விரைகிறேன். விழாக்கால கடைகளைப் பார்த்து உலா வந்த என் பார்வைத் தேடலில் நீ பட்டாய். கண்ணாடிப் பொருட்கள் நிரம்பிய கடையில் உன் முகத்தில்தானே என் முகம் பார்த்தேன். பளிங்கின் தூய்மையில் என் பால்யம் விளங்கிற்று. கொதிக்கும் பாலில் விசிறிய ஒரு துளி நீராய் அப்படியே என் மனத்துடிப்பின் பூரிப்பு அடங்கிற்று. காதலின் சந்தையில் நீ வியாபாரியானாய். நான் வணிகனானேன். நான் விலை விசாரித்த கண்ணாடிக் கோப்பையில்தான் என் இதயம் கிடந்து துடித்துக்கொண்டிருந்தது உன் கையில் இருந்ததால்தான் காதலே... என்னைச் சீண்டுவதற்கென நீ சொல்லிய வார்த்தையில்தான் எத்தனை உண்மை. கண்ணாடியை வைரமென நீ சொன்னது எனக்கான குறும்புப் பொய்யல்லவே. உன் கையிலிருக்கும் கண்ணாடி எப்படி கண்ணாடி ஆகும்? அது வைரத்துக்கும் மேலான ஒன்று. உனக்கும் கீழான ஒன்று. என்னைப் போலவே உனக்குள்ளும் அன்று பொழுது தன் நிறம் மாற்றியிருக்கும். நான் அன்று அதிக விலை தந்து கண்ணாடியை வைரமென வாங்கினேன், வைரம் பளபளத்த கண்களைப் பார்த்துக்கொண்டே... உன் பெயர் அறியாமல் துடித்துக்கொண்டிருந்த என் இதயத்தைப் பண்டமாற்று முறையில் உன்னிடம் வழங்கிக்கொண்டே வாங்கினேன் உன் இதயத்தை. அந்த முதல் நாள் சந்திப்பின் ஈரம் துளி மாறாமல் இதோ என் நரைத்த தாடியின் ஒவ்வொரு ரோமங்களும் காற்றில் உன்னை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறது. நாம் வாழ்ந்த நாட்களில் அரசல் புரசலாக என் செவியில் விழுந்த வார்த்தைகள்தான், நான் உன் மேல் பித்துகொண்டு திரிகிறேனென்று. என் எல்லா நோய்மைக்கும் மருந்தான உன் மீது நான் கொண்டிருந்தது பித்தல்ல; தெளிவு என்பதை எப்படி உரைப்பேன் ஈரமற்ற இவ்வுலகுக்கு. வாழ்ந்த நாட்களில் ஒருநாள் நாம் பேசிக்கொண்டிருந்தோம், மூப்படைந்த பின்பு நம் காதல் நரைதட்டி பல் கொட்டி முதுகு கூனாகி நடுநடுங்கியபடி இருக்குமென்று. நமக்கு நரை கூடியது போல் நம் காதலுக்கு வயதாகவே இல்லை. இதோ பார் தூரத்து மழையில் மெளனமாய் நனைந்துகொண்டிருக்கும் நம் காதல் சாட்சி உடம்பில் பச்சைப் பளிங்கின் நடனத்தினை. போர்க்களத்தில் வாள் சுழற்றும்போதும் என் விழி ஓரத்தில் நின்றபடி நீதானே என்னை இயக்கினாய். குருதி கண்டு கலங்கி ஓடுவது நம் காதலின் வழக்கம் கிடையாதே. பதினெட்டு வருட தாம்பத்யத்தில் பதினான்கு குழந்தைகளா என்ற ஆச்சரியம் வெறுப்பாகவும் அருவருப்பாகவும் மாறி நம்மைச் சுற்றி வந்ததை நீ அறிவாய்தானே... உன்னைக் கணம் கூட பிரியக்கூடாது என்ற என் காதலின் விளைவுதானே அவையெல்லாம். ‘ஷாஜி... ஷாஜி' என்று நீ என்னை எந்தக் கணத்தில் அழைப்பாய் என்று எனக்கு மட்டும்தானே தெரியும். அதில்தானே நான் உலகம் மறந்தேன். என் இயற்பெயரான குர்ரம் என்பதையே மறக்க வைத்தது உன் காதல் நிரம்பிய ஷாஜி என்னும் அழைப்பு. நீ தொடர்ந்து உன் உதடுகளில் என்னை உச்சரிக்க வேண்டும் என்பதே என் தீராத அவாவாய் உள்ளுக்குள் ஊறிக்கொண்டிருந்தது. உன்னை நானும் என்னை நீயும் எவ்வாறு கொண்டாடினோம் என்பதன் சாட்சிகள்தானே நம் குழந்தைகள். நான் செல்லுமிடமெல்லாம் உன்னைக் கூட்டிக்கொண்டு போனதன் விளைவோ என்னமோ உன் கடைசி நிமிடமும் போர்க்களத்திலே ஆனது. கூடாரத்துக்கு வெளியே என் வீரத்துக்கான பிரசவ நிகழ்வு வெறிகொண்டு வாள் சுழற்றிக்கொண்டிருந்தது. கூடாரத்துக்கு உள்ளே நீ பல் கடித்து மூச்சடக்கி கண்கள் இறுக மூடி வலி அனுபவித்துக் கொண்டிருந்தாய். நம் காதலின் பதினான்காவது நினைவுச் சின்னம் கால் உதைத்து கர்ப்பப்பை தாண்டி வெளியேறி பூமி நழுவும் கணத்துக்கென காத்திருந்தாய். உன்னை மொத்தமாய் காப்பதற்கு என் காதலும் முத்தமும் போதும் எனத் தீர்மானித்திருந்தது எனது மாபெரும் பிழையாயிற்று என்பது அப்போதுதான் உறைத்தது. என்னையே சிறு மழலையெனத் தாங்கிக் கொஞ்சும் உன்னை வலியவளாகக் கணித்திருந்தேன். உன் மெல்லிய கர்ப்பத்தையும் நான் கண்கொண்டு காத்திருக்க வேண்டும். வீறிட்டுக் கதறியபடி நிகழ்ந்தது உன் பிரசவம். செய்தியறிந்து மகிழ்வில் வாள் மடக்கி உறையில் வைத்து உன் அருகில் வந்தபோது உன் உடம்பு ஈரம் கோர்த்திருந்தது. வெப்பப் போர்வைக்குள் துடித்துக்கொண்டிருந்தாய். மூடிய உன் இமைகளை மீறி கண்ணீர் வழிந்தது. துடைத்த என் விரல்களெங்கும் குருதிப் பிசுபிசுப்பு. என் இதயம் தடதடக்கத் தொடங்கியது. உன் மெல்லிய உடம்பின் பதற்றத்தினை என் உடம்பெங்கும் பூசிவிட்டுதானே உன்னியக்கம் நிறுத்தினாய். அப்போதும் உன்னை என் மடியில் தாங்கித்தான் இப்பூமிக்கு தாரை வார்த்தேன். நம் பதினான்காவது காதல் ரத்தச்சூடு மாறாமல் பூமியில் விழுந்து கதறிக்கொண்டிருந்தது. கடவுளின் வெறித்த விழிகளை முதன்முறை கண்டேன் மும்தாஜ். என் உலகம் அப்போதே இருண்டு விட்டது. இதோ, பூக்கள் பூப்பதையும் நட்சத்திரம் உதிர்வதையும் மழை மண் மோதுவதையும் கண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன மும்தாஜ். என் கண்களில் ஒளி அகன்று வருடங்களாகி விட்டன. எனது சந்தோஷங்களையும் பெருமிதங்களையும் அபகரித்துக்கொள்ளவா நீ பிரசவித்தாய்... உன்னை இழந்த கணத்திலிருந்து என் உயிரும் மெல்ல நரைத்து தளர்ந்து தன்னை அழிக்கத் தொடங்கியதை நீ அறிவாய்தானே. நீ மட்டும் அறிவாய். திருமணத்தில் முடிகிறது காதல் என்ற ஆன்றோர் வாக்கை நாம் பொய்யாக்கினோம். நம் காதல் அப்போதுதான் இன்னும் தன்னை வீரியமாக்கி வளர்த்துக்கொண்டது. இப்போது இவ்வுலகம் அழியும்வரை நம் காதல் வாழும்படி ஆகிவிட்டது. உன்னை ஒரு சதைப்பிண்டமாக ஒருபோதும் நான் எண்ணியதில்லை. இந்த உலகின் நாக்கு நாகரீகம் பார்க்காது. நீ என் வாழ்வின் மொத்த பிரமாண்டம். நீ இருக்கும்போது உணர்ந்த என்னால் இல்லாதபோதும் உணரவே நாம் வாழ்ந்த காலத்தைவிட அதிக நாட்கள் செலவழித்து உனக்கென ஒரு மஹாலை உருவாக்கினேன். சொர்க்கத்திலிருந்து வரவழைக்கப்பட்ட வரைபடத்தில் உன்னை விட மேலான எதுவொன்று இருந்துவிடப் போகிறது. ஆனாலும் தாஜ்மஹால் என்ற இந்த பளிங்கு ஞாபகம் உன்னால் மட்டும்தான் உயிர் கொண்டிருக்கிறது மும்தாஜ். உனக்கோ எனக்கோ நிகழும் இறுதி என்பது ஒருபோதும் நம் காதலுக்கில்லை. உலகம் நிமிர்ந்து பார்க்க இருபது வருடங்கள் உழைத்துக் கட்டிய நம் காதல் ஞாபகத்தை சிறு ஜன்னல் திறப்பின் வழியேதான் இத்தனை ஆண்டுகளாகக் கண்டு வருகிறேன். சிறு துளையின் வழி கண்டாலும் வானம் வானம்தானே. அதன் பிரமாண்டத்தையும் நிஜத்தையும் ஜன்னல் கம்பிகளா மறைக்க முடியும். உனக்கு முன்பும் உனக்குப் பின்புமான சில பெண்கள் என் வாழ்வில் உரிமையுடன் வந்திருந்தனர். அதை மறுக்கவில்லை. ஆனால் எவரிடத்தும் தோன்றாத அன்பும் காதலும் ஏக்கமும் பிரிவும் பரிவும் உன்னிடம் மட்டும் உருவானது எப்படி? சொற்ப காலங்களே வாழ்ந்திருந்தாலும் நம் வாழ்வு நிறை வாழ்வு இல்லையா மும்தாஜ். நீ இல்லாமல் நான் வாழும் இத்தனை நீண்ட காலங்கள் எனக்கான காதல் தண்டனைதானே பேகம். என் ஆடைகள் தளர்ந்துவிட்டன. அலங்கரிக்கப்படாத என் தலைச் சிகையில் சவச்சாயல் படிந்து ஆண்டுகளாகிவிட்டன. உன் வாசனையைச் சுமந்து அலைந்த என் உடம்பெங்கும் பிணந்தின்னிக் கழகின் லேசான வியர்வை வாடை. அருந்த நீரும் உணர குர் ஆன் சுவாசமும் மட்டும் கூடவே இருக்கின்றன. பார்வைக்கெட்டிய தொலைவில் நிரந்தரமாய் நீ உறங்கும் காதல் மஹால். பெருமழைக் காலங்களில் உன்மீது வீசிப் பெய்யும் மழையைத் தடுக்க முடியாத கையறு நிலையில் கதறுகிறேன். சமீபகாலமாக பார்வை மங்கி வருகிறது. ஆனால் நீ உறங்கும் இடத்திலிருந்து தினமும் இரவில் உன் வாசனை எழுந்து வந்து என்னைத் தழுவி உறங்கச் செய்கிறது மும்தாஜ். முன்னோர் செய்த பாவம் அல்லது முன்னோருக்குச் செய்த பாவம் இப்படி தள்ளாத நாட்களில் உன் ஞாபகம் பார்த்தபடி என்னை வீழ்த்தியிருக்கிறது. காதல் ஒருபோதும் என் கண்ணை மறைத்ததில்லை. ஆனால் பாசம் என் கண் முன் கண்ணாமூச்சி காட்டிற்று. ஒரு சிறந்த கணவனாக உனக்கு நான் இருந்தது மட்டுமே என் முழு வாழ்வாகிப் போனது மும்தாஜ். நம் மகனால் கைதியாக்கப்பட்டாலும் நம் மகளால் ஜீவித்துக்கொண்டிருக்கிறேன். கண்ணுக்கு எட்டிய தொலைவில் நம் காதல் சாட்சி மெளனமாய் வீற்றிருக்கிறது. எப்போதாவது உன் பெயர் சொல்லித் தன் சிறகை விசிறிப்போகும் பறவையின் நிழல் என் கனவில் படிந்து விலகுவதுண்டு. நிழலின் நிழலெல்லாம் பளிங்கின் ஈரம். இருப்பினும் எல்லாமே இருள்தானே என் பேகம்... எல்லா உரிமையும் மறுக்கப்பட்ட நிலையில் மகளின் கருணையில் இம்மடல் உனக்கு எழுதி வைக்கிறேன். இந்தத் தனிமைச் சிறைக்கு என்னை நான் ஒப்புக்கொடுத்து ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. நாம் வாழ்ந்த இந்த பூமியில் இப்போது நானும் என் காதலும் மட்டுமே. இமைக்க மறுக்கும் என் கண்கள் நிரந்தரமாக மூடும் வரை உன் இருப்பிடம் நோக்கிக்கொண்டுதான் இருக்கும். உள்ளே ஓர் உறுத்தல் ஊவாமுள்ளாய் நகர்ந்துகொண்டிருந்தது. அதை இம்மடல் மூலம் நீக்கியிருக்கிறேன் அன்பே. நீ அடிக்கடி சொல்வதுதான்... நம் காதலை யார் முன்பும் நிரூபிக்கத் தேவையில்லையென்று. ஆனால் காலத்தின் முன் நம் காதலை இந்த உலகம் கடைசிவரை நிரூபித்துக்கொண்டே இருக்கும். நாம் காதலித்து திருமணம் செய்து மறுபடியும் மறுபடியும் காதலித்து குழந்தைகள் பெற்று வாழ்ந்த நாட்கள் சொற்பமாகத்தான் தெரியவரும். ஆனால் நம் காதல் இவ்வுலகம் அழியும்வரை வாழத்தான் போகிறது. அனைத்து மானிடர்களின் நாவிலும் நம் பெயர் உச்சரித்து ஒலிக்கத்தான் போகிறது. அதற்கு சாட்சிதான் உனக்கென நான் எழுப்பிய என் ஞாபகம். எத்தனையோ மன்னர்களை மண்டியிட வைத்திருக்கிறேன். எத்தனையோ கோட்டை கொத்தளங்களைக் கைப்பற்றி வெற்றிக்கொடி பறக்க விட்டிருக்கிறேன். எவ்வளவு கிரீடங்கள் என் சிரசை அலங்கரித்திருந்தாலும் என் மனம் உன்னிடம்தானே மண்டியிட்டது மும்தாஜ். அத்தனை வெற்றிகளும் இந்த ஒற்றைப் பளிங்கு மஹாலின் முன் எம்மாத்திரம் மும்தாஜ். இப்பூமியில் அற்ப மானிடராய் பிறந்து அற்ப மானிடராய் மரணிக்கவா நாம் பிறப்பு கொண்டோம். இந்தப் பிரபஞ்சத்தைக் காதலால் அலங்கரிக்க இறை அனுப்பிய தூதுவர்கள் நாம். வாழ்தலிலும் மரணித்திலும் தொடரும் நம் பெயர் கொண்ட காதல். லேசாய் மூச்சுத் திணறுகிறது என் காதலே... இரவும் அணைக்க வந்துவிட்டது. கனவில் உனைச் சந்திக்கத் தயாராகிறேன். இதோ இதோ இன்னும் சில நாட்களில் உன் அருகிலேயே வந்து சேர்ந்துவிடும் உன் ஷாஜி. .

No comments:

Post a Comment