Thursday, 26 September 2024
உன்மத்தன் - சிறுகதை
உன்மத்தன்
இந்நேரத்தில் என்னுடன் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும் நீங்கள் என்னுடைய நெருங்கிய நண்பர். உங்கள் பெயர் பாஸ்கரன். உடனே நீங்கள் இல்லையென்று அவசர அவசரமாக தலையசைத்து மறுக்கலாம். நீங்கள் என் நெருங்கிய நண்பராயிருக்கும் பட்சத்தில் உங்களின் பெயரை நான்தானே தீர்மானிக்க முடியும். இந்த இரவில் நீங்கள் உங்களை என்னிடம் ஒப்புவித்திருக்கிறீர்கள். இந்தச் சென்னையின் நிறம் தன்னைப் பல வண்ண வண்ண விளக்குகளினால் இரவென்று அறிவித்துக்கொண்டிருக்கிறது. உங்கள் விரல் பிடித்து நான் சென்னையின் முக்கிய அடையாளமான ஸ்பென்சர் பிளாசாவைக் கடக்கிறேன். இதோ... சிக்னல் கடந்துவிட்டால் அந்தச் சுரங்க நடைபாதை வந்துவிடும். உங்கள் கண்களில் சிக்னலின் சிவப்பு மின்னி மின்னி மறைவதை நான் கவனிக்கிறேன். ஏனோ என் கைகள் நடுங்குகின்றன. உங்கள் இதயத்தின் படபடப்பினை எனக்கு இடம் மாற்றுகிறீர்கள். சிக்னலில் பச்சை விழுகிறது.
*
'' நானும் சென்னையில் பல இடத்துல பாத்துட்டேன். மேக்சிமம் பத்து மணிக்கெல்லாம் எல்லா சப்வேயும் க்ளோஸ் பண்ணிடுவாங்க. இந்த ஒரு சப்வே மட்டும்தான் க்ளோஸ் பண்றதில்ல. அது ஏன்னு தெரியல. அதனாலையோ என்னவோ பர்மனென்ட்டா பைத்தியங்கள் தங்குற சுரங்கப்பாதையா இது மாறிடுச்சி. ஒனக்கு நான் தர்ற சவால் இதுதான். ஒரு ராத்திரி ஃபுல்லா அதாவது விடிய விடிய அந்த சப்வேயில நீ இருக்கணும். இருந்துட்டா நீ கேட்ட ட்ரீட் நாளைக்கு. என்ன டீல் ஓகேவா..?'' பாஸ்கரனாகிய உங்கள் மனதில் தன் வால் சுழற்றி அடித்தது சாத்தான். ஒருமுறை தன் நாவால் உங்கள் காதுகளை நக்கியது. நீங்கள் தலையாட்டுகிறீர்கள்.
சப்வே நெருங்கியது. ஒரு பஸ் முழுவதும் மக்கள் தங்களைத் திணித்துக்கொண்டு கடந்தார்கள். பாஸ்கரனாகிய உங்களின் கண்கள் மிக ஆயாசத்துடன் அதைக் கவனித்து விலகுகிறது. என் கையைப் பற்றிக்கொண்டு சுரங்க நடைபாதையின் முதல் படிக்கட்டில் கால் எடுத்து வைக்கிறீர்கள். பின்னி சாலை என்று எழுதப்பட்ட அம்புகுறியின் புட்டம் தொட்டபடி நீண்டிருந்த அண்ணா சாலையைக் கவனிக்கிறீர்கள். உங்கள் கைகளின் இறுக்கம் கூடுகிறது. வலதுபக்கம் திரும்பினால் சுரங்க நடைபாதையின் ரகசியம் தன் உடல் நீட்டிப் படுத்திருக்கும். திரும்பியவுடன் உங்கள் பார்வையில் அது தென்படுகிறது. ஒரு சாக்கு மூட்டை. இரவு பத்து மணிக்கு நான்கு டியூப்லைட்டுகள் அந்த சப்வேயை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறது. சாக்கு மூட்டையில் தலைவைத்து அவன் படுத்திருந்தான். பாஸ்கரனாகிய உங்கள் உச்சந்தலையில் பளிச்சென்று ஓர் ஆணி இறங்குகிறது. அவன் முழு வெளிச்சத்தில் கிடந்தான். இருந்தும் முதல் பார்வையில் சிக்காதவாறு அத்தனை அழுக்காய் இருந்தான். தலைமுடி சிக்குண்டு பரந்திருந்தது. உடல் முழுவதும் அடர் பழுப்பில் அழுக்கின் நிறம், படையாய் படர்ந்திருக்க அவன் அணிந்திருந்த ஒற்றை ட்ராயர் அவன் உடல் வண்ணத்துடன் கலந்திருந்தது. அந்த ஆடையின் நிறம் நிச்சயம் அது கிடையாது. உள்ளங்கால்கள் முழுவதும் உலகத்தின் அத்தனைக் கறுப்பையும் சேமித்து வைத்திருந்தான். பாஸ்கரனாகிய உங்களின் மூச்சு ஒரு வேட்டை நாயின் இரைப்புக்கு சவால் விடுகிறது. உங்கள் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு நகர்கிறேன். நீங்கள் முதல் தவறு செய்கிறீர்கள். உங்களின் கண்களை அவனிடமிருந்து விலக்க முடியவில்லை. நான் அவசர அவசரமாக அந்த இடத்தைக் கடக்கும் முனைப்புடன் சுரங்கப் பாதையில் ஏறும் படிகளை நோக்கி விரைகிறேன். என் கைகள் உங்களை வலுக்கட்டாயமாக இழுப்பதாலோ என்னவோ உங்கள் கால்கள் தயங்கினாலும் என் உறுதிக்கு உடன் வருகிறீர்கள். இடது பக்கம் ஏறும் படிகளை மிக அருகில் நெருங்கிய கணம் நீங்கள் சற்றே... மிக சற்றே வலுக்கட்டாயமாக உங்கள் பார்வையை அவன் பக்கம் திருப்புகிறீர்கள். இந்த இரவின் ஆரம்பத்தில் நீங்கள் செய்யும் இரண்டாவது தவறு அது. உங்கள் கண்கள் உறைகின்றன. ஒரு கையால் தன் தலையைத் தாங்கியபடி கண்களின் கருவிழி மேலே செருக அவன் உங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறான். நான் உங்கள் கையை விடுவிக்கிறேன்.
பாஸ்கரனாகிய நீங்கள் இப்போது அவனை நோக்கிச் செல்கிறீர்கள். அருகில் நெருங்கியதும் அவன் முகத்தை உற்று நோக்கிய நொடி மனதில் தாள முடியாத நடுக்கத்துடன் சட்டென்று சுரங்க நடைபாதையின் மொசைக் சுவற்றில் உங்களைச் சாய்க்கிறீர்கள். உங்கள் தலை சுவற்றில் அழுந்தப் பதிகிறது. தலை பதிந்த இடத்தின் அருகில் அந்தப் பெரிய சைஸ் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதை உங்கள் வலது கண் ஓரத்தில் கவனிக்கிறீர்கள்.
காணவில்லை
பெயர் : ராஜேந்திரன்
வயது : பாஸ்கரனாகிய உங்களைவிட 12 வயது அதிகம்
அடையாளம் : சிவந்த மேனி, அடர் மீசை, சிரிக்கும் கண்கள்
காணாமல் போன தினத்தன்று அணிந்திருந்த உடை : அடர் நீலத்தில் சட்டையும் கறுப்பு கலர் பேன்ட்டும்
காணாமல் போன தினம் : பாஸ்கரனாகிய உங்களின் திருமண நாள்
*
'' உன் கல்யாணத்துக்கு நான் வருவேன் பாஸ்கர். உனக்கு கிஃப்டும் குடுப்பேன். உன்ன பாப்பேன். சாப்பாடும் சாப்பிடுவேன். அதுக்கப்புறம் நீ என்ன தேடாத.''
'' ஏன்... நான் கல்யாணம் பண்ணிக்கிறதுல உங்களுக்கு இஷ்டமில்லையா?''
'' ச்சே ச்சே... உன் சந்தோசம் முக்கியம். நீ சந்தோசமா இருந்தா அது எனக்குப் போதும். நீ கல்யாணம் பண்ணிக்கோ.''
'' அப்புறம் ஏன் என்னை விட்டுப் போறேன்னு சொல்றீங்க.''
'' நான் எப்போ சொன்னேன். உன் நெஞ்சுல கையை வெச்சி சொல்லு. நான் உன்னைவிட்டுப் போவேனா...''
பாஸ்கர் தன் கையை அவரின் நெஞ்சில் வைத்துச் சொன்னான். '' நீங்க என்னை விட்டுப் போனாலும் சாகுற வரைக்கும் உங்ககூடத்தான் நான் இருப்பேன்.''
*
அந்தப் பைத்தியம் இப்போது மல்லாந்திருந்தான். அவனின் அழுக்கு ட்ராயரை மீறி விடைத்துத் தெரிந்தது அவனின் குறி. பாஸ்கரனாகிய நீங்கள் தளர்ந்து தரையில் அமர்கிறீர்கள். இடது கையை ஊன்றிய இடத்தில் பிசுக்கென்று ஏதோ ஒட்டுகிறது. பதறிப் பார்க்கிறீர்கள். ஒரு சாம்பார் பாக்கெட் உடைந்து சிதறியிருக்கிறது. அதற்கு சற்றுத் தள்ளி பிரிக்கப்படாத தேங்காய்ச் சட்னி பாக்கெட் கிடக்கிறது. டிஸ்போசபிள் டம்ளர் ஒன்று காற்றின் போதையில் அங்கும் இங்கும் உருண்டபடி கிடக்கிறது. வெறும் காகிதம் சிறு உலக உருண்டை வடிவத்தில் கசங்கிக் கிடக்கிறது. ஒரு ஆங்கில தினசரி அழகாய் விரித்து வைக்கப்பட்டிருக்கிறது. பாஸ்கரனாகிய நீங்கள் அவனை நோக்கி நகர்கிறீர்கள். சிறிதும் சலனமின்றி அவன் கண்கள் சுரங்கப் பாதையின் மேற்கூரையையே உற்றுப் பார்த்தவண்ணம் உள்ளன. அவன் அருகில் நீங்கள் அமர்ந்ததும் பொதுக் கழிப்பிடத்திலிருந்து வீசும் மூத்திர நாற்றம் உங்கள் நாசியைத் தாக்குகிறது. நீங்கள் ஆழ்ந்து அந்த நாற்றத்தை சுவாசித்தபடி அவனின் குறியைப் பிடித்து வருடுகிறீர்கள். இரண்டு கைகளின் விரல்களைக் கோத்து தலைக்குப் பின் வைத்துப் படுத்திருக்கும் அவனின் உதடுகள் பிளந்து சிரிப்பொன்று மிதக்கிறது. சுரங்க நடைபாதையின் கூரை மேலே கனரக வாகனங்கள் விரைவதை நீங்கள் அமர்ந்திருக்கும் தரை அதிர்வதிலிருந்து புரிந்துகொள்கிறீர்கள். உங்களின் உடலும் அதிர்கிறது. தொடர்ந்து விரைகின்றன மிகக் கடினமான பொருட்களை ஏற்றிச்செல்லும் மிகப்பெரிய வாகனங்கள். உங்கள் முகம் இறுகுகிறது. பாஸ்கரனாகிய உங்களின் குறியிலிருந்து வெளிப்பட்ட சுக்கிலத்துளிகள் தொடையை நனைத்துப் படிகிறது. எப்போது வெளிப்பட்டது என்று தெரியவில்லை. படுத்திருக்கும் அவனின் சிரிப்பு உறைந்திருப்பது புரிகிறது. சுரங்க நடைபாதையின் உள் வெளிச்சத்தின் வீச்சு முழுவதுமாய் பெருக நள்ளிரவின் குளிர் கொஞ்சமாய் வந்து நடைபாதையில் கால்நீட்டிப் படுக்கிறது.
பெருமூச்சு விட்டபடி எழுந்து விலகுகிறீர்கள். திடீரென்றுதான் உணர்கிறீர்கள். திறந்துகிடக்கும் படிகளின் வழி அந்தக் குரல் வருகிறது. சத்தியமாய் அது ஓர் ஆவியின் அழைப்பாய்தான் உங்கள் செவிகளில் விழுகிறது. ஒரு ஹம்மிங் அது. மெல்லியதாய் வீசும் காற்றின் துணையுடன் அந்தக் குரல் உங்களைத் தேடுகிறது. படியை நோக்கிப் பாய்கிறீர்கள். உங்களை யாரோ தடுத்து நிறுத்துகிறார்கள். ' நினைத்தேன் வந்தாய் நூறு வயது... கேட்டேன் தந்தாய் ஆசை மனது... நினைத்தேன் வந்தாய் நூறு வயது...கேட்டேன் தந்தாய் ஆசை மனது...நினைத்தேன் வந்தாய் நூறு மனது...கேட்டேன் தந்தாய் ஆசை மனது...' தூரத்தில் உங்களை அழைத்த குரல் ஓய்கிறது. ஓர் ஆட்டோ புறப்பட்டுச் சென்ற ஓசை உங்கள் செவிகளில் நிரந்தரமாக, கையறு நிலை உணர்கிறீர்கள். அந்தக் கடைசிப் படியிலே எத்தனை மணி நேரம் நின்றுகொண்டிருந்தீர்கள் என்று உங்களுக்கே தெரியவில்லை. ' பாஸ்கரனாகிய நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது சூரியன் எஃப் எம்மின் நினைத்தாலே இனிக்கும்'.
இரு கால்களையும் குறுக்கியபடி அமர்கிறீர்கள். ஏதோ சிரிப்புச் சத்தம் கேட்கிறது. எதிரொலிக்கும் சுவற்றினையே உற்றுக் கவனிக்கிறீர்கள். யாரோ துப்பிய வெற்றிலைப் பாக்கு எச்சில், சிவப்பாய் மூன்று கத்தியை வரைந்திருக்கிறது. பாஸ்கரனாகிய நீங்கள் அதிலிருந்து ஒரு கத்தியை உருவியெடுத்து சிரித்துக்கொண்டிருக்கும் அவனின் கழுத்தில் வைக்கிறீர்கள்.
*
'' சார்... அந்த நூத்தியெட்டாம் நம்பர் பேஷன்ட் கைல கத்தியை வெச்சு மெரட்டிட்டு இருக்கான் சார்.'' யாரோ கத்தினார்கள். பெரும் கூட்டமே கூடியிருந்தது. '' வேணாம் பாஸ்கர். ரொம்ப ரிஸ்க்கான பொருள். கீழ போட்ருங்க. உங்களுக்கு என்ன வேணும். ஏன் இப்பிடி பண்றீங்க. கத்தியைக் கீழ போடுங்க.'' கழுத்து நரம்பு புடைக்க ஒருவர் கத்தினார். '' நான் அன்னிக்கே சொன்னேன். க்ரிட்டிகள் கண்டிசன்ல இருக்கிற பேஷன்ட்டை ஃப்ரீயா விடாதீங்கன்னு. கேட்டீங்களா. எதையாவது அறுத்துக்கிட்டான்னா அவன் குடும்பத்துல வந்து கேக்குற கேள்விக்கு யாரு பதில் சொல்றது. இவனையெல்லாம் போய்த்தொலையுது சனியன்னு வெரட்டி விட்ரணும்.'' பாஸ்கர் அங்கிருந்த மரத்தை அந்தக் கத்தியால் அறுக்கத் தொடங்கினான். பின்னாலே சென்று அவனை அமுக்கிப் பிடித்து அவன் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கினார்கள். யாரோ பாஸ்கரின் கையில் பேனாவைத் திணித்தார்கள். பாஸ்கர் ராஜேந்திரனுக்குக் கடிதம் எழுதத் தொடங்கினான்.
அன்பு நண்பா...
இது உனக்கு நான் எழுதும் கடிதம் என்றும் சொல்லலாம். அல்லது எனக்கு நான் எழுதிக்கொள்ளும் கடிதம் என்றும் சொல்லலாம். உனக்கும் இதில் சில செய்திகள் சொல்லப்பட்டிருக்கும். அவ்வளவே. அருவமானது என்பதை சாதகமாக்கிக்கொண்டு இவர்கள் இந்த மனத்தினை படுத்தும் பாடு கண்டுதான், 'மனம் மட்டும் ஓர் உறுப்பாயிருந்திருந்தால் இந்நேரம் வெட்டி வீசியிருப்பான் தலைவன்' என்றானோ ஒரு கவி. வெகு எளிமையானவன் நண்பா நான். இதுவரைக்கும் பசி தாங்க முடியாமல் எவனொருவன் உறுப்பையும் சுவைத்து பசி தீர்த்தததில்லை. பீ தின்றதில்லை. மற்றபடி பசி என்னைத் தின்ன அனுமதித்திருக்கிறேன். உறங்கக்கூடாத, உறங்க முடியாத இடங்களில் நான் இமை இறுக்கியிருக்கிறேன். எனக்கான தூக்க மாத்திரைகள் வீரியம் இழந்து போனதும் எனக்கான தூக்குக் கயிறு அத்தனை நம்பகமில்லாத கம்பெனியில் தயாரிக்கப்பட்டதும் என் தவறா என்ன?
அடி, வலி, ரத்தம், கண்ணீர், கதறல், தனிமை, மது, சுக்கிலம்... என்று நாம் கை கோத்துக்கொள்ள சில காரணங்கள். ஆனாலும் பயமாயிருக்கிறது. கோத்துக்கொண்ட உள்ளங்கை உள்ளே இரு இமைகள் துடித்துக்கொண்டிருக்கின்றன. எனக்கு முன்னே நீண்டிருக்கிறது ஒற்றைப்பாதை. மாலைச் சூரியன் மயங்கி நெடுநேரமாகிவிட்டது நண்பா. இனி உன் மது புட்டியைத் திறக்கலாம். என் சூரியனுக்குதான் சாராய சன்னதம் பிடித்துப் போய்விட்டது. காலை மதியம் இரவென்று பார்ப்பதில்லை. நீண்டிருக்கும் பாதையின் முடிவு தெரியவில்லை. ஆனால் பயணம் சாத்தியமாயிருக்கிறது. அடர்ந்த மரங்களின் இடையே நிகழும் இந்தப் பயணத்தில் உன் பாடலை நீ பாடு. என் பாடலை நான் பாடுகிறேன். நம் பாடலை இந்தச் சாலையோ, அருகிலிருக்கும் காடோ, அடர் இரவோ பாடட்டும். நீ எனக்கு ஒரு கதை சொன்னாய் அல்லவா. ஞாபகமிருக்கிறது.
' நானும் நீயும் இருந்த அறையில் ஒரு பூனை வளர்ந்து வந்தது. அந்தப் பூனையை நான்தான் கொன்றேன். ஒரு பூனையைக் கொல்வதற்கு ஆயிரம் காரணங்கள். அது என்னைவிட அழகாயிருந்தது மட்டுமல்ல. என்னைவிட அமைதியாயிருந்தது. என்னைவிட கருணையாயிருந்தது. என்னைவிட ஆறுதலாயிருந்தது. அதன் தலை கோதினால் சுருண்டு என் மடியில் படுத்துக்கொண்டு என் விசுவாசத்தினை கேலி செய்துகொண்டிருந்தது. நீதான் பால் வைத்தாய். நாக்கு சுழற்றி குடித்துக்கொண்டிருக்கும்போதே அதன் தலையை ஆதூரமாய் தடவிக்கொண்டிருந்த என் கைகள் சட்டென்று அதன் கழுத்து எலும்பை முறித்துப் போட்டன.
நீ உன் கண்ணீர் துடைக்க கன்னம் நீட்டியபோது என் கைகள் முழுக்க ரத்தமாயிருந்ததற்கு காரணம் அதுதான் நண்பா. என்னைவிட ஆறுதலாயிருக்கும் ஒரு பூனையை, என்னைவிட எல்லாவற்றிலும் நேசமாயிருக்கும் அணிலை, என்னைவிட சுதந்திரமாயிருக்கும் வண்ணத்துப்பூச்சியை ஏன் நான் கொல்கிறேன் என்று இப்போது உனக்குப் புரிகிறதா? '
நாம் ஒருநாள் செத்துப் போவோம் நண்பா. அதற்குள்தான் சிரிக்க வேண்டும். அதற்குள்தான் அழ வேண்டும். அதற்குள்தான் முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குள்தான் காதலிக்க வேண்டும். அதற்குள்தான் சில துரோகங்களை, வலிகளை, அலட்சியங்களை, காயங்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்குள்தான் வாழ வேண்டும். ஆனால் காலம் அதற்கான சந்தர்ப்பங்களை சரியான நேரத்தில் சரியான இடத்தில் வழங்குகிறதாவெனப் புரியவில்லை.
இன்று நான் சிரித்தேன் என்றாய் அன்று. சிரிப்பது என்பது டைரிக்குறிப்பு போல எப்போதாவது எழுதப்படுகிறது நண்பா. நாள்காட்டி தாள் போலத்தான் ஆகிவிட்டது அழுவது. முன்னமே சொல்லிவிட்டேன் இது எனக்கு நானே எழுதும் ஒன்று என்று. ஆனால் உன்னைப் பற்றியும் பேசுகிறேனோ என்று அச்சமாயிருக்கிறது.
விடிவதற்கான நேரம் நெருங்கிவிட்டது நண்பா. உனக்கான கடிதம் ஓர் இரவுக்குள் எழுத வேண்டியது மட்டுமே. அதோ பாதை கண்ணுக்குப் புலப்படுகிறது பார். ஈரமான ஒரு நத்தை நம்மைக் கடந்து செல்கிறது. இப்போது ஏன் விழிக்க வேண்டும் என் உள்ளங்கை இமைகள். உடைவதற்கு தயாராய் இருக்கின்றன கண்ணீர் சுரப்பிகள். நான் உன் கையை இறுகப் பற்றுகிறேன். என்ன இது... இவ்வளவு ரத்தம். அடப்பாவி நான் அப்போதே சொன்னேன். கேட்டாயா.. மதுக்கோப்பை நொறுங்கும் அளவுக்கா இறுகப் பற்றுவது? நாம் நம் துயரங்களை நொறுக்க முடியாமல் கோப்பைகளை நொறுக்குகிறோம்.
இப்படிக்கு
இப்படிக்கு மட்டுமே.
*
சட்டென்று எழுந்து சுவரோரமாய் ஒதுங்குகிறீர்கள். உங்கள் கையிலிருக்கும் பேனாவினை சிரித்துக்கொண்டிருக்கும் அவனை நோக்கி எறிகிறீர்கள். மிக வேகமாகச் சென்ற அந்தக் கல் மொசைக் சுவற்றில் பட்டுத் தெறிக்கிறது. அவன் ஆவேசமாய் அந்த மூட்டையிலிருந்து கத்தியையும், பேப்பரையும், பொம்மைகளையும், நாப்கின்களையும், செருப்புகளையும், பரோட்டாக்களையும், பழைய சாக்ஸுகளையும், தூக்க மாத்திரைகளையும், கல்யாணப் பத்திரிகைகளையும், கலர் பென்சில்களையும், எவர்சில்வர் குங்கும டப்பாவையும் உங்கள் மீது எறிகின்றான். நடை பாதையை நிரப்பத் தொடங்கியவைகளை அதிர்ச்சியுடன் கவனிக்கிறீர்கள். உங்களுக்கே பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது. பாஸ்கரனாகிய நீங்கள் சுவர் ஓரமாய் ஒண்டியபடியே நீங்கள் முதலில் வந்து இறங்கிய வாசலுக்கு வருகிறீர்கள். பாதையெங்கும் சிதறிக் கிடப்பவைகள் மீது உங்கள் பாதம் படாதவாறு கவனமாய் நடந்து ஏறும் படிகளுக்கு வருகிறீர்கள். பின் அங்கும் இங்குமாய் இந்த விளையாட்டு தொடர்கிறது. முடிவாய் உங்கள் கண்ணுக்குக் கொஞ்சமாய் வானம் தெரிகிறது. இவ்வளவு கறுப்பாய் வானத்தை இப்போதுதான் பார்க்கிறீர்கள். அவனிடமிருந்து நீங்கள் தப்பிக்கும் முனைப்பில் இருந்தாலும் ஏதோ ஒரு வசீகரம் அவனை விட்டுப் பிரியாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறது. அவனிடம் சென்று பேச வேண்டும் என்ற நினைப்பு மனதில் தோன்றிய கணமே ஆயிரம் கேள்விகள் நீர்ப்பாம்புகளாய் நெளிந்து விரைகின்றன. பாஸ்கரனாகிய நீங்கள் அவனை நோக்கி நடக்கிறீர்கள். உங்களின் மேல் அணைத்து வீசிய சிகரெட் துண்டுகள் நிறைய ஒட்டியிருப்பதை அப்போதுதான் உணர்கிறீர்கள். பாஸ்கரனாகிய உங்கள் முட்டிக்கால்களுக்குக் கீழே மிக மெலிதாய் நடுக்கமிருக்கிறது. இங்கே வந்ததிலிருந்து ஒரு வார்த்தைகூட பேசாத நீங்கள் முதன்முறையாய் மெளனம் உடைக்கிறீர்கள்.
'' உன் பேர் என்ன?''
ஒரு பைத்தியத்திடம் இப்படி ஒரு கேள்வி கேட்டால் அவன் அல்லது அது பதில் சொல்ல ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா, தனக்குப் பெயர் என்ற ஒன்று உண்டு என்பதாவது அவனுக்குத் தெரியுமா, அவன் தன்னை ஆணாய் உணர்வானா? முட்டி மோதும் கேள்விகளுக்கு நடுவிலும் அதற்கான பதில் நடைபாதையின் அத்தனை இடங்களிலும் நிரம்பியிருப்பதை உணர்கிறீர்கள். எதற்கும் பதில் சொல்ல விரும்பாமல் தனக்குள்ளேயே அத்தனைக் கேள்விகளையும் பதில்களையும் போட்டுப் பிணைத்து வலுவான சங்கிலியால் தன்னைக் கட்டிப்போட்டு ஆழ்கடலுக்குள் மூழ்கிக்கிடக்கும் மனத்தை என்ன செய்து மீட்பது? அவன் மெதுவாக அங்கிருக்கும் மூட்டையிலிருந்து ஒரு மெழுகுவத்தியையும் தீப்பெட்டியையும் எடுத்தான். உங்களிடம் நீட்டியதும் நீங்கள் வாங்கிக்கொள்கிறீர்கள். பற்றவைத்து மெழுகுவத்தியை சாய்த்து சில துளிகள் தரையில் சிந்தியதும் அதை மெழுகின் உயிர் மீது நிறுத்துகிறீர்கள். எரிந்துகொண்டிருக்கும் டியூப்லைட்டுகளை மீறியும் அருவமான இருள் அவ்விடத்தைச் சூழ்கிறது. பேரிருளுக்குள் நீங்கள் இருக்கும்போதுதான் அவனிடமிருந்து விசும்பல் எழுகிறது. மெள்ள அழுகையாகி கண்ணீர் நீர்த்தாரையாய் பொழிய அவன் அலறத்தொடங்கும் முன் சுரங்கப் பாதையின் ஷட்டர் மூடப்படும் ஓசை கேட்கிறது. பதறி எழுந்து ஓடி மூடிய ஷட்டரை வேகமாய் அசைக்கிறீர்கள். ''அய்யோ...'' உங்களின் கதறல் வெளிச்செல்ல வாய்ப்பேயில்லை.
*
'' எனக்கு எதுவுமில்லை. ராஜேந்திரனைப் பர்த்தால் எல்லாம் சரியாகிவிடும். அவரைத் தேடி நான் எங்கெல்லாம் அலைந்தேன். அவர் வேலை பார்த்த ப்ரைவேட் கம்பெனியில் சென்று விசாரித்தால் வேலையை ரிசைன் செய்துவிட்டார் என்றார்கள். வீட்டிற்குச் சென்றால் காலி செய்துவிட்டார். பத்து நாட்களில் எல்லாம் நடந்திருக்கிறது. ஹனிமூன் என்று நான் கேரளா சென்றிருக்கக் கூடாது. ராஜேந்திரனுடன் இருந்திருக்க வேண்டும். அவரைவிட்டுப் பிரிந்திருக்கக் கூடாது. எதற்கு அப்படி முடிவெடுத்தார். என் மீது அவ்வளவு பாசமாக இருந்தாரே... என்னை விட்டு ஒரு நொடியில் விலக எப்படி அவருக்கு மனம் வந்தது. அவரின் அருகாமை இல்லாமல் என்னால் எப்படி இயல்பாய் வாழ முடியும்? அவருக்கு தண்டனை தர நான் முடிவெடுத்தேன். என்னை நானே கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துக்கொண்டேன். அவருடன் பேசிய வார்த்தைகள், பழகிய நாட்கள், அலைந்து திரிந்த தெருக்கள், உண்டு உறங்கிய பொழுதுகளை மட்டும் மனதில் வைத்து மற்ற எல்லாவற்றையும் அழித்துவிட்டேன். மெளனமானேன். பைத்தியமானேன்.''
*
பாஸ்கரனாகிய நீங்கள் தளர்ந்துவிட்டீர்கள். இனி எந்த அலறலும் இங்கே தன்னை பிரகடனப்படுத்தப் போவதில்லை. நேரம், காலம், இரவு, பகல் எல்லாம் மறந்துவிட்டது. இது தனி உலகம். இங்கே நீங்களும் அவனும் மட்டுமே. மொசைக் சுவற்றில் படிந்த உங்கள் நிழல் மெழுகுவத்தி வெளிச்சத்தில் ஆடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் எச்சில் விழுங்குகிறீர்கள். தொண்டை காய்ந்திருக்கிறது. தண்ணீர் குடித்தால் நன்றாக இருக்கும். அவனின் மூட்டைக்குள் பிரிக்கப்படாத ஒரு வாட்டர் பாக்கெட் இருக்கலாம். பாதி வெளிச்சமும் பாதி இருளுமாய் அவன் முகம் மிகத் தெளிவாய் இருக்கிறது. அனிச்சையாய் உங்கள் கை உங்கள் முகத்தை தொட்டுப் பார்க்கிறது. யாரோ உங்கள் முதுகில் கத்தி வைத்துக் கீறுவது போல் முனகலுடன் கழுத்தை உயர்த்துகிறீர்கள். உங்கள் முகம் இருள் பூசியிருக்கிறது. கண்களில் எரிச்சலுடன்கூடிய வலி வந்துவிட்டது. கண்களுக்குக் கீழே கருவளையம் சிறு சதைப்பந்தாக உருண்டு திரண்டிருக்கிறது. அவன் மூட்டைக்குள் நீங்கள் கைவிடும் நேரம் மிகத் துல்லியமாகக் கேட்கிறது ஒரு நாயின் மூச்சிரைப்பு. அவன் முகத்தையே உற்று நோக்குகிறீர்கள். அடைக்கப்பட்டிருந்த கதவு வழியே அந்த நாய் இறங்கி வந்து அவன் அருகில் வால் சுருட்டிப் படுக்கும்வரை மூச்சை இறுக்கப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறீர்கள். தாகமெல்லாம் இல்லை. ஏதோ வெறி மட்டுமே துரத்துகிறது. எழுந்து நடைபாதையெங்கும் சிதறிக்கிடக்கும் எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கிறீர்கள். பாஸ்கரனாகிய உங்கள் கையில் தீப்பெட்டி இருக்கிறது. சுரங்க நடைபாதையின் மூலையில் அத்தனைக்கும் சேர்த்து தீ வைக்கிறீர்கள். எரியத் தொடங்குகிறது எல்லாம். கரியாகி, சாம்பலாகிய பின் ஒரு புகைப்படம் மட்டும் மிச்சமாய் எழுந்து காற்றில் மிதந்து அந்த சப்வேயைவிட்டு வெளியே பறந்து செல்வதையே கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உடல், மனம் தளர்ந்து அவன் அருகில் சென்று படுக்கிறீர்கள். உங்களின் காலுக்குக் கீழே சுருள்கிறது கண்களில் பழுப்பேறிய நாய்.
*
ஜனவரி ஒன்று காலையில் நான் அலுவலகம் புறப்பட்டேன். வழக்கமாய் செல்லும் பாதைதான். அண்ணாசாலை தன் வழக்கமான பரபரப்புகளில் இயங்கிக்கொண்டிருக்கும். தவிர்த்து சப்வேயில் இறங்கினேன். குளிருக்குக் கிராமங்களில் விடிகாலை நேரத்தில் பழைய சுள்ளிகளைப் போட்டு எரித்துக் குளிர் காய்வார்கள். அதுபோல் நான் இறங்கிய கடைசிப் படிக்கு அருகில் ஏதோ புகைந்துகொண்டிருந்தது. காலையில்தான் யாரோ குளிர் காய்ந்திருக்க வேண்டும். உள் நடக்கத் தொடங்கினேன். ஏதோ பெரும் சண்டை நடந்தது போல் நடைபாதையெங்கும் என்னன்னமோ சிதறியிருந்தன. வலது பக்கமாய் அவன் படுத்திருந்தான். ஆழ்ந்த உறக்கத்திலிருக்கலாம். அல்லது ஆழ்ந்த மெளனத்திலாவது. பைத்தியம் என்று எப்போதும் நான் சொல்வதில்லை. மனநிலை தவறியவன் என்றுதான் சொல்வேன். எனக்கு முந்தைய நாள் இரவு புது வருட கொண்டாட்டம் ஞாபகத்துக்கு வர கொஞ்சம் குற்ற உணர்வுடன் அவனை என் மொபைலில் போட்டோ எடுத்தேன். முகநூலில் பதிந்து பதிவு போட்டதும் மேலும் குற்ற உணர்வுதான் ஆட்கொண்டது. அந்த டிசம்பர் 31 இரவு அந்த சப்வேயில் என்ன நடந்திருக்கும் என்று யோசித்தே பின் இதைக் கதையாய் எழுதினேன். ஒன்று மட்டும் இப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கிறது. நான் அவனை போட்டோ எடுக்கையில் என்னையே உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த நாயின் கண்களில் இருந்த நன்றி தொலைந்துபோன வெறுப்பு.
- முற்றும்.
வாக்குமூலம் - சிறுகதை
வாக்குமூலம்
ராஜன் ஓர் ஓய்வுபெற்ற போலிஸ் அதிகாரி. பணிக்காலத்திலேயே மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் என்று பெயர் எடுத்தவர். ஓய்வு அவர் வகித்துவந்த பதவிக்குதானே தவிர அவருக்கில்லை. அன்று காலை தன் செல்லம் ரீட்டாவுடன் அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது இன்னும் ஓய்வு பெறாத அவரின் போலிஸ் மூக்கு குறிப்பிட்ட வீட்டின் வாசலில் ஒரு நிமிடம் நின்று நிதானித்தது. அவரின் கையில் பிடித்திருந்த சங்கிலியின் மறுமுனையின் அதிர்வை உணர்ந்தவர் ரீட்டாவின் கழுத்திலிருந்து சங்கிலியை விடுவித்தார். 18 என்று இலக்கமிட்டிருந்த அந்த வீட்டைச் சுற்றிக்கொண்டு பின்பக்கம் சென்ற ரீட்டா ஓர் இடத்தில் நின்று தன் மூக்கினை வைத்து உரசி நாக்கிலிருந்து நீர் சொட்ட ஹே ஹே என்று மூச்சிரைத்தபடி பழுப்புக் கண்களில் பதட்டம் எழுதியபடி கால் நகங்களால் நிலத்தை தோண்டத் தொடங்கியது. பின் தொடர்ந்த ராஜனின் நாசி காற்றில் அசாத்தியமான பிணவாடை கலந்திருந்ததை உணர்ந்தது. மனிதனின் அழுகிய உடல்நாற்றம். பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்தார்.
*********************
என் பெயர் மதன். வயது 30. நான் ஓர் ஓரினச் சேர்க்கையாளன். என் 25 வது வயதில் அறிமுகமானவர் சத்யன். அவருக்கு அப்போது 35 வயது இருக்கலாம். ஜிம்மில்தான் முதலில் சந்தித்தேன். பார்த்ததுமே எனக்கு அவரைப் பிடித்துப் போனது. என் கண்ணுக்கு அத்தனை அழகாய்த் தெரிந்தார் சத்யன். நானாகத்தான் வலியச்சென்று அவரிடம் பேசினேன். சாதாரணமான உரையாடல்களிலே அவரை ரசிக்கத் தோன்றியது. ஒருநாள் இரவு ஜிம்மில் எக்சர்சைஸ் முடித்தபின் அவர் வீட்டுக்கு என்னை அழைத்தார். சென்றேன். அப்போதுதான் தெரிந்தது. அவர் இன்னும் திருமணம் செய்யவில்லையென்று. அதில் தனக்கு நம்பிக்கையில்லையென்றார். எப்படி தனியாய் வாழ்கிறீர்கள் என்றதற்கு நான் தனியாய் இல்லை என்றபடி என் தோளைத் தொட்டு அணைத்தார். என் மீதும் அவருக்கு விருப்பம் இருந்ததை தெரிந்துகொண்டேன். அன்று இரவு அவர் வீட்டில் தங்கினேன். என் வாழ்நாளில் மறக்கவே முடியாத இரவு அது. அதன் பிறகான நாட்கள் எனக்கு சொர்க்கம் என்றால் என்னவென்று தெரியப்படுத்திய நாட்கள். எப்போதும் சத்யன் என் அருகிலேயே இருக்க வேண்டுமென்று எனக்குப் பேராசையாக இருந்தது. ஆனாலும் அவருடன் நிறைய பேசினாலும் பல ராத்திரிகள் அவருடனே கழிந்தாலும் எனக்குள் ஒரு நெருடல் இருந்துகொண்டேதான் வந்தது. நான் இல்லாத சமயங்களில் சத்யனின் பகிர்தல் என்பது எவ்வாறு உள்ளது என்பதில்தான் என் முதல் சந்தேகம் வந்தது. சத்யன்தான் ப்ரகாஷை அறிமுகப்படுத்தி வைத்தார்.
***********************
மளமளவென்று போலிஸ் காரியங்கள் நடந்தன. நிலம் தோண்டப்பட்டது. முக்கால்வாசி அழுகிப்போய் சதையெல்லாம் கரைந்து பாதி எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட பிணம் டீ ஷர்ட்டும் ஜீன்ஸும் அணிந்திருந்தது. டீ ஷர்ட்டின் மேல் எழுதியிருந்த I AM HERO வாசகம் இன்னும் கறையான் அரிக்கவில்லை. 18 ம் எண் வீட்டின் கதவு உடைக்கப்பட்டது. அலசி ஆராய்ந்ததில் தனியார் டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் சத்யன் என்பவரது வீடு என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அங்கு போட்டோவில் இருந்த சத்யனுக்கும் கண்டெடுக்கப்பட்ட பிணத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. சத்யனின் விசிட்டிங் கார்டில் உள்ள அலுவலகத்துக்கு போன் செய்ததில் சத்யன் ஆபீஸ் வந்து மூன்று மாதமாகிறது என்றார்கள்.
*********************************
பிரகாஷ் மிகப்பெரிய பணக்காரன். பல் டாக்டருக்கு படித்துவிட்டு சொந்தமாய் கிளினிக் வைத்து நடத்திக்கொண்டிருப்பவன். இரண்டொரு முறை ஜிம்மிற்கே வந்திருக்கிறான். சத்யனைப் பார்த்து பேசிவிட்டு பிரகாஷ் அவனுடைய காரில் சென்றுவிடுவான். நான் சத்யனின் பைக்கில் அவன் வீட்டுக்கு செல்வேன். சத்யன் பிரகாஷைப் பற்றிப் பேசினார். எனக்கு சத்யன் இன்னொருவனைப் பற்றி என்னிடம் பேசுவதே தேவையற்ற ஒன்றாய் இருந்து எரிச்சலைக் கிளப்பியது. மூன்று மாதங்களுக்கு முன்பு, தான் டைல்ஸ் ஆர்டர் சம்பந்தமாக பெங்களூர் வரை போவதாகக் கூறினார் சத்யன். திரும்பி வர நான்கு நாள் ஆகும் என்றார். ஜிம்மில் இருட்டாய் இருந்த இடத்தில் வைத்து என்னை அணைத்து நெற்றியில் முத்தம் பதித்தார். எனக்கு அழுகை வந்தது. நான்கு நாட்கள். இப்போது நினைத்தாலும் அந்தக் கொடூரமான நாட்கள் அவ்வளவு வலியுடன் ஞாபகத்துக்கு வருகிறது. சத்யன் என்னுடன் போனில் பேசவில்லை. வேலை பிஸி என்று நினைத்துக்கொண்டேன். எனக்கு நானே தண்டனை தருவதுபோல் நானும் அவருடன் பேச முயற்சிக்கவில்லை. சத்யனின் வீட்டை மட்டுமே அந்த நான்கு நாட்களில் எத்தனை முறை சுற்றி வந்திருப்பேன். மூன்றாம் நாள் இரவு சத்யனின் வீட்டு வாசலில் ப்ரகாஷின் கார் நிற்பதைப் பார்த்தேன்.
****************************************
சத்யனின் அலுவலகத்தில் தந்த எண்ணுடன் தொடர்பு கொண்டதில் நாட் ரீச்சபிள் அல்லது சுவிட்ச் ஆஃப் என்று பதில் வந்தது. ஸ்பாட் போஸ்ட்மார்ட்டம் செய்ததிலும் பிணம் சத்யனின் எவ்வித அடையாளத்துடன் பொருந்தாமல் இருக்க, மூச்சுத் திணறியதில் மரணம் என்று மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. காணாமல் போனவர்களின் பட்டியலில் அந்தப் பிணத்தை தேடத்துவங்கியது போலிஸ். கடந்த மூன்று மாதங்களில் காணாமல் போனவர்களில் 30 வயது அல்லது அதற்குட்பட்டவர்கள் பெயர்களைப் பார்த்ததில் மூன்று நபர்கள் இருந்தனர். கபீர் முகமது, மாதவன், ப்ரகாஷ். மூன்று பேர்கள் வீட்டு முகவரிக்கு போன் செய்து உறுதி செய்துவிட்டு போலிஸ் விசாரணையைத் துவக்கியது.
***************************
எனக்கு எத்தனை கஷ்டமாக இருந்திருக்கும். சத்யனுக்கு அங்கிருந்தபடியே போன் செய்தேன். ரிங் போய்க்கொண்டேயிருந்தது. முழுவதுமாக ரிங் போய் கட்டானது. ஒரே ஒரு குரல் மட்டும் என் மூளையைச் சுட்டது. நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் உங்கள் அழைப்பை ஏற்க விரும்பவில்லை. நான் கேட்டினைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்து காலிங்பெல்லை அழுத்தினேன். சில நிமிடங்கள் கழித்து கதவு திறந்த சத்யனின் கண்கள் சிவந்திருந்தன. என்னைக் கண்டதும் கண்கள் சுருக்கியவர் எவ்வித ஆச்சரியமும் காட்டாமல் உள்ளே வா என்றார். என்னை சத்யன் தவிர்க்கிறார் என்பதை உணர்ந்ததுமே செத்துவிடலாம் போல் தோன்றியது. வீட்டின் உள்ளே சோபாவில் அமர்ந்திருந்தான் ப்ரகாஷ். எதிரிலிருந்த டீப்பாயில் பீர் பாட்டில்கள். அவன் அணிந்திருந்த சட்டையின் மேல் பட்டன்களில் முதல் மூன்று பட்டன்கள் அவிழ்ந்து ப்ரகாஷின் மார்பு முடிகள் தெரிந்தன. என் மார்பில் அத்தனை அடர்த்தியாய் மயிர் கிடையாது. நான் உள் நுழைகையில் அவன் சட்டை பட்டன்களைப் போட்டுக் கொண்டிருந்ததை அனிச்சையாய் உணர்ந்தேன். ப்ரகாஷ் என்னைப் பார்த்து சிரித்தான். எனக்கு சிரிப்பு வரவில்லை. என் அருகில் வந்து என் தோளினைப் பிடித்து அழுத்தி என்னை சோபாவில் அமரவைத்த சத்யனின் மூச்சில் இதுவரை நான் அறியாத வாசனை. டேபிள் மீதிருந்த சத்யனின் மொபைல் பார்த்ததும் நான் போன் செய்தது ஞாபகம் வர சத்யனிடம் ஏன் போன் அட்டெண்ட் பண்ணல என்று கேட்டேன். அப்போது சத்யனுக்கு போன் வந்தது. ப்ரகாஷ் முகம் சுளித்ததைப் பார்த்தேன். சத்யன் போனை எடுத்து மியூட்டில் வைத்தார். எனக்கு கடும் கோபம் வந்தது. எப்போ ஊர்ல இருந்து வந்தீங்க என்றதும் ப்ரகாஷ் சோபாவிலிருந்து எழுந்தான். உடனே சத்யன் ப்ரகாஷின் தோளை அணைத்தாற்போல் அவனை சோபாவில் அமரவைத்தார். பிறகு ஏதோ சமாதானம் செய்வதுபோல் என்னைத் தொட வந்தவரை பிடித்து தள்ளிவிட்டேன். டேபிளில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து டீப்பாய் முனையில் அடித்தேன். பாட்டில் உடையவில்லை. சினிமாவில் எல்லாம் உடனே உடைகிறது. எனக்கு அழுகையும் ஆத்திரமுமாய் வர சத்யனும் ப்ரகாஷும் பயம் ஏதுமின்றி என்னைப் பார்த்து சிரித்தார்கள். எனக்கு அவமானமாய் இருந்தது. நான் என் பலம் அனைத்தும் திரட்டி பல்லை இறுகக் கடித்துக்கொண்டு பாட்டிலை ஓங்கி ப்ரகாஷின் தலையில் இறக்கினேன். ப்ரகாஷ் லேசாக தலையை சாய்க்க பாட்டில் நடுமண்டையில் இறங்காமல் வலது பக்கத்தில் மோதி உடைந்து சிதறி சரியான பிடிமானமில்லாமல் என் கையையும் மீறி வழுக்கி அவன் காதைக் கீறி இறங்கி கழுத்தில் குத்தி நின்றது. நான் பாட்டிலை உருவினேன். தோல் கிழிந்து ரத்தம் பொங்கியது. வெறித்த கண்களுடன் சோபாவில் சரிந்தான் ப்ரகாஷ். மண்டையிலிருந்து ரத்தம் பெருகி அவன் முகத்தில் வழிந்து சோபாவில் இறங்கி தரையில் சொட்டித் தேங்கத் தொடங்கியது. இரு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டு சத்யன் நின்றிருந்தார்.
****************
போலிஸ் விசாரணையில் ப்ரகாஷ் வீட்டில் மட்டும்தான் சில தகவல்கள் கிடைத்தன. அதுவும் குழப்பத்தில் முடிந்தது. ப்ரகாஷ் காணாமல் போய்விட்டான் என்பதை உணர்ந்த அவன் அம்மா அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். ப்ரகாஷின் கார் மட்டும் எண்ணூர் பக்கம் ஒதுக்குப்புறமான ஒரு காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது. ப்ரகாஷின் அம்மா வந்து உடலைப் பார்த்துவிட்டு அது தன் மகனில்லை என்றதும் போலிஸ் டிபார்ட்மெண்ட் விசாரணை மறுபடியும் ஆரம்பத்திலேயே நின்றது. வீட்டின் உரிமையாளர் சத்யனும் இல்லை. காணாமல் போன பட்டியலில் இருந்த நபரும் இல்லை. இந்தப் பிணம் யாருடையது. சத்யன் எங்கே. இன்ஸ்பெக்டர் சக்கரைக்கு ராஜனின் ஞாபகம் வந்தது.
*************************
எனக்கு உடம்பில் லேசாய் நடுக்கம் வந்திருந்தது. உணர்ச்சிவசப்பட்டு நான் செய்த கொலை. தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு அமர்ந்தேன். அழுகை வந்தது. நிமிர்ந்து பார்க்கவே பயமாய் இருந்தது. சில நிமிடங்கள் கழித்து சத்யனின் குரல் கேட்டது. வாசலில் நிற்கும் ப்ரகாஷின் கார் டிக்கியில் அவன் பிணத்தை இருவருமாய் தூக்கிச் சென்று அடைத்தோம். அதன்பின் என்னை வீட்டிலிருக்கச் சொல்லிவிட்டு சத்யன் வேறு சட்டை பேன்ட் மாற்றிக்கொண்டு புறப்பட்டுப் போனார். ப்ரகாஷின் பிணத்தை அவன் காரோடு கொண்டுபோய் எங்கோ டிஸ்போஸ் செய்யப் போகிறார் என்று மட்டும் புரிந்தது. நான் எதுவும் கேட்கவில்லை. சத்யன் வருவதற்குள் சோபாவில் வழிந்திருந்த ரத்தத்தை சிதறிய கண்ணாடித் துண்டுகளை சுத்தம் செய்தேன். காலை எட்டு மணிக்கு மேல் சத்யன் வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் அழுதேன். யாரிடமும் இதைப்பற்றி மூச்சுவிடக்கூடாது என்றார். இத்தோடு எல்லாவற்றையும் மறந்துவிடு என்றார். எல்லாவற்றையும் என்பதன் அர்த்தம் அப்போது எனக்குப் புரியவில்லை.
*******************
இன்ஸ்பெக்டர் சக்கரையும் சப் இன்ஸ்பெக்டர் பிச்சையும் ராஜனைத் தொடர்பு கொண்டபோது அவர் தன் மகள் வீட்டில் டெல்லியில் இருப்பதாய் சொன்னார். வழக்கின் விபரத்தை சொன்னதும் ராஜன் தன் சர்வீஸில் இதுபோன்ற வழக்குக்கு கடைசிக் கட்டமாய் ஆவி மீடியத்தினைத் தொடர்புகொண்டிருப்பதாகவும் அது ஓரளவு பலனளித்திருப்பதாகவும் சொன்னார். தனக்கு தெரிந்த ஓர் ஆவி மீடியம் தகவலும் தந்தார். சக்கரையும் பிச்சையும் வேறு வழியின்றி அதற்கு சம்மதித்தார்கள்.
************************
கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆயிற்று. சத்யன் என்னைப் பார்க்க ஜிம்முக்கு வரவில்லை. போன் செய்தால் எடுப்பதில்லை. வீட்டுக்கு சென்றால் ஆள் இல்லாமல் திரும்ப நேரிட்டது. எனக்கு பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. எல்லாவற்றையும் மறந்துவிடு என்ற சொன்னது அவரையும் சேர்த்துதானா... அன்று இரவு சத்யன் வீட்டு வாசலில் சத்யன் பைக்குடன் இன்னொரு பைக்கும் நின்றிருந்ததைப் பாத்தேன். சத்யனுக்கு போன் செய்தேன். எடுக்கவில்லை. கதவைத் தட்டினேன். காலிங்பெல் அடித்தேன் விடாமல். கதவினைத் திறந்த சத்யன் டவல் மட்டும் கட்டி இருந்தார். நான் உள்ளே நுழைந்தேன். என்னை பார்த்து எதுக்கு வந்தே என்றார். ஹாலில் யாருமில்லை. பெட்ரூம் கதவு லேசாகத் திறந்திருக்க முழு இருட்டில் இருந்தது அந்த அறை. வாசலில் நிற்கும் பைக் யாருடையது என்றேன். பதில் சொல்லாமல் என்னை சத்யன் முறைத்தார். முழுக்க என்னை அவாய்ட் செய்வதாய் சொன்னார். ப்ரகாஷை நான் கொன்றது அவருக்கு பயத்தை தருவதாகவும் அவரை மறந்துவிடவும் சொன்னார். எனக்கு அழுகை வந்தது. நான் சத்யனை கட்டிப்பிடித்தேன். நெஞ்சில் முகம் அழுத்தி அழுதேன். உங்க மேல நான் பைத்தியமாயிருக்கேன். நீங்க இல்லைனா நான் இல்லைனேன். நானா என் மேல பைத்தியமா இருன்னு சொன்னேன்னு சொன்னார். எனக்கு வலிச்சிது. அழுதுகிட்டே நிமிர்ந்தேன். நீங்க ஆசையா எடுத்துக் குடுத்த டீ ஷர்ட்தான் மூணு நாளா போட்ருக்கேன் என்றேன். சத்யன் என்னை பாக்காமல் எங்கேயோ பாத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் கவனித்தேன். திறந்திருந்த பெட்ரும் கதவு இடுக்கிலேர்ந்து புகை. நான் சத்யனை விட்டு விலகினேன். பெட்ரூம் உள்ளே செல்ல அவசரமாய் என் கையைப் பிடித்து இழுத்த சத்யனை ஓங்கி உதறித் தள்ளி கதவு திறந்தேன். கும்மிருட்டு. சிகரெட் கங்கு மட்டும் தெரிந்தது. என் மொபைல் டார்ச்சினை ஆன் செய்தேன். வெளிச்சத்தில் சுவரில் என் நிழலும் கட்டிலில் படுத்துக்கிடந்த அவனின் நிழலும். பின்னாலே வந்த சத்யன் சுவிட்ச் ஆன் செய்தார். அறையில் பரவிய வெளிச்சத்தில் அவனைப் பார்த்தேன். முழுக்க மலையாள முகம். சத்யனின் படுக்கையறை பார்ட்னர். எனக்கு அங்கு நிற்கவே அறுவறுப்பாயிருந்தது. திரும்பினேன். அடுத்து சத்யன் சொன்ன வார்த்தைதான் என்னை அவ்வளவு தூரம் அவமானப்படுத்தியது. என்னையும் அவர்களுடன் இருக்கச் சொன்னார். நான் சத்யனின் முகத்தில் காரித்துப்பினேன். சத்யன் சட்டென்று தன் கையிலிருந்த தலையணையால் என் முகத்தை மூடி கட்டிலில் தள்ளினார். நான் முற்றிலும் தளர்ந்திருந்தேன். சத்யனை எதிர்க்கவேயில்லை. ஆனாலும் என் கைகள் இறுகப் பிடிக்கப்பட்டிருந்தது. கால்களை மட்டும்தான் என்னால் உதைக்க முடிந்தது. இதோ சத்யன் தலையணையை எடுத்துவிடுவார். என்னைக் கொல்லமாட்டார் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோது என் இதயத்தில் சுருக்கென்று ஒரு வலி வந்தது. நான் படுக்கையில் மூத்திரம் பெய்திருந்தேன். என் ஆசனத்துளை வழியாக காற்றென என் உயிர் பிரிந்திருந்தது. எனக்கென்று எதுவும் இல்லாமல் ஆயிற்று. என் கண் முன்னால் என் உடலை சத்யன் கொன்றுகொண்டிருந்தார்.
*************************************
அந்த டம்ளர் அசையாமல் அப்படியே நின்றிருந்தது. எந்தக் கட்டமும் மாறவில்லை. சக்கரைக்கும் பிச்சைக்கும் அந்த ஏர்கண்டிஷன் அறையிலும் வேர்வை வெள்ளம். நிலத்தில் குறுக்கும் நெடுக்குமாய் போட்டிருந்த கட்டங்களுக்கு முன்பு அமர்ந்திருந்தவர் அழுதுகொண்டிருந்தார். குரலில் கரகரப்பு கூடியிருந்தது.
*********************
சத்யன்தான் என்னைக் கொன்றார். நான் இறந்தது தெரியாமல் நீண்ட நேரம் என் முகத்தில் தலையணையை அழுத்தியபடி இருந்தார். நான் வாய்விட்டு அழுதேன். அப்படி சொல்ல முடியாது. என்னால் அழுகையை உணர முடியும். ஆனால் அழ முடியாது. அதற்கு உடல் வேண்டும். இப்போது வெறும் உயிர். யார் கண்ணுக்கும் தெரியாத உயிர். என் கண் முன்னால் என் உடலை தூக்கிக்கொண்டு வீட்டின் தோட்டத்துக்கு சென்றார். குழி தோண்டினார். என் சத்யன் எனக்கு குழி தோண்டுகிறார். இனி அவர் மிக சுதந்திரமாக இருப்பார். அவர் சந்தோசமாக இருப்பார். ஏதோ ஒருநாளில் ஓர் இரவின் வியர்வை தணிந்தபின் நான் சொல்லியிருக்கலாம். நீயே எனக்கு கொள்ளி வெச்சிடு சத்யான்னு. இன்று அது உண்மையாவே நடக்கிறது. நான் சத்யனுடன் வாழ்ந்த வாழ்வு சந்தோசமாக இருந்தது. அது போதும். இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாம். விதி. இனி ஒன்றுமே செய்ய முடியாது. என்னை சத்யன் இழுத்து தோண்டிவைத்த குழியில் தள்ளினார். மண்ணள்ளிப் போட்டார். என் முகத்தில் மண் விழுந்ததை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். குழி முழுவதும் மூடும்படி மண் அள்ளிக்கொட்டி மூடியபின் வியர்வையும் பெருமூச்சுமாய் சத்யன் அந்த இன்னொருவனின் தோளில் கையைப் போட்டபடி வீட்டுக்குள் சென்றார். என் உடல் மூடியிருந்த குழியின் மீது நான் அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து நான் வீட்டுக்குள் போனபோது சத்யன் குளித்துவிட்டு பாத்ரூம் விட்டு வெளிவந்தார். ஃப்ரிட்ஜினைத் திறந்து பீர் பாட்டில் ஓப்பன் செய்து குடிக்க ஆரம்பித்தார். அந்த இன்னொருவனுடன் அன்று இரவு சத்யன் ஒன்றாகவில்லை. மூன்று பாட்டில் பீர் முழுக்க குடித்தவர் தலையைப் பிடித்துக்கொண்டே தரையிலே படுத்துவிட்டார். நான் அவர் அருகில் அமர்ந்து குறட்டையுடன் உறங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
****************************
இன்ஸ்பெக்டர் சக்கரை அந்தக் கட்டங்களுக்கு முன்பு அமர்ந்து அழுது கொண்டிருந்தவரிடம் மெல்லிய குரலில் '' அதுக்கப்புறம் சத்யனைப் பாத்தீங்களா?'' என்றார். கட்டங்களில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளில் ஓர் இடத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு அந்த டம்ளர் நகர்ந்தது.
***************************************
அன்று இரவுதான் சத்யனை நான் கடைசியா பாத்தது. அதன்பின் அவரை நான் பார்க்கவே இல்ல. என்னால வெளிய எங்கேயும் போக முடியல. இந்த வீட்லதான் இருந்தேன். சத்யன் என்னைக் கொன்ன அந்த பெட்ரூம்லயே இருந்தேன். பசியில்ல. தூக்கமில்ல. ஆனா என் சாவுக்கு முன்னாடி நான் போராடின அந்த உணர்வு மட்டும் கொஞ்சமா இருந்தது. யாருமே இந்த வீட்டுக்கு வரல. என்னைப் பொதச்ச இடத்துக்கும் கொன்ன இடத்துக்குமா அலைஞ்சிட்டு இருந்தேன். என் உலகம் ரொம்ப அமைதியானது. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் என் உடம்பைத் தோண்டி அறுத்துப் பாத்து என்னென்னமோ நடந்தது. சத்யன் ஞாபகம் மட்டும் போகல. சத்யனை மறுபடியும் பாக்கணும் போல இருக்கு. நான் என்ன பாவம் பண்ணினேன். எனக்கு ஏன் இந்த நெலமை. சத்யனும் நானும் இந்த உலகத்துல மறுபடியும் ஒண்ணா வாழ மாட்டோமா...
*****************************
'' என்ன சார் இது...எனக்கு எப்படா அந்த ரூமை விட்டு வருவோம்னு ஆயிடுச்சி. அப்பாடி... ஆவி இருந்த வீட்லதான் நாம விசாரணை நடத்தினோமா... வெளங்கிடும்டா சாமி. சார்... என்ன சார் பேசாம வர்றீங்க'' பிச்சையின் குரலில் ஆசுவாசம்.
''இல்ல பிச்சை... இந்த பாடியைக் கண்டு புடிச்சது ராஜன் சாருங்கிறதாலதான் அவர்கிட்ட ஐடியா கேட்டோம். ஆவி மேட்டர் சொன்னதும் அவர்தான். இப்போ என்ன ஆச்சு. பொணத்தோட பேரு மட்டும்தான் தெரிஞ்சிருக்கு. இதுக்கா இவ்ளோ கஷ்டப்பட்டோம். பொணத்தோட டீ ஷர்ட் பிட்டுத்துணி ஆவியையே வரவெச்சிடுச்சி. ஆவி சாட்சியமெல்லாம் கோர்ட் ஒத்துக்காது. இப்போ நமக்கு வேண்டியது சத்யன். அவன் எங்க இருக்கான். என்ன பண்ணிட்டுருக்கான்''
******************************
என் பேரு சத்யன். ஒரு ப்ரைவேட் மொசைக் கம்பெனியில ஒர்க் பண்ணிட்டுருந்தேன். இப்போ இல்ல. எனக்கு சின்ன வயசிலேர்ந்து ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. ஹோமோன்னா ஒங்களுக்குத் தெரியுமா...எனக்கு ஆண்களோட ஒண்ணா இருக்கத்தான் புடிக்கும். அது ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிற காலத்திலேர்ந்தே வந்துடுச்சி. இந்தப் பழக்கம்தான் இப்போ என்னைக் கொலை வரைக்கும் கொண்டு வந்துருக்கு. வசீகரன்னு ஒருத்தனை கொலை பண்ணிட்டேன். ஆமா சார்... வசீகரன் ஒரு மலையாளி. கேரளாவுக்கு ஆர்டர் எடுக்கப் போனப்போ பழக்கமானான். மாசம் ஒரு தடவை தமிழ்நாட்டுக்கு வருவான். வந்தா என் வீட்லதான் தங்குவான். எனக்கு வசீகரனை ரொம்ப புடிக்கும். ஒங்களால இதை அப்சர்வ் பண்ணிக்க முடியாதுதான். ஆனா அவனோட இருக்கிறப்போ அவ்ளோ சந்தோசமா இருக்கும். அவனுக்காக நான் ஒரு கொலையே பண்ணிருக்கேன் சார். அன்னிக்கி மட்டும் நான் அதை பண்ணலைன்னா வசீகரன் அப்பவே செத்துருப்பான். இன்னிக்கி என் கையாலையே அவனைக் கொன்னுட்டு வந்துருக்கேன். மதன் என் மேல உயிரா இருந்தான். ஆனா சின்னப்பையன். அவனோட ஆக்டிவிட்டீஸ் எல்லாம் அவனை ஒரு பொசசிவ்னெஸ் புடிச்ச ஆளாதான் நெனைக்க வச்சிச்சி. அதுவுமில்லாம என் சுதந்திரம்னு ஒண்ணு இருக்குல்ல. என் சந்தோசம்னு ஒண்ணு இருக்குல்ல... மதனுக்கு நான் முழுசா வேணும்னு எதிர்பார்த்தான். நான் அப்படி இல்ல. எனக்கு ப்ரகாஷ்னு ஒரு ஃப்ரெண்ட் இருந்தான். ஒருநாள் அவனும் நானும் ஒண்ணா இருந்தப்போ மதன் வந்துட்டான். ஆத்திரத்துல ப்ரகாஷ் மண்டையில பாட்டிலால அடிச்சிக் கொன்னுட்டான். நான் பதறிட்டேன். அப்பவே மதனை நான் வெறுத்துட்டேன். ப்ரகாஷ் பாடியை அவன் கார் டிக்கியில வெச்சி சென்னை பார்டர் தாண்டி ஆந்திராவுக்குள்ள நான் பாத்த ஒரு ஏரியில தள்ளி விட்டுட்டு வந்துட்டேன். வர்ற வழியில காரை எண்ணூர் பக்கத்துல ஒரு காட்டுக்குள்ள விட்டுட்டு பஸ் ஏறி வீட்டுக்கு வந்துட்டேன். மதனை அவன் வீட்டுக்கு அனுப்பிட்டு யோசிச்சிப் பார்த்ததில இனிமே மதனோட கனெக்ஷன் வெச்சிருந்தா நாளைக்கு நம்மளையும் கொன்னுடுவான்னு தோணுச்சி. மதனோட அப்புறம் நான் எந்த தொடர்பும் வெச்சிக்கல... பாவிப் பய மோப்பம் புடிச்சிக்கிட்டே வந்துட்டான். அன்னிக்கி என் வீட்டுக்கு வசீகரன் வந்துருந்தான். ஏற்கெனவே ப்ரகாஷ் அனுபவத்துனால நான் ரொம்ப ஜாக்கிரதையா இருந்தேன். மதன் என் சந்தோசத்துக்கு குறுக்க வந்தது எனக்கு சுத்தமா புடிக்கல. வசீயை பார்த்ததுமே மதன் அவனை அடிக்கப் போனான். எனக்கு கோபம் வந்துடுச்சி. இவன் யாரு தேவையில்லாம நமக்கு இடைஞ்சலான்னு ஆத்திரத்துல மதனைக் கொன்னு என் வீட்டு தோட்டத்துலையே பொதச்சிட்டேன். எனக்கு வேற வழி தெரியல. குற்ற உணர்ச்சி எதுவும் அப்போ இல்ல.
***************************
இன்ஸ்பெக்டர் சக்கரையின் ஜீப்பில் இருந்த வொயர்லெஸ் கதறிக்கொண்டிருந்தது சக்கரையின் பேர் சொல்லி.
*********************
வசீகரனை மறுபடியும் மீட் பண்ணினது நேத்துதான். கே கே நகர்ல எனக்கு இன்னொரு வீடு இருக்கு. அங்கதான் வரச்சொன்னேன். வசீ ஒரு செயின் ஸ்மோக்கர். பட் எனக்கு சிகரெட் வாசனை புடிக்கும். அதுவும் வசீயோட வாசனை. சான்ஸே இல்ல... வசீ என் வீட்டுக்கு வந்ததிலேர்ந்து நெறைய போன் வந்துக்கிட்டே இருந்தது. எனக்கு அது புடிக்கல. அவனும் யார் யார்கூடவோ பேசிட்டு இருந்தான். திடீர்னுதான் கேட்டான். யாரோ ஒரு சுந்தர்னு ஒருத்தன் பேர் சொல்லி அவனையும் இங்க வர சொல்லலாமேன்னு. என்ன சார் நடக்குது இங்க... நான் வசீக்காக ஒரு கொலையே பண்ணிருக்கேன் சார். இவன் என்னடான்னா எவனையோ வரவச்சி என் கண்ணு முன்னாடியே... எனக்கு இதுல சம்மதம் இல்லைன்னேன். அப்போ என் சந்தோசம் ஒனக்கு முக்கியம் இல்லையான்னான். யோசிச்சிப் பாருங்க. நான் அவன் சந்தோசம் இல்லையாம். யாரோ ஒருத்தன்... ஷிட் ஷிட் ஷிட்... எனக்கு மதன் ஞாபகம் வந்தது. அவன் எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பான். என் ஞாபகமா நான் எடுத்துகுடுத்த டீ ஷர்ட்டை மூணு நாளா கழட்டாம போட்ருக்கிறதா சொன்ன மதன் தான் சார் எனக்கு எல்லாமே இருந்துருக்கணும். மிஸ் பண்ணிட்டேன். வசீகரன் கட்டாயமா அந்த சுந்தர் வரணும்ணு சொன்னான். இது என் வீடுங்கிறதை வசீக்கு ஞாபகப்படுத்துனேன். வசீகரன் வெளியில லாட்ஜில தங்கப் போறதா சொல்லி கெளம்புனான். எழுந்திரிச்ச வசீ நெஞ்சில கையை வெச்சி வேகமா தள்ளினேன். அவன் என் பலத்தையெல்லாம் தாங்குற ஆள் இல்ல. பின்னந்தலை செவுத்துல மோதி மண்டை ஒடஞ்சி செத்துட்டான். எழுப்பி எழுப்பி பாத்தேன். எழுந்திரிக்கல. இந்த மூணு மாசத்துல என் லைஃப்ல நடக்கக் கூடாதது எல்லாம் நடந்துடுச்சி. எனக்கு குடும்பம்னு எதுவும் இல்ல. நான் பண்ணின தப்புக்கு இனிமே எங்கேயும் என்னால ஒளிய முடியாது. அவன் பாடி அங்கேயேதான் கெடக்கு. இதுதான் அந்த வீட்டு அட்ரஸ். நான் கொஞ்ச நேரம் தனியா அமைதியா இருக்கணும். ஏற்பாடு பண்ண முடியுமா...
**************************
இன்ஸ்பெக்டர் சக்கரையின் செல்போன் அடித்தது. எடுத்துப் பார்த்ததில் புது எண். ''ஹலோ'' என்றார்.
'' சார்...நான் கே கே நகர் ஸ்டேஷன்ல இருந்து பேசுறேன். இங்கே சத்யன்னு ஒருத்தர் தான் ரெண்டு கொலை பண்ணிட்டதா வந்து சரண்டர் ஆகிருக்காரு... மேக்சிமம் நீங்க டீல் பண்ணிட்டுருந்த கேஸாதான் இருக்கணும். இங்கே ஸ்டேஷன் வர்றீங்களா சார்''
'' ஒடனே வர்றேன் சார்'' என்ற சக்கரை, '' பிச்சை... வந்து வண்டியை எடுங்க... ஆள் சரண்டர். கேஸ் முடிஞ்சிடுச்சா, ஆரம்பிக்கப் போகுதான்னு தெரியல....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா...இன்னும் எத்தனை பேர்டா இப்பிடி கெளம்பிருக்கீங்க. கலீஜ் பக்கிங்களா''
**********************************
கிழக்கு கடற்கரை சாலையின் காற்றில் குளிர் கூடியிருந்தது. இரவைப் பூசிய கடலோர மரங்கள் சிலிர்த்து சிலிர்த்து தங்களை சூடேற்றிக்கொண்டிருந்தன. அந்த பங்களா கடல் ஒட்டித்தான் இருந்தது. அவன் கைகளுக்கு உறை மாட்டினான். மூன்று கண்ணாடி கிளாஸ்களில் மாம்பழ ஜூஸ் ஊற்றினான். பாக்கெட்டிலிருந்து சிறிய பாட்டில் ஒன்றினை எடுத்தான். சற்றே பெரிய எழுத்துகளில் பாய்சன் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. மூன்று கிளாஸ்களில் ஒன்றில் மட்டும் சிறிய பாட்டிலைத் திறந்து ஊற்றினான். அவனுக்கு மட்டும் அடையாளம் தெரியும். சிறிது நேரம் கழித்து ஒலித்த காலிங்பெல்லைக் கடந்து அவர்கள் இருவரும் வந்தார்கள். அதில் ஒருவன் மிகவும் வெள்ளையாக இருந்தான். கறுப்பு நிறத்தில் டீ ஷர்ட் அணிந்திருந்தான். ஐ யம் தி பெஸ்ட் என்று அதில் எழுதியிருக்க அப்போதுதான் மீசை அரும்புவிடத் துவங்கியிருந்தது. கண்களில் ஒருவித அவசரம் மிதந்தது. அமர்ந்தவுடன் மூவரும் அந்த மாம்பழ கிளாஸ்களை காற்றில் உயர்த்தி ச்சியர்ஸ் சொன்னார்கள். பத்து நிமிடங்களில் பரிமாறப்பட்ட பேச்சுகளிலும் முத்தங்களிலும் எவ்விதப் பதட்டமுமில்லை. பத்தாவது நிமிட இறுதியில் டீ ஷர்ட் அணிந்திருந்தவன் வாயில் நுரை தள்ளி பெருங்குரலெடுத்து கதறி வயிற்றைப் பிடித்துக்கொண்டு வாந்தி எடுத்தான். ஹாலில் விரிந்திருந்த கார்ப்பெட் முழுவதும் சிதறித் தெறித்தது ரத்தம்.
''என்னடா பண்ணினே'' என்றவனிடம்... '' எனக்கு புடிச்ச பாட்டு இன்னொருத்தனுக்கு புடிக்கும்னு சொன்னா அந்தப் பாட்டோட சேர்த்து அவனையும் வெறுக்கிறவன் நான். எனக்குத் தெரியாம இன்னொருத்தனோட சுகம் கேக்குதுடா இவனுக்கு...அதான்'' என்ற சுந்தர் சொற்களில் குற்ற உணர்ச்சியோ பயமோ இல்லை.
மரங்களுக்கு ஊடாக நடந்துசென்ற சுந்தரின் தோளில் பிணம். கடலினை நெருங்கியவுடன் சுற்றுமுற்றும் பார்த்தான். அலையின் ஓசை, இரவுக்காற்றின் ரகசியம், மரங்களின் சாட்சியம் அவ்வளவுதான். நீரில் இறங்கி கொஞ்சம் தூரம் சென்றவனை அலை கரைக்கு தள்ளிக் கொண்டிருந்தது. அலையோடு மிதந்தே கடலோடு உள்ளே சென்றவன் அப்படியே பிணத்தை நழுவவிட்டான். திரும்பி நடந்தவன் கரைக்கு வந்து நின்று கடல் பார்த்தான். தலை முடியிலிருந்து கடல் நீர் வழிந்து அவன் வாயில் இறங்கியது. கரித்த உப்பை காரித்துப்பினான் கடல் பார்த்து. ஷவர் திறந்து அதன் கீழ் அவனும் அவனும் நிர்வாணமாக நின்றிருந்தபோது சுந்தரின் உடலில் துளி உப்பில்லை.
*************************************
மறுநாள் பேப்பரின் மூன்றாம் பக்கத்தில் மேலே 'கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையில் ஒதுங்கிய அடையாளம் தெரியாத பிணம்' என்ற தலைப்புச் செய்தியைப் படித்து பின் அடுத்த பக்கத்துக்கு சென்றார் இன்ஸ்பெக்டர் சக்கரை.
ஷாஜி - சிறுகதை
ஷாஜி
காதலென்ற மும்தாஜின் ஞாபகத்தில் முத்தமிட்டு இம்மடலைத் தொடங்குகிறேன்.
வெண்ணிற பளிங்குகள் மிதக்கும் அரண்மனையில் மட்டுமல்ல; என் அகத்தின் விஸ்தரிப்பில் முதலானவளுக்கு... உன்னால் இவ்வுலகத்தை ஆண்டவனின் கடைசிச் செய்தி. இறுதி நாளின் புரைகளில் வழியும் பழைய நாளின் நீர் மிச்சத்தை உன்னிடம் இவ்வழி சொல்ல இறைவன் வழங்கிய வாய்ப்புக்கு நன்றி. வருங்காலம் காதலின் சின்னம் எனப் போற்றப்படும் ஒன்று குற்ற உணர்வின் மொத்த உருவம் என்னும்படி ஆகிவிடக் கூடாதே என்ற பதைபதைப்பில் உனக்கு எழுதும் மடல் இது. நம் இயற்பெயரை மாற்றி என் தந்தை தந்த புனைப்பெயரில் வாழ்ந்த நம் வாழ்வு போலவே தன் இயற்பெயரை மாற்றிக்கொள்ளுமோ இந்தக் காதல் என்ற நடுக்கத்தில் எழுதும் மடல். நரை கூடிய முதிய நாளில் உன்னிடம் பகிர நினைத்த எல்லாம்தான் இதோ இந்த நாளில் உன் ஞாபகம் கலந்திருக்கும் காற்றில் எழுதுகிறேன்.
வரலாற்றின் பின் நாட்கள் என்னைப் பற்றிய குறை கூறி குற்றவாளிக் கூண்டில் கூட ஏற்றலாம். அந்தக் கூண்டு முழுவதும் காதலைப் பூசி வைத்தது நீதானே மும்தாஜ். என்னில் ஒரு பாதியாய் நீ நின்று இயங்கிக் கொண்டிருந்தது என் அகமனக் கண்ணுக்கு மட்டும்தான் தெரிந்தது. புறப் பார்வையிலும் என் பாதி வெளித்தெரிய வேண்டுமென்றுதான் போகுமிடமெல்லாம் உன்னையும் கூட்டிக்கொண்டே அலைந்தது. உண்மைக் காதலுக்குதான் இவ்வுலகில் எத்தனை எத்தனை பெயர்கள். உன் இன்ப துன்பங்களில் நான் பங்கு கொள்வதை விட நம் இன்பமும் துன்பமும் நாமாய் இருக்க வேண்டியதன் விளைவுதான் ஓருயிரில் குடிகொண்டுவிட்ட நம் உடல்கள். நான் ஏன் உன்னைப் பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தேன் என என்றாவது யோசித்திருக்கிறாயா மும்தாஜ். நீ என்னைவிட மதியூகி. சம வயது என்பதாலோ என்னவோ இருவரும் ஒரே அலைவரிசையில் முத்தமிட்டுக்கொண்டோம். அரண்மனை நிர்வாகங்களில் உன் விரலசைவில் ஏற்படத் தொடங்கிய மாற்றங்கள் கண்டுதான் என் யோசனையும் யாசகமும் உன்னில் உன்னை உனக்காக உன்னிடம் என்றானது.
நீள் நதியான நம் பதினெட்டு வருட இல்லற வாழ்க்கைக்குத் தொடக்கமான சிறு துளியில் விரிந்த உன் அழகும் மின்னலாய் ஊடுருவிய பார்வையும் இந்த நிமிடம் கூட என் நெஞ்சில் அலையெனத் துள்ளுகிறது மும்தாஜ். அன்றைக்கு மாலை மறைந்த மென்மையான ஆரஞ்சு சூரியன் என்னை ஆசிர்வதித்திருந்தது. உன்னைச் சந்திக்கப் போகிறேன் என்பதை எந்த மின்னலும் மின்னித் தெரிவிக்கவில்லை. எவ்வளவு நேரம்தான் என் பாரத்தைக் குதிரை தாங்குவது... குதிரைக்கும் ஓய்வு தந்து நான் இறங்கி நடக்கிறேன். என் கால்கள் நடந்தன. என் கண்கள் நகர்ந்தன. பொருட்காட்சி சந்தையில் என் உயிர்க் காட்சியைச் சந்திக்க வேண்டுமென்பது இறையின் ஆணை. அதை மாற்ற யாரால் முடியும். எத்தனையோ முகங்கள் என்னைக் கடக்கின்றன. மூடிய மஸ்லின் திரைக்குப் பின்னால் மருண்ட விழிகளும் நாணப் புருவங்களும் வேகமாய் விலகுகின்றன. என் நாசி மோதி விலகுகின்றன புதுபுது வாசனைகள். எல்லாம் செயற்கைத் திரவியங்களின் அடக்கமாட்டாத வெளிப்பாடு. என் உள்ளத்துக்குள் மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது காதலின் பாங்கோசை. இது என்ன புதுவிதமான காற்றின் வருடலென்று என் காதுமடலின் சில்லிப்பைத் தொட்டுத் தடவிப் பார்க்கிறேன். என் இடது கண் வேகமாய் துடித்து அடங்குகிறது. கால்களில் வேகம் பூட்டி விரைகிறேன். விழாக்கால கடைகளைப் பார்த்து உலா வந்த என் பார்வைத் தேடலில் நீ பட்டாய். கண்ணாடிப் பொருட்கள் நிரம்பிய கடையில் உன் முகத்தில்தானே என் முகம் பார்த்தேன். பளிங்கின் தூய்மையில் என் பால்யம் விளங்கிற்று. கொதிக்கும் பாலில் விசிறிய ஒரு துளி நீராய் அப்படியே என் மனத்துடிப்பின் பூரிப்பு அடங்கிற்று. காதலின் சந்தையில் நீ வியாபாரியானாய். நான் வணிகனானேன். நான் விலை விசாரித்த கண்ணாடிக் கோப்பையில்தான் என் இதயம் கிடந்து துடித்துக்கொண்டிருந்தது உன் கையில் இருந்ததால்தான் காதலே... என்னைச் சீண்டுவதற்கென நீ சொல்லிய வார்த்தையில்தான் எத்தனை உண்மை. கண்ணாடியை வைரமென நீ சொன்னது எனக்கான குறும்புப் பொய்யல்லவே. உன் கையிலிருக்கும் கண்ணாடி எப்படி கண்ணாடி ஆகும்? அது வைரத்துக்கும் மேலான ஒன்று. உனக்கும் கீழான ஒன்று. என்னைப் போலவே உனக்குள்ளும் அன்று பொழுது தன் நிறம் மாற்றியிருக்கும். நான் அன்று அதிக விலை தந்து கண்ணாடியை வைரமென வாங்கினேன், வைரம் பளபளத்த கண்களைப் பார்த்துக்கொண்டே... உன் பெயர் அறியாமல் துடித்துக்கொண்டிருந்த என் இதயத்தைப் பண்டமாற்று முறையில் உன்னிடம் வழங்கிக்கொண்டே வாங்கினேன் உன் இதயத்தை.
அந்த முதல் நாள் சந்திப்பின் ஈரம் துளி மாறாமல் இதோ என் நரைத்த தாடியின் ஒவ்வொரு ரோமங்களும் காற்றில் உன்னை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறது. நாம் வாழ்ந்த நாட்களில் அரசல் புரசலாக என் செவியில் விழுந்த வார்த்தைகள்தான், நான் உன் மேல் பித்துகொண்டு திரிகிறேனென்று. என் எல்லா நோய்மைக்கும் மருந்தான உன் மீது நான் கொண்டிருந்தது பித்தல்ல; தெளிவு என்பதை எப்படி உரைப்பேன் ஈரமற்ற இவ்வுலகுக்கு. வாழ்ந்த நாட்களில் ஒருநாள் நாம் பேசிக்கொண்டிருந்தோம், மூப்படைந்த பின்பு நம் காதல் நரைதட்டி பல் கொட்டி முதுகு கூனாகி நடுநடுங்கியபடி இருக்குமென்று. நமக்கு நரை கூடியது போல் நம் காதலுக்கு வயதாகவே இல்லை. இதோ பார் தூரத்து மழையில் மெளனமாய் நனைந்துகொண்டிருக்கும் நம் காதல் சாட்சி உடம்பில் பச்சைப் பளிங்கின் நடனத்தினை.
போர்க்களத்தில் வாள் சுழற்றும்போதும் என் விழி ஓரத்தில் நின்றபடி நீதானே என்னை இயக்கினாய். குருதி கண்டு கலங்கி ஓடுவது நம் காதலின் வழக்கம் கிடையாதே. பதினெட்டு வருட தாம்பத்யத்தில் பதினான்கு குழந்தைகளா என்ற ஆச்சரியம் வெறுப்பாகவும் அருவருப்பாகவும் மாறி நம்மைச் சுற்றி வந்ததை நீ அறிவாய்தானே... உன்னைக் கணம் கூட பிரியக்கூடாது என்ற என் காதலின் விளைவுதானே அவையெல்லாம். ‘ஷாஜி... ஷாஜி' என்று நீ என்னை எந்தக் கணத்தில் அழைப்பாய் என்று எனக்கு மட்டும்தானே தெரியும். அதில்தானே நான் உலகம் மறந்தேன். என் இயற்பெயரான குர்ரம் என்பதையே மறக்க வைத்தது உன் காதல் நிரம்பிய ஷாஜி என்னும் அழைப்பு. நீ தொடர்ந்து உன் உதடுகளில் என்னை உச்சரிக்க வேண்டும் என்பதே என் தீராத அவாவாய் உள்ளுக்குள் ஊறிக்கொண்டிருந்தது. உன்னை நானும் என்னை நீயும் எவ்வாறு கொண்டாடினோம் என்பதன் சாட்சிகள்தானே நம் குழந்தைகள். நான் செல்லுமிடமெல்லாம் உன்னைக் கூட்டிக்கொண்டு போனதன் விளைவோ என்னமோ உன் கடைசி நிமிடமும் போர்க்களத்திலே ஆனது. கூடாரத்துக்கு வெளியே என் வீரத்துக்கான பிரசவ நிகழ்வு வெறிகொண்டு வாள் சுழற்றிக்கொண்டிருந்தது. கூடாரத்துக்கு உள்ளே நீ பல் கடித்து மூச்சடக்கி கண்கள் இறுக மூடி வலி அனுபவித்துக் கொண்டிருந்தாய். நம் காதலின் பதினான்காவது நினைவுச் சின்னம் கால் உதைத்து கர்ப்பப்பை தாண்டி வெளியேறி பூமி நழுவும் கணத்துக்கென காத்திருந்தாய். உன்னை மொத்தமாய் காப்பதற்கு என் காதலும் முத்தமும் போதும் எனத் தீர்மானித்திருந்தது எனது மாபெரும் பிழையாயிற்று என்பது அப்போதுதான் உறைத்தது. என்னையே சிறு மழலையெனத் தாங்கிக் கொஞ்சும் உன்னை வலியவளாகக் கணித்திருந்தேன். உன் மெல்லிய கர்ப்பத்தையும் நான் கண்கொண்டு காத்திருக்க வேண்டும். வீறிட்டுக் கதறியபடி நிகழ்ந்தது உன் பிரசவம். செய்தியறிந்து மகிழ்வில் வாள் மடக்கி உறையில் வைத்து உன் அருகில் வந்தபோது உன் உடம்பு ஈரம் கோர்த்திருந்தது. வெப்பப் போர்வைக்குள் துடித்துக்கொண்டிருந்தாய். மூடிய உன் இமைகளை மீறி கண்ணீர் வழிந்தது. துடைத்த என் விரல்களெங்கும் குருதிப் பிசுபிசுப்பு. என் இதயம் தடதடக்கத் தொடங்கியது. உன் மெல்லிய உடம்பின் பதற்றத்தினை என் உடம்பெங்கும் பூசிவிட்டுதானே உன்னியக்கம் நிறுத்தினாய். அப்போதும் உன்னை என் மடியில் தாங்கித்தான் இப்பூமிக்கு தாரை வார்த்தேன். நம் பதினான்காவது காதல் ரத்தச்சூடு மாறாமல் பூமியில் விழுந்து கதறிக்கொண்டிருந்தது. கடவுளின் வெறித்த விழிகளை முதன்முறை கண்டேன் மும்தாஜ். என் உலகம் அப்போதே இருண்டு விட்டது. இதோ, பூக்கள் பூப்பதையும் நட்சத்திரம் உதிர்வதையும் மழை மண் மோதுவதையும் கண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன மும்தாஜ். என் கண்களில் ஒளி அகன்று வருடங்களாகி விட்டன. எனது சந்தோஷங்களையும் பெருமிதங்களையும் அபகரித்துக்கொள்ளவா நீ பிரசவித்தாய்...
உன்னை இழந்த கணத்திலிருந்து என் உயிரும் மெல்ல நரைத்து தளர்ந்து தன்னை அழிக்கத் தொடங்கியதை நீ அறிவாய்தானே. நீ மட்டும் அறிவாய். திருமணத்தில் முடிகிறது காதல் என்ற ஆன்றோர் வாக்கை நாம் பொய்யாக்கினோம். நம் காதல் அப்போதுதான் இன்னும் தன்னை வீரியமாக்கி வளர்த்துக்கொண்டது. இப்போது இவ்வுலகம் அழியும்வரை நம் காதல் வாழும்படி ஆகிவிட்டது. உன்னை ஒரு சதைப்பிண்டமாக ஒருபோதும் நான் எண்ணியதில்லை. இந்த உலகின் நாக்கு நாகரீகம் பார்க்காது. நீ என் வாழ்வின் மொத்த பிரமாண்டம். நீ இருக்கும்போது உணர்ந்த என்னால் இல்லாதபோதும் உணரவே நாம் வாழ்ந்த காலத்தைவிட அதிக நாட்கள் செலவழித்து உனக்கென ஒரு மஹாலை உருவாக்கினேன். சொர்க்கத்திலிருந்து வரவழைக்கப்பட்ட வரைபடத்தில் உன்னை விட மேலான எதுவொன்று இருந்துவிடப் போகிறது. ஆனாலும் தாஜ்மஹால் என்ற இந்த பளிங்கு ஞாபகம் உன்னால் மட்டும்தான் உயிர் கொண்டிருக்கிறது மும்தாஜ். உனக்கோ எனக்கோ நிகழும் இறுதி என்பது ஒருபோதும் நம் காதலுக்கில்லை.
உலகம் நிமிர்ந்து பார்க்க இருபது வருடங்கள் உழைத்துக் கட்டிய நம் காதல் ஞாபகத்தை சிறு ஜன்னல் திறப்பின் வழியேதான் இத்தனை ஆண்டுகளாகக் கண்டு வருகிறேன். சிறு துளையின் வழி கண்டாலும் வானம் வானம்தானே. அதன் பிரமாண்டத்தையும் நிஜத்தையும் ஜன்னல் கம்பிகளா மறைக்க முடியும். உனக்கு முன்பும் உனக்குப் பின்புமான சில பெண்கள் என் வாழ்வில் உரிமையுடன் வந்திருந்தனர். அதை மறுக்கவில்லை. ஆனால் எவரிடத்தும் தோன்றாத அன்பும் காதலும் ஏக்கமும் பிரிவும் பரிவும் உன்னிடம் மட்டும் உருவானது எப்படி? சொற்ப காலங்களே வாழ்ந்திருந்தாலும் நம் வாழ்வு நிறை வாழ்வு இல்லையா மும்தாஜ். நீ இல்லாமல் நான் வாழும் இத்தனை நீண்ட காலங்கள் எனக்கான காதல் தண்டனைதானே பேகம். என் ஆடைகள் தளர்ந்துவிட்டன. அலங்கரிக்கப்படாத என் தலைச் சிகையில் சவச்சாயல் படிந்து ஆண்டுகளாகிவிட்டன. உன் வாசனையைச் சுமந்து அலைந்த என் உடம்பெங்கும் பிணந்தின்னிக் கழகின் லேசான வியர்வை வாடை. அருந்த நீரும் உணர குர் ஆன் சுவாசமும் மட்டும் கூடவே இருக்கின்றன. பார்வைக்கெட்டிய தொலைவில் நிரந்தரமாய் நீ உறங்கும் காதல் மஹால். பெருமழைக் காலங்களில் உன்மீது வீசிப் பெய்யும் மழையைத் தடுக்க முடியாத கையறு நிலையில் கதறுகிறேன். சமீபகாலமாக பார்வை மங்கி வருகிறது. ஆனால் நீ உறங்கும் இடத்திலிருந்து தினமும் இரவில் உன் வாசனை எழுந்து வந்து என்னைத் தழுவி உறங்கச் செய்கிறது மும்தாஜ்.
முன்னோர் செய்த பாவம் அல்லது முன்னோருக்குச் செய்த பாவம் இப்படி தள்ளாத நாட்களில் உன் ஞாபகம் பார்த்தபடி என்னை வீழ்த்தியிருக்கிறது. காதல் ஒருபோதும் என் கண்ணை மறைத்ததில்லை. ஆனால் பாசம் என் கண் முன் கண்ணாமூச்சி காட்டிற்று. ஒரு சிறந்த கணவனாக உனக்கு நான் இருந்தது மட்டுமே என் முழு வாழ்வாகிப் போனது மும்தாஜ். நம் மகனால் கைதியாக்கப்பட்டாலும் நம் மகளால் ஜீவித்துக்கொண்டிருக்கிறேன். கண்ணுக்கு எட்டிய தொலைவில் நம் காதல் சாட்சி மெளனமாய் வீற்றிருக்கிறது. எப்போதாவது உன் பெயர் சொல்லித் தன் சிறகை விசிறிப்போகும் பறவையின் நிழல் என் கனவில் படிந்து விலகுவதுண்டு. நிழலின் நிழலெல்லாம் பளிங்கின் ஈரம். இருப்பினும் எல்லாமே இருள்தானே என் பேகம்... எல்லா உரிமையும் மறுக்கப்பட்ட நிலையில் மகளின் கருணையில் இம்மடல் உனக்கு எழுதி வைக்கிறேன். இந்தத் தனிமைச் சிறைக்கு என்னை நான் ஒப்புக்கொடுத்து ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. நாம் வாழ்ந்த இந்த பூமியில் இப்போது நானும் என் காதலும் மட்டுமே. இமைக்க மறுக்கும் என் கண்கள் நிரந்தரமாக மூடும் வரை உன் இருப்பிடம் நோக்கிக்கொண்டுதான் இருக்கும். உள்ளே ஓர் உறுத்தல் ஊவாமுள்ளாய் நகர்ந்துகொண்டிருந்தது. அதை இம்மடல் மூலம் நீக்கியிருக்கிறேன் அன்பே.
நீ அடிக்கடி சொல்வதுதான்... நம் காதலை யார் முன்பும் நிரூபிக்கத் தேவையில்லையென்று. ஆனால் காலத்தின் முன் நம் காதலை இந்த உலகம் கடைசிவரை நிரூபித்துக்கொண்டே இருக்கும். நாம் காதலித்து திருமணம் செய்து மறுபடியும் மறுபடியும் காதலித்து குழந்தைகள் பெற்று வாழ்ந்த நாட்கள் சொற்பமாகத்தான் தெரியவரும். ஆனால் நம் காதல் இவ்வுலகம் அழியும்வரை வாழத்தான் போகிறது. அனைத்து மானிடர்களின் நாவிலும் நம் பெயர் உச்சரித்து ஒலிக்கத்தான் போகிறது. அதற்கு சாட்சிதான் உனக்கென நான் எழுப்பிய என் ஞாபகம். எத்தனையோ மன்னர்களை மண்டியிட வைத்திருக்கிறேன். எத்தனையோ கோட்டை கொத்தளங்களைக் கைப்பற்றி வெற்றிக்கொடி பறக்க விட்டிருக்கிறேன். எவ்வளவு கிரீடங்கள் என் சிரசை அலங்கரித்திருந்தாலும் என் மனம் உன்னிடம்தானே மண்டியிட்டது மும்தாஜ். அத்தனை வெற்றிகளும் இந்த ஒற்றைப் பளிங்கு மஹாலின் முன் எம்மாத்திரம் மும்தாஜ். இப்பூமியில் அற்ப மானிடராய் பிறந்து அற்ப மானிடராய் மரணிக்கவா நாம் பிறப்பு கொண்டோம். இந்தப் பிரபஞ்சத்தைக் காதலால் அலங்கரிக்க இறை அனுப்பிய தூதுவர்கள் நாம். வாழ்தலிலும் மரணித்திலும் தொடரும் நம் பெயர் கொண்ட காதல். லேசாய் மூச்சுத் திணறுகிறது என் காதலே... இரவும் அணைக்க வந்துவிட்டது. கனவில் உனைச் சந்திக்கத் தயாராகிறேன். இதோ இதோ இன்னும் சில நாட்களில் உன் அருகிலேயே வந்து சேர்ந்துவிடும் உன்
ஷாஜி.
.
ஊமைச்சாமி - சிறுகதை
ஊமைச்சாமி
திடீரென்று கோவில் மூடப்படுவதை வாசலில் அமர்ந்தபடி உயர்த்திய புருவங்களுடன் பார்த்துக்கொண்டிருந்தான் செல்வம். உச்சி வெயில் அவன் முகத்தில் மெளனமாய் தன்னை வரைந்து கொண்டிருந்தது. கதவை மூடிவிட்டு வெளிவந்து கொஞ்சம் தள்ளி நின்று தன் இரு கைகளையும் உயர்த்தி கோபுரம் பார்த்துக் கும்பிட்டுத் திரும்பிய வரதனிடம், ‘‘என்னாச்சு சாமி திடீர்னு கோயிலை மூடிட்டீங்க?'' என்றான். பழக்க தோஷத்தில் இரு கைகளும் குவிந்து வரதனை நோக்கி ஏந்தியபடி இருந்தன. பதில் சொல்லவேண்டுமென்று அவசியமில்லைதான். ஆனால் வரதனின் மனம் செல்வத்தின் வயிற்றைக் குறித்து யோசித்தது. ‘‘ஒரு துஷ்டி நடந்துடுத்து... ரெண்டு நாள் நடை திறக்கப்படாது.'' செல்வத்துக்குப் புரியவில்லை. மேற்கொண்டு என்ன கேட்பதென்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே சட்டென்று விலகி நகர்ந்தார் பதில் சொல்லி முடித்த பெருமூச்சுடன்.
செல்வத்தின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த பூபதியிடம்... ‘‘என்னமோ நடந்துருக்கு. என்னன்னு தெரில...ரெண்டு நாளைக்கி பெருமாள பாக்கப் போக வேண்டிதான்.'' பூபதியின் கைகள் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தன. பூபதிக்கு தினம் இரவு ஒரு குவாட்டர் தேவைப்படும். யாசகமாய் விழுந்த காசுகளைக் கொண்டுபோய் கொடுத்து குவாட்டர் வாங்கிவந்து தேரடி இருளில் நின்றவாறே குடித்து பாட்டிலை சாக்கடையில் வீசிவிட்டு வருவான். டாஸ்மாக்கிலும் அவன் தரும் சில்லறைகளை எண்ணிப் பார்க்காமலே பாட்டிலை எடுத்து நீட்டிவிடுவார்கள். இன்றைய இரவுக்கான மதுவுக்குப் போதிய காசு இன்னும் சேர்ந்தபாடில்லை. அதற்குள் கோவிலை மூடிவிட்டார்கள். தன் எதிரில் அமர்ந்திருந்தவனிடம் சத்தமாகச் சொன்னான் செல்வம். ‘‘என்னா ஊமச்சாமி... ரெண்டு நாளைக்கி தொறக்க மாட்டாங்க... வர்றீங்களா பக்கத்துல பெருமா கோயிலுக்கு... அங்க உள்ளவங்ககிட்ட சொல்லிக்கலாம் ரெண்டு நாளைக்கிதான்னு...'' செல்வத்தால் ஊமைச்சாமி என்று அழைக்கப்பட்டவன், தான் வரவில்லை என்பதுபோல் தலையை இடதும் வலதுமாய் ஆட்டினான். கண்களில் தெரிந்த இறுக்கமான அமைதியில் லேசாக ஈரம் படர்ந்திருந்ததை செல்வம் கவனிக்கவில்லை.
எழுந்த ஊமைச்சாமி தனது அலுமினியக் குவளையிலிருந்த அன்றைய வசூலை அப்படியே எடுத்துவந்து பூபதியிடம் தந்தான். அலுமினியத் தட்டில் அதை வாங்கிக்கொண்ட பூபதி, ‘‘நீங்க வேணாம்னு சொன்னாலும் கேக்க மாட்டீங்க... ரொம்ப சந்தோசம் சாமி. நீங்களும் வந்துருங்களேன் எங்க கூட'' என்றான். சந்தோசத்தில் கை விரல்கள் வேகமாய் நடுங்கின. தட்டில் இருந்த காசுகளும் சலசலத்தன. தன் பழைய இடத்தில் வந்து அமராமல் கப்பல் பிள்ளையார் என்று எழுதப்பட்டு இரும்புக் கம்பிகள் கொண்டு அடைத்து அதன் மீது சில்வர் முலாம் பூசி உள்ளே பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு இருந்த சிறு கோவிலின் படிக்கட்டில் அமர்ந்தவன் பெரிய கோவிலின் பக்கச் சுவரை ஒட்டியபடி திண்ணை வைத்து மரச்சட்டங்கள் கொண்டு அடைத்திருந்த அந்த வீட்டையே பார்த்தபடி இருந்தான்.
()
முரளிதரனுக்குத் தன் அம்மா என்றால் அவ்வளவு பிரியம். வீட்டில் எப்போதும் அமைதியாய்த்தான் இருப்பாள் அம்மா. அப்பாவின் ஆக்கிரமிப்பு அந்த வீட்டின் ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவியிருந்ததைப் போலவே அம்மாவின் மெளனமும் வீடு முழுவதும் நிரம்பியிருக்கும். அம்மா எப்போது பேசியிருப்பாள்? மற்றவர்களிடம் மனம் திறந்து பேசக் கூடிய அளவுக்கு அவளுக்கு சந்தோசப் பகிர்தலோ துயர நினைவுகளோ இருந்ததே இல்லையா என்றொரு கேள்வி முரளியின் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது. அம்மா பிரமாதமான அழகி. அழகில்லாமல் ஒரு நொடிப்பொழுதும் தன் அம்மாவைக் கண்டதில்லை முரளி. ஆனால் முகத்தில் தேவையற்ற பவுடர் பூச்சோ கண்மை தீற்றலோ இருக்காது. அவ்வளவு ஏன்... பீரோ லாக்கரில் அவ்வளவு தங்க நகைகள் இருந்தும் ஒரு குண்டுமணி தங்கம் அவளின் உடம்பை அலங்கரித்திருக்காது. வாசல் நிறைக்க பெரிதாய் கோலமிடுவாள். சிக்குக் கோலம் போடும்போதெல்லாம் புள்ளிகளுக்கிடையில் வளைந்து நெளிந்து விரையும் அம்மாவின் கோடுகளில் எந்தப் பதற்றமும் சிக்கலும் இருக்காது. மதுசூதனனுக்கும் தெரியும் தன் மனைவி எத்தனை பெரிய அழகியென்று; ஒருபோதும் ஒத்துக்கொள்ள முடியாத ஆண் மன அகங்காரம்தான் அவனுக்குள் நிறைந்திருந்தது. அப்பாவின் திமிரான ஆதிக்கத்துக்கு முன்னால் அம்மாவின் ஒடுங்கிய அமைதி முரளிக்குக் கொஞ்சம் புதிராயிருந்தது.
அம்மாவுடன் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் கோவில் நிர்வாகத்தில் ஒருவரும் கணக்குப் பிள்ளையுமான மதுசூதனனின் மனைவி என்ற வகையில் தன் அம்மாவுக்குக் கிடைக்கும் சிறப்பு தரிசனமும் அபிஷேக ஆராதனையும் அம்மா விரும்பி ஏற்றுக்கொண்ட மாதிரி முரளிக்குத் தோன்றாது. கை கூப்பி அம்மனைத் தரிசிக்கும் அம்மாவின் முகத்தில் ஒளிரும் வெளிச்சத்தையே பார்த்துக்கொண்டிருப்பான் முரளி. கூட்டம் இல்லாத வெகு அரிதான சமயங்களில் முரளியைத் தன் அருகில் அமரவைத்துக்கொண்டு மெலிதான குரலில் ‘யாது மாகி நின்றாய்; காளி எங்கும் நீ நிறைந்தாய்...' பாடுவது போலவே குரல் முணுமுணுத்து ஒலிக்கும். கோவில் கருவறை பூசாரிகளும் கூட கனிவுடன் தன் அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை முரளி கவனிப்பான். மூடிய கண்களைத் திறவாமலே முழுவதும் பாடி முடிப்பாள். ஒரு கை முரளியின் உள்ளங்கையைப் பொத்தியபடி இருக்கும். அம்மா ஏதோ அவஸ்தையில் இருக்கிறாள் என்பது மட்டும் வளர்ந்துவந்த முரளிக்குத் தெரிந்திருந்தது.
தாலி கட்டிய கணவன்தான் கடைசிவரை கூட வரப்போகிறவன் என்று சொல்லித்தான் மாலதியை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். இருபது வயது மாலதிக்குத் தாலி கட்டிய மதுசூதனன் நல்லவன்; அழகானவன், மாலதிக்கும் அவனுக்கும் ஐந்து வயதுதான் வித்தியாசம். ஆனால் சட்டெனப் பார்க்க மாலதிக்கு சித்தப்பா என்று சொல்லிவிடலாம் போல் ஒரு முதிர்ச்சி இருக்கும். அதுதான் அவனுக்கான பிரச்சனை என்பதை வந்த சில நாட்களிலேயே புரிந்துகொண்டாள் மாலதி. கணவனும் மனைவியுமாய் வெளியே செல்வதை முழுக்கவே தவிர்த்தான் மதுசூதனன். தன்னை அழகாகவும் பலமானவனாகவும் வெளிக்காட்டிக்கொள்ள முனைப்பாகத் திரிந்த மதுசூதனனுக்குத் தன் மனைவி மாலதியின் அழகும் திறமையும் கண்ணுக்குத் தெரியாமலே போயிற்று. திண்ணையில் நடக்கும் பேச்சு அரட்டைகளில் கூட தன்னைச் சார்ந்துதான் தன் குடும்பம் என்ற ஆண் ஆதிக்கமே மதுசூதனனின் குரலில் ஒலிக்கும். எவருடனும் பேசாமல் தன்னையே வீட்டுக்குள் சுருக்கிக்கொண்டு வாழ்ந்த மாலதிக்கு ஒரே ஆறுதல் முரளிதரனும் அந்தப் பெரிய அம்மன் கோவிலும்தான்.
‘‘ஏம் மதுசூதனா... அம்மா எவ்ளோ அருமையா பாடுறாங்க தெரியுமா... நம்ம சீனுவும் வைத்தியும் சிலாகிச்சு சொன்னதாலதான் அன்னிக்கி நானும் போய் நின்னு கேட்டேன். கண்ண மூடி ஒக்காந்து அவங்க தனி உலகத்துல இருந்தபடி ரொம்பச் சின்னக் குரல்ல பாடுறாங்க. காதுக்குள்ள அம்பாள் குரல் கேட்கிற மாதிரி இருந்தது தெரியுமா...'' திண்ணைக் கச்சேரியில் ஒருநாள் கோவிலில் வேலை பார்க்கும் கிருஷ்ணன், மதுசூதனனிடம் சொன்னதும் திரும்பி வீட்டின் உள்ளே பார்த்த மதுசூதனன், ‘‘இந்த ஒலகத்துல பொம்மனாட்டிக்குன்னே தனியா ஒரு இடமிருக்கு; வேலையிருக்கு. அத தாண்டி அவங்கள்லாம் எங்கையும் போகக்கூடாது...அவங்க போனாங்கன்னா பின்ன நாம எதுக்கு ஆம்பளையா மீசைய முறுக்கிட்டுத் திரியணும்...''
‘‘அதுக்கில்லப்பா... அவங்க திறமையெல்லாம் வீணாப்போகுதேன்னு ஒரு ஆதங்கத்துல சொன்னேன்...'' இவனிடம் பேசிப் புண்ணியமில்லை என்பதுபோல் கிருஷ்ணனின் குரல் இழுத்து தனக்குள் முடிச்சிட்டுக் கொண்டது.
‘‘அவங்க திறமைய சமையல் கட்டுலையும் படுக்கை அறையிலையும் காட்டுனா போதாதா என்ன?'' மதுசூதனனின் குரலில் உலகளவு கேலியும் அலட்சியமும் ஒலித்தது.
கிருஷ்ணன் சற்றே திடுக்கிட்டு நிலைப்படியைப் பார்த்தார். முரளி நின்றுகொண்டிருந்தான்.
‘‘தம்பி நிக்கிறாரு.'' என்றார் தயங்கியபடி.
‘‘நிக்கட்டுமே... அவனும் வளர்ற புள்ளதானே...நல்லது கெட்டது தெரிஞ்சிக்கட்டும்... அப்பதான் பொம்பள முந்தானைய புடிச்சிகிட்டு பின்னால ஓடமாட்டான் நாளைக்கி... கிச்சா ஒனக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ... ஒடம்பு சொகத்தையும் பொம்மனாட்டிக்கி அளவா குடுத்தாதான் குடும்பத்துல ஆம்படையான சார்ந்து நிப்பா...அள்ளி குடுத்தோம்னு வச்சிக்க ருசி கண்ட பூனையாயிடும்... சுகம் குடுக்குறதுல தான் பெரிய இவனு தலைகனம் ஏறிடும்... தெரிஞ்சிக்க...''
‘‘ஊருக்கு ஒரு நாக்குன்னா மதுசூதனா ஒனக்கு தனி நாக்குப்பா...புதுசா பேசுவ எதையும்...''
‘‘நான் புதுசா சொல்லல... நம்ம பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த வாழ்க்கைய சொல்றேன்...'' கொஞ்சம் குரல் உயர்த்திதான் பேசினான் மதுசூதனன். வீட்டுக்குள்ளிருந்த மாலதி காதிலும் விழுந்தது. முகம் முழுவதும் பூசிக்கொண்ட மெளனத்துடன் சலனமற்று அமர்ந்திருந்தாள். பீரோவுக்குள்ளிருந்த தங்க நகைகளின் நிச்சலனம் அவளுக்குள் உறைந்திருந்தது.
மாலதிக்கென்று மொத்தமே நான்கைந்து புடைவைகள்தான். அவையும் கொடிகளில் காய்ந்துகொண்டிருக்குமே தவிர பீரோவில் அடுக்கிவைக்கப்படும் அளவுக்குக் கிடையாது. அதற்கு நேர்மாறாக பீரோ முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதம்விதமான மதுசூதனனின் உடைகள். முரளியை ஈன்ற பிரசவம் மிகச் சிக்கலானது. மாலதி உடல் ரீதியாய் உருக்குலைந்து போனாள். ஆனால் பிரசவம் முடிந்த மறுநாள் மாலதியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்த மதுசூதனன் இரண்டு விதமான வாசனையில் மிதந்தான். வெளிநாட்டு பாடி ஸ்ப்ரேக்களும் சென்ட் பாட்டில்களும் அந்த இரும்பு பீரோவின் ஒரு தட்டில் நிறைந்திருக்கும். அதுபோலவே மதுசூதனின் இளமையைத் தக்கவைக்கும் பாதாம் பிஸ்தா அக்ரூட்கள் பீரோவின் ஒரு பகுதியில் தங்கள் இடத்தை அடைத்துக்கொண்டு பவுசைக் காட்டிக் கொண்டிருக்கும். பிரசவம் முடிந்து வீட்டுக்கு வந்த மாலதி ரத்த சோகையில் வெளுத்திருந்தாள். அவளைப் பற்றிய துளி அக்கறையின்றி மதுசூதனன் தன் வழக்கமான ஒப்பனைகளில் மிளிர்ந்தான். தான் நன்றாக இருந்தால் தன் குடும்பம் நன்றாக இருக்குமென்று யாரோ அவனுக்குத் தப்பாகச் சொல்லியிருந்தார்கள்.
முரளியின் பதினைந்தாவது வயதில் மாலதி வீட்டைவிட்டு ஓடிப்போனாள். பாலுவுக்கும் மாலதிக்கும் ஒரே வயதுதான். ஒருநாள் கோவிலில் கண்மூடி பாடிக்கொண்டிருந்த மாலதி தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதுபோல் உணர்ந்து பாடுவதை நிறுத்தாமலே கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் கரம் பற்றியிருந்த முரளியின் கண்களும் பூசாரியின் கண்களும் மூடியபடி இருக்க தன் எதிரில் நின்றபடி தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பாலுவைக் கண்டாள். பாலுவின் இரு கைகளும் அம்மனைக் கும்பிடுவதுபோல் மாலதியைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தன. மாலதி பாடுவதை நிறுத்தவில்லை. அடிக்கடி மாலதி பாடினாள். தினமும் பாலு கோவிலுக்கு வந்தான்.
கோவில் கணக்கை முடித்துவிட்டு மதுசூதனன் வீட்டுக்கு வந்தபோது மாலதி இல்லை. வெறுமை பளிச்சென்று தெரிந்தது. உள்ளுக்குள் ஏதோ நெருடலாய் உணர்ந்து பீரோவைப் போய் திறக்க பூட்டியிருந்தது. சாவி இல்லை. கொஞ்சம்கூட யோசிக்கவில்லை மதுசூதனன். சுத்தியலைக் கொண்டு கதவின் பிடியில் இறக்கினான். நகைகள் எதுவும் இல்லை. வீட்டுக்கு முரளி வரும்முன்பே சில கணக்குகள் போட்டான் மதுசூதனன். மாலதியின் தம்பி மாரிமுத்து இங்கிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தள்ளி பொய்யூரில் வசிக்கிறான். மாமா மேல் மரியாதையும் பிரியமும் உள்ளவன். ஃபைனான்ஸ் தொழிலில் வட்டிக்கு விட்டு சம்பாரிக்கும் மாரிமுத்துக்கு ஒருமுறை மதுசூதனனும் பண விஷயமாய் உதவி புரிந்திருக்கிறான். மாரிமுத்துக்கு போன் செய்தான் மதுசூதனன்.
அரை மணி நேரத்தில் வீட்டு வாசலில் பைக்கை ஸ்டாண்ட் போட்டான் மாரிமுத்து. வாசலில் செருப்பை விசிறிவிட்டவாறே, ‘‘என்ன மாமா என்னாச்சு... ஒடனே வரச் சொன்னீங்க...இன்னும் வசூலே முடியல... யக்கா ஒரு சொம்பு தண்ணி குடு...'' என்றான் கொஞ்சம் சத்தமாகவே. நாற்காலியில் அமரச்சொன்ன மதுசூதனன், ‘‘தண்ணி குடுக்க உன் அக்கா இங்க இல்ல... வீட்ட விட்டு ஓடிட்டா...'' என்றான் அமைதியாய். முகத்தைச் சுருக்கிய மாரிமுத்து, பேன்ட் பாக்கெட்டிலிருந்து கர்ச்சீப் எடுத்து முகத்தைத் துடைத்தவாறே தன் மாமாவை உற்றுப்பார்த்தான். இரு கண்களையும் மூடித் திறந்து தலையை அசைத்தான் மதுசூதனன். ‘‘ரொம்ப நாளாவே டவுட்டாதான் இருந்துது மாப்ள... நான்தான் அலட்சியமா இருந்துட்டேன். உன் மருமவன் டியூசன் முடிஞ்சி வர்ற நேரம்தான். நைஸா பேச்சுக்குடுத்து விசாரி. ஏதாவது தெரியும். நான்லாம் கொஞ்சம் மெரட்டிடுவேன்...''
முரளியிடம் கேட்டதில் எந்தத் தகவலும் கிடைக்காமல் போனது. முரளி தலையில் கை வைத்துக்கொண்டு வீட்டின் மூலையில் அமர்ந்தான். அடிபட்ட புலியாய் வீட்டினுள்ளே அலைந்து கொண்டிருந்த மதுசூதனனையே பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். பசித்தது. வீட்டில் எதுவுமில்லை. தண்ணீர் குடித்துவிட்டு வந்து படுத்துக்கொண்டான். அம்மா ஞாபகம் வந்தது. ‘போதும் இங்கு மாந்தர் வாழும் - பொய்ம்மை வாழ்க்கை யெல்லாம்... ஆதி சக்தி தாயே- என் மீது அருள் புரிந்து காப்பாய்'. முரளியின் காதுக்குள் புரண்டது மாலதியின் வேண்டுதல். அவனின் விரலை இறுகப் பிடித்திருந்த மாலதியின் விரல்கள் இப்போது வேறொரு விரலைப் பற்றிவிட்டதா... இனிமேல் அவ்வளவுதானா அம்மா?
போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்து சப் இன்ஸ்பெக்டரைத் தொடர்புகொண்டு பேசினான் மாரிமுத்து. வட்டிக்கு விட்டு சம்பாரிக்கும் வேலையோடு கட்டப் பஞ்சாயத்து வேலைகளும் மாரிமுத்து பார்ப்பதுண்டு. அந்த வகையில் இன்ஸ்பெக்டரும் சப் இன்ஸ்பெக்டரும் பழக்கம். மறுநாள் கோவிலிலிருந்து துப்புக் கிடைத்தது. அம்மனுக்குச் சாத்தப்படும் விசேச மாலையைக் கோவிலுக்கு வரும் மாலதியிடம் எப்போதும் கொடுத்து அனுப்புவார்கள். மாலதி வராததால் அன்று இரவு மாலையை வீட்டுக்குக் கொண்டுவந்த கோவிலில் எடுபிடி வேலைகள் பார்க்கும் சிரஞ்சீவி தானாகவே மதுசூதனனிடம் சொன்னான். ‘‘நேத்தே சொல்லணும்னு நெனச்சேன்யா... ரெண்டு நாளைக்கி முன்னாடி நம்ம பூக்கார ஏஜென்டு பன்னீரோட தம்பி பாலுகிட்ட அம்மா பேசிட்டு இருந்தத பாத்தேங்கய்யா. உங்ககிட்ட சொல்லணும்னு தோனிச்சி. அதான்...''
பாலுவைப் பற்றி விசாரித்ததில் சமீபத்தில் விவாகரத்தானவன் என்பது மட்டும் தெரியவந்தது. மற்றபடி அவன் மீது எந்தத் தவறான தகவல்களும் பதியப்படவில்லை. ட்ராவல்ஸ் வைத்து நடத்திக்கொண்டிருக்கும் பாலுவுக்கு திருச்சியில் நிறைய நண்பர்கள் இருப்பதும் தெரியவந்தது. சட்சட்டென்று சங்கிலி இணைப்புகள் விடுபட மாரிமுத்து தனக்கிருந்த செல்வாக்கில் அடுத்த நாளே மாலதியும் பாலுவும் திருச்சியில் தங்கியிருந்த ஒரு வீட்டில் வைத்து இருவரையும் பிடித்தான். புத்தம் புதிதாய் ஒரு தாலி மாலதியின் கழுத்தில் தழையத் தழைய தொங்கிக் கொண்டிருந்தது. கையில் ப்ரேஸ்லெட்டும் கழுத்தில் தங்கச் சங்கிலியுமாய் புது மாப்பிள்ளை பளபளப்பில் இருந்தான் பாலு. மாரிமுத்துவைப் பார்த்ததும் எதுவும் பேசாமல் மாரிமுத்து வந்திருந்த காரிலேயே ஏறி இருவரும் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தார்கள். ஸ்டேசனில் மதுசூதனன் காத்திருந்தான்.
இன்ஸ்பெக்டரிடம் கட் அண்ட் ரைட்டாகப் பேசியதோடு மட்டுமில்லாமல் எழுதியும் தந்தான் மதுசூதனன், தனக்கும் மாலதிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென்று. நிமிர்ந்து யாரையும் பார்க்கவில்லை. கொண்டுபோன 100 பவுன் நகைகளை மட்டும் அப்படியே திருப்பித்தர வேண்டுமென்று கறாராய் சொன்னான். கையில் வைத்திருந்த பேக்கை இன்ஸ்பெக்டரிடம் தந்தாள் மாலதி. வீட்டுக்கு வந்து பேக்கை பீரோவில் வைத்துப் பூட்டியவன் நடுக்கூடத்தில் மாட்டியிருந்த அவனும் மாலதியும் இருந்த போட்டோவைக் கழற்றி எடுத்துக் கொல்லைப்புற கிணற்றின் உள்ளே தூக்கிப்போட்டான். உபயோகமில்லாத அந்தக் கிணற்றின் ஆழத்தில் கண்ணாடி நொறுங்கும் சத்தம் கேட்டது. அண்டா அண்டாவாகத் தண்ணீரைத் தலையில் ஊற்றிக்கொண்டான். முரளி தன் அப்பாவின் வேகவேகமான மூச்சினையும் வீடெங்கும் ஆக்கிரமித்திருந்த மாலதி இல்லாத அவளின் சுதந்திர மெளனத்தையும் கவனித்தான். வேகமாய் சுற்றிய ஃபேனுக்குக் கீழே நின்றவாறு துண்டால் தலை துவட்டிக்கொண்டே முரளியிடம், ‘‘அம்மாவும் புள்ளையுமா சேர்ந்து அப்பாவுக்கு நல்ல பேர் வாங்கிக் குடுத்துட்டீங்க...'' நிமிர்ந்து பார்த்தான் முரளி.
‘‘ஒனக்குத் தெரியாம இருந்துருக்காது ஒன் அம்மா பண்ணுன காரியம். அந்த ஓடுகாலி முண்டைய தல முழுகிட்டேன்... இனிமே ஒனக்கு அம்மான்னு யாரும் இல்ல... மனசுல வச்சிக்க.'' வாசலில் பைக்கை நிறுத்திய மாரிமுத்து சைடில் மாட்டியிருந்த பையை எடுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.
பையை மதுசூதனனிடம் நீட்டியவன் லேசாகத் திரும்பியவாறு, ‘‘அப்போ நான் பொறப்படுறேன் மாமா... இன்ஸ்பெக்டருக்கும் சப் இன்ஸ்பெக்டருக்கும் செட்டில் பண்ண வேண்டியத பண்ணிட்டேன். இனிமே பிரச்சனையில்ல'' என்றான். ‘‘டேய் இரு மாப்ள. ரெண்டு பெக் சாப்புட்டுப் போ. அவசரமா போயி என்ன பண்ணப்போறே'' என்றான் மதுசூதனன். பையில் இருந்த மது பாட்டில்களைப் பார்த்தான் முரளி.
அன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியேறினான் முரளி. மதுசூதனனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக போதை ஏறிக்கொண்டிருந்தது. தன் முன் வந்து நின்ற முரளியைப் பார்த்தவன்... ‘‘ஏன்டா ஒனக்கும் தூக்கம் வரலியா... ச்சும்மா ஓடுனவளையே நெனச்சிட்ருக்காம ஒழுங்கா படிக்கிற வழிய பாரு...போ போய் தூங்கு...''
‘‘அம்மா எங்கப்பா ஓடுனாங்க... நீங்கதான தொரத்தி வுட்டீங்க...'' பித்தளை டம்ளரின் ச்சில்லிப்பு மதுசூதனனின் உதடுகளைத் தொட்டபடியிருக்க...‘‘என்னடா ஒளறுறே..?'' மதுவை விழுங்கினான். டேபிளில் ஒரு பேப்பர் மீது கொட்டி வைக்கப்பட்டிருந்த மிக்சரை ஒரு கை அள்ளி வாயில் போட்டு மென்றான்.
‘‘அம்மா ஏன் எப்பவும் யார்கிட்டவும் பேசாம அமைதியா இருந்தாங்கன்னு யோசிச்சிருக்கீங்களாப்பா... அவங்க போடுற கோலம், அம்பாள நெனச்சி பாடுற குரல்னு எதையாவது கவனிச்சிருக்கீங்களா... நீங்க நல்லாருந்தா போதும் மத்தவங்க எப்படி போனா என்னங்கிற உங்க சுயநலத்த கவனிக்கவே உங்களுக்கு நேரம் போதலியேப்பா, அப்புறம் எப்படி... நீங்களும் அம்மாவும் பேசியே நான் பாத்ததில்லப்பா... அம்மா ரொம்ப அழகுப்பா...அம்பாள் மாதிரி...இனிமே வர மாட்டாங்கள்லப்பா... நீங்க சொல்றதுதான் சரி செய்றதுதான் சரின்னு பேசிப்பேசி சரி எதுன்னே தெரியாம இருந்துட்டீங்க... உங்களுக்கு பீரோ முழுக்க இருக்குற நகைலாம் போதும் வாழ... எனக்கு என் அம்மா வேணும்ப்பா... என்னைப் பத்தி யோசிக்காம போன அம்மாவும் ஒரு சுயநலவாதிதானே... ரொம்ப கசக்குதுப்பா... என் வயசுக்கு இந்தக் கஷ்டம்லாம் அதிகம்ப்பா... நான் எப்டிப்பா வாழப்போறேன்'' கண்கள் கலங்கி கண்ணீர் நழுவியது. அரைகுறை வெளிச்சத்தில் நின்றிருந்த முரளியின் முகம் மதுசூதனனுக்கு போதையின் ஆக்ரமிப்பில் சரியாகத் தெரியவில்லை முரளியின் கண்ணீர் இருளில் தன் ஆறுதலைத் தேடி அலைந்தது.
‘‘யே...அவ ஒரு தப்பான பொம்பள... அவளப்பத்திப் பேசாத... ஒனக்கெல்லாம் தெரியாது. நான் நல்ல புருசனாவும் அப்பாவுமா இப்பவரைக்கும் நடந்துட்டுதான் வரேன். ஏன் ஒனக்கென்ன கொற வச்சேன் சொல்லு... ஒன்ன நல்ல ஸ்கூல்ல சேர்த்து நல்லாதான படிக்க வச்சேன்... அப்புறம் என்னையே எதிர்த்துப் பேசுற...அந்த ஓடுகாலியவே உரிச்சி வச்சி பொறந்துருக்கீல்ல... அப்டித்தான் பேசுவே'' நாக்கு புரள முடியாமல் போதையில் நெளிந்ததில் வார்த்தைகள் நழுவி நழுவி விழுந்தன.
‘‘உங்க கடமைய செஞ்சதுக்கு எதுக்கு பெருமைப்பட்டுக்குறீங்க... நீங்க செய்ற தப்புக்கெல்லாம் உங்க சைடுல ஒரு தப்பான நியாயத்த வச்சிகிட்டு அதுதான் சரின்னு வாழ்றீங்க... உங்கள அப்பான்னு கூப்பிட்டுகிட்டு என்னால இனிமே இங்க இருக்க முடியாது. எனக்கு எதும் வேணாம்... நான் எங்கையாவது போறேன். யாரும் இல்லாம போன வலியை இன்னிக்கி நான் உணர்ற மாதிரி என்னிக்காவது நீங்க உணர்வீங்க. அப்போ யாரும் உங்க பக்கத்துல இருக்க மாட்டாங்க... போறேன்.''
செருப்பு கூட அணியாமல் திண்ணையைக் கடந்து வாசலில் இறங்கி இருளில் கரைந்தவனைக் கையில் பிடித்திருந்த டம்ளரில் ரேகைகள் இறுகப் பார்த்துக்கொண்டிருந்தான் மதுசூதனன்.
()
ஒன்பது வருடங்கள் கழித்துத் திரும்பிவந்தான் முரளி அதே அம்மன் கோவிலுக்கு. வாசலில் இருந்த யாசகர்களோடு யாசகனாய் ஒடுங்கினான். இடுப்பில் ஒரு காவி வேட்டி; மார்பை மூடியபடி ஒரு காவி வேட்டி, அவ்வளவுதான் அவன் இருப்பு. உருண்டையான சிவந்த முகத்தில் மண்டியிருந்த அடர் கறுப்பு தாடியும் மீசையும் பால் கண்களில் ஒளிரும் வெளிச்சமும் அவனை முற்றும் துறந்த சித்தன் அளவுக்கு அடையாளம் காட்டின. முரளி அப்படித்தான் இருந்தான். இரு கைகளையும் ஏந்தி பிச்சை கேட்டவனிடம் அருகில் அமர்ந்திருந்த செல்வம்தான் ஒரு அலுமினிய குவளையைத் தந்தான். கோவிலிலே தரப்படும் ஒரு வேளை அன்னதான உணவு முரளிக்கு இரண்டு வேளைக்குப் போதுமானதாயிருந்தது. அதைச் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொண்டான். இரவு கோவில் வாசலில் படுக்கும் முன் அன்று தனக்கு யாசகமாய் வந்த காசுகளை செல்வத்திடம் தந்துவிடுவான். தொடக்கத்தில் செல்வம் கேட்ட எந்தக் கேள்விக்கும் முரளி பதில் சொல்லவில்லை. ஆனால் முரளியின் கண்களில் தெரிந்த அமைதியைக் கண்டு மேற்கொண்டு எதுவும் செல்வம் கேட்கவில்லை. செல்வம்தான் முரளியை ஊமைச்சாமி என்று கூப்பிடத் தொடங்கினான்.
சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாகத் தொடங்கியது. திருவிழாவின் ஒரு நாளான பூச்சொரிதல் அன்றுதான் மாலதியைப் பார்த்தான் முரளி. பூப் பல்லக்கில் அமரவைத்து வருடத்துக்கொருமுறை கர்ப்பக்கிரக அம்மன் வெளியில் வந்து தரிசனம் தரும் நாள் அது. கையில் வைத்திருக்கும் அலுமினிய டம்ளரை உயர்த்தி யாசகம் கேட்கும் முரளி ஒருபோதும் தர்மம் இடுபவரின் முகத்தைப் பார்க்க மாட்டான். அன்று பல்லக்கில் ஆடிக்கொண்டிருந்த அம்மனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அம்மனைப் பார்த்துவிட்டு தலை குனிந்தவனின் கண்களில் சந்தன நிறத்தில் வெள்ளிக் கொலுசுகள் அணிந்த கால்கள் கடந்தன. அவன் முகம் அவனை மீறி வான் நோக்கியது. மாலதி. அம்மா... முரளியின் கண்கள் வெறித்துச் சுழன்றன.
மாலதி கழுத்து நிறைய நகை அணிந்திருந்தாள். தலை நிறைய மல்லிகைப் பந்து அடர்ந்திருந்தது. ரோஸ் நிற உதடுகளில் நிரந்தரமான புன்னகை உறைந்திருந்தது. கன்னங்கள் சற்றே உப்பியிருந்தன. சாயங்காலத்தில் லேசாய் உறங்கியிருக்க வேண்டும். அந்த மென் சோக அலுப்பு கண்களில் படர்ந்திருந்தது. முரளியை நோக்கிக் குனிந்திருந்த முகத்தில் எந்தவிதக் கேள்வியும் இல்லை. தெள்ளத் தெளிவாக மாலதியைப் பார்த்தான். அவளின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த ஐந்து வயதுச் சிறுவனின் கையில் காசுகளைத் திணித்து எல்லா யாசகர்களுக்கும் போடச்சொல்லிக் கொண்டிருந்தாள். அவசர அவசரமாகத் தலையைக் குனிந்துகொண்டான் முரளி. பல வருடங்களுக்குப் பிறகு தன் நெஞ்சுக்கூடு நடுங்குவதை உணர்ந்தான்.
தன் மார்பினைப் போர்த்தியிருந்த காவி வேட்டியின் முனையை இரு கைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டான். அந்தச் சிறுவன் ஒவ்வொரு யாசகரிடமும் சென்று காசுகளைத் தந்து கொண்டிருந்தான். அலுமினியத் தட்டுகளிலும் டம்ளர்களிலும் அவனின் பிஞ்சு விரல்கள் தானமிட்டுக்கொண்டிருந்தன. வயதான மெலிந்த கைகள் அச்சிறுவனுக்கு ஆசி வழங்கின. முரளியிடம் சென்ற சிறுவன் எங்கு காசு வைப்பது என்று தெரியாமல் தடுமாறினான். ‘‘ஊமச்சாமி... பையன் காசு தர்றாரு பாருங்க...'' அருகிலிருந்த பூபதியின் குரலில் கலைந்த முரளி வேட்டியை விட்டுவிட்டு இரு கைகளையும் ஏந்தினான். அவனின் உள்ளங்கையில் மோதியது காசு வைத்திருந்த சிறுவனின் விரல்கள். அம்மாவின் விரல்கள். இந்த விரல்கள்தானே இந்த ஆலயம் முழுவதும் தன்னை இழுத்துக்கொண்டு அலைந்தது. இந்த விரல்கள்தானே தன் தலைமுடியைக் கோதி தன்னை உறங்க வைத்தது. ஒவ்வொரு முறையும் தன்னை மறந்து பாடல் பாடும்போது இந்த விரல்கள்தானே தன் உள்ளங்கைக்குள் குவிந்திருக்கும். ‘யாது மாகி நின்றாய்...காளி எங்கும் நீ நிறைந்தாய்...' அய்யோ... அம்மா... தன் இதயத்தை வருடிக்கொண்டிருந்த அந்தப் பிஞ்சுவிரல்களை அப்படியே பற்றி தன் உதடுகளில் பொருத்திக்கொள்ளத் துடித்தான் முரளி. ‘‘சஞ்சய் வா... காசு போட்டுட்டு வா...'' முரளியின் காதுகளில் விழுந்தது எத்தனையோ ஜென்மங்களுக்குப் பிறகு அவனை வந்தடைந்த உயிரின் குரல். அவனின் உள்ளங்கையிலிருந்து விலகி விரைந்தது கரம். உலகம் உடைந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அன்றிரவு அழுதபடி விழித்துக்கொண்டிருந்தது நடை சாத்தப்பட்ட கோவிலினுள்ளே தெய்வம்.
கடல் சார்ந்த ஊர் என்பதால் சர்ப்பபுரியில் ஆடி மாதம் வந்தாலே காற்று பிய்த்துக்கொண்டு போகும். ஓர் இரவு காற்றும் மழையும் இடியும் சேர்ந்து ஊரை மிரட்டியதில் கோவில் வாசலில் இருந்த யாசகர்கள் தற்காலிக அடைக்கலமாக மதுசூதனன் வீட்டுத் திண்ணைக்கு வெளியே ஒடுங்கினர். முன்பு திறந்த வெளியாயிருந்த சிமென்ட் திண்ணை இப்போது மரச் சட்டங்கள் கொண்டு மூடப்பட்டிருந்தன. வாசலை ஒட்டியிருந்த சிறு மறைப்பில் அனைவரும் ஒதுங்கியிருந்தனர். கோவிலுக்கும் வீட்டுக்குமான கொஞ்சம் இடைவெளியில் முரளி கால் முட்டிகளைச் சேர்த்து அணைத்தபடி அமர்ந்துகொண்டான்.
அன்று இரவு மதுசூதனன் வீட்டிலிருந்து தயாரான உணவு தஞ்சம் புகுந்தவர்களுக்கு வீட்டு வாசலில் வைத்து வழங்கப்பட்டது. சிறு வாழை இலையில் சூடாய் சக்கரைப் பொங்கலும் புளி சாதமும் வைத்து வரதன் தான் அனைவருக்கும் வழங்கினார். முரளியை அழைத்து இலையைத் தந்தபோது திண்ணையில் அமர்ந்துகொண்டு எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மதுசூதனனை நிமிர்ந்து பார்த்தான் முரளி. அவனுக்குத் தெரியும்... இலையைப் பெற்றுக்கொண்டு சீக்கிரமே அங்கிருந்து நகர்ந்து வந்துவிடவேண்டும் என்று நினைத்துப் போனவன்தான் திண்ணையில் அமர்ந்திருந்த மதுசூதனன் அருகில் ஒரு பெண்ணுருவம் அசைவதுபோல் உணர்ந்து நிமிர்ந்து பார்த்துவிட்டான். அந்த அவசர அன்னதானம் மதுசூதனனின் இரண்டாம் மனைவியின் ஏற்பாடு.
முரளியின் முகத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டான் மதுசூதனன். அந்தக் கண்கள்... தாடி அடர்ந்திருந்தாலும் செழுமையான சிவந்த கன்னங்கள்... யாசகனாக ஆனபின்னும் முரளிக்கு முகப்பொலிவு குறையவில்லை. மனதை இறுக்கி நிசப்தத்துக்குள் தொலைந்ததில் இன்னும் தெய்வீக ஒளி கூடத்தான் செய்திருந்தது. அந்த முகம் மாலதியின் முகம். அதைத்தான் எதிர்கொண்டான் மதுசூதனன். இதயத்தில் சுருக்கென்றது ஒரு பயம். முரளி என்று அழைக்கப்போனவன் சூழல் உணர்ந்து தன்னை இறுக்கிக்கொண்டான். அவசர அவசரமாய் அங்கிருந்து விலகினான் முரளி.
மழை ஓய்ந்த மறுநாள் சாயங்காலம் கோவில் வாசலில் அமர்ந்திருந்தபோது மதுசூதனன் வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்று செல்வதைப் பார்த்தான் முரளி. அன்றிரவு பூபதியிடம் செல்வம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.
‘‘கோவில் கணக்குப் புள்ளைக்கி நேத்து வாதம் அடிச்சிடுச்சாம்யா... ஒரு கையும் காலும் இழுத்து வாய் பேச முடியலியாம். அன்சாரி ஆஸ்பத்திரில சேத்துருக்காங்களாம். ப்ச் பாவம் நல்ல மனுசன். நேத்து அவர் வீட்டுல வச்சி சோறு போட்டாரு. மொத சம்சாரம் ஓடிப்போயிடுச்சாம். ரெண்டாவதா கட்டினவங்களுக்கு புள்ள இல்லைனு பேசிக்கிட்டாங்க. பாவம் போ நல்ல மனுசங்களுக்குத்தான் சோதனையே வருது...'' முரளிக்குத் தான் வந்த நோக்கம் புரிபடத் தொடங்கியது.
ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது இரவு மணி 7. உள்ளே நுழைந்ததும் இடது புறமாய் தெரிந்த அறை ஒன்றின் வாசலில் அன்று பார்த்த அந்த அம்மாளின் முகம் தெரிந்து மறைந்தது. அறை நோக்கிச் சென்றான். முரளியின் சுத்தமான முகமும் கருணை வழிந்த கண்களும் அறை உள்ளே அனுமதிக்கச் செய்தன. ‘‘அவரால பேச முடியாது. நீங்க அவருக்காகப் பிரார்த்தனை பண்ணுங்க சாமி...'' முரளி தலையாட்டினான். மதுசூதனன் உடல் ஒரு பக்கமாய் திரும்பியிருந்தது. சலைன் பாட்டில் ஏறிக்கொண்டிருந்த கை சாதாரணமாக நீண்டிருக்க வலதுகை மணிக்கட்டு வளைந்து ஐந்து விரல்களும் உள்ளங்கையை நோக்கி குவிந்திருந்தன. வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருந்தது. வலது கால் துணி போட்டு மூடியிருந்தாலும் அதன் இயல்பற்ற தோற்றம் வெளித்தெரிந்தது. முரளியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த கண்களில் மட்டும் அந்தத் தன்னகங்காரம் குறையவில்லை. வாசல் கதவருகில் அந்தப் பெண்மணி நின்று கொண்டிருக்க மதுசூதனன் காதோரமாய் முரளி குனிந்து உதடுகள் அசைத்தான். ‘‘மன்னிச்சிடுங்க.'' நிமிர்ந்தான். விலகினான். மதுசூதனன் கண்களிலிருந்து நீர் வழியத் தொடங்கியது.
()
அன்றிலிருந்து நான்கு மாதங்கள் உயிரோடு இருந்தான் மதுசூதனன். எப்போதும் போல கோவில் வாசலிலே யாசகம் பெற்று வாழ்ந்துகொண்டிருந்தான் முரளி. மாலதியை அதற்குப் பிறகு அவன் பார்க்கவில்லை. மதுசூதனனின் இரண்டாவது மனைவி கோவிலுக்கு வரும்போதெல்லாம் முரளிக்கும் தர்மமிடுவார். தலை நிமிராமல் பெற்றுக்கொள்வான். முரளியின் மனதில் பழைய ஞாபகங்கள் எதுவுமில்லை. சுயநலமும் தான் என்ற தலைகனமும் நிரம்பிய ஒருவனின் வித்து இவ்வுலகையே உதறி வாழ்ந்துகொண்டிருப்பது குறித்து எவ்விதப் பிரக்ஞையுமில்லை. இவ்வுலகில் அவனுக்கென்று யாருமில்லை; அவனுக்கென்று எதுவுமில்லை, அப்படி கிடைக்கும் எதுவும் நிரந்தரமில்லை என்பதைத் தன் இருபத்து நான்காவது வயதில் உணர்ந்த முரளிதரன் என்கிற ஊமைச்சாமி சாகும்வரை அந்தக் கோவில் வாசலிலேயே ஒரு யாசகனாய் இருந்தான், உள்ளே வீற்றிருக்கும் அம்மனுக்குத் தினந்தோறும் குற்ற உணர்வினை அள்ளி வழங்கியபடி.
*
Subscribe to:
Posts (Atom)