Monday, 16 July 2012

சலூனில் காத்திருக்கிறான் சிந்துபாத்



லைலாவைத் தூக்கிக் கொண்டு பறந்த
மூசாவைத் துரத்திக் களைத்துப் போன சிந்துபாத்
பாலன் சலூனில் அடைக்கலமானான்

சிதறிக்கிடந்த புத்தகங்கள் எல்லாம் காதல்தான்


வலது மூலையின் உயரத்தில் இருந்த
அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சியின்
செய்திகளிலும் சினிமாக்களிலும் 

காதல்தான்  ஓடிக்கொண்டிருந்தது

பளபளவென்று ஷேவ் செய்து கொண்டு
காதலியின் திருமணத்துக்குப் போன பாலனோ
திரும்பி வரவேயில்லை

சலூன் எங்கும் திரிந்த
மழிக்கப்பட்ட தாடி மயிர்களில் தடவப்பட்டிருந்த
காதலின் கைவருடல்களைக்கண்ட
சிந்துபாத்தும் கலங்கித்  தொலைந்து போனான்
பத்தாயிரத்து முன்னூத்தி பத்தாம் நாளில் 

கன்னித்தீவின்   ரகசியம் இந்த ஜென்மத்தில்
முடியாதெனத் தெரிந்த அவன் 
லைலாவைக்கொன்றுவிடமுடிவெடுத்துக் காத்திருக்கிறான்
வளர்ந்துவிட்ட தாடியுடன் 
இனி எப்போதும் திறக்காத சலூனில்.


No comments:

Post a Comment