கொம்பன்
குருதி சிதறும் களத்தில் அலறும் களிறுகள்
யானையின் கண் அசைந்தது.இரு கைகளாலும் இறுகப் பிடித்திருந்த வாள் உயர்ந்து
காற்றினை வெட்டியவாறு சரேலென கீழிறங்கியது. விழி மூடவந்த யானைச்
செவிமடல்கள் ஒரு நொடி நின்று பின் விசிறின. யானையின் தந்தத்தின் மீதான
சதைமீது இரத்தக் கவிச்சி உறைந்த வாள் பதிய பீறிட்ட இரத்தம் எதிரே குதிரை
மீது அமர்ந்திருந்தவன் முகத்தில் பட்டுத் தறித்து குதிரையின் நெற்றியில்
சிதறி இமைமயிர் நனைந்து வழிந்து கண்கள் மூடிய குதிரை முன் நகர்ந்தது.
யானைச்சதையில் பதிந்திருந்த வாள் உருவமுடியாமல் பொதிந்து இருக்க,
குதிரைவீரன் முழு பலமும் உபயோகித்து வாளினை உருவும் சமயம் நகர்ந்த குதிரை
மீதிருந்து விழுந்தான். உடம்பெங்கும் வலி ஊடுருவியிருந்த யானை துதிக்கை
உயர்த்தி நிலத்தில் வீழ்ந்துகிடந்த குதிரைவீரன் முகத்தில் அழுந்தியது.
சதைமீது செருகிய வாளுடன் யானை நகர்ந்தது. பறந்து வந்த அம்பொன்று வயிற்றில்
பதிய யானை ஓடத் துவங்கியது.
நிலம்
தன் நிறத்தினை மாற்றியிருந்தது. போர்க்கள பூமியின் வாசனையறிந்த
பிணந்தின்னிக் கழுகுகளின் நிழல்கள் நிலத்தினில் புதிதாய் உருவாகியிருந்த
சிறு சிறு பள்ளங்களில் உறைந்து தேங்கிக் கிடந்த கருஞ்சிவப்புக் குருதியின்
மீது படியாமல் விலகின. சிறிது தூரம் தள்ளி வெண்மலையாய் குவிந்திருந்தன
யானைத் தந்தங்கள். யானையின் பிளிறல் அலறல்களாக மாறி போர்க்களத்தை நடுங்கச்
செய்திருந்தன. உடம்பெங்கும் செருகியிருந்த அம்புகளுடன் நகர்ந்த யானைகளின்
பாதத்தில் நசுங்கிக் கூழாயின களமெங்கும் சிதறியிருந்த உடல்கள். இறந்து
வீழ்ந்திருந்த யானைகளின் தந்தங்களை யானையாட்கள் வாள் கொண்டு அறுத்து
எடுத்தவண்ண்மிருந்தனர். தடாரியும் முழவும் உச்சமாய் ஒலித்துக் கொண்டிருக்க
வாளினால் அறுபட்ட வீரனின் தலை மட்டும் தனியே உருண்டுவர, அதை தன்
துதிக்கையில் ஏந்திய யானை வெகு தூரமாய் வீசி எறிந்தது. காற்றில் விரைந்த
தலை குவித்து வைக்கப்பட்டிருந்த தந்தங்களின் நடுவில் விழுந்தது. பெரும்
யானை மீதிருந்து குதித்த குஞ்சரமல்லன் அவனது கையில் நீண்ட வேலினை
உயர்த்திப் பிடித்தவாறு மிக ஆவேசமாய் தன்னை நோக்கி ஓடி வருவதைச் செவியுற்ற
அந்த யானைவேகமாய்த் திரும்பி கொம்பினால் அவன் வயிற்றில் செருகியது.
குஞ்சரமல்லனின் முதுகில் வெளிவந்த கொம்பின் நுனியிலிருந்து இரத்தம் பூத்து
வழிந்தது. தலையினை வேகமாய்ச் சிலுப்பியபடி அவனை உதற, கிழிந்த வயிற்றுடன்
காற்றில் பறந்தவன் தலை விழுந்த இடத்தில் போய் விழுந்தான்.
திடீரென்று
லேசான மயக்கம் யானையினை ஆட்கொண்டது. களத்தில் பாதம் ஊன்றி நிற்க முடியாமல்
சிரமப்பட்டது. கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள சிறு
துவாரத்திலிருந்து கடும் மணத்துடன் பிசுபிசுப்பாய் மதநீர் வழிய அதன் குறி
விறைத்து பீறிட்டது சுக்கிலம். யானை பதட்டத்திலிருந்த கணத்தில் காற்றில்
சீறிவந்த வாள் அதன் துதிக்கையினை வெட்டியது. நிலம் அதிர துண்டாகி விழுந்தது
துதிக்கை. அறுபட்ட இடத்திலிருந்து புனலெனப் பொங்கியது குருதி. நின்ற
நிலையிலேயே நிலத்தில் சாய்ந்தது யானை. யானையைச் சாய்த்த வீரன் அப்போதுதான்
கவனித்தான். அருகாமையில் மற்றொரு யானையின் மூச்சு. கையில் பிடித்திருந்த
வாளினை வீசினான். யானையின் முழங்காலில் குத்தி நின்றது. யானை அவனை நோக்கி
முன்னேறியது.
வேறு
ஆயுதம் ஏதுமற்ற நிலையில்தான் உணர்ந்தான் தன் மார்பில் ஒரு வேல்
செருகியிருப்பதையும் சந்தனம் தடவிய மார்பு முழுவதும் செந்நிறமாய்
மாறியிருப்பதையும். யானை வேட்டையில் ஈடுபட்டிருந்த அவ்வீரன் தன் மார்பில்
செருகியிருந்த வேலினையே மறந்திருந்தான். வீரம் வலியை வென்றிருந்தது.
சற்றும் யோசிக்காமல் தன் மார்பிலிருந்து வேலினை உருவியவன் தன்னை நோக்கி
வந்த யானையின் சிரம் நோக்கி எறிந்தான். தலையில் செருகிய வேலுடன் திகைத்து
நின்றது யானை. வேல் பதிந்த இடத்தின் அருகிலேயே சீழ் வழிந்தபடி புண்
இருந்தது. யானையின் ஒரு கொம்பு பிடுங்கப்பட்டிருந்தது. உடம்பெங்கும் நிறைய
அம்புகள் செருகப்பட்டிருக்க ஏகரத்தம் வெளியான நிலையில் வலி தாள முடியாமல்
தள்ளாடியபடி இருந்த யானை, கால்களை மடித்து நிலத்தில் அமர்ந்து துதிக்கை
உயர்த்த நினைத்து முடியாமல் சாய்ந்தது. யானையைக் கொன்ற வீரனும் தள்ளாடி
யானை மீதே விழுந்தான். யானையின் உயிர் பிரிந்த அதே கணம் அவ்வீரனின் உயிரும்
பிரிந்தது.
வானேகும் இறக்கையற்ற கருஞ்சர்ப்பங்கள்
சேரனின்
புருவங்கள் புன்னகையில் நெறிந்தன. களத்தின் நடுவில் தனது பட்டத்து யானை
மீது அமர்ந்திருந்தான்.குன்றின் மீது ஏறி நின்று யானைப்போர் கண்ட தன்
முன்னோர்களை எண்ணிக்கொண்டான். தனது வில் முத்திரை பதித்த கொடியினைத்தாங்கி
நிற்கும் குன்றினை ஒத்த பட்டத்து யானையைத் தடவிக் கொடுத்தான் மன்னன்.
துதிக்கை உயர்த்தி விண் நடுங்கும் வண்ணம் பிளிறலை வெளிப்படுத்தியது யானை.
புருவங்களின் மீது அழகாய்க் கோலம் வரையப்பட்டு நெற்றி நடுவில்
செந்தூரமிட்டு கம்பீரமாக நின்றிருந்தது அரசனின் யானை. களத்தில் மன்னன்
கண்கள் திரும்பிய திசையெல்லாம் களிறுகள் அலறின. வீரர்கள் சுற்றிச்
சுழன்றபடி யானையின் உயிர் கவர்ந்து அரசனின் பாதத்தில் கொண்டு சேர்த்தனர்.
யானை
வெற்றியின் அடையாளம்.யானை ஒன்றினை இழந்தாலும் அது பகை மன்னனுக்குப்
பேரிழப்பாகும். இழப்பு அவன் வீரம் சேர்ந்தது. மானம் சார்ந்தது. போரின்
மூன்றாம் நாள் அது. காலையில்தான் யானைப்படைகள் தங்கள் பணியைத்
துவக்கியிருந்தன. வயிரமும் வலம்புரிச்சங்கும் ஒலிக்கத் துவங்கிய போர், மாலை
நெருங்குவதற்குள் பகைவனின் படையில் பாதியினையாவது அழிக்கும் திட்டம்
மன்னனிடமிருந்தது. அவனின் வீரப்பட்டியலில் அவன் கவர்ந்த
ஆயிரமாவது யானையின் உயிர் இடம் பெறுவதற்கு இன்னும் சில தூரமே இருந்தது.
தன்னைப்பற்றிப் பாடப்போகும் பரணி எண்ணி மன்னன் நெஞ்சு விரிந்தது.
பயந்து
பிளிறிக்கொண்டு ஓடிய ஒரு யானை, நிலத்தில் அங்கங்கே சிறு பள்ளமாய்
தேங்கியிருந்த இரத்தக் குளத்தின் மீது பாதம் பதிக்க தெறித்து காற்றில்
விசிறப்பட்ட இரத்தம், பட்டத்து யானையின் பிடரியில் மிக வசதியாய்
அமர்ந்திருந்த மன்னனின் முகத்தில் பட்டு அவன் அருகில் இருந்த கொற்றவையின்
உதட்டில் விழுந்து உடம்பெங்கும் வழிய, சேரன் சிரித்தான். கொற்றவை கழுத்தில்
சூடியிருந்த வஞ்சிப் பூமாலை குருதியில் மலர்ந்திருந்தது. மன்னனின் முழுக்
கவனமும் தழும்பனின் மீதிருந்தது. தழும்பனுக்கு இது ஆறாவது போர். அதன்
உடம்பெங்கும் விரியும் வடுக்கள் அளப்பரிய வீரத்தை விளக்கும். பத்தடிக்கும்
மேலான உயரத்துடன் அகலமான பாதங்கள் எடுத்துவைத்து நடக்கும் ஒவ்வொரு
அடியிலும் கம்பீரம் தெறிக்கும்.
நீளமாக,
நுனியில் லேசாக வளைந்து கூர்மை நிரம்பிய கொம்புகளும் அத்தனை பெரிய உடலில்
தேடிக் கண்டுபிடிக்கும்படியான சிறிய கண்களும் சிவந்த உதடுகளும் தேடாமலே
பளீரெனப் பார்வையில் அறையும் கண்களாய் விரிந்திருக்கும் விழுப்புண்
அடையாளங்கள். தழும்பன் வேழப்படைத் தலைவன். தலைவனுக்கு தலைவனை மிகப்
பிடிக்கும். முந்தைய போரில் தழும்பன் நிகழ்த்திய அழிவு கொஞ்ச நஞ்சமல்ல.
களம் புகுந்து போர் இசை கேட்டுவிட்டால் போதும். குஞ்சரமல்லனின் இரும்பு
அங்குசமே சற்று பயம் கொள்ளும்படியாய்த்தான் ஆட்டம் இருக்கும்.
அதிலும்
பம்பையும் கடிகையும் தண்டிகையும் இணைந்து முழங்கும் உக்கிர இசை வீரர்களின்
நரம்புகளுக்கு் வெறியூட்டுகிறதோ இல்லையோ தழும்பனின் சிறிய செவிகளுக்குள்
நிகழ்த்தும் வெற்றி மந்திரம் கஜ சாஸ்திரம் பயின்ற அரசனும் அறிய முடியாதது.
வீரம் தளும்ப தழும்பன் சுழற்றி வீசிய வீரர்கள் எத்தனை? இடித்த கோபுரங்கள்,
அழித்த மாடமாளிகைகளுக்கு கணக்கில்லை. பகைவீரர்கள் வீசிய ஈட்டிகளை
நெடுங்கரத்தில் வாங்கி திருப்பி வீசிக் கொன்ற உயிர்கள் பல. தழும்பனின் வீர
வெளிப்பாடு கண்டு வியந்த மன்னன் சென்ற போர் வெற்றி விழாவின்போதுதான்
தழும்பன் என்ற விருதுப்பெயர் சூட்டினான்.
மேற்கில்
சூரியன் மறைய முற்பட அன்றைய தினத்துக்கான போர் நிறுத்தம்
அறிவிக்கப்பட்டது. செருக்களத்தினை இசை வெறியூட்டிக்கொண்டிருந்தவர்கள்
தங்கள் பணியை நிறுத்தினர். இசை நின்றதுமே கழுகுகளின் ஓலம் தொடங்கியது.
ராட்சதக் கழுகுகள் போர்முடிந்த நிலத்தில் வட்டமிட்டு இறங்கின. தங்களின்
பெரும் அலகால் களமெங்கும் அறுந்து சிதறிக்கிடந்த துதிக்கைகளைப் பற்றியபடி
வானத்தில் பறக்கத் தொடங்கின. சிறகு முளைத்த சர்ப்பங்களாய் பறந்த அந்த
கழுகுகளைக் கண்ட மன்னன் தன் இருக்கையிலிருந்து திரும்பிப் பார்த்தான்.
தேர் போன்ற அமைப்புடன் கூடிய பெரிய வண்டிகள் நிறைய தந்தங்கள்
குவித்துவைத்து படை வீட்டினை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. விழுப்புண்கள்
நிறைந்த மன்னன் மகுடத்தில் கர்வம் ஊறியது. இறக்கை முளைத்த கரும் பாம்பென
பறந்து கொண்டிருந்த கழுகொன்றின் அலகிலிருந்து நழுவிய துதிக்கை பூமி நோக்கி
வந்தது. அத்தனை உயரத்திலிருந்து விழுந்த துதிக்கை தன் கண்களின் மீது
மோதியதும் திடுக்கிட்டு விழித்தார் மோசிகீரனார்.
வாரணம் ஆயிரம் வீழ்த்திய தமிழ்

இதயம்
முரசறிவித்துக் கொண்டிருந்தது. வியர்த்திருந்தார். தான் படுத்திருந்த
கட்டிலை விட்டு கணமும் தாமதியாமல் இறங்கி கீழே நின்றார். உடல் அதிர்வு
அடங்கவில்லை. கட்டிலை உற்றுப்பார்த்தார். தந்தமிழந்த ஆயிரம் யானைகள்
ஒன்றாகப் படுத்திருப்பதுபோல் காட்சி தோன்றி மறைந்தது. இந்த ஒரு கட்டில்
செய்வதற்கு எத்தனை தந்தங்களை சீவி பக்குவப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு
எத்தனை யானைகளை பலி தந்திருக்க வேண்டும். மோசிகீரனாரின் செவிக்குள்
யானைகளின் கதறல். அருகில் நின்று புன்னகையுடன் கவரி வீசிக்கொண்டிருந்த
மன்னனை பெருமூச்சுடன் நிமிர்ந்து நோக்கினார் புலவர். பலவீனமாய் உதடுகளை
அசைத்தார். '' முரசு இரத்த வேட்கை கொண்டது. அச்சந்தருவது. அதன் குற்றமற்ற
வாராய் இழுத்துக்கட்டி வாரின் கருமையான பக்கம் அழகு பெற மயிலின் தழைத்த
நீண்ட பீலியும் ஒளிரும் பொறி கொண்ட அழகிய பூமாலையும் தளிருடன் உழிங்கைபூ
விளங்கசூடி நீராடச்சென்றதை அறியேன். எண்ணெயின் நுரையை முகர்ந்தது போன்ற
மென்மையான மலர்கள் தூவிய படு்க்கை மேல் தெரியாமல் படுத்து
உறங்கிவிட்டேன்.என்னைப் பார்த்து கோபம் கொண்டு இரண்டு துண்டாக்காமல் நின்
வாளின் வாயை ஒழித்தாய். அது ஒன்றே போதும். நீ நல்ல தமிழ் முழுவதும்
அறிந்தவன் என்பதை அறிவதற்கு. என்னைக் கொல்லாமல் விட்டதோடு
சும்மாயிருக்காமல் என்னிடம் வந்து நின் வலிமை மிக்க முழவு போன்ற தோளை ஓங்கி
குளிர்ச்சியான அகன்ற இடம் முழுவதும் மணம் வீசக் கவரி வீசினாய்.
வெற்றிபெற்ற குரிசில். நீ இங்கு இப்படிச் செய்தது இந்த உலகத்தில் புகழுடன்
வாழ்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அங்கு உயர்ந்த நிலையிலுள்ள தேவ லோகத்தில்
வாழ முடியாதுதென்பதைக் கேட்டதன் பிரதியுபகாரமா?- ( புறநானூறு- 50) களம் வனம் கடந்த இறுதி
வரிசையில் நின்றிருந்த கொம்பனின் முகம் இறுகிப் போயிருக்க எவ்வித
சலனத்தையும் வெளிப்படுத்தாத கண்களின் நிழலில் பட்டத்து யானை மீது
அமர்ந்திருந்த மன்னன் தெரிந்தான். லேசாகத் தலை குனிந்த கொம்பனின் துதிக்கை
நுனி நிலம் உரச இரத்தம் ஊறிக்கிடந்த பூமியினைக் கண்டதும் தாளா வலியொன்று
உடல் முழுவதும் ஊடுருவி நகர்ந்ததை உணர்ந்தது. குதிரைகள் பூட்டிய பெரிய
பெரிய வண்டிகளில் குவித்துவைத்துக் கொண்டு செல்லப்படும் தந்தங்களைக் காண
கொம்பனின் வலி மேலும் அதிகமானது. காலம் காலமாய் மனிதன் தன் வீரத்தினை
முரசறிவிக்கக் கொன்று குவித்த தன் மூதாதையர்களை எண்ணி மனம் கலங்கியது.
காலையில் கட்டுத் தறியிலிருந்து அழைத்து வரும்போதே ஒரு முடிவிலிருந்தது
கொம்பன். இனியும் மனிதன் கையில் பொம்மையாய் அவனின் இரும்பு அங்குசத்துக்கு
அடிமையாய் இருக்க முடியாது எனத் தீர்மானித்திருந்தது. வயிரமும்
வலம்புரிச்சங்கும் ஒலிக்கத் துவங்கிய சில நிமிடங்களில் மெல்லப் பின்
நகர்ந்த கொம்பன் சட்டென்று திரும்பி தன் நடையை வேகப்படுத்தியது. கொம்பனின்
பிடரியில் அமர்ந்திருந்த குஞ்சரமல்லனுக்கு ஆரம்பத்தில் ஒன்றும்
புரியவில்லை. தன் கால்களினால் கொம்பனின் தாடைப்பகுதியைத் தட்டினான்.
கொம்பனிடம் வேகம் கூடியது. போர்க்களத்தில் யானைகள் அங்குமிங்கும் ஓடியபடி
சமர் புரிந்து கொண்டிருக்க கூட்டத்திலிருந்து பிரிந்து களம் விட்டு
வெளியேறி காட்டுப்பகுதியினை நோக்கி ஓடிய கொம்பனைக் கவனிக்க யாருமில்லை. ஒரு
மணல் மேட்டின் மீது கொம்பன் ஏறி இறங்க நிலைகுலைந்த குஞ்சரமல்லன் தவறி
நிலத்தில் வீழ்ந்தான். திரும்பிப் பார்க்காமல் ஓடியது கொம்பன். விழிகளின்
மூலையில் தெரிந்த அங்குசத்தின் முனையை விழிமூடி முறித்துப் போட்டது.
பச்சைப் பசேலென
விரிந்தது காடு. வலது பாதத்தினை உயர்த்தி வைத்து காட்டுக்குள் நுழைந்தது
கொம்பன். வழி என்று ஏதுமில்லை. சுவடேதும் படியாத அடர்ந்த கன்னி வனம்.
மரங்களும் கிளைகளும் நிரம்பியிருக்க துதிக்கையினால் துதிக்கையினால் கிளைகளை
வளைத்தது. முறித்து எறிந்தது. காட்டுக்குள் போர் ஒலிகள் இல்லை. கொம்பன்
நிற்காமல் ஓடியது. திடீரென்று காடு முடிந்து வயல்வெளி விரிந்தது. வரப்புகளை
மிதித்துக்கொண்டு ஓடியது. தூரத்தில் சாலை தெரிந்தது. அப்போதுதான்
கவனித்தது தன் அருகிலேயே ஓடி வந்து கொண்டிருந்த பெண் யானையை. மாதங்கி.

மாதங்கி பெரும் அழகி.
மன்னனுடன் நகர்வலத்தில் வருபவள். கழுத்து மணிகள் ஒலிக்க நாணம் குவித்து
வைத்து மென்மையான நடையுடன் மாதங்கி மன்னனைத் தாங்கி வலம் வருவதைக் காணும்
நகர் மக்கள் மாதங்கியி்னனழகில் மனம் தொலைப்பதா, மாதங்கியின் பிடரியில்
அமர்ந்திருக்கும் மன்னனின் கம்பீரத்துக்கு மயங்குவதாவெனத் தவிப்பார்கள்.
கொம்பனின் கனவுகள் மாதங்கியின் எச்சில் முத்தங்கள் நிறைந்தது. எப்போது
தன்னுடன் மாதங்கி இணைந்தது எனத் தெரியாத கொம்பனின் நடையில் சி்று உற்சாகம்.
இரு யானைகளும் ஓடிக்கொண்டிருக்க சாலையின் இரு புறங்களிலும் நிறைய
கட்டடடங்களும் வீடுகளும் தென்பட்டன. மெலிதான வெப்பவலை தன் முகத்தில்
மூடுவதை கொம்பன் உணர்ந்த நேரம் அந்த வளைவினைச் சந்தித்தது.அபாயகரமான வளைவு
அது. சாலையின் வளைவில் அதி வேகமாய்த் திரும்பிய, காட்டுமரத் துண்டுகளை
ஏற்றிவந்த லாரி யானையின் மீது மோதிக் கவிழ்ந்தது. சிறு சப்தமின்றி
நிலத்தில் சாய்ந்து உயிர்விட்டது பெண் யானை. கண்களிலிருந்து வழிந்த இரத்தம்
உலர் மண்ணை ஈரமாக்க கொம்பன் நிற்காமல் ஓடியது.
மூச்சிரைத்த கொம்பனின்
கண்களில் இருப்புப் பாதை தென்பட்டது. ஆட்களற்ற பாதுகாப்பான கதவுகளற்ற
சாலையின் நடுவில் குறுக்கிட்ட இரும்புத் தண்டவாளங்கள் கண்டதும் குழம்பிய
கொம்பன் திசை தடுமாறி இரும்புப் பாதையின் ஊடே ஓடியது. எதிர் திசையிலிருந்து
வந்த சத்தம் கேட்டதும் நின்றது. வந்த பாதையிலே திரும்பி ஓடமுயல...
கொம்பனால் நகர முடியவில்லை. தண்டவாள இடுக்கில் சிக்கியிருந்தது கொம்பனின்
பாதம். ஓசை அருகில் கேட்டது. கொம்பன் துதிக்கை உயர்த்தி பிளிறியது.உடல்
அசைத்தது. ஒரு அடிகூட கால்களை அசைக்க முடியாமல் கதறியது. எதிரே ரயிலைப்
பார்த்தது கொம்பன். அதன் விழிகள் விரிந்தன.
ஆவேசமாய்
பாய்ந்துவந்த மன்னன் துதிக்கையினை வெட்டினான். தந்தம் அறுத்து
அமலையாடினான். காடுகளை அழித்தான். சமநிலமாக்கப்பட்டு மனிதன் வசிக்க வீடுகள்
முளைத்தன. வாழ இடமின்றி வெளியேறிய யானைகள் கூட்டம் கூட்டமாய் வாகனங்களில்
அடிபட்டு இறந்தன. மரங்களின்றிப் போனதால் மழையின்றி நீர் நிலைகள் வற்றி
தாகம் கொண்ட யானைகள் மதம் பிடித்து அலைந்தன. அங்குசம் முறித்துப் போட்டன.
பாகன்களை எறிந்தன. துப்பாக்கி உயர்த்தி யானைகளைச் சுட்டான் ஒருவன். தலைகளை
வெட்டி வரவேற்பறையில் வைத்து அழகு பார்த்தான். மமதை கொண்ட மனிதனுக்கு
எல்லாமே விளையாட்டாயிற்று. ஆதி அடிமை வாசம் மாறா சில யானைகள்
துதிக்கையேந்தி பிச்சையெடுத்தன. ஆயிரம் பொன் மதிப்புடைய யானையின் நாசி
முனையில் அலுமினியக் காசினை வைத்து ஆசி பெற்றான் மாமனிதன். அத்தனை
பலத்தினையும் உணராமல் ஆசி தந்து நகர்ந்தன யானைகள். அதன் எண்ணிக்கை
குறைந்தன. கண்காட்சியில் வைக்கப்படும் உயிரானது யானை. கொம்பன் விழிகளை
மூடியது.
வேகமாய் வந்த இரயில்
கொம்பன் மீது மோதியது. கால் இரும்புப் பிடியில் சிக்கியிருக்க இரத்தம்
கக்கியபடி சாய்ந்த கொம்பனின் கால் எலும்புகள் முறிந்தன. பெரும் ஓலம்
எழுப்பியவாறு நிலத்தில் வீழ்ந்தது. உயிர் பிரியும் முன்பு தன்னுடன் இணையாய்
ஓடிவந்த மாதங்கியினை ஒரு கணம் எண்ணியது. மெல்ல கண்களை மூடியது. அசைந்து
கொண்டிருந்த செவி மடல்களின் இயக்கத்தினை நிறுத்தியிருந்ததது உலகின் கடைசி
யானை.
முற்றும்.