
சிறுகதை -
தந்தூரி கசானா 400 ரூபாய்
இந்த உலகத்தில்
ஒரு கோடியே நூற்றியெட்டு துயரங்கள்
இருக்கின்றன
பசி என்பது
முதல் துயரமாகப்
பெரும்பான்மையோரால் ஏற்றுக்
கொள்ளப்பட்டுவிட்டது
- இசை
சரவணனின் அறைக்கதவில் பெரிய பூட்டு தொங்கியதைக் கண்டதும் ' கிளிக்
டக்...கிளிக் டக்...'. சத்யமூர்த்தி வயிற்றில் தன் கடைசித் திறப்பினையும்
திறந்துவிட்டு ஓய்ந்தது சாவி.வயிறு விரியத் திறந்து உலகம் தின்னக் கேட்டது
பசி. சரவணாவின் எண்ணுக்குத் தொடர்பு கொள்ள நினைத்த மனம் மிக அனிச்சையாய்
அலைபேசியைத் தேடி கையில் எடுத்தபின்புதான் உணரமுடிந்தது, பேலன்ஸ் இல்லாமல்
கால்கள் தள்ளாடின. வெளியேறி தெருவில் இறங்கினான். மீண்டும் வெயில். ஏன்
இந்த வெயில் அவன் செல்லுமிடமெல்லாம்...சத்யாவுக்கு கண் கூசியது. பத்து
பக்கம் பிழை திருத்தம் செய்து தந்ததற்காக பழனி தந்த 300 ரூபாய்தான் ஒரு
வாரமாய் பசி ஆற்றியபடி இருந்தது. காலையில் கையில் இருந்த மிச்சம் 15
ரூபாய்க்கு ஐந்து இட்லி சாப்பிட்டு முடித்த கையோடு எக்மோர் வந்தான்.
இப்போது மணி இரண்டு. 12 மணி போல் சுந்தர் வாங்கித்தந்த டீயும், சம்சாவும்
மூட்டிய சக்தி இப்போது செயலிழந்திருந்தது. ' உங்க பயோடேட்டா பார்த்தேன்.
நம்பிக்கையோட இருங்க...பத்துநாள்ல எங்கேயாவது சேர்ந்துடலாம்'
வார்த்தைகளிலும், புன்னகையிலும்,தேநீரிலும், சம்சாவிலும்
நம்பிக்கையிருந்தது. ப்ச்...எக்மோரிலும் அதே வெயில்தான்.
*****************************
' பஸ்ஸில் போவதென்றால் காசு
வேண்டும். இருக்கும் காசினை வைத்துக்கொண்டு இரண்டு பஸ்கள் ஏறி இறங்கி
இருக்கும் இடத்தை அடைய முடியாது.என்ன செய்யலாம்?'
' ஏன் பஸ்...இப்படியே
நடக்கலாமே...என்னை மிரட்டும் நோக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த
வெயிலை அலட்சியப்படுத்தினால் எத்தனை நன்றாக இருக்கும்...என்னை விலக்கும்
இந்த உலகத்திடம் நான் விலக்க வேண்டியதும் எத்தனையோ இருக்கிறது என்று
காட்டவேண்டாமா...எப்படித்தான் எல்லோரையும் பழி வாங்கிவிட்டு இவ்விடத்தில்
நான் வாழ்ந்து வெல்வது.'
***********************
நடக்கத் தொடங்கினான். சத்யாவைக் கடந்து
விரைந்து சென்ற பஸ்ஸினுள் அவன் அமரவேண்டிய இருக்கையில் யாரோ ஒருவன்
அமர்ந்திருந்தான். அவன் பர்சும், வயிறும் பெரிதாய் இருந்தது. சத்யாவின்
பார்வையில் பதிந்த புதுப்பேட்டை மெக்கானிக்குகள் தாங்கள் அணிந்திருந்த ஆடை
முழுதும் அப்பிய கிரீஸ் கறைகளோடு உழைத்துக் கொண்டிருந்தார்கள்.
**************************************
' இவர்கள்
சாப்பிட்டிருப்பார்களா?அப்படியே சாப்பிடவில்லையென்றாலும் இன்னும் அரைமணி
நேரத்தில் அவர்கள் சாப்பிடத் தொடங்கலாம். எனக்கான உணவுதான் இப்போது எங்கே?
சென்னையெங்கும் கொட்டிகிடக்கும் வேலை புதுப்பேட்டையில் மட்டும் இல்லாமலா
போய்விடும்...இவர்களைப்போல் ஏன் நான் மோட்டார் கழுவியோ பைக் சீர் செய்தோ
பிழைக்கக் கூடாது?'
' ஏன் இப்படிப் பிழைக்க வேண்டும். மேலும் இது எனக்குத் தெரியாத வேலை.
தெரிந்த, விருப்ப வேலையிலேயே நிரந்தரமாய் இருக்க முடியவில்லை.எத்தனை
வளைதல்கள் தேவைப்படுகிறது. என் நாக்கு நோக்கி எத்தனைக் கால்கள் நீண்டன.
எந்த வேலையையும் தெரிந்து கொண்டா பிறக்கிறோம். வளரவளரக் கற்றுக் கொள்ள
வேண்டியதுதான். காதல், துரோகம்,வஞ்சகம், வலி, அவமானம், வன்மம்.'
**********************************
பாபுவின் அறையில்
இருந்தபோது இவ்வளவு பிரச்சனையில்லை. அறையிலேயே சாப்பாடு இருக்கும்.
பசியடக்கியபின் வேலை தேடி வெளியேக் கிளம்பி விடுவான். அச்சுப்பிழை
திருத்துனர் வேலை, எட்டாயிரம் சம்பளம் என்றதும்தான் பாபுவின் அறையை சத்யா
துறந்தது. ஆறு மாதம் கூட நிலைக்கவில்லை. அவனுக்கு சொல்லப்பட்ட வேலை ஒன்று.
தந்த வேலை ஒன்று.
*******************************************
'' அவருக்கு மறுபடியும் கால் பண்ணி கட்டுரை கேட்டீங்களா?''
'' கேட்டேன் சார். இப்ப பிசியாயிருக்கேன்.இந்த மாசக் கடைசிக்குள்ள தந்துடுறேன்னு சொன்னார் சார்.''
'' அவரு அப்படித்தான் சொல்லுவாரு. நீங்க தொடர்ந்து அவர காண்டாக்ட்
பண்ணிக்கிட்டே இருங்க. கொஞ்சம் தொந்தரவு செஞ்சாதான் நம்ம தேவை அவருக்குப்
புரிஞ்சிப் பேசுவாரு. ரெண்டு நாளைக்கு ஒரு தடவை நீங்க அவரைத் தொடர்பு
கொள்ளுங்க.''
'' சரி சார்.''
*****************************
அடங்காத
வெயிலுக்குத்தான் எத்தனை பசி. வளைவில் திரும்பினான். எக்மோர் தாண்டிய
சிந்தாதிரிப்பேட்டை நூலகத்தின் எதிரிலிருந்த கிருஷ்ணன் கோவிலில் அன்னதானம்
போலும். வெள்ளை உடை உடுத்தியவர்கள் சந்தன நெற்றியுடன் உள்ளே போவதும்
வருவதுமாய் இருந்தார்கள். கன்னச் செழுமைகளிலும் காற்றில் அலையும்
தலைமுடியிலும் உயர் கொழுப்பின் பதிவு. ஏதோ வாசனை வந்து நாசியை நிரடியது.
கூவம் பாலத்துக் கட்டைச் சுவற்றில் ஒரு பைத்தியக்காரன் படுத்திருந்தான்.
அவனிலும் அவன் அணிந்திருந்த ஆடைகளிலும் அத்தனை அழுக்கு. செம்பட்டை
பிசுபிசுப்பில் சிக்கிக்கிடந்தன அவன் தலைமயிர்கள். அவன் அருகில் லேசாய்
பிரிக்கப்பட்ட சோற்றுப் பொட்டலம். ப்ச். இவனும் இன்னும் சாப்பிடவில்லை.
இவனுக்குப் பசிக்கவில்லையா. சத்யமூர்த்தி பார்த்துக்கொண்டிருக்கும் போதே
பதறத் தொடங்கினான்.
***************************************
'' என்ன சொல்லி பத்து நாளாவுது...என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க? அவர்கிட்ட பேசுனீங்களா?''
'' நீங்க சொன்ன மாதிரியேதான் சார் அவர்கிட்ட பேசுனேன்.எல்லாம் கேட்டுட்டு கடைசியில ஸாரி ராங் நம்பர்னு போனை வச்சுட்டார் சார்.''
'' இத உடனே என்கிட்ட சொல்ல வேணாமா? அவரு எவ்ளோ பிசியான ஆளு. நாமதான்
கொஞ்சம் விட்டுப்பிடிக்கணும். நீங்க கால் பண்றப்ப அவரு என்ன சூழ்நிலையில
இருந்தாரோ...கொஞ்சம் சின்சியரா இருங்க ஜாப்ல.''
'' சரி சார்''
'' மறுபடியும் அவர்கிட்டப் பேசிப்பாருங்க''
'' சரி சார்''
**************************************
ஒரு
நாய் பைத்தியக்காரனை நெருங்கியது. அந்தப் பொட்டலத்தை முகர்ந்து பின் அவன்
சட்டையினையும். சட்டென்று வேகம் பிடித்து ஓடத் துவங்கியது. சத்யாவின்
கண்கள் நாயைப் பின் தொடர்ந்தன. நாய்க்குப் பசிக்கிறதா...இல்லையா...விரைந்த
நாய் எதிரில் வந்த பெட்டை நாயைக் கண்டதும் வேகம் குறைத்து நின்று
வாலாட்டியபடி அப்பெண் நாயின் புட்டம் முகர்ந்தது. வேகவேகமாய் வாலாட்டியது.
எவ்வுணர்வையும் வெளிப்படுத்தாத பெண் நாய் சட்டென்று வெயில் தவிர்த்து
சந்துக்குள் ஓடியது. பின்னாலே போனது சத்யாவின் கண்கள் தொடர்ந்த நாயும்.
இன்னும் அந்தப் பைத்தியக்காரன் சாப்பிடவில்லை. கூவத்தின் அழுகிய பிண
நாற்றம் அவனைத் தழுவியபடி சத்யா மீது மோதியது. சரவணனின் அறை நோக்கி
நடந்தான்.
2
விநாயகர்
கோயில் சந்தில் திரும்பியதும் நீண்டுகிடந்த நிழல் மீது நடந்தான். சரவணன்
சத்யமூர்த்தியின் பசி அறிந்தவன். சத்யாவைப் போலவே தன் இருப்பு சினிமாதான்
என்று தீர்மானித்து ஊரிலிருந்து சென்னை வந்து பல போராட்டங்களுக்குப் பிறகு
இப்போது மூன்று மாதமாகிறது இயக்குநர் அழகியபிள்ளையிடம் உதவி இயக்குனராய்
சேர்ந்து. அவன் கஷ்டப்பட்ட நாளிலும் சக நண்பனாய் மனிதனாய் சத்யாவைப்
பலமுறைக் காப்பாற்றியிருக்கிறான். இதோ சத்யா போட்டிருக்கும் சட்டை கூட அவன்
தந்ததுதான். ' புதுசா எடுத்துத்தர காசு இல்லடா நண்பா...இந்த சட்டை நான்
அதிகம் யூஸ் பண்ணல. எங்காவது இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணனும்னா இதப்
போட்டுட்டுப் போ.ஆனா மனசுல ஒன்ன மட்டும் ஞாபகம் வச்சுக்க. இது சர்வைவல்
சிட்டிடா. எல்லாமே நாம நெனைக்கிற மாதிரி நடக்காது. கொஞ்சம் அனுசரிச்சுப்
போ. வீட்ல ஒனக்குப் பொண்ணு பாத்துக்கிட்டுருக்கறதா அன்னைக்கு சொன்ன... இப்ப
நீ தனியாளு. எத வேணும்னாலும் சாப்புட்டு எங்க வேணும்னாலும் படுத்து
தூங்கலாம்.நாளைக்கு கல்யாணம் ஆயிட்டா...அதுக்கும் சேர்த்து இப்பவே சம்பாதி.
கஷ்டப்படு.' சரவணனின் அறையை விட்டு வெளியேறுகையில் சிறிது நேரம் முன்பு
பார்த்த நாயின் வேட்கை ஞாபகம் வந்தது. ப்ச். வெறுப்புற்று நடுச்சாலையில்
நின்றான்.
****************************************
' இப்ப என் பசிக்கே இத்தன பாடுபட வேண்டியிருக்கு. இதுல கல்யாணம் வேற ஒரு கேடா.'
'ஏன்... ஊர் ஒலகத்துல கல்யாணம் கட்டுனவன் எல்லாருமே நல்லாவா வாழ்ந்துக்கிட்டுருக்கான்...கல்யாணம் பண்ணிட்டு கஷ்டப்பட வேண்டியதுதானே'
' அப்பக்கூட கஷ்டப்படலாம்னுதான் நினைக்கத் தோணுது.நான் நல்லாவே இருக்கப் போறதில்லையா?'
'இருக்கலாம்...ஆனா அது ரொம்ப கஷ்டம்.'
***************************************
ச்சே...தலையை உலுக்கிக் கொண்டான். பசி தன் கரங்களினால் குரல்வளையை
நெரிக்கத் துவங்கியிருந்தது. அதன் மூச்சுத் திணறிய சப்தம் வயிற்றுக்குள்
குழம்பலாய்க் கேட்டது,குட்டி நாயின் பசிக்குரல் போலவே.
************************
'' சார், நான் பைரன் பதிப்பகத்துலேர்ந்து பேசுறேன்.''
'' ம்...சொல்லுங்க...''
'' உங்ககிட்ட எடிட்டர் ஒரு கட்டுரை கேட்டிருந்தாரு அடுத்த இதழுக்காக...''
'' சரி...''
'' தரேன்னு சொல்லியிருந்தீங்க...''
'' ம்...''
'' எடிட்டர் உங்களுக்கு ஞாபகப் படுத்தச் சொன்னாரு சார்...''
'' சரி...''
'' நீங்க ப்ரீயா இருக்குறப்ப எழுதித்தந்தா போதும்''
'' ம்...''
'' நான் ஏற்கனவே ஒங்ககிட்ட மூணு தடவை பேசியிருக்கேன்...''
'' சரி...''
'' அந்தக் கட்டுரை எப்ப சார் கெடைக்கும்?''
'' ஸாரிங்க...நீங்க தப்பான நம்பருக்கு போன் பண்ணியிருக்கீங்க''
'' சார்...!''
************************************
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்கெட் கடக்கையிலே பசி வயிற்றுக்குள் பெரும்
அலைகளை எழுப்பி மோதியது. கடல் இரைச்சலில் குடல்கள் சுருண்டன. மதியம்
மூன்று மணிக்கு உறைந்து கிடந்த மீன் கவுச்சி பசியின் சதவீதத்தினைக்
கூட்டியது. புதிதாய் ஒரு ஓட்டல் திறந்திருந்தார்கள். கண்ணாடிச்சுவர்கள்
பளபளவென்றிருந்தன. உள்ளே நிறைய பேர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
எப்படி தைரியமாக ஓட்டல் திறக்கிறார்கள்? நஷ்டமடையாத, லாபம் தரும் ஒன்றாக
ஓட்டல் தொழில்தான் இருக்கிறதா...நகரெங்கும் சலிக்காமல் சாப்பாட்டுக் கடைகள்
திறந்த வண்ணமிருக்கிறார்கள். இங்கே பசியும், சாப்பாடும்,
சாப்பிடுகிறவர்களும் நிறையவே. ஆனால் பசி தெரிந்து அதை
வியாபாரமாக்குபவர்களால் மட்டுமே இயங்குகிறது நகரம்.
இயேசு நேசிக்கிறார் என்று எழுதப்பட்ட எழுத்துக்களின் மேலே அத்தனை
பெரிதான சிலுவை சிவப்பு நிறத்தில் மின்னியது. சிலுவையே வலி. இதில் சிவப்பு
நிறம் வேறு. சத்யாவின் தொண்டை உலர்ந்திருந்தது. தண்ணீராவது குடிக்கலாம்.
வயிறு நிறையும் என்று எண்ணினான். சிம்சன் கடந்தான். அண்ணாசாலையின் அத்தனை
பரபரப்பான போக்குவரத்தில் மக்கள். சத்யாவின் களைத்த கண்களுக்கு எல்லோரும்
மிக நன்றாக இருப்பதாகவேப் பட்டது. சுரங்கப் பாதை இறங்கி ஏறி கடப்பதற்குள்
எத்தனை யாசகர்கள் கை உயர்த்துகிறார்கள். மனம் நடுங்க விரைவாய்க் கடக்க
முடியவில்லை. இவர்களெல்லாம் இந்நேரம் சாப்பிட்டிருப்பார்களா? அண்ணா
திரையரங்க வாசல் தேநீர் கடையில் தண்ணீர் குடித்தான். காலி வயிற்றில்
தண்ணீர் விழுந்ததும் திணறலாய் ஒரு வலி எழுந்து அடங்கியது.
3

'' ஒங்களுக்கு வேலை செய்ய விருப்பம் இருந்தா செய்யலாம். விருப்பமில்லாட்டி வெளியில போயிடலாம். இங்க எதுவும் கட்டாயம் கிடையாது.''
'' சார்... நான் என்ன சார் பண்ணினேன்...அவர்கிட்ட பேசுனேன். அவர்தான்
எல்லாம் கேட்டுட்டு போனைக் கட் பண்ணிட்டாரு. ஒங்ககிட்ட அன்னிக்கே இதச்
சொன்னேன்.''
'' மொதல்ல ஓங்க கோபத்தைக் குறைங்க...அவர்கிட்ட ஏதாவது அதிகாரமாப்
பேசியிருப்பீங்க...சில இடத்துல நாம வளைஞ்சு குடுத்துதான் போகணும்...''
'' ஸாரி சார்...வளையறதுக்கும் ஒரு எல்லை இருக்கு சார். ஒடஞ்சிடக்கூடாது...''
'' ஒவ்வொரு வார்த்தைக்கும் ரியாக்ட் பண்ணாதீங்க. ஒங்க எதிர்காலத்துக்கு
நல்லதில்ல...இப்ப வளைஞ்சி போங்க. நாளைக்கு அவங்க ஒங்களைத் தேடி வரும் போது
நீங்க யாருன்னு காட்டலாம்...''
'' என் வேலையைத்தான் சார் நான் செஞ்சேன்...''
'' அதிகாரத்துல இருக்கிறவங்க பேச்சுக்கு எதிர் பேச்சு பேசுறதுதான் ஒங்க வேலையா...?''
******************************************
திடீரென்று கைபேசி ஒலித்தது. அவசரமாய் எடுத்து திரைபார்க்க...சரோலாமா.
'' சொல்லு நண்பா...''
''எங்க இருக்கடா... நான் ட்ரிப்ளிகேன் வரைக்கும் வரேன்...கொஞ்சம் புக்ஸ் சப்ளை செய்யணும். சாப்புட்டியா?''
'' ....................''
'' ஹலோ...ஹலோ...சத்யா...''
'' இன்னும் இல்ல நண்பா. நீ வா.''
'' சரி. நான் அங்க வந்ததும் கால் பண்றேன். லன்ச் முடிச்சிட்டு அப்புறம் ப்ளான் பண்ணுவோம். இப்ப எங்க இருக்க?''
'' நான் மவுன்ட் ரோட்டுல இருக்கேன். நீ பெரிய தர்கா வந்துடு. அங்க வெயிட் பண்றேன்.வந்து கால் பண்ணு...''
எதிர்முனையில் எவ்வித பதிலும் இல்லாமல் போக அதிர்ச்சியாய் செல்போனைப்
பார்த்தான். இருண்டிருந்தது. ஆன் செய்து பார்த்தான். ம்ஹும். சார்ஜர்
தீர்ந்துவிட்டது. ப்ச். இதுவரை அவன்தான் இதன்மூலம் யாரையும் தொடர்பு கொள்ள
முடியாமல் இருந்தது. இனி அவனையும் யாரும். சத்யமூர்த்தி நீளமாய்
பெருமூச்செறிந்தான். அண்ணாசாலை ஓரத்தில் ஒரு கார் அவனை உரசியவாறு நின்றது.
இருவர் இறங்கி அந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர். புகாரி.பெயர்ப்பலகையைப்
பார்த்ததும் யூதாஸ் நினைவுக்கு வந்தான். உடனே இளங்கோ,மித்ரன், தந்தூரி
கசானா.
யூதாஸின் அறைதான் சத்யாவின் முதல் புகலிடமாய் இருந்தது. பிறகுதான்
பாபுவின் அறைக்கு சென்றது. சத்யா,யூதாஸ்,மித்ரன்,இளங்கோ நால்வருமே
சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருந்த நேரம். நால்வரில் D.F .T .
முடித்திருந்தவன் யூதாஸ். இயக்குநர் ஐயப்பனின் இரண்டாவது படத்தில் உதவி
இயக்குனராய் தேர்வாகி அட்வான்ஸ் பணமும் பெற்ற அந்த இரவில் சத்யாவுக்கு
தந்தூரி கசானா அறிமுகமானது. ஓட்டலில் நுழைந்து டேபிளில் அமர்ந்ததுமே
மெனுகார்டு என்ற பெயரில் மெனு புத்தகத்தைத் தந்தார்கள். பிரித்ததுமே
அதிர்ச்சியாகிக் கத்தினான் இளங்கோ. ' என்ன மாப்ளே...எல்லாமே ட்ரிபிள்
டிஜிட்டாவே இருக்கு... சிங்கிள் டிஜிட் டபுள் டிஜிட்ல ஒண்ணுமே இல்ல...' '
உஸ்ஸ்...' உதட்டின் மீது சுட்டுவிரல் வைத்து எச்சரித்தான் யூதாஸ். ' என்ன
வேணும்' என்றான். சத்யா யோசித்துக்கொண்டிருக்கும்போதே இளங்கோ சத்யாவை
சுரண்டினான். சத்யா அவனைப் பார்க்க அவன் பார்வை சத்யா கையில் விரித்து
வைத்திருந்த மெனு பக்கத்தில் இருந்தது. அவன் விரல் தொட்ட இடத்தில் '
தந்தூரி கசானா' என்று அச்சிடப்பட்டு அதன் நேரே 400 ரூபாய் என்றும்
இருந்தது. சத்யா மூச்சைப் பிடித்துக்கொண்டு உயிருள்ள கோழி எதுவும்
தென்படுகிறதாவென்று சுற்றுமுற்றும் பார்த்தான். பலவீனமான உதட்டை அசைத்தபடி '
தோசை' என்றவன் மித்ரனைப் பார்த்ததும் உறைந்தான். எப்போது இவன் ஆர்டர்
சொன்னான். இடியாப்பத்தை ஆட்டுக்கால் பாயாவில் முக்கியடித்துக்
கொண்டிருந்தான். அடப்பாவி. சத்யா ஏக்கமாய் இளங்கோவைப் பார்த்துக் கேட்டான்.
' ஏண்டா...இவன் நம்மகூடத்தான் எப்போதும் இருக்கான். இவனுக்கு மட்டும்
எப்பிடிடா இதெல்லாம் தெரியுது?' முறைத்தான் இளங்கோ. ' பிளாட்பாரத்து
கையேந்தி பவன்ல சாப்புடுற மாதிரி புகாரிக்கு வந்தும் நீ தோசை சொல்ற
பாரு...நீயும் திங்க மாட்டே...அடுத்தவனையும் திங்க விட மாட்டே...ஏதாவது
சொல்லி உன்னைக் கழட்டி விட்டுட்டு வந்துருக்கணும். கொஞ்சமாவது நடிக்கக்
கத்துக்கடா...அங்க பாரு... ஆஸ்கார நோக்கி போய்க்கிட்டு இருக்கு நாசுக்கா
ஆட்டுக்கால் பாயா...' அன்று ஏதேதோ சாப்பிட்டார்கள். ஆயிரத்து சொச்சம் பில்
தந்தான் யூதாஸ். தான் புகைக்கும் சிகரெட்டை சத்தியமூர்த்தியின் உதட்டில்
வைத்து பற்றவைத்தபின் இளங்கோ சொன்னான். ' சாப்பிட்டிருக்க வேணாம். ஒரு
தடவை பாத்துட்டு வந்துருக்கலாம் அந்த தந்தூரி கசானாவை.'
4
பெரிய தர்கா வாசலில் நிறைய யாசகர்கள். இன்று வெள்ளிக்கிழமை
என்பது ஞாபகத்துக்கு வந்தது. அமர நிழல் தேடியவன் கண்களில்
மண்டியிட்டிருந்தவரின் தலையில் மயிலிறகினை வைத்து ஓதிக் கொண்டிருந்தவரைக்
கண்டதும் உள்சென்று அமர்ந்தான். ஏகப்பட்ட பூமாலைகள் குவித்து
வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் மல்லிகை. அதன் இருபுறமும் மயில்தோகை
ஒட்டப்பட்ட நீண்ட கூம்புகள். சம்மணமிட்டு அமர்ந்தான். அத்தனை வேகமாய்
மின்விசிறி சுற்றிக் கொண்டிருந்தபோதும் உயரமான விளக்கில் தீபம் எரிந்து
கொண்டிருந்தது. கண் மூடினான். மயில் தோகையையே உற்றுப் பார்க்க மனம்
அசைந்தது. மயில் கண்கள் பெரிதாகி அவன் உள்ளே நிறைய , திடீரென்று
மண்டைக்குள் பேரிடி இறங்கியது. என் போன் செயல்படவில்லையென்றாலும் நான்
சொன்ன இந்த இடத்துக்கு வருவதற்கு சரோலாமாவுக்கு இவ்வளவு நேரம் ஆகாது. நான்
பேசும்போதுதானே செல்போன் அணைந்து போனது. நான் காத்திருப்பதாய் சொன்ன இந்த
இடம் சரோலாமாவின் காதில் விழவில்லையா...சத்யா எழுந்தான். வயிற்றில் பசி
செத்துக்கிடந்தது தெரிந்தது. இனி சடலம் நாற்றமெடுக்கத் தொடங்கிவிடும்.
வாய்விட்டுக் கதறி அழ உள்ளே பேரோலம் எழுந்தது. கண்களில் நீர் துளிர்க்க
தர்கா வாசலுக்கு வந்தான். எப்போதுமே அவனால் அவ்வளவு சீக்கிரம் அழுதுவிட
முடியாத இடத்தில்தான் அழுகை தன் முதல் புள்ளியைத் துவக்கும். எரிந்து
கொண்டிருந்த விளக்கிலிருந்து கொஞ்சம் எண்ணெய் எடுத்து யாரோ ஒரு பெரியவர்
தன் கால் முட்டியில் தேய்த்துக் கொண்டிருந்தார். ஒரு கணம் ஓடிச்சென்று ஒரு
கரண்டி எண்ணெய் எடுத்து குடித்துவிடலாமென்று அவனுக்குத் தோன்றியது. வலி
போக்கும் இறைவனின் கொடை அவன் பசி போக்கிவிடாதா...சரோலாமா வரும் வழி
பார்த்து நின்றான்.
பைரன் பதிப்பகத்திலிருந்து விலகி வேலையில்லாமல் திரிந்த கொடூர
நாட்களில் இணைந்தவன்தான் சரோலாமா. வேலை விசயமாக ஒரு பதிப்பக நேர்காணலுக்கு
சென்றபோது ரிசப்ஷனில் அமர்ந்திருந்தான். அவனும் இண்டர்வியூவுக்கு வந்தவனோ
என்று சத்யா யோசிக்க சத்யாவைப் பார்த்துப் புன்னகைத்து கை குலுக்கினான். ' ஐ
அம் சரோலாமா' கேட்டதுமே புனைப்பெயரென்று புரிந்து போனது. சென்னை
வாழ்க்கையில் சாதிய விழுமியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போவது போல்
நிஜப்பெயருடன் வாழ்பவர்களும் தொலைந்து கொண்டிருக்கிறார்கள்.
புனைப்பெயர்கள் நிறைந்த நகரமாக மாறி வருகிறது மதராஸ் என்ற சென்னை. தான்
புதிதாய் ஒரு பப்ளிகேசன் தொடங்கியிருப்பதாகவும் அது சம்மந்தமாக இங்கு
மேலாளரைப் பார்க்க வந்ததாகச் சொன்னான். சத்யா வேலை தேடி அலையும் கதையைக்
கேட்டதும் அவனுக்குத் தெரிந்த சில நபர்களின் எண்களைத் தந்து தொடர்பு
கொள்ளச் சொன்னவனின் பேச்சிலேயே சத்யாவுக்குப் புரிந்துபோனது அவனின் சினிமா
விருப்பம். எழுத்து, சினிமா என்று அலைவரிசை ஒத்துப்போன சமயத்தில் சத்யாவின்
வேலைக்கான முயற்சி தொடர்ந்து தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்க ஒரு தருணம்
விரக்தியான சத்யாவின் பேச்சினைக் கேட்ட சரோலாமா சத்யாவை அழைத்து சென்றது
தன் தங்கை திருமணத்துக்கு. சத்யாவின் மனத் தளர்வினை நீக்க அவர்களின்
குடும்பத்தில் சத்யாவையும் ஒருவனாக இடம்பெறச்செய்து புத்துயிராக்கினான்.
அப்போது இறுகியது. பசியென்றாலும் நோயென்றாலும் பகிர்ந்து கொண்டு குணமாக
ஒரு நண்பன் சரோலாமா.
கோடையின் ஆக்கிரமிப்பு மாலை 5 மணிக்குப் பின்பும் வீரியம் குறையாமல்
இருந்தது. கால்போன போக்கில் திருவல்லிக்கேணி வீதியில் நடந்து
கொண்டிருந்தான்.இங்குதான் சரோலாமா வருவதாகச் சொன்னான். இப்படியே திரிந்து
கொண்டிருந்தால் எங்காவது சட்டென்று வெளிப்பட்டுவிட மாட்டானா. கால்கள்
தள்ளாடின. சத்யா மீது லேசாக மோதிக் கடந்த உருவம் சட்டென்று நின்று அவனைப்
பார்த்துத் திரும்பியது. அடர்தாடியும், முறுக்கிய மீசையும், நெற்றி நடுவில்
இருக்கும் குங்குமச் சிவப்பு இரு கண்களிலும் விரவியிருக்க முண்டாசு
கட்டியவன் சத்யாவின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான்.....பாரதி.
தன் கவிதை,கதைகளை எடுத்துக்கொண்டு சத்யா ஏறி இறங்கிய பத்திரிக்கை
அலுவலக வாசல்களும், சினிமா திரைக்கதைகளை தூக்கிக்கொண்டு அவன் மோதித்
திரும்பிய தயாரிப்பாள, இயக்குனர்களின் வாசல்களும் பாரதி விழிகளில். பற்கள்
நறநறத்தபடி கர்ஜித்தான்.
தேடிச்சோறு நிதந் தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்ப மிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி-கொடும்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும்-பல
வேடிக்கை மனிதர்களைப் போல - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ
தலை கிறுகிறுவென்று சுற்றி வர சத்யமூர்த்தி வீழ்ந்தான்.

நன்றி : புதுவிசை