Sunday, 24 November 2024
மஞ்சள் பிசாசு வேட்டை
மஞ்சள் பிசாசு வேட்டை
_____________________
மல்லாந்திருந்தவனின் உறைந்த பச்சைக் கண்களில் காடு அசைந்தது. தெறித்திருந்த கபாலத்தின் வழி கோடெனப் பெருகிய இரத்தத்தினை உறிஞ்சிய நில இதழ்கள் உடன் நிறம் மாறிப் பிளந்தன. இறந்திருந்தவன் இறுகிய உள்ளங்கை மெல்ல விரிய காற்றில் பயணப்பட்ட ரோமச்சுருள்கள் வனமெங்கும் விளையாடத் துவங்கின. காட்டு எருமையின் எலும்பினால் செய்யப்பட்ட அரையடி நீளமுள்ள ஆயுதத்தின் நடுவில் சீராகச் செதுக்கப்பட்டு விரல்கள் நுழைத்துக்கொள்ள வசதியாய் துளைகளிட்டு இரு முனைகளிலும் அடர்த்தியான எலும்புருண்டை காற்றில் ஒரு வீசு வீசி அவன் மீது மோதியபோது விரிசல் விட்ட கபாலத்தினால் தாடை எலும்புகள் தளர்ந்து திறந்த வாய் மூட முடியாமல் ஆடியது.
இறந்தவன் தொண்டை மேட்டில் வாய்வைத்துக் கடித்து இழுத்தான் அவன் மார்பின் மேலே அமர்ந்திருந்தவன். இறப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பு இவன் தலையை இறுகப் பிடித்திருந்தவன் உயிர் போகும் நொடியில் பிய்த்து எடுக்கப்பட்ட ரோமமற்ற தலைப்பகுதியிலிருந்து இரத்தம் கசிந்து பரவியதை உணரும் நிலையில் எதுவுமில்லை. பல்லில் கடிபட்ட எலும்பினூடே பொங்கி வழிந்த இரத்தம் உறிஞ்சி வாயில் தேக்கிட உடம்பெல்லாம் சூடான ரத்தம் மிதந்து பாய்ந்தது. நிமிர்ந்து ரத்தத்தினைக் காற்றில் உமிழ சிறுசிறுப் புள்ளிகளாய் சிதறிய துளிகளுக்குப் பின் அவர்கள் மூன்று பேர் நின்றிருந்தனர். பச்சை விழிகளைக்கொண்டவர்கள். இவனையே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மெல்லப் பின் நகர்ந்தனர். அத்தனை இரத்தத்தையும் துப்பியவன் இடதுகையால் வாய் துடைக்கும் முன்பு தொண்டைக்குழியில் தேங்கி இருந்த இரத்தத்தினை விழுங்கினான்.
எதிரியின் ரத்த ருசி மூளை நரம்புகள் வழி பயணப்பட்டு இரைப்பையில் விழுந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை மரூனிசையில் ரத்த ருசியில்லை. இந்த வனமெங்கும் ஒலித்தது மரூனிசை. மரங்களுக்குக் கீழே படுத்து உறங்கினர் அராவாக்குகள். காட்டுப்பன்றி அகழ்ந்துவிட்டுப்போன கிழங்குகளின் மிச்சங்களில் நிரம்பிய பசிப்பையில் சிறு விதைகளும் கனிகளும் கிடந்தன. பிஞ்சு முயல்கள் அராவாக்குகளின் பசியில் துள்ளி மறைந்தன. வயதாகி இறந்து மக்கிக்கொண்டிருக்கும் யானைத் தந்தமும் காட்டெருமையின் எலும்பினால் செய்யப்பட்ட ஆயுதம்கொண்டு காற்றில் வீசி சண்டையிட்டுப் புலிகளும் சிறுத்தைகளும் சிதறிட மந்திர இசையும் பாடல்களும் இருந்தன அராவாக்குகளிடம். மரூனிசைக்கு மயங்கிய பெரும் பாம்புகள் இரவுகளில் அவர்களின் உறக்கத்தில் பங்குகொண்டு நெளிந்தன. வனமெங்கும் மிதந்த ரகசிய இசை வழியே நோய்கள் தீர்ந்தன. மாட்டின் கொம்பின் வழி பிறந்த மரூனிசை அர்த்தங்கள் தனியானது. ரகசியக் குறிப்புகளான இசையோ அராவாக்குகள் அல்லாத எவருக்கும் புரிந்துவிடக்கூடாத கடும் சட்டம் மரூனிசையில் இருந்தது. மீறி இசைத்தால் காட்டு தேவதை பலியில் சமைக்கப்படும் உடல்களுக்குப் பதிலாக அர்த்தம் நிறைந்த உடல் கிடக்கும். மந்திர இரவில் நடுங்கும் ஜமைக்கா.
எவரும் இசைக்காமல் பிறந்த மரூனிசை வனமெங்கும் அலறித் தவித்தது காட்டின் காற்றில் கலக்கும் புதிய விபரீதம் கண்டு. புரியா மனத்துடன் இரவு காட்டு தேவதைக்குப் பலியிடப்பட்ட உடலியின் நிறம் சிவப்பென மாறி வரைந்த கண்கள் திரும்பிய இடம் நோக்கிய அராவாக்குகளின் பார்வையில் அச்சம் முளைத்த அந்த இரவிலிருந்து ஏழாம் நிலவில் அவர்கள் தீவினில் கால் பதித்தனர். சிவந்த தேகமும் செம்பழுப்பு மயிறும் பச்சைக் கண்களும் கொண்ட ஸ்பானியர்களின் கையில் விரிந்திருந்த வரைபட மூலையில் காடும் அதையொட்டிய பெருவெளிப்பரப்பும் அதனுள் பாளம் பாளமாய் உறைந்திருக்கும் மஞ்சள் பளபளப்பும் புதைந்திருந்தன. ரகசிய வேட்டைக்கு வந்த ஸ்பானியர்கள் செய்த முதல் தவற்றின் முடிவில் குடல் கிழிந்து ரத்தம் கொட்டியது. மரூன் இசைத்தபடி அவர்கள் பார்வையிலிருந்து மறைந்தவன் பத்து வயது மரத்தில் சாய்ந்து உயிர் தொலைத்தான். அம்மரத்தின் வேர்கள் எங்கும் அவன் உயிர்க்கொடி வாசனை ஊடுருவியிருந்தது. மரூன் இசை கேட்டு வந்த மரூன்கள் பிறந்ததும் அறுத்தெடுத்து தொப்புள்கொடி புதைத்து சின்னஞ்சிறு செடி நட்ட இடத்தில் பல கிளைகளோடு விரிந்திருந்த மரூன் மகனை வெட்டிப் புதைத்தனர்.
வீழ்ந்த மரம் சுற்றித் திரிந்த மரூனிசை வழி எதிரிகளைக் கணித்தனர். மரணத்தின் காரணம் புரிய, மூத்த அராவாக்கின் உயிர்வலி போக்கிட மந்திர மருந்திலை தேடி இரவில் நடந்த இளைய அராவாக்கின் கண்களில் கூடாரத்தின் மூலையில் அமர்ந்தபடியே சாய்ந்து உறங்கிய ஸ்பானியனின் கழுத்து நரம்பு புரண்டது நிலா வெளிச்சத்தில். புதிய பறவையொன்றின் வானத்தினைத் துரத்திச்சென்ற பத்து வயது மகனின் வயிற்றில் நழுவிய ஸ்பானியனின் மிரட்சியினை மகனின் மரண இசை உறைந்த செவிகளில் வெப்பம் ஏறி மின்னல் தெறிக்க இரவு வானம் கிழிந்தது.
ஸ்பானியனின் வரைபடம் முழுவதும் பரவிய ரத்தம் அப்பிரதேசமெங்கும் பரவுமுன் மரூனின் இசையில் கத்தி பாய்ந்திருந்தது. காற்றில் பறந்துவந்த கோடாரி பின் மண்டையில் கொத்தி ஆட மரூனிசைத்தபடி விலகியவன் காட்டுக்கல்லின் அருகில் சென்று மறைந்தான். ஸ்பானியர்கள் தேடித் திரும்பிய கணம் பாறைக்குள்ளிருந்து வெளிவந்த மரூன் ரத்தத்தில் நனைந்த வனம் கண்டு இறந்தான். செவிகளில் வந்தடைந்த மரூனிசையில் இருந்த எச்சரிக்கைச் செய்தியில் மரூன்களின் மூளையில் நிலை தடுமாற்றம். உடலெங்கும் பரவிய பதற்றத்தினைத் தங்கள் நாட்களில் முதன்முறையாய் உணர்ந்தார்கள். மரங்களிடமிருந்து விலகினர். தங்களைச் சுற்றிப் புனைந்த பாதுகாப்புப் பாதையெங்கும் சிறு சிறு காடுகள். பெண்கள் பாறைகளில் சென்று கரைந்தனர். காட்டுப்பாறைகள் சுற்றி வளையமிட்டன மந்திர இசை.
எதிராளியை வேட்டையாடப் புறப்பட்ட அன்று வானம் காணாமல் போயிருந்தது. காட்டெருமையின் எலும்பு இருளில் வரைந்த கோடுகளின் முடிவில் உறைந்த பச்சைக் கண்களைப் பெற்றனர் ஸ்பானியர்கள். தொலைந்த வானம் மீண்ட சாம்பல் தருணத்தில்தான் ரத்தம் குடிக்கும் மரூனைப் பார்த்தனர். இப்போதெல்லாம் மரூனிசையில் இசையில்லை. நர மாமிசத்தின் ருசி காற்றெங்கும் மிதந்தது. மரூனிசையில் மந்திரம் மிகுந்து நன்றியும் நேர்மையும் மறைந்த விழிகளுடன் காட்டில் விலங்குகள் பதறி விலகின. இரவுகளின் உக்கிரப் படையலில் இடம் பெற்ற ஸ்பானியர்களின் சிரசுகள். பச்சைக் கண்களின் இருள்மீது எரிந்தன மஞ்சளும் சிவப்புமாய் தீப்பிசாசின் நடனம். உடலிகளுக்குப் பதிலான வெள்ளையுடல்கள் தவித்து நெளிந்தன. அராவாக்குகளின் மந்திர இசையும் புதையாத ஒரு ரகசியத்திற்காகக் குருதி குடித்துக்கொண்டிருந்ததை அறியாத தங்கள் நிறத்தில் இரத்தம் பூசிக்கொண்டிருந்த மரங்கள் கண்ட ஸ்பானியர்களின் இரவுகளில் வெறி ஏறியது.
ரகசியம் புதைந்த வரைபடத்தின் வழியெல்லாம் மரூன்களின் பற்களில் கிழிபட்ட நரத்துண்டுகள் கிடந்தன. கூடாரத்தில் திடீர் திடீரென்று முளைத்த குதறப்பட்ட கைகளும் கால்களும் இரவுகளில்லாமல் ஆக்கியது. அராவாக்குகளின் எல்லையில் தவறுதலாகக் கால்வைத்த ஸ்பானியர்கள் சுவாசித்த காற்றில் மிதந்த மரூனிசையில் மூளையின் அடுக்குகள் உடனே புரண்டன. உடல் உதறி விழுந்தவர்கள் துடிப்பு அடங்கியபோது நாசித்துவாரங்களிலும் செவித்துளைகளிலும் கருஞ்சிவப்புக் குருதி வழிந்து உறைந்து நின்றிருந்தது.
அன்றிரவும் அராவாக்குகள் எப்போதும்போல் வேட்டைக்குப் புறப்பட்டனர். காட்டு தேவதையின் இதழ்களிலிருந்து வழிந்த மரூனிசையின் துயரம் அறியாது புறப்பட்டனர். விபரீதம் அறிந்து தங்கள்மீது விழுந்து புரண்ட பாம்புகளை உதறியபடி அராவாக்குகள் கூடாரம் நெருங்க அந்தச் சத்தம் கேட்டது. மரூனிசையின் கண்கள் திரும்பிய திசையில் விஷம் தடவிய நீளமான கூர்மையான பளபளப்பான கம்பி மந்திரம் சிதைக்கப்பட்டிருந்த மரத்தின் கிளையிலிருந்து காற்றை வெட்டியபடி வேகமாக வந்து அராவாக்குகளின் கழுத்தில் பதிந்து விலகியது. காற்றில் விசிறப்பட்ட ரத்தம், தொண்டை முனையிலிருந்து பீறிட்ட ரத்தம் பெண் மரூன்கள் மீது வழிய பாறைக்குள்ளிருந்து உருகத் தொடங்கின மந்திரம் மறந்த இதயங்கள். காலையில் வரைபடம் விரிந்திருந்தது. ரகசிய நிலத்தின் அழைப்புத் தேடிப் புறப்பட்ட ஸ்பானியர்கள் கண்களில் மின்னியது கனவின் மஞ்சள். அராவாக்குகள் காத்திருந்தனர். அவர்களின் தீவது. அவர்களின் காடது. அவர்கள் ஆதியது. ஆதி அராவாக்குகள் காத்திருந்தனர். மரூனிசையில் வன்மம் கூடியிருந்தது. படபடத்த வரைபடத்தில் அராவக்குகளின் மந்திர மரூனிசையும் காட்டு தெய்வத்தின் மந்திரப் படையலில் ஸ்பானியர்கள் செவிகள் செருகிய கணங்களின் இடையே கொலம்பஸின் கண்கள் ஜமைக்கா தீவில் படிந்து விலகியது.
குறிப்பு: கொலம்பஸ், ஜமைக்கா தீவினைக் கண்டுபிடிப்பதற்கு முன் அங்கு அராவாக் என்ற பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களின் இசை, மாட்டின் கொம்பினால் செய்யப்பட்ட மரூன் என்ற கருவியின் மூலம் எழுப்பப்பட்டு செய்திகள் பரிமாறப்பட்டன. மந்திர தந்திரங்களில் நம்பிக்கை கொண்ட அராவாக்குகள் வாழ்ந்த இடத்தில் தங்கம் இருப்பதாய் தவறான தகவலைக் கேள்விப்பட்ட ஸ்பானியர்கள் ஜமைக்கா தீவில் கூடாரமிட்டுத் தங்க வேட்டையில் ஈடுபட்டனர். அராவாக்குகளுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையே நடந்த இல்லாத புதையல் மீட்கும் போராட்டம் ஆங்கிலேயர்களின் வருகை வரை நிகழ்ந்தது. அதற்குப்பின் ஸ்பானியர்கள் விலக, மிச்சமிருந்த அராவாக்குகள் தங்கள் ஆதியுடன் சென்று கலந்தனர். இல்லாத ஒன்றுக்காக ஓர் இனத்தையே அழிக்கும் கொடுமை இன்றளவினும் வெவ்வெறு வடிவில் நிகழ்ந்தபடியே உள்ளது.
Subscribe to:
Posts (Atom)